வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Wednesday, April 29, 2009

ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்

கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.

ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவர்களின் மனதில் ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியான சோகங்களையும், வேதனைகளையும் நமக்குள் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மனங்களில் தெரியும் இந்த வேதனையை பிற மொழி பேசுவோரிடம் கொண்டு செல்ல வேண்டும். இனி இந்தியாவையும், தமிழகத்தையும் நம்பாமல் மேற்குலக நாடுகளையே அணுக வேண்டும். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் வகையில் அமெரிக்க அரசியலை புரிந்து கொண்டிருக்கிறேன். எங்கோ நடக்கும் பிரச்சனை இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தெரியவரும் பொழுது தங்களை அந்தப் பிரச்சனையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் 40 எம்பிக்களும் புண்ணாக்கு மூட்டைகளாக டெல்லியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே உள்ள ஒரு செனட் உறுப்பினருக்கு எழுதும் மின்னஞ்சலுக்கு கூட கரிசனையுடம் பதில் வருகிறது. சில நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்கள்.

மின்னஞ்சல் மூலமே அமெரிக்க வெளிவிவகார குழு தலைவரும், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளாரான ஜான் கெரியை சென்றடைய முடிந்திருக்கிறது. அவருடன் இந்தப் பிரச்சனையை குறித்து பேச முடிந்திருக்கிறது.

நம்முடைய பிரச்சனையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. ஈழத்தின் பால் அக்கறை கொண்டு தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் இனி ஆங்கிலத்தில் எழுத தொடங்க வேண்டும். தமிழில் ஈழம் குறித்து எழுதப்பட்ட அதே அளவுக்கு கடந்த 20 வருடங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நாம் நம் நிலையை உலகுக்கு தெரியப்படுத்தியிருக்க் முடியும். ஒரு சின்ன கருத்தையாவது ஆங்கிலத்தில் எழுதி வைக்க வேண்டும். அந்த நோக்கத்துடனே சமீப நாட்களில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கி இருக்கிறேன்.

கடந்த சில மாத மனதின் ரணங்களை ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சித்து இருக்கிறேன். அந்தக் கட்டுரையை "Eelam crisis - The unsettling conflict of mind" கழுகு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Eelam crisis - The unsettling conflict of mind


Leia Mais…
Sunday, April 26, 2009

திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.

இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம். 1992ல் இருந்த வைகோவுடன் கருணாநிதியை அப்பொழுது ஒப்பிடலாம். என்னுடைய சமகாலத்தில் வளர்ந்த வைகோவை என்னால் எப்பொழுதும் தமிழ் அரசியல் சார்ந்து விலக்க முடியவில்லை. வைகோ போன்றவர்கள் தலைவராக முடியவில்லையே என்ற வேதனை எனக்கு உண்டு. அதே போலத் தான் கருணாநிதி காலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் இன்றும் உள்ளனர். கருணாநிதி மீதான பற்றினை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் விட முடியவில்லை என்பதை பலருடன் விவாதிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன். வலைப்பதிவில் இருக்கும் எனக்கு முந்தைய தலைமுறை சார்ந்தவர்களின் உணர்வு இவ்வாறே உள்ளதை கவனித்து இருக்கிறேன். எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.

1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.

இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதி, 1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தன்னை தமிழ் சார்ந்த பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்திய தேசியத்திற்கு முன்பு மண்டியிட வேண்டிய அவலம் கருணாநிதிக்கு நேர்ந்தது. இவ்வாறன சூழ்நிலையில் அமைந்த காங்கிரஸ் கூட்டணியை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருணாநிதி பார்த்தது தான் தற்போதைய கருணாநிதியின் துரோக அரசியலுக்கு முக்கிய காரணம். கூடவே திமுகவுடன் கருணாநிதி குடும்ப அரசியலும் ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு அடிபணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.

திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. சாதிக் கட்சியாக தொடங்கினாலும் பாமக தமிழ் அரசியலை பின்பற்ற தொடங்கியது. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த இடைவெளியை தன் கையில் எடுத்துக் கொள்வதே பாமகவின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது. இதன் வெளிப்பாடு தான் மக்கள் தொலைக்காட்சி, பொங்குதமிழ் பண்ணிசை மன்றம் போன்றவை. இந்த காரணத்தினாலேயே கருணாநிதி கைவிட்ட ஈழ அரசியலையும் பாமக அதிகமாக முழங்கியது. கருணாநிதியே ராமதாஸ் தன் தமிழின அரசியலை கடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாமக பின் மைய அரசில் பங்கு கொண்ட சூழ்நிலையில் தன்னை காங்கிரசின் நண்பனாக காட்டிக் கொள்ள முனைந்தது. திமுக எப்படி தமிழின அரசியலில் இருந்து மாறியதோ அதே போன்று பாமகவும் மாறியது.

இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.

நிலை நிறுத்தப்பட்ட கட்சிகள் இவ்வாறு என்றால் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே சென்று ”இந்திய தேசியம்” என்பதை ஓங்கி ஒலிக்க தொடங்கினர். இவர்கள் இதனை செய்தது இவர்கள் இந்திய தேசியம் மேல் கொண்டிருக்கிற ஆழ்ந்த பற்றினால் அல்ல. தமிழக அரசியல் அந்த பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களும் அப்படி தான் நகரமுடியும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட அரசியலின் அடிப்படை அடித்தளத்தையே விஜயகாந்த் தகர்க்க பார்த்தார். எனவே தான் திராவிட அரசியலை விலக்க விஜயகாந்த்தை பார்ப்பன ஊடகங்கள் பரப்புரை செய்ய தொடங்கின.

இந்த ஆபத்தான பாதை திருமாவையும் விட்டு வைக்காது என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்த போக்கில் இருந்து ஓரளவுக்கு தன்னை விலக்கி கொண்டவர் வைகோ மட்டும் தான். அதனால் தான் வைகோ வளரவே இல்லை. வைகோவின் ஒரு முக்கியமான சக்தியாக வளராமல் போனதற்கு அவரது உணர்ச்சிவசப்படும் போக்கு மட்டும் காரணம் அல்ல. அவரைச் சார்ந்த தமிழ் பிம்பமும் முக்கிய காரணம். 1992ல் திமுக பிளவு பட்ட பொழுது அவரை ஊடகங்கள் ஆதரித்தே எழுதின. மதிமுக தொடங்கப்பட்ட காலங்களில் வைகோவிற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கிடைத்தது. அவர் விஜயகாந்த் போன்று ஒரு சோனகிரியாக இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்கும். வைகோ அப்படி பட்டவர் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஊடக விளம்பரமும் கிடைக்கவில்லை. பின்னர் மூப்பனார் ஊடகங்களை ஆக்கிரமித்தார்.

1991ல் தொடங்கிய இந்த போக்கு 2008ல் திசை மாற தொடங்கி 2009ல் முழுமையான மாற்றத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஈழப்பிரச்சனை.
எந்த அரசியலும் தெளிவாக அமைய ஒரு போராட்ட களம் தேவைப்படுகிறது. போராட்டம் தான் அரசியல் களத்தை தெளிவுபடுத்துகிறது. ஈழப் பிரச்சனை எப்பொழுதுமே தமிழக அரசியல் பாதையை மாற்றியிருக்கிறது. பெரியாரின் சுயமரியதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விட தமிழக அரசியலில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தியது ஈழப் போராட்டம் மட்டுமே. அதன் தாக்கம் தமிழின அரசியலுக்கு ஆதரவாகவும் அமைந்தது, எதிர்மறையாகவும் அமைந்தது. 1980களிலும், 1990களிலும் ஈழப்போராட்டத்தின் தாக்கமே தமிழக அரசியல் பாதையை மாற்றியது. தற்பொழுது 2008லும் அது தான் மாற்றப் போகிறது.

1967க்கு பிறகு எந்த பெரிய போராட்ட களமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக அரசியல் இந்திய தேசியம் நோக்கி நகர தொடங்கியது. திமுக உடைந்து அகில இந்திய அதிமுக தேசிய அடையாளத்துடன் உருவாகியது. இந்திய தேசியம் நோக்கி சென்ற தமிழக அரசியலை தடுத்து நிறுத்தியது 1980களில் வீசிய ஈழ ஆதரவு அலையே. ஆனால் அதே ஈழப் போராட்டம் 1991க்கு பிறகு தமிழகத்தை இந்திய தேசிய அரசியல் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது மறுபடியும் தமிழகத்தை ஈழப் போராட்டம் தமிழ் அரசியல் பாதைக்கும், இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலுக்கும் கொண்டு வந்திருக்கிறது. முன் எப்பொழுதையும் விட குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இன்றைக்கு நம் முன் இருப்பது ஒரே கேள்வி தான் ? இன்றைய சூழ்நிலையில் யாரை எதிர்க்க வேண்டும் ?

திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவது என்பதே சகிக்க முடியாத ஒன்று. அதனை எப்படி செய்வது ?

ரோசாவசந்த்தின் பதிவில் நான் எழுதியிருந்தது போல, இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தினை ஆரோக்கியமாக செயல்படுத்த தமிழர்களுக்கு தேர்தல் அரசியலில் எந்த வழியும் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் போன்று ஒரு குழப்பமான தேர்தலை தமிழ் உணர்வாளர்கள் முன் எப்பொழுதுமே எதிர்கொண்டதில்லை. ஒரு பக்கம் துரோகியாக மாறி விட்ட கருணாநிதி, மற்றொரு புறம் எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு விஜயகாந்த்தை ஆதரிக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருக்கிற அவரின் கபடநாடகம். தனித்து அணி அமைப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரின் சந்தர்ப்பவாதம்.

இத்தகைய சூழ்நிலையில் பேசாமல் தேர்தலை புறக்கணிக்கலாம், 49ஓ போடலாம் என பல்வேறு சிந்தனைகள் பலரின் மனதிலே ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக...இந்த தேர்தலில் நாம் யாரையும் ஆதரித்து வாக்களித்து விட முடியாது என்பது ஒரு முக்கிய நிலைப்பாடாக அனைவரது மனதிலும் உள்ளது.

இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.

இந்தியா போன்று ஆரோக்கியமற்ற ஜனநாயக சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கொண்டே எதையும் அணுக முடிகிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஒபாமாவின் கொள்கைகளையும், மெக்கெயின் கொள்கைகளையும் பார்த்து அணுகும் சூழ்நிலையில் இந்திய ஜனநாயகம் இன்றைக்கு இல்லை. தற்போதைய நடைமுறை அப்படியே தொடரத்தான் போகிறது. அதனால் எப்பொழுதும் இந்தியாவில் மாற்றம் வரும் வாய்ப்பும் இல்லை. அதே போல ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்ட மக்கள் புரட்சிகர தத்துவங்களை கைக்கொண்டு இடதுசாரி அமைப்புகளின் பக்கம் திரும்புவார்கள் என்பதும் ஒரு வறட்டு வேதாந்தமே. தேர்தல் என்பது மக்களுக்கு தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம். மக்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்து எப்பொழுதும் தங்களை விலக்கி கொள்ள மாட்டார்கள்.

ஈழத்தில் உள்ள மோசமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடும், தமிழினத்தின் துரோகியாக மாறிய கருணாநிதியின் அயோக்கியத்தனமும் இன்றைக்கு இருந்திருக்காவிட்டால், நாமும் வறட்டு வேதாந்தங்களை பேசிக் கொண்டு அமைதியாக தேர்தலை புறக்கணித்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலை அப்படியானது அல்ல. நாம் நம் எதிர்ப்பை ஏதோ ஒரு வழியில் காட்டியாக வேண்டிய தேவை உள்ளது. அந்த எதிர்ப்பை காட்ட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் மட்டுமே..

இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார். எதற்கெடுத்தாலும் தந்தி அனுப்புவதும், நாடகம் ஆடுவதும், தாயே மனது வையுங்கள் என்று சோனியாவிடம் கதறுவதும், என்னால் இவ்வளவு தான் முடியும் எல்லாவற்றையும் செய்து விட்டேன் என புலம்புவதும் என தன்னுடைய சுயமரியாதையை மட்டும் அல்ல தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்ட வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையையும் கருணாநிதி அவமதித்து விட்டார். தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தின் பொருட்டு ராஜபக்சேவின் குரலை ஒலித்து கொண்டிருக்கிற காங்கிரசுக்கு கருணாநிதி துணை போய் விட்டார்.

