Thursday, October 20, 2011

தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை

“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு  பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல் வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன் முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் குழுமங்களிலும்,  வலைப்பதிவுகளிலும் வாசகனாக மட்டும் இருந்த எனக்கு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ்மணம் தான்.

2004ல் தமிழ்மணம் எனக்கு முதன் முதலில் அறிமுகமான பொழுது வலைப்பதிவிற்கு வாசகர்களை கொண்டு வந்து சேர்க்கும் தமிழ்மணம் எனக்கும் வாசகர்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலேயே எழுதத் தொடங்கினேன். 2004ல் இருந்து 2006வரை தமிழ்மணத்தை ஒரு பயனாளனாக பயன்படுத்தி வந்திருக்கிறேன். 2006ல் இருந்து தான் ஒரு நிர்வாகியாக இருந்து வருகிறேன். தமிழ்மணத்தை நண்பர் காசியிடம் இருந்து பெற்று "தமிழ் மீடியா இண்டர்நேஷனல்" என்ற தன்னார்வ நிறுவத்தை உருவாக்கிய பொழுது தான் நான் இதில் இணைந்தேன். எனவே நான் முதலில் ஒரு வலைப்பதிவன். பிறகு தான் நிர்வாகி. தமிழ்மணத்தை ஒரு வாசகர், பதிவர் நிலையில் இருந்தும் பார்த்திருக்கிறேன். நிர்வாகியாகவும் பார்த்து இருக்கிறேன். இரண்டு பார்வைக்கும் இரு வேறு பரிமாணங்கள் உண்டு.

தமிழ்மணம் தொடங்கிய பயணத்தில் தமிழ் வலைப்பதிவு உலகம் வேகமாக விரிவடைந்தது. தமிழ்மணத்தை தொடர்ந்து மறைந்த சாகரன் தேன்கூடு திரட்டியை உருவாக்கினார். 2006ல் நண்பர் குழலி தமிழ்வெளியும், பிறகு நண்பர் வெங்கடேஷின் திரட்டி போன்றவையும் வந்தன. சமீப ஆண்டுகளில் பிலிக்கை அடிப்படையாக கொண்டு பல புக்மார்க்கிங் தளங்களும் வந்தன. தமிழ் எழுதுவது எப்படி என கடினப்பட்டு தேடிக் கொண்டிருந்த காலம் மறைந்து இன்றைக்கு இணைய உலகம் முழுவதிலும் “தமிழ்” விரிவடைந்து விட்டது. இதற்கு காரணமானவர்கள் பலர். தேனீ எழுத்துரு உருவாக்கிய உமர் வலைப்பதிவுகளில் தமிழ் தெரிய வழிவகுத்தார். சுரதா, முகுந்த் போன்ற நண்பர்கள் தமிழ் தட்டச்சியை எளிதாக்கினர். குறிப்பாக முகுந்த்தின் இ-கலப்பையை கொண்டு தான் தமிழ் வலைப்பதிவுகளில் உழுது கொண்டிருந்தோம். காசி ஆரம்பித்த தமிழ்மணம் வலைப்பதிவுகளை பெருக்கியது. இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். இவர்களை தவிர இன்னமும் எண்ணற்றோர் தமிழை இணையத்தில் கொண்டு வர உழைத்திருக்கிறார்கள்.

இந்த உழைப்பின் மூலமான தமிழின் பரவல் மகிழ்ச்சியை தருகிறது. பேஸ்புக், கூகுள் ப்ளஸ், டிவிட்டர் என இன்றைக்கு தமிழை சுலபமாக எங்கும் நுழைக்க முடிகிறது. இந்த வளர்ச்சி தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் தமிழ் எழுத்து உலகிற்கு இது ஆரோக்கியமானது தானா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. 2004ல் தொடங்கி நன்றாக எழுதிக் கொண்டிருந்த பலர் இன்று பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் முடங்கிப் போய் விட்டார்கள். பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களை வெறும் அரட்டை தளங்களாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. வலைப்பதிவில் இருக்கிற ”எழுத்து சுகம்” இந்த சமூகத் தளங்களில் கிடைப்பதில்லை.

************

பிரபல பதிவர்கள் என்ற சொற்றொடர் தற்பொழுது வலைப்பதிவுகளில் பிரபலமாக உள்ளது. பிரபல பதிவர் என்ற இடத்தைப் பிடிக்க பலத்த போட்டியும் நிலவுகிறது.  ஆனால் உண்மை என்னவென்றால் வலைப்பதிவில் பிரபல பதிவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கால ஓட்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நகர முடியாது.

நானும் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்த காலத்தில் வாழ்க்கையில் நகரவில்லை. வாழ்க்கையில் நகர வேண்டும் என முடிவு செய்த பின்பு வலைப்பதிய நேரமில்லை. இப்படி பிரபல பதிவர்களாக இருந்து இன்று வலைப்பதிவில் காணாமல் போன நிறையப் பேரினை தெரியும். எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக செய்யாத யாரும் வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து கொண்டிருப்பது கடினம். வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக கூட இருக்கும். ஆனாலும் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கு முழு நேர தொழில் எழுத்து அல்ல. எழுத்து ஒரு ஆர்வம் மட்டுமே. சமூகம் மீதான நம்முடைய பார்வையை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் அந்த ஓட்டத்தினூடே பகிர்ந்து கொள்ள டிவிட்டரும், பேஸ்புக்கும், கூகுள் பஸ்சும் தான் சுலபமாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த ஊடகங்களில் இருக்கும் மாயையும், எழுத்தில் இருக்கும் போதையும் அதனை எழுதும் பொழுது தான் தெரிகிறது.

இப்படியான வாழ்க்கைச் சக்கரத்தால் தான் பதிவர்கள் வலைப்பதிவில் இருந்து மறைவதும், புதியவர்கள் நுழைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே நாங்கள் தான் வலைப்பதிவர்கள். எங்களைச் சார்ந்து தான் எல்லாமும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு வலைப்பதிவருக்கு வாசகர்கள் தேவை என்றால் திரட்டிகள் தேவை. திரட்டிகள் ரயில்கள் போன்றவை. ரயில்களில் புதியவர்கள் ஏறுவதும், பழையவர்கள் இறங்குவதும் இயல்பாக நடப்பவை. ரயில்களில் ஏறுபவர்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் ரயில்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும் - For men may come and men may go. We will go on forever.

