வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

மார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்

நியூஜெர்சி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி நீயா, நானா கோபிநாத் கலந்து கொண்டார். சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான நீயா நானா பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஊடகத்தளமான முகநூலின் வலிமையைக் கொண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பை, மார்க் சக்கர்பர்க் ஆளுமை செய்ய நினைக்கிறார் என்ற கோபிநாத்தின் கருத்து சூடான விவாதத்தை ஏற்படுத்தியது.

டிரம்ப் சில இசுலாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடைவிதித்துள்ளார். அகதிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நாடுகளில் உள்ள போர்ச்சூழலில் அங்கிருந்து தப்பித்துப் பல நாடுகளுக்கும் குடியேறி வருவபவர்களை எந்த வித மனிதாபிமானமும் இல்லாமல் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்று டிரம்ப் விதித்துள்ள நாசித்தனமான உத்தரவு அமெரிக்காவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எதிர்த்து பலரும் பேசி வருகிறார்கள். அரசியல்வாதிகள் தொடங்கி, திரைப்பட நடிகர்கள், தனியார் நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் எனப் பலரும் இந்தத் தடையை எதிர்த்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் மார்க் சக்கர்பர்க் தன்னுடைய முகநூல் பக்கத்தில் டிரம்ப்பின் இந்தத் தடையை எதிர்த்து எழுதியிருக்கிறார். தன்னுடைய மூதாதையர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவே பல நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் நாடு தான் என்ற கருத்தை தான் மார்க் சக்கர்பர்க் முன்வைத்துள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சியில் முகநூலை இலவசமாக வழங்கி விட்டு அதனை வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்து வந்த பொழுது நடந்த விவாதத்தில் முகநூலின் வலிமையைக் கொண்டு டிரம்ப்பை ஆளுமை செய்ய மார்க் சக்கர்பர்க் முயல்கிறார் என்ற கருத்தினைக் கோபிநாத் முன்வைத்தார். இதனை மேடையில் இருந்த சிலர் மறுத்துப் பேசினார்கள். மறுத்துப் பேசியவர்கள் தங்கள் கருத்தை இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க, உங்களுக்கு வெள்ளைக்காரர்களைச் சொன்னால் புரியாது. அம்பானியும், அதானியும் இந்திய அரசை கட்டுப்படுத்துகிறார்களா, இல்லையா என்ற கேள்வியைக் கோபிநாத் முன்வைத்தார். மேடையில் இருந்தவர்கள். ஆமாம் என்றார்கள். அம்பானி, அதானியை ஒப்புக் கொள்கிறீர்கள், மார்க் சக்கர்பர்க்கை ஒப்புக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்டார். மறுபடியும் விவாதம் தொடர்ந்தது.

மார்க் சக்கர்பர்க் எதற்காக இதனைச் சொல்கிறார் எனப் பலரும் விளக்க, கோபிநாத் தான் சொல்வது தான் சரி என்ற பாணியில் விவாதத்தை முடித்துக் கொண்டார். அதற்கு மேல் விவாதத்தைத் தொடர விட வில்லை. நான் சொல்வதன் பின் உள்ள அரசியல் இப்பொழுது உங்களுக்குப் புரியாது. இன்னும் ஒரு வருடம் கழித்துப் புரியும் என்று ஜோதிடம் கூறி முடித்துக் கொண்டார்.

******

பொதுவாகத் தமிழகப் பிரபலங்கள், எழுத்தாளர்களுக்கு அமெரிக்கச் சூழ்நிலைப் பற்றிப் புரியாது. அமெரிக்காவைப் பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு எல்லாவற்றையும் தட்டையாகப் பார்ப்பார்கள். சமீபத்தில் கூட எழுத்தாளர் ஜெயமோகன் முதலாளித்துவம் குறித்து உளறி இருந்தார். (அது குறித்து நான் எழுதிய பதிவு - http://blog.tamilsasi.com/2016/11/blog-post.html)

அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் உலகெங்கும் தங்கள் ஆளுமையைச் செலுத்தி வருகின்றன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அமெரிக்க அரசாங்கத்தையும், அமெரிக்கக் காங்கிரசையும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதில் உண்மை உள்ளது. அது போலவே விசா விசயத்தில் பல தனியார் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தை லாபி செய்து வருகின்றன. தங்கள் நிறுவனங்களையே வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விடுவோம் என்று கூறிய உதாரணங்களும் உண்டு. மார்க் சக்கர்பர்க் இந்தியாவில் இணைய இணைப்பை இலவசமாக வழங்கி மொத்த இணையத்தையும் கைப்பற்ற நினைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இது போன்ற பலக் குற்றச்சாட்டுகளில் எனக்கு உடன்பாடு உண்டு.

ஆனால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் முக்கியமான தருணங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்ற வரலாறும் உண்டு. தனியார் நிறுவனங்கள் என்னும் பொழுது வியபாரம் முக்கிய நோக்கம் தான் என்றாலும் அந்த வியாபர நோக்கம் சில முக்கியமான சமயங்களில் அமெரிக்காவை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. கறுப்பர்களின் உரிமை, பெண்ணுரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை போன்றவற்றில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்றதில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மார்க் சக்கர்பர்க்கின் சமீபத்தையப் பதிவை கூட அப்படித் தான் பார்க்க வேண்டும். அது அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குப் புரியக்கூடிய சாதாரண உண்மை. அதை அம்பானி இந்திய அரசைக் கட்டுப்படுத்த முனையும் கோணத்தில் பார்ப்பது சரியானது அல்ல. டிரம்ப் விவகாரத்தில் மார்க் சக்கர்பர்க் சொல்வது அவருடைய சொந்தக் கருத்து. டிரம்ப்பை எல்லாம் கட்டுப்படுத்த முடியுமா என்ன ?

கடந்த காலங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குத் தள்ளியதில் பல தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. இது குறித்த சில தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பகிறேன்.

அமெரிக்காவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 8 மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறை. இதற்காகப் பல தொழிற்ச்சங்கங்கள் பல காலங்கள் போராடி வந்தன. 1914ல் போர்ட் நிறுவனம் 8மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறையைக் கொண்டு வந்தது. இதன் காரணமாகப் பல நிறுவனங்கள் இதனைப் பின்பற்றும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இன்றுள்ள வார இறுதி நடைமுறையைக் கொண்டு வந்ததில் போர்ட் நிறுவனத்திற்கும் பங்கு உள்ளது.

பெப்சி-கோக் வணிகப் போட்டி உலகப் புகழ் பெற்றது. அந்தப் போட்டி கறுப்பர்களின் உரிமைப் போராட்டத்தில் எதிரொலித்தது. கோக் வெள்ளையர்களின் குடிபானமாக இருந்த நேரத்தில் பெப்சி கறுப்பர்களின் பானமாக இருந்தது. இதற்குப் பின் ஒரு வரலாறு உண்டு. பெப்சியின் மார்க்கட்டிங் துறையில் பணியாற்றிய பாய்டு ஒரு கறுப்பர். கறுப்பர்களிடையே பெப்சியைக் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தவர். கறுப்பர்களுக்கான விளம்பரங்கள் ஒரு விதமான clicheவாக இருந்தக் காலக்கட்டத்தில் கறுப்பர்களும் மனிதர்கள் தான் என்பதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் வகையில் விளம்பரங்களை வடிவமைத்தார். இது அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய புரட்சி. பெப்சியின் விளம்பரம் வெள்ளையினவாத இயக்கங்களான KKK போன்ற இயக்கங்களின் எதிர்ப்பைப் பெற்றது. ஆனால் பெப்சி கறுப்பர்களின் மிகப் பெரிய ஆதரவினைப் பெற்றது. தன் வியபாரத்தைப் பெருக்கவே பெப்சி கறுப்பர்களைச் சார்ந்து தன்னுடைய சந்தையை விரிவாக்கியது. ஆனால் கோக் வெள்ளையர்களின் பானமாக இருந்த காலக்கட்டத்தில் தங்களுடைய பானமாகப் பெப்சியைக் கறுப்பர்கள் ஆதரித்தனர். இந்த அரசியலை அந்தக் காலக்கட்டத்துச் சூழ்நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தான் நமக்குப் புரியும். (இது குறித்த ஒரு விரிவான புத்தகம் - The Real Pepsi Challenge: The Inspirational Story of Breaking the Color Barriers - by Stephanie Capparell)

இது போன்ற பல உதாரணங்களைக் கொடுக்க முடியும். இப்பொழுது கூடக் கூகுல், பேஸ்புக் தவிர வேறு பல தனியார் நிறுவனங்களும் டிரம்ப்பின் இனவாத நடவடிக்கையை எதிர்க்க தொடங்கியிருக்கின்றன.

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. வியபாரம் மூலமாகவே பல முற்போக்குக் கருத்துக்களைச் சமூகத்தில் கொண்டு வந்த நெடிய வரலாறு இந்நாட்டில் உண்டு. அதனை இந்த நாட்டில் வாழும் நண்பர்களுடன் திறந்த மனதுடன் கலந்துரையாடி பெற முயலலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதாலேயே தனக்கு எல்லாமும் தெரியும் என நினைப்பது அறிவுஜீவித்தனம் அல்ல.
மேலும் படிக்க...

அமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)

வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரச்சனையாக இந்த Class Warfare என்கிற வர்க்கப் போராட்டம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “Occpy Wall Street” என்கிற வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

வால் ஸ்ட்ரீட் என்பது பொதுவாக முதலீட்டு வங்கிகள் (Investment Banks), வங்கிகள், பங்குச்சந்தை போன்ற நிதிச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் செயல்படும் இடம். நியூயார்க் பங்குச்சந்தையும் வால் ஸ்ட்ரீட் எனப்படுகிற வீதியில் இருந்து தான் செயல்படுகிறது. அமெரிக்க நிதிச் சந்தையின் (Financial Markets) அடையாளம் தான் வால் ஸ்ட்ரீட்

தற்போதைய அரசியல் சூழ்நிலை

இந்தப் பொருளாதார சூழ்நிலைக்குள் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். அமெரிக்காவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் கட்சிகள் - ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party) மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). ஜனநாயகக் கட்சி தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சார்ந்துள்ள கட்சி. லிபரல் நிலைப்பாடுள்ள கட்சி, அதாவது Center to Left நிலைப்பாடுள்ள கட்சி. மற்றொன்று குடியரசுக் கட்சி. தற்போதைய எதிர்க்கட்சி. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சார்ந்த கட்சி. கன்சர்வேடிவ் நிலைப்பாடுள்ள கட்சி. அதாவது வலதுசாரிக் கட்சி. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் இரு காங்கிரஸ் சபைகளான ஹவுஸ் ( House of Representatives), செனட் (Senate) இடையே அதிகாரம் பரவி உள்ளது. இந்த அதிகாரப் பரவல் தான் அமெரிக்கா எந்த திசையிலும் நகராமல் குழப்பத்துடன் தற்பொழுது தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.

தற்பொழுது காங்கிரசின் இரு சபைகளில் ஹவுஸ் ( House of Representatives) குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. செனட்டில் (Senate) ஜனநாயக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை இல்லை. அதாவது filibuster proof majority இல்லை. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற இந்த அறுதிப்பெரும்பான்மை தேவை. ஒபாமாவை அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு ஒபாமா முன்வைக்கும் எந்த முக்கியமான மசோதாவையும் குடியரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. சுகாதார நல மசோதா (சுகாதார நல மசோதா குறித்த எனது கட்டுரை) தொடங்கி இது ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஒபாமாவுக்கு எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை என ஒரு அறிவிக்கப்படாத நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒபாமா அமெரிக்காவை சோசலிச இடதுசாரி பாதையில் கொண்டு செல்வதாக குடியரசுக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. என்றாலும் குடியரசுக் கட்சி இவ்வாறான பிரச்சாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


சுகாதார நல மசோதா நிறைவேற்றும் சமயத்தில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் அமைப்பாக தீவிர வலதுசாரி அமைப்பாக டீ பார்ட்டி (Tea Party) உருவானது. இது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு அங்கம். குடியரசுக் கட்சியில் டீ பார்ட்டியின் ஆதிக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் குடியரசுக் கட்சி மிகவும் தீவிரமான வலதுசாரி நிலைப்பாடுகளையே தற்பொழுது முன்னிறுத்துகிறது. கடந்த ஹவுஸ் மற்றும் செனட் தேர்தலில் பல டீ பார்ட்டி ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். டீ பார்ட்டி என்பது அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு. பொருளாதாரத்தில் தனியார் சார்ப்பு, பணக்காரர்களுக்கு வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை (Big Government) தடுப்பது, அரசின் செலவீனங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள். இந்த அமைப்பு எதனால் உருவானது என்பதை பின்பு விளக்குகிறேன். இந்த டீ பார்ட்டியின் தீவிர வலதுசாரிப் போக்கு தான் ஏற்கனவே வலதுசாரி நிலைப்பாடுடைய குடியரசுக் கட்சியை மேலும் தீவிர வலதுசாரிப் பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை (Debt ceiling) உயர்த்தும் பிரச்சனையில் ஒபாமா முன்வைத்த தீர்வுகளை ஏற்க குடியரசுக் கட்சி மறுத்தது. ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்க, நாட்கள் கடந்து கொண்டே செல்ல, கடன் உச்சவரம்பை உயர்த்தும் இறுதி இரு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமெரிக்காவால் தன்னுடைய கடன்களை, அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களை, ஒய்வூதியங்களை வழங்க முடியாமால் போகலாம் என்ற நிலையில் ஒருவாறு ஒபாமாவும், குடியரசுக் கட்சியினரும் உடன்படிக்கை செய்து கொள்ள கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் இரு கட்சிகளின் ஒப்புதலுடனும் பலமுறை உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு ஒபாமாவுக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் டீ பார்ட்டி (Tea Party) என்று செல்லப்படுகிற குடியரசுக் கட்சியைச் சார்ந்த தீவிர வலதுசாரியினர் தான். பணக்காரர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பை கொண்டு வர ஒபாமாவும் ஜனநாயக் கட்சியினரும் விரும்பினர். ஆனால் எந்த வித வரி விதிப்பையும் ஏற்றுக் கொள்ள டீ பார்ட்டியினர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அரசின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என டீ பார்ட்டியினர் வாதிட்டனர். குடியரசுக் கட்சியின் ஹவுஸ் சபாநாயகரான (House Speaker) ஜான் பெய்னர் கூட எதிர்பார்க்காத அளவுக்கு டீ பார்ட்டி என்கிற தீவிர வலதுசாரியினர் ஏற்படுத்திய பிரச்சனையும் அதற்கு பணிய வேண்டிய அளவுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ஒபாமாவின் நிலையும் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஒபாமா அளவுக்கு மீறி குடியரசுக் கட்சியினரை அனுசரித்து செல்ல முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ரேட்டிங் S&P நிறுவனத்தால் குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே சரிந்து கொண்டே இருந்த ஒபாமாவின் செல்வாக்கினை மிகவும் மோசமாக சரிய வைத்து. இது தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலை இழப்புகளும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படாத பொருளாதார தேக்கமும் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறிகள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில், சரிந்து கொண்டே இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை எழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒபாமா ஏதேனும் செய்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.

