Sunday, April 04, 2010

காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒபாமா முன்வைத்த காப்பீடுத் திட்டத்தை விட சிறந்தத் திட்டமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பொங்க கூறுகிறார். அவர் அதற்கு கூறும் காரணம் காப்பீடுத் தொகையை தமிழகத்தில் அரசாங்கமே கொடுத்து விடுகிறது. அமெரிக்காவில் தனிநபர்களும், நிறுவனங்களும் கொடுக்கின்றன. மக்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் தமிழகத்தில் காப்பீடு திட்டம் நிறைவேறுவதால் இது அமெரிக்காவை விட சிறந்தத் திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களின் வாதம்.

ஆனால் சில அடிப்படை உண்மைகள் இங்கே தெளிவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் இந்த இலவச காப்பீத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு தனியார் காப்பீடு நிறுவனங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனக் கூறலாம். தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.

இது தவிர அமெரிக்காவை விட தமிழகத்தின் திட்டம் சிறந்தது என மு.க.ஸ்டாலின் கூறுவது சரியானது அல்ல. கலைஞர் காப்பீடு திட்டத்தின் தற்போதைய ஓட்டுச் சாதனை எதிர்காலத்தில் வேதனையாக மாறலாம். அதுவே அமெரிக்கா நமக்கு கற்றுத் தரும் பாடம் ஆகும். அமெரிக்க சுகாதார நலம், காப்பீடு நிறுவனங்களின் அசுரத்தனமானப் பிடியில் உள்ளது. பல அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக முயன்றும் காப்பீடு நிறுவனங்களின் பிடியை சுகாதார நலத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியவில்லை. சுகாதார நலத்தில் உள்ள காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே (To Regulate Insurance Companies) ஒபாமா சுகாதார நல மசோதாவைக் கொண்டு வந்தார். தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசாங்கமே நடத்தும் காப்பீடு திட்டத்தையும் (Public Option) ஒபாமா முன்வைத்தார். ஆனால் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. வலதுசாரிகளும், மிதவாதிகளும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் நடத்தும் காப்பீடு நிறுவனம் அழித்து விடும் எனக்கூறி எதிர்த்தனர். இறுதியில் இத்தகைய அரசாங்கம் சார்ந்த காப்பீடு இல்லாமல் தான் ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறியது.
ஆனால் தமிழகத்திலோ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறையில் காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நுழைக்கிறது கருணாநிதி அரசாங்கம். ஒபாமா செய்ய முனைவதற்கு நேர் எதிரானது கலைஞர் காப்பீடு திட்டம். அதாவது அமெரிக்காவில் எந்தச் சீர்கேடுகளை ஒபாமா சீர்திருத்த முனைகிறாரோ அதே சீர்கேட்டினை தமிழகத்தில் நுழைத்துக் கொண்டிருகிறது கருணாநிதி அரசாங்கம்.

தமிழகத்தின் மொத்தமுள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர் காப்பீடு பெறும் பொழுது மருத்துவச் செலவுகள் படிப்படியாக ஏறத்தொடங்கும். அதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. காப்பீடு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள், லாபம் போன்றவை புதிதாக மருத்துவச் செலவுகளில் புகுத்தப்படுகிறது. இவை தவிர காப்பீடு பாலிசிகள் மூலம் செல்லும் பொழுது மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்கி கொள்ள தேவையற்ற சோதனைகளை பரிந்துரைக்கின்றனர். காப்பீடு நிறுவனம் கொடுக்கப் போகிறது என நுகர்வோரும் இந்தக் கூடுதல் மருத்துவச் செலவுகள் குறித்து கண்டுகொள்வதில்லை. இத்தகைய அதிக மருத்துவச் செலவுகளை ஆரம்பத்தில் காப்பீடு பாலிசிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களும், மருத்துவமனைகளும் செய்தாலும் எதிர்காலத்தில் இது பலருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளது. பணம் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வரும் தமிழகத்தில் இத்தகைய வாய்ப்பினை மறுக்க முடியாது. அதே போல காப்பீடு நிறுவனங்களும் மருத்துவமனைகளை காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களையே சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கும். பாலிசிகள் மூலம் அதிக வருமானத்தை பெறும் வாய்ப்புகளை தனியார் மருத்துவமனைகள் கைவிடப்போவதில்லை. இவ்வாறு மருத்துவச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்கம் வழங்கும் காப்பீடுகள் தவிர தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சலுகையாக காப்பீடுகளை வழங்குகின்றன. தமிழகத்தில் காப்பீடு வைத்திருப்போரின் தொகை அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். தற்பொழுது காப்பீடு தேவையில்லை என நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களும் எதிர்காலத்தில் காப்பீடு எடுக்க வேண்டிய நிலை நோக்கி தள்ளப்படுவார்கள். அதைத் தான் காப்பீடு நிறுவனங்கள் செய்ய நினைக்கின்றன. அதன் சோதனை பிசினஸ் மாடல் (Business Model) தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் செயல்படுத்தப்படும் இந்த இலவச காப்பீடு திட்டங்களோ என கருத இடம் இருக்கிறது.

இது போகிறப் போக்கில் வரும் சந்தேகம் அல்ல. அமெரிக்காவில் காப்பீடு நிறுவனங்கள் செயல்படும் விதங்களை உற்று நோக்கும் பொழுது இவ்வாறு கருத இடம் இருக்கிறது. நான் இங்கே தமிழகத்தையும், அமெரிக்காவை ஒப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அமெரிக்க சூழலும், தமிழக சூழலும் முற்றிலும் வேறானவை. அதே நேரத்தில் உலகெங்கிலும் அமெரிக்க பாணியிலான பொருளாதாரம், அமெரிக்க பாணியிலான தாக்கங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அத்தகைய தாக்கம் காப்பீடில் நுழையும் பொழுது ஆபத்தாகவே முடியும். தமிழகத்தில் காப்பீடு நிறுவனங்களும் அது சார்ந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்படும் விதம் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரை அமெரிக்கா சுகாதாரம் குறித்தே ஆகும். அமெரிக்காவில் சமீப நாட்களில் மிக அதிகமாக அலசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் - ஓபாமாவின் சுகாதார நல மசோதா. இந்த அமெரிக்க அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியப் பாடம் நிறைய இருப்பதாக நான் நினைக்கிறேன். தனியார் காப்பீடு நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா குறித்த இந்தக் கட்டுரை வழங்கும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா - பிளவு பட்டு நிற்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்று வரலாறு படைத்த பராக் ஒபாமா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு வரலாறு படைத்தார். அமெரிக்க வரலாற்றில் பல குடியரசு தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போன சுகாதார நல மசோதா - Health Care Reform கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவடிவம் பெற்றது. அமெரிக்காவின் காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

