வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

In the Line of Fire - Nuclear Proliferation

இந்தக் கட்டுரையின் முந்தையப் பகுதி

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப்பின் புத்தகம் இந்திய ஊடகங்களால் மட்டுமில்லாமல் பாக்கிஸ்தான் ஊடகங்களாலும் மிகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதற்கான காரணங்களை அவருடைய புத்தகத்தின் மற்றொரு அத்தியாயமான Nuclear Proliferation - பாக்கிஸ்தான் அணு ஆயுதங்கள் குறித்த அத்தியாயத்தில் காண முடிகிறது. ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பாக்கிஸ்தான் அணு ஆயுத திட்டங்கள் குறித்த ஆரம்ப கால ரகசியங்களை முஷ்ரப் வெளிப்படுத்தியுள்ள விதம் இந்தப் புத்தகத்திற்கு கடுமையான எதிர்ப்பை பாக்கிஸ்தான் ஊடகங்களிலும் அவரின் எதிர்ப்பாளர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது

என்ன தான் இந்திய ஊடகங்கள் முஷ்ரப்பின் புத்தகத்தை நிராகரிக்க முயன்றாலும், இந்தப் புத்தகம் மிக சுவாரசியமான பல இராணுவ விடயங்களை சொல்லிக் கொண்டு செல்வதால் நிச்சயம் நிறையப் பிரதிகளை விற்று தீர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில் இதில் எழுதப்பட்டுள்ள சில கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் இது நிராகரிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. அவ்வளவு எளிதாக நிராகரித்து விடவும் முடியாது என்று தான் தோன்றுகிறது

பாக்கிஸ்தானின் ஆணு ஆயுதங்கள் பற்றிய ஆரம்ப கால விடயங்களை சுவாரசியமாக விவரிக்கிறார் முஷ்ரப். பாக்கிஸ்தான் அணு திட்டத்தின் தந்தை எனக்கூறப்படும் A.Q.கான் நெதர்லாந்தில் யூரேனியம் என்ரிச்மெண்ட் துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தவர். 1975ல், அதாவது 1974ல் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை மேற்க்கொண்டப் பிறகு இவர் பாக்கிஸ்தான் அணுதிட்டத்தில் பங்காற்ற தாமாக முன்வந்ததாக முஷ்ரப் கூறுகிறார். இவர் நெதர்லாந்தில் இருந்து பாக்கிஸ்தான் வந்த பொழுதே, அங்கிருந்து centrifuges drawingsஐ கொண்டு வந்ததாக முஷ்ரப் கூறுகிறார். அதோடு இல்லாமல் பாக்கிஸ்தானின் ஆரம்ப கால அணு ஆயுத திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை ஐரோப்பாவில் உள்ள சில "திரைமறைவு" தனியார் குழுக்களிடம் இருந்து பெற்றதாக முஷ்ரப் கூறுகிறார். இந்தியாவும் இதே சமயத்தில் தன் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்ததால் இந்தியாவும் இதே தனியார் குழுக்களிடம் இருந்து அணு தொழில்நுட்பத்தை பெற்றிருக்கலாம் என்கிறார் முஷ்ரப்.

...In the years that followed, we obtained all the other materials and technology we needed through an underground network based mainly in the developed countries of Europe. India was also developing its nuclear arsenal during these years. Perhaps we were both being supplied by the same network, the non-state proliferators

தங்களுக்கு கிடைத்த அணு ஆயுத தொழில்நுட்பம் தங்களுடையது அல்ல என்றும் அது சில தனியார் அமைப்புகளிடம் இருந்து திரைமறைவு காரியங்களில் பெறப்பட்டது என்பதை முஷ்ரப் வெளிப்படையாக கூறியது தான் பல பாக்கிஸ்தான் ஊடங்களில் முஷ்ரப் மீது தாக்குதல் தொடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.