****************
பணக்காரர்களுக்கு வரி விதிப்பு

ஒபாமா வலதுசாரிகளால் ஒரு தீவிர இடதுசாரியாக பார்க்கப்பட்டார். இடதுசாரிகளோ ஒபாமா தன்னுடைய இடதுசாரி நிலைப்பாடுகளில் நிறைய சமரசம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வெற்றிக்கு இடதுசாரிகளிடம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பினை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஒபாமாவுக்கு இருந்தது. கடந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் கறுப்பர்கள் மற்றும் லேட்டினோக்கள். ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் வேலையின்மை அதிகரித்து உள்ளது. கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவுற்றது. இந்தப் பிரச்சனைக்கு ஒபாமாவை குற்றம் சொல்லிவிட முடியாது. காரணம் ஒபாமா குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பே இது மோசமாக தான் இருந்து. பொருளாதார தேக்கம் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே இருந்த சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒபாமா எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஒபாமாவுக்கு இருந்தது. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க “Jobs Bill" என்ற வேலைவாய்ப்பு மசோதாவை ஒபாமா கடந்த மாதம் முன்வைத்தார். பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த மசோதா உருவாக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்கம் போல இதனை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. கடந்த காலங்கள் போல ஒபாமா இந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரை நம்பவில்லை. மாறாக மக்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பலப் பொதுக்கூட்டங்களில் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஒபாமா தொடங்கினார். குடியரசுக் கட்சியினரை நிர்பந்தம் செய்வதும், எதிர்வரும் தேர்தலில் தன்னை பலப்படுத்திக் கொள்வதும் தான் ஒபாமாவின் நோக்கம்.

வேலைவாய்ப்பு மசோதாவில் ஒபாமா முன்வைத்த புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியினர் மறுத்தனர். பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே குடியரசுக் கட்சியினரின் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரிகளை உயர்த்துவதை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் சாதாரண மக்களை விட பணக்காரர்கள் மிகவும் குறைவான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். சாமானிய மக்கள் 20-30% வரை வரி செலுத்தும் நிலையில் பணக்காரர்கள் 20%க்கும் குறைவான வரியையே செலுத்துகின்றனர். அனைவரும் சமமான வரி செலுத்த வேண்டும் என்பது ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடு. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் ஒபாமாவுக்கு ஆதரவு தரும் வகையில் தான் இது வரை சுமார் 17% வரியையே கட்டியிருப்பதாவும், தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன்னை விட அதிக வரிகளை செலுத்துவதாகவும் கூறினார். தன்னைப் போன்ற பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தான் சமமான வரியினை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் காங்கிரஸ் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறினார். அமெரிக்காவில் பணக்காரர்கள் ஏன் குறைவாக வரி செலுத்துகிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கிறேன்.
ஒபாமா முன்வைத்த வரிவிதிப்புகள் வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர் வர்ணித்தனர். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒபாமா இது வர்க்கப் போராட்டம் என்றால் தான் மத்தியதர வர்க்க மக்களின் போராளி (Middle Class Warrior) என்று கூறினார். தன்னை மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்தவராக முன்னிறுத்திக் கொள்வதும், குடியரசுக் கட்சியினரை பணக்காரார்களின் பிரதிநிகளாக முன்னிறுத்துவதும் தான் ஒபாமாவின் திட்டம்.

பணக்காரர்களுக்கு வரி விதிப்பதையே வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர். வர்ணிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது பெயரளவில் தான் அமெரிக்க அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரச் சூழலும் அதற்கு தீர்வாக அமெரிக்காவின் இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் முன்வைக்கும் தீர்வுகள் சார்ந்த ஒரு கொள்கைப் பிரச்சனையாக தான் வர்க்கப் போராட்டம் என்ற சொல்லாடல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனைச் சார்ந்து ஒரு இயக்கம் - வால்ஸ்டீர்ட்டை ஆக்கிரமிக்கும் இயக்கம் நடைபெறும் என்பது இரு கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்காத ஒன்று. சிறிய அளவில் தொடங்கிய “வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” இன்று அமெரிக்காவெங்கும் பரவி வருகிறது. பெரிய இயக்கமாக இது வரை மாறவில்லை என்றாலும் அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக மோசமாகி வரும் அமெரிக்க பொருளாதாரம் அதற்கான காரணிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது இடதுசாரிகளின் டீ பார்ட்டி என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றனர். தீவிர வலதுசாரிகளுக்கு டீ பார்ட்டி இருந்தது போல இடதுசாரிகளுக்கு ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தது. எனவே இந்த வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் இடதுசாரிகளின் சார்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது என்பது ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். ஏனெனில் ஜனநாயக் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் குதித்து உள்ளன. சில நூறு பேர் பங்கேற்ற போராட்டம் இன்றைக்கு பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரும் போராட்டமாக நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பலர் பார்க்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பெரிய இயக்கமாக பரவும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அது ஒபாமா மறுபடியும் ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினர் அனைவரும் யார் தீவிர வலதுசாரியாவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். மத்தியதர வர்க்கத்தையோ, வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அதே நேரத்தில் ஒபாமாவுக்கு எதிராக ”வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”திரும்பி விடுவோ என்ற அச்சமும் ஒரு புறம் உள்ளது.

****************

உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் ஏன் இந்த நிலை ? என்ன தான் நடக்கிறது ? அமெரிக்க பொருளாதாரத்தைச் சார்ந்தே உலகப் பொருளாதாரம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் தவிர இன்றைய உலகமயமான பொருளாதார சூழ்நிலையில் உலகின் மொத்த பொருளாதாரமும் பின்னிப்பிணைந்து உள்ளது. எனவே அமெரிக்காவின் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல் அவசியம்.

ரீகனின் பொருளாதாரம் - Trickle down Economics

இந்தப் பிரச்சனையை அலசுவதற்கு 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து தான் அனைவரும் தொடங்குவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008 என்பது தொடக்கம் அல்ல. அது ஒரு ஒரு முடிவின் தொடக்கம். எல்லையில்லா சுதந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தையும் தனியார் சார்ந்த பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகள் நுழையத் தொடங்கியதன் தொடக்கம். எனவே அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் தற்போதைய இந்தப் பிரச்சனையை குறித்தும் நாம் அலச வேண்டும் என்றால் அதன் தற்போதைய சூழலின் தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்த தொடக்கம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1980களில் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள். 2008ல் தொடங்கி தற்பொழுது வரை இருந்து வரும் இந்த பொருளாதார தேக்கத்திற்கான அடித்தளம் அமெரிக்க பொருளாதாரத்தையே மீட்டெடுத்தாக சொல்லப்படும் ரெனால்ட் ரீகனால் தான் தொடங்கி வைக்கப்பட்டு ஜார்ஜ் புஷ் காலத்தில் பொருளாதார சரிவில் முடிந்தது என்பதே உண்மை. 1980களில் அமெரிக்க பொருளாதாரத்தில் பல மாற்றங்களை குடியரசு கட்சியைச் சார்ந்த ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். இன்றைக்கும் அவர் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை வலதுசாரிகளும், தனியார் நிறுவனங்களும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் சராசரி அமெரிக்கனின் வருமானம் தேங்கிப் போனது. மத்தியதர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் ரீகன் பின்பற்றிய Trickle down Economics என்னும் பொருளாதார தியரி.

அது என்ன Trickle down Economics ? அதாவது மேலிருந்து கீழ் வரும் பொருளாதார தியரி. இது தான் நான் மேலே கூறிய பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் முக்கிய காரணம்.
தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் தனியாருக்கு கிடைக்கும் கூடுதல் பணம் (லாபம்) மறுபடியும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு மேலும் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில் அது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பலன்கள் மேலிருந்து (தனியார் நிறுவனம் - முதலாளிகள்) கீழ் நோக்கி (சாமானிய மக்கள்) வந்தடையும் என்பது அந்த தியரி. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பது அந்த தியரி.

இந்த பொருளாதார தியரியின் படி தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்குகளை ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். அதன் பின்பு ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்சும் பல வரி விலக்குகளை கொண்டு வந்தார். ரொனால்ட் ரீகன் விரி விலக்குகள் தவிர Deregulation எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அரசாங்கம் என்பது எந்த வகையிலும் மக்களின் பொருளாதார சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதையும் ரீகன் கொண்டு வந்தார். அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றும் தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் ரீகன் மக்களை நம்ப வைத்தார். இன்றைக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கிற வலதுசாரிகள் எதிர்க்கின்ற Big Government என்ற சித்தாந்தத்தை தகர்த்து எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தையே ரீகன் கொண்டு வந்தார்.

ரீகனின் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள்


பணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் 1980களில் தொடங்கி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. இதே காலக்கட்டத்தில் தான் சோவியத் யூனியனும் சிதைவுற்றது. சோவியத் யூனியனின் சிதைவு கம்யூனிச சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பினை விலக்கியது. அமெரிக்கா பாணியிலான பொருளாதாரமே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது என உலக நாடுகள் நம்பின. இந்தியா 1991ல் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்தியது. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இது போன்றவை பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. அமெரிக்க நிறுவனங்கள் உலகமயமாகிய பொருளாதாரத்தை பயன்படுத்தி லாபத்தை அள்ளின.

சரி...இது ஒரு புறம் இருக்கட்டும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் பொருளாதார தியரியால் மேலிருப்பவர்களின் (அதாவது பணக்காரர்களின்) வருமானம் பல்மடங்கு பெருகியது. ஆனால் கீழ் இருப்பவர்களின் வாய்ப்பு பெருகியதா ? இல்லை என்பதையே புள்ளி விபரங்கள் தருகின்றன.


பணக்காரர்களிடம் பணம் சேர்ந்தது, மற்றவர்களின் நிலையோ அதே நிலையில் தான் இருந்தது. வருமானம் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் மத்தியதர வர்க்க மக்களின் வருமானத்தில் எந்த ஒரு உயர்வும் இல்லை. ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய செலவீனங்கள் அதிகரித்தன. காப்பீடுகள், மருத்துவ செலவுகள் அதிகரித்தன. அமெரிக்கர்களின் சேமிப்பு சரிந்தது. மிகவும் எளிதாக கிடைத்த கடன் மூலம் அமெரிக்கர்கள் கடனாளி ஆனார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் சந்தை சூடுபிடித்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சகட்டு மேனிக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள், வங்கிகள் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்கின. அதற்காக பல நிதி சார்ந்த முதலீட்டு பத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

அமெரிக்காவின் பொருளாதார சரிவு

ரியல் எஸ்டேட் பிரச்சனையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த தகிடுதத்தங்கள் பற்றி 2008ல் எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன்.

ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வங்கிகள் வாரி வழங்கின. வீடு வாங்குவதற்கு முன்பணம் (Down Payment) தேவையில்லை. வீட்டின் விலை மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். கீழே வரவே முடியாது என்று மக்களை வங்கிகள் நம்ப வைத்தன. பலரும் வீடுகள் வாங்கினர். வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்க வீட்டின் விலையும் எகிறிக் கொண்டே இருந்தது.

Collateralized debt obligation மற்றும் Credit Default Swaps

சரி...இப்படி கடன்களை வாரி வழங்க வங்கிகளுக்கு என்ன அவசியம் ? அவர்களுக்கு பணம் வேண்டாமா ? அங்கே தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் உருவாக்கிய பல விதமான முதலீட்டு பத்திரங்கள் உதவின. மார்ட்கேஜ் (வீட்டுக் கடன்) நிறுவனங்கள் மக்களுக்கு நேரடியாக வீடு வாங்க கடன் வழங்குவார்கள். பிறகு அதனை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிசாக (Mortgage Securities) மாற்றம் பெற்று முதலீட்டு வங்களிடம் (Investment Banks) செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDOவாக (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை. அதாவது எந்த வித உற்பத்தி பொருளும் இல்லாமல் பணச் சந்தையில் (Financial Markets) பணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது.

இது தவிர வால் ஸ்ட்ரீடையே கவிழ்த்த ஒன்று என்றால் அது Credit Default Swaps - CDS. இதனை உருவாக்கியவர்களும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தான். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் (Credit) கொடுக்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் (Default) என்ன செய்வது ? நிறைய கடன்களை வழங்கும் வங்கிகளுக்கு இந்தப் பிரச்சனை எப்பொழுதும் உண்டு. இதற்கான ஒரு வகையான பாதுகாப்பு பத்திரம் தான் CDS எனப்படும் Credit Default Swaps. Swap என்றாலே பரிமாற்றம். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் என்ன செய்வது என்னும் ரிஸ்க்கை வேறொரு நபருக்கு மாற்றி விடுகிறீர்கள். இத்தகைய சிடிஎஸ்களை விற்றவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் (Default on Credit) அந்த தொகையை உங்களுக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனம் திருப்பி செலுத்தி விடுவதாக உத்திரவாதம் அளிக்கிறது. அதற்காக ஒரு தொகையை (Premium) நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த பத்திரத்தின் மொத்த மதிப்பை Notional என்று சொல்வார்கள். (இந்த நோஷனலில் பல வகை உண்டு. அதற்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை). உத்திரவாதம் கொடுக்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடன் பெறுபவர் அந்தக் கடனை திருப்பி செலுத்துவாரா என்பதை ஆராய வேண்டும். முதலீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிசினஸ் வாய்ப்பு. கடன் வழங்குபவர்களுக்கு தங்களுடைய கடன் பற்றிய கவலையில்லை. இது வங்கிகள் செயல்படும் விதத்தில் மிகச் சாதாரணமான ஒன்று தான். இதனை Hedging என்று சொல்வார்கள். அதாவது உங்களுடைய ரிஸ்க்கை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு விற்பனை அதிகரித்த சமயத்தில் ஏராளமான வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு இந்த சிடிஎஸ்சை எடுக்க தொடங்கின. சிடிஎஸ் சந்தை அதிக வேகமாக வளரத் தொடங்கியது.