இந்த வெற்றியை ஒபாமாவும், ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் (Democratic Party), லிபரல்களும் கொண்டாடி வரும் சூழலில், எதிர்க்கட்சியினரான குடியரசுக் கட்சியினரும், கன்சர்வேட்டிவ்களும் ஓபாமா அமெரிக்காவை மோசமான பாதையில் அதாவது சோவியத் சோசலிச பாணியில் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் (குறிப்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி) இன்னும் ஒரு படி மேலே சென்று ஒபாமா, ஹவுஸ் சபாநாயகர் (House Speaker) நான்சி பிலோசி, செண்ட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்களது தீவிர இடதுசாரி நிலைப்பாடினை அமெரிக்கா மீது திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் மூவரையும் மாவோயிஸ்ட்கள் என்று கூட ஃபாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்தது. ஒபாமா ஒன்றும் பெரிய புரட்சி செய்து விட வில்லை. சோசலிசம் என்று புகார் சொல்லப்படும் ஒபாமாவின் இந்தப் புதிய மசோதா முதலாளித்துவ காப்பீடு நிறுவனங்களுக்கே இன்னும் அதிகளவில் நுகர்வோர்களை பெற்று தருகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது சுமார் 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை காப்பீடு நிறுவனங்கள் பெறும்.

உண்மை இவ்வாறு இருக்க வலதுசாரிகளின் கூக்குரல் காரணமாக அமெரிக்கா இன்று பிளவு பட்டு நிற்கிறது. இடதுசாரிகள் ஒரு புறமும், வலதுசாரிகள் ஒரு புறமும் என அமெரிக்கா பிளவு பட நடுவில் சிக்கியுள்ள பலருக்கு உண்மை என்ன ? பொய்யான பரப்புரை என்ன என புரியவில்லை. கன்சர்வேட்டிவ் அமைப்புகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இந்த மசோதா நிறைவேறும் தினத்தில் இதனை எதிர்த்து கேபிடல் ஹில்லில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நீக்ரோக்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளனர். நீக்ரோ எனக் கூறுவது அமெரிக்காவில் நிறவெறி (Racism) என்பதாகவே கருதப்படுகிறது. ஒபாமாவும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே எதிர்க்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இவை தவிர வலதுசாரிகள் மேலும் சில வன்முறை சம்பவங்களை அடுத்த சில தினங்களில் அரங்கேற்றினர். 10க்கும் மேற்பட்ட ஆளும் ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு (பாரளுமன்ற உறுப்பினர்கள்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிலரது வீடுகள் தாக்கப்பட்டன. துப்பாக்கிகளை தூக்கப் போவதாக சில வலதுசாரி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன (அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை - இது குறித்த என்னுடையப் பதிவு துப்பாக்கிகள் மீதான காதல்). அடுத்து வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அக் கட்சி அறிவித்துள்ளது. பதிலுக்கு ஒபாமாவும் முடிந்தால் செய்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். ஒபாவிற்கு வீட்டோ அதிகாரம் (Veto Power) உள்ளதால் குடியரசு கட்சியினர் கோஷம் வெற்று கோஷமாகவே இருக்கப் போகிறது. ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்க குடியரசுக் கட்சிக்கு 67 செண்ட் உறுப்பினர்களும், 290 ஹவுஸ் உறுப்பினர்களும் தேவை. தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இதற்குச் சாத்தியமில்லை.

இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து அமெரிக்காவிலும், வாசிங்டன் அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய ஓபாமாவிற்கு தற்போதைய அமெரிக்க சூழல் ஒரு பின்னடைவே ஆகும். ஆனாலும் ஒபாமா தன்னால் முடிந்த அளவுக்கு குடியரசுக் கட்சியை அரவணைத்து செல்லவே முயன்றார். ஆனால் ஒபாமாவின் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடியரசுக் கட்சின் முன் ஒபாமாவின் முயற்சிகள் வெற்றிப் பெற வில்லை. ஓபாமா இன்று தன்னுடைய ஜனநாயக் கட்சியை மட்டுமே சார்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஏன் இத்தனைக் கூச்சல் ? ஆர்ப்பாட்டம் ?

ஆட்சியில் அமர்ந்த உடன் முந்தைய குடியரத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் போல இல்லாமல் ஒபாமா உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய முக்கிய திட்டமாக இந்தச் சுகாதார நலத் திட்டத்தை ஒபாமா அறிவித்தார். ஏற்கனவே பல ஜனநாயக் கட்சி குடியரசுத் தலைவர்கள் இதனை செய்ய முயன்று தோல்வியே அடைந்தனர். பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் இதனை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் அதீத கூக்குரல், எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒபாமாவும் அத்தகைய எதிர்ப்பையே எதிர்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒபாமாவின் அனுபவமின்மையும், தடுமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த மசோதா நிறைவேறப்போவதில்லை என்பதான சூழ்நிலையே இருந்தது. ஒபாமா தன் கட்சியின் தீவிர இடதுசாரிகள், மிதவாதிகள், எதிர்க்கட்சியினர், வலதுசாரிகள் இடையே சிக்கித் தவித்தார். இந்த மசோதாவில் தோல்வி அடைந்தால் ஒபாமாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். இந்த தோல்வியில் இருந்து மீள ஒபாமா மிகவும் கடினப்பட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறி இருக்கிறது. இதற்கு காரணம் ஒபாமாவின் தொடர்ச்சியான முயற்சியும், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசியின் தலைமைப் பண்புகளும் தான். ஆனால் இந்த மசோதா நிறைவேறியதால் வலதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அப்படி என்ன தான் உள்ளது இந்த மசோதாவில் ? ஏன் அதற்கு இத்தனை எதிர்ப்பு ?

முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்காவில் நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் முதலாளித்துவத்தின் பிடி இருக்கும். மிக எளிதாக இருக்கும் நம் நாட்டின் எத்தனையோ அம்சங்கள் இங்கு இவ்வளவு குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எனக்கு தோன்றும். அப்படி சிக்கலாக இருக்கும் பலவற்றில் முக்கியமானது சுகாதாரம். உதாரணமாக நம் ஊரில் நமக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவமனை நிர்ணையிக்கும் கட்டணத்தைச் செலுத்துகிறோம். மருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்தகத்திற்கு செல்கிறோம், மருத்துவர் எழுதித்தரும் மருந்துக்கு காசு கொடுத்து வாங்குகிறோம். அவ்வளவு தான்.

ஆனால் அமெரிக்காவில் அது அத்தனை சுலபம் அல்ல. மருத்துவச் செலவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பலர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக கடனாளியாகி உள்ளனர். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் சுகாதார காப்பீடு (Health Insurance) எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதாவது என்றைக்காவது நமக்கு நேர சாத்தியம் உள்ள உடல்நலக் கேடுகளுக்காக முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் கட்டணம் - Premium செலுத்த வேண்டும்.

இத்தகைய காப்பீடுகளை எடுப்பதற்கு நாம் தனியாக காப்பீடுச் சந்தையில் சென்று எடுக்கலாம். நாம் பணியாற்றும் நிறுவனம் மூலமாகவும் காப்பீடுகளை எடுக்கலாம். இதில் பலரும் அதிகம் பயன்படுத்துவது தங்களின் நிறுவனங்களின் மூலமான காப்பீடுகளையே (Employer Based Insurance). அதாவது ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகையாக இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் ஒரு சிறு தொகையை செலுத்த, நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு தொகையை செலுத்தி இந்தக் காப்பீடுகள் வழங்கப்படும் (Group Policy). நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும், பாலிசிகளுக்கும் ஏற்றவாறு வேறுபடும். நான் 250 டாலர் தொடங்கி 400 டாலர் வரை ஒவ்வொரு மாதம் செலுத்தி இருக்கிறேன். அதாவது கணவன், மனைவி இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நிறுவனம் சலுகையாக வழங்கினாலும் கூட நாம் சுமார் 200 டாலர் முதல் 400 டாலர் வரை நம் கையில் இருந்து செலுத்த வேண்டும். வீட்டு வாடகை, வீட்டுச் செலவுக்கு அடுத்து மிக அதிகளவு கட்டணம் இந்தக் காப்பீட்டுக் கட்டணம் ஆகும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து நிறுவனங்களுமே இதனை வழங்குவதில்லை. பலச் சிறிய நிறுவனங்கள் இவ்வாறான காப்பீடுகளை வழங்குவதில்லை. காரணம் அது மிக அதிக அளவிலான நிதிச்சுமையை அந் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றன. நான் கடந்த வருடம் என் இந்திய நிறுவனத்தை விட்டு விலகி தனியாக ஒரு கன்சல்டண்டாக வேலைப் பார்த்த பொழுது ஒரு நிறுவனம் சார்ந்த காப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் சார்ந்தக் காப்பீடு (Employer Based Insurance) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.

ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்து அதன் மூலம் காப்பீடு பெரும் பொழுது கிடைக்கும் பலச் சலுகைகள் காப்பீட்டுச் சந்தைக்கு சென்று நாம் தனியாக பெறும் பொழுது கிடைக்காது. முதல் பிரச்சனை மிக அதிக விலை. நான் ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்த பொழுது காப்பீட்டுத் தொகையாக 400-500டாலர் செலுத்தி இருந்தால் காப்பீடுச் சந்தையில் அதன் விலை 1500 டாலர் என்றளவில் இருக்கும். அதாவது நம் சம்பளத்தில் மிகப் பெரிய தொகையை இதற்குச் செலுத்த வேண்டும்.

எனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் மிக அடிப்படையான ஒரு பாலிசியை தேர்தெடுத்தேன். அந்த அடிப்படையான காப்பீட்டின் தொகை மாதம் ஒன்றுக்கு சுமார் 850-900 டாலர்கள். அடிப்படையான காப்பீடு என்றால் மிகவும் அடிப்படையானது (Very Basic). ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளை இந்தக் காப்பீடுகள் முலம் பெற முடியாது.

இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டிற்கான மிக அதிகளவிலான கட்டணம் - ப்ரீமியம். இத்தகைய அதிகளவிலான தொகையை பலரால் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு காப்பீடு இல்லை என்பதான சூழ்நிலை உள்ளது. இது தவிர நல்ல உடல்நலத்துடன் இருக்கும் பலர் காப்பீடு எடுப்பதில்லை. இவ்வாறு சுமார் 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.

காப்பீடு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை ?

அமெரிக்காவில் மருத்துவக் கட்டணங்கள் மிகவும் அதிகம். இதன் காரணமாக காப்பீடு இல்லாதவர்கள் தங்கள் மருத்துவத்திற்கான சிகிச்சைகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கடன்சுமை காரணமாக திவாலாகும் தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலேயே திவாலாகின்றனர்.

அப்படியெனில் அமெரிக்காவில் அரசாங்கம் எந்த சுகாதார நலனையும் வழங்குவதில்லையா ?

அரசாங்கம் சில சுகாதார நலன்களை வழங்குகிறது. ஆனால் அது அனைவரையும் உள்ளடக்குவதில்லை. அமெரிக்க அரசாங்கம் Medicare, Medicaid போன்ற சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. Medicare 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை வழங்குகிறது. Medicaid வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், வருமானம் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் என சில பிரிவினரை உள்ளடக்கி உள்ளது. ஆனால் காப்பீடு இல்லாத 45 மில்லியன் மக்கள் இந்தப் பிரிவில் வருவதில்லை. அதாவது அரசாங்கம் நிர்ணயிக்கும் வருமானத்தை விட அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் சுகாதார காப்பீடு பெறும் அளவிற்கான வருமானம் இவர்களுக்கு இல்லை.

காப்பீட்டுத் தொகை இவ்வளவு அதிகமாக செலுத்தும் பொழுது, நமக்கு அனைத்து சுகாதார நலன்களும் கிடைக்கிறதா என்றால்...இல்லை என்பதே உண்மை.

காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை விழுங்கும் முதலைகள். பண முதலைகள். தனியார் நிறுவனங்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் என இந்தியாவில் இடதுசாரிகள் பேசுவதை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கேட்டிருந்தால், அமெரிக்காவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். நம்மிடம் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பெறும் காப்பீடு நிறுவனங்கள் நம்முடைய அத்தனை மருத்துவ தேவையையும் நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திடீரென்று கேன்சர் என்ற பெரிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வரை நலமுடன் இருந்த பொழுது அவரிடம் பணத்தை ப்ரீயமாக பெற்ற காப்பீடு நிறுவனம் அவரை எந்தக் கேள்வியும் இல்லாமல் காப்பீட்டில் இருந்து நீக்க முடியும் (சில மாநிலங்களில் இவ்வாறு செய்ய முடியாது. உதாரணமாக நான் இருக்கும் நியூஜெர்சியில் யாருக்கும் காப்பீடு மறுக்க முடியாது. ஆனால் நியூஜெர்சியில் டெக்சஸ் மாநிலத்துடன் ஒப்பிடும் பொழுது கட்டணம் அதிகம்).

இது தவிர இன்னும் பல தில்லுமுல்லுக்களை காப்பீடு நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவருக்கு காப்பீடு எடுக்கும் முன்பு அல்சர் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் தான் மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அதனை ஈடுசெய்ய காப்பீடு எடுக்க வேண்டும். ஆனால் காப்பீடு எடுத்தால் ப்ரீமீயத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அல்சர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் Pre-existing conditions not covered. அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. புதியதாக ஏதேனும் நோய் வந்தால் கிடைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காப்பீடு மொத்தமாக நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இவையெல்லாம் ஏதோ செய்திகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து எழுதப்படுவதில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் நேர்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. வேலையில் இருக்கும் வரை காப்பீடு இருக்கும். வேலையை விட்டு விலகினால் காப்பீடு இருக்காது (COBRA என்ற ஒன்று உண்டு. அது தனிக்கதை. அதிலும் பலச் சிக்கல்கள்). நாம் தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோமே காப்பீடு எடுக்காமல் சில மாதங்கள் இருக்கலாம். காப்பீடுத் தொகையை மிச்சப்படுத்தலாம் என ஒரு முறை காப்பீடு எடுக்கவில்லை. எப்பொழுதுமே இத்தகைய நேரத்தில் தான் உடல்நலக் கேடுகள் அமெரிக்காவில் வரும். கடந்த பல வருடங்களாக காப்பீடு செலுத்திய பொழுது ஒரு ஜூரம் என்று கூட மருத்துவரிடம் நான் சென்றது கிடையாது. மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமே மருத்துவரிடம் சென்று இருக்கிறேன். ஆனால் காப்பீடு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் சரியாக உடல்நலக் கேடுகள் ஏற்பட்டன. மருத்துவரிடமும் செல்ல முடியாது. என்ன செய்வது என புரியாமல் தவித்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக ஒரு மருத்துவரிடன் இருந்து மருந்து பெற்றேன்.


இவையெல்லாம் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே. இன்னும் பல உள்ளன. இவை தவிர பல் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Dental Insurance). கண் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Vision Insurance) என ஒரு பெரிய பட்டியல் உண்டு.

***************************

இவ்வாறான பலப் பிரச்சனைகளை சரி செய்ய ஒபாமா முன்வைத்த திட்டம் தான் சுகாதார நல சீர்திருத்த மசோதா - Healthcare Reform. சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு ஒபாமா இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்ததில் இருந்து தொடர்ச்சியான பிரச்சனைகள். ஒபாமா அமெரிக்காவின் சுகாதார நலத்தை அரசாங்கத்தின் கைகளுக்குள் கொண்டு வர முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபாமாவும் இடதுசாரிகளும் அரசாங்கம் வழங்கும் சுகாதார காப்பீடுகளை (Public Option) முன்வைத்தனர். இதன் மூலமாகவே தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ப்ரீமியத்தை குறைக்க முடியும் என்பது ஒபாமாவின் வாதம். ஆனால் இதனை வலதுசாரிகள் எதிர்த்தனர். இது தனியார் நிறுவனங்களை அழித்து விடும் என்பது அவர்களின் வாதம். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் மீது கன்சர்வேட்டிவ்களுக்கு அப்படியொரு காதல். இந்த மசோதா அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் காப்பீடு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுக்கும் தங்களுடைய மருத்துவருக்கும் இடையில் அரசாங்கம் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பது மற்றொரு வாதம். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே மிதவாதிகள், தீவிர இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் என விவாதம் ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒபாமா தன்னுடைய திட்டம் இது தான் என்ற தீர்மானமான ஒரு வடிவத்தை காங்கிரசிடம் அளிக்கவே இல்லை. ஒரு மேலோட்டமான வரையறையை மட்டும் செய்து விட்டு மசோதாவை உருவாக்கும் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டார். இதுவே பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து. ஒபாமா இவ்வாறு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் - பில் க்ளிண்டன் தோல்வியில் கற்றப் பாடம். தற்பொழுது ஒபாமாவின் முக்கிய ஆலோசகர் ராகம் இமானுவல். இவர் பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் தங்களுடைய திட்டமாக ஒரு சுகாதார மசோதாவை உருவாக்கி அதனை நிறைவேற்றுமாறு காங்கிரசை பணித்தனர். காங்கிரஸ் அதனை அப்படியே நிராகரித்தது. எனவே ஒபாமா அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நோக்கமாக ஒரு வரையறையை மட்டும் உருவாக்கி விட்டு முழு மசோதாவையும் காங்கிரசே செய்யுமாறு ஒபாமா பணித்தார். இதன் மூலம் பலரது யோசனைகளையும் உள்ளடக்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து பிரிவினரது ஆதரவையும் பெறலாம் என்பது ஒபாமாவின் திட்டம். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இயலாத காரியம் என ஒபாமா உணர்ந்தனர். விவாதங்களும், எதிர் விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

பல தடைகளுக்குப் பிறகு இறுதியாக கடந்த வாரம் நிறைவேறிய ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்.

- இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது (2014ல்) அனைவரும் கட்டாயமாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். தற்பொழுது இளைஞர்களும், நல்ல அரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடு எடுப்பதில்லை. காரணம் மருத்துவ தேவையே இல்லாத பொழுது காப்பீடு தேவையில்லை என்பதே. அதனால் மருத்துவத் தேவை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடுகளை நாடும் பொழுது காப்பீடுத் தொகை அதிகரிக்கிறது. மாறாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடுகளை எடுக்கும் பொழுது அதில் பெறும் வருவாயைக் கொண்டு உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யலாம். இதனால் ப்ரீமியம் அதிகரிக்கப்படாமல் ஒரே சீராக வைத்திருக்க முடியும். ஆனால் இதனை பலர் எதிர்க்கின்றனர். காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்குவது தாங்கள் உயிர் வாழ்வதற்கே ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் இருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை.

- காப்பீடு நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற போக்கிற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் - Children with Pre-existing conditions are not covered by Insurance. தற்பொழுது ஆரோக்கியமில்லாமல் உள்ள குழந்தைகளின் மருத்துவச்செலவை காப்பீடு மூலம் பெற முடியாது. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக பெற்றோர்கள் திண்டாடும் நிலைமை உள்ளது. இந்தச் சட்டம் இதனை தடை செய்கிறது. இது இந்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளின் மூலம் இந்த அமலாக்கத்தை 2014 வரை கடத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.

- 26 வயது வரை தங்களின் பெற்றோர்களின் காப்பீடுகளிலேயே இருந்து கொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்பொழுது 19வயதுக்கு மேல் தனி காப்பீடுகளை எடுக்க வேண்டும். பெற்றோர்களின் காப்பீடுகளில் இருக்க முடியாது. இது பலப் பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இந்த வருடம் முதல் அமலுக்கு வரும் இந்தப் பிரிவு பல பெற்றோர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- நோய் கண்டறியப்பட்டவுடன் காப்பீடுகளில் இருந்து நீக்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இது தவிர நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியான ப்ரீமியம், நோய் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியான ப்ரீமியம் போன்றவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது

- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு (Pre-existing Conditions) தற்பொழுது காப்பீடு வழங்கப்படுவதில்லை. அதனையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது. இது 2014ல் அமலுக்கு வருகிறது.

- இவை தவிர அமெரிக்காவின் பற்றாக்குறையை இந்த மருத்துவ நல மசோதா குறைக்கும் என கூறப்படுகிறது.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா இவ்வாறு பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் பெருவாரியான அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பே இருந்து வருகிறது.

அரசாங்கமே நடத்தும் காப்பீடு இல்லாத இந்த திட்டத்தால் பெரிய அளவு நன்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மாறாக இந்த திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கே அதிக நன்மையை கொடுக்கும். அதாவது 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இந்தக் காப்பீடு நிறுவங்கள் பெறும். காப்பீடு நிறைவேறிய வாரத்தில் இந்தக் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். காப்பீடுகளின் ப்ரீமியத்தை இந்தத் திட்டம் எந்த வகையிலும் குறைக்காது என்பது என்னுடய நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்த மசோதா ஒரு முதல் படி தான் என்றும் Public Option போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் ஒரு வாதம் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வரும் நவம்பர் தேர்தலில் ஆளும் ஜனநாயக் கட்சி பின்னடைவைச் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இது அடுத்தச் சில வருடங்களில் சாத்தியமற்றதே.

இந்த மசோதாவிற்கு எதிராக பல வாதங்கள் கூறப்பட்டாலும் காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மிக முக்கியமான ஒரு மசோதா என்றளவில் ஒபாமாவின் இந்த மசோதா ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

20 மறுமொழிகள்:

பழமைபேசி said...

நிச்சயமாக, மத்திய மற்றும் கீழ்த்தர மக்களுக்கு ஏதுவான திட்டம்தான் இது. பலன்கள் உடனடியாகத் தெரிய வாய்ப்பு இராது.... ஆனால், நெடுநோக்கில் நலம் பயக்கக் கூடியது....

26 வயது வரைக்கும் பெற்றோர் காப்பீட்டில் பங்கு கொள்வது மற்றும் ஏற்கனவே இருக்கும் நோய்க்கான சிகிச்சை என்பது ஒரு வரப்பிரசாதம்.

மேலும் தங்கள் கட்டுரை மிக, மிக விரிவாக உள்ளது; நன்றி!!

அமெரிக்கக் காப்பீட்டோடு தமிழகத்தை ஒப்பிடுவது? இஃகிஃகி!!

6:04 PM, April 04, 2010
Raveendran Chinnasamy said...

Good Post which clearly said about TN Health Policy . Except Srilanka Issue we think alike :-)

6:30 PM, April 04, 2010
அக்கினிச் சித்தன் said...

இன்சூரன்சு கம்பெனிக் காரனுங்க பண்ணுற அநியாயம் கொடுமைங்க. இதே கொடுமை தமிழ்நாட்டுலயும் ஆரம்பிக்கப் போவுது. என்ன, அங்க ஒரு ஒபாமா வரமாட்டார். இன்னொன்னு தெரியுங்களா, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (கேகேடி சுருக்கமா) இருக்குன்னு சொன்னீங்கன்னா, தனியார் மருத்துவமனையில உங்களுக்குத் தனி வரிசை. காசு முதல்ல, கேகேடி அப்புறம்! வாழ்க நலமுடன்!

6:38 PM, April 04, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

அமெரிக்கக் காப்பீட்டோடு தமிழகத்தை ஒப்பிடுவது?

*****

பழமைபேசி,

நான் அமெரிக்காவுடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை. ஆனால் அமெரிக்க பாணி பொருளாதாரத்தின் ஆபத்துகளை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அமெரிக்க பாணியில் காப்பீடு நிறுவனங்களை ஆதரிப்பது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டவே முயன்றேன்.

தவிர துணை முதல்வர் அமெரிக்க சுகாதார நலத் திட்டத்தை விட கலைஞர் காப்பீடு திட்டம் சிறந்தது எனக் கூறுவது மிகவும் அபத்தமானது.

நன்றி...

8:32 PM, April 04, 2010
பழமைபேசி said...

