வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

சேது சமுத்திர திட்டம் : Frequently Asked Questions

சேது சமுத்திர திட்டம் குறித்து நான் வாசித்த வரையிலேயே எனக்கு தோன்றிய கேள்விகள், கிடைத்த பதில்கள் இவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். இந்தப் பிரச்சனை குறித்து எனக்கு புரிந்த அளவிலான FAQ தான் இந்தக் கட்டுரை. சேது சமுத்திரம் குறித்த உணர்ச்சி மயமான சூழ்நிலை அடங்கி இருக்கும் இந்த நேரத்திலே, இது குறித்த பொருளாதார மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலைகளை மட்டும் விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.

சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன ?

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே நேரடியான கப்பல் போக்குவரத்தினை இந்த திட்டம் ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது. தற்பொழுது இலங்கையைச் சுற்றி இந்தியாவின் கிழக்கு/மேற்கு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கப்பல்கள் சேது சமுத்திரத்தினை பயன்படுத்தும். இந்த திட்டத்தால் சுமாராக 424 nautical miles (780 Km) பயண தூரமும் 30 மணி நேர பயண நேரமும் குறையும்.

இந்த திட்டத்தின் பயன் என்ன ?

முதலில் பொருளாதார அடிப்படையை மட்டும் பார்ப்போம்...

Transhipment என்பது உலக வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களாகட்டும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களாகட்டும் அது நேரடியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில்லை. Mainline Cargo Vessels என்று சொல்லப்படுகிற பெரிய கப்பல்கள் மூலமாக இந்த பொருட்கள் சில பெரிய துறைமுகங்கள் - Transshipment Port வழியாகவே நடைபெறும்.

உலகின் மிக முக்கியமான Transshipment துறைமுகங்களில் கொழும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கொழும்பு துறைமுகத்தில் Mainline Cargo Vessels என்று சொல்லப்படுகிற பெரிய கப்பல்கள் நுழைவதற்கான வசதி உள்ளது. ஆனால் பல இந்திய துறைமுகங்களில் அந்த வசதி இல்லை. அதனால் இந்தியாவிற்கு வரும் பொருட்கள் அனைத்தும் கொழும்பிற்கு வந்தடையும். கொழும்பு துறைமுகத்தில் இருந்து பல சிறிய கப்பல்கள் மூலமாக இந்த பொருட்கள் இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு வந்து சேரும். அது போல இந்திய துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக கொழும்பு வந்தடையும். அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளுக்கு சென்றடையும்.

இவ்வாறு இந்தியாவின் வர்த்தகத்தில் சுமார் 70% கொழும்பு துறைமுகம் வழியாகவே நடைபெறுகிறது. எஞ்சிய 30% சிங்கப்பூர் மற்றும் பிற துறைமுகங்கள் முலமாக நடைபெறுகிறது. கொழும்பு துறைமுகத்தின் மொத்த வருவாயில் 40% இந்தியா மூலமாக கிடைக்கிறது.

ஏன் இந்தியாவிடம் Transshipment துறைமுகம் இல்லை ?

இந்தியாவின் துறைமுகங்கள் எதுவுமே உலக கடல் போக்குவரத்து பாதையில் இல்லை. கொழும்பு, சிங்கப்பூர் போன்றவை கடல் போக்குவரத்து பாதையில் இருக்கின்றன. இது தவிர இந்திய துறைமுகங்கள் ஆழம் குறைவானவை. இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இல்லாதது முக்கிய காரணம். இந் நிலையிலே தான் இந்தியாவின் பொருட்களை கையாள கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களையே நம்பி உள்ள நிலை உள்ளது. இந்தியாவில் ஒரு துறைமுகம் கூட Transshipment துறைமுகமாக இல்லாதது பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு உகந்தது அல்ல என உணர்ந்த மைய அரசு இதனை மாற்ற சில முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் எடுக்க தொடங்கியுள்ளது. கொச்சிக்கு அருகே இருக்கும் வல்லர்படம் Transshipment துறைமுகமாக மாற்றப்படும் என கேரள அரசியல்வாதிகளை திருப்தி படுத்த மைய அரசு கூறியுள்ளது

தூத்துக்குடி துறைமுகம் கொழும்பு போல வளருமா ?