2008ல் அமெரிக்காவின் சிடிஎஸ் வர்த்தகம் மட்டுமே சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மொத்த சிடிஎஸ் வர்த்தகம் சுமார் 62 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ? அது தான் கட்டுபாடற்ற தனியார் நிறுவனங்களை வளர விட்டால் ஏற்படும் விளைவுகள். சிடிஎஸ் தவிர டிரைவேட்டிவ்ஸ் (Derivatives) என்று சொல்லப்படுகிற நிதி சார்ந்த பத்திரங்களின் மொத்த சந்தை மதிப்பு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 20 மடங்கு அதிகம். இவை எதுவும் பங்குச்சந்தை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இவை கட்டுபடுத்தப்படாத முறையற்ற வர்த்தகம். இதனை OTC Derivatives என்பார்கள். அதாவது Over the counter முறையில் நடைபெறும் வர்த்தகம்.

ரியல் எஸ்டேட் சரியத் தொடங்கியதும், பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை. பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் பல முதலீட்டு வங்கிகள் அவற்றுக்கு சிடிஎஸ் வழங்கி இருந்தன. எதன் அடிப்படையில் இந்த சிடிஎஸ் வழங்கப்பட்டன ? வெறும் கடன் ரேட்டிங் அடிப்படையில் மட்டுமே. Collateral எனப்படும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லை. திவாலாகும் வாய்ப்புகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் சிடிஎஸ் வழங்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சிடிஎஸ் வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிலையில் சிடிஎஸ்சின் வர்த்தக போட்டி மட்டுமே இருந்தது. ஆனால் 2008ல் ரேட்டிங் எல்லாம் அர்த்தமற்றதாகிய சூழ்நிலையில் நிறுவனங்கள் சரியத் தொடங்கின. அதனுடன் மொத்த அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. 2008ல் ஏஐஜி (AIG) நிறுவனத்திடம் மட்டும் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் 2008ல் கவிழ்ந்த பொழுது சுமார் 400 பில்லியன் டாலர் அளவுக்கு லீமேன் நிறுவனம் சார்ந்த சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் கவிழ்ந்த நிலையில் மொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.

Bailout

எந்த அரசாங்கத்தை தனியார் நிறுவனங்கள் வெறுத்தனரோ, அந்த அரசாங்கம் மிகச் சிறிய அரசாங்கமாக (Small Government) இருக்க வேண்டும் என நினைத்தனரோ அந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் தங்கள் நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்த இந்த வர்த்தகம் மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும் என்ற நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஏஐஜி போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய தொடங்கியது. அந் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அந் நிறுவனங்களை கவிழ விடாமல் பார்த்துக் கொண்டது. அரசாங்கத்தை வெறுத்த தனியார் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பெருத்த அரசாங்கத்தைஐ (Big Government) ஏற்றுக் கொண்டனர். 2008-2009ல் மொத்த வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட சோசலிச பொருளாதாரத்தில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிச் சூழலே அன்றைக்கு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதில் வலதுசாரிகளுக்கு பிரச்சனை இருந்தாலும் வேறு வழியில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தான் 2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். ஆளும் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. ஹவுஸ், செனட் என்ற இரண்டிலும் ஜனநாயக் கட்சி வெற்றி பெற்றது. 1980களில் இருந்தே ரீகன் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை இடதுசாரிகள் வெறுத்தனர். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் மனநிலை, பொருளாதார தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் இடதுசாரி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். குடியரசுத் தலைவராவதற்கு முன்பு ஒபாமா ஒரு தீவிர இடதுசாரி நிலைப்பாடு உள்ளவராகவே இருந்தார். தவிரவும் அவர் ஒரு கறுப்பர். ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசி, செனட் பெரும்பான்மை கட்சி தலைவர் ஹாரி ரீட் போன்றோரும் தீவிர இடதுசாரிகளால் பார்க்கப்பட்டனர். இதனால் வலதுசாரிகள் ஒபாமாவின் அரசாங்கத்தை அச்சமாக பார்த்தனர். ஒபாமா அரசாங்கம் மற்றும் ஜனநாயக் கட்சியின் முயற்சியால் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் Dodd–Frank Wall Street Reform என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. கிளிண்டன் காலத்திலேயே நிறைவேற்ற முனைந்த சுகாதார நல மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான திட்டங்களால் அமெரிக்காவை இடதுசாரி பாதையில் ஒபாமா கொண்டு செல்வதாக வலதுசாரிகள் நினைத்தனர். தங்களுடைய வலதுசாரி பொருளாதாரத்திற்கு பெரும் சவால் எழுந்துள்ளதாக கருதினர். அதன் விளைவாக பிறந்தது தான் நான் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் கூறிய டீ பார்ட்டி எனப்படும் தீவிர வலதுசாரி இயக்கம்.

வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம்

இடதுசாரிகள் பணக்காரர்களுக்கு ரீகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட வரி விலக்குகளை விலக்க வேண்டும் என கோருகின்றனர். குடியரசுக் கட்சி அதனை எதிர்க்கிறது. ஜனநாயக் கட்சி கொண்டு வந்த வால் ஸ்ட்ரீடை கட்டுப்படுத்தும் மசோதாக்களை விலக்க வேண்டும் என்கிறது குடியரசுக் கட்சி. சுகாதார நல மசோதாவை விலக்க வேண்டும் என்றும் கோருகிறது. இப்படி இரு கட்சிகளும் கொள்கை அளவில் கொண்ட முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால் அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் 2011ல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மற்றொரு பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்றைய உலகப் பொருளாதாரம் பின்னிப்பிணைந்து உள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. ஐரோப்பாவில் பன்றிகளின் பொருளாதாரம் என ”ஆசையாக” வர்ணிக்கப்படும் PIGS (Portugal, Italy, Greece, Spain) பொருளாதாரம் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்காவில் பங்குச்சந்தைகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. சிறிய அளவில் வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் இந்த ஆண்டு சரிவினை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க Trickle down Economics என்ற பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைத்த பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை விலக்கி, கூடுதல் வரிகள் மூலம் அரசாங்கத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவெங்கும் வலுத்து வருகிறது. அதில் பிறந்தது தான் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் (Occupy Wall Street Movement).

*********************


இடதுசாரி இயக்கம், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற இயக்கம், ஒபாமாவுக்கு ஆதரவான இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டாலும், வேலையின்மையாலும், பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்தும் சமமற்ற பொருளாதார சூழலாலும், வீடுகளையும் தங்களை வேலைகளையும் இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மக்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கின்றனர்.

99% மக்களின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் 1% பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை அளித்து கொண்டே இருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்பதே இன்று நியூயார்க்கிலும், பாஸ்டனிலும், சிகாகோவிலும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் சில நூறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அமெரிக்காவெங்கும் நூறு நகரங்களுக்கு பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ஆனால் இந்த இயக்கம் தோல்வியுறும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் ரீகனின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து பரவும். அது 99% மக்களுக்கு எந்த நன்மையும் கொடுக்காது. அந்த அச்சமே இன்று மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.


*****************

வர்க்கப் போராட்டம், வால் ஸ்ட்ரீட் போராட்டம் இவற்றைப் பற்றி எழுதும் நான் என்னுடைய முரண்பாடுகளைக் குறித்தும் எழுதி விட வேண்டும். வால் ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த நியாயங்களை என் நண்பர்களிடம் பேசும் பொழுது, வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர். அது உண்மையான வாதம் தான். வால் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் மட்டுமே நான் வேலைபார்த்து வந்திருக்கிறேன். எனவே என்னுடைய வாழ்க்கை என்பது வால் ஸ்ட்ரீட் மூலம் பெற்ற வாழ்க்கையே. வால் ஸ்ட்ரீடை ஒரு சுரண்டல் இடமாக பார்த்தால் அந்த சுரண்டும் வர்க்கத்தில் நானும் ஒரு மறைமுக அங்கமே. தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட அரசியல் கொள்கை என்று இரு வேறு தடங்களில் தான் பல நேரங்களில் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரையாக வால் ஸ்ட்ரீட்டை அதன் போக்கில் விட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். வால் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடான வர்த்தக முறையை கொண்டு வருவது தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது என நான் நம்புகிறேன்.
மேலும் படிக்க...

பெட்னா 2010 - அனுபவங்களும், விமர்சனங்களும்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் சுதந்திர தின வார இறுதியில் அமெரிக்காவின் ஏதேனும் ஒரு நகரில் பெட்னா விழாவினைக் கொண்டாடுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டு 23வது ஆண்டு நிகழ்வு கனெக்டிக்கெட் மாநிலத்தில் உள்ள வாட்டர்பெரி நகரத்தில் ஜூலை 3,4,5 ஆகிய மூன்று தினங்களில் நடந்து முடிந்துள்ளது. முதன் முறையாக இந்த ஆண்டு பெட்னாவில் கலந்து கொண்டேன். பெட்னா குறித்து கேள்விப்பட்டதற்கும், பெட்னாவில் பெற்ற அனுபவத்திற்கு பெரிய வேறுபாடு இருந்தது. நிகழ்ச்சிகள் குறித்து பாரட்டுதல்களும், விமர்சனங்களும் உள்ளன. ஏமாற்றம், ஆச்சரியம் என இரண்டு உணர்வுகளும் பெட்னா விழாவில் ஏற்பட்டது. முதல் நாள் ஏமாற்றமும், இரண்டாம் நாள் நிகழ்வுகள் நம்பிக்கையையும் அளித்தன. மூன்றாம் நாள் இலக்கிய நிகழ்வுகளில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை கேட்க முடிந்தது. பெட்னாவின் அனைத்தும் பிடித்திருந்தது என சொல்லி விட முடியாது. ஆனால் மனநிறைவை அளிக்கும் நிகழ்வுகள் பெட்னாவில் இருந்தன.

முதலில் நிகழ்ச்சி நடத்திய பெட்னா குழுவினருக்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 2500பேர் உட்காரக் கூடிய அரங்கம் நிரம்பி இருந்தது. தெருக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளின் பொழுது அரங்கம் நிரம்பி இருந்தது. இவ்வளவு பேரையும் ஒழுங்குப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உணவு ஏற்பாடுகள் தொடங்கி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகவே இருந்தன.

**************

முதலில் பெட்னாவைக் குறித்து இந்த ஆண்டு எழுந்த சில விமர்சனங்களைப் பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். பெட்னாவையும், செம்மொழி மாநாட்டையும் ஒப்பிடுவது போன்ற லூசுத்தனமான வாதம் வேறு ஒன்றும் கிடையாது. பெட்னா என்பது ஒரு தனியார் அமைப்பு. யாருடைய வரிப்பணத்தையும் எடுத்து தன்னுடைய தனிப்பட்ட கனவுகளையும், குடும்பத்தையும் முன்னிறுத்தி பெட்னா விழா நடைபெற வில்லை. ஒவ்வொருவரிடம் இருந்தும் பெறும் தனிப்பட்ட நன்கொடைகளையும், கட்டணங்களையும் கொண்டே பெட்னா விழாக்கள் நடந்து வருகின்றன. கருணாநிதியின் ஜால்ராக்களை நாம் எதிர்ப்பதால், கருணாநிதியின் சூரியக் குடும்பம் தமிழகத்தில் செய்து வரும் தில்லுமுல்லுக்களை நாம் வெளிப்படுத்துவதால் நாம் முன்னெடுக்கும் ஒரு விழாவினை கருணாநிதியின் உடன்பிறப்புகள் எதிர்க்கின்றனர். தமிழர்கள் மத்தியில் சரிந்துப் போன செல்வாக்கினை தூக்கி நிறுத்துவதற்காக பெட்னா முன்னெடுக்கப்படவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விழா, 23வது வருடமாக இந்த ஆண்டும் நடைபெற்றது. தவிரவும் தமிழர்களுக்கு நாடகங்களை நடத்தி துரோகங்களை பெட்னா செய்யவில்லை. அந்த துரோகங்களை மறைக்க விழா எடுக்கவில்லை. தமிழக மக்களின் வரிப்பணத்தில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பிசினஸ் க்ளாஸ் விமானப் பயணத்துடன் செம்மொழி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மத்தியில் தங்களின் சொந்தக் காசு போட்டு அமெரிக்காவின் பல மூலைகளில் இருந்தும் விமானத்தில் பெட்னாவிற்கு வந்திருந்தனர்.

கருணாநிதி ஆதரவாளர்கள் ஒரு புறம் என்றால் சங்பரிவார் கும்பலும் பெட்னாவை குறித்து இணையத்தில் அவதூறுகளை பரப்பி வந்தது. அதற்கு ஒரு பிண்ணனி காரணம் உண்டு. பெட்னா அமெரிக்காவில் அனைத்து தரப்பு தமிழர்களையும் பிரதிபலிக்கும் ஒரு அமைப்பாக அமெரிக்க தமிழர்களை பிரதிபலித்து வருகிறது. சங்பரிவார் கும்பல் அமெரிக்காவில் முன்னெடுக்கும் ஹிந்துத்துவ முயற்சிகளை எதிர்க்கும் ஒரு அமைப்பாக பெட்னா செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாஜக இந்தியாவில் பாடப்புத்தகங்களில் தன்னுடைய கருத்துக்களை திணிக்க முயன்றது நினைவிருக்கலாம். அது போன்றதான ஒரு முயற்சியை 2005ல் சங்பரிவாரின் அமெரிக்க கும்பல் செய்ய முயன்றது. Vedic Foundation (VF), Hindu Education Foundation (HEF) போன்றவையே இந்த அமைப்புகள். இவை சங்பரிவாரின் அமெரிக்க முகங்கள். கலிபோர்னியா மாநிலத்தில் பாடப்புத்தகங்களில் இந்து மதம், சாதி, ஆரியர்கள் போன்ற குறிப்புகளை மாற்ற முயன்று கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் (தமிழ் உட்பட) சமஸ்கிருதமே அடிப்படை மூலம் என அமெரிக்க பாடதிட்டத்தில் இந்துத்துவத்தை திணிக்க சங்பரிவார் கும்பல் முயன்றது. ஆனால் இந்த முயற்சியை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் விட்சல் போன்றவர்களும், பல தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இடதுசாரி அமைப்புகளும் எதிர்த்தன. அவ்வாறான அமைப்புகளில் பெட்னாவும் ஒன்று. பெட்னாவின் அப்போதைய தலைவர் திரு.தில்லைக் குமரன், கலிபோர்னியா கல்வித்துறைக்கு எழுதிய கடிதத்தை இங்கே வாசிக்கலாம் - http://www.friendsofsouthasia.org/textbook/LetterToCAStateBoard_FeTNA.pdf. இவ்வாறான அமைப்புகளின் கூட்டு முயற்சியின் காரணமாக சங்பரிவாரின் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

இவ்வாறு அமெரிக்காவில் தமிழ் மொழியைச் சார்ந்தும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் நலன்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும் பெட்னா இருந்து வருகிறது. அத்தகைய பெட்னா அமைப்பு தான் ஒவ்வொரு ஆண்டும் பெட்னா விழாவினை நடத்தி வருகிறது. பெட்னா விழா என்பது அமெரிக்காவில் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வு. தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் சூழலில் தமிழர்களை ஒன்றிணைக்க இத்தகைய விழாக்கள் அவசியமாகிறது. பெட்னாவில் கலந்து கொள்பவர்களில் 95% பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்களே. பெட்னாவை ஒரு விழாவாக மட்டும் இல்லாமல் ஒன்று கூடும் நிகழ்வாகவே பலர் பார்க்கின்றனர். மூன்று நாட்கள் கலந்து கொண்டு விட்டு திரும்பிய வழியில் என் மனைவி மூன்று நாட்களும் சென்னையில் இருந்தது போல உணர்ந்ததாக தெரிவித்தார். இத்தகைய உணர்வு புலம்பெயர்ந்து வாழும் சூழலில் அவசியமாகிறது. தவிரவும் தங்களின் குழந்தைகளின் திறமைகளை அரங்கேற்றும் களமாகவும், நண்பர்களை சந்திக்கும் இடமாகவும், தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளை அடுத்த ஒரு வருடத்திற்கு திட்டமிடும் சிந்தனை வெளியாகவும் பெட்னா விளங்குவதை என்னால் உணர முடிந்தது.