இந்தியா தெற்காசியாவிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும் தன்னை ஒரு வல்லரசாக உருவாக்கிக் கொள்ளவே அணு ஆயுதங்களை முதலில் சோதனை செய்தது என்றும், அதைத் தொடர்ந்து தான் பாக்கிஸ்தான் தன்னுடைய தற்காப்புக்காக அணு ஆயுதங்களை சோதித்தது - India's intentions were offensive and aggressive; ours were defensive என்கிறார் முஷ்ரப். முஷ்ரப்பின் இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்திரா, ராஜீவ், வாஜ்பாய் இவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவின் hegemonyஐ வெளிப்படுத்தவே பல சமயம் முயன்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்திரா, ராஜீவ் காலங்களில் ரா அமைப்பு மூலம் இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளில் ஏற்படுத்திய நாசவேலைகள் ஒரு சிறந்த உதாரணம்.

பாக்கிஸ்தானின் அணு ஆயுத தந்தை எனப்படும் A.Q.கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் முஷ்ரப். A.Q.கானின் திரைமறைவு வேலைகள் தனக்கு தெரிந்து இருந்தாலும், அவர் மீது பாக்கிஸ்தான் மக்கள் வைத்திருந்த அளவற்ற மரியாதை காரணமாக தன்னால் அவரது குற்றங்களை சரியாக வெளிக்கொண்டு வரமுடியவில்லை என்கிறார் முஷ்ரப். A.Q.கானுக்கும் வடகொரியா, ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு இருந்த திரைமறைவு தொடர்புகளை வெளிப்படுத்துகிறார். இவை தவிர கான் துபாயில் சட்டவிரோதமான ஒரு அணு ஆயுத குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் பல நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றார் என்கிறார் முஷ்ரப். இந்த சட்டவிரோதக் குழுவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பயற்சி எடுத்தனர் என்றும் முஷ்ரப் கூறுகிறார்.

இலங்கை, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் கான் குழுவில் அணு ஆயுதப் பயிற்சி எடுத்ததாக முஷ்ரப் கூறுகிறார். இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த சிலரும் இங்கு பயிற்சி எடுத்தாகவும் இந்தியாவின் யூரேனியம் என்ரிச்மெண்ட் தொழில்நுட்பம் பாக்கிஸ்தான் அணு விஞ்ஞானி A.Q.கானிடம் பயிற்சி எடுத்த இந்தியர்கள் மூலமாக இந்தியாவிடம் சென்று சேர்ந்து விட்டது என்று கூறி ஒரு புதுக் கதையை எழுப்புகிறார் முஷ்ரப்.

Ironically, the network based in Dubai had employed several Indians, some of whom have since vanished. There is a strong probability that the Indian uranium enrichment program may have its roots in the Dubai-based network and could be a copy of the Pakistani centrifuge design. This has also been recently alluded to by an eminent American nonproliferation analyst

முஷ்ரப்பின் இந்த வாதம் தான் பலருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முஷ்ரப் இதனை கூறுகிறார் ? அந்த அமெரிக்கன் nonproliferation analyst யார் ? யாரோ கூறியதை எப்படி ஒரு ஜனாதிபதி தன் சயசரிதையில் கூற முடியும் ?

எனக்கு ஒரு பட்சி சொன்னது என்ற பாணியில் முஷ்ரப் இவ்வாறு எழுதியிருப்பது தான் இந்திய ஊடகங்களும், தீவிர இந்திய அபிமானிகளும் இந்த புத்தகம் மீது தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு முக்கிய காரணம். அதுவும் தவிர பாக்கிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு எவ்வாறு மிக மோசமான நிலையில் இருந்தது என்பதை அவரே விவரித்து விட்டு, அமெரிக்கா இந்தியாவின் அணு ஆயுத நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இந்தியாவுடன் அணு ஆயுத ஒத்துழைப்பை செனட் மூலமாக நிறைவேற்றியுள்ள தருணத்தில், இந்தியாவின் அணு திட்டம் பாக்கிஸ்தானின் காப்பி என்று போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்வது தான் இந்த புத்தகத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது.