தூத்துக்குடி துறைமுகத்தில் கூட இன்னும் பல உள்கட்டமைப்பு வேலைகளை செய்தால் தான் Transhipment port போல மாற்றம் செய்ய முடியும். தற்போதைய நிலையில் இது சாத்தியமாகி விடாது. அது தவிர தூத்துக்குடி துறைமுகம் கடல் பாதையில் இல்லை என்பது தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பின்னடைவே.

ஆனால் கொழும்பு துறைமுகம் அளவுக்கு சர்வதேச தரத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற மைய அரசு நடவடிக்கை மேற்கொண்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய துறைமுகமாக மாற்றம் பெறும்

சேது சமுத்திர திட்டம் இந் நிலையை மாற்றுமா ?

மாற்றும் என்கிறது இந்திய அரசு

எப்படி ?

தூத்துக்குடி துறைமுகம் மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச துறைமுகம். தற்பொழுது அதிவேகமாக வளர்ந்து வரும் துறைமுகங்களில் தூத்துக்குடியும் ஒன்று.

இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக கொழும்புவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து Mainline Cargo Vessels மூலமாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்கு போக்குவரத்து சேது சமுத்திரம் நடைமுறை படுத்தபட்டால் நேரடியாக தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளை சென்றடையும்.

உதாரணமாக கல்கத்தாவில் இருந்து கொழும்புவிற்கு கப்பல் செல்வதற்கு பதிலாக சேது சமுத்திரம் மூலமாக நேரடியாக தூத்துக்குடி வந்தடையும். அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளுக்கு சரக்கு சென்றடையும்.

இது தவிர இந்தியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையே நேரடியான பாதையும் கிடைக்கிறது. இலங்கையை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எத்தனை கப்பல்கள் இதனை பயன்படுத்த கூடும் என அரசு தெரிவிக்கிறது ?

முதல் ஆண்டில் (2008ம் ஆண்டு) சுமாராக 3000 கப்பல்கள் இதனை பயன்படுத்தும். அடுத்த 15 ஆண்டுகளில் இது அதிகரித்து சுமார் 7000 கப்பல்கள் இதனை பயன்படுத்தும் என அரசு கருதுகிறது.

இந்த திட்டத்தால் என்ன நன்மை ?

கொழும்பு உள்ளிட்ட வெளிநாட்டு துறைமுகங்களை நம்பி இருப்பதால் வருடத்திற்கு சுமார் 1000 கோடி Transhipment வகையிலே அந்நியச்செலவாணி இழப்பு இந்தியாவிற்கு ஏற்படுகிறது. சேது சமுத்திர திட்டம் வெற்றியடைந்து தூத்துக்குடி துறைமுகம் Transhipment துறைமுகமாக மாறினால் இந்த 1000 கோடி அந்நியச்செலவாணி இழப்பு பெருமளவில் தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது

தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் பொருட்களை கையாள துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கொழும்பு துறைமுகம் போல தூத்துக்குடியும் முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெறும். இதனால் தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் பெருகும். பொருளாதார ரீதியாக தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். புதிய ஏற்றுமதி சார்ந்த தொழில் வாய்ப்புகள் தென்மாவட்டங்களில் ஏற்படும்.

கேட்க நன்றாக இருக்கிறது. நடைமுறையில் சாத்தியம் ஆகுமா ?

உள்கட்டமைப்பு துறையில் தெளிவான முடிவுகளை எடுக்காமல் அரசியல் ரீதியாக ஒவ்வொரு மாநிலத்தையும் திருப்திபடுத்த மைய அரசு சில முடிவுகளை அறிவித்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவின் கொச்சி துறைமுகம் அருகே உள்ள வல்லர்படம் துறைமுகத்தை Transshipment துறைமுகமாக மாற்றப் போவதாக அரசு கூறியது. தூத்துக்குடியா ? வல்லர்படமா என்ற குழப்பம் உள்ளது.

