வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒபாமா முன்வைத்த காப்பீடுத் திட்டத்தை விட சிறந்தத் திட்டமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பொங்க கூறுகிறார். அவர் அதற்கு கூறும் காரணம் காப்பீடுத் தொகையை தமிழகத்தில் அரசாங்கமே கொடுத்து விடுகிறது. அமெரிக்காவில் தனிநபர்களும், நிறுவனங்களும் கொடுக்கின்றன. மக்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் தமிழகத்தில் காப்பீடு திட்டம் நிறைவேறுவதால் இது அமெரிக்காவை விட சிறந்தத் திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களின் வாதம்.

ஆனால் சில அடிப்படை உண்மைகள் இங்கே தெளிவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் இந்த இலவச காப்பீத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு தனியார் காப்பீடு நிறுவனங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனக் கூறலாம். தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.

இது தவிர அமெரிக்காவை விட தமிழகத்தின் திட்டம் சிறந்தது என மு.க.ஸ்டாலின் கூறுவது சரியானது அல்ல. கலைஞர் காப்பீடு திட்டத்தின் தற்போதைய ஓட்டுச் சாதனை எதிர்காலத்தில் வேதனையாக மாறலாம். அதுவே அமெரிக்கா நமக்கு கற்றுத் தரும் பாடம் ஆகும். அமெரிக்க சுகாதார நலம், காப்பீடு நிறுவனங்களின் அசுரத்தனமானப் பிடியில் உள்ளது. பல அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக முயன்றும் காப்பீடு நிறுவனங்களின் பிடியை சுகாதார நலத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியவில்லை. சுகாதார நலத்தில் உள்ள காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே (To Regulate Insurance Companies) ஒபாமா சுகாதார நல மசோதாவைக் கொண்டு வந்தார். தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசாங்கமே நடத்தும் காப்பீடு திட்டத்தையும் (Public Option) ஒபாமா முன்வைத்தார். ஆனால் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. வலதுசாரிகளும், மிதவாதிகளும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் நடத்தும் காப்பீடு நிறுவனம் அழித்து விடும் எனக்கூறி எதிர்த்தனர். இறுதியில் இத்தகைய அரசாங்கம் சார்ந்த காப்பீடு இல்லாமல் தான் ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறியது.
ஆனால் தமிழகத்திலோ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறையில் காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நுழைக்கிறது கருணாநிதி அரசாங்கம். ஒபாமா செய்ய முனைவதற்கு நேர் எதிரானது கலைஞர் காப்பீடு திட்டம். அதாவது அமெரிக்காவில் எந்தச் சீர்கேடுகளை ஒபாமா சீர்திருத்த முனைகிறாரோ அதே சீர்கேட்டினை தமிழகத்தில் நுழைத்துக் கொண்டிருகிறது கருணாநிதி அரசாங்கம்.

தமிழகத்தின் மொத்தமுள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர் காப்பீடு பெறும் பொழுது மருத்துவச் செலவுகள் படிப்படியாக ஏறத்தொடங்கும். அதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. காப்பீடு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள், லாபம் போன்றவை புதிதாக மருத்துவச் செலவுகளில் புகுத்தப்படுகிறது. இவை தவிர காப்பீடு பாலிசிகள் மூலம் செல்லும் பொழுது மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்கி கொள்ள தேவையற்ற சோதனைகளை பரிந்துரைக்கின்றனர். காப்பீடு நிறுவனம் கொடுக்கப் போகிறது என நுகர்வோரும் இந்தக் கூடுதல் மருத்துவச் செலவுகள் குறித்து கண்டுகொள்வதில்லை. இத்தகைய அதிக மருத்துவச் செலவுகளை ஆரம்பத்தில் காப்பீடு பாலிசிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களும், மருத்துவமனைகளும் செய்தாலும் எதிர்காலத்தில் இது பலருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளது. பணம் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வரும் தமிழகத்தில் இத்தகைய வாய்ப்பினை மறுக்க முடியாது. அதே போல காப்பீடு நிறுவனங்களும் மருத்துவமனைகளை காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களையே சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கும். பாலிசிகள் மூலம் அதிக வருமானத்தை பெறும் வாய்ப்புகளை தனியார் மருத்துவமனைகள் கைவிடப்போவதில்லை. இவ்வாறு மருத்துவச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்கம் வழங்கும் காப்பீடுகள் தவிர தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சலுகையாக காப்பீடுகளை வழங்குகின்றன. தமிழகத்தில் காப்பீடு வைத்திருப்போரின் தொகை அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். தற்பொழுது காப்பீடு தேவையில்லை என நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களும் எதிர்காலத்தில் காப்பீடு எடுக்க வேண்டிய நிலை நோக்கி தள்ளப்படுவார்கள். அதைத் தான் காப்பீடு நிறுவனங்கள் செய்ய நினைக்கின்றன. அதன் சோதனை பிசினஸ் மாடல் (Business Model) தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் செயல்படுத்தப்படும் இந்த இலவச காப்பீடு திட்டங்களோ என கருத இடம் இருக்கிறது.

இது போகிறப் போக்கில் வரும் சந்தேகம் அல்ல. அமெரிக்காவில் காப்பீடு நிறுவனங்கள் செயல்படும் விதங்களை உற்று நோக்கும் பொழுது இவ்வாறு கருத இடம் இருக்கிறது. நான் இங்கே தமிழகத்தையும், அமெரிக்காவை ஒப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அமெரிக்க சூழலும், தமிழக சூழலும் முற்றிலும் வேறானவை. அதே நேரத்தில் உலகெங்கிலும் அமெரிக்க பாணியிலான பொருளாதாரம், அமெரிக்க பாணியிலான தாக்கங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அத்தகைய தாக்கம் காப்பீடில் நுழையும் பொழுது ஆபத்தாகவே முடியும். தமிழகத்தில் காப்பீடு நிறுவனங்களும் அது சார்ந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்படும் விதம் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரை அமெரிக்கா சுகாதாரம் குறித்தே ஆகும். அமெரிக்காவில் சமீப நாட்களில் மிக அதிகமாக அலசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் - ஓபாமாவின் சுகாதார நல மசோதா. இந்த அமெரிக்க அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியப் பாடம் நிறைய இருப்பதாக நான் நினைக்கிறேன். தனியார் காப்பீடு நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா குறித்த இந்தக் கட்டுரை வழங்கும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா - பிளவு பட்டு நிற்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்று வரலாறு படைத்த பராக் ஒபாமா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு வரலாறு படைத்தார். அமெரிக்க வரலாற்றில் பல குடியரசு தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போன சுகாதார நல மசோதா - Health Care Reform கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவடிவம் பெற்றது. அமெரிக்காவின் காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

இந்த வெற்றியை ஒபாமாவும், ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் (Democratic Party), லிபரல்களும் கொண்டாடி வரும் சூழலில், எதிர்க்கட்சியினரான குடியரசுக் கட்சியினரும், கன்சர்வேட்டிவ்களும் ஓபாமா அமெரிக்காவை மோசமான பாதையில் அதாவது சோவியத் சோசலிச பாணியில் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் (குறிப்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி) இன்னும் ஒரு படி மேலே சென்று ஒபாமா, ஹவுஸ் சபாநாயகர் (House Speaker) நான்சி பிலோசி, செண்ட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்களது தீவிர இடதுசாரி நிலைப்பாடினை அமெரிக்கா மீது திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் மூவரையும் மாவோயிஸ்ட்கள் என்று கூட ஃபாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்தது. ஒபாமா ஒன்றும் பெரிய புரட்சி செய்து விட வில்லை. சோசலிசம் என்று புகார் சொல்லப்படும் ஒபாமாவின் இந்தப் புதிய மசோதா முதலாளித்துவ காப்பீடு நிறுவனங்களுக்கே இன்னும் அதிகளவில் நுகர்வோர்களை பெற்று தருகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது சுமார் 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை காப்பீடு நிறுவனங்கள் பெறும்.

உண்மை இவ்வாறு இருக்க வலதுசாரிகளின் கூக்குரல் காரணமாக அமெரிக்கா இன்று பிளவு பட்டு நிற்கிறது. இடதுசாரிகள் ஒரு புறமும், வலதுசாரிகள் ஒரு புறமும் என அமெரிக்கா பிளவு பட நடுவில் சிக்கியுள்ள பலருக்கு உண்மை என்ன ? பொய்யான பரப்புரை என்ன என புரியவில்லை. கன்சர்வேட்டிவ் அமைப்புகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இந்த மசோதா நிறைவேறும் தினத்தில் இதனை எதிர்த்து கேபிடல் ஹில்லில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நீக்ரோக்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளனர். நீக்ரோ எனக் கூறுவது அமெரிக்காவில் நிறவெறி (Racism) என்பதாகவே கருதப்படுகிறது. ஒபாமாவும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே எதிர்க்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இவை தவிர வலதுசாரிகள் மேலும் சில வன்முறை சம்பவங்களை அடுத்த சில தினங்களில் அரங்கேற்றினர். 10க்கும் மேற்பட்ட ஆளும் ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு (பாரளுமன்ற உறுப்பினர்கள்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிலரது வீடுகள் தாக்கப்பட்டன. துப்பாக்கிகளை தூக்கப் போவதாக சில வலதுசாரி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன (அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை - இது குறித்த என்னுடையப் பதிவு துப்பாக்கிகள் மீதான காதல்). அடுத்து வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அக் கட்சி அறிவித்துள்ளது. பதிலுக்கு ஒபாமாவும் முடிந்தால் செய்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். ஒபாவிற்கு வீட்டோ அதிகாரம் (Veto Power) உள்ளதால் குடியரசு கட்சியினர் கோஷம் வெற்று கோஷமாகவே இருக்கப் போகிறது. ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்க குடியரசுக் கட்சிக்கு 67 செண்ட் உறுப்பினர்களும், 290 ஹவுஸ் உறுப்பினர்களும் தேவை. தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இதற்குச் சாத்தியமில்லை.

இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து அமெரிக்காவிலும், வாசிங்டன் அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய ஓபாமாவிற்கு தற்போதைய அமெரிக்க சூழல் ஒரு பின்னடைவே ஆகும். ஆனாலும் ஒபாமா தன்னால் முடிந்த அளவுக்கு குடியரசுக் கட்சியை அரவணைத்து செல்லவே முயன்றார். ஆனால் ஒபாமாவின் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடியரசுக் கட்சின் முன் ஒபாமாவின் முயற்சிகள் வெற்றிப் பெற வில்லை. ஓபாமா இன்று தன்னுடைய ஜனநாயக் கட்சியை மட்டுமே சார்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஏன் இத்தனைக் கூச்சல் ? ஆர்ப்பாட்டம் ?

ஆட்சியில் அமர்ந்த உடன் முந்தைய குடியரத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் போல இல்லாமல் ஒபாமா உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய முக்கிய திட்டமாக இந்தச் சுகாதார நலத் திட்டத்தை ஒபாமா அறிவித்தார். ஏற்கனவே பல ஜனநாயக் கட்சி குடியரசுத் தலைவர்கள் இதனை செய்ய முயன்று தோல்வியே அடைந்தனர். பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் இதனை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் அதீத கூக்குரல், எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒபாமாவும் அத்தகைய எதிர்ப்பையே எதிர்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒபாமாவின் அனுபவமின்மையும், தடுமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த மசோதா நிறைவேறப்போவதில்லை என்பதான சூழ்நிலையே இருந்தது. ஒபாமா தன் கட்சியின் தீவிர இடதுசாரிகள், மிதவாதிகள், எதிர்க்கட்சியினர், வலதுசாரிகள் இடையே சிக்கித் தவித்தார். இந்த மசோதாவில் தோல்வி அடைந்தால் ஒபாமாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். இந்த தோல்வியில் இருந்து மீள ஒபாமா மிகவும் கடினப்பட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறி இருக்கிறது. இதற்கு காரணம் ஒபாமாவின் தொடர்ச்சியான முயற்சியும், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசியின் தலைமைப் பண்புகளும் தான். ஆனால் இந்த மசோதா நிறைவேறியதால் வலதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அப்படி என்ன தான் உள்ளது இந்த மசோதாவில் ? ஏன் அதற்கு இத்தனை எதிர்ப்பு ?

முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்காவில் நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் முதலாளித்துவத்தின் பிடி இருக்கும். மிக எளிதாக இருக்கும் நம் நாட்டின் எத்தனையோ அம்சங்கள் இங்கு இவ்வளவு குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எனக்கு தோன்றும். அப்படி சிக்கலாக இருக்கும் பலவற்றில் முக்கியமானது சுகாதாரம். உதாரணமாக நம் ஊரில் நமக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவமனை நிர்ணையிக்கும் கட்டணத்தைச் செலுத்துகிறோம். மருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்தகத்திற்கு செல்கிறோம், மருத்துவர் எழுதித்தரும் மருந்துக்கு காசு கொடுத்து வாங்குகிறோம். அவ்வளவு தான்.

ஆனால் அமெரிக்காவில் அது அத்தனை சுலபம் அல்ல. மருத்துவச் செலவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பலர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக கடனாளியாகி உள்ளனர். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் சுகாதார காப்பீடு (Health Insurance) எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதாவது என்றைக்காவது நமக்கு நேர சாத்தியம் உள்ள உடல்நலக் கேடுகளுக்காக முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் கட்டணம் - Premium செலுத்த வேண்டும்.

இத்தகைய காப்பீடுகளை எடுப்பதற்கு நாம் தனியாக காப்பீடுச் சந்தையில் சென்று எடுக்கலாம். நாம் பணியாற்றும் நிறுவனம் மூலமாகவும் காப்பீடுகளை எடுக்கலாம். இதில் பலரும் அதிகம் பயன்படுத்துவது தங்களின் நிறுவனங்களின் மூலமான காப்பீடுகளையே (Employer Based Insurance). அதாவது ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகையாக இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் ஒரு சிறு தொகையை செலுத்த, நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு தொகையை செலுத்தி இந்தக் காப்பீடுகள் வழங்கப்படும் (Group Policy). நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும், பாலிசிகளுக்கும் ஏற்றவாறு வேறுபடும். நான் 250 டாலர் தொடங்கி 400 டாலர் வரை ஒவ்வொரு மாதம் செலுத்தி இருக்கிறேன். அதாவது கணவன், மனைவி இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நிறுவனம் சலுகையாக வழங்கினாலும் கூட நாம் சுமார் 200 டாலர் முதல் 400 டாலர் வரை நம் கையில் இருந்து செலுத்த வேண்டும். வீட்டு வாடகை, வீட்டுச் செலவுக்கு அடுத்து மிக அதிகளவு கட்டணம் இந்தக் காப்பீட்டுக் கட்டணம் ஆகும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து நிறுவனங்களுமே இதனை வழங்குவதில்லை. பலச் சிறிய நிறுவனங்கள் இவ்வாறான காப்பீடுகளை வழங்குவதில்லை. காரணம் அது மிக அதிக அளவிலான நிதிச்சுமையை அந் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றன. நான் கடந்த வருடம் என் இந்திய நிறுவனத்தை விட்டு விலகி தனியாக ஒரு கன்சல்டண்டாக வேலைப் பார்த்த பொழுது ஒரு நிறுவனம் சார்ந்த காப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் சார்ந்தக் காப்பீடு (Employer Based Insurance) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.

ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்து அதன் மூலம் காப்பீடு பெரும் பொழுது கிடைக்கும் பலச் சலுகைகள் காப்பீட்டுச் சந்தைக்கு சென்று நாம் தனியாக பெறும் பொழுது கிடைக்காது. முதல் பிரச்சனை மிக அதிக விலை. நான் ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்த பொழுது காப்பீட்டுத் தொகையாக 400-500டாலர் செலுத்தி இருந்தால் காப்பீடுச் சந்தையில் அதன் விலை 1500 டாலர் என்றளவில் இருக்கும். அதாவது நம் சம்பளத்தில் மிகப் பெரிய தொகையை இதற்குச் செலுத்த வேண்டும்.

எனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் மிக அடிப்படையான ஒரு பாலிசியை தேர்தெடுத்தேன். அந்த அடிப்படையான காப்பீட்டின் தொகை மாதம் ஒன்றுக்கு சுமார் 850-900 டாலர்கள். அடிப்படையான காப்பீடு என்றால் மிகவும் அடிப்படையானது (Very Basic). ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளை இந்தக் காப்பீடுகள் முலம் பெற முடியாது.

இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டிற்கான மிக அதிகளவிலான கட்டணம் - ப்ரீமியம். இத்தகைய அதிகளவிலான தொகையை பலரால் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு காப்பீடு இல்லை என்பதான சூழ்நிலை உள்ளது. இது தவிர நல்ல உடல்நலத்துடன் இருக்கும் பலர் காப்பீடு எடுப்பதில்லை. இவ்வாறு சுமார் 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.

காப்பீடு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை ?

அமெரிக்காவில் மருத்துவக் கட்டணங்கள் மிகவும் அதிகம். இதன் காரணமாக காப்பீடு இல்லாதவர்கள் தங்கள் மருத்துவத்திற்கான சிகிச்சைகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கடன்சுமை காரணமாக திவாலாகும் தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலேயே திவாலாகின்றனர்.

அப்படியெனில் அமெரிக்காவில் அரசாங்கம் எந்த சுகாதார நலனையும் வழங்குவதில்லையா ?

அரசாங்கம் சில சுகாதார நலன்களை வழங்குகிறது. ஆனால் அது அனைவரையும் உள்ளடக்குவதில்லை. அமெரிக்க அரசாங்கம் Medicare, Medicaid போன்ற சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. Medicare 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை வழங்குகிறது. Medicaid வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், வருமானம் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் என சில பிரிவினரை உள்ளடக்கி உள்ளது. ஆனால் காப்பீடு இல்லாத 45 மில்லியன் மக்கள் இந்தப் பிரிவில் வருவதில்லை. அதாவது அரசாங்கம் நிர்ணயிக்கும் வருமானத்தை விட அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் சுகாதார காப்பீடு பெறும் அளவிற்கான வருமானம் இவர்களுக்கு இல்லை.

காப்பீட்டுத் தொகை இவ்வளவு அதிகமாக செலுத்தும் பொழுது, நமக்கு அனைத்து சுகாதார நலன்களும் கிடைக்கிறதா என்றால்...இல்லை என்பதே உண்மை.

காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை விழுங்கும் முதலைகள். பண முதலைகள். தனியார் நிறுவனங்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் என இந்தியாவில் இடதுசாரிகள் பேசுவதை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கேட்டிருந்தால், அமெரிக்காவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். நம்மிடம் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பெறும் காப்பீடு நிறுவனங்கள் நம்முடைய அத்தனை மருத்துவ தேவையையும் நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திடீரென்று கேன்சர் என்ற பெரிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வரை நலமுடன் இருந்த பொழுது அவரிடம் பணத்தை ப்ரீயமாக பெற்ற காப்பீடு நிறுவனம் அவரை எந்தக் கேள்வியும் இல்லாமல் காப்பீட்டில் இருந்து நீக்க முடியும் (சில மாநிலங்களில் இவ்வாறு செய்ய முடியாது. உதாரணமாக நான் இருக்கும் நியூஜெர்சியில் யாருக்கும் காப்பீடு மறுக்க முடியாது. ஆனால் நியூஜெர்சியில் டெக்சஸ் மாநிலத்துடன் ஒப்பிடும் பொழுது கட்டணம் அதிகம்).