அதே சமயத்தில் முஷ்ரப் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறியிருக்கும் இந்த வரிகள் பொருட்படுத்த வேண்டியவை அல்ல. இந்த ஒரு வரிக்காக முழு புத்தகத்தையும் நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த புத்தக ஆசிரியரும் தன்னுடைய சார்புகளை சில இடங்களில் அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தவே செய்வார். முஷ்ரப்பின் இந்த வரிகளும் அந்த வகையைச் சார்ந்தது தான்

இந்தப் புத்தகத்தில் பொதுவாகவே தன்னையும், பாக்கிஸ்தானையும் அதிக அளவில் முன்னிலைப்படுத்துகிறார் முஷ்ரப். பாக்கிஸ்தான் அணு நிலையங்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் எழ ஏ.யு.கான் தான் காரணம் என்கிறார் முஷ்ரப். தனக்கு ஏ.யு.கான் பற்றி தெரிந்தாலும் பாக்கிஸ்தான் மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஹீரோ இமேஜ் காரணமாகவே தன்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கிறார் முஷ்ரப்.

பல சட்டவிரோதமான அணு ஆயுத தொடர்புகளைக் கொண்டிருந்த ஏ.யு.கான் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், பொதுமக்களிடம் இந்த உண்மையை கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தான் கூறியதாகவும் முஷ்ரப் கூறுகிறார். ஏ.யு.கான் இதற்குப் பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பாக்கிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கோரினார். பின்பு வீட்டுக் காவலிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதும் வீட்டு காவலில் தான் உள்ளார்.

இந்தியா குறித்தான விரிகளை நீக்கி விட்டு பார்த்தால் இந்த அத்தியாயம் சுவாரசியமாகவே உள்ளது. ஆனால் தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள ஒருவர், அவரது நாட்டு ரகசியங்களை வெளிப்படுத்துவது சரியானது தானா ? அதைத் தான் பாக்கிஸ்தான் ஊடகங்கள் சாடிக் கொண்டிருக்கின்றன

Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf

மேலும் படிக்க...

In the Line of Fire - Pervez Musharraf

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் எழுதி உலகெங்கிலும் அதிகப் பரபரப்புடன் விற்பனையாகிக்கொண்டிருக்கும் புத்தகம் - In the Line of Fire. இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் பெரும்பாலான இந்தியர்கள் படிக்க நினைக்கும் சிலவற்றை தான் நானும் முதலில் படித்தேன். இன்னும் முழு புத்தகத்தையும் படிக்க வில்லை. கார்கில் போர் குறித்தான முஷ்ரப்பின் கருத்துக்களை இந்திய ஊடகங்கள் சாடிக் கொண்டிருந்த நிலையில் முதலில் கார்கில் குறித்து படித்து விட்டு பிறகு முழு புத்தகத்தையும் படிக்கலாம் என்று கார்கில் அத்தியாயத்தை வாசிக்க தொடங்கினேன்.

இந்திய ஊடகங்கள் குறிப்பாக ஹிந்துவில் வெளியான கட்டுரையும், இந்த புத்தகத்தை படிக்காமலேயே ஆசிரியருக்கு கடிதம் எழுதி குவித்து கொண்டிருக்கும் ஹிந்து வாசகர் கடிதங்களையும் பார்த்தப் பிறகு முஷ்ரப் கார்கில் குறித்து என்ன தான் சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கார்கில் குறித்த கட்டுரை நல்ல நடையில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது.

முதலில் முஷ்ரப் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் பார்த்து விட்டு அது குறித்த எனது விமர்சனங்களை இறுதியில் எழுதுகிறேன்.

முஷ்ரப் கார்கில் அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்

The year 1999 may have been the most momentous of my life.. The events of 1999 and the fall of 1998, dramatically catapulated me from solidiering to leading the destiny of the nation என்று தொடங்கும் முஷ்ரப் It is time to lay bare what has been shrouded in mystery என்று கார்கில் குறித்த புதிர்களை அவிழ்க்க முற்படுகிறார்.

கார்கில் மற்றும் Dras பகுதியில் இருக்கும் சிலப் பகுதிகளை பாக்கிஸ்தான் 1999ல் ஆக்கிரமித்தது ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அது முதன் முறையாக நடந்த ஒரு ஆக்கிரமிப்பு இல்லை என்றும் முஷ்ரப் கூறுகிறார். பாக்கிஸ்தான் அதிக வலுவுடன் இல்லாத பனிப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பதும், இந்தியா வலுவுடன் இல்லாத இடங்களை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பதும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு என்றும் இவ்வாறு தான் சியாசின் பகுதி இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார் முஷ்ரப்.