இது தவிர சேது சமுத்திரம் திட்டத்தின் வெற்றி, தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றுவது இவை தான் இது நடைமுறைச் சாத்தியமா, வெறும் கனவு மட்டுமா என்பதை தீர்மானிக்கும்.

நல்ல திட்டமாக தானே தெரிகிறது ? பின் ஏன் இதனை பொருளாதார ரீதியாக எதிர்க்கிறார்கள் ?

கப்பல் போக்குவரத்து சேது சமுத்திரம் கடல்பாதையில் நடைபெற்றால் தான் மேலே கூறியவை அனைத்தும் நடைமுறைச் சாத்தியமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. சில கடல் போக்குவரத்து வல்லுனர்கள் பெரிய கப்பல்கள் இந்த கடல் பாதையை பயன்படுத்த வாய்ப்பில்லை என நினைக்கிறார்கள்.

தவிரவும் சேது சமுத்திர திட்டம் சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. கப்பல்கள் சேது சமுத்திர கடல்பாதையை பயன்படுத்தி, அதற்கு அவர்கள் செலுத்தும் வரி மூலமாக தான் இந்த தொகையை திரும்பப் பெற முடியும். ஆனால் கப்பல்கள் இதனை பயன்படுத்தா விட்டால் லாபம் கிடைக்காது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் திரும்ப கிடைக்காது.

ஏன் கப்பல்கள் இதனை பயன்படுத்தாது என இவர்கள் நினைக்கிறார்கள் ?

இதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறன

சேது சமுத்திர கடல்பாதையின் ஆழம் 12மீட்டம் மட்டுமே. இந்த கடல் பாதையில் 30,000 டன் கொண்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.

சேது சமுத்திரம் கடல் பாதையில் வேகமாக செல்ல முடியாது. மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் பொழுது இலங்கையைச் சுற்றிச்செல்ல தேவைப்படும் நேரத்திற்கும், இந்த கடல்பாதையில் செல்லும் நேரத்திற்கு பெரிய வித்யாசம் இருக்காது. 30 மணி நேரம் குறையாது. வேண்டுமானால் சில மணி நேரங்கள் மட்டும் குறையும் என இவர்கள் கூறுகிறார்கள்

சேது சமுத்திர கடல் பாதையை பயன்படுத்த சுங்க வரி செலுத்த வேண்டும். சேது சமுத்திர கடல்பாதையில் பயணிக்க அதற்கென உள்ள ஸ்பெஷல் மாலுமிகள் தேவைப்படுவார்கள். அதற்கும் தனியாக கட்டணம் உண்டு. இந்த கட்டணம் இலங்கையை சுற்றி செல்ல தேவைப்படும் எரிபொருளை விட அதிகமாக இருக்கலாம். எனவே கப்பல் நிறுவனங்கள் இலங்கையைச் சுற்றி செல்லவே விரும்புவார்கள்


இதற்கு அரசு கூறும் பதில் என்ன ?

அரசு இது வரை எந்த பதிலும் கூறவில்லை. அரசு இது வரை இந்த கடல்பாதையை பயன்படுத்தும் கட்டணமாக கூட எதையும் நிர்ணயம் செய்யவில்லை.


இவை குறித்த உண்மை நிலை தான் என்ன ?

உண்மை நிலை என எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

சில விடயங்கள் மட்டும் உண்மை. தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு மைய அரசு இணங்கியுள்ளது. இந்த திட்டத்தை அரசு சரியாக ஆராயவில்லை.

இந்திய ஊடகங்கள் ஒரே கோணத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றன. இவற்றில் இந்த கடல்வல்லுனர்களின் கருத்துக்களும் அடக்கம்

உண்மை, இந்த இரண்டுக்கும் இடையே எங்கோ ஒளிந்து கிடைக்கிறது

சேது சமுத்திரம் கடல்பகுதியை இன்னும் ஆழப்படுத்தி அதிகளவில் போக்குவரத்தை ஏற்படுத்த முடியுமா ?