இது தவிர இன்னும் பல தில்லுமுல்லுக்களை காப்பீடு நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவருக்கு காப்பீடு எடுக்கும் முன்பு அல்சர் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் தான் மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அதனை ஈடுசெய்ய காப்பீடு எடுக்க வேண்டும். ஆனால் காப்பீடு எடுத்தால் ப்ரீமீயத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அல்சர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் Pre-existing conditions not covered. அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. புதியதாக ஏதேனும் நோய் வந்தால் கிடைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காப்பீடு மொத்தமாக நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இவையெல்லாம் ஏதோ செய்திகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து எழுதப்படுவதில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் நேர்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. வேலையில் இருக்கும் வரை காப்பீடு இருக்கும். வேலையை விட்டு விலகினால் காப்பீடு இருக்காது (COBRA என்ற ஒன்று உண்டு. அது தனிக்கதை. அதிலும் பலச் சிக்கல்கள்). நாம் தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோமே காப்பீடு எடுக்காமல் சில மாதங்கள் இருக்கலாம். காப்பீடுத் தொகையை மிச்சப்படுத்தலாம் என ஒரு முறை காப்பீடு எடுக்கவில்லை. எப்பொழுதுமே இத்தகைய நேரத்தில் தான் உடல்நலக் கேடுகள் அமெரிக்காவில் வரும். கடந்த பல வருடங்களாக காப்பீடு செலுத்திய பொழுது ஒரு ஜூரம் என்று கூட மருத்துவரிடம் நான் சென்றது கிடையாது. மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமே மருத்துவரிடம் சென்று இருக்கிறேன். ஆனால் காப்பீடு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் சரியாக உடல்நலக் கேடுகள் ஏற்பட்டன. மருத்துவரிடமும் செல்ல முடியாது. என்ன செய்வது என புரியாமல் தவித்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக ஒரு மருத்துவரிடன் இருந்து மருந்து பெற்றேன்.


இவையெல்லாம் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே. இன்னும் பல உள்ளன. இவை தவிர பல் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Dental Insurance). கண் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Vision Insurance) என ஒரு பெரிய பட்டியல் உண்டு.

***************************

இவ்வாறான பலப் பிரச்சனைகளை சரி செய்ய ஒபாமா முன்வைத்த திட்டம் தான் சுகாதார நல சீர்திருத்த மசோதா - Healthcare Reform. சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு ஒபாமா இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்ததில் இருந்து தொடர்ச்சியான பிரச்சனைகள். ஒபாமா அமெரிக்காவின் சுகாதார நலத்தை அரசாங்கத்தின் கைகளுக்குள் கொண்டு வர முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபாமாவும் இடதுசாரிகளும் அரசாங்கம் வழங்கும் சுகாதார காப்பீடுகளை (Public Option) முன்வைத்தனர். இதன் மூலமாகவே தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ப்ரீமியத்தை குறைக்க முடியும் என்பது ஒபாமாவின் வாதம். ஆனால் இதனை வலதுசாரிகள் எதிர்த்தனர். இது தனியார் நிறுவனங்களை அழித்து விடும் என்பது அவர்களின் வாதம். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் மீது கன்சர்வேட்டிவ்களுக்கு அப்படியொரு காதல். இந்த மசோதா அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் காப்பீடு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுக்கும் தங்களுடைய மருத்துவருக்கும் இடையில் அரசாங்கம் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பது மற்றொரு வாதம். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே மிதவாதிகள், தீவிர இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் என விவாதம் ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒபாமா தன்னுடைய திட்டம் இது தான் என்ற தீர்மானமான ஒரு வடிவத்தை காங்கிரசிடம் அளிக்கவே இல்லை. ஒரு மேலோட்டமான வரையறையை மட்டும் செய்து விட்டு மசோதாவை உருவாக்கும் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டார். இதுவே பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து. ஒபாமா இவ்வாறு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் - பில் க்ளிண்டன் தோல்வியில் கற்றப் பாடம். தற்பொழுது ஒபாமாவின் முக்கிய ஆலோசகர் ராகம் இமானுவல். இவர் பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் தங்களுடைய திட்டமாக ஒரு சுகாதார மசோதாவை உருவாக்கி அதனை நிறைவேற்றுமாறு காங்கிரசை பணித்தனர். காங்கிரஸ் அதனை அப்படியே நிராகரித்தது. எனவே ஒபாமா அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நோக்கமாக ஒரு வரையறையை மட்டும் உருவாக்கி விட்டு முழு மசோதாவையும் காங்கிரசே செய்யுமாறு ஒபாமா பணித்தார். இதன் மூலம் பலரது யோசனைகளையும் உள்ளடக்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து பிரிவினரது ஆதரவையும் பெறலாம் என்பது ஒபாமாவின் திட்டம். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இயலாத காரியம் என ஒபாமா உணர்ந்தனர். விவாதங்களும், எதிர் விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

பல தடைகளுக்குப் பிறகு இறுதியாக கடந்த வாரம் நிறைவேறிய ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்.

- இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது (2014ல்) அனைவரும் கட்டாயமாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். தற்பொழுது இளைஞர்களும், நல்ல அரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடு எடுப்பதில்லை. காரணம் மருத்துவ தேவையே இல்லாத பொழுது காப்பீடு தேவையில்லை என்பதே. அதனால் மருத்துவத் தேவை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடுகளை நாடும் பொழுது காப்பீடுத் தொகை அதிகரிக்கிறது. மாறாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடுகளை எடுக்கும் பொழுது அதில் பெறும் வருவாயைக் கொண்டு உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யலாம். இதனால் ப்ரீமியம் அதிகரிக்கப்படாமல் ஒரே சீராக வைத்திருக்க முடியும். ஆனால் இதனை பலர் எதிர்க்கின்றனர். காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்குவது தாங்கள் உயிர் வாழ்வதற்கே ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் இருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை.

- காப்பீடு நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற போக்கிற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் - Children with Pre-existing conditions are not covered by Insurance. தற்பொழுது ஆரோக்கியமில்லாமல் உள்ள குழந்தைகளின் மருத்துவச்செலவை காப்பீடு மூலம் பெற முடியாது. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக பெற்றோர்கள் திண்டாடும் நிலைமை உள்ளது. இந்தச் சட்டம் இதனை தடை செய்கிறது. இது இந்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளின் மூலம் இந்த அமலாக்கத்தை 2014 வரை கடத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.

- 26 வயது வரை தங்களின் பெற்றோர்களின் காப்பீடுகளிலேயே இருந்து கொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்பொழுது 19வயதுக்கு மேல் தனி காப்பீடுகளை எடுக்க வேண்டும். பெற்றோர்களின் காப்பீடுகளில் இருக்க முடியாது. இது பலப் பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இந்த வருடம் முதல் அமலுக்கு வரும் இந்தப் பிரிவு பல பெற்றோர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- நோய் கண்டறியப்பட்டவுடன் காப்பீடுகளில் இருந்து நீக்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இது தவிர நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியான ப்ரீமியம், நோய் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியான ப்ரீமியம் போன்றவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது

- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு (Pre-existing Conditions) தற்பொழுது காப்பீடு வழங்கப்படுவதில்லை. அதனையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது. இது 2014ல் அமலுக்கு வருகிறது.

- இவை தவிர அமெரிக்காவின் பற்றாக்குறையை இந்த மருத்துவ நல மசோதா குறைக்கும் என கூறப்படுகிறது.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா இவ்வாறு பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் பெருவாரியான அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பே இருந்து வருகிறது.

அரசாங்கமே நடத்தும் காப்பீடு இல்லாத இந்த திட்டத்தால் பெரிய அளவு நன்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மாறாக இந்த திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கே அதிக நன்மையை கொடுக்கும். அதாவது 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இந்தக் காப்பீடு நிறுவங்கள் பெறும். காப்பீடு நிறைவேறிய வாரத்தில் இந்தக் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். காப்பீடுகளின் ப்ரீமியத்தை இந்தத் திட்டம் எந்த வகையிலும் குறைக்காது என்பது என்னுடய நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்த மசோதா ஒரு முதல் படி தான் என்றும் Public Option போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் ஒரு வாதம் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வரும் நவம்பர் தேர்தலில் ஆளும் ஜனநாயக் கட்சி பின்னடைவைச் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இது அடுத்தச் சில வருடங்களில் சாத்தியமற்றதே.

இந்த மசோதாவிற்கு எதிராக பல வாதங்கள் கூறப்பட்டாலும் காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மிக முக்கியமான ஒரு மசோதா என்றளவில் ஒபாமாவின் இந்த மசோதா ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. மேலும் படிக்க...

ஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது

ஹிந்து ராம் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஹிந்து நாளிதழ் மூலம் செய்து வரும் சேவையை பாராட்டி மற்றொரு விருதினை சிறீலங்கா அரசு சார்ந்த NGO நிறுவனம் அளித்து இருக்கிறது. Sri Lanka Mass Media Society (a government-supported NGO to promote excellence in the media world) என்ற நிறுவனம்இதனை வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஊடகங்களை பாராட்டி விருது வழங்குகிறதாம். புல்லரிக்கிறது. ஏன் புல்லரிக்கிறது என்றால் - Sri Lanka has been ranked as the third most dangerous place for the media in the world என்பது தான்...

சமீபத்தில் வெளியான பி.பி.சி செய்தி
'Drop' in S Lanka press freedom
International media watchdog groups say there has been a marked deterioration in press freedom in Sri Lanka.




பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து ஊடக அமைப்புகள் Stop the War on Journalists in Sri Lanka என்று போராட்டத்தையும் நடத்தினர்.