பிரபாகரன் எனது நண்பர் என முதல் நாள் சொல்வதும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பல்டி அடித்து பேசுவதும் என இவர் நடந்த விதம் தமிழினத்தலைவர் என்பது போல அல்ல. சோனியாவின் வேலைக்காரன் என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

இவ்வளவு நடந்த பிறகும் கருணாநிதியை திராவிடத்தின் தலைவர் என்று கூறுபவர்களை பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. இவர்கள் இன்னும் கடந்த கால கருணாநிதியையே பார்க்கிறார்கள். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க மறுக்கிறார்கள். திராவிடத்தின் தேவைக்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறுபவர்கள் கருணாநிதியின் கடந்த ஒரு வருட நாடகங்களை வாய்மூடி பார்த்து கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தற்பொழுது கருணாநிதி நடத்திக் கொண்டிருப்பது என்ன திராவிட அரசியலா ? அல்லது எதிர்காலத்தில் ஸ்டாலினும், அழகிரியும் நடத்தப்போவது தான் திராவிட அரசியலா ?


கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.

திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.

அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

Leia Mais…
Saturday, April 25, 2009

Software professionals Arrested in Alangudi

”மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் இன்று ஆலங்குடியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்”

இது குறித்த என்னுடைய ஆங்கில பதிவு

ப.சிதம்பரத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, செய்திகளில் அடிபடாமல் மிரட்டும் முயற்சியாகவே இது தெரிகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி அயோக்கியத்தனம் செய்யும் ப.சிதம்பரத்தின் இந்த ரவுடித்தனத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

வலைப்பதிவில் இருக்கும் பலர் மென்பொருள் வல்லுனர்கள் மற்றும் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் என்பதால் இந்த கைதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து கொண்டிருந்த மென்பொருள் வல்லுனர்களை கைது செய்வது என்பது அவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ளும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது.

இதனை எதிர்த்து நாம் நமது குரலை ”நமது நண்பர்களுக்கு” ஆதரவாக வலுவாக பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்த முழுமையான தகவல்களுக்கு - http://sreesharan.blogspot.com/2009/04/13.html

***************

Nearly 13 Software professionals were arrested in Alangudi near Sivaganga for campaigning against P.Chidambaram. Unconfirmed news from an email source says.

IT’ians for Eelam Tamils” is a Chennai based consortium of Software professionals who support Eelam Tamils. This consortium had led several agitations, hunger strike against the Genocide of Tamils in Tamil Eelam.

In an effort to defeat Congress in Tamil Nadu, various Tamil organizations are campaigning against Congress. IT professionals are part of this campaign in Sivaganga to consolidate the educated People in favor of Tamil Cause.

IT Professionals are the right candidates to tear the Intellectual mask of P.Chidamabaram. Hence the congress led Central Government and its DMK Servants in the state are resorting to arresting the Software Professionals.

Putting the IT professionals Career at Risk and threatening them seems to be the main aim of the Government. This news if true has to be opposed by all the IT professionals. They are not terrorists. They are performing their Democratic rights in the So-called Democratic Country India.

I request all the IT Professionals to come out in Support of our Friends.

***************

திமுக-காங்கிரஸ் கூடணியை தோற்கடிக்க வேண்டும் - ரோஸாவசந்த்தின் பதிவு

முத்துக்குமாரை விதைத்தோம், காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் புதைப்போம்


Leia Mais…
Monday, April 13, 2009

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.


தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

சொ. சங்கரபாண்டி

(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)

உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.

நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.

இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.

ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.

எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.

கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.

இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!

* * *

மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.

“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)

இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

* * *

ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.

ஓவியம் - நன்றி தூரிகைகளின் துயரப்பதிவுகள் மற்றும் புதினம்

Leia Mais…
Saturday, April 04, 2009

துப்பாக்கிகள் மீதான காதல்

துப்பாக்கிகள் போன்ற ஒரு கொடூரமான ஆயுதம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. உயிர்களை பறிக்கிறது என்பதற்காக மட்டும் அல்ல. துப்பாக்கி கையில் இருந்தால் ஒரு புது தைரியம் கிடைக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் எண்ணமும்,
ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை கவனிக்கும் பொழுது இதனை நான் உணர்ந்திருக்கிறேன். ஈழம் தொடங்கி பல இடங்களில் நடக்கும் போராட்டங்கள் இதையே நமக்கு கூறுகின்றன. இத்தகைய போராட்ட பகுதிகளில் இருக்கும் சாமானிய மக்கள் துப்பாக்கிகளை வெறுக்கவே செய்வார்கள்.

