Sunday, January 30, 2005

அழிந்து கொண்டிருக்கும் தமிழக வரலாறு

வெட்கப்படவேண்டும். தமிழன் போன்ற பொறுப்பற்ற ஒரு இனம் வேறெதுவுமிருக்குமா என்று தெரியவில்லை. தன் வரலாற்றையே கொஞ்சம் கூட சிந்திக்காத மக்கள், ரொட்டித் துண்டுக்கு அலைவது போல ஓட்டுக்களுக்காக மட்டுமே அலையும் அரசியல்வாதிகள். இவர்களை உள்ளடக்கியச் சமுதாயத்தில் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

கடந்த இரு தினங்களாக வரலாறு இணையக்குழுவினரான நண்பர் கமலக்கண்ணன், கோகுல், ராம், லாவண்யா, க்ருபா ஆகியோருடனும் பொன்னியன் செல்வன் இணையக் குழுமத்தினருடனும் சோழர்களின் சில வரலாற்றுச் சின்னங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. இப் பயணத்தின் இறுதியில் வரலாறு இணைய இதழின் இராஜராஜீசுவரம் சிறப்பிதழ் வெளியீட்டு விழவிலும், பெண்தெய்வவழிபாடு புத்தக வெளியீட்டிலும் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரலாறுப் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு, தமிழகத்தின் தலைச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களான டாக்டர் கலைக்கோவன், திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோரின் விளக்கங்களுடன் சோழர்களின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் கட்டடக்கலைக் கண்டு வியந்தாலும், மெய்சிலிர்த்தாலும் இறுதியாக என்னுள் ஏற்பட்டது வேதனையே. அந்த வேதனையின் வெளிப்பாடு தான் இந்தப் பதிவின் முதல் பத்தி.





வரலாற்று ஆய்வு என்பது சாதாரண விஷயம் அல்ல. கடுமையான அர்ப்பணிப்பு தேவை என்பதை என்னுடன் பணியாற்றும் நண்பர் கமலக்கண்ணன் வாயிலாக நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். மனிதர் தமிழகத்தின் பல வரலாற்று இடங்களுக்கு சுற்றி அலைந்து கொண்டே இருப்பார். இது வரை பல ஆயிரங்களை இதற்காகச் செலவழித்துள்ளார். அலுவலகம், குடும்பம், ஆய்வு, அதற்காகப் படிப்பு என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆய்வின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இவரே இவ்வளவு சிரமப்படுகிறார் என்றால் டாக்டர் கலைக்கோவன், திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோர் எந்தளவுக்குச் சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. பல வருடங்களாகக் கடுமையாக உழைத்துள்ளனர். பல இலட்சங்களை இதற்காகச் செலவழித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு கிடைத்ததென்ன ? ஒன்றுமேயில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாகக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொல்பொருள் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த திரு.ராஜவேலு தெரிவித்தார். ஆனால் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட இந்தக் கல்வெட்டுக்கள் மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழக
வரலாறே 1905ம் ஆண்டு வரையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டவைத் தான். இதற்குப் பிறகு கிடைத்த கல்வெட்டுக்கள் அதைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பல வரலாற்று ஆய்வலர்களின் புதிய ஆய்வறிக்கைகள் என எதுவுமே தமிழக வரலாற்றில் சேர்க்கப்படவில்லை. தவறாக எழுதப்பட்ட வரலாற்றை மாற்ற இது வரை தமிழக அரசு முனையவே இல்லை. ஆங்கிலேயர் சொல்லிச் சென்ற வரலாற்றை கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறோம்.



கல்வெட்டு ஆதரங்களுடன் கண்டறியப்பட்ட தமிழக வரலாற்று உண்மைகள் ஏன் பதிவுச் செய்யப்படவில்லை ?
அறிவியலில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் தவறென்றால் உடனடியாகச் சரிசெய்யப்படும் பொழுது வரலாற்றில் அது முடியாதா என்ன ? நிச்சயமாக முடியும். அரசு மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும். வரலாற்றின் சிலப் பகுதிகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றி எழுத பாரதிய ஜனதா அரசு முனையவில்லையா?