TV journalist killed in Sri Lanka




இந்தளவுக்கு ஊடகங்கள் மீது கரிசனமாக இருக்கும் சிறீலங்கா அரசாங்கம், அதனுடைய ஒரு அமைப்பு மூலமாக ஆசியாவின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதினை ராமுக்கு அளிக்கிறதாம். புல்லரிக்காதா பின்னே ?

அந்த விருதினை வாங்கிக் கொண்டு ஆற்றோ, ஆற்றோன்னு ஒரு உரையாற்றி இருக்கிறார் பாருங்கோ, அதனை நினைச்சா இன்னும் புல்லரிக்கிறது.

“Time has come for the media in South Asia to seriously introspect on its role on how it could improve its performance in betterment of the welfare of the people and the peace processes in the society,” N. Ram, Editor-in-chief of The Hindu, said here on Tuesday.

அவருடைய ஹிந்து நாளிதழை அவர் முதலில் introspect செய்தால் பரவாயில்லை.

****

ஹிந்து நாளிதழை தொடர்ச்சியாக நான் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் என்னுடைய கடந்த பதிவை சார்ந்து முன்வைக்கப்பட்டது. ஹிந்து நாளிதழ் ஆசிரியர் குறித்து முன்பு எழுதிய ஒரு பதிவை அவர்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...

இந்திய அதிகார மையத்திற்கு, ஈழம் சார்ந்து தாங்கள் முன்வைக்க விரும்புகிற விடயங்களை நேரிடையாக மக்கள் மத்தியில் வைக்க முடியாத சூழல் உள்ளது. அதனால் எப்பொழுதுமே ஹிந்து அதனை முன்வைத்து வந்திருக்கிறது. 1980களில் இருந்து 2000ம் வரை இதே நிலை தான். அதனால் தான் ஹிந்துவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. ஹிந்து நாளிதழை எதிர்ப்பது இந்திய அதிகாரமையத்தை எதிர்க்கும் ஒரு செயல் என நான் நம்புகிறேன். மேலும் படிக்க...

ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்

தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட காமெடி.

இன்றைக்கு பேச்சுரிமை குறித்து பேசும் ஹிந்து, ஈழத்திற்கு ஆதரவாக குரலெழுப்புவதும் பேச்சுரிமை தான் என்பதையும், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரலெழுப்ப முயன்ற வைகோ போன்ற தலைவர்களின் கைதினை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டதையும் சுட்டி காட்ட வேண்டிய தேவையுள்ளது.

என்.ராமின் பின்புலம் குறித்து தெரியதவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பது அவசியம் என்று தோன்றினாலும், நேரமின்மை காரணமாக ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு செல்லலாம் என நினைக்கிறேன். ஹிந்து ராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்படாத தூதுவராக தமிழகத்திலும், இந்தியாவிலும் செயலாற்றிக் கொண்டிருந்தார்/கொண்டிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவர் விசுவாசமாக பணியாற்றியதன் அடையாளமாக அவருக்கு அவருடைய "குடும்ப நண்பர்" சந்திரிகா குமாரதுங்கா "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற சிறீலங்காவின் உயரிய விருதினை அளித்து கொளரவப்படுத்தினார். இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற தனிப்பெரும் பெருமையும் என்.ராமிற்கு உண்டு.

இது குறித்து செய்தியினை ஹிந்து நாளிதழிலேயே சென்று வாசிக்கலாம்.
http://www.hinduonnet.com/2005/11/15/stories/2005111517191400.htm

அந்தச் செய்தியின் ஒரு சாரத்தினை இங்கே அளிக்கிறேன்.

The "Sri Lanka Ratna" is conferred for "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka in particular and\or humanity in general." Mr. Ram is the first Indian recipient of the honour, which is conferred on a restrictive basis.

அதாவது சிறிலங்காவிற்கு அவர் அளித்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்பதை அவர் எப்படி சாதித்தார் ?

130 வருட "பாரம்பரியம்" மிக்க ஹிந்து நாளிதழை சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கைப் பரப்புச் சாதனமாக மாற்றியதன் மூலம் சாதித்தார். செய்திகளை தமிழகத்தில் திரித்து வெளியிட்டார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அவர் செய்த அரசியல் புரோக்கர் வேலைகளை யாருமே அதிகம் அம்பலப்படுத்தாமல் போனதும், ஹிந்துவின் "பாரம்பரிய பேனரும்" அவருக்கு வசதியாக இருந்தது.

**********

ஈழப் பிரச்சனையில் ஹிந்துவின் பிரச்சார போக்கில் தற்பொழுது ஒரு மாற்றம் தெரிவதை ஹிந்துவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்தி படுகொலை என்ற வாதத்தை தொடர்ந்து ஈழப் பிரச்சனையில் ஹிந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் நிர்பந்தங்களுக்காக ஈழ மக்களுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளது ஹிந்துவிற்கு தன் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் இவ்வாறான ஒரு போக்கினை எடுக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்தை சார்ந்த சூழ்நிலையின் பொழுது, தமிழ்ச்செல்வனை கொன்றது பிரபாகரன் என கூறிய அறிவுஞீவி "தமிழர்கள்" தான் காங்கிரஸ் கதர் வேட்டிகள். டெல்லியின் எடுபிடிகளான காங்கிரஸ் கதர்வேட்டிகள் மீது எனக்கு பெரிய நம்பிக்கையோ, மரியாதையோ இல்லை. ஆனால் தங்களின் அரசியல் தேவைக்காக தமிழக காங்கிரஸ், ஈழப்பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டினையே சார்ந்துள்ள சூழ்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் உள்ளிட்ட கருத்துகணிப்புகளில் ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் அணுகியுள்ள சூழ்நிலையில் ராஜீவ் படுகொலை என்ற வாதம் வலுவிழக்கிறது.

தமிழ் ஈழத்தை எதிர்க்க, ராஜீவ் படுகொலை என்ற ஆயுதத்தை கடந்த காலங்களில் வெற்றிகரமாக பிரயோகித்து வந்த ஹிந்து, அது கூர்மழுங்கியதும் தற்பொழுது புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.

அது தான் காஷ்மீர் பயங்கரவாதம்.

காஷ்மீர் பிரச்சனையையும், ஈழப் பிரச்சனையும் பிணைத்து விடுவதன் மூலம் "இந்திய தேசிய உணர்வை" சீண்டி விட்டு ஈழத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்து வருகிறது. ஈழப் பிரச்சனையை காஷ்மீருடன் ஒப்பிடுவதன் மூலம் அண்டை நாட்டில் ஒரு புதிய நாடு உருவானால், நம் நாட்டிலும் புதிய நாடு உருவாகும் என்ற அச்சத்தை விதைப்பதே ஹிந்துவின் நோக்கம். இதன் மூலம் இந்தியத் தமிழர்களை, இந்தியர்களாக மட்டும் வைத்திருக்க முனைவதும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத் தமிழர்களை திருப்புவதும் ஹிந்துவின் நோக்கமாக உள்ளது.

ஹிந்துவில் மாலினி பார்த்தசாரதி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்

Tamil Nadu’s politicians clearly have different standards for India and for Sri Lanka. It would appear that they accept that battling terrorism in India and saving Kashmir from Islamist jihadis are important national tasks but not so in Sri Lanka which has been menaced for more than two decades by the LTTE.


....When Pakistani generals and Islamist militants characterise the separatist uprising in Kashmir as a "freedom struggle," the collective Indian national consciousness is understandably outraged. Politicians in India are rarely exercised over concerns that the human rights of innocent citizens are often trampled upon in police action against terrorists or their perceived accomplices. There is indeed a broad-based political consensus behind the Indian state when it takes strong steps to root out terrorism.

என்னைப் போன்றவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலையையும் ஆதரிக்கவே செய்கிறோம் என்பதால் இந்த வாதம் எந்த மாற்றத்தையும் எங்களுடைய நிலைப்பாட்டில் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால் ஆனால் மைய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் காஷ்மீர் குறித்த பெரிய புரிதல் இல்லாத சூழ்நிலையை தங்களுடைய சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைக்கு ஹிந்து பயன்படுத்திக் கொள்கிறது. ஈழப் பிரச்சனையை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ஹிந்து ராம் இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா ரத்னா பட்டத்தை கட்டிக் காக்க வேண்டும் அல்லவா ?

இந்திய தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, சிறீலங்காவை கட்டிகாக்க ஹிந்து துடிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவை அப்படி கட்டிக்காக வேண்டிய தேவை அவருக்கு ஏன் உள்ளது என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துவின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

**********

சிறீலங்காவை கட்டிகாக்க துடிக்கும் ஹிந்து, தமிழர்கள் குறித்த செய்திகள் எதையேனும் வெளியிடுகிறதா ?

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கை ஒரு பெரிய மனித அவலத்தை ஈழத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கிளிநொச்சியை விட்டு தமிழ் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள விமானப்படை விமானம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய மிக்க பத்திரிக்கை நியாயமாக இந்தச் செய்திகளை வெளியிட வேண்டாமா ? கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? ஆனால் ஹிந்து அதனை செய்யவில்லை.

பிபிசி போன்ற செய்தி தளங்களில் தமிழர்கள் தினமும் கைது செய்யப்படுவது (Sri Lanka Tamils 'being arrested' ), கிளிநொச்சியில் மக்கள் போரினால்பாதிக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன ('The intolerable noise of ஷேல்ல்ஸ்')

இப்படியான செய்திகளை வெளியிட்டால், தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை இன்னும் அதிகரிக்கும். எனவே ஹிந்து அதனை செய்யாது. மாறாக இன்றைக்கு ஹிந்து ஒரு முக்கியமான செய்தியினை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


‘I am committed to political solution and ending Tamil civilian hardships’

N. Ram

Chennai: “I am firmly committed to a just and enduring political solution” to the Tamil question in Sri Lanka and “am clear that there are no military solutions to political questions,” President Mahinda Rajapaksa told me in a telephonic conversation from Colombo on Thursday morning.