கால்வாய் ஆழம் குறித்த பிரச்சனை செயற்கையாக ஏற்படுத்தப்படும் எல்லா கால்வாய்களுக்கும் உள்ளது. சுஸ் கால்வாயின் ஆழம் 16மீட்டர். இதனால் பெரிய கப்பல்கள் இந்த கால்வாயில் செல்ல முடியாது. கால்வாயின் ஆரம்பத்தில் பெரிய கப்பல்கள் சுரக்குகளை இறக்கி விடும். பிறகு சிறிய கப்பல்கள் மூலமாக சரக்கு, கால்வாயின் அடுத்த பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து மறுபடியும் பெரிய கப்பல்கள் மூலமாக சரக்கு கையாளப்படும். சுஸ் கால்வாயின் ஆழத்தை 22மீட்டராக ஆழப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள திட்டம் உள்ளது.

கப்பல் போக்குவரத்தில் நவீன நுட்பங்களுக்கு ஏற்ப இந்த கால்வாய்களையும் மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

சேது சமுத்திரம் கடல்பகுதியையும் ஆழப்படுத்த முடியும். கூடுதல் செலவாகும். சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கவனிக்க வேண்டும்.

அது தவிர சேது சமுத்திரம் கடல் பகுதியில் இதே ஆழத்தை தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புக்கும் செலவாகும்.
இது சேது சமுத்திரம் என்றில்லாமல் எல்லா துறைமுகங்களுக்கும் பொருந்தும்

இந்த திட்டம் தெற்க்காசியாவின் Suez Canal என கூறுகிறார்களே ?

இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. சுஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவை பயண நேரத்தை பல நாட்கள், பல ஆயிரம் மைல்கள் குறைக்கின்றன. சேது சமுத்திரம் குறைக்கும் நேரம் அதிகபட்சமாக வரையறுக்கப்பட்டிருப்பதே 30மணி நேரம் தான்

இவ்வளவு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெறுமா ?

பொருளாதாரக் காரணங்களை பொறுத்தவரையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு/எதிர்ப்பு என இரு தரப்பினர் கூறுவதிலும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. உண்மை இந்த இரண்டிற்கும் இடையில் ஒளிந்து இருக்கிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் இது வெற்றியா, தோல்வியா என்பது தெரியும். அது வரையில் இவை அனைத்தும் வெறும் ஊகங்கள் தான்.

இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டுமா ? எதிர்க்க வேண்டுமா ?

சமீபகாலத்தில் தமிழகத்தில் உள்ள பலரை ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க விடாமல் குழப்பிய ஒரு விடயம் இது தான் என்றால் அது மிகையல்ல.

ஒரு பொருளாதார திட்டம் Vs அது ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புறச்சூழல், சாமானிய மக்களுக்கான வாழ்வியல் பாதிப்புகள் என்று மட்டும் இருந்திருந்தால் இதில் ஏதேனும் ஒரு அணியில் பலர் சேர்ந்திருக்ககூடும். ஆனால் இங்கே சம்பந்தமேயில்லாமல் சங்பரிவார் ஆஜராகியவுடன் தமிழகத்தில் உள்ள பலருக்கு இந்த திட்டத்தை எந்தக் காரணத்தால் ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் இந்த திட்டம் "எதிர்க்கப்படவேண்டிய" ஒரு திட்டம். பொருளாதாரக் காரணங்களுக்காக அல்ல. ராமன் தன் குரங்குகள் கூட்டணியுடன் பாலம் கட்டிய புராண கற்பனை கதைக்காகவும் அல்ல.

சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

தவிரவும் இயற்கை வளங்களாக இருக்கும் வரை அது சாமானியனின் சொத்தாக இருக்கும். அது பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றப்படும் பொழுது பண முதலைகளுக்கும், அதிகார மையத்திற்கும் தான் அந்த சொத்தில் சொந்தம் இருக்கும். சாமானியனின் உரிமை பறிக்கப்பட்டு விடும். அந்த வகையிலும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

மீனவர்களை இந்த திட்டம் எவ்வாறு பாதிக்கும் ?