ஆனால் நாம் நமக்குச் சாதகமாக எழுதச் சொல்லவில்லை. கல்வெட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் தமிழகத்தின் வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளப்படி எழுதச் சொல்கிறோம். ஆனால் இவை இங்கு அரங்கேறுவதில்லை ? காரணம் நம் அரசியல் தலைவர்கள். "தமிழ்", "தமிழ்" என்று கூக்குரலிட்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த திரவிடக் கட்சிகள் இது வரை இதற்காக எந்தப் பணியையும் மேற்கொள்ளவேயில்லை. மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கும் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு தமிழக வரலாற்றின் உண்மை நிலையை எழுதும் முயற்சிக்கு அரசின் உதவி வேண்டும். இதனைச் செய்ய எந்த அரசும் முயற்சிக்கவில்லை என்பதே வேதனையான ஒன்று. இது ஒன்றும் அதிகம் பணம் செலவாகும் விஷயமல்ல. கொஞ்சம் அக்கறை இருந்தால் போதும்.

கல்வெட்டுகளை பாதுகாக்கும் மையம் ஏன் மைசூரில் இருக்க வேண்டும் என்பதே விவாதத்திற்குரியது. இந்தியாவிலேயே மிக அதிகமாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் தமிழகக் கல்வெட்டுகள் தான். அப்படியிருக்கும் பொழுது இந்த மையம் இங்கு தானே இருக்க வேண்டும் ?



தமிழக அரசு என்றில்லை. தமிழ் மக்களுக்கு கூட தங்கள் வரலாறு மீது அக்கறையோ, வரலாறுப் பற்றிய புரிதலோ இல்லை. இவ்வாறு பலரின் அக்கறையின்மையால் எழுந்துள்ள நிலை என்ன ?

ஒரு தலைமுறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வலர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. ஒரு வருடமோ, சில வருடங்களோ அல்ல ? ஆயுட் கால உழைப்பு. ஒவ்வொரு வரலாற்றுச் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு, பல வருடங்கள் இதற்காகச் செலவிட்டு, ஆய்வு செய்து, புத்தகம் வெளியிட்டு, அந்தப் புத்தகங்களும் அதிகம் விற்காமல், எதற்காக இந்தப் பணி ?

தமிழக வரலாற்றைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்ற வேட்கையே இவர்களின் இந்த அயராத உழைப்புக்கு காரணம். நம் பாரம்பரியம் தெரியாமல் யாரோ தவறாகச் சொல்லிவிட்டுச் சென்ற நம் வரலாற்றை சரிச் செய்து விட வேண்டும் என்ற ஆவல். நம் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆசை. இதற்காகத் தான் அவர்களின் இந்த தேடல் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இவர்கள், ஏதோ போகிற போக்கில் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் அல்ல. "டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்" என்ற பெயரில் ஒரு மையத்தைத் தொடங்கி பல ஆய்வறிக்கைகளை டாக்டர் கலைக்கோவன் வெளியிட்டுள்ளார். அவருடைய எந்த ஆய்வறிக்கையும் சரியான ஆதாரங்கள் இல்லாமல் வெளிவருவதில்லை. மிகத் தெளிவான ஆதாரங்கள் இருந்தால் தான் ஆய்வறிக்கையே வெளியிடுவார் என்று நண்பர் கமலக்கண்ணன் கூறியது உண்மையே என்று தஞ்சை பெரிய கோயிலில் அவருடன் பேசியபொழுது புரிந்தது. வெறும் அனுமானங்களை இவர் ஒப்புக் கொள்வதில்லை.