பதிவர்களே மாறிக் கொண்டே இருக்கும் சூழலில் வலைப்பதிவர்களாக இருந்து தமிழ்மணத்தை நிர்வாகம் செய்யும் நாங்கள் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து நிற்பதே ஒரு இமாலய சாதனை தான். இதனை ஏதோ தற்பெருமையாக சொல்ல வில்லை. ஒரு தளத்தினை நடத்தும் எவரும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்வார்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையே தமிழ்மணத்தினை நடத்திக் கொண்டிருக்க காரணம் தமிழ்மணம் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு மாற்று ஊடகமாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அந்த தளத்தினை தொடர்ந்து நடத்துவதை நாங்கள் ஒரு கடமையாக கருதுகிறோம். எனவே எங்களுடைய ரயில் ஓடிக் கொண்டே தான் இருக்கும். எங்களால் ஓட்ட முடியா விட்டால் நண்பர் காசி செய்தது போல எங்களைப் போன்றே கொள்கை உடைய தன்னார்வ நண்பர்களிடம் ஒப்படைப்போமே தவிர இழுத்து மூடி விட மாட்டோம்.

வலைப்பதிவில் தமிழ்மணம் ”கல்லா கட்டுவதாக” பலர் எழுதும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. இவ்வாறு எழுதுபவர்கள் ஒரு இணையத்தளம் என்றால் என்னவென்றே தெரியாத ”அறியாமையில்” உளறுவதாக தான் புரிந்து கொள்ள முடியும். தமிழ்மணத்தை விடுங்கள். வணிக ஊடகங்களாக உள்ள விகடன், குமுதம்,  நக்கீரன் போன்ற தளங்களே இணையத்தளம் மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இத்தனைக்கும் விகடன் போன்றவை கட்டணத் தளங்கள். இணையம் என்பது தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரை ஒரு சேவையாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது என்பது தான் யதார்த்தமான உண்மை.  தமிழ்மணத்தின் மாதந்திர வழங்கிச் செலவுக்கே (Hosting Charges) தமிழ்மணத்தின் விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை என்பதே யதார்த்தம்.

இதையெல்லாம் நான் எங்களை நோக்கி அவதூறு செய்பவர்களுக்கு சொல்ல வில்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே சொல்கிறேன்.  அவதூறு செய்பவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருதியிருந்தால் எப்பொழுதோ தமிழ்மணம் காணாமல் போய் இருக்கும். தமிழ்மணத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே அவதூறுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

************

2004ல் தமிழ்மணம் தொடங்கப்பட்ட காலம் முதலே தமிழ்மணத்திற்கு மாற்றாக ஒரு திரட்டி தேவை என்ற கருத்தினை பலரும் முன்வைத்து வந்துள்ளனர். இன்றைக்கு பல புக்மார்க்கிங் தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும் ஒரு வலைப்பதிவினைச் சார்ந்த அத்தனை பரிமாணங்களையும் (பதிவுகள், மறுமொழிகள், குறிச்சொற்கள்,  வகைப்படுத்தல், முன்னணி பதிவுகள், வாசகர் பரிந்துரைகள் போன்றவை) கொண்ட திரட்டியாக தமிழ்மணம் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு திரட்டியை உருவாக்குவது ஒன்றும் கடினம் அல்ல. மிக மிக சுலபமானது தான். அவதூறு செய்யும் நேரத்தில் உருப்புடியாக எழுதலாம். இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கலாம்.

2007ல் வேறொரு வலைப்பதிவு பிரச்சனையில் ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? என்ற பதிவை எழுதினேன். தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் 2007  என்பது தற்பொழுது கற்காலம் போன்றது. ஆனாலும் இந்த அடிப்படையை வைத்து எவரும் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். தமிழ்மணத்தை விட மிகவும் சிறப்பான திரட்டி உருவானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? - http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html

43 மறுமொழிகள்:

bandhu said...

இதில் பெரிதாக சம்பாதித்திருக்க முடியாது என்பது உண்மை. சேவை முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு நன்றி.
தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்கக்கூடாது என்றாலும்,
குழப்பங்கள் பெரிய அளவு வருவதற்கு முன்னாலேயே ஒரு வருத்தம் தெரிவிக்கும் தன்னிலை விளக்கம் தமிழ் மணம் கொடுத்திருக்க வேண்டும். போகட்டும். இனியாவது செய்துவிடுங்கள்.
போனவை போகட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

2:03 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

குழப்பங்கள் பெரிய அளவு வருவதற்கு முன்னாலேயே ஒரு வருத்தம் தெரிவிக்கும் தன்னிலை விளக்கம் தமிழ் மணம் கொடுத்திருக்க வேண்டும்

*******

இது தான் நான் கூறிய ஒரு பதிவராக தமிழ்மணத்தை பார்ப்பதற்கும், நிர்வாகியாக தமிழ்மணத்தை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு. தமிழ்மணத்தால் எதையும் உடனுக்குடன் செய்து விட முடியாது. நீங்கள் பணம் கட்டி ஒரு சேவையை பெறும் நிறுவனத்திலேயே ஏதேனும் பிரச்சனை என்றால் "4-5 business days" என கூலாக சொல்லி விடுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழ்மணத்தில் எப்படி உடனுக்குடன் எதிர்பார்க்க முடியும் என்பது புரியவில்லை.

தமிழ்மணம் ஒரு தன்னார்வ நிறுவனம். அதாவது எங்களுடைய முழு நேர வேலை, குடும்பம் இவற்றுக்குப் பிறகு இருக்கும் பல வேலைகளில் இதுவும் ஒன்று. அதனால் தான் ஏதேனும் பிரச்சனை என்றால் மின்னஞ்சல் அனுப்புங்கள் என்கிறோம். மின்னஞ்சலுக்கு கூட உடனே பதில் எதிர்பார்க்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். குறைந்தது 4-5 நாட்கள் எதற்கும் தேவை.

தற்போதையப் பிரச்சனைக் குறித்து ஏற்கனவே தேவைக்கும் அதிகமாகவே பேசியாகி விட்டது. சற்று அலுப்பாகவும் இருக்கிறது. நான் என்னுடைய தமிழ்மணம் அறிவிப்பு மறுமொழியில் கூறியிருந்தது போல “எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்று இறுதியில் எந்த பிரயோசமும் இல்லாமல் எல்லோருடைய நேரத்தையும் விரயம் செய்யும் வலைப்பதிவு சண்டைகளை விலக்கி, வலைப்பதிவு என்ற ஊடகத்தை ஆக்கப்பூர்வமான வழியில் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஆசை”.