//தவிர துணை முதல்வர் அமெரிக்க சுகாதார நலத் திட்டத்தை விட கலைஞர் காப்பீடு திட்டம் சிறந்தது எனக் கூறுவது மிகவும் அபத்தமானது.//

ஆமாம்... அமெரிக்கா நினைக்கும் போக்கிற்கு எதிரானதுதான் தமிழக நிலை!

Cap -- socialism Vs Soc -- Cap

ஆட்சியாளர்களுக்கோ அல்லது நிர்வாகத்திற்கோ அது தெரியாமலில்லை... ஆனாலும் அதுதான் நடக்கும், மக்கள் உணராத வரையிலும்!!

8:42 PM, April 04, 2010
305kayaker said...

Nanbarey,

Sorry for not replying in Tamil as i have font issues.
The reason the health care is in a mess rite now in US is not ONLY because of Insurance companies.
The reason is because of the so called Managed care system(third party billing) and heavy govt regulations.
Doctors want more money and patients don't care as the money is not coming from their pocket.

We know how much it costs to change a oil for our cars. Let us say if GEICO pays for our oil changes. Guess,what would happen?
We want the premium oil at a premium place. As the insurance company is paying for our service, we won't do any shopping around.
And even PepBoys would charge $100 for oil change so after insurance decline they may get $40.
So here in this situation, there is a distortion of market pricing mechanism because of the third party involvement.

The reason we have $30 oil change is because that is the price set by the market place after all the competition between them.For a healthy functioning of

any marketplace, the pricing mechanism is very very important.
The price is a signal to the producers as well as to the consumers about the availability or shortage of a product or a service.When Laptop was sold $2000,

that price sent a signal to the producers.Hey, there is a serious money to be made in the Laptop market.So everybody(HP,DELL,etc.,) jumped into the market.So

what happened?
Because of the competition among themselves to get the consumers, they came up with quality products at affordable prices.Now we can get a decent laptop for

$400.

So in health care market there is no functioning of pricing mechanism.Nobody knows what is the price of an X-ray test or an MRI but we know how much it cost

to balance of tire in the car.



The American Medical association and American Hospital Association have a strong hold over who can practice medicine and where a new hospitals can be built.
They lobby the congress to pass laws in favor of them. They restrict supply of new doctors and hospitals so that they can have huge monopoly over the

business of health care.
There is a thing called "Certificate of Need".Before somebody opens a health facility, they need to get this certificate from a healthcare planning agency.
Already well established hospitals(like cleveland clinic, Baptist etc.,) have a huge control over these state agencies which give CON to new facilities.They

make sure nobody invades their turf.Meaning, they stifle the competition.

AMA has a powerful army of lobbyist in DC to make sure the congress passes laws in their favor.

The only way to fix healthcare is to obey the fundamental principles of economics and get the govt out of it.
When govt gets involved in something, it messes up everything.
Where in US we spend lot of time waiting.... DMV, USPS and ofcoures our beloved Immigration.

Govt can't solve economic problems whereas it can only aggravate it.
The reason we don't have milk crisis or laptop crisis in this country is because in those areas we have the true functioning of market system.
If you are interested in discussing further, send a mail to jrtexas123atgmaildotcom

8:42 PM, April 04, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

Good Post which clearly said about TN Health Policy . Except Srilanka Issue we think alike :-)

*****

Good to hear that atleast we agree on a few things :))

நன்றி...

11:05 PM, April 04, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

அக்கினிச் சித்தன்,

நன்றி...

11:07 PM, April 04, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

Jay,

முதலில் உங்கள் கருத்துக்கு நன்றி...

உங்களுடைய கருத்தைச் சார்ந்த வாதத்தை தொடர்ச்சியாக இந்த சுகாதார நல மசோதா குறித்த விவாதங்களில் கேட்டு வந்திருக்கிறேன். எனவே இந்தக் கேள்வியை உங்களிடம் முன்வைக்கிறேன்.

தற்போதைய சுகாதார நல மசோதா எந்த வகையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது எனக்கூற முடியுமா ? அப்படி செய்யாமல் ஒரு சுகாதார நலத்தை எவ்வாறு அனைத்து அமெரிக்க மக்களுக்கும் வழங்க முடியும் ?

விளக்க முடியுமா ?

11:20 PM, April 04, 2010
மோகன் கந்தசாமி said...

கொள்திறனை அரசாங்கம் அதிகரிக்க முடியாது என்ற நிலையில் தனியாரை எவ்வாறு ஊக்குவிப்பது? சராசரி தனியார் மருத்துவமனை ஒன்றின் கட்டணத்தில் பாதியை மட்டும் வசூலிக்கும் சில மருத்துவமனைகளும் உண்டு. அவ்வாறானவற்றை ஊக்குவிக்கவேண்டும். நிதி உதவியோ அல்லது சலுகைகள் தந்தோ அல்ல. அரசின் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அவற்றை உள்ளடக்கியோ, அதுபோன்ற புதிய காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கியோ, இலவசமில்லாமல் கட்டணம் செலுத்தும் காப்பீட்டுத் திட்டங்கள் தோற்றுவித்து அல்லது தனியார் காப்பீட்டு நிறுவனங்களை கடுமையாக வரைமுறை படுத்தி இம்மருத்துவ மனைகளுக்கு முன்னுரிமை தந்தோ ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மருத்துவ கட்டணத்தின் அதிக பட்சத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிப்பது, ஒவ்வொரு நோய்க்குறிக்கும் சோதனைகளை அவை வரைமுறைப் படுத்துவது போன்றவற்றை அரசு செய்யவேண்டும். அவற்றை பின்பற்றும் தனியார் மருத்துவமனைகளை மட்டும் தம் பயனர் வளையத்துக்குள் அனுமதிப்பது ஒரு நல்ல யோசனை. தேவையில்லாமல் பணம் பறிக்கும் நோக்கில் செய்யப்பட்ட மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்கும் உரிமையை உறுதிப் படுத்தலாம். அரசாங்க காப்பீட்டு நிறுவனம் இதை கடுமையாக பின்பற்றி வழிகாட்ட வேண்டும். நோயாளிகளிடம் அதை பெறுவதையும் தடை செய்து விட வேண்டும். ஏனெனில் மருத்துவ செலவு என்பது சாமானியனுக்கு சுமையாகிப் போவது என்பது காவளித்தனமான மருத்துவர்களாலேயே ஏற்படுகின்றது. வேறு எந்த காரணமும் இல்லை. ஸ்ட்ரோக் வியாதிக்கு சி டி ஸ்கேன் எடுக்கச்சொல்வதை ஒரு ஏழை நோயாளி கூட செய்துவிடுவார். நோயின் தன்மை குறித்து அவர் அறிகிற நிலையில் சொத்தை விற்றாவது நோயை குணப்படுத்திக்கொள்ள அவர் விழைவார். ஆனால் தலைவலிக்கான மற்ற காரணங்களை ஆராயாமல் அல்லது ஆராய விருப்பமில்லாமல் நேரடியாக 'மூளையை படம் பிடித்துவிட்டு வாருங்கள்' என்று மருத்துவ செலவை ஏற்றும் பிள்ளுகாலி மருத்துவர்களால் அந்நோயாளி நொடிந்து போய்விடுகிறார். இங்குதான் அரசாங்கம் அல்லது அரசு காப்பீட்டு நிறுவனம் தீவிர கவனம் செலுத்த வேண்டியதாகும்.