இது ஒரு புறமிருக்க தமிழகத்திலுள்ள பலக் கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் சரியானப் பரமாரிப்பு இல்லாமல் அழிந்துப் போகும் நிலையில் உள்ளன. ஏற்கனவே பலச் சின்னங்கள் அழிந்தும் போயிருக்கின்றன. இதனைக் காப்பாற்றும் அக்கறை அரசுக்கு இல்லை. இப்பொழுது பராமரிக்கப்படும் தஞ்சை பெரிய கோயில் போன்றவற்றுக்கு கூட மைய அரசிடமிருந்து குறைவான நிதியே கிடைக்கின்றது. தொல்பொருள் துறையில் பணியாற்றும் திரு.ராஜவேலு போன்ற சில வரலாற்று ஆர்வமுள்ள அதிகாரிகள் போராடி ஒரளவுக்கு நிதிப் பெறுகின்றனர். தமிழைக் காக்க எதையும் செய்யத் தயார் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் சிறிதளவு முயற்சி செய்தாலே நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால் இவர்கள் இதற்காக ஒன்றுமே செய்வதில்லை. இத் துறை, அரசியல்வாதிகளுக்கு வருமானம் தரும் துறையா என்ன ?

நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வந்திருந்த ஒருவர் கல்வெட்டுக் குறித்துக் கவலையுடன் "பல கல்வெட்டுகள் அழிந்துப் போகும் நிலையில் இருக்கின்றன. இதனைக் காப்பாற்ற வேண்டும்" என்றார். இதற்கு டாக்டர் கலைக்கோவனின் பதில் உண்மை நிலையை பிரதிபலித்தது.

"களத்தில் இருக்கும் எங்களுக்கும் இந்தக் கவலை உண்டு. ஆனால் வெறும் வார்த்தைகளால் பேசிப் பலன் என்ன ? இங்கு முக்கியமானத் தேவை பணம் தான். எங்கள் பணத்தைக் கொண்டு செலவழித்து விட்டோம் ? அரசிடம் கேட்டுப் பார்த்து விட்டோம். பணம் கொடுங்கள். ஐந்தோ, பத்தோ கொடுங்கள். பணமிருந்தால், நாமே இந்த நிலையை மாற்றி விடலாம்"

என்றார்.

உண்மை தான். பணமிருந்தால் மிக எளிதாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். ஆனால் வரலாற்றுக்கு பணம் கொடுக்கத்தான் யாருமே இல்லை.



தொடர்புடைய முந்தையப் பதிவு

9 மறுமொழிகள்:

Anonymous said...

சசி அதான் உங்களுக்கு stock market-ல பணம் வருதில்ல இதுக்கு கொடுங்க. நிறையா பணம் வந்திருக்கும் குடுத்து உதவுங்க.

By: மேதா

11:07 PM, January 30, 2005
வானம்பாடி said...

ஒருவர் மட்டும் கொடுக்கும் பணமே போதுமென்றால், சசி அப்பொழுதெ கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். //தமிழன் போன்ற பொறுப்பற்ற ஒரு இனம் வேறெதுவுமிருக்குமா என்று தெரியவில்லை.// என்று சசி சொல்வதை பிரதிபலிக்கிறது மேலே உள்ள பின்னூட்டம்.

12:09 AM, January 31, 2005
ஜெ. ராம்கி said...

நல்ல பதிவு. கல்வெட்டுக்கள் என்றாலே மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைத்து கரைவேஷ்டிகள், மதச்சார்பின்மையிலிருந்து வழுவாமல் இருக்க நினைக்கிறார்களோ என்னவோ?!

- ஜெ. ரஜினி ராம்கி

2:08 AM, January 31, 2005
துளசி கோபால் said...

அன்புள்ள சசி,

அருமையான பதிவு!
நீங்கள் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை!

இங்கே நாங்க இருக்கற நாட்டுச் சரித்திரம் 164 வருஷப் பழசுதான். ஆனா அவுங்க இதைக் கொண்டாடுற
விதம் இருக்கே, ஆச்சரியப்படவேண்டியது!

அங்கங்கே சாலைகளில் 'ஹிஸ்டாரிகல் ப்ளேஸ்'ன்னு போர்டுங்க இருக்கும். அது என்னென்ன தெரிஞ்சுக்க
நாம ஆசையாப் போய்ப் பார்த்தோம்னா, 'இந்த நகரத்தை இங்கிருந்துதான் அளந்தாங்க' 'எட்வர்டு இளவரசர்
மகுடாபிஷேகம் செஞ்ச நாளோட ஞாபகார்த்தமா கட்டுன கல்மேடை'ன்னு இப்படி ஏதாவது ஒண்ணு
இருக்கும். எங்களுக்கும் ச்சீன்னு போயிரும்!