ஆனால் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் துப்பாக்கிகளை நேசிக்கும் பெருவாரியான மக்கள் இருக்கும் நாடு ஒன்றும் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா தான்.

அமெரிக்காவில் சுமாராக 200 மில்லியன் (20 கோடி) துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பாலானோர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்து கொள்வது, கருக்கலைப்பு போன்றவை முக்கிய சமூக பிரச்சனையாக உள்ளன. தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும். துப்பாக்கிகளை தடை செய்யும் எந்த சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு பெரிய கூட்டம் இங்கு இருக்கிறது. மிகவும் வலுவான நிலையில் 2000ம் வருட தேர்தலில் இருந்த அல்கோர் தோல்வியுற்றதற்கு அவர் மீது கன்சர்வேட்டிவ்கள் முன்வைத்த மோசமான பிரச்சாரங்கள் முக்கியமான காரணம். அவர் மீது முன்வைக்கப்பட்ட பல பிரச்சாரங்களில் அவர் துப்பாக்கிகளை தடை செய்யும் சட்டத்தினை கொண்டு வருவார் என்று முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமும் ஒன்று. ஆரம்பத்தில் ஒபாமா கூட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும், கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவர் தான். சிக்காகோ சூழலில் வளர்ந்த ஒபாமா அங்கு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மிக சகஜமாக துப்பாக்கிகளில் சுட்டுக் கொண்டு இறந்து போகும் சூழ்நிலையில் அது குறித்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். ஆனால் அது தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நோக்கில் அதனை தீவிரமாக வலியுறுத்தாமல் மேலோட்டமாக அது குறித்து பூசிமொழுகி பிரச்சாரம் செய்தார்.

ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்க உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தனிநபர்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதை தொடர்ந்து முன் எப்பொழுதையும் விட துப்பாக்கிகளின் புழக்கம் அமெரிக்காவில் அதிகரித்து இருப்பதாக துப்பாக்கிகளை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த சில வருடங்களில் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் என்று எண்ணி பார்த்தால் கணக்கு வழக்கே இல்லை. 10, 15 பேர் ஒரு இடத்தில் இறந்தால் தான் இந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றி செய்தி வெளியே தெரிய வரும். சிறிய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் எல்லாம் வெளியே வராது.

ரோட்டில் நடந்து செல்லுபவரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் இங்கே வெகு சகஜம். அதுவும் டெக்சாஸ் போன்ற பகுதிகளில் மிக அதிகம். டெக்சாசுக்கு புதியதாக வந்த பொழுது நாங்கள் கேள்விப்பட்ட தகவல்கள் உண்மையில் அதிர்ச்சி அடைய வைத்தன. நியூஜெர்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைவு. வீட்டில் இருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார்கள். கதவை திறந்தவுடன் நெற்றிக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்டு பணம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பர்சில் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பார்கள். டெக்சாஸ் போன்ற பகுதிகளில் திருட்டும் அதிகம். இந்தியர்கள் வீடுகளில் நகைகள் இருக்கும் என்பது பெரிய ரகசியம் அல்ல. நம்மவர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக வீட்டின் சந்து பொந்துகளில் மறைத்து வைப்பார்கள். ஆனால் இங்கு திருட வருபவர்கள் மெட்டல் டிடக்டருடன் (Metal Detector) வருவார்களாம். சில நிமிடங்களில் வீட்டில் இருக்கும் மொத்த நகையையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். இது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் கதைகள் அல்ல. மிக சகஜமாக டெக்சாசில் அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக உள்ளது. இங்கு இருக்கும் அப்பார்ட்மெண்ட்களில் துப்பாக்கிச் சூடுகள் இல்லாத அப்பர்ட்மெண்ட் எது என தேட வேண்டியிருக்கும். நியூஜெர்சியில் இத்தனை மோசம் இல்லை.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் பல்வேறு துப்பாக்கிச்சூடுகளிலும், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டும் இறக்கின்றனர். இவற்றில் நிறைய குழந்தைகளும் உண்டு என்பது வேதனை அளிக்கும் உண்மை. அமெரிக்க வரலாற்றில் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இவ்வளவுக்கு பிறகும் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த அமெரிக்க அரசியல்வாதிகளால் ஒரு வலுவான சட்டத்தை கூட கொண்டு வரமுடியவில்லை. மக்களின் எதிர்ப்பு அத்தகையது. இதிலே கன்சர்வேட்டிவ்-லிபரல் இடையே கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் உண்டு. ஒபாமா துப்பாக்கிகளை பறித்து விடுவார் என மெக்கெயின் பிரச்சாரம் செய்தார்.