என்னைப்பொறுத்த வரையில் மக்களின் சுகாதார உரிமையை மதிக்கும் அரசாங்கம் செய்ய முற்படும் நல்ல விசயங்களில் அரசின் காப்பீட்டு திட்டத்தையும் ஒரு கூறாகக் கொள்ள முடியும். சிறப்பாக நடைமுறைப் படுத்தியும், காப்பீட்டு நிறுவனங்களை வரைமுறைப் படுத்தியும், கசுமாலம் பிடித்த மருத்துவர்களை கட்டுப் படுத்தியும் இதை வெற்றி பெறச்செய்ய முடியும். ஓரிரு தேர்தல்களை மனதில் வைத்து இதைச்செய்யாமல் நீண்டகால அடிப்படையில் யோசித்திருந்தால் நீங்கள் சொன்ன பாதகமான விசயங்களை இதை உருவாக்கியவர்கள் உணர்ந்தே இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் எழவெடுத்த பதவி ஆசை மண்டை முழுக்க வியாபித்திருக்கும் சூழலில் இந்த விசயங்கள் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவே.

நன்றி.

1:11 AM, April 05, 2010
மோகன் கந்தசாமி said...

///தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.///

அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளை மேம்படுத்தாமல் இருக்கிறது என்பது ஓரளவுக்குத்தான் உண்மை என்பது எனது கருத்து. ஏனெனில் மேம்பாடு என்பது மூன்று வித அம்சங்களில் செய்யப்படவேண்டும். கொள்திறன், தரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றில் தனித்தனியாக கவனம் செலுத்தியாக வேண்டும். கொள்திறன் மற்ற இரண்டையும் நேரிடையாக பாதிக்கக்கூடியது. ஆனால் கொள்திறனில் மேம்பாட்டிற்கு நாம் முயன்றாலும் அது தரத்தையோ, சுகாதார சூழலையோ மேம்படுத்திவிடாது. தனியாக கவனம் செலுத்த வேண்டும். கொள்திறனை ஒரேடியாக அதிகப்படுத்துவது சாத்தியமில்லாதது. விரிவாக்கல் வீதத்தை சற்று அதிகப்படுத்தலாமே ஒழிய இரட்டிப்பாக்கல் கூட சாத்தியமில்லாதது. அரசு ஊழியர் எண்ணிக்கையை குறைக்காவிட்டாலும் அதிகரிக்கச்செய்வது தற்காலத்தில் அரசாங்கங்கள் விரும்பாதது, முடியாதது, கூடாதது. தனியாரை ஊக்குவித்து கொள்திறன் பூர்த்தி செய்யப்படுவதே சிறந்ததாகும்.

தரத்தை பொறுத்த வரை பெரும்பான துறைகளில் போதுமானதாகவே உள்ளது. மருத்துவ ஊழியர்கள் தாம் செய்வதை பொறுப்பாக செய்தாலே அது தரமாகவே இருக்கக்கூடும். நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தால் தரமும் மேம்பாடு கூடலாம். அந்த சூழலிலும் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியம்.

சுத்தத்தை பொறுத்த வரையில் அரசாங்கத்தை விட 'டீன்' -கள் கவனிக்க வேண்டியது அதிகம். தங்களுக்கு கிடைக்கும் வளங்களிலேயே ஒரு மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்க ஒரு டீன் -ஆல் முடியும். நான் பயிற்சி பெற்ற அரசு மருத்துவமனை ஒன்றில் ஒரு புதிய டீன் வந்த பொது ஒருவாரத்திற்கு வெகு சிறப்பாக சுத்தத்தை பராமரித்தார். ஒரே வாரத்தில் நின்று போனது. ஏனெனில் அந்த டீன் நீண்ட விடுப்பில் சென்றிருந்தார். அரசாங்கம் டீன் -களை சுற்றி வளைத்தால் போதும். முதலீடு அதிகம் தேவை இல்லை என நினைக்கிறேன்.

1:11 AM, April 05, 2010
குழலி / Kuzhali said...

காப்பீட்டு திட்டங்களின் சாதக பாதகங்களை தாண்டி அவைகள் லாப நட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு லாட்டரி நிறுவனம் போல,

இலட்சம் பேர் ஆளுக்கு இரண்டு ரூபாய் கட்டி லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் முதல்பரிசு ஒரு இலட்சத்தை ஒருவன் பெறுவது இரண்டு ரூபாய் என்ற சிறிய பணத்தை இரண்டு இலட்சம் பேர் போட்டு ஒரே ஒருத்தன் ஒரு இலட்சம் பணம் பெறுவது மிச்சம் ஒரு இலட்சம் லாட்டரி டிக்கெட் நடத்துற கம்பெனிக்கு போய்விடும்...
இப்போ முதல்பரிசை நான் வாங்கனுமென்றால் எல்லா லாட்டரியையும் நானே வாங்கனும், அப்படி வாங்கினால் நான் 2 இலட்சம் செலவு செய்யறேன், ஆனா பரிசு ஒரு இலட்சம்...