இந்தியா, பாக்கிஸ்தான் பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்க முயற்சி செய்வதாக தங்களுக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையிலே தான் கார்கிலை பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியது என்கிறார் முஷ்ரப். குளிர் காலங்களில் மிகவும் குளிர் மிகுந்த இந்தப் பகுதிகளை விட்டு இரு நாட்டின் படையினரும் விலகிக் கொள்வதும், குளிர் காலம் முடிந்தவுடன் இந்தப் பகுதிக்கு மீண்டும் வருவதும் வழக்கம். 1999ல் குளிர் காலத்தில் இந்தப் பகுதியை விட்டு இந்திய இராணுவம் விலகிய நிலையில் தான் பாக்கிஸ்தான் கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது

There was specific information of a possible Indian attack in the Shaqma sector; it was aimed at positions we had used to shell the road between Dras and Kargil in early summer 1998, in response to continuous artillery shelling by the Indians...

There were large gaps between our defensive positions in the Kargil and Dras sectors, making it possible for Indian troops to cross the line too easily. India also brought in and tested special bunker-busting equipment in the autumn of 1998 ...

இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் இந்த முயற்சியை தடுக்கும் வகையிலும் மிக ரகசியமாக கார்கில் பகுதி பாக்கிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார். இது பாக்கிஸ்தான் இராணுவத்தின் செயல்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று முஷ்ரப் கூறுகிறார்

Our maneuver was conducted flawlessly, a tactical marvel of military professionalism. By the end of April the unoccupied gaps along 75miles (120KM) of the LOC had been secured by over 100 new posts of ten to twenty persons each.

பாக்கிஸ்தான் படைகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் இருக்கும் பகுதியில் தங்கள் பலத்தை அதிகரித்தப் பிறகு முஜாஹீதின் குழுக்கள் இந்தியாவின் பகுதிக்குள் சுமார் 800 சதுர கி.மீ பகுதிகளை ஆக்கிரமித்து இருந்ததாகவும், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளை நோக்கி இந்தியா நெருங்க முடியாதவண்ணம் இவர்கள் அரண் அமைக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்குள் பாக்கிஸ்தான் படைகள் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து இருந்ததாகவும் முஷ்ரப் கூறுகிறார். இது எதுவுமே இந்தியாவிற்கு 1999 மே மாதம் வரை தெரியாது என்கிறார் முஷ்ரப்.

முஷ்ரப் கூறியதன் சாராம்சம் இது தான் - "பாக்கிஸ்தான் மீது இந்தியா கார்கில் பகுதியில் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருந்தது. இதனை முறியடிக்க கார்கில் பகுதியில் எங்கள் பாதுகாப்பை அதிகரித்தோம். முஜாஹீதின் குழுக்கள் மூலமாக இந்தியப் பகுதியையும் ஆக்கிரமித்தோம். இதற்கு காரணம் இந்தியா தானே தவிர நாங்கள் இல்லை"

இது உண்மையா ? பிறகு கவனிப்போம்.

முஷ்ரப் கூறும் மேலும் சில விடயங்கள் இந்திய இராணுவத்தின் திட்டமிடல் குறித்தும், செயல்பாடு குறித்தும், கார்கில் போரில் இந்தியாவின் வெற்றி குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. அது போல கார்கில் போர் பாக்கிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என முஷ்ரப் கூறுகிறார்

India moved in artillery and infantry formations even at the cost of significantly depleting its offensive capability elsewhere along the international border. Evaluating this buildup at headquarters we realized that India had created a serious strategic imbalance in its system of forces. It had bottled up major formations inside Kashmir, leaving itself co capability to attack us elsewhere....

By july 4 they (இந்தியா) did achieve some success, which i would call insignificant

Our Nation remains proud of its commanders and troops, whose grit and determination I observed during my frequent vists to the forward areas

Pakistan was in a strategically advantegous position in case of an all-out war, in view of the massive Indian troop indications inside Kashmir, resulting in a stragtegic imbalance in India's system of forces

The indians, by their own admission, suffered over 600 killed and over 1500 wounded. Our information suggests that the real numbers are at least twice what India has publicly admitted. The Indians actually ran short of coffins, owing to an unexpectedly high number of casualties;

The number of Indian casualties proves the fighting prowess and professionalism of the officers and men of the Pakistan Army

our army, outnumbered and outgunned, fought this conflict with great valor

கார்கில் போர் இராணுவ ரீதியில் பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறும் முஷ்ரப் அரசியல் ரீதியாக இந்தப் போர் தங்களுக்கு கிடைத்த தோல்வி என்கிறார். அதற்கு காரணம் அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் என முஷ்ரப் குற்றம்சாட்டுகிறார்.