மக்களுக்கு துப்பாக்கிகள் மீது அப்படி என்ன காதல் ?

சமூக விரோத பிரச்சனைகள் காரணமாகவும், வேட்டையாடும் பொருட்டும் துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது தங்களுடைய தனி மனித உரிமையாகவே பெரும்பாலான அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள தடை விதிக்கும் சட்டங்களை பேச்சுரிமை, தனி மனித உரிமைகளை எதிர்க்கும் சட்டமாகவே பார்க்கிறார்கள். இதனால் இங்கே எந்த அரசியல்வாதிக்கும் அத்தகைய சட்டங்களை கொண்டு வரும் தைரியம் இல்லை.

துப்பாக்கிகள் அமெரிக்காவின் கலச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய பொழுது இது அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கிகளை வைத்திருக்க தொடங்கினர். அது தவிர செவ்விந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் துப்பாக்கிகள் வீட்டின் ஒரு அங்கமாக மாறியதாக கூறப்படுகிறது. இவை தவிர ஆரம்பகாலங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுக்கள், காடுகளில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு வர ஒரு பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக துப்பாக்கிகள் சகஜமாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் சட்டத்தில் இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்க மக்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவதை வலியுறுத்துகிறது.

A well regulated militia being necessary to the security of a free State, the right of the People to keep and bear arms shall not be infringed.

இந்த இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்று. ஆனால் ஒவ்வொரு முறை துப்பாக்கிகளை தடை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பொழுதும் துப்பாக்கிகளை ஆதரிக்கும் குழுக்கள் இந்த சட்டத்தை சுட்டிகாட்டி துப்பாக்கிகளை பறிப்பது தங்களது தனிமனித உரிமையை பறிப்பதாகும் என கடுமையாக எதிர்க்கின்றன. இந்த சட்டதிட்டம் எவ்வாறான சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது, ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பல்வேறு பார்வைகள் உள்ளன. அமெரிக்கா மீது பிற நாடுகள் போர் எடுத்தால் ஆயுதங்களை பெருமளவில் கொண்டிருக்கும் மக்கள் அதனை எதிர்த்து போராட முடியும் என்பதே இதன் பொருள். இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு அத்தகைய நெருக்கடி ஏற்படப்போவதில்லை. அதனால் துப்பாக்கிகளுக்கு அவசியமும் இல்லை.

ஆனால் துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காகவே துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் சட்டம் வலியுறுத்துவதாக கூறுகின்றனர். தங்களுடைய பாதுகாப்பிற்கு துப்பாக்கிகள் அவசியம் எனவும் மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக பல வீடுகளில் துப்பாக்கிகள் நிச்சயம் இருக்கும் என்ற நிலை தான் உள்ளது. இப்படி புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் தான் பல நேரங்களில் கிரிமினல்கள் கைகளிலும், மனநிலை சரியில்லாதவர்கள் கைகளிலும் சிக்கி விடுகிறது. அதனால் பல நேரங்களில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

இது தவிர மிக முக்கிய பிரச்சனையாக வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு துப்பாக்கிகளை கையாளுவது மிக சகஜமாக சிறு வயதிலேயே தெரிந்து விடுகிறது. துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது ஒரு கலாச்சாரமாகவே உள்ளதால் பெற்றோர்களே குழந்தைகளுக்கு துப்பாக்கி பயிற்சிகளை கொடுக்கிறார்கள். வீட்டில் இருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். அங்கு ஏற்படும் சிறு பூசல்களுக்கு கூட துப்பாக்கிகள் வெடிக்கின்றன. பல குழந்தைகள் இறக்கின்றனர். சிகாகோ நகரில் ஒரு வருடத்தில் சுமார் 30ம் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார்கள் என ஒபாமா ஒரு தேர்தல் விவாதத்தில் கூறினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதனால் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதை எதிர்க்கிறார்கள். தங்களுடைய வேலையிடங்களுக்கு (அலுவலகங்களுக்கு) துப்பாக்கிகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன. யாராவது அலுவலகத்தில் திடீரென்று நுழைந்து சுட தொடங்கினால் என்ன செய்வது ? எனவே எங்களுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களது வாதம். இங்கே ஒரு சில முக்கியமான அரசு அலுவலகங்களில் மெட்டல் டிடக்கர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் கூட மெட்டல் டிடக்கடர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். ஆரம்பத்தில் இந்தளவுக்கு பயங்கரவாத பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறதோ என தோன்றியது. ஆனால் பிறகு தான் அதன் உண்மையான காரணங்கள் புரிந்தது. யாராவது அரசு அலுவலகங்களில் தங்களுடைய கோபத்தை காட்டி விடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனாலும் இதையும் மீறியே இங்கு துப்பாக்கிச் சூடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் நியூயார்க் குடியேற்ப்பு மையத்தில் நடந்தது போல.

இப்படி பல துப்பாக்கிச் சூடு இங்கே நடந்து கொண்டிருந்தாலும், துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் துப்பாக்கிகளை குறை சொல்வது தவறு என்கிறார்கள். துப்பாக்கிகள் தானாக சுடுவதில்லை. மனிதன் தான் சுடுகிறான். எனவே துப்பாக்கிகளை காரணமாக சொல்ல முடியாது. மனிதர்களின் மனநிலையும், சமூக நிலையும் மாறினால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகள் நடைபெறாது என கூறுகிறார்கள். இந்த வாதமே வேடிக்கையாக உள்ளது. துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் நோக்கம் பல நேரங்களில் இயல்பாக எழுந்து விடுகிறது. மனிதன் மனம் இத்தகைய தன்மை மிக்கதே. மிக அரிதாக பயன்படுத்தும் நோக்கம் மறைந்து குடும்பச்சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவற்றுக்கு கூட துப்பாக்கிகளை பயன்படுத்தும் நோக்கம் ஏற்பட்டு விடுகிறது. இது அமெரிக்கர்கள் என்றில்லாமல் இங்கு குடியேறும் அனைவருக்கும் பொருந்தும். சமீபகாலங்களில் துப்பாக்கி சூடு நடத்திய சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவது ஆபத்தானது. கடந்தவாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்காக தன்குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டுஇறந்திருக்கிறார். இதில் குழந்தைகளும் அடக்கம்.

ஒவ்வொரு முறை அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பெரியளவில் நடக்கும் பொழுது அன்று ஒரு நாள் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசப்படும். துப்பாக்கிகளுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும். அடுத்த நாள் அது மறந்து போய் விடும். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் வெளியாகும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இப்பொழுது வெகு சகஜமாகி விட்டது. ஐயோ, பாவம் என்ற எண்ணத்துடன் சேனல்களை மாற்றும் போக்கு ஏற்பட்டு விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த செய்தியை பார்த்து விட்டு அடுத்த சேனலுக்கு நகர்ந்த பொழுது தான் நாமும் அமெரிக்க மனப்பான்மைக்கு வந்து விட்டோமோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

************

துப்பாக்கி கலச்சாரம் (Gun Culture) என்பது பெரும்பாலான நாடுகளில் வன்முறையையே குறிக்கும். ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பதற்கு வேறு பார்வையும் உண்டு. இங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதும் ஒரு கலாச்சாரமே. மேலே கூறியிருப்பது போல அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய காலங்களில் இருந்தே துப்பாக்கிகள் அமெரிக்காவின் வீடுகளில் சகஜமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி என்பது கலாச்சாரத்தின் ஒரு அங்கமும் கூட. இதன் பிரதிபலிப்பு தான் ஹாலிவுட் திரைப்படங்களில் துப்பாக்கிகள் சகஜமாக பயன்படுத்தபடுவதற்கு முக்கிய காரணம். ஆனால் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கிறேன் எனக் கூறி தமிழ் சினிமாவில் தற்பொழுது துப்பாக்கி காட்சிகளை படங்களில் தேவையில்லாமல் புகுத்த தொடங்கி இருக்கின்றனர். ஏன் ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிகள் பெருமளவில் பயன்படுத்த படுகின்றன என்ற காரணம் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு புரிகிறதா என தெரியவில்லை.