நன்றி...

3:01 PM, October 20, 2011
bandhu said...

நீங்கள் சொல்வதை நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். நடத்துவதில் உள்ள கஷ்டம் பார்ப்பவருக்கு தெரியாது என்பது மிக சரி. என்ன செய்வது, இது போன்ற தேவையற்ற சச்சரவுகள் காட்டு தீ போல வேகமாக பரவுகிறதே! அதனால்தான் ஸ்னோ பால் எபக்ட் ஆக பிரச்சனையை பெரியதாக வளர்ந்து விட்டது. instant reply எதிர்பார்ப்பது தவறு தான்.

3:23 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

இன்னென்றையும் கூற வேண்டும்.

நாங்கள் அமெரிக்காவில் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை தொடங்கிய பொழுது இந்த தன்னார்வ நிறுவனத்தில் சுமார் 16 நிர்வாகிகள் இருந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருப்பது 4 பேர் தான். ஒரு தகவலுக்காக மட்டுமே இதனை சொல்கிறேன்.

நிர்வாகப் பணி என்பது சுலபமானது அல்ல...

நன்றி...

3:29 PM, October 20, 2011
Bruno said...

//இந்த வரிவாக்கம் தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் //

விரிவாக்கம் ???

3:32 PM, October 20, 2011
அபி அப்பா said...

யதார்தமான உண்மைகளுடன் கூடிய ஒரு நல்ல பதிவு இது சசி. பல சமயங்களில் உங்க எழுத்துகளை வியந்த மாதிரியே இந்த பதிவின் "நடை"க்கும் மயங்குகிறேன். ஒரு திரட்டியின் நிர்வாகியாக இருந்து கொண்டே "ஒரு திரட்டி ஆரம்பியுங்க்ள்" என டிப்ஸ் கொடுப்பது, ஆயிரம் முறை "ஒரு திரட்டி நடத்துவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா" என அங்கலாய்ப்பதை விட அருமையாய் புரியவைக்கும் "நச்".

3:47 PM, October 20, 2011
வவ்வால் said...

//இது தான் நான் கூறிய ஒரு பதிவராக தமிழ்மணத்தை பார்ப்பதற்கும், நிர்வாகியாக தமிழ்மணத்தை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு. தமிழ்மணத்தால் எதையும் உடனுக்குடன் செய்து விட முடியாது. நீங்கள் பணம் கட்டி ஒரு சேவையை பெறும் நிறுவனத்திலேயே ஏதேனும் பிரச்சனை என்றால் "4-5 business days" என கூலாக சொல்லி விடுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழ்மணத்தில் எப்படி உடனுக்குடன் எதிர்பார்க்க முடியும் என்பது புரியவில்லை.

தமிழ்மணம் ஒரு தன்னார்வ நிறுவனம். அதாவது எங்களுடைய முழு நேர வேலை, குடும்பம் இவற்றுக்குப் பிறகு இருக்கும் பல வேலைகளில் இதுவும் ஒன்று. அதனால் தான் ஏதேனும் பிரச்சனை என்றால் மின்னஞ்சல் அனுப்புங்கள் என்கிறோம். மின்னஞ்சலுக்கு கூட உடனே பதில் எதிர்பார்க்காதீர்கள் என்று தான் கூறுகிறோம். குறைந்தது 4-5 நாட்கள் எதற்கும் தேவை.//

லாப நட்டம் என எதுவும் பார்க்காமல் தமது ஆசை அ லட்சியமாக ஒரு செயலை செய்வது மிக பெரிய விஷயம், இந்த வகையில் தமிழ்மணம், அதன் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் உள் மனம் சொல்வதை கேட்கும் உண்மையான மனிதர்கள்! பாராட்டுக்கள்.

இங்கு மேற்கொண்டு சிலவற்றையும் பார்க்க வேண்டும்,

நீங்கள் சொல்வது போல யார் இன்ஸ்டன்ட் காபி குடிக்க ஆசைப்பட்டார்கள்..4-5 நாட்கள்,அ வாரங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப! அவ்வளவே,

அப்படி உடனடி தீர்வு கேட்டவர்கள் ஏதேனும் அவசரக்குடுக்கைகளாகவே இருக்கும். நீங்களாகவே அப்படி எல்லாம் உடனே வேண்டும் என்று குதிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாமே.

பிரபல பதிவர் ...பிரபல பதிவர்னு சொல்றிங்க எவனுங்க அவனுங்கனு எனக்கு தெரியலை...ஒரு வேளை எனக்கு தான் கண்ணு அவுட்டா?

நீங்க என்ன எல்லாக்கேள்விகளுக்குமா பதில் சொல்லிட்டு இருக்கீங்க, அப்படி எத்தனையோ புறக்கணிக்கப்பட்ட கேள்விகள் இல்லையா அப்படியே சிலதையும் விடாமல் வாலண்டியரக வந்து பேசி , தேவை இல்லாத சொல்லாடல்கள் செய்து... பொது வெளியில் டிப்ளமசி தேவை. நீங்கள் ஒருவர் பசிக்கு அன்ன தானம் போடலாம் அது மிக சிறந்த சேவை, ஆனால் செறுப்பால் அடித்து சாப்பிட வானு கூப்பிட்டா? நான் உன் பசிக்கு சோறுப்போட்டேன் இதைப்பொறுத்துக்க மாட்டியா என்று கேட்டால்?

மேலும் திரட்டி , (அ )பத்திரிக்கை எதுவாகினும் வருவாய் தேவை , அது விளம்பரம் மூலம் வந்தால் என்ன பிரச்சினை என்று கேள்விக்கேட்டவர்கள் பதிவிலும் சொல்லி இருக்கிறேன்.எனவே இதெல்லாம் தானகவே எழுந்து அடங்கி விடும் என்ற புரிதல் கூட இல்லாமல் ஒரு நிர்வாகி பொங்குவது ஏன்? எல்லா கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்பவரா அவர்? எத்தனையோ கேள்விகளை ஆறப்போட்டவர்களால் இது மட்டும் சாத்தியமில்லையா? என்னமோ போங்க எல்லாம் கூகிளாண்டவருக்கே வெளிச்சம்!

நீங்கள் சொல்லி ஆதங்கப்படுவதெல்லாம் ஒரு வேளை ஹிட்ஸ், நட்சத்திரம், ரேன்கிங் என்று கணக்கு வைத்து பதிவு போடும் மஹான்களாக இருக்கும், அவர்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையே, அவர்களுக்கு ஆள்பிடித்துக்கொடுக்க திரட்டி தேவை, திரட்டிக்கு அவர்கள் தேவையாக இருக்கலாம்!