கார்கில் போர் திட்டமிடல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நவாஸ் ஷெரீப் அப்பொழுது கூறியது பொய் எனக்கூறும் முஷ்ரப் அவருடன் இது குறித்து விவாதித்த தேதிகளையும் குறிப்பிடுகிறார். பாக்கிஸ்தான் இராணுவத்தின் இந்த மிகப் பெரிய வெற்றியை கூட தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அப்போதைய அரசியல் தலைமை இருந்ததாக நவாஸ் ஷெரீப் மீது குற்றம்சாட்டுகிறார். அது போலவே இந்தியா சர்வதேச ரீதியாக இந்தப் பிரச்சனையை சாதுரியமாக கையாண்டு தங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது என ஒப்புக்கொள்கிறார்.

இந்திய ஊடகங்கள் இந்தியாவின் கார்கில் வெற்றி குறித்து மிகைப்படுத்தியே செய்தி வெளியிட்டது என்று முஷ்ரப் கூறுகிறார். ஆனால் பாக்கிஸ்தானில் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை பாக்கிஸ்தானின் அரசியல் தலைமை உருவாக்க தவறி விட்டதாக முஷ்ரப் சாடுகிறார்.

முஷ்ரப் இந்த புத்தகத்தில் கூறுவது உண்மையா ? இந்தக் கேள்வியை பல ஊடகங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

தான் கூறும் அனைத்தும் உண்மை என வாதிடுகிறார் முஷ்ரப்

whatever I have said in the book is the truth, the whole truth and nothing but the truth, and I stand by it."

பாக்கிஸ்தானின் கார்கில் திட்டம் முழுவதும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு மேற்க்கொண்ட பஸ் பயணத்திற்கு பின்பாக பாக்கிஸ்தானுடன் ஒரு சுமூக உறவை உருவாக்க இந்தியா முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் நடைபெற்றது என்பதை இந்த அத்தியாயத்தின் எந்த இடத்திலும் முஷ்ரப் கூறவேயில்லை. அது தவிர கார்கில் பிரச்சனை காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்பதாக தான் இது வரை இந்திய ஊடகங்களும் பிற நாட்டு ஊடகங்களும் கூறிவந்தன. ஆனால் தங்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுக்க திட்டமிட்டதன் எதிர் நடவடிக்கை தான் இந்த தாக்குதல் என்றும் தங்களின் கார்கில் நடவடிக்கை அதை முறியடித்து விட்டதாகவும் முஷ்ரப் கூறுகிறார்.

Indian's planned offensive was preempted

முஷ்ரப்பின் இந்தக் கருத்து இதுவரையில் வெளிவராத ஒரு புதிய நிலைப்பாடு. முஷ்ரப் சொல்வது உண்மையா ? தெரியவில்லை

பாக்கிஸ்தான் இராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றும் முஷ்ரப், இந்த போர் நடந்த சமயத்தில் இந்தப் பிரச்சனைக்கும், பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கூறி வந்தனர்.

இன்னும் சொல்லப் போனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட பல பாக்கிஸ்தான் வீரர்களின் சடலங்களை பாக்கிஸ்தான் ஏற்க மறுத்தது. அவர்களுக்கு இந்திய இராணுவமே ஒரு போர் வீரனுக்கு கொடுக்க வேண்டிய இறுதிமரியாதையை முஸ்லீம் முறைப்படி கொடுத்தாக அப்பொழுது ஹிந்துவில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் தொடர்ச்சியாக இந்தப் போரில் தங்கள் இராணுவம் ஈடுபடவில்லை என்று பாக்கிஸ்தான் கூறிவந்ததை இந்தப் புத்தகம் நிராகரிக்கிறது. ஆனால் இதற்கு தான் காரணமில்லை என்றும் அரசியல் தலைமை தான் காரணம் என்று கூறி முஷ்ரப் தப்பித்து கொள்கிறார். ஒரு இராணுவ தளபதியாக தன் படையின் வெற்றியை தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்ததாக முஷ்ரப் கூறுகிறார்.