பெட்னாவை ஒரு முற்போக்கு அமைப்பாகவும், புலிகள் ஆதரவு அமைப்பாகவும் பல ஊடகங்கள் கடந்த காலத்தில் எழுதியிருக்கின்றன. அவ்வாறான கருத்தாக்கத்துடன் பெட்னாவில் கலந்து கொண்ட எனக்கு முதல் நாள் ஏமாற்றமே ஏற்பட்டது. பெட்னா நிகழ்ச்சிகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அவசியம் தான் என்றாலும் சன் டிவி, கருணாநிதி டிவி பாணியிலான நிகழ்ச்சிகள் அவசியம் தானா என்ற கேள்வியையும், விமர்சனத்தையும் என்னால் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக ப்ரியாமணி, லட்சுமி ராய் போன்ற பொம்மைக் கதாநாயகிகளை பெட்னா மேடையில் அரங்கேற்றுவதும், பிறகு மொம்மைக் கதாநாயகிகள் குறித்து கவிஞர் தாமரை பேசுவதும் பெருத்த முரண்பாடாக எனக்கு தெரிகிறது.

சினிமாவையோ, சினிமாக் கலைஞர்களையே நான் முழுமையாக நிராகரிக்கவில்லை. ஆனால் தமிழ்ச்சினிமா பாணியில் சினிமாக் கலைஞர்களை அழகுப் பதுமைகளாக மேடை ஏற்றுவதை தான் நான் நிராகரிக்கிறேன். விக்ரம், ப்ரியாமணி, லட்சுமி ராய், ஸ்ரீராம் போன்றவர்கள் சில லட்சங்களை செலவழித்து விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்களால் விழா ஏதேனும் நன்மைகளைப் பெற்றதா ? Did they add any value to the function ? சினிமா நட்சத்திரங்களிலேயே தன்னை அழைத்து வந்தமைக்கு நகைச்சுவை நடிகர் சந்தானம் மட்டுமே எதனைப் பேச வேண்டும் என ஒரு திட்டத்துடன் வந்திருந்தார். அனைவரையும் சிரிக்கவும் வைத்தார். ஆனால் விக்ரம் எந்த ஒரு திட்டமும் இல்லமால், மேடை ஏறி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் தான் மேடையேறினார். ஏதோ பேசினார். என்னமோ கேள்வி கேட்டார்கள். பதில் சொன்னார். மறுநாள் இன்னிசையில் பாடல் சில பாடி தன் கடமையை முடித்து விட்டுச் சென்று விட்டார். குத்தாட்டம் ஆடி அவர் விருப்பத்திற்கு விழாவினை ப்ரியாமணி கடத்திச் சென்றார். தமிழும் பேசத் தெரியாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் ஜவுளிக் கடை பொம்மை போல வந்துச் சென்றார் லட்சிமி ராய்.

நான் சினிமா நட்சத்திரங்களை விமர்சிப்பதை விட பெட்னா மீது தான் இந்த விடயத்தில் என்னுடைய விமர்சனத்தை வைக்கிறேன். பாரதிராஜா போன்றவர்களை மேடையேற்றுவது போல இவர்களையும் மேடையேற்றி தமிழா விழித்து எழு, பொங்கி எழு என இவர்கள் பேசுவார்கள் என விழாக் குழுவினர் நினைத்தார்களா என்ன ? விழாவிற்கு ஏதோ வந்தோம், சென்றோம் என இல்லாமல் விழாவில் இதனைச் செய்ய வேண்டும் என்று சினிமா நட்சத்திரங்களுக்கு விழாக் குழு ஏதேனும் பணித்திருக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்களை நாம் தான் இயக்க வேண்டுமே தவிர அவர்களாக இயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. சினிமா நட்சத்திரங்களை அழைப்பது கூட்டத்தை கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி தான் என்றாலும் அவர்களை சில இலட்சங்கள் கொடுத்து அழைத்து வந்தமைக்கான நியாயம் விழாவில் எனக்கு தெரியவில்லை.

**********

பெட்னா விழாவின் உச்சம் என்றால் அது தெருக்கூத்து தான். முதல் நாள் நிகழ்ச்சிகளைச் சார்ந்து எனக்கு எழுந்த ஏமாற்றம், இரண்டாம் நாள் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியால் தான் தணிந்தது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைத் தலைவர் முனைவர் வ. ஆறுமுகம் அவர்களின் தலைக்கோல் தெருக்கூத்து குழுவினர் வழங்கிய ”மதுரை வீரன்” நாடகம் பெட்னாவின் மற்றொரு பரிமாணத்தை கொண்டு வந்தது. தெருக்கூத்து குறித்து கூறும் முன்பு இந்த தெருக்கூத்தினை மேடையேற்றுவதற்காக விழாக் குழுவினர் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை விளக்க வேண்டும். இந்த முயற்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் திரு.சாக்ரடீஸ், திரு.முத்துவேல் செல்லையா, திரு.சங்கரபாண்டி போன்றோர்களே என்பது என்னுடைய புரிதல். அமெரிக்காவிற்கு விசா கிடைப்பது என்பது எளிதானது அல்ல. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து விட்டு திரும்பிச் செல்வார்களா என ஆராய்ந்தே அமெரிக்காவிற்கான விசாவினை சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழங்கும். பலர் அமெரிக்காவில் நுழைந்து பிறகு நிரந்தரமாக சட்டவிரோதமாக தங்கி விடுவதால் இந்த விடயத்தில் அமெரிக்கத் தூதரகம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. இதன்படி அமெரிக்காவிற்கு வரும் ஒவ்வொருவரும் தமிழகத்தில் சொத்துக்கள் வைத்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கில் நிறையப் பணம் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகள் ஊரில் இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இப்படி பலப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இவையெல்லாம் இருந்தால் தான் அமெரிக்கா வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் செல்வார்கள் என்பது அமெரிக்கத் தூதரகத்தின் நிலையாக உள்ளது.

ஆனால் ஒரு சாமானிய கிராமத்து தெருக்கூத்து கலைஞனுக்கு இவையெல்லாம் இருக்காது. இவ்வாறான நிலையில் இவர்களுக்கு விசா வாங்கி அமெரிக்காவிற்கு கொண்டு வர பெட்னா நிறையச் சிரமப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தை அணுகி சிறப்பு அனுமதி பெற்று இந்தக் கலைஞர்களை பெட்னா கொண்டு வந்துள்ளது. இந்தக் கலைஞர்களில் பலருக்கு பாஸ்போர்ட் கூட இல்லை. அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்குவதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பெட்னா செய்துள்ளது. பாஸ்போர்ட் எடுத்துக் கொடுப்பதில் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் பெட்னா ஏன் செய்ய வேண்டும் ? அங்கு தான் பெட்னா என்ற அமைப்பின் மீது நமக்கு மரியாதை ஏற்படுகிறது. வெறும் சினிமாக் கூத்துக்களை மட்டும் நம்பியிருக்கும் தானா (TANA - பெட்னா போன்ற தெலுங்கு சார்ந்த அமைப்பு) போன்று இல்லாமல் தமிழ் மண்ணின் கலைகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவதும், கிராமத்து கலைஞர்களை ஊக்குவிப்பதும் பெட்னாவின் நோக்கமாக உள்ளது. இது பாரட்டத்தக்க, ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்று. பெட்னாவிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

விழா தொடங்கியதில் இருந்து முதன் முறையாக அரங்கம் நிறைந்தது என்றால் அது தெருக்கூத்து நிகழ்ச்சியின் பொழுது தான். மற்ற நிகழ்ச்சிகளின் பொழுது கிட்டதட்ட சிந்துபைரவியில் வரும் சுகாசினி போன்று தான் நான் உணர்ந்தேன். மேடையில் என்னவோ நடக்க, பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால் தெருக்கூத்து அனைவரையும் மேடையை நோக்கி கட்டிப் போட்டு இருந்தது. நட்டுப்புறக் கலைகளுக்கு இருக்கும் சிறப்பே பார்வையாளர்களை வசீகரிப்பது தான். அதனை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது.

அடிமையாக வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை ஒட்டி மதுரை வீரன் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் விடுதலைக்கு போராடும் வீரர்களின் போராட்டம் வெற்றி பெறாமலேயே மடிந்து போவது தமிழர் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஒன்று. இன்றைய சூழ்நிலையை ஒட்டியக் கருத்துக்கள் மதுரை வீரன் கதையில் வந்தது சிறப்பாக இருந்தது. ஆனால் கூத்து ஆரம்பித்த பொழுது இருந்த சுவாரசியம் மதுரை வீரன் - பொம்மியின் காதல் பாடல்களால் தொய்வு அடைய தொடங்கியது. அந்த நேரம் இரவு உணவு நேரமாகவும் இருக்க, கூட்டம் கலைய தொடங்கியது. மதுரை வீரன் - மொம்மி காதல் மிக நீண்ட விவரணையுடன் இருக்க இறுதிக் காட்சிகள் உடனே முடிந்து விட்டது. இது தெருக்கூத்தின் முழுமையான உணர்வை எனக்கு தரவில்லை. இதனை மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

**********

விழாவிற்கு வந்திருந்த அமெரிக்க பேராசிரியர் போயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் இலியன் ஷாண்டர், பேராசிரியர் அடிலே பார்கர், தோழர் தியாகு போன்றோரின் பேச்சுகள் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் போயல் சிறீலங்காவின் பிரச்சனையை தென்னாப்ரிக்காவில் நடந்த இனவெறிப் பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பேசினார். தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக சிறீலங்காவை பணிய வைக்க முடியும். தமிழர்களின் உரிமையை பெற்றிட முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

இலியன் ஷாண்டர் சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அமெரிக்கா முழுவதும் பரப்பி வருபவர். இலியன் ஷாண்டர் ஒரு மருத்துவர். சுனாமியின் பொழுது ஈழத்திற்குச் சென்ற ஷாண்டர் அங்கிருந்த மக்களின் பிரச்சனைகளையும், விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளையும் பார்த்து இந்தப் போராட்டத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அமெரிக்காவில் தொடர்ச்சியாக ஈழம் சார்ந்த முன்னெடுப்புகளை செய்து வரும் ஒருவராக டாக்டர் இலியன் ஷாண்டர் இருக்கிறார். அவரது பேச்சு "அடுத்த வரும் தமிழீழம் - Next Year in Tamil Eelam" என்பதைச் சார்ந்து இருந்தது. அடுத்த வருடம் தமிழீழம் என்பது
தமிழீழ போராட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முழக்கம். இத்தகைய முழக்கத்தையே யூதர்கள் முன்வைத்து இருந்தனர். அதனை Next Year in Jerusalem என அழைப்பார்கள்.

அடிலே பார்கர் ஒரு பேராசிரியராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டதையும், அவர்களை மீட்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முன்வைத்துப் பேசினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் செய்து வரும் பணிகளையும் விவரித்தார். மூன்று அமெரிக்கர்களும் மூன்று வெவ்வேறு கோணங்களில் ஈழப் பிரச்சனையை விவரித்தனர்.

தோழர் தியாகுவின் பேச்சு பலமான சிந்தனையை என்னுள் எழுப்பியது. உணர்ச்சிமயமான பேச்சுக்களை எப்பொழுதுமே நிராகரித்து வருபவர் தோழர் தியாகு. அதனால் அவரது பேச்சுகளில் எப்பொழுதுமே உணர்வுகளை தூண்டும் விடயங்கள் இருக்காது. மாறாக சிந்தனைகளை எழுப்பும் கருத்துக்களே புதைந்து இருக்கும்.

***************

தோழர் தியாகுவின் பேச்சுக்கு நேர் எதிராகத் தான் பிற விருந்தினர்களின் பேச்சுக்கள் இருந்தது. கைதட்டல்களைப் பெறுவது என்பதைத் தவிர பாரதிராஜாவின் பேச்சில் எந்தப் பெரிய சிந்தனையும் வெளிவந்து விடவில்லை. பர்வீன் சுல்தானாவின் அரசியல் பேச்சும் கைத்தட்டல் பெறுவதைக் குறித்தே இருந்தது. பர்வீன் சுல்தானாவின் இலக்கியப் பேச்சு சிறப்பாக இருந்தது. பாரதி, பாரதிதாசனை ஒட்டிய தோழர் தியாகுவின் இலக்கிய உரையும் சிறப்பாக இருந்தது.

திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் பேச்சு சில சர்ச்சைகளை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளதை கவனிக்க முடிந்தது. என்னைப் பொருத்தவரை திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதனைக் குறித்து மற்றொரு தருணத்தில் விரிவாக எழுதுகிறேன். தற்போதைக்கு இதனைச் சார்ந்து நான் டிவிட்டரில் எழுதிய சில டிவிட்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.