இந்த இடத்தில் கருணாநிதி வந்து எல்லோரும் வாங்குற லாட்டரி டிக்கெட்டுக்கு அரசாங்க பணத்தை எடுத்து நான் பணம் தர்றேன் அப்படிங்கறார்... ஒரு இலட்சம் முதல் பரிசு வாங்கறவனுக்கு போயிடும் மீதி ஒரு இலட்சம் லாட்டரி கம்பெனிக்கு அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு... இதுக்கு பதில் ஒரு இலட்சத்தை அவரே ஆஸ்பத்திரிகளுக்கு செலவு செய்யலாமே?

தவணைத்(பிரிமியம்) தொகையாக ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்குகிறது.

ஒரு ஆண்டுக்கு 517 கோடி 5 ஆண்டுகளில் 2550 கோடிகளுக்கும் மேல், இந்த செலவில் எத்தனை மாவட்ட தலைமை மருத்துவமைகளையும் PHC களையும் மேம்படுத்தலாம்... எல்லாமே குறுகிய நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறது

3:59 AM, April 05, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

மோகன், குழலி,

உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி...

8:30 PM, April 05, 2010
ஏழர said...

////////மத்திய மற்றும் கீழ்த்தர மக்களுக்கு ஏதுவான திட்டம்தான் இது////////////
அய்யா பழமைபேசி.. அது என்ன கீழ்த்தர மக்கள்???

6:50 AM, April 06, 2010
Raj Chandra said...

Nice primer about the health care.

One point you could have considered is, the uninsured people walking into the emergency rooms (which the hospitals cannot deny it and should not deny it). That also increases the medical cost.

Thanks
Rajesh

1:20 PM, April 06, 2010
இராதாகிருஷ்ணன் said...

நல்ல விரிவான கட்டுரை. ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் முதல் அம்சமாகக் குறிப்பிட்டுள்ளது இங்கு சுவிஸில் நடைமுறையிலுள்ளது. அனைவரும் சட்டப்படி மருத்துவக் காப்பீட்டில் இருக்க வேண்டும்!

தமிழகத்தில் இதன் பாதகங்கள் இன்னும் உணரப்பட பல காலமாகும். அதற்குள் எல்லாம் கைமீறிப்போயிருக்கும். பிரதான எதிர்கட்சியான அதிமுக இது குறித்து ஏதும் உருப்படியான எதிர் விவாதங்களை வைத்ததாகத் தெரியவில்லை (எதற்குத்தான் வைத்தார்கள் என்றால் பதிலில்லை ;) ). ஒருவேளை அவர்களுக்கும் வருங்காலத்தில் இது 'பணப்பசு'வாக உதவக்கூடும் என்று விட்டுவைத்திருக்கலாம்.

4:51 PM, April 06, 2010
தனசேகர் said...

மிக விரிவான ‍ உண்மையை வெளிக்கொண்டு வரும் கட்டுரை . இந்தியா முன்னேறியதற்கு அமெரிக்காவைப் போன்று மேற்குலகத்தைப் பின்பற்றியதே காரணாமாக இருந்தாலும் , மேற்குலகத்தின் தோல்விகளைப்பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பலவற்றில் சுகாதாரம் , மருத்துவமும் ஒன்று. ஏற்கனவே காப்பீடு இல்லாமல் தனியார் மருத்துவமணைகளில் மருத்துவம் பார்ப்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. அலுவலகக் குழுக் காப்பீடு குடும்பத்துடன் எடுத்து இருந்தாலும், வருடா வருடம் பிரிமீயம் அதிகமாகிகொண்டே வருகிறது. அதற்கு மேலும் பல தடைகளை காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டுவந்து விட்டன.

எடுத்துக்காட்டாக சமீபத்தில் என் தந்தையின் கண் புரை சிகிச்சைக்கு காப்பீட்டு நிறுவனம் மருத்துவமணை கேட்ட தொகையை விட பத்து ஆயிரம் குறைவாகவே அனுமதி அளித்திருந்தது. நான் கேட்டதற்கு சிகிச்சையின் தன்மை , சிகிச்சை நடக்கும் நகரம் ஆகியவையைப் பொருத்து மாறும் என பதில் வந்தது. ஆனால் மீதமுள்ள பணத்தை நான் செலுத்தி பிறகு க்ளைம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சில காலங்களில் நிறுத்தப்படும். ஏற்கனவே pre-existing conditions விளையாட்டு நம்மூரில் தனியாக நாம் எடுக்கும் காப்பீடுகளில் சிலவற்றில் வந்து விட்டது. நிறுவனங்கள் மூலமாக வழங்கும் காப்பீடுகள் இன்னும் தப்பித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் சீக்கிரம் வந்து விடும்.

9:06 PM, April 11, 2010
வினவு said...

இருப்பனவற்றில் என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் இருக்கும் 'இடதுசாரி' அமெரிக்கர்கள் இந்த முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்தவாறே யோசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவி செய்கிறது.

நோய்வாய்ப்படும் அல்லது ஆதரவற்றவனாக ஆக்கப்படும் ஒரு மனிதனை அவன் வாழும் சமூகம் காப்பாற்றுவதுதான் சரி. ஆனால் அப்படி யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்றும் அவனது நோய் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து பயத்தை ஊட்டிவிட்டு அவனை பயப்பட வைத்தே காப்பீடு நிறுவனங்கள் வேட்டையாடுகின்றன.

இப்படி தனிநபராக சமூகத்திலிருந்து பிரிக்கப்படும் மக்கள் ஒரு புறம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அடிமையாக தண்டல் கட்டும் போதே மறுபுறம் நான் எனப்படும் தனிமனித இருப்பு நாம் எனப்படும் சமூக இருப்பில்தான் வாழகிறேன், வாழ முடியும் என்ற சிந்தனையை இழக்கிறார்கள். இத்தகைய தனிமனிதவாதம் கோலேச்சும் அமெரிக்காவை முதலாளிகளிடமிருந்து விடுதலை செய்வது எப்படி என்று யோசித்தால் காப்பீடு மட்டுமல்ல எல்லாவற்றிலும் விமோச்சனம் கிடைக்கும். இப்போதைக்கு இது நடக்காது என்றாலும்............

7:33 AM, April 12, 2010
Unknown said...

மிக விரிவான ..விளக்கமான பதிவு...

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

12:33 PM, April 12, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

10:53 PM, April 12, 2010