இங்கே என்னைப்பொறுத்தவரை திரட்டி, ஏன் பிலாகர் கூட இரண்டாம் பட்சம் தான், இதால் எல்லாம் எனக்கும் ஒரு நயாப்பைசா புண்ணியம் கிடையாது, ஆட்சென்ஸ் காசப்பத்திலாம் கவலைப்படுபவனும் நான் இல்லை.

நீங்கள் சொல்லியுள்ள பதில் திரட்டி மீதேறி தேரோட்டுபவர்களுக்கே பொருந்துமாறு உள்ளது! ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத சில ,பல மஞ்ச மாக்காண்களும் ,இருக்கோம், இவங்க தான் மெஜாரிட்டி! எனவே மைனாரிட்டி ரிப்போர்ட் அடிப்படையில் செயல்பட்டு ரொம்ப கவலைப்பட்டுக்க வேண்டாம்!

but still i would say " you done a good job!"

3:51 PM, October 20, 2011
வவ்வால் said...

//புருனோ Bruno said... 5

//இந்த வரிவாக்கம் தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் //

விரிவாக்கம் ???//

வந்துட்டாருப்பா தமில் வாத்தியார்!!!

நான் சொன்னப்பரம் தான் தமிழில் பின்னூட்டமே போடுபவர் ...வரிக்கு வரி..வார்த்தைக்கு வார்த்தை அட்சர சுத்தமாக அர்த்தம் கேட்கிறார்? என்ன கொடுமைடா இது! டைப்போகிராபி எர்ரர் கூட பொறுக்காத தமிழன்யா நீர்!

5:28 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

//இந்த வரிவாக்கம் தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் //

விரிவாக்கம் ???

இந்த வளர்ச்சி தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் என்று வாசிக்கவும்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கட்டுரையை திருத்தி இருக்கிறேன்

5:41 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

அபி அப்பா,

மிக்க நன்றி...

5:42 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

நீங்க என்ன எல்லாக்கேள்விகளுக்குமா பதில் சொல்லிட்டு இருக்கீங்க, அப்படி எத்தனையோ புறக்கணிக்கப்பட்ட கேள்விகள் இல்லையா அப்படியே சிலதையும் விடாமல் வாலண்டியரக வந்து பேசி , தேவை இல்லாத சொல்லாடல்கள் செய்து... பொது வெளியில் டிப்ளமசி தேவை

********

ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய கருத்தும் இது தான். நான் அந்தப் பதிவையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டேன். அதையே ரமணியிடம் கூறினேன்.

ஆனால் ஒவ்வொரு மனிதரும் வேறு அல்லவா ? நான் அந்தப் பதிவை பார்க்கும் பார்வையும் மற்றவர் பார்க்கும் பார்வையும் வேறுபடுகிறது.

அதுவும் தவிர ஒரு மனிதனின் ஈகோ சீண்டப்படும் பொழுது எதுவும் நடக்கலாம்.

ஒரு சின்ன நகைச்சுவை உதாரணத்தை பார்ப்போமே. இதை டைட்டாக பேசாமல், லைட்டாக பேசலாம் :))

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் எப்படி ? ஸ்ரீசாந்த் முதல் பந்தில் சீண்டப்பட்ட, அடுத்த பந்தை சிக்சருக்கு அடித்து நடனம் ஆடவில்லையா ? டெண்டுல்கரும் தான் சீண்டப்பட்டார். அவர் ஆடினாரா, ஸ்ரீசாந்த் மட்டும் ஏன் ஆடினார் என்று கேள்வி கேட்கலாம். ஆனால் அவருடைய கேரக்டர் அது. உடனே அவர் ஆடியதற்கு டொனியும், இந்திய அணியும் பொறுப்பு என்றால் எப்படி ? இது எப்படி இருக்கு :))


நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை வலைப்பதிவில் பார்க்கிறேன். வருகைக்கு நன்றி...

6:04 PM, October 20, 2011
தமிழ்நதி said...

சசி,

தமிழ்மணத்தில் எழுத ஆரம்பித்த நாட்கள்,அதில் அப்போது எழுதிக்கொண்டிருந்த நண்பர்கள் இவர்களை, அந்த ஞாபகங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று சில நாட்களாகவே தோன்றிக்கொண்டிருக்கும்போது இந்தப் பதிவைப் படிக்கிறேன். இது ஒரு அதிசயிக்கத்தக்க உடனிகழ்வாகத் தோன்றுகிறது. 2007ஆம் ஆண்டு தமிழ்மணத்தில் எழுத ஆரம்பித்ததும், அதன்போது கிடைத்த உற்சாகமூட்டல்களும் மறக்கமுடியாதன. இன்றளவில் ஓரளவுக்கேனும், சிலராலேனும் அறியப்பட்டிருக்கிறேன் என்றால், அதில் தமிழ்மணத்தின் பங்கு நிச்சயம் உண்டு. நேரம் அனுமதிக்கும்போது நிச்சயம் எழுதிவிடவேண்டும். ஞாபகங்களின் சேமிப்பாக....

7:47 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

நீங்கள் ஒருவர் பசிக்கு அன்ன தானம் போடலாம் அது மிக சிறந்த சேவை, ஆனால் செறுப்பால் அடித்து சாப்பிட வானு கூப்பிட்டா? நான் உன் பசிக்கு சோறுப்போட்டேன் இதைப்பொறுத்துக்க மாட்டியா என்று கேட்டால்?

*******

அப்படி எதுவும் தமிழ்மணம் சொல்லவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். தமிழ்மணத்தில் அனைவரும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். பதிவர்களை அரவணைத்துச் செல்வதே தமிழ்மணத்தின் குறிக்கோள். அவர்களுக்கான மரியாதையும் தமிழ்மணம் தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளது. நடந்த பிரச்சனையில் சில பாடங்கள் உள்ளன. தமிழ்மணத்திற்கும் உள்ளது. பதிவர்களும் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட வேண்டும்.

நிற்க. வலைப்பதிவு சண்டையில் நடக்கும் பலக் குழப்பங்கள் இங்கும் நடந்தன. இங்கு சிலப் பிரச்சனைகள் குழப்பப்பட்டு விட்டன.
- டெரர் கும்மி பதிவில் “தமிழ்மணம் சார்பாக” என்று எழுதப்பட்டு நிகழ்ந்த பிரச்சனைக்கும், குழப்பத்திற்கும் தான் தமிழ்மணம் சார்பில் வருத்தம் கேட்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நடந்த பிரச்சனையில் சண்டையிட்ட அனைவருக்கும் சம பங்கு உள்ளது. அதன் உள்ளே நான் சொல்ல விரும்பவில்லை.

------------------------

இஸ்லாமிய வலைப்பதிவர்கள் இதில் உச்சக்கட்ட பிரச்சனையை ஏற்படுத்தினர். அவர்கள் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. ரமணி தான் இஸ்லாமியர்களைச் சார்ந்து எழுத வில்லை என்று கூறி விட்டார். அப்படியே அவர் கூறியது இஸ்லாமியர்களை சார்ந்ததாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அதனைச் சொல்வதற்கு அவருக்கு தனி மனித உரிமை உண்டு. அதனைப் பிடித்து கொண்டு ஒரு குழுவாக திரண்டு மன்னிப்புக் கேள் என்பது தவிர தமிழ்மணத்தை ஒழித்து விடுவோம், ஹாக் செய்து விடுவோம், தமிழ்மணத்தை அரபு நாடுகளில் தடை செய்து விடுவோம் என்பதெல்லம் சுத்த ப்ளாக்மெயில். அவ்வாறு கூறியவர்களையே தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொண்டு விருப்பமிருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் தமிழ்மணத்தை விட்டு விலகுங்கள் என்றோம்.

தமிழ்மணத்ததை இப்பொழுது சவுதியில் தடை செய்து விட்டதாக சிலப் பதிவுகள் கூறுகின்றன. மகிழ்ச்சி. அப்படியே குவைத் தொடங்கி எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் இதனைச் செய்தால் மகிழ்ச்சியே. இதனால் தமிழ்மணத்திற்கு எந்த இழப்பும் இல்லை.

தமிழ் இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு தனித்த அடையாளம் இருந்தது. அதன் காரணமாகவே திராவிட இயக்கங்கள் சிறுபான்மையினரை அரவணைத்து சென்றனர். ஆனால் தற்போதைய இவர்களின் போக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லாமல் வேறு என்ன ?

8:48 PM, October 20, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

தமிழ் நதி,

அவசியம் எழுதுங்கள்.வாசிக்க காத்திருக்கிறேன்.

வருகைக்கு நன்றி..

8:49 PM, October 20, 2011
Unknown said...

தமிழ்மணத்தில் முதலில் தமிழ் பதிவுகளை வாசிக்க ஆரம்பித்து, பிறகு எழுத்த் தொடங்கி, அப்புறம் மீண்டும் வாசிப்பது மட்டும் என்றாகி.. ( Bell Curve போல )இன்று வாசிப்பதையும் நிறுத்திய நிலையில் உங்கள் facebook status மூலம் இதை வாசிக்கவந்தேன். தமிழ்நதி சொன்னமாநிரி ஒருவகை nostalgia!

நன்றி :)

9:07 PM, October 20, 2011
Thekkikattan|தெகா said...

sasi,

thanks for the post. hope we will get a couple more tamil manams in the future :) ... forget it, keep it going.

9:09 PM, October 20, 2011
Kannabiran, Ravi Shankar (KRS) said...

சசி
இது "மனம் கொணர்" பதிவு! மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

இணையப் பெருவெளியில் தமிழ் நடைபயில உதவியர்கள் மற்றும் தமிழ்மணம்/பிற திரட்டிகளின் - historiam breviter - வரலாற்றுச் சுருக்கம்!:)

//அப்படி இருக்கும் பொழுது தமிழ்மணத்தில் எப்படி உடனுக்குடன் எதிர்பார்க்க முடியும் என்பது புரியவில்லை//

இது நடைமுறைச் சிக்கல் + உண்மையே!
ஆனால், பல குழப்பமான நேரங்களில், அலர் (Rumor) பரவாதிருக்க...முகப்பில் ஒரு Sticky Note போல் வைத்தால் என்ன? - என்ற யோசனை தோன்றுகிறது!
"கல்லா கட்டவில்லை! இதைப் பற்றி விரிவான விளக்கம் 5 நாளில் வரும்!" - அப்படின்னு ஒரு சின்ன sticky , பல குழப்பங்களைத் தவிர்க்கலாம்! ஒரு விருப்புள்ள வாசகனாக, இந்த யோசனை!

//ரயில்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும் - For men may come and men may go. We will go on forever.

எங்களால் ஓட்ட முடியா விட்டால் நண்பர் காசி செய்தது போல எங்களைப் போன்றே கொள்கை உடைய தன்னார்வ நண்பர்களிடம் ஒப்படைப்போமே தவிர இழுத்து மூடி விட மாட்டோம்//

என்னவொரு தெளிவான சாசனம்!
Hats Off!

9:22 PM, October 20, 2011
Hai said...

நான் ஒரு பதிவராக பெரிய பதிவுகள் இட வில்லை. ஆனால் ஒரு வாசகனாக பலரை படிக்க எனதுலகை விரிவடையச் செய்ய தமிழ்மணமே அடிப்படை என்பது உண்மை.

இன்று இப்பிரச்சனை இவ்வளவு பெரியதாகி ஏதோ தங்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும் முஸ்லீம் சகோதரர்களின் மனதை புண்படுத்திவிட்டதாகவும் பேசும் எல்லோரும் இதற்கு முன்னர் இது போன்ற ஒரு சம்பவம் அல்லது கருத்துக்கள் நடந்திருந்தால் சொல்லலாம்.
எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு யாரும் யாரையும் சார்ந்து செயல்படுவது இருவரின் நன்மை தீமைகளை கருத்தில் கொண்டு மட்டுமே செயல்படாமல் தமிழுலகம் தமிழ் பதிவுலகம் நல்ல திசையில் பயணிக்க தமிழ் பதிவுலகம் பயனுற செல்ல வேண்டிய திசையில் பயணிப்பது அவசியம்.

இனியும் யாரும் மண்டியிடு மன்னிப்பு கேள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

ஒரு பதிவராக தொடர்ந்து செயல் பட இயலாத நிலையில் லாப நோக்கற்ற வகையில் திரட்டியின் நிர்வாகியாக நீங்கள் செயல்படுவதை எண்ணி பலசமயம் மகிழ்ந்திருக்கிறேன்.