இந்தப் புத்தகம் இந்திய இராணுவத்தின் வெற்றி குறித்து எழுப்பியிருக்கும் சில கேள்விகள் சரியானவை அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியப் படைகளுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையில் தான் இந்தப் போர் நடைபெற்றது. பாக்கிஸ்தான் இராணுவமும், அவர்களின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் இந்திய இராணுவத்தை வலுவாக தாக்கக்கூடிய சாதகமானப் பகுதிகளை தான் ஆக்கிரமித்து இருந்தனர். முதலில் விமானப்படை மூலமான தாக்குதல் தொடங்கி அது பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் தான் இந்தியா தனது அடுத்த தாக்குதலை தொடுத்தது. பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து இருந்த சில நிலைகள் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே ஆக்கிரமித்து இருந்தனர். அந்த கடுமையான மலைப்பகுதியில், குளிரில் இந்திய இராணுவத்தினர் கடும் சவாலுடன் தான் இந்தப் போரினை எதிர்கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றே இருந்தனர்.

ஆனால் முஷ்ரப் கூறுவது போல அது பெரிய வெற்றி இல்லையா ? - did achieve some success, which i would call insignificant...
தெரியவில்லை

இந்தப் போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்து முஷ்ரப் எழுதவேயில்லை. பாக்கிஸ்தான் இந்தப் போருக்கு பின்பு அரசியல் குழப்பத்திற்குள்ளானது. நவாஸ் ஷெரீப், முஷ்ரப் இடையேயான பிரச்சனை வலுத்து, மோதல் ஏற்பட்டு இராணுவப் புரட்சி மூலம் முஷ்ரப் அதிபரானார். பாக்கிஸ்தான் மீது கடுமையான நிர்பந்தம் உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இந்தப் போருக்கு பின், ஊசலாடிக் கொண்டிருந்த கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து வாஜ்பாய் தலைமையில் ஒரு வலுவான அரசு உருவானது. பொருளாதார ரீதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

இவ்வாறான நிலையில் தான் முஷ்ரப் இராணுவ ரீதியில் மட்டும் இந்தப் போர் பாக்கிஸ்தானுக்கு வெற்றி என்கிறார். கார்கில் போர் பாக்கிஸ்தான் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் முஷ்ரப்

Considered purely on military terms, the Kargil operations were a landmark in the history of Pakistan Army. As few as few batallions in support of the freedom fighter groups, were able to compel the Indians to employ four divisions....

இந்தப் போரின் பலன் என்ன ? முஷ்ரப்பே கூறுகிறார்

I would like to state emphatically that whatever movement has taken place so far in the direction of finding a solution to Kashmir is due considerably to the Kargil conflict

இந்த புத்தகத்தின் மற்றொரு முக்கிய விடயம் காஷ்மீர் குறித்து முஷ்ரப் முன்வைத்த out-of-box solution. இது குறித்து முன்பே நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பத்ரியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

கார்கில் குறித்து முஷ்ரப் கூறிய கருத்துக்களை என்னால் முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், காஷ்மீர் குறித்த முஷ்ரப்பின் கருத்து இது வரை இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த எவரும் முன்வைக்காத உருப்படியான திட்டம் என்றே நினைக்கிறேன். அவரின் இந்த திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால் அது காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையக்கூடும்.

அது குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

கட்டுரையின் அடுத்தப் பகுதி - In the Line of Fire - Nuclear Proliferation

Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf


மேலும் படிக்க...

உளவு நிறுவனங்கள்

உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.

பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.

இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. பாக்கிஸ்தானின் உளவாளிகளில் முஸ்லீம்களை விட இந்துக்கள் மற்றும் பிறர் தான் அதிகம். ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.

அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி - Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, "பிரதேச பெரியண்ணண்" போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.

ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.

ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல, இந்தியா உட்பட மேலும் படிக்க...