  1. திராவிடத்தால் இழந்தோம் என்ற பாரதிராஜாவின் கருத்தில் உடன்பாடு உண்டு. இல்லாத திராவிட அடையாளத்தை முன்னிறுத்தி தமிழ் அடையாளம் சிதைக்கப்பட்டது

  2. கடவுள் மறுப்பு என்ற முழக்கமே தமிழர்களை இன்றைக்கு பார்ப்பனியப் பிடியில் தள்ளி இருக்கிறது; ஆன்மீகம் மனிதனுக்கு தேவையான ஒன்று

  3. பார்ப்பனீய வழியிலான ஆன்மீகம் மறுக்கப்பட்டு தமிழ் வழிலான நமது மரபு சார்ந்த சிறு தெய்வ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆன்மீகம் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதால் இன்றைக்கு ஆன்மீகம் பார்ப்பனிய மயமாகி விட்டது

  4. ஆன்மீகம் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. அதனை நிராகரித்தது வரலாற்று தவறு. பார்ப்பனீயம் தழைத்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமே ஆன்மீகம் தான்; மாற்று ஆன்மீகமே நமக்கு தேவை. முழுமையான நிராகரிப்பு எதையும் சாதித்து விடாது. இன்று வரைக்கும் சாதிக்கவும் இல்லை; சமூக நீதியில் நாம் பெற்ற வெற்றியை பிற துறைகளில் கிடைக்காமைக்கு காரணம் என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும்

  5. வாழ்க்கையின் கடினமான தருணங்களில் மனிதன் ஆன்மீகத்தையே நாடுகிறான்; அது வெகு இயல்பாக நடக்கிறது; தவிரவும் ஆன்மீகம் என்பது ஒரு கொண்டாட்டம்; மனிதனுக்கு கொண்டாட்டம் அவசியமான ஒன்று. 2006ல் தேர்தல் சமயத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் இதனை தொட்டுச் சென்றிருக்கிறேன் - http://blog.tamilsasi.com/2006/03/blog-post_09.html

  6. மேலே உள்ள என்னுடையக் கருத்துக்கள் சாமானிய மனிதனைச் சார்ந்தே நான் முன்வைத்துள்ளேன்.
இவ்வாறான கருத்துக்களை வைத்துள்ள நான் இன்றைய சூழலிலும் ஒரு நாத்திகனே. ஆனால் வெகுஜன மக்களை நாம் இழந்து விட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கிற நாத்திகன். பொது புத்தி என வெகுஜன மக்களின் சிந்தனைகளை ஒதுக்கி விட்டுச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாக வெகுஜன மக்களின் பொதுப் புத்திக்கு காரணமான காரணிகளை ஆராய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்.


மேலும் படிக்க...

ப‌ரிட்டோ, டேக்கோ, ஹாட் ச‌ல்சா, ரேசிச‌ம் (Racism)

உல‌கின் ப‌ல‌ வ‌கையான‌ உண‌வு வ‌கைக‌ளில் மெக்சிக்கன் உண‌விற்கு த‌னி இட‌ம் உண்டு. அதன் சுவையே தனியானது. என‌க்கு மிக‌வும் பிடித்த‌ உண‌வு மெக்சிக்கன் உண‌வு வ‌கைக‌ள் தான். பரிட்டோ, கேஸிடியா, டேக்கோ என அனைத்துமே மிகவும் சுவையான உணவு வகைகள். மெக்சிக்கன் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது பரிட்டோ. நம்மூர் சப்பாத்தி போல இருக்கும் டொர்ட்டியாவினுள் (Tortilla) பீன்ஸ், மெக்சிக்கோ அரிசி(சாதம்), தக்காளி, சல்சா, வறுத்த சிக்கன் துண்டுகள், சீஸ் எல்லாம் போட்டு வேகவைத்து பிறகு அதன் மேல் கொஞ்சாம் சாஸ் ஊற்றி, தொட்டுக் கொள்ள கிரிமுடன் (Sour Cream) தருவார்கள். பரிட்டோவை கொஞ்சம் வெட்டி அதனை கிரிமுடன் கொஞ்சம் தொட்டு... சாப்பிட்டால்... ம்ம்ம்...நவரசம். மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்க‌ளில் சல்சாவுடன் சிப்ஸ் கொடுப்பார்கள், அதனுடன் கொஞ்சம் மெக்சிக்கன் டக்கீலாவையும் சேர்த்துக் கொண்டால்... எங்கோ பறப்பது போல இருக்கும்.

நான் டெக்சாசில் சில மாதங்கள் இருந்த பொழுது அங்கிருந்த பல மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட்டு இருக்கிறேன். டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளின் சுவையே தனியானது. அதைப் போன்ற சுவை நியூஜெர்சி போன்ற இடங்களில் கிடைக்காது. டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளை டெக்‍-மெக்(Tex-Mex) என‌ அழைப்பார்க‌ள். அதாவ‌து டெக்சஸ் உண‌வு முறையும், மெக்சிக்கோ உண‌வு முறையும் கொண்ட‌ க‌ல‌வையான‌ உண‌வு முறை தான் டெக்-மெக் உண‌வு வ‌கைக‌ள்.

டெக்சாசும், மெக்சிக்கோவும் இணைந்து இருப்ப‌து உண‌வு முறையால் ம‌ட்டும் அல்ல‌. க‌லாச்சார‌த்தாலும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் மிக‌ நெருக்க‌மான‌ பிணைப்பு உண்டு. கார‌ண‌ம் டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌வே 1880க‌ளில் இருந்த‌து. டெக்சாஸ் மட்டும் அல்ல. அரிசோனா, கலிபோர்னியா, நெவேடா, நியூமெக்சிக்கோ என பல மாநிலங்கள் மெக்சிக்கோவில் தான் இருந்தன. மெக்சிக்கோவுட‌ன் இருந்த‌ இந்த‌ப் ப‌குதிக‌ளை அமெரிக்கா ஒரு ஒப்ப‌ந்த‌ம் மூல‌ம் கைப்பற்றிக் கொண்ட‌து.

1821ல் மெக்சிக்கோ ஸ்பெயினின் கால‌னி ஆதிக்க‌த்தில் இருந்து விடுத‌லை பெற்ற‌ பொழுது டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு அங்க‌மாக‌வே இருந்த‌து. இத‌னை மெக்சிக்க‌ன் டெக்ச‌ஸ் என்று கூறுவார்க‌ள். 1821 முத‌ல் 1836வ‌ரை டெக்ச‌ஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌து. டெக்ச‌ஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌ பொழுது அமெரிக்காவின் பிற ப‌குதிக‌ளில் இருந்து குடியேறுவ‌து அனும‌திக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ வெள்ளையின மக்கள் டெக்ச‌ஸ் ப‌குதியில் குடியேறின‌ர். இத‌னால் டெக்ச‌ஸில் மெக்சிக்க‌ர்க‌ளை விட‌ வெள்ளைய‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌து. இத்தகைய குடியேற்றத்தை த‌டுக்க‌ அப்பொழுது மெக்சிக்கோவின் அதிப‌ராக‌ இருந்த‌ அனாஸ்டாசியோ புஸ்டாமாண்டே புதிய‌ க‌ட்டுப்பாடுக‌ளையும், வ‌ரி விதிப்புக‌ளையும் கொண்டு வ‌ந்தார். உணவுப் பொருள் உற்பத்தியிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் டெக்சாசில் இருந்த‌ வெள்ளைய‌ர்க‌ளுக்கும், மெக்சிக்கோவுக்கும் இடையே பிர‌ச்ச‌னை மூண்ட‌து. இது போராக‌ உருவெடுத்த‌து. இந்த‌ப் போரில் வெற்றி பெற்ற‌ டெக்சாஸ் ஒரு த‌னி நாடாக‌ 1836ல் தன்னை அறிவித்துக் கொண்டது.

இத‌ன் பிற‌கும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் இடையே போர் ந‌ட‌ந்த‌து. இத‌ன் தொட‌ர்ச்சியாக 1846ல் இருந்து 1848வரை அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான மெக்சிக்கன்‍ - அமெரிக்கன் போர் நடந்தது. இதன் காரணமாக 1845ல் டெக்சாஸ் அமெரிக்காவுட‌ன் இணைந்த‌து.

அமெரிக்காவின் ம‌ற்றொரு மாநில‌ம் அரிசோனா. மெக்சிக்கோ ஸ்பெயினின் கால‌னிய‌ ஆதிக்க‌த்தில் இருந்து விடுத‌லை பெற்ற‌ பொழுது அரிசோனா மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ 1821ல் இருந்த‌து. 1846ல் ந‌ட‌ந்த‌ மெக்சிக்கன்- அமெரிக்க‌ன் போர் கார‌ண‌மாக‌ டெக்ச‌ஸ் விடுத‌லைப் பெற்ற‌ பொழுது அரிசோனாவின் சில‌ ப‌குதிக‌ளும் அமெரிக்காவின் வ‌ச‌ம் வ‌ந்த‌து.

இதையெடுத்து ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு க‌லிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிக்கோ, நெவேடா போன்ற மாநிலங்கள் உள்ளிட்ட மிகப் பெரும் ப‌குதிக‌ளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்க‌ மெக்சிக்கோ ஒப்புக் கொண்ட‌து. அரிசோனாவும் அமெரிக்கா வசம் வந்தது. ஆனால் 1912ல் தான் அரிசோனா அமெரிக்காவின் 48வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது. இது சுருக்கமான வ‌ர‌லாறு.

இன்றைய சூழ்நிலைக்கு வருவோம். இன்றைக்கு அமெரிக்காவின் ஒரு மாநிலமாக உள்ள அரிசோனா, ஒரு ச‌ட்ட‌ம் இய‌ற்றி இருக்கிறது. ‍‍‍அரிசோனாவின் குடியேற்ற‌ச் ச‌ட்ட‌ம். இந்தச் சட்டம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளவர்களை தடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாக அரிசோனாவின் ஆளும் குடியரசுக் கட்சி கூறுகிறது. இந்தச் சட்டத்தின் படி போலீசார் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் என ”சந்தேகிக்கும்” நபர்களை சோதனை செய்யலாம். சோதனை செய்பவர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருக்கிறோம் என்பதை நிருபிக்க தங்களுடைய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள், க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள், முறைப்படி அமெரிக்காவில் விசா பெற்று உள்ளே வந்தவர்கள் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமையோ, விசா போன்றவையோ இருக்கும். போலீசார் சந்தேகிக்கும் நபர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாகவே இருக்கிறோம் என்பதை நிருபிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் இது வரையில் அப்படியான சூழ்நிலை இல்லை.

தனி மனித உரிமைகள் ”அதிகம்” மதிக்கப்படும் அமெரிக்காவில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாள அட்டை கேட்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் பிரச்சனையாகவுமே பார்க்கப்படுகிறது. அது தவிர சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அடையாள அட்டை கேட்கலாம் என்பதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. போலீசார் யாரைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள் ? அமெரிக்காவில் அதிகமாக சட்டவிரோதமாக இருப்பது லாட்டினோ க்கள் தான் . அதே நேரத்தில் அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்ற லாட்டினோக்களும் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் சிறுபான்மையினராக அமெரிக்காவில் உள்ளனர்.மெக்சிக்கோ, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் லாட்டினோ அல்லது ஹிஸ்பேனிக்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களே அதிகமாக சட்டவிரோதமாக இருப்பதால் போலீசார் தங்களையே சந்தேகிப்பர் என லாட்டினோக்கள் கூறுகிறார்கள். இந்தச் சட்டம் இனரீதியான பிரச்சனையையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது - Racial Profiling.


ஒபாமா அரிசோனா மாநிலத்தின் இந்தச் சட்டத்தைக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தச் சட்டத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். வ‌ல‌துசாரிக‌ளும், இட‌துசாரிக‌ளும் முட்டிக் கொள்ளும் ம‌ற்றொரு பிர‌ச்ச‌னையாக‌ இது உருவெடுத்து உள்ள‌து. ஒபாமா வெற்றி பெற்ற‌தில் இருந்தே எதிர்க்க‌ட்சியான‌ குடிய‌ர‌சுக் க‌ட்சி தீவிர‌மான‌ வ‌ல‌துசாரி நிலைப்பாட்டினை எடுக்க‌த் தொட‌ங்கியுள்ள‌தாக‌ ஒரு ப‌ர‌வ‌லான‌ குற்ற‌ச்சாட்டு உண்டு. இத்த‌கைய‌ வ‌ல‌துசாரி போக்கினையே இந்த‌ச் ச‌ட்ட‌ம் வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ இட‌துசாரிக‌ள் குற்ற‌ம்சாட்டுகின்ற‌ன‌ர். அதுவும் அரிசோனா மாநிலம் வ‌ல‌துசாரி போக்கினை மிக‌வும் தீவிர‌மாக‌ பின்ப‌ற்றும் ஒரு மாநிலம் ஆகும். ரெட் ஸ்டேட் (Red State) என்று சொல்லப்படும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலம். டெக்சஸ், அரிசோனா போன்றவை குடியரசுக் கட்சியினரின் கோட்டை. கன்சர்வேட்டிவ்கள் வலுவாக உள்ள மாநிலம்.