நடந்ததை மறப்போம். தமிழுக்காகவும் தமிழ் பதிவுலகுக்காகவும் நாம் அனைவரும் ஒரே திசையில் பயணிப்போம் எனில் அதைவிடவும் மகிழ்ச்சி வேறேது.

இனியும் விளக்கங்கள் தேவையில்லை.


இறுதியாக ஒன்று.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

9:37 PM, October 20, 2011
அருள் said...

முன்பின் தெரிந்திராதவர்களும் படிக்கும் வகையில் வலைப்பூவில் கருத்துக்களை வெளியிட முடிகிறது. இதனை பரவலாக வெளியில் கொண்டுபோக தமிழ்மணம் பேருதவியாக இருக்கிறது. தமிழ்மணமும் அதில் சில விவாதங்களும்தான் என்னை தமிழில் எழுத்துக்கூட்டி தட்டச்சு கற்க வைத்தன. இன்று, நானும் கூட வலைப்பூவில் எழுதுகிறேன் என்றால் அதற்கு தமிழ்மணமே முதன்மை தூண்டுதல். அந்த வகையில் தமிழ் மணத்திற்கு நன்றி.

இலாப நோக்கற்ற ஊடகங்கள் எத்தனை கடினமான சோதனைகளை எதிர்கொள்கின்றன என்பதை அறிவேன். நாளிதழ், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் கூட 'கொள்கை அடிப்படையில்' நடத்தப்படும்போது பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கின்றன. ஆனால், வெளியுலகில் அதே ஊடகங்கள் 'பெரும் பணம் ஈட்டும் ஊடகங்களாக" பேசப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.

அவதூறுகளை அள்ளி வீசுவது மிக எளிது. ஆனால், கடும்சோதனைகளுக்கு இடையே ஒரு 'வெட்டி வேலையாக' பொதுவான வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு 'அவதூறு' பெரும் மன வலியைத் தரும். அவதூறுகளை எதற்காக எதிர்க்கொள்ள வேண்டும்? அதற்குப்பதில் அந்த 'வெட்டி வேலையை' விட்டு தொலைக்கலாம் என்று தோன்றக்கூடும். இலாப நோக்கற்ற பொதுப்பணிகள் இத்தகைய மனவலியை சந்திப்பது வழக்கமாகிவிட்டது.

ஆனால், இந்த அவதூற்றினை, மிகச்சாதாரணமாக "நகைச்சுவை" என்று பேசுவதைப் பார்க்கும்போதுதான் எனக்கு உண்மையாகவே அதிர்ச்சியாக இருக்கிறது.

10:40 PM, October 20, 2011
வவ்வால் said...

தமிழ் சசி,

நன்றி!

//அப்படி எதுவும் தமிழ்மணம் சொல்லவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.//

கண்டிப்பாக அப்படி எதுவும் சொல்லவில்லை தான், கிளர்ச்சியாளர்கள் பெரும்பாலும் முன் வைத்தது அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வதாகவே, எனவே இரு தரப்பு கூற்றையும் சொல்லவே அந்த உதாரணம்.

வயிற்றுப்பசிக்கு உணவளித்தல் போல அறிவுப்பசி, தமிழ் பசிக்கும் உணவளிப்பது தமிழ் மணம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.எனவே எப்போதும் தமிழ்மணம் பால் கொண்ட பற்று உண்மையான தமிழ்ப்பதிவாளர்களுக்கு மாறாது.

//இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் எப்படி ? ஸ்ரீசாந்த் முதல் பந்தில் சீண்டப்பட்ட, அடுத்த பந்தை சிக்சருக்கு அடித்து நடனம் ஆடவில்லையா ? டெண்டுல்கரும் தான் சீண்டப்பட்டார். அவர் ஆடினாரா, ஸ்ரீசாந்த் மட்டும் ஏன் ஆடினார் என்று கேள்வி கேட்கலாம். ஆனால் அவருடைய கேரக்டர் அது. உடனே அவர் ஆடியதற்கு டொனியும், இந்திய அணியும் பொறுப்பு என்றால் எப்படி ? இது எப்படி இருக்கு :))//

இந்த கருத்து தான் எனதும், பெயரிலி செய்ததற்கு முழுவதும் தமிழ்மணத்தை குறை கூற கூடாது என்பதே(அதுவும் பெயரிலி உணர்ச்சி ததும்பலின் போது செய்தது every one has their own breaking point) , எனவே எனது தார்மீக ஆதரவும் தமிழ்மணத்திற்கே, இதனை நான் சரியாக புரியும்படி சொல்லவில்லை, மன்னிக்கவும்.

ப.ரா, ஐடியாமணி போன்றோர் சட்டையை மாற்றினால் கரைப்படிந்தாலும் போய்விடும், they can easily vanish into thin air! ஆனால் தமிழ்மணம்,நிர்வாகிகளுக்கு அந்த வசதி இல்லை, Men's evil manners live in brass; their virtues
We write in water !

கரை...கரையாகவே நின்றுவிடும், எனவே தான் ஏன் இந்த அவசரம் என்ற ஆதங்கத்தினாலே அந்த பின்னூட்டம்! உங்களை குறை சொல்ல அல்ல!

//என்னைப் பொறுத்தவரையில் அதனைச் சொல்வதற்கு அவருக்கு தனி மனித உரிமை உண்டு. அதனைப் பிடித்து கொண்டு ஒரு குழுவாக திரண்டு மன்னிப்புக் கேள் என்பது தவிர தமிழ்மணத்தை ஒழித்து விடுவோம், ஹாக் செய்து விடுவோம், தமிழ்மணத்தை அரபு நாடுகளில் தடை செய்து விடுவோம் என்பதெல்லம் சுத்த ப்ளாக்மெயில//

இது உச்சப்பட்ச கொடுமை தான், ஆமோதிக்கிறேன். எதாவது சொல்லப்போனால் அவர்கள் எளிதாக இந்துத்வா முத்திரைக்குத்திவிடுவார்கள் என்றே பல நடுநிலையாளர்களூம் மவுனம் காத்தார்கள்!

How sharper than a serpent's tooth it is
To have a thankless child!

மதத்தின் பெயரால் முன் வைத்த பிரச்சினை ஒரு வழுக்குப்பாறை வாரிவிட்டு விடும், எனவே தான் பலரும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

மண்பாண்டத்தில் விரிசல் ஒட்டாது, பொற்பாண்டத்தில் விரிசல் விடாது விட்டாலும் கூடிவிடும், தமிழ்மணம் எப்போதும் பொற்பாண்டமே!