கப்பல்கள் இந்த கடல்பாதையில் செல்வதால் மீனவர்கள் இந்த கடல்பாதையை தற்பொழுது உள்ளது போல கடக்க முடியாது. கப்பல்கள் செல்லும் நேரத்தில் சேது சமுத்திரத்தை கடக்க காத்திருக்க வேண்டும்.

இந்த கடல்பாதையை ஆழப்படுத்த தோண்டப்படும் மணல் கரையோரங்களில் கொட்டப்படும். இதனால் கடலோரங்களில் இருக்கும் மீனவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.

மீன் வளம் குறையும்

The Gulf of Mannar and the Palk Bay are sensitive regions, very different from the open sea. "If their physical environment is disturbed in a big way, it will reflect on their biological environment, biodiversity and fishery production. Fishery production depends on the physical environment," says a marine biologist. The entire fish chain will be affected.


மீனவர்களுக்கு இந்த திட்டத்தால் ஆதாயம் எதுவும் இல்லையா ?

மீனவர்களுக்கும் இந்த திட்டத்தால் ஆதாயம் உள்ளது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடல் பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் மீன் வளம் இல்லை. சில அரிய வகை கடல் இனங்கள் இருந்தாலும் மீன்கள் பெரிய அளவில் இல்லை. இதனால் தான் இந்தப் பகுதி மீனவர்கள் இலங்கை கடலுக்குளளும் கச்சத்தீவு பகுதிக்குள்ளும் சென்று விடுகிறார்கள். இதனால் சில நேரங்களில் இலங்கை கடற்படை இவர்களை பிடித்துக்கொண்டு சென்று விடுகிறது.

கடல்பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடிப்பதிலும் பிரச்சனைகள் உள்ளன. சேது சமுத்திரம் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த கால்வாய் மூலமாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடிக்க முடியும். அதுவும் தவிர மீன்களும் சேது சமுத்திரம் திட்டத்தால் இந்தப் பகுதிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து உள்ளது

சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன ?

மன்னார் வளைகுடா பகுதியினை கடல்வாழ் உயிரினங்களின் தேசிய பூங்காவாக அரசு அறிவித்துள்ளது. பல அரிய வகை கடல் இனங்கள் இங்கே உள்ளன.

Gulf of Mannar Biosphere Reserve is one of the world's richest regions from a marine biodiversity perspective. The Reserve harbours marine biodiversity of global significance and is renowned for its coral reef, sea grass and algal communities

Located on the southeastern tip of the subcontinent, the Gulf of Mannar is known to harbour over 3,600 species of flora and fauna, making it one of the richest coastal regions in Asia. 117 hard coral species have been recorded in the Gulf of Mannar. Sea turtles are frequent visitors to the gulf as are sacred sharks, dugongs, and dolphins

Among the species that figure in the endangered list include dolphins, Dugongs (Dugong Dugon), whales and sea cucumbers.

The Gulf of Mannar Biosphere Reserve covers an area of 10,500 km², with a larger buffer area that includes the adjoining coastline. The islets and coastal buffer zone includes beaches, estuaries, and tropical dry broadleaf forests, while the marine environments include algal communities, sea grass communities, coral reefs, salt marshes and mangroves.

சேது சமுத்திர திட்டம் இவை அனைத்திற்கும் வேட்டு வைக்கும் திட்டம். எனவே தான் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்க வேண்டும்

தொடர்புள்ள சுட்டிகள்
http://sethusamudram.info/content/view/48/27/
http://sethusamudram.info

வேறு என்ன சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகள் உள்ளன ?

ஆதம் பாலம் இயற்கையாக பல இயற்கை சீற்றங்களில் இருந்து இந்தப் பகுதியை பாதுகாத்து உள்ளது. உதாரணமாக சுனாமி போன்றவையின் பொழுது இயற்கையின் சீற்றத்தை ஆதம் பாலம் தடுப்பு அணையாக எதிர்கொண்டுள்ளது. சேது சமுத்திரம் இதற்கு வேட்டு வைக்க கூடும்.