அரிசோனாவின் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 1990களில் க‌றுப்ப‌ர்க‌ளின் உரிமைக்காக‌ போராடிய‌ மார்ட்டின் லூத‌ர் கிங் நினைவாக‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ தின‌ம் அர‌சு விடுமுறையாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌தை ஏற்றுக் கொள்ள‌ அரிசோனா ம‌றுத்த‌து. இதையெடுத்து அரிசோனா மாநில‌த்தை புறக்க‌ணிக்கும் அழைப்புக‌ள் விடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அரிசோனாவை புறக்கணிக்கும் அடையாளமாக சூப்ப‌ர் ப‌வுல் என‌ப்ப‌டும் அமெரிக்க‌ன் புட்பால் (கால்பந்து அல்ல) போட்டிக‌ள் அரிசோனாவில் இருந்து மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகே அரிசோனா பணிந்தது. த‌ற்பொழுதும் புறக்கணிக்கும் அழைப்புக‌ள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. மெக்சிக்கோ த‌ன்னுடைய‌ குடிம‌க்க‌ளை அரிசோனா செல்ல‌ வேண்டாம் என‌ எச்ச‌ரித்து உள்ள‌து. இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஃபாக்ஸ் தொலைக்க‌ட்சி இந்த‌ச் ச‌ட்ட‌ம் அமெரிக்காவிற்கு ந‌ன்மைக‌ளை கொடுக்கிற‌து, போதைப் பொருள்க‌ளை த‌டுக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது போன்ற வாத‌ங்களை முன்வைக்கிறது‌. MSNBC தொலைக்காட்சியைப் பார்த்தால் இந்தச்‌ ச‌ட்ட‌ம் அமெரிக்காவை நாசி ஜெர்மனியின் கால‌த்திற்க்கு கொண்டு செல்வதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை இந்தச் சட்டம் பறிப்பதாகவும், லாட்டினோக்களை குறிவைக்கும் Racial Profilingஐ இந்தச் சட்டம் கொண்டு வரும் எனவும் கூறுகிறது. மெசிக்கோ மக்கள் அமெரிக்காவிற்கு தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக, அதாவது 1880களில் இருந்து வேலை தேடி வந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தாங்கள் ஏன் குறிவைக்கப்படுகிறோம் என கேள்வி எழுப்புகிறார்கள். விவாதம் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

************************

மெக்சிக்கோ-அமெரிக்கா இடையேயான வரலாற்றினை நாம் கூர்ந்து கவனித்தால் இந்தப் பகுதிகளுக்குள் வெள்ளையர்களின் குடியேற்றமும், லாட்டினோக்களின் குடியேற்றமும் தொடர்ச்சியாக இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. மெக்சிக்கோ, டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா, அமெரிக்கா இடையேயான எல்லைகள் பல்வேறு காலக்கட்டங்களில் மாறியிருக்கின்றன. அவ்வாறு எல்லைகள் மாறினாலும் குடியேற்றங்கள் எப்பொழுதுமே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எல்லைகள் என்பன நாட்டின் அளுமை சார்ந்த ஒரு விடயமாக இருந்துள்ளதே தவிர அது ம‌க்க‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தை எப்பொழுதும் க‌ட்டுப்ப‌டுத்திய‌தில்லை. வெள்ளைய‌ர்க‌ள் வ‌ட‌க்கில் இருந்து தெற்கு நோக்கி ந‌க‌ர்ந்த‌து போல‌, லாட்டினோக்க‌ள் தெற்கில் இருந்து வ‌ட‌க்கு நோக்கி ந‌க‌ர்ந்துள்ளார்க‌ள். இன்றைக்கும் ந‌க‌ர்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். அதுவும் அமெரிக்காவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சியும், மெக்சிக்கோவின் வ‌றுமையும் லாட்டினோக்க‌ளை மிக‌ அதிக‌மாக‌ அமெரிக்கா நோக்கி ந‌க‌ர‌ வைத்துள்ள‌து. அமெரிக்காவும் லாட்டினோக்களை தன்னுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொண்டது. தனக்கு தேவைப்படும் நேரத்தில் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை அமெரிக்க மைய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கண்டுகொள்ளாது. ஆனால் தனக்கு தேவையில்லாத பொழுது மெக்சிக்கோவில் இருந்து வரும் குடியேற்றங்களை தடுக்கச் சட்டங்களை கொண்டு வரும்.

*****************************

சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சனை அமெரிக்காவில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அமெரிக்காவில் சுமார் 12 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பான்மையானானோர், அதாவது 57% மெக்சிக்கோவில் இருந்து குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளே ஆவார்க‌ள். பிற‌ லத்தீன் அமெரிக்கா நாடுக‌ளில் இருந்து குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ இருக்கின்ற‌ன‌ர். இவ‌ர்கள் அனைவ‌ருமே லாட்டினோக்க‌ள் அல்ல‌து ஹிஸ்பேனிக்ஸ் என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை த‌விர‌ ஆசிய‌ நாடுக‌ளில் இருந்து ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் இந்தியா, சீனா பிலிப்பைன்ஸ் போன்ற‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். லாட்டினோக்க‌ளில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறுப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் அமெரிக்கா‍- மெக்சிக்கோ எல்லை வ‌ழியாக‌வே அமெரிக்காவில் நுழைகின்ற‌ன‌ர். இந்தியா உள்ளிட்ட‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் முத‌லில் ச‌ட்ட‌ரீதியாக‌ அமெரிக்காவில் நுழைந்து பிற‌கு த‌ங்க‌ளின் ப‌ய‌ண‌ கால‌க்க‌ட்ட‌ம் முடிந்த‌ பிற‌கும் அமெரிக்காவில் தொட‌ர்ந்து இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள ப‌ல‌ குஜ‌ராத்தி விய‌பார‌ மைய‌ங்க‌ளில் ப‌ணிப‌ரியும் தொழிலாள‌ர்க‌ள் இவ்வாறு ச‌ட்ட‌விரோத‌மாகவே‌ குஜராத்தி வியபாரிகளால் கொண்டு வரப்படுகிறார்கள்.

மெக்சிக்கோவில் இருந்து வரும் பெரும்பாலான மக்கள் எல்லையோர மாநிலங்களான‌ டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் தான் உள்ளனர். இப்படிச் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த சம்பளத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக இருப்பதை பலரும் பயன்படுத்திச் சுரண்டுகின்றனர். நம்மூரில் சுரண்டப்படும் கூலித் தொழிலாளிகளின் நிலையும் இவர்களின் நிலையும் ஒன்று தான். அமெரிக்காவில் கழிப்பறையை சுத்தும் செய்யும் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் மெக்சிக்கன்ஸ் தான். கட்டடத் தொழில் தொடங்கி வீட்டு வேலை, வீட்டின் முன் இருக்கும் புற்களை வெட்டுவது வரை இதில் பணிபுரியும் எல்லோரும் மெக்சிக்ன்ஸ் தான். வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா மெக்சிக்கன்ஸ் தான். வீட்டை மாற்ற வேண்டுமா, ஒரு மணி நேரத்திற்கு 8டாலர் கொடுத்தாலே போதும், ஆள் கிடைப்பார்கள். நான் அமெரிக்காவில் ஐந்து வருடங்களாக இருக்கிறேன். இத்தனை வருடங்களில் மெக்சிக்கன்ஸ் அல்லாத எவரும் கழிப்பறையை சுத்தம் செய்து நான் பார்த்ததில்லை. ஹீஸ்டனில் ஒரு இடம் உள்ளது. பெயர் மறந்து விட்டது. நமக்கு எந்த வேலை தேவைப்பட்டாலும் அந்த இடத்திற்கு செல்லலாம். காரை விட்டு இறங்கினால் ஏராளமான மெக்சிக்கன்ஸ் கிடைப்பார்கள். சகாய விலைக்கு வீட்டிற்கு அழைத்து வரலாம். வீட்டை சுத்தம் செய்வது, வேறு வீட்டிற்கு மாற்றுவது போன்ற வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கொடுத்த காசை விட அதிகமாக அதற்காக வேலை செய்வார்கள். இவ்வாறு அடி மட்டத்தில் மிகவும் சுரண்டப்படும் தொழிலாளிகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். மெக்சிக்கன்ஸ் இல்லாவிட்டால் அமெரிக்காவில் இதனை செய்ய வேறு யாரும் ஆள் இல்லை என்று கூட ஒரு வாதம் உண்டு.

இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் வளருகிறார்கள் என இந்திய ஊடகங்கள் மார்தட்டிக் கொள்ளும், ஆனால் இந்த தொழில் அதிபர்கள் சுரண்டிக் கொழிப்பது மெக்சிக்கன்சை தான். பட்டேல் கடைகளில் சரக்கு எடுப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யும் தொழிலாளர்களில் கொஞ்சம் குஜாராத்தில் இருந்து முதலாளிகள் இறக்குமதி செய்த இந்தியத் தொழிலாளர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். இந்திய ரெஸ்டாரண்ட்களில் தந்தூரி சிக்கன் செய்து கொண்டிப்பதில் இருந்து மேசை துடைப்பது வரை மெக்சிக்கன்ஸ் தான். அவ்வளவு ஏன், நியூஜெர்சியில் திருப்பதியின் கிளையாக உள்ள பிரிட்ஜ்வாட்டர் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஏழுமலையான் கோயில் கேண்டினில் தோசை சுட்டுக் கொண்டிருப்பதும் ஒரு மெக்சிக்கன் தொழிலாளி தான். கோயிலை சுத்தம் செய்வதும் மெக்சிக்கன்ஸ் தான். ஏழுமலையானும் தொழிலாளர்களை சுரண்டியே பிரிட்ஜ்வாட்டரில் வாழுகிறார்.

இப்படி எல்லா தொழில் நிறுவனங்களிலும் அடிமட்டத் தொழிலாளியாக இருப்பது மெக்சிக்கன்ஸ் தான். காரணம் குறைந்த சம்பளம், நிறைய லாபம். சட்டவிரோதமாக இந்தத் தொழிலாளிகள் அமெரிக்காவில் இருப்பதால் முதலாளிகள் நிர்ணயம் செய்யும் சம்பளத்தை இவர்கள் வாங்கிக் கொள்வார்கள். கேள்வி கேட்பதில்லை. இவர்களை undocumented workers என அழைப்பார்கள். இந்த வழக்கம் (சுரண்டல்) தொன்று தொட்டு அமெரிக்காவில் இருந்து வருகிறது. இன்று சட்டவிரோத குடியேற்றம் என அலறும் அமெரிக்க வலதுசாரிகளும், ஊடகங்களும் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை என்றைக்கோ தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் எப்பொழுதுமே அமெரிக்க அரசாங்கமோ, இன்று சட்டத்தை இயற்றும் அரிசோனாவோ செய்ததில்லை. காரணம் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தால் தங்களுக்கு பெரும் நன்மை இருந்ததாக அமெரிக்க நிறுவனங்களும், பொதுமக்களும், அமெரிக்க அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கருதின. எனவே இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை அதிகம் கண்டுகொண்டதில்லை. மறைமுகமாக ஊக்குவித்தன.

அமெரிக்காவுக்கு மெக்சிக்கோவில் இருந்து வேலை செய்ய தொழிலாளர்களை கொண்டு வரும் வழக்கம் 1880களில் இருந்து வழக்கில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள விவசாய பண்ணைகளில் வேலை செய்யவே மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் முதலில் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு அமெரிக்காவில் கட்டப்பட்ட ரயில் பாதைகளுக்காக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மெக்சிக்கோவில் இருந்து கொண்டு வரப்பட்டனர். மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே மிகவும் குறைவான கூலியே. 1880களில் சுமார் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு கொண்டு வரப்பட்டனர். விவசாய நிலங்கள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள் அமைப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த‌க் கால‌க்க‌ட்ட‌ங்க‌ளில் ர‌யில்வே ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ளில் 60%க்கும் மேற்ப்ப‌ட்டோர் மெக்சிக்கோவில் இருந்தே கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இதைத் தொடர்ந்து முதலாம் உலகப் போரின் பொழுதும் பெருமளவில் தொழிலாளர்கள் மெக்சிக்கோவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். போர் சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு பெருமளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்ட பொழுது மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இதனை அப்போதைய அரசாங்கமும் கண்டு கொள்ள வில்லை. போர் முடிந்த பிறகு எழுந்த மிகப் பெரிய பொருளாதார தேக்கத்தின் பொழுது (The Great Depression of the 1930s)மெக்சிக்கோ தொழிலாளர்களாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக 1929ல் 1 மில்லியனுக்கும் அதிகமான‌ மெக்சிக்கோ தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை Mexican Repatriation என அழைப்பார்கள்.

1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்த பொழுது போர் காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டது. 1929-1930ல் பெருமளவில் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களை வெளியேற்றிய அமெரிக்கா, இப்பொழுது மறுபடியும் மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத்தொடங்கியது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பெரும் சுரண்டலுக்கே உள்ளானர்கள். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மெக்சிக்கோ அரசாங்கம் மெக்சிக்கோ தொழிலாளர்களின் உரிமைகளை காக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய செல்லும் மெக்சிக்கோ தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களை அழைத்துச் செல்ல வகை செய்தல், மெக்சிக்கோ அரசாங்கம் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் கூலியை நிர்ணயம் செய்தல், பணி நேரம், பணி இடம் போன்றவற்றை மெக்சிக்கோவிலேயே நிர்ணயம் செய்தப் பிறகே அமெரிக்கா செல்லுதல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதாவது சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுத்து சட்டரீதியிலாக தொழிலாளர்களை அனுப்புவதாக இது அமைந்தது. இதனை பிராசிரோ திட்டம் (Bracero Program) என அழைப்பார்கள். பிராசிரோ திட்ட‌ம் 1942 முத‌ல் 1960கள் வ‌ரை அம‌லில் இருந்த‌து. ஆனால் இந்த‌ திட்ட‌ம் குறைந்த‌ப‌ட்ச‌ ஊதிய‌ம், ப‌ணி நேர‌ம், ப‌ணி இட‌ம், த‌ங்கும் இட‌ம் போன்ற‌வ‌ற்றை நிர்ண‌ய‌ம் செய்ததால் அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்கும், நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், ப‌ண்ணைக‌ளுக்கும் அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே அவர்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க, செலவைக் குறைக்க மறுபடியும் சட்டவிரோதமாக மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத் தொடங்கினர். இதன் காரணமாக சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்தது. இந்த திட்டமும் முடிவுக்கு வந்தது.

*************************

இவ்வாறு சட்டவிரோத குடியேற்றத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வந்ததை பார்க்க முடிகிறது. அவ்வாறு இருந்த அமெரிக்காவின் ஒரு மாநிலம், இன்றைக்கு ஏன் இத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது ?

இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு, பொருளாதார தேக்கம் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதால் போதைப் பொருளை தடுத்து விட முடியாது. அதற்கு வேறு விதமான நடவடிக்கையே தேவைப்படுகிறது. எல்லா தொழிலாளிகளையும் குறிவைக்கும் இந்தச் சட்டம் எதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தப் பலத் தகவல்களை ரேச்சல் மேடோ தன்னுடைய MSNBC தொலைக் காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி இருந்தார். லாட்டினோக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் அவர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களே. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொருவரும் அமெரிக்க குடிமக்களே. அதன் காரணமாக அமெரிக்காவில் லாட்டினோக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அமெரிக்காவில் எதிர்காலத்தில் வெள்ளையர்களின் அதிக்கம், அதாவது ஐரோப்பிய வெள்ளை அமெரிக்கர்களின் ஆதிக்கம் குறையும் என வலதுசாரிகள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை வலதுசாரி மாநிலமான அரிசோனா கொண்டு வந்துள்ளதாக ரேச்சல் மேடோ குற்றம்சாட்டினார். இருக்கலாம். இந்தக் காரணமும் இருக்கலாம். அல்லது ஒபாமாவை எதிர்க்கும் ஒரு வகை உத்தியாகவும் இருக்கலாம்.

தற்போதைய எதிர்பார்ப்பு இந்தச் சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா என்பதே. மக்களின் அடிப்படை உரிமை மீறும் சட்டமாக இருப்பதால் நிச்சயம் இந்தச் சட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு எதிர்பார்ப்பு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டரீதியாக்க ஓபாமா முன்வைத்த குடியேற்ற சீர்திருத்த மசோதா. இது சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை தடுக்கும். தன்னுடைய இந்தப் பதவிக்காலத்திலேயே இதனை கொண்டு வரப்போவதாக ஒபாமா கூறியிருந்தார். அரிசோனாவின் இந்த குடியேற்றச் சட்டம் அதனை துரிதமாக்கும் என்பதே பலரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.


மேலும் படிக்க...

காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒபாமா முன்வைத்த காப்பீடுத் திட்டத்தை விட சிறந்தத் திட்டமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பொங்க கூறுகிறார். அவர் அதற்கு கூறும் காரணம் காப்பீடுத் தொகையை தமிழகத்தில் அரசாங்கமே கொடுத்து விடுகிறது. அமெரிக்காவில் தனிநபர்களும், நிறுவனங்களும் கொடுக்கின்றன. மக்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் தமிழகத்தில் காப்பீடு திட்டம் நிறைவேறுவதால் இது அமெரிக்காவை விட சிறந்தத் திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களின் வாதம்.

ஆனால் சில அடிப்படை உண்மைகள் இங்கே தெளிவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் இந்த இலவச காப்பீத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு தனியார் காப்பீடு நிறுவனங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனக் கூறலாம். தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.

இது தவிர அமெரிக்காவை விட தமிழகத்தின் திட்டம் சிறந்தது என மு.க.ஸ்டாலின் கூறுவது சரியானது அல்ல. கலைஞர் காப்பீடு திட்டத்தின் தற்போதைய ஓட்டுச் சாதனை எதிர்காலத்தில் வேதனையாக மாறலாம். அதுவே அமெரிக்கா நமக்கு கற்றுத் தரும் பாடம் ஆகும். அமெரிக்க சுகாதார நலம், காப்பீடு நிறுவனங்களின் அசுரத்தனமானப் பிடியில் உள்ளது. பல அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக முயன்றும் காப்பீடு நிறுவனங்களின் பிடியை சுகாதார நலத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியவில்லை. சுகாதார நலத்தில் உள்ள காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே (To Regulate Insurance Companies) ஒபாமா சுகாதார நல மசோதாவைக் கொண்டு வந்தார். தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசாங்கமே நடத்தும் காப்பீடு திட்டத்தையும் (Public Option) ஒபாமா முன்வைத்தார். ஆனால் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. வலதுசாரிகளும், மிதவாதிகளும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் நடத்தும் காப்பீடு நிறுவனம் அழித்து விடும் எனக்கூறி எதிர்த்தனர். இறுதியில் இத்தகைய அரசாங்கம் சார்ந்த காப்பீடு இல்லாமல் தான் ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறியது.
ஆனால் தமிழகத்திலோ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறையில் காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நுழைக்கிறது கருணாநிதி அரசாங்கம். ஒபாமா செய்ய முனைவதற்கு நேர் எதிரானது கலைஞர் காப்பீடு திட்டம். அதாவது அமெரிக்காவில் எந்தச் சீர்கேடுகளை ஒபாமா சீர்திருத்த முனைகிறாரோ அதே சீர்கேட்டினை தமிழகத்தில் நுழைத்துக் கொண்டிருகிறது கருணாநிதி அரசாங்கம்.

தமிழகத்தின் மொத்தமுள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர் காப்பீடு பெறும் பொழுது மருத்துவச் செலவுகள் படிப்படியாக ஏறத்தொடங்கும். அதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. காப்பீடு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள், லாபம் போன்றவை புதிதாக மருத்துவச் செலவுகளில் புகுத்தப்படுகிறது. இவை தவிர காப்பீடு பாலிசிகள் மூலம் செல்லும் பொழுது மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்கி கொள்ள தேவையற்ற சோதனைகளை பரிந்துரைக்கின்றனர். காப்பீடு நிறுவனம் கொடுக்கப் போகிறது என நுகர்வோரும் இந்தக் கூடுதல் மருத்துவச் செலவுகள் குறித்து கண்டுகொள்வதில்லை. இத்தகைய அதிக மருத்துவச் செலவுகளை ஆரம்பத்தில் காப்பீடு பாலிசிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களும், மருத்துவமனைகளும் செய்தாலும் எதிர்காலத்தில் இது பலருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளது. பணம் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வரும் தமிழகத்தில் இத்தகைய வாய்ப்பினை மறுக்க முடியாது. அதே போல காப்பீடு நிறுவனங்களும் மருத்துவமனைகளை காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களையே சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கும். பாலிசிகள் மூலம் அதிக வருமானத்தை பெறும் வாய்ப்புகளை தனியார் மருத்துவமனைகள் கைவிடப்போவதில்லை. இவ்வாறு மருத்துவச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்கம் வழங்கும் காப்பீடுகள் தவிர தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சலுகையாக காப்பீடுகளை வழங்குகின்றன. தமிழகத்தில் காப்பீடு வைத்திருப்போரின் தொகை அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். தற்பொழுது காப்பீடு தேவையில்லை என நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களும் எதிர்காலத்தில் காப்பீடு எடுக்க வேண்டிய நிலை நோக்கி தள்ளப்படுவார்கள். அதைத் தான் காப்பீடு நிறுவனங்கள் செய்ய நினைக்கின்றன. அதன் சோதனை பிசினஸ் மாடல் (Business Model) தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் செயல்படுத்தப்படும் இந்த இலவச காப்பீடு திட்டங்களோ என கருத இடம் இருக்கிறது.

இது போகிறப் போக்கில் வரும் சந்தேகம் அல்ல. அமெரிக்காவில் காப்பீடு நிறுவனங்கள் செயல்படும் விதங்களை உற்று நோக்கும் பொழுது இவ்வாறு கருத இடம் இருக்கிறது. நான் இங்கே தமிழகத்தையும், அமெரிக்காவை ஒப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அமெரிக்க சூழலும், தமிழக சூழலும் முற்றிலும் வேறானவை. அதே நேரத்தில் உலகெங்கிலும் அமெரிக்க பாணியிலான பொருளாதாரம், அமெரிக்க பாணியிலான தாக்கங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அத்தகைய தாக்கம் காப்பீடில் நுழையும் பொழுது ஆபத்தாகவே முடியும். தமிழகத்தில் காப்பீடு நிறுவனங்களும் அது சார்ந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்படும் விதம் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரை அமெரிக்கா சுகாதாரம் குறித்தே ஆகும். அமெரிக்காவில் சமீப நாட்களில் மிக அதிகமாக அலசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் - ஓபாமாவின் சுகாதார நல மசோதா. இந்த அமெரிக்க அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியப் பாடம் நிறைய இருப்பதாக நான் நினைக்கிறேன். தனியார் காப்பீடு நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா குறித்த இந்தக் கட்டுரை வழங்கும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா - பிளவு பட்டு நிற்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்று வரலாறு படைத்த பராக் ஒபாமா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு வரலாறு படைத்தார். அமெரிக்க வரலாற்றில் பல குடியரசு தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போன சுகாதார நல மசோதா - Health Care Reform கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவடிவம் பெற்றது. அமெரிக்காவின் காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

இந்த வெற்றியை ஒபாமாவும், ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் (Democratic Party), லிபரல்களும் கொண்டாடி வரும் சூழலில், எதிர்க்கட்சியினரான குடியரசுக் கட்சியினரும், கன்சர்வேட்டிவ்களும் ஓபாமா அமெரிக்காவை மோசமான பாதையில் அதாவது சோவியத் சோசலிச பாணியில் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் (குறிப்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி) இன்னும் ஒரு படி மேலே சென்று ஒபாமா, ஹவுஸ் சபாநாயகர் (House Speaker) நான்சி பிலோசி, செண்ட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்களது தீவிர இடதுசாரி நிலைப்பாடினை அமெரிக்கா மீது திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் மூவரையும் மாவோயிஸ்ட்கள் என்று கூட ஃபாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்தது. ஒபாமா ஒன்றும் பெரிய புரட்சி செய்து விட வில்லை. சோசலிசம் என்று புகார் சொல்லப்படும் ஒபாமாவின் இந்தப் புதிய மசோதா முதலாளித்துவ காப்பீடு நிறுவனங்களுக்கே இன்னும் அதிகளவில் நுகர்வோர்களை பெற்று தருகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது சுமார் 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை காப்பீடு நிறுவனங்கள் பெறும்.

உண்மை இவ்வாறு இருக்க வலதுசாரிகளின் கூக்குரல் காரணமாக அமெரிக்கா இன்று பிளவு பட்டு நிற்கிறது. இடதுசாரிகள் ஒரு புறமும், வலதுசாரிகள் ஒரு புறமும் என அமெரிக்கா பிளவு பட நடுவில் சிக்கியுள்ள பலருக்கு உண்மை என்ன ? பொய்யான பரப்புரை என்ன என புரியவில்லை. கன்சர்வேட்டிவ் அமைப்புகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இந்த மசோதா நிறைவேறும் தினத்தில் இதனை எதிர்த்து கேபிடல் ஹில்லில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நீக்ரோக்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளனர். நீக்ரோ எனக் கூறுவது அமெரிக்காவில் நிறவெறி (Racism) என்பதாகவே கருதப்படுகிறது. ஒபாமாவும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே எதிர்க்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இவை தவிர வலதுசாரிகள் மேலும் சில வன்முறை சம்பவங்களை அடுத்த சில தினங்களில் அரங்கேற்றினர். 10க்கும் மேற்பட்ட ஆளும் ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு (பாரளுமன்ற உறுப்பினர்கள்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிலரது வீடுகள் தாக்கப்பட்டன. துப்பாக்கிகளை தூக்கப் போவதாக சில வலதுசாரி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன (அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை - இது குறித்த என்னுடையப் பதிவு துப்பாக்கிகள் மீதான காதல்). அடுத்து வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அக் கட்சி அறிவித்துள்ளது. பதிலுக்கு ஒபாமாவும் முடிந்தால் செய்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். ஒபாவிற்கு வீட்டோ அதிகாரம் (Veto Power) உள்ளதால் குடியரசு கட்சியினர் கோஷம் வெற்று கோஷமாகவே இருக்கப் போகிறது. ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்க குடியரசுக் கட்சிக்கு 67 செண்ட் உறுப்பினர்களும், 290 ஹவுஸ் உறுப்பினர்களும் தேவை. தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இதற்குச் சாத்தியமில்லை.

இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து அமெரிக்காவிலும், வாசிங்டன் அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய ஓபாமாவிற்கு தற்போதைய அமெரிக்க சூழல் ஒரு பின்னடைவே ஆகும். ஆனாலும் ஒபாமா தன்னால் முடிந்த அளவுக்கு குடியரசுக் கட்சியை அரவணைத்து செல்லவே முயன்றார். ஆனால் ஒபாமாவின் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடியரசுக் கட்சின் முன் ஒபாமாவின் முயற்சிகள் வெற்றிப் பெற வில்லை. ஓபாமா இன்று தன்னுடைய ஜனநாயக் கட்சியை மட்டுமே சார்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஏன் இத்தனைக் கூச்சல் ? ஆர்ப்பாட்டம் ?

ஆட்சியில் அமர்ந்த உடன் முந்தைய குடியரத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் போல இல்லாமல் ஒபாமா உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய முக்கிய திட்டமாக இந்தச் சுகாதார நலத் திட்டத்தை ஒபாமா அறிவித்தார். ஏற்கனவே பல ஜனநாயக் கட்சி குடியரசுத் தலைவர்கள் இதனை செய்ய முயன்று தோல்வியே அடைந்தனர். பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் இதனை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் அதீத கூக்குரல், எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒபாமாவும் அத்தகைய எதிர்ப்பையே எதிர்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒபாமாவின் அனுபவமின்மையும், தடுமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த மசோதா நிறைவேறப்போவதில்லை என்பதான சூழ்நிலையே இருந்தது. ஒபாமா தன் கட்சியின் தீவிர இடதுசாரிகள், மிதவாதிகள், எதிர்க்கட்சியினர், வலதுசாரிகள் இடையே சிக்கித் தவித்தார். இந்த மசோதாவில் தோல்வி அடைந்தால் ஒபாமாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். இந்த தோல்வியில் இருந்து மீள ஒபாமா மிகவும் கடினப்பட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறி இருக்கிறது. இதற்கு காரணம் ஒபாமாவின் தொடர்ச்சியான முயற்சியும், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசியின் தலைமைப் பண்புகளும் தான். ஆனால் இந்த மசோதா நிறைவேறியதால் வலதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அப்படி என்ன தான் உள்ளது இந்த மசோதாவில் ? ஏன் அதற்கு இத்தனை எதிர்ப்பு ?

முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்காவில் நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் முதலாளித்துவத்தின் பிடி இருக்கும். மிக எளிதாக இருக்கும் நம் நாட்டின் எத்தனையோ அம்சங்கள் இங்கு இவ்வளவு குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எனக்கு தோன்றும். அப்படி சிக்கலாக இருக்கும் பலவற்றில் முக்கியமானது சுகாதாரம். உதாரணமாக நம் ஊரில் நமக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவமனை நிர்ணையிக்கும் கட்டணத்தைச் செலுத்துகிறோம். மருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்தகத்திற்கு செல்கிறோம், மருத்துவர் எழுதித்தரும் மருந்துக்கு காசு கொடுத்து வாங்குகிறோம். அவ்வளவு தான்.

ஆனால் அமெரிக்காவில் அது அத்தனை சுலபம் அல்ல. மருத்துவச் செலவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பலர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக கடனாளியாகி உள்ளனர். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் சுகாதார காப்பீடு (Health Insurance) எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதாவது என்றைக்காவது நமக்கு நேர சாத்தியம் உள்ள உடல்நலக் கேடுகளுக்காக முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் கட்டணம் - Premium செலுத்த வேண்டும்.

இத்தகைய காப்பீடுகளை எடுப்பதற்கு நாம் தனியாக காப்பீடுச் சந்தையில் சென்று எடுக்கலாம். நாம் பணியாற்றும் நிறுவனம் மூலமாகவும் காப்பீடுகளை எடுக்கலாம். இதில் பலரும் அதிகம் பயன்படுத்துவது தங்களின் நிறுவனங்களின் மூலமான காப்பீடுகளையே (Employer Based Insurance). அதாவது ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகையாக இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் ஒரு சிறு தொகையை செலுத்த, நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு தொகையை செலுத்தி இந்தக் காப்பீடுகள் வழங்கப்படும் (Group Policy). நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும், பாலிசிகளுக்கும் ஏற்றவாறு வேறுபடும். நான் 250 டாலர் தொடங்கி 400 டாலர் வரை ஒவ்வொரு மாதம் செலுத்தி இருக்கிறேன். அதாவது கணவன், மனைவி இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நிறுவனம் சலுகையாக வழங்கினாலும் கூட நாம் சுமார் 200 டாலர் முதல் 400 டாலர் வரை நம் கையில் இருந்து செலுத்த வேண்டும். வீட்டு வாடகை, வீட்டுச் செலவுக்கு அடுத்து மிக அதிகளவு கட்டணம் இந்தக் காப்பீட்டுக் கட்டணம் ஆகும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து நிறுவனங்களுமே இதனை வழங்குவதில்லை. பலச் சிறிய நிறுவனங்கள் இவ்வாறான காப்பீடுகளை வழங்குவதில்லை. காரணம் அது மிக அதிக அளவிலான நிதிச்சுமையை அந் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றன. நான் கடந்த வருடம் என் இந்திய நிறுவனத்தை விட்டு விலகி தனியாக ஒரு கன்சல்டண்டாக வேலைப் பார்த்த பொழுது ஒரு நிறுவனம் சார்ந்த காப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் சார்ந்தக் காப்பீடு (Employer Based Insurance) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.

ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்து அதன் மூலம் காப்பீடு பெரும் பொழுது கிடைக்கும் பலச் சலுகைகள் காப்பீட்டுச் சந்தைக்கு சென்று நாம் தனியாக பெறும் பொழுது கிடைக்காது. முதல் பிரச்சனை மிக அதிக விலை. நான் ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்த பொழுது காப்பீட்டுத் தொகையாக 400-500டாலர் செலுத்தி இருந்தால் காப்பீடுச் சந்தையில் அதன் விலை 1500 டாலர் என்றளவில் இருக்கும். அதாவது நம் சம்பளத்தில் மிகப் பெரிய தொகையை இதற்குச் செலுத்த வேண்டும்.

எனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் மிக அடிப்படையான ஒரு பாலிசியை தேர்தெடுத்தேன். அந்த அடிப்படையான காப்பீட்டின் தொகை மாதம் ஒன்றுக்கு சுமார் 850-900 டாலர்கள். அடிப்படையான காப்பீடு என்றால் மிகவும் அடிப்படையானது (Very Basic). ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளை இந்தக் காப்பீடுகள் முலம் பெற முடியாது.

இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டிற்கான மிக அதிகளவிலான கட்டணம் - ப்ரீமியம். இத்தகைய அதிகளவிலான தொகையை பலரால் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு காப்பீடு இல்லை என்பதான சூழ்நிலை உள்ளது. இது தவிர நல்ல உடல்நலத்துடன் இருக்கும் பலர் காப்பீடு எடுப்பதில்லை. இவ்வாறு சுமார் 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.

காப்பீடு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை ?

அமெரிக்காவில் மருத்துவக் கட்டணங்கள் மிகவும் அதிகம். இதன் காரணமாக காப்பீடு இல்லாதவர்கள் தங்கள் மருத்துவத்திற்கான சிகிச்சைகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கடன்சுமை காரணமாக திவாலாகும் தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலேயே திவாலாகின்றனர்.

அப்படியெனில் அமெரிக்காவில் அரசாங்கம் எந்த சுகாதார நலனையும் வழங்குவதில்லையா ?

அரசாங்கம் சில சுகாதார நலன்களை வழங்குகிறது. ஆனால் அது அனைவரையும் உள்ளடக்குவதில்லை. அமெரிக்க அரசாங்கம் Medicare, Medicaid போன்ற சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. Medicare 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை வழங்குகிறது. Medicaid வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், வருமானம் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் என சில பிரிவினரை உள்ளடக்கி உள்ளது. ஆனால் காப்பீடு இல்லாத 45 மில்லியன் மக்கள் இந்தப் பிரிவில் வருவதில்லை. அதாவது அரசாங்கம் நிர்ணயிக்கும் வருமானத்தை விட அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் சுகாதார காப்பீடு பெறும் அளவிற்கான வருமானம் இவர்களுக்கு இல்லை.

காப்பீட்டுத் தொகை இவ்வளவு அதிகமாக செலுத்தும் பொழுது, நமக்கு அனைத்து சுகாதார நலன்களும் கிடைக்கிறதா என்றால்...இல்லை என்பதே உண்மை.

காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை விழுங்கும் முதலைகள். பண முதலைகள். தனியார் நிறுவனங்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் என இந்தியாவில் இடதுசாரிகள் பேசுவதை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கேட்டிருந்தால், அமெரிக்காவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். நம்மிடம் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பெறும் காப்பீடு நிறுவனங்கள் நம்முடைய அத்தனை மருத்துவ தேவையையும் நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திடீரென்று கேன்சர் என்ற பெரிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வரை நலமுடன் இருந்த பொழுது அவரிடம் பணத்தை ப்ரீயமாக பெற்ற காப்பீடு நிறுவனம் அவரை எந்தக் கேள்வியும் இல்லாமல் காப்பீட்டில் இருந்து நீக்க முடியும் (சில மாநிலங்களில் இவ்வாறு செய்ய முடியாது. உதாரணமாக நான் இருக்கும் நியூஜெர்சியில் யாருக்கும் காப்பீடு மறுக்க முடியாது. ஆனால் நியூஜெர்சியில் டெக்சஸ் மாநிலத்துடன் ஒப்பிடும் பொழுது கட்டணம் அதிகம்).

இது தவிர இன்னும் பல தில்லுமுல்லுக்களை காப்பீடு நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவருக்கு காப்பீடு எடுக்கும் முன்பு அல்சர் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் தான் மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அதனை ஈடுசெய்ய காப்பீடு எடுக்க வேண்டும். ஆனால் காப்பீடு எடுத்தால் ப்ரீமீயத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அல்சர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் Pre-existing conditions not covered. அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. புதியதாக ஏதேனும் நோய் வந்தால் கிடைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காப்பீடு மொத்தமாக நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இவையெல்லாம் ஏதோ செய்திகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து எழுதப்படுவதில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் நேர்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. வேலையில் இருக்கும் வரை காப்பீடு இருக்கும். வேலையை விட்டு விலகினால் காப்பீடு இருக்காது (COBRA என்ற ஒன்று உண்டு. அது தனிக்கதை. அதிலும் பலச் சிக்கல்கள்). நாம் தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோமே காப்பீடு எடுக்காமல் சில மாதங்கள் இருக்கலாம். காப்பீடுத் தொகையை மிச்சப்படுத்தலாம் என ஒரு முறை காப்பீடு எடுக்கவில்லை. எப்பொழுதுமே இத்தகைய நேரத்தில் தான் உடல்நலக் கேடுகள் அமெரிக்காவில் வரும். கடந்த பல வருடங்களாக காப்பீடு செலுத்திய பொழுது ஒரு ஜூரம் என்று கூட மருத்துவரிடம் நான் சென்றது கிடையாது. மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமே மருத்துவரிடம் சென்று இருக்கிறேன். ஆனால் காப்பீடு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் சரியாக உடல்நலக் கேடுகள் ஏற்பட்டன. மருத்துவரிடமும் செல்ல முடியாது. என்ன செய்வது என புரியாமல் தவித்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக ஒரு மருத்துவரிடன் இருந்து மருந்து பெற்றேன்.


இவையெல்லாம் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே. இன்னும் பல உள்ளன. இவை தவிர பல் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Dental Insurance). கண் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Vision Insurance) என ஒரு பெரிய பட்டியல் உண்டு.

***************************

இவ்வாறான பலப் பிரச்சனைகளை சரி செய்ய ஒபாமா முன்வைத்த திட்டம் தான் சுகாதார நல சீர்திருத்த மசோதா - Healthcare Reform. சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு ஒபாமா இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்ததில் இருந்து தொடர்ச்சியான பிரச்சனைகள். ஒபாமா அமெரிக்காவின் சுகாதார நலத்தை அரசாங்கத்தின் கைகளுக்குள் கொண்டு வர முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபாமாவும் இடதுசாரிகளும் அரசாங்கம் வழங்கும் சுகாதார காப்பீடுகளை (Public Option) முன்வைத்தனர். இதன் மூலமாகவே தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ப்ரீமியத்தை குறைக்க முடியும் என்பது ஒபாமாவின் வாதம். ஆனால் இதனை வலதுசாரிகள் எதிர்த்தனர். இது தனியார் நிறுவனங்களை அழித்து விடும் என்பது அவர்களின் வாதம். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் மீது கன்சர்வேட்டிவ்களுக்கு அப்படியொரு காதல். இந்த மசோதா அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் காப்பீடு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுக்கும் தங்களுடைய மருத்துவருக்கும் இடையில் அரசாங்கம் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பது மற்றொரு வாதம். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே மிதவாதிகள், தீவிர இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் என விவாதம் ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒபாமா தன்னுடைய திட்டம் இது தான் என்ற தீர்மானமான ஒரு வடிவத்தை காங்கிரசிடம் அளிக்கவே இல்லை. ஒரு மேலோட்டமான வரையறையை மட்டும் செய்து விட்டு மசோதாவை உருவாக்கும் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டார். இதுவே பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து. ஒபாமா இவ்வாறு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் - பில் க்ளிண்டன் தோல்வியில் கற்றப் பாடம். தற்பொழுது ஒபாமாவின் முக்கிய ஆலோசகர் ராகம் இமானுவல். இவர் பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் தங்களுடைய திட்டமாக ஒரு சுகாதார மசோதாவை உருவாக்கி அதனை நிறைவேற்றுமாறு காங்கிரசை பணித்தனர். காங்கிரஸ் அதனை அப்படியே நிராகரித்தது. எனவே ஒபாமா அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நோக்கமாக ஒரு வரையறையை மட்டும் உருவாக்கி விட்டு முழு மசோதாவையும் காங்கிரசே செய்யுமாறு ஒபாமா பணித்தார். இதன் மூலம் பலரது யோசனைகளையும் உள்ளடக்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து பிரிவினரது ஆதரவையும் பெறலாம் என்பது ஒபாமாவின் திட்டம். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இயலாத காரியம் என ஒபாமா உணர்ந்தனர். விவாதங்களும், எதிர் விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

பல தடைகளுக்குப் பிறகு இறுதியாக கடந்த வாரம் நிறைவேறிய ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்.

- இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது (2014ல்) அனைவரும் கட்டாயமாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். தற்பொழுது இளைஞர்களும், நல்ல அரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடு எடுப்பதில்லை. காரணம் மருத்துவ தேவையே இல்லாத பொழுது காப்பீடு தேவையில்லை என்பதே. அதனால் மருத்துவத் தேவை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடுகளை நாடும் பொழுது காப்பீடுத் தொகை அதிகரிக்கிறது. மாறாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடுகளை எடுக்கும் பொழுது அதில் பெறும் வருவாயைக் கொண்டு உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யலாம். இதனால் ப்ரீமியம் அதிகரிக்கப்படாமல் ஒரே சீராக வைத்திருக்க முடியும். ஆனால் இதனை பலர் எதிர்க்கின்றனர். காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்குவது தாங்கள் உயிர் வாழ்வதற்கே ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் இருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை.

- காப்பீடு நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற போக்கிற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் - Children with Pre-existing conditions are not covered by Insurance. தற்பொழுது ஆரோக்கியமில்லாமல் உள்ள குழந்தைகளின் மருத்துவச்செலவை காப்பீடு மூலம் பெற முடியாது. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக பெற்றோர்கள் திண்டாடும் நிலைமை உள்ளது. இந்தச் சட்டம் இதனை தடை செய்கிறது. இது இந்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளின் மூலம் இந்த அமலாக்கத்தை 2014 வரை கடத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.

- 26 வயது வரை தங்களின் பெற்றோர்களின் காப்பீடுகளிலேயே இருந்து கொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்பொழுது 19வயதுக்கு மேல் தனி காப்பீடுகளை எடுக்க வேண்டும். பெற்றோர்களின் காப்பீடுகளில் இருக்க முடியாது. இது பலப் பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இந்த வருடம் முதல் அமலுக்கு வரும் இந்தப் பிரிவு பல பெற்றோர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- நோய் கண்டறியப்பட்டவுடன் காப்பீடுகளில் இருந்து நீக்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இது தவிர நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியான ப்ரீமியம், நோய் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியான ப்ரீமியம் போன்றவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது

- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு (Pre-existing Conditions) தற்பொழுது காப்பீடு வழங்கப்படுவதில்லை. அதனையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது. இது 2014ல் அமலுக்கு வருகிறது.

- இவை தவிர அமெரிக்காவின் பற்றாக்குறையை இந்த மருத்துவ நல மசோதா குறைக்கும் என கூறப்படுகிறது.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா இவ்வாறு பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் பெருவாரியான அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பே இருந்து வருகிறது.

அரசாங்கமே நடத்தும் காப்பீடு இல்லாத இந்த திட்டத்தால் பெரிய அளவு நன்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மாறாக இந்த திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கே அதிக நன்மையை கொடுக்கும். அதாவது 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இந்தக் காப்பீடு நிறுவங்கள் பெறும். காப்பீடு நிறைவேறிய வாரத்தில் இந்தக் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். காப்பீடுகளின் ப்ரீமியத்தை இந்தத் திட்டம் எந்த வகையிலும் குறைக்காது என்பது என்னுடய நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்த மசோதா ஒரு முதல் படி தான் என்றும் Public Option போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் ஒரு வாதம் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வரும் நவம்பர் தேர்தலில் ஆளும் ஜனநாயக் கட்சி பின்னடைவைச் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இது அடுத்தச் சில வருடங்களில் சாத்தியமற்றதே.

இந்த மசோதாவிற்கு எதிராக பல வாதங்கள் கூறப்பட்டாலும் காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மிக முக்கியமான ஒரு மசோதா என்றளவில் ஒபாமாவின் இந்த மசோதா ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. மேலும் படிக்க...