10:50 PM, October 20, 2011
குடுகுடுப்பை said...

தமிழ்மணத்திற்கான உழைப்பிற்கு நன்றி.

11:02 PM, October 20, 2011
தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!வலைப் பூக்களில் மேயும் போது உங்கள் பதிவுகளை படித்து இருக்கிறேன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவினைக் கண்டேன்.தமிழ் மணத்தின் எல்லா நிலைகளையும் தெளிவுபடுத்தி எழுதியுள்ளீர்கள்.தங்களுக்கு இருக்கும் பல் வேறு வேலைகளுக்கு இடையே தமிழ் மணத்தில் தாங்கள் செய்யும் பணி மகத்தானது.

12:12 AM, October 21, 2011
தணல் said...

தொழில்நுட்பம் தவிர்த்து வேறேதும் உதவி வேண்டுமானால் தமிழ் மணத்துக்கு உதவத் தயாராக இருக்கிறேன்.

12:28 AM, October 21, 2011
kaialavuman said...

தங்கள் விளக்கத்திற்கு நன்றிகள்.

1:31 AM, October 21, 2011
K.s.s.Rajh said...

தமிழ்மணம் பதிவர்களுக்கு வழங்கும் வேவைக்காக ஒரு பதிவராக என்றும் தமிழ்மணத்திற்கு நன்றி..அதன் சேவை தொடர வாழ்த்துக்கள்

2:18 AM, October 21, 2011
தருமி said...

இணையத் தமிழ் வரலாற்றில் எப்போதும் தமிழ் மணத்திற்குப் பெருமையான இடம் எப்போதும் இருக்கும்.

காசியிலிருந்து இன்றிருக்கும் - admin அனைவருக்கும் என் நன்றியும் பாராட்டுகளும்.

5:31 AM, October 21, 2011
Radhakrishnan said...

தங்களின் முயற்சிக்கு வெகுவான பாராட்டுகள்.

இரண்டாயிரத்து ஏழாம் வருடமே தமிழ்மணத்திற்கு மாற்று என திரட்டி உருவாக்குவது எப்படி என கூறி இருக்கிறீர்கள்.

நானும் ஒரு திரட்டி உருவாக்குகிறேன், தங்களின் பதிவின் உதவி கொண்டு. ;)

6:41 AM, October 21, 2011
ஜெகதீசன் said...

சசி,
"நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. உங்கள் பங்களிப்பு என்னவென்றும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் முயற்சிக்கமாட்டேன். ஆனாலும் விமர்ச்சிப்பேன் / அவதூறு கிளப்புவேன்"
என்ற ரீதியில் அவதூறு கிளப்புவோருக்கு விளக்கம் சொல்லவேண்டுமெனில், இதே இடுகையை நீங்கள் ஆறு மாதத்திற்கொரு முறை எழுத வேண்டியிருக்கும்.

8:17 AM, October 21, 2011
ஜோ/Joe said...

இப்போது வலைப்பதிவுகளில் அதிகமாக இயங்கவில்லையென்றாலும் , 6 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மணம் அளித்த உற்சாகத்தை மறக்க முடியாது ..அந்த நன்றி என்றும் மாறாது

8:34 AM, October 21, 2011
Anonymous said...

வணக்கம் சசி
இஸ்லாமிய வலைப்பதிவர்கள் இதில் உச்சக்கட்ட பிரச்சனையை ஏற்படுத்தினர். அவர்கள் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. ரமணி தான் இஸ்லாமியர்களைச் சார்ந்து எழுத வில்லை என்று கூறி விட்டார். அப்படியே அவர் கூறியது இஸ்லாமியர்களை சார்ந்ததாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் அதனைச் சொல்வதற்கு அவருக்கு தனி மனித உரிமை உண்டு என்று தொடங்கி உண்மையையும், நியாயத்தையும் கூறிய தங்களை மிகவும் பாராட்டுகிறேன்.
-----------------------------------
வவ்வால் said...
எதாவது சொல்லப்போனால் அவர்கள் எளிதாக இந்துத்வா முத்திரைக்குத்திவிடுவார்கள் என்றே பல நடுநிலையாளர்களூம் மவுனம் காத்தார்கள்!

நடுநிலையாளர்களின் வெட்கபட வேண்டிய செயல். இஸ்லாமிய வலைப்பதிவு அஜராகத்திற்கே நடுநிலையாளர்களின் மவுனம் வழிகோலும்.

9:02 AM, October 21, 2011
வருண் said...

நான் அளவுக்கு அதிகமாகவே இந்த தமிழ்மண விளக்கப் பதிவில் பேசிவிட்டேன். இங்கும் விவாதம் செய்ய, பிரச்சினைக்கு யார் மூலம் காரணம், "மரியாதை எதிர்பார்க்கும் சீரியஸான பதிவர்கள்" தங்கள் "பெயர்களை" கவனமாகத் தேர்ந்தெடுக்கனும் என்றெல்லாம் சொல்லத்தோணுது. இதெதுக்கு வள வளனு பேசிக்கிட்டே போகனும்? ஒரு நிர்வாகத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். அந்த ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காமல் தமிழ்மணம் நடந்துகொண்டது பாராட்டத்தக்கது. 3 வருடம் முன்னால் பிரச்சினை பண்ணியவர்கள் இன்னைக்கு காணோம். தமிழ்மணம் வளர்ந்து கொண்டேதான் போகுது. அதேபோல்தான் இன்று பிரச்சினை செய்யும் கற்றுக்குட்டிகள்.

***தமிழ்மணத்ததை இப்பொழுது சவுதியில் தடை செய்து விட்டதாக சிலப் பதிவுகள் கூறுகின்றன. மகிழ்ச்சி. அப்படியே குவைத் தொடங்கி எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் இதனைச் செய்தால் மகிழ்ச்சியே. இதனால் தமிழ்மணத்திற்கு எந்த இழப்பும் இல்லை.***

I love this!!! A silly issue has been exaggerated because of some childish immature bloggers and a country is obeying their request?? What does this tell us?? Even google is blocked in China for a while and now and then. Is that going affect "google" or people those who live there? Google and TamilmaNam are going to live long, may be with less trouble to deal with, from now on. I feel sorry for the ignorance and immaturity of some people! :(

9:28 AM, October 21, 2011
ஜோசப் பால்ராஜ் said...

வணக்கம் சசி அண்ணா,
மிக அருமையான விளக்கம்.