************

ஈழத்தில் துப்பாக்கிகள் போராட்டத்தின் அடையாளமாக கூறப்பட்டாலும் அங்கு துப்பாக்கிகளைச் சார்ந்த வேறு சமூகவியல் பார்வையும் உள்ளது. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் ஒரு துப்பாக்கி கிடைப்பதற்கே மிக கடினமாக இருந்தது. பணத்தேவையும் அதற்கு அதிகம். துப்பாக்கிகளை பெற ஈழத்தில் இருந்த மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதும் கடினம். அந்தளவுக்கு மக்களிடம் பணம் இல்லை. இதனால் துப்பாக்கிகளின் புழக்கம் அங்கு வெகுவாக இல்லை. ஆரம்பகாலத்தில் ஒரு நல்ல துப்பாக்கிக்காக பல போராளிகள் அலைந்திருக்கின்றனர். ஆனால் இந்தியாவின் தலையீட்டிற்கு பிறகும், வெளிநாட்டுத் தமிழர்கள் பெருமளவில் நிதி அளிக்க தொடங்கிய பிறகும் துப்பாக்கிகள் அங்கு பெருகின. துப்பாக்கிகளின் பெருக்கம் துப்பாக்கிகளை கொண்டிருந்தவர்களை அதிகாரம் மிக்கவர்களாக சமூகத்தில் பிரதிபலித்தது.
துப்பாக்கிகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிகள் கிடைத்தவுடன் அதனை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். தங்களிடம் துப்பாக்கிகள் இருக்கிறது என பகீரங்கமாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தங்களை குறித்த பய உணர்ச்சியையும் தோற்றுவித்தனர். இயக்கங்களை எதிர்த்து பேச மக்கள் அஞ்சும் சூழ்நிலையும் எழுந்தது. துப்பாக்கிகளின் வளர்ச்சியும் பய உணர்ச்சியும் இயக்கங்கள் மத்தியில் அதிகாரமையங்களையும் உருவாக்கியது. தங்களுக்கு தாங்களே வகுத்து கொண்ட சட்டங்கள், மற்றவருக்கு அளித்த தண்டணைகள் போன்றவற்றுக்கு துப்பாக்கிகள் கொடுத்த அளவில்லாத சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம்.

ஈழம் என்றில்லாமல் துப்பாக்கிகளை தங்களுடைய கைகளில் எடுக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் அளவில்லாத சுதந்திரத்தையும் தங்கள் கைகளில் எடுத்து கொள்கின்றன. இந்த அளவில்லாத சுதந்திரம் அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது. அதே நேரத்தில் துப்பாக்கிகளை கொண்டு நடக்கும் போராட்டம் மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அதாவது போராட்டத்தினை நடத்த பணத்திற்காக மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக இருக்கும். மக்களை நம்பாமல் தங்களை மட்டும் நம்பும் பொழுது அது போராட்ட பாதையில் இருந்து விலகி சென்று விடுகிறது. ஈழப் போராட்டத்தினை இங்கே பொருத்தி பார்க்க முடியும். ஈழத்திலே உள்ள மக்கள் எப்பொழுதும் ஈழப்போராட்டத்தினை நிர்ணயித்தது இல்லை. அதற்குரிய பணபலம் அவர்களிடம் இல்லை. மாறாக ஆரம்பகாலத்தில் இந்தியா, தமிழகம் (எம்.ஜி.ஆர் போன்றவர்கள்) பிறகு புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்றோரே ஈழப்போராட்டத்தினை நிர்ணயம் செய்தவர்கள். எனவே இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People. இதுவும் ஈழப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம், அரசியல் போராட்டம் என்பதில் இருந்து நகர்ந்து இன்று தமிழன் வாழ்வுரிமை சார்ந்த இராணுவ போராட்டமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம்.

************

துப்பாக்கிகளை ஈழத்திலும், அமெரிக்காவிலும் பார்த்தவரையிலும் இந்த துப்பாக்கிகளை விளையாட்டு மொம்மையாக கூட குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவை பாதுகாப்பின் அடையாளம் அல்ல. வன்முறையின் சின்னம். வன்முறையை மனிதன் எளிதாகவும், சுலபமாகவும் கைக்கொள்ள துப்பாக்கிகள் வழிவகுத்து விடுகின்றன.

Leia Mais…