அப்பெல்லாம் நானும், கோபாலும் நம் நாட்டுலே இருக்கற சரித்திர சம்பந்தமான இடங்களுக்கு பராமரிப்பும்
செய்யாம அவைகளைப் பாழடைய விட்டுட்டாங்களேன்னு கவலைப்பட்டு பேசுவோம்.

'போதாக்குறைக்கு பொன்னம்மா'ன்னு அங்கே கோயிலிலே இருக்கற பழைய விக்ரஹம், கற்சிலைங்கெல்லாம்
கூட சில சமயம் 'ஆன்ட்டீக் ஷாப்'லே விக்கறதைப் பாக்கணுமே!

என்றும் அன்புடன்,
துளசி.

2:28 AM, January 31, 2005
Aruna Srinivasan said...

Please Checkout my post today - 31st Jan.

Aruna

1:02 PM, January 31, 2005
இராதாகிருஷ்ணன் said...

முக்கியமான பதிவு இது. நம் மக்களிடையே கலை, வரலாற்று நிகழ்வுகளை, பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவதிலோ, பாதுகாப்பதிலோ அக்கறை இல்லாதது வருத்தத்திற்குரியது. புதிதாக உண்டாக்காவிட்டாலும், இருப்பதைப் பாதுகாக்கவாவது தெரியவேண்டும். பழங்காலந்தொட்டு (இன்றும் கூட) தமிழகத்துக் கட்டிடக் கலையைப் பறைசாற்றுபவை கோயில்கள்தான். (அக்காலத்து மன்னர்களின், குறிப்பாக மூவேந்தர்களின், கோட்டைகள் [அப்படியொன்று இருந்திருப்பின்] என்னவாயிற்று என்பது கேள்விக்குரியது). அப்படிப்பட்ட தலைசிறந்த கோயில்களின் நிலையை நேரில் பார்த்தால் வேதனையே மிஞ்சும்.

4:42 PM, January 31, 2005
இளங்கோ-டிசே said...

அண்மையில் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தபோது கூட அங்கிருந்த கலவெட்டுக்கள் எந்தப்பராமரிப்புமின்றி சிதிலமாகிப்போவதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. அதைவிட துயரமான விடயம் என்னவென்றால், சில கல்வெட்டுக்களின் மீது வர்ணம் பூசப்பட்டு அதிலிருந்த எழுத்துக்கல் எல்லாம் மறைந்துபோயிருந்ததன.

10:42 PM, January 31, 2005
aathirai said...

வொலுன்டேர்களை கொன்டும் இன்த வெலை செய்யலம். எல்லாவட்ரிர்கும் அரசாஙத்தை எதிர்பார்த்தால் ஒன்ரும் நடக்காது. உங்கல் மையதின் மூலம் அன்தன்த ஓர்கலில் உல்ல கல்லோரி இலைங்னர்கலை மையதில் ஒன்ட்ரு திரட்டி இதை செய்யலம். உதாரனதிர்கு இனையதில் 'மடுரை டமில் ப்ரொஜெcட்'
ஐ சொல்லலாம்.

12:27 PM, February 01, 2005
சுந்தரவடிவேல் said...

மைசூரில் நடுவணரசின் மொழியாராய்ச்சி நிறுவனம் இருப்பதாலேயே அங்குதான் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களைக் கொண்டு செல்லவேண்டும் என்பது அபத்தம்.

சின்னங்களைப் பாதுகாப்பது, ஆராய்வுக்கு உதவுவது எல்லாம் நிச்சயமா நாலு தன்னார்வலர்கள் சேர்ந்து செய்கிற காரியமில்லை. அரசின் சீரிய திட்டம், நிதி, செயற்பாடு என்ற பெரும் பலத்தால்தான் சாத்தியப்படும். வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் அழுத்தம் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் சாதிக்க முடியும். வரலாறு.காம் குழுவினர்களின் பணி அளப்பரியது!

6:04 AM, November 15, 2008