தமிழ்மணம் மூலம் தான் நான் பதிவுலகில் பல நல்ல நட்புகளை அடைந்தேன். பல வருசமா பதிவே எழுதலன்னாலும் இன்னைக்கும் என்னைய நல்லா தெரிஞ்சா நண்பர்கள் பதிவுலகில் இருக்காங்கன்னா அதுக்கு காரணம் தமிழ்மணம் தான். தமிழ்மணத்தை பார்த்து தான் அது போல நாமளும் ஏதாச்சும் செய்யனும்னு யுடான்ஸ் அப்டின்னு ஒரு திரட்டி ஆரம்பிச்சோம். இரண்டே மாசத்துல இதுல இருக்க சிக்கல்கள், சிரமங்கள் எல்லாம் ஒரளவுக்கு புரிஞ்சுது.
பழுத்த மரம் தான் கல்லடி படும்.

சங்கரபாண்டி அண்ணணை ஒரு முறை சிங்கப்பூரில் நேரில் சந்தித்து சில மணி நேரம் பேசிட்டு இருந்தேன். அந்த உரிமையில இந்தப் பிரச்சனையின் போது அவருக்கு மெயில் கூட அனுப்ச்சேன்.

இன்னைக்கு நான் ஒரு திரட்டியை நடத்தினாலும் தமிழ்மணம் மேல் கொண்டுள்ள மதிப்பும், மரியாதையும் என்னைக்கும் குறையாது. வழிகாட்டியா தான் தமிழ்மணத்தை நான் பார்கிறேன்.

நன்றி

9:57 AM, October 21, 2011
யாழ் Yazh said...

"கால
ஓட்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்தால்
வாழ்க்கையில் நகர முடியாது"

100 சதவித உண்மை சசி .நானும் 2005ல் இருந்து வலைபதிவுகளை வாசித்து வருகிறேன்.வாசகனாக இருப்பதற்கு கூட நிறைய நேரங்களை இழக்கவேண்டியிருக்கிறது.

10:17 AM, October 21, 2011
சார்வாகன் said...

வணக்கம் நண்பரே
அருமை
வளர்க தமிழ்மணம்,வெல்க தமிழ்
நன்றி

10:38 AM, October 21, 2011
ராவணன் said...

நல்லாதானய்யா இருந்தே...எதுக்கு அந்த பெயரிலி கும்பலுடன் சகவாசம்?

உன் பதிவென்றால் வரிக்கு வரி விடாமல் பத்துமுறை வாசிப்பேனே?

அதுசரி.........தமிழ்மணத்தின் முதலாளி அந்த பெயரிலிதானே?

சரி வேண்டாம் விடு...

10:55 AM, October 21, 2011
ராஜ நடராஜன் said...

தமிழ் சசி அவர்களுக்கு!நீங்கள் பதிவர் என்பதும் நான் சில சமய பின்னூட்டக்காரன் என்பதே உங்களது அறிமுகம்.சொல்லவேண்டிய மன எண்ணங்களை உங்களது இந்த பதிவும்,ஏனைய பின்னூட்டங்களும் அழகாக பளிச்சிடுகின்றன.

தமிழ் மணத்திற்கு நன்றிகள் மட்டும்.

11:53 AM, October 21, 2011
Amudhavan said...

சர்ச்சை என்று ஆரம்பித்தபிறகு ஏதாவது சொல்லப்போய் வேறெதாவது திசையில் அதற்கு அர்த்தம் கற்பிக்கப்பட்டு திரிபடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் எழுத நினைத்ததைக்கூடத் தள்ளிப்போட்டேன். நிர்வாகிகளின் விளக்கங்கள் எல்லாமே மிகவும் தெளிவாக இருக்கின்றன.நான் சொல்ல நினைத்ததை இங்கே எழுதினால் பெரிதாகிவிடும். அதற்குத் தனிப்பதிவே போட்டுவிடலாம். தமிழுக்காக சேவை செய்வது- அதுவும் கம்ப்யூட்டர் யுகத்தில் இணையச்சேவை செய்வது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. வெறும் பதிவராக இருந்து செய்யும் சேவையைவிட மிக அற்புதமான சேவைகள் தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் நிர்வாகிகளால் செய்யப்படுகின்றன என்பதைத் தமிழுலகம் மறந்துவிடுவதற்கில்லை.

11:55 AM, October 21, 2011
Stock said...

பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது என்றேன் ஒரு பதிவில். அது "சசியை" பதிவெழுத வைக்கும் என்றால் வாரத்திற்கு ஒன்று வரட்டும். :-)

12:04 PM, October 21, 2011
suvanappiriyan said...

திரு சசி!

நான் சவுதி வந்த புதிதில் எனது கம்பெனியில் தமிழர்களை பார்ப்பது குறைவு. வெள்ளிக்கிழமைகளில்தான் நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துக் கொள்வேன். சாடிலைட் டிவிக்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம். அப்பொழுதுதான் என்க்கு தமிழ்மணத்தின் அறிமுகமும் தாய்மொழியில் எழுதவும் ஒரு வாய்ப்பு கிட்டியது. காசி அவர்களின் தொடர்பும் கிட்டியது. இந்த வகையில் தமிழ்மணம் இன்றும் எனது உற்ற நண்பன்.

சில தவறுகள் மனிதன் என்ற முறையில் நடந்து விடுவது உண்டு. அதுபோல்தான் தற்போதய நிலையும். காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும். தமிழ்மணம் வழக்கம் போல் பீடு நடை போட வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

5:02 PM, October 21, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

மறுமொழிகள் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

10:32 PM, October 21, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

தமிழ்மணத்தை பார்த்து தான் அது போல நாமளும் ஏதாச்சும் செய்யனும்னு யுடான்ஸ் அப்டின்னு ஒரு திரட்டி ஆரம்பிச்சோம்

********

வாழ்த்துக்கள் ஜோசப். உங்கள் திரட்டியை பார்த்தேன். அதன் தொலைக்காட்சி, குறும்படம் போன்றவை நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

நன்றி....

11:48 PM, October 21, 2011
வலிப்போக்கன் said...

தங்கள் வழி காட்டுதல் படிதான் எவர் உதவியின்றி கொஞ்மாக உள்ள அறிவைக் கொண்டு சுயமாக வலைப்பதிவை தொடங்கினேன். எற்றிவிட்ட எணியை
எட்டி உதைப்பது, புறம் கூறுவது எங்கள் பரம்பரைக்கே கிடையாது.

7:41 AM, October 23, 2011