இந்த பகுதியில் இருக்கும் பல சிறு தீவுகள் சேது சமுத்திர திட்டத்திற்கு பிறகு கடலில் முழ்கி விடும் அபாயம் உள்ளது.

A fear has also been expressed that, after the Gulf of Mannar is dredged to cut the ship canal, nearly 85 islets in the Western coastal region of Sri Lanka will be submerged into the sea. According to Oceanographers' view, Indian Ocean around the tip of the Indian peninsula is an ancient area in natural transition which has not yet completed its full formation. This section is the most complex relief and the earth crust is still in motion

இந்தப் பகுதியில் எக் காலத்திலும் பெரிய அளவில் கடல் போக்குவரத்து இருந்ததில்லை. ஆனால் சேது சமுத்திர திட்டத்திற்கு பிறகு இந்தப் பாதையில் அதிகளவில் கடல் போக்குவரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இது பல கடல்வாழ் இனங்களை அழித்து விடும் வாய்ப்பு உள்ளது.

A busy continuous navigation in this region will offset and trigger devastating ecological imbalance, affecting the lives of millions of fishermen and many endangered organisms of the subtropical, shallow Gulf of Mannar

Environmentalists fear that there are two ways in which the plying of ships could endanger the ecology. Dredged spoil dumped in the vicinity of the islands could cause mass, suspended sedimentation. The canal would cause a change in the magnitude and direction of currents in the Gulf of Mannar because it will be 300 metres wide, and the changed currents will flow towards the 21 islands.

விடுதலைப்புலிகளுக்கு இந்த திட்டம் சாதகமாக உள்ளதா போன்ற கேள்விகளும், இன்னும் பல கேள்விகளும் உள்ளன, அவை அடுத்த பகுதியில் வரும்...

****

இனி இந்தப் பிரச்சனை பற்றி இந்திய ஊடகங்கள் உளறி கொட்டியது குறித்த சிறு குறிப்பு

சேது சமுத்திரம் திட்டம் இந்திய ஊடகங்களின் வலதுசாரி ஆதரவு தன்மையை தெளிவாக வெளிப்படுத்தியது. வட இந்திய ஊடகங்கள் பல கதைகளையும், தியரிகளையும் வாரி இறைத்தன.

இதிலே உச்சகட்ட நகைச்சுவையை வழங்கியது ஓரளவிற்கு மாறுபட்ட பத்திரிக்கையான "தெகல்கா" என்பது தான் ஆச்சரியம். தெகல்காவின் ஆனந்த் சொல்கிறார் - தமிழர்களின் சேது சமுத்திர கனவு என்பது குமரிக்கண்டம் என்ற தமிழர்களின் கனவினை சிறிதளவேனும் நிறைவேற்றும் ஒரு திட்டமாம். அப்படியா ? :)

For Dravidianists, the construction of the Sethusamudram Canal comes closest to a modern realisation of the Lemuria myth. For the BJP and its cohorts, it is the demolition of the Aryan myth of conquest.

தெகல்கா எங்கிருந்து இப்படி ஒரு உண்மையை கண்டுபிடித்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம். முதலில் இது தமிழனின் கனவு என யார் சொன்னார்கள் ? அரசியல்வாதிகள் தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு ஒரு கதை கட்டி இந்த திட்டத்தை ஒரு குழம்பிய குட்டையாக்கி விட்டார்கள்.

இந்த வட இந்திய ஊடகங்கள் இருக்கின்றனவே, அவர்களுடைய தியரி ரொம்ப சிம்பிள் - அரசியல்வாதிகள் ஒரு திட்டத்தை முன்வைத்தால் அது Vote Bank Politics. இந்த திட்டத்தால் என்ன ஓட்டு கிடைக்கும் என அவர்களிடமே திருப்பி யாராவது கேட்பார்களா என பார்த்தேன். எந்த நிகழ்ச்சியிலும் எவரும் கேட்கவில்லை.

தில்லியில் தென்னிந்தியா குறித்து ஓரளவிற்கு தெரிந்த செய்தியாளர்களை வைத்து இது குறித்து விவாதிக்கலாம். இந்த செய்தியாளர்களில் IBNLiveன் சாகரிகா கோஸ் இருக்கிறாரே, அவரின் அரசியல் அறிவை பல நேரங்களில் நினைத்து சிரிக்கத் தான் முடிந்தது. நான் இந்தியாவில் இருக்கும் பொழுது அதிகளவில் NDTV பார்ப்பது உண்டு. எனக்கு ஓரளவிற்கு பிடித்தமான, விபரமான
செய்தியாளர் - பர்கா தத். ஆனால் IBNLiveல் ஒரு செய்தியாளர் கூட அவ்வாறு இல்லாதது ஆச்சரியம் - ராஜ்தீப் சர்தேசாய் உட்பட. ஆனால் IBNLive தான் தற்பொழுது முதன்மையான செய்தி சேனல் என்பது ஆச்சரியம் தான்.

இவர்கள் குறைந்த பட்சம் சென்னையில் தமிழகத்தின் அரசியல் குறித்து அறிந்தவர்களை செய்தியாளர்களாக வைத்திருக்கலாம். அதுவும் இல்லை. சென்னையை சேர்ந்த IBNLive செய்தியாளர் (பெயர் சந்தியா என்பதாக ஞாபகம்) அந்த தொலைக்காட்சியில் சொல்கிறார் - "கலைஞர் முஸ்லீம் ஓட்டுகளை பெற தான் இராமன் இல்லை" என்று சொன்னாராம்.

என்ன ஒரு கண்டுபிடிப்பு. என்ன ஒரு செய்தியாளர் :) மேலும் படிக்க...

சேது சமுத்திரம் : சுற்றுப்புறச்சூழல்


சேது சமுத்திரம் திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகளை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் நான் சுற்றுப்புறச்சூழல் குறித்த எனது கருத்துக்களையும் கூறியிருந்தேன். சேது சமுத்திரம் திட்டத்தை சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் மட்டுமே எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை சில கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. அந்தக் கட்டுரைகளை மட்டும் இங்கே தருகிறேன்.

சேது சமுத்திரம் பகுதியில் பெரிய அளவில் கப்பல் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அங்கு பல அரிய வகை கடல் இனங்கள் இருப்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. "மனிதம்" என்னும் தமிழ் தன்னார்வ அமைப்பு இந்த அறிக்கையினை தயாரித்துள்ளது.

Impact on the Environment - Manitham Report

அது போலவே மிக அரிய வகை கடல் ஆமைகள் போன்றவற்றுக்கும் இந்த திட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது

Sethusamudram canal may disturb endangered turtles

****
ஆதம் பாலம் குறித்த நாசாவின் விளக்கத்தை இங்கே படிக்கலாம்

Space photos no proof of Ram Sethu: NASA

****

சேது சமுத்திரம் திட்டம் ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுப்புறச்சூழல் பிரச்சனையை சங்பரிவார் கும்பல் தங்களுக்கு சாதகமாக திரித்து கொள்ள முனைகின்றனர். அவர்கள் கருத்துப்படி இதனை கட்டியது இராமனும், சில குரங்குகளும் :)) என்றால் இது செயற்கை தானே ? எப்படி இயற்கை ஆகும் :) மேலும் படிக்க...

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் குறித்து நம்மவர்கள் குறை கூறுவதும் நக்கல் அடிப்பதும் எப்பொழுதுமே வழக்கமானது. இந்த பிரச்சனையில் இந்தியர்களின் மத அடிப்படைவாதம் தெளிவாக வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

பொருளாதார, இராணுவ வல்லரசான இந்தியாவில் இப்பொழுது முக்கிய பிரச்சனை குரங்குகள் கூட்டணியுடன் ராமர் கட்டியதாக கதையளக்கப்படும் ஆதம் பாலம் என வழங்கப்படும் தீவுக்கூட்டம். இந்த ஆதம் பாலத்தை பல தலைமுறைகளாக ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திட்டு என்றே வழங்கி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வலதுசாரி இந்துத்துவா கும்பல் இதனை "ராம் சேது" என பெயர் மாற்றம் செய்து விட்டது. இவர்களின் வாதத்திற்கு வக்காலத்து வாங்குவது போல வட இந்திய ஊடகங்களும் இதனை ஓங்கி முழங்கி வருகின்றன.