மகிந்த ராஜபக்ஷ என்.ராமிடம் மேற்கண்டவாறு தொலைபேசியில் கூறியிருக்கிறாராம். உடனே ஹிந்து அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்தனை நாளாக ஹிந்து ஏன் கேட்கவில்லை ? மகிந்த ராஜபக்ஷ ஏன் கூற வில்லை ?

இத்தனை நாளாக தமிழர்கள் தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு விழித்துக் கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் எழுந்துள்ள சூட்டை தணிக்க ஹிந்து தன்னலான உதவியை செய்கிறது. வாங்கிய "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற ரொட்டி துண்டுக்கு உழைக்க வேண்டாமா ? ஹிந்து ராம் என்ற விசுவாசமான "பிறவி" அந்த ரொட்டி துண்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது.

********

போரினால் மிகப் பெரிய மனித அவலம் நேரும் இந்த தருணத்திலும் மனிதநேயம் அற்ற வகையில் செயல்பட்டு வரும் ஹிந்து நாளிதழை கண்டிப்பதோ, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையில்லாதது. தமிழர்களாக தங்களை நினைக்கும் அனைவரும் ஹிந்து நாளிதழை "காசு கொடுத்து" வாங்க கூடாது. தமிழர்களின் காசில் கொழுத்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்படும் ஹிந்துவை முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

அப்படி செய்தால் ஹிந்து அலுவலகம் தானாகவே சென்னை அண்ணாசாலையில் இருந்து கொழும்பு LakeHouse க்கு மாறிவிடும். ஹிந்து இருக்க வேண்டிய இடமும் கொழும்பு LakeHouse தான்.

எனவே ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்...

*******

விகடனை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரசும் சமீபத்தில் ஈழப்பிரச்சனை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் கீழே உள்ளது

மேலும் படிக்க...

ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளியாகிறது.

இன்றைக்கு தமிழ் ஈழத்தை எதிர்க்கும் பலர், 1991க்கு முன்பும் தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அன்றைக்கு கிடைத்த காரணம் தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு அமைந்து விடும் என்பது தான். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற பூச்சாண்டிக் கதையை ராஜீவ் படுகொலை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அடிப்படையான தேவை ஒன்று தான் - தமிழ் ஈழம் எக்காரணம் கொண்டும் அமைந்து விடக்கூடாது.

1991க்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழம் குறித்து எதுவுமே தெரியாது, பிராபகரன் தவிர தமிழ்ச்செல்வன் யார் என்று கூட தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பன போன்ற பல்வேறு கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வந்தன. இந்தக் கதைகள் பொய்க் கதைகள் என நமக்கு தெரிந்தாலும் அதனை நம்மால் வலுவாக மறுக்க முடியவில்லை. ஏனெனில் அதனைச் சார்ந்த கருத்து கணிப்பு எதுவும் எடுக்கும் தைரியம் தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிக்கைக்கும் இருந்ததில்லை. அப்படியே வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்திருக்கும்.

உதாரணத்திற்கு நக்கீரன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? அந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை, அந்த இதழின் நம்பகத்தன்மை, அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நம்பகத்தன்மை, புலிகளுக்கும் - நக்கீரனுக்கும் இருக்கும் தொடர்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டிருக்கும்.

ஆனால் 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க விகடன் இதழ் சொல்லும் பொழுது அந்த கருத்துக்கணிப்பிற்கு இருக்கும் நம்பகத்தன்மையே தனி தான். அதனை இன்றைக்கு கண் கூடாக காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். விகடனா இப்படி ஒரு சர்வே எடுத்திருக்கிறது என்ற ஆச்சரியம். அவர்களாலேயே இதனை நம்ப முடியவில்லை. வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் இந்த கருத்துகணிப்பை எடுத்திருந்தால் நொடிப்பொழுதில் அதன் தேசபக்தியை கேள்வி கேட்டு கருத்துகணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்து இருக்க முடியும். ஆனால் விகடன் ஆயிற்றே ? 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க தங்களுக்கு நெருக்கமான விகடனை என்ன செய்ய முடியும் ? வாய்மூடி மொளனமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தான் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை என்ற ஒன்றினை மையப்படுத்தி தமிழகத்தில் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என கூறி வந்த பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். அவர்களை வாய் மூட செய்த ஒரு காரணத்திற்காவது நான் விகடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் Vikatan survey vindicated our stand.

******

விகடனின் இந்த கருத்து கணிப்பு வரவேற்கபட வேண்டிய ஒன்று தான். என்றாலும் விகடனின் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.

ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை. தங்களின் தனிப்பட்ட கருத்தினையே தமிழக மக்கள் மீது திணித்து இருக்கின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விகடனின் கருத்து கணிப்பும் அதைத் தான் இங்கு செய்கிறது.

இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க முடியாது என கலைஞர் கூறினார்.

இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய இராணுவத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
http://www.tamilnation.org/indictment/Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf

இந்தியாவின் பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi's military adventure in Sri Lanka would be India's Viet Nam, I had not anticipated that India's Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and I had also said repeatedly that soldiers everywhere alike, their training and the rigours of their life, not to speak of the brutalisation caused by war, making them behave in the most inhuman ways when under pressure.

That is why when in the early days of India's military action in Sri Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be contradicted by the India government publicists I joined issue with everyone who came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do their day's good deeds, particularly for damsels in distress.

Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai. London's Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by the Indian army in Velvettiturai says that, if anything "this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in the back".

இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.

ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?

அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த ராஜீவ் காந்தி குற்றவாளியா, குற்றமற்றவரா, மன்னித்து விடலாமா என்ற கேள்விகளை விகடன் ஏன் முன்வைக்க வில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

******

விகடன் நடத்திய இந்த சர்வே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். என்றாலும் இந்த சர்வே முடிவுகளை வெளியிட்ட விதம் என்னை எரிச்சல் படுத்தியது என்பது தான் உண்மை.

“நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் கைதாக வேண்டும்!” என்பது விகடனின் சர்வே முடிவை ஒட்டிய தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.

சரி விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள் என்ன புள்ளிவிபரங்களை தருகிறது என பார்ப்போம்.

பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என கூறியவர்கள் 43.02%,
குற்றமற்றவர் என கூறியவர்கள் - 16.90%
குற்றத்தை மன்னித்து விடலாம் என கூறியவர்கள் 40.07%. (மன்னித்து விட வேண்டும் என்றால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கைது செய்ய வேண்டாம் என்பது தான் பொருள் என நினைக்கிறேன்)

அதாவது 56.97% பேர் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பிரபாகரன் கைதாக வேண்டும் என தமிழக மக்கள் கூறியுள்ளதாக விகடன் தலைப்புச் செய்தி வெளியிடுகிறது ? என்ன கொடுமை சார் இது ?

மும்முனைப் போட்டியில் 43.02% பெற்ற கட்சி வெற்றி பெற்றது, மற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல இது என்ன தேர்தல் கருத்து கணிப்பா ? ஒரு கருத்தினை ஒட்டிய கேள்வி என்னும் பொழுது அந்தக் கருத்தினை சார்ந்த அனைத்து விடயங்களையும் அலசி தான் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும். ஆனால் விகடன் அதனைச் செய்ய வில்லை.

இந்தக் கருத்து கணிப்பின் முடிவுகளை ”உண்மையாக” அப்படியே வெளியிடுவதில் விகடனுக்கு உள்ள நிர்பந்தம் எனக்கு புரிகிறது.

இதே சர்வே “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் குற்றமற்றவர்!” என்றோ “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரனை மன்னித்து விடலாம்” என்றோ வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இந்தியாவின் மேல்தட்டு ஊடகங்களும், தமிழகத்தில் உள்ள விகடனின் ”சொந்தக்கார” ஊடகங்களும் விகடனை ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். விகடனின் நாட்டுப்பற்று குறித்து கேள்விகள் எழுந்திருக்கும். 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க விகடன் எப்படி தேச விரோத பாதையில் செல்கிறது என்பது குறித்த கவலைகள் எழுந்திருக்கும். விகடனுக்கு புலிகள் வழங்கிய வெளியே தெரியாத தொகை குறித்த வேள்விகள் எழுந்திருக்கும்.

எனவே இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க விகடன் ஒரு உண்மையை மட்டும் வெளியிட்டு விட்டு மற்றொரு உண்மையை புள்ளிவிபரங்களுடன் சேர்த்து மறைத்து விட்டது. மேலும் படிக்க...

ஈழம் - தமிழகம் : தமிழக அரசியல் : கலைஞரின் ஈழ ஆதரவு

தமிழ்ச்செல்வனின் படுகொலை, தமிழகத்தில் அதனால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை எழுந்துள்ளதாக மிகைப்படுத்தும் ஈழ ஊடகங்கள், அப்படியான எந்த ஒரு உணர்வும் தமிழகத்தில் இல்லை என உண்மையை மூடி மறைக்கும் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் (மற்றும் அவற்றின் வலைப்பதிவு வால்கள்) என அந்தப் படுகொலையை விட அதனை விளம்பரப்படுத்தும் உத்தியும் - அதன் எதிர்நிலையும் காணப்பட்ட சூழ்நிலை மறைந்து மிக இயல்பான ஒரு சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிற இந்த தருணத்திலே என்னுடைய இந்த இடுகை தாமதமாக எழுதப்படுகிறது.

ஜெயலலிதா குறித்து பெரிய விமர்சனத்தினை நாம் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா இவ்வாறு செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம். எந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கும் கோணத்திலேயே பார்க்கும் ஜெயலலிதா இந்தப் பிரச்சனையையும் அரசியலாக்க முனைந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பயமுறுத்தி பிறகு அடங்கிப் போய் விட்டார். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறு எழுதியது.

Fearing isolation on the "Tamil issue" in a state dominated by ethnic politics, Jayalalitha quickly issued a statement claiming that Tamil blood ran in her veins too, even though she was born outside Tamil Nadu in Mysore. She has apparently given up the idea of going to the Supreme Court after seeing the general political mood in the state on the issue of Tamilselvan.

கலைஞர் வழக்கம் போல ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்தார். முன்பெல்லாம், ஜெயலலிதா கலைஞரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று தாக்கும் பொழுதெல்லாம் ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் எப்பொழுதோ (1980களில் ?) வெளியிட்ட அறிக்கையை தான் சுட்டி காட்டுவார். எனவே விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது தான் மட்டும் அல்ல. ஜெயலலிதா கூட "ஒரு காலத்தில்" ஆதரித்தார் என கலைஞர் சுட்டி காட்டுவார். ஆனால் இப்பொழுது வைகோ ஜெயலலிதா பக்கம் இருப்பதாலும், கலைஞருக்கும் வைகோவிற்கும் பகை இருப்பதாலும் விடுதலைப் புலிகளை ஜெயலலிதா அணியில் இருக்கும் வைகோ ஆதரிக்கிறாரே என கேள்வி கேட்டிருக்கிறார்.

வழக்கம் போல தமிழக அரசியலில் இருக்கும் மிக மோசமான அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் பிரச்சனையும் இரையாகி இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு தமிழன் என்ற நிலையையும் கடந்து தன்னுள் இயல்பாக எழுந்த உணர்வின் காரணமாக இரங்கல் கவிதையை எழுதிய கலைஞர், அதனை வழக்கம் போல வெளிப்படையாக கூறிக்கொள்ள தயங்குகிறார். அவரின் இந்த தயக்கமும், அச்சமும் ஈழ விடுதலையின் எதிரிகளுக்கு பல நேரங்களில் வசதியாக இருந்து வந்துள்ளது.
தமிழகத்தில் ஈழ விடுதலை குறித்து எந்தக் கருத்தும் இல்லை என்று கூற தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இம்முறை கலைஞர் தெரிவித்த இரங்கல் இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் பல காலமாக அடங்கி இருந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மாறி எழத் தொடங்கியது. இந்தப் பிரச்சனை குறித்து எழுதிய Economist தமிழகம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளது.

One disturbing development is a revival of interest in Sri Lanka's Tamil issue in the Indian state of Tamil Nadu, just across the 30km-wide (19 -mile) Palk Strait. In the 1980s, its Tamils, now numbering some 60m, helped house, finance, train and arm Sri Lankan Tamil militants. The state's chief minister, M. Karunanidhi, opened a can of worms by penning a poem praising Tamilselvan and talking of the “Tamil brotherhood” binding Tamils across the globe. This revived memories of the late 1980s, when he was also chief minister and openly supported the Tigers.

The main opposition party in Tamil Nadu, the All-India Anna Dravida Munnetra Kazhagam, condemned Mr Karunanidhi's condolence message, saying that he had broken the law by praising a member of a proscribed group. The Tigers were banned in India after the assassination of Rajiv Gandhi, a former prime minister, in 1991. Tamilselvan's death has revived the issue of Tamil ethnicity in Tamil Nadu, which could help whip up support for the Tigers there. This is worrying Sri Lanka. At least one newspaper has asked the government to take the matter up in Delhi.

தமிழகத்தில் உள்ள நிலை குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரார் போன்ற பத்திரிக்கைகள் பல கட்டுரைகளை வெளியிட்டன.

தமிழகம் என்றில்லாமல் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தில்லியின் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

TN students at JNU term slain Tamil Tiger a martyr

கலைஞர் தன்னுடைய விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாவிட்டாலும், தமிழகத்தின் பிற தலைவர்களான வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமா போன்றோர்களுக்கு கலைஞர் போல எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை தாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கலைஞர், ஈழத்தமிழர்களை உணர்வால் ஆதரிக்ககூடியவர் என்றாலும் அவரின் நிலைப்பாடு ஒரளவிற்கு பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதாக தான் நான் நினைக்கிறேன். அது விடுதலைப் புலிகளை ஆதரித்தால் எழும் "ராஜீவ் படுகொலை பூதம்", இந்திய தேசியத்திற்கு எதிரான பிரிவினைவாதிகள் என்ற குற்றச்சாட்டு போன்றவையே. 1989ல் கலைஞரின் ஆட்சி திமுக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கலைக்கப்பட்டது. 1998ல் மைய அரசின் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஜெயின் கமிஷன் பிரச்சனையில் (ராஜீவ் படுகொலை சார்ந்த விசாரணைக் கமிஷன்) ஆட்சியினை இழக்க நேரிட்டது. இந்த இரண்டு காரணங்களும் திமுக விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இவை தவிர மைய அரசியலில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா என இரு கட்சிகளுக்குள் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு திமுகவிற்கு உள்ளது. கொள்கை ரீதியில் பாரதீய ஜனதா கட்சியுடன் ஒட்ட முடியாத ஒரு ஒவ்வாத நிலை கடந்த காலத்தில் திமுகவிற்கு இருந்தது. அந்த நிலையிலே தான் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி தானாக முன் வந்து கடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு செய்ய முனைந்த பொழுது அந்த ஆதரவினை திமுக கெட்டியாக பிடித்துக் கொண்டது. காங்கிரசின் மிக முக்கியமான தோழமைக் கட்சியாக இன்று திமுக உள்ளது. எதிர்காலத்தில் பாரதீய ஜனதா போன்ற மத ரீதியான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை தவிர்ப்பதற்கு இது திமுகவிற்கு உதவும். அதுவும் தவிர பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதால் திமுகவிற்கு தமிழகத்தில் பெரிய பலம் இல்லை. மயிலாப்பூரில் வாக்குகளை பெறுவதே கடினம் என்னும் நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி மாநில அரசியலில் திமுகவிற்கு பெரிய பலம் கிடைத்து விடாது. மாறாக காங்கிரசுடன் கூட்டணி திமுகவிற்கு மாநில அரசியலிலும் பலத்தைச் சேர்க்கிறது. எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் நேருகிறது. தமிழக அரசியல் நிலைப்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஈழ விடுதலை பின்னுக்கு தள்ளப்படும் சூழல் திமுகவிற்கு உள்ளது.

திமுகவின் அரசியல் நிர்ப்பந்தம் இவ்வாறாக உள்ளது என்றால் ஜெயலலிதாவின் அரசியல் நிர்ப்பந்தமும் திமுகவை போல காங்கிரசைச் சார்ந்தே தான் அமைந்து உள்ளது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவை கைகழுவி விட்ட நிலையில் அடுத்து வரும் பாரளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான சவால். அதுவும் அந்த பாராளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சியாக எதிர்கொள்வது அதனை விட சவாலானது. சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடந்த இடைத்தேர்தல்கள் விஜயகாந்த்தின் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை, அதுவும் அதிமுக வாக்கு வங்கியில் இருந்து பிளந்து பெற்று வரும் நிலை அதிமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழக வாக்கு அரசியலில் இருக்கும் சினிமா கவர்ச்சி கலாச்சாரம் அதிமுகவை சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சினிமா கவர்ச்சியை சார்ந்த வாக்கு வங்கி தான். திமுகவின் வாக்கு வங்கி என்பது அவ்வாறானது அல்ல. அதுபோலவே கடந்த காலங்களில் "கருணாநிதி எதிர்ப்பு" என்பது தமிழக அரசியலில் முக்கியமான ஒன்று. அதனைச் சார்ந்து தான் தமிழக அரசியல் இயங்கி வந்துள்ளது. சினிமாவும், கலைஞர் எதிர்ப்பும் அதிமுகவின் முக்கியமான பலமாக இருந்து வந்துள்ளது.

விஜயகாந்தின் அரசியலை கவனிக்கும் பொழுது அவரும் இதே அரசியலை தான் பின்பற்றுகிறார் என்பதும், அவரது வளர்ச்சி அதிமுகவிற்கு வேட்டு வைக்க கூடியதாக உள்ளதையும் ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். விஜயகாந்துடன் இருக்கும் பண்ருட்டியார் இவ்வாறான அரசியல் விளையாட்டுகளை கற்று தேர்ந்தவர் என்ற வகையிலே அதிமுக முன்வைக்க கூடிய அதே உத்திகளை முன்வைத்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க வேண்டுமெனில் காங்கிரசை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேருகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஓரளவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா தான். 1998ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாரதீய ஜனதா கட்சியுடன் அமைத்த கூட்டணி மூலம் பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை தொடங்கி வைத்தார். அது போலவே பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தவரும் ஜெயலலிதா தான். கடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாத நிலை இருந்தது. 1998ல் பாரதீய ஜனதா ஜெயலலிதாவின் equationக்குள் வர முக்கிய காரணம், அப்போதைய மைய அரசியல் சூழல் தான். தமிழகத்தைச் சார்ந்து இவை அமைந்ததில்லை. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதே அதிமுகவிற்கு பலத்தை கொடுக்கும். ஜெயலலிதா அதற்கு தொடர்ந்து முயலுவார். அதனால் தான் சேது சமுத்திர திட்டத்தில் பாஜக தாமாக முன் வந்து "சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதையும் மறந்து" அதிமுகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய பொழுதும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை.

காங்கிரசை தன் பக்கம் இழுக்க அதிமுக முனையும் பொழுது, காங்கிரசை தன் பக்கம் தக்க வைக்க திமுக நினைக்கும். எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் திமுக எப்பொழுதுமே அடக்கியே வாசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திமுக அந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் நினைத்தால், அது நடக்கப்போவதில்லை.

கலைஞரின் இந்த நிர்ப்பந்தம் வைகோவிற்கோ, ராமதாசிற்கோ, திருமாவிற்கோ இல்லை. காரணம் இவர்களுக்கு தேவை காங்கிரஸ் அல்ல. திமுக அல்லது அதிமுக. இவற்றில் ஏதேனும் ஒரு அணி இவர்களுக்கு போதுமானது. காங்கிரசை இழுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கே உள்ளது. பாமக கூட கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்பட்டது. காரணம் பாமகவின் விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு தான். திமுக-காங்கிரஸ்-பாமக இவை மூன்றும் ஒரே அணியில் இருந்தும், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவில் பாமக தேர்தலில் போட்டியிட்ட பொழுதும் கூட, எங்களுடைய கூட்டணி திமுகவுடன் தானே தவிர பாமகவுடன் அல்ல என்று காங்கிரஸ் கூறியதை இங்கே குறிப்பிடவேண்டும்.

அவ்வாறான நிலையில் இருந்து காங்கிரசின் அரசியல் நிறைய மாற்றங்களை அடைந்துள்ள சூழலில் அதனை சிதைத்துக் கொள்ள திமுக தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்.

கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது. ஆனால் வைகோ இதனை "ஓங்கி" ஒலிப்பதால் ஈழத்தமிழர்கள் வைகோவை கலைஞரை விட நேசமாக பார்க்கிறார்கள். ஈழத்தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் "தமிழ்" உணர்வுகள் என்பவை வேறானது. அரசியல் என்பது வேறானது. கலைஞரின் தமிழ் உணர்வுகளை யாரும் சந்தேகிக்க முடியாது.

இன்றைக்கு தமிழகத்தில் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்த முடிகிறது. சுவரொட்டிகளை ஒட்ட முடிகிறது என்றால், அதற்கு காரணம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் கலைஞரின் ஆட்சி என்பதை உணர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால் இதே அளவிளான கருத்துச்சுதந்திரம், பேச்சுசுதந்திரம் இருந்திருக்க முடியாது. கலைஞர் இந்தப் பேச்சு சுதந்திரத்தை அனுமதித்து இருப்பதால் தான் சென்னையிலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த முடிகிறது. அந்த வகையிலே சுப.வீரபாண்டியன் அவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே எனது கருத்துக்களும் உள்ளன.

தமிழகத்திலே மக்களின் மத்தியிலே ஈழப் போராட்டம் குறித்து தெளிவாக முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறான சூழல் கடந்த காலங்களில் இல்லை. தற்பொழுது அதற்கான சூழல் அமைந்துள்ள நிலையில் அதனை தெளிவாக பயன்படுத்திக்கொள்வதில் தான் ஈழவிடுதலை ஆதரவினை தமிழக மக்கள் மத்தியில் எழுப்ப முடியும். தற்போதைய சூழலில் இதனையே நான் முக்கியமாக நினைக்கிறேன். வைகோ போல விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்புவதால் இந்தப் பிரச்சனையில் பெரிதாக சாதித்து விட முடியாது.

தமிழக மக்கள் மத்தியில் ஈழ போராட்டத்திற்கு எழும் ஆதரவு தான் தில்லியில் இருக்கும் "சில வெளியூறவு/பாதுகாப்பு அதிகாரிகளை" அச்சப்படுத்தும். இந்தியாவின் வெளியூறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் இந்த அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது தான் இந்திய ஜனநாயக சூழலின் யதார்த்தமான உண்மை.

யார் அந்த அதிகாரிகள் ?

நான் குறிப்பிடும் அதிகாரி எம்.கே.நாராயணன் - பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் - National Security Advisor (NSA) to the Prime Minister of India.

Narayanan is an expert in security matters and a specialist on Sri Lankan affairs என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அவ்வாறான ஒரு பிம்பம் தான் இந்தியாவின் மைய அரசின் வட்டாரத்தில் நிலவுகிறது. எம்.கே.நாராயணனும் சரி, இதற்கு முன்பு ஆலோசகராக இருந்தவரான ஜெ.என்.தீக்க்ஷ்த்தும் சரி விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளர்கள். எம்.கே.நாராயணன் Intelligence Bureau (IB) தலைவராக இருந்தவர். இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகர்களாக இருந்தவர்களில் எம்.கே.நாரயணனும் ஒருவர்.

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில் எம்.கே.நாராயணன் குறித்தும், அவருடன் தானும், பிரபாகரனும் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். எம்.கே.நாரயணன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் இடையேயான முதல் சந்திப்பு வட இந்தியாவில் உள்ள காசி நகரில் முதன் முதலாக நடைபெறுகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நேரம் அது. இந்திரா காந்தி சிங்கள அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கு மாறாக சிங்கள அரசுடன் இணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராஜீவின் ஆலோசகர்கள் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி புலிகளை சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா நெருக்குதல் செய்து கொண்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் எம்.கே.நாராயணன் பிரபாகரனையும், ஆண்டன் பாலசிங்கத்தையும் சந்திக்கிறார். இதில் தொடங்கி 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.

இவ்வாறு இலங்கை விவகாரத்தில் பணியாற்றிய எம்.கே.நாராயணன் இன்றைக்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சூழலில், மைய அரசு பெரும்பாலும் "பாதுகாப்பு" என்ற காரணம் காட்டி தமிழக அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் இந்தியா இந்தப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கலைஞரால் இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும். இந்தியாவும் புலிகளுடன் பேசுமாறு சிங்கள அரசை தூண்டும். புலிகள் பலவீனப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் தற்பொழுது உருவாகியுள்ள சூழலில் புலிகளை தோற்கடிக்கவே இந்தியாவும் விரும்பும். 20 வருடங்களாக இந்தியாவின் நிறைவேறாத ஆசை அது.

புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

அதுவரை, ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது.


இது தொடர்பான பிற வலைப்பதிவர்களின் கட்டுரைகள்
பெயரிலியின் - சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்
நாக.இளங்கோவனின் - தமிழீழ மக்களுக்கு கருணாநிதி துரோகியா? part1 மேலும் படிக்க...

ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்

இந்தக் கட்டுரை 2006 தேர்தலின் பொழுது எழுதப்பட்டது. தற்பொழுது ஞாநி எழுதியிருக்கும் கட்டுரை கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள சூழலில் இதனை மீள்பதிவு செய்வது பொருத்தமாக தோன்றியது.

ஞாநியின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதே நேரத்தில் ஞாநி இதனை கலைஞர் மீதான நல்லெண்ணம் காரணமாக எழுதினார் என நினைக்க முடியவில்லை. ஞாநியின் கட்டுரைகளில் கலைஞர் மீதான எதிர்ப்பு அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

ஞாநியின் அபத்தமான பல கருத்துகள் குறித்து ஒரு சிறு உதாரணம் கொடுக்க வேண்டுமென்றால் சென்னை சங்கமத்தின் பொழுது அவர் எழுதிய கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது. அதிலே வெளிநாட்டு தமிழர்கள் டிசம்பர் சங்கீத சீசனுக்கு சென்னை வந்து விட்டு சென்று விடுவார்கள். எனவே சென்னை சங்கமத்தை ஜனவரியில் நடத்துவதால் வெளிநாட்டு தமிழர்கள் அதிகளவில் சென்னை வருவார்கள் என்று சொல்ல முடியாது என்ற தொனியில் ஞாநி எழுதியிருந்தார் (அந்த சுட்டி இப்பொழுது இல்லாததால் இங்கே கொடுக்க முடியவில்லை) .

டிசம்பர் சங்கீத சீசனுக்காக சென்னை வருபவர்கள் யார் ? சங்கீத சீசனில் சென்னை வருபவர்கள் அதிகமா, அல்லது பொங்கலுகாக சென்னை/தமிழகம் வருபவர்கள் அதிகமா ?

இவ்வாறு ஞாநியின் சார்புகள் தெளிவாக தெரிந்தாலும், அவரது தற்போதைய கட்டுரையின் கருத்தில் எனக்கு பெரிய விமர்சனம் எதுவும் இல்லை. கலைஞர் அரசியலை விட்டு விலக வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால் ஞாநியின் கட்டுரையின் தொனியில் சில அதிருப்திகள் எனக்கும் உள்ளன. அது ஞாநியின் கலைஞர் எதிர்ப்பினையே ஞாபகப்படுத்துகிறது

2006ல் எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன்

ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்

82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஓட்டு போடும் வயதிருப்பதால் தேர்தலில் வெற்றி பெறும் எவரையும்ஹ் வாழ்த்துவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.

இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் நெய்வேலிக்கு செல்வதற்குள் ஏற்படும் பயண எரிச்சல் ஒரு புறம் என்றால் இந்த கோடை காலத்தில் பயணம் செய்வதே எரிச்சல் மிகு தருணம் தான். என்ன தான் ஏசி காரில் சென்றாலும் கூட கோடை காலங்களில் ஏசியை மீறிய எரிச்சல் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பு. ஆனால் 82 வயதிலும் கடும் கோடை வெப்பத்திற்கிடையே சில ஆயிரம் கீ.மீ பயணம், பிரச்சார கூட்டம், தொண்டர்களின் அலைமோதல் இவற்றிடையே அவரது பேச்சின் ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதே கரகரப்பான குரல். அதில் தெரியும் கம்பீரம் போன்றவை கலைஞருக்கே உரித்தான இயல்புகள்.

என்றாலும் அதை மீறி தள்ளாட்டத்துடன் நடக்கும் அவரது நடை, நிற்பதற்கு கூட தேவைப்படும் ஒரு உதவியாளர், நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே பேசும் அவரது முதிய நிலை போன்றவையெல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் இந்த அரசியல் சாக்கடையை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் 82வயதிலும், 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற கலைஞர் தான் தேவைப்படுகிறார் என்பதை கவனிக்கும் பொழுது திமுகவின் அடுத்த தலைமுறையினர் பற்றிய கேள்விக்குறியும் எழுகிறது. அடுத்த தேர்தலில் திமுகவிற்கு மக்களிடையே ஆதரவு திரட்ட கலைஞர் ஆரோக்கியமுடன் இருப்பார் என்ற எண்ணம் எழுந்தாலும் அடுத்த தலைமுறை திமுகவை கலைஞர் அவரது காலத்திலேயே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி என வயதான தலைமுறையினரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்ற அலுப்பும் ஏற்படுகிறது.

இன்று இந்தியாவின் இளையதலைமுறை பல நாடுகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் பல இளைய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு இயல்பாக இருக்கின்ற கல்வி வளம், உள்கட்டமைப்பு காரணமாக ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேருகின்றன. தமிழகம் ஆசியாவின் எதிர்கால முக்கிய பிராந்தியத்திற்கான விருதினைப் பெற்று இருக்கிறது (ASIAN REGION OF THE FUTURE). ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த விருதினைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகம் இந்த முதலீடுகளைப் பெற தகுந்த அளவிலான ஒரு அரசாங்கத்தை கடந்த 5ஆண்டுகளாகப் பெற்றிருந்தது.

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தது போல ஜெயலலிதாவின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார ரீதியில் தமிழகம் ஒரு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா போன்ற ஏழ்மை அதிகம் இருக்கும் நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக இருப்பதில்லை. பொருளாதாரமும் உயரவேண்டும், மக்களுக்குச் சலுகைகளும் வழங்க வேண்டும். இதனை சரியான முறையில் பேலன்ஸ் செய்வதில் தான் இந்தியாவில் அமையும் அரசாங்கங்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஜெயலலிதா மக்களுக்கு சலுகைகள் வழங்கும் விதத்தில் சரியாக செயல்படவில்லை. இதை தவிர ஜனநாயக முறையில் இந்தியா கடுமையான சட்டதிட்டங்களை வைத்திருக்காவிட்டால் ஜெயலலிதா ஒரு முழுமையான சர்வாதிகாரியாகவே மாறியிருப்பார். எனவே பொருளாதார செயல்பாட்டில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டிருந்தால் கூட பிற வகையில் அவரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. அதுவே அவர் 2004தேர்தலின் தோல்விக்கும், அதனை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டமை தான் 2006 தேர்தலில் மோசமான தோல்வியை தழுவாமைக்கும் முக்கிய காரணம்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் செயல்பாடு. அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் சலுகைகள், அடிப்படை வாழ்க்கை தேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாய் பெருக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் போட்டி இன்று அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி மேற்க்கொள்கின்றன. இந்த முதலீடுகளை பெருமளவில் கவர்ந்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டுமானால் தமிழகத்திற்கு கவர்ச்சியான முதல்வர் வேண்டும். இந் நிலையில் தமிழகத்திற்கு 82வயது கலைஞர் முதல்வராக இருப்பது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது.

கலைஞர் முதல்வராகும் பட்சத்தில் அவரது அரசாங்கம் ஒரு முதிய மந்திரி சபையாகத் தான் இருக்கும். அரசாங்கம் அரசியல்வாதிகளை விட அவர்கள் தங்களிடையே வைத்துக் கொள்ளும் அரசாங்க அதிகாரிகளால் தான் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த முதல்வர் தான் அரசாங்கத்தின் முகம். தன்னுடைய மொத்த அமைச்சர்களையும் டம்மியாக்கி ஜெயலலிதா தன்னை முதலீடுகளுக்குச் சாதகமான முதல்வராக வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் கலைஞரால் அது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இந்த காரணங்களால் தான் கலைஞர் முதல்வராவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன்.

கலைஞருக்கு இந்த வாய்ப்பு இல்லையெனில் வேறு யாருக்கு இருக்கிறது ? நிச்சயமாக திமுகவில் தொண்டர் பலம் கொண்ட ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கப்போவதில்லை. எனவே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு கலைஞர் விலக வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

ஸ்டாலினுக்கு அந்த தகுதி எந்தளவிற்கு இருக்கிறது ? ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையெனில் தயாநிதி மாறன் முதல்வராகலாமா ?

ஸ்டாலினின் வாய்ப்புகளும், தகுதிகளும் ஒரு புறம் இருக்க, ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.

அரசாங்கத்தை தவிர திமுகவின் எதிர்காலத்தை முன்னிட்டும் கலைஞர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

****

மேலே எழுதிய விடயத்தில் ஒன்றாவது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி

அது தயாநிதி மாறன் அரசியலில் இருந்து விலக வேண்டும் என நினைத்தது :)

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.
மேலும் படிக்க...

தமிழ் தேசியம் ‍- எனது பார்வை

இந்தக் கட்டுரை 2007ல் எழுதப்பட்டது. ஆனால் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட பெருத்த தோல்விக்கு பிறகும், திராவிட இயக்கங்கள் நடத்திய நாடங்களைக் கண்ட பிறகும் தமிழ் தேசியமே முழுமையான தீர்வு என்பதான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் இந்தியாவிற்குள் இருக்கும் தமிழகம், தமிழர்களின் உரிமைக்கு எந்த ஒரு நன்மையையும் செய்ய முடியாது என நான் உண்மையாக நம்புகிறேன். அந்த அடிப்படையில் என்னுடைய அடையாளம் "தமிழன்" என்றும் என்னுடைய தேசியம் "தமிழ் தேசியம்" என்றும் நான் வலுவாக நம்புகிறேன்.


எனவே 2007ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை என்னுடைய தற்போதைய நிலைப்பாட்டினை பிரதிபலிப்பதில்லை என்றாலும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சாதி ஒழிப்பை ஒப்புக்கொள்வதில்லை என்ற அவதூறு கருத்தினை உடைக்க 2007ல் நான் எழுதிய இந்தக் கட்டுரை ஒரு சான்றாக இருக்கும் என நம்புகிறேன்


தமிழ் தேசியம் நோக்கி நகர சாதியை ஒழிக்க வேண்டும் என்ற என் கருத்தினை இந்தக் கட்டுரை வலுவாக முன்வைப்பதாக நான் நம்புகிறேன். அதே நேரத்தில் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழ் தேசியம் நோக்கி நகர முடியும் என்ற என்னுடைய முந்தைய கருத்தினை முள்ளிவாய்க்கால் உடைத்து விட்டது. சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன்

**********************



குழலி, அசுரன் இருவரும் மகஇக குறித்தும், தமிழ் தேசியவாதிகள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்து இருந்தார்கள். அதில் அவர்கள் எழுதியிருந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்கள்...

ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியத்திற்கும், தமிழகத்தில் எழுந்த தமிழ் தேசியத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஈழத்தில் தமிழ் மக்கள் இன ரீதியாக அவர்கள் தமிழராக இருக்கும் பொருட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் என்பது சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது எனக்கொள்ளலாம். இலங்கையில் நடப்பது "வர்க்க போராட்டம்" என்னும் கருத்தினை நான் எதிர்க்கிறேன்.

இந்தப் பதிவில் தமிழகத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்களை முன்வைக்கிறேன். ஈழம் குறித்து மற்றொரு பதிவில் எழுத உள்ளேன்.

முதலில் தேசியம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கிறேன்.

இனரீதியாக ஒடுக்குமுறையை சந்திக்காத ஒரு சமூகத்தில் இருந்து எழும் தேசியவாதத்திற்கும் ஈழம், காஷ்மீர் போன்ற சமூகத்தில் எழும் தேசியவாதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக இந்திய தேசியவாதம் என்பது அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் விடுதலைப் பெற்ற ஒரு இனத்தாலேயே முன்னெடுக்கப்படுகிறது. இன ரீதியாக எந்த ஒடுக்குமுறையையும் சந்திக்காத நிலையில் இருக்கிற ஒரு சமூகம் தான் இவ்வாறான தேசியத்தினை முன்னெடுக்கிறது. அது போலவே ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந் நிலையில் இருந்து விடுதலை அடைந்த பின்பு முன்வைப்பதும் தேசியவாதமே...

இன ரீதியிலான ஒடுக்குமுறை இல்லாத சூழலில் தன்னுடைய வாழ்க்கைக்கான வாழ்வியல் தேவைகள், சமூக, பொருளாதார விடுதலை குறித்த போராட்டத்தில் இருக்கும் எந்த ஒரு இனமும் தேசியம் குறித்து உணர்ச்சிவயப்பட்டு பார்ப்பதுமில்லை. அது குறித்து சிந்திப்பதும் இல்லை. இந்திய வரலாற்றில் கூட காந்தி முதலில் இந்திய விடுதலை, இந்திய தேசியம் போன்றவற்றை மறுக்கிறார். மக்கள் சமூக விடுதலையை பெற வேண்டும் என்றே சிந்திக்கிறார். ஆங்கிலேயரின் கைகளில் இருக்கும் ஆட்சியை இந்திய பேரிஸ்டர்களிடம் கொண்டு வருவதால் சமூக ரீதியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே காந்தி நினைத்தார். ஆனால் பின் அவர் இந்திய தேசிய சூழலில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக விடுதலையை முன்னெடுக்கும் தந்தை பெரியார் தேசியத்தை கடுமையாக எதிர்க்கிறார். பெரியார் கூறுகிறார்.

"தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது"

*************

இந்திய தேசியம் எப்படி இந்துத்துவா சார்ந்த பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதோ, அது போல தமிழ் தேசியம் என்பது தமிழகம் சார்ந்த மேட்டுக்குடி மற்றும் பிற சாதி இந்துக்களால் முன்னெடுக்கப்பட்டதே ஆகும். அதன் ஆரம்பகட்டம் நீதிக்கட்சி மேட்டுக்குடியினரால் முன்னெடுக்கப்பட்டது. பிராமணர் அல்லாதோர் என்பதாக தொடங்கி பிராமணர் அல்லாