வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

தலாய்லாமாவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் என்ன தொடர்பு ?

அமெரிக்கா, ஒசாமா பின்லேடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எவ்வாறு அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்களோ அது போல தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சீன மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே சீனா தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.

இது என் கருத்து அல்ல. தலாய்லாமா என்கிற அமைதியை விரும்புகிற தலைவருடன் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை நிச்சயம் என்னால் ஒப்பிட்டு பார்க்க கூட முடியவில்லை.

இவ்வாறான கருத்தினை முன்வைத்திருப்பது இந்தியாவின் பாரம்பரிய மிக்க "தேசிய" பத்திரிக்கையான (India's National Newspaper) ஹிந்து. ஹிந்துவில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை இவ்வாறு கூறுகிறது.

What those urging China to negotiate with the Dalai Lama fail to recognise is the fact that Beijing’s main constituency is not the international community but its own domestic public. For Beijing to appear ‘soft’ on the Dalai Lama would be as politically unpalatable domestically asit would be in the United States were Washington to decide to engage in dialogue with Osama bin Laden.

ஈழப் பிரச்சனையில் எவ்வாறு சிங்கள மக்களின் சார்பாக இருந்து ஹிந்து, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக பேசுகிறதோ அது போல இந்தக் கட்டுரை சீன மக்களின் பார்வை என்பதாக ஒன்றினை "முன்னிறுத்தி" திபெத் விடுதலைப் போராட்டம் குறித்த சீனாவின் பார்வையை இந்திய வாசகர்களிடம் விளக்க/திணிக்க முனைகிறது. ஈழப் பிரச்சனை குறித்து நிருபமா சுப்ரமணியன் எழுதுவது போன்ற ஒரு தொனியில் இந்தக் கட்டுரையை எழுதுகிறார் பல்லவி ஐயர்.

உண்மையில் இந்தக் கட்டுரைகளை யார் எழுதுகிறார்கள்/யார் மேற்பார்வையில் எழுதப்படுகிறது போன்ற கேள்விகள் எழுந்தாலும் இந்தக் கேள்விகளை ஹிந்துவின் பாரம்பரிய வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.

ஹிந்துவின் கட்டுரை - How China sees the Dalai Lama and his cause மேலும் படிக்க...

திபெத் - இந்தியா, அகிம்சை ஜல்லி

அகிம்சை தத்துவத்தை இந்த உலகத்திற்கு முதன் முதலில் கொடுத்த நாடு இந்தியா. இந்தியாவில் தோன்றிய சமண மதமும், புத்த மதமும் வன்முறையற்ற வாழ்க்கையையும் அனைத்து உயிர்களும் சமமான நிலையில் வாழும் சூழலையும் போதித்தன. அகிம்சை குறித்த மத ரீதியிலான தத்துவங்களை புத்தர் தொடங்கி "வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய" ராமலிங்க வள்ளலார் வரை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பலர் பரப்பி வந்துள்ளனர்.

மத ரீதியிலான தத்துவங்களைக் கடந்து அகிம்சையை அரசியல் போராட்டத்திற்கும் புகுத்த முடியும் என்பதை நிருபித்து காண்பித்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் போராட்டம், சமுக சீர்கேடுகளை நோக்கிய ஒரு சாமானிய மனிதனின் சமூக பொருளாதார நிலை குறித்தான போராட்டமாகவே ஆரம்ப காலங்களில் தொடங்கியது. இந்திய தேசிய விடுதலை, இந்திய தேசியம் போன்றவற்றில் மகாத்மா காந்தி ஆரம்ப காலங்களில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. வெள்ளையர்களின் கைகளில் இருக்கும் ஆட்சி இந்திய மேல்தட்டு வர்க்கத்தின் கைகளுக்கு மாறுவதால் மட்டுமே சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தி விட முடியாது என காந்தி நம்பினார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறை, குறிப்பாக ஜாலியன்வாலாபாக் நிகழ்வுகள் போன்றவை காந்தியின் கருத்துகளில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவின் ஆட்சி இந்திய மக்களின் கைகளுக்கு மாறினால் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் உள்ளது போல மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்காது என காந்தி நம்பினார். அதனால் தான் இந்திய தேசிய விடுதலை நோக்கி அவர் நகர்ந்தார். காந்தியின் அகிம்சை போராட்டத்தால் மட்டும் இந்தியாவின் விடுதலை அமைந்து விடவில்லை. என்றாலும் அகிம்சை என்ற இந்தியாவின் மத ரீதியிலான தத்துவம் ஒரு அரசியல் போராட்டமாகவும் மாறியதற்கு காந்தி ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது சமூக மாற்றங்களை வலியுறுத்திய மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு மாறிய சூழலையே. இந்தியாவை இந்தியனே ஆளும் பொழுது பிரிட்டிஷாரின் ஆட்சியில் உள்ளது போன்ற அடக்குமுறை சூழல் இருக்காது என காந்தி நம்பினார். அதனால் அவர் முழுமையான இந்திய விடுதலை நோக்கி நகர்ந்தார்.

இந்திய விடுதலைக்கு காந்தி எத்தகைய சூழலை முக்கியமாக கருதினாரோ அதே வகையான சூழல் இன்று இந்தியாவை சுற்றி இருக்கும் பல நாடுகளில் நிலவி வருகிறது. திபெத்தில் நிகழும் சீன அடக்குமுறை, இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் சிங்கள அடக்குமுறை, மியன்மாரில் இராணுவ ஆட்சியில் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் என இந்தியாவைச் சுற்றிலும் ஒரு அடக்குமுறை சூழல் நிலவி வருகிறது.

காந்தி எவ்வாறு இந்தியாவை இந்தியர்கள் ஆளும் பொழுது அடக்குமுறை இருக்காது என நம்பினாரோ அதே வகையான நம்பிக்கையை தான் இலங்கையில் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் அமைந்தால், தமிழர்கள் சிங்கள அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்காது. இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் நேராது என தமிழர்கள் நம்புகின்றனர். இன்றைக்கு இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றனவா, இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் காந்திய நாடான இந்தியா, காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக தமிழர்களை சிறீலங்கா தலைமையில் இருக்கவே வற்புறுத்துகிறது - United Sri Lanka.

தமிழர்கள் மீதான தங்களின் இத்தகைய அணுகுமுறைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத பாசிச இயக்கம். எனவே தமிழ் ஈழத்தை இந்தியா ஆதரிக்க முடியாது என இந்திய தேசியவாதிகள் கூறுவது வழக்கம். விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டால் இந்தியா நிச்சயம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும். தமிழ் ஈழத்திற்கு விடுதலை பெற்று கொடுக்கும் என நம்புவோம்.

எனவே இலங்கையை மறந்து விட்டு திபெத், மியன்மார் போன்ற நாடுகளை மட்டும் கவனிப்போம்.

மகாத்மா காந்திக்குப் பிறகு அகிம்சை வழியில் தங்களின் சமூக விடுதலைக்கு பல நாடுகளில் தலைவர்கள் முனைந்தனர். அமெரிக்காவின் கறுப்பர் இனத்தின் சமுக விடுதலையை முன்னெடுத்த மார்ட்டின் லூதர் கிங், தென்னாப்ரிக்காவில் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் போராடியது சமூக மாற்றங்களுக்குத் தான். தேசிய விடுதலைக்கு அல்ல. ஆனால் காந்தியை பின்பற்றி வன்முறை இல்லாமல் புத்தரின் பாதையில் அகிம்சை வழியில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் ஒருவர் மட்டுமே - அவர் திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா.

நிறுவனப்படுத்தப்பட்ட புத்த மதத்தின் அதிகாரம் பல நாடுகளில் உண்டு. அப்படி குறிப்பிடத்தக்க நாடுகளில் இலங்கை, திபெத் போன்றவை முக்கியமான உதாரணங்கள். ஆனால் இந்த புத்த மதத்தின் அதிகார மையங்கள் செயல்படும் விதம் மாறுபட்டது. சிங்கள-பொளத்த அதிகார மையம் என்பது புத்த மதத்தின் அத்தனை நியதிகளையும் கால்களில் போட்டு மிதித்து புத்தரின் அகிம்சை தத்துவங்களுக்கு முற்றிலும் எதிராக போருக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவு அளித்து சிங்கள அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.




திபெத் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் புத்த அதிகார மையம் தான். தலாய்லாமா என்னும் பதவி திபெத் மக்களின் தலைமை பீடமாகவும் இருந்து வருகிறது. திபெத்தை சீனாவின் கம்யூனிச சர்வாதிகார அமைப்பு 1950ல் கைப்பற்றி திபெத்தை சீனாவின் ஒரு அங்கமாக மாற்றி விட்டது. 1959ல் சீனாவின் ஆட்சிக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பு அடக்கப்பட்டது. அங்கிருந்து தப்பித்து இந்தியா வருகிறார் தலாய்லாமா. இந்தியாவின் தர்மசாலா நகரத்தில் திபெத் அரசாங்கத்தை நிறுவி தொடர்ச்சியாக திபெத் விடுதலைக்கு போராடி வருகிறார். தன்னுடைய போராட்டம் அகிம்சை வழியில் தான் இருக்கும் என்பதையும் தன்னுடைய போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதையும் தலாய்லாமா தெளிவுபடுத்தி இருக்கிறார். வன்முறையற்ற அவரது அணுகுமுறைக்கு அங்கீகாரமாக அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவரது முக்கிய கோரிக்கையான திபெத் விடுதலைக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர் தற்பொழுது முன்வைப்பதெல்லாம் திபெத்திற்கு அதிக அதிகாரங்கள் மட்டுமே. முழுமையான விடுதலை அல்ல. கடந்த சில வாரங்களாக திபெத் முழுவதும் மக்கள் மறுபடியும் தங்கள் விடுதலையை முன்வைத்தும் சீனாவின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். 100க்கு அதிகமானோர் சீனாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என பி.பி.சி போன்ற நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அகிம்சை தத்துவத்தை உலகெங்கும் பரப்பும் இந்தியா நியாயமாக இந்தப் போராட்டங்களுக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்கியிருக்க வேண்டும். இந்தியா தான் அகிம்சை நாடாயிற்றே. ஆனால் என்ன நடந்தது ? சீனாவின் அடக்குமுறையை கண்ணை மூடி பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல் திபெத் மக்கள் இந்தியாவில் நடத்திய அகிம்சை போராட்டத்தையும் காவல்துறை மூலமாக நசுக்கியது.

ஆனால் அகிம்சை தத்துவத்தை காலில் போட்டு மிதித்து போர் முழுக்கம் செய்யும் சிங்கள-பொளத்த இனவாத அரசுக்கு இந்தியா தன்னுடைய ஆதரவையும், ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு மியன்மார் நாட்டிலே அந் நாட்டின் இராணுவ அரசுக்கு எதிராக புத்த பிக்குகள் போராட்டம் செய்தனர். இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்தை முன்னிறுத்தியும் எழுந்த இந்தப் பிரச்சனையில் புத்த பிக்குகள் தலைமையிலான போராட்டத்தை மியன்மார் இராணுவ ஆட்சி சர்வாதிகரமாக அடக்கியது. நியாயமாக அகிம்சை மற்றும் ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இராணுவ ஆட்சிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கியது. பாக்கிஸ்தானில் மட்டும் இந்தியா இராணுவ ஆட்சியிக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யும் என்பதை கவனிக்க வேண்டும்.

***********

ஆரம்ப காலங்களில் திபெத் போராட்டத்தை இந்தியா ஆதரித்தது. அன்று சீனாவின் எதிரி, இந்தியாவின் நண்பன். எனவே திபெத் போராட்டத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால் இன்று சீனா நண்பன். எனவே திபெத் குறித்து எந்தக் கவலையும் இல்லை.

இதே நிலை தான் 1980களில் இலங்கையில் நிலவியது. அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஜெயவர்த்தனேவை எதிர்க்க, தமிழர்களை இந்தியா ஆதரித்தது. தமிழர்களுக்கு ஆயுதங்களை அளித்தது. பிறகு சிங்கள நட்பு கிடைத்தவுடன் தமிழனை போட்டு மிதித்தது. இன்று வரை தமிழனுக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.

***********

ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் தேசிய நாளிதழான பாரம்பரிய மிக்க ஹிந்து வெளியிடும் பொய்ச் செய்திகள் குறித்து தமிழர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கின்றனர். தற்பொழுது காட்சிகள் மாறி இருக்கின்றன. தமிழர்கள் போலவே, இப்பொழுது திபெத் மக்களும், இந்திய வலதுசாரி தேசியவாதிகளும் ஹிந்துவிற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் ஹிந்து ராமிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கும் மற்றொரு முகமூடி இந்த விஷயத்தில் உள்ளது - அது ராம் ஒரு கம்யூனிஸ்ட் என்னும் முகமூடி. "ராம் ஒரு நக்சலைட், அதனால் தான் திபெத் விடுதலையை எதிர்க்கிறார்" என்று இந்திய வலதுசாரிகள் குற்றம்சாட்டி வருவது தான் தற்போதைய உச்சகட்ட நகைச்சுவை :))

திபெத் போராட்டத்திற்கு இந்திய வலதுசாரிகள் பெருமளவில் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்தியாவின் இந்துத்துவ ஆதரவாளர்கள் திபெத் விடுதலையின் ஆதரவாளர்களாக உள்ளனர். காரணம் இராணுவ வல்லரசான இந்தியாவிற்கு சீனா ஒரு அச்சுறுத்தல். இந்திய இராணுவ வலிமையை விரும்பும் இந்திய வலதுசாரி தேசியவாதிகள் மற்றொரு இராணுவ, பொருளாதார வல்லரசான சீனாவை எதிர்த்து தானே ஆக வேண்டும் :)) மேலும் படிக்க...