பெரும்பாலான வட இந்திய ஊடகங்களில் எப்பொழுதுமே வலதுசாரி முழக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியாவின் ஆங்கில செய்தி ஊடகங்களில் தென்னிந்தியச் செய்திகள் குறித்து விவாதிக்கப்படும் பொழுது கூட வட இந்திய வாடையும்/பார்வையும் முழுமையாக வீசிக்கொண்டிருக்கும். உண்மையை தெரியாத அரைகுறை செய்தியாளர்களின் உளறல் எப்பொழுதுமே இருக்கும். இப்பொழுது அது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்ப படுகின்றன. ஹிந்து போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் அவற்றில் விதிவிலக்கானவை. (ஹிந்துவின் அரசியல் வேறு வகையானது).

****

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.
சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

நான் இங்கு வைத்துள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் http://sethusamudram.info என்னும் இணையத்தளத்தில் உள்ளன

****

சேது சமுத்திரம் திட்டத்தின் அடுத்த முக்கிய பிரச்சனையாக கூறப்படுவது சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடல் வாழ் இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இந்த பிரச்சனை குறித்து சங்பரிவார் கோஷ்டிகளுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா ?

சுற்றுப்புறச்சூழல் மட்டுமல்ல பல மக்களின் வாழ்வியலை குலைத்த நர்மதா அணைக்கட்டு திட்டத்தை இந்த காவிக் கும்பல் எதிர்த்ததா ? மேதா பட்கர் தனியாளாக போராடிய பொழுது இந்தியாவின் நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனனவருமே வளர்ச்சி திட்டத்தை மேதா பட்கர் குலைப்பதாக தானே கூறினார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் மேதா பட்கருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே...

சுற்றுப்புறச்சூழல் விடயத்தில் கூட சேது சமுத்திர திட்டம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன - Sethu project will not create geological imbalance

மீனவர்கள் கூட முன்பை விட அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் - http://sethusamudram.info/content/view/20/32/

என்றாலும் இவையெல்லாம் வெறும் தியரி (theory). உண்மையில் என்ன நடக்கும் என யாரும் சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த திட்டத்தை பொருளாதார காரணங்களுக்காக ஆதரிக்கலாம். என்றாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் தீங்கு விளைவிக்க கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. இயற்கையான எந்த ஒரு விடயத்தையும் செயற்கையாக மாற்றும் பொழுது சில எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சுற்றுப்புறச்சூழலுக்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் நேருகிறது.

****

"Ram is a big lie: Karunanidhi" என்பது தான் கடந்த வாரம் பல வட இந்திய பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் அதிர்ச்சியாக வெளியிட்டு உள்ளது தான் உச்சகட்ட காமெடி. கலைஞரை சாடி பல வட இந்திய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை கூகுள் மூலமாக படித்து சிரித்து ரசிக்கலாம் :). இதனை "Blasphemy" :) என்று கதறும் ஊடகங்களும் அடக்கம். "Even Aurangzeb or the Britishers never questioned the existence of Lord Ram," என அழுகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்

கலைஞர் ராமாயணம் என்ற கதையின் "கதாபாத்திரம்" ராமன் குறித்து பேசியது தவறு என பலர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதனை இன்னும் வலுவாக, தெளிவாக கலைஞர் கூறியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வருத்தம்.

தமிழர்களின் கலாச்சாரத்தை தட்டையாக "இந்து" என்ற சொல்லாடலில் அடைப்பதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சனையில் கலைஞர் முன்வைத்த வாதம் வட இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மையே. இந்து மத வெறியர்களை தவிர உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் பலருக்கு இந்த உண்மை சென்று சேர்ந்து இருக்கிறது. பெரியார் குறித்தும் சில விவாதங்கள் நடப்பதை சில இணையத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிந்தது. Periyar An Iconoclast and a Reformer.

அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.

இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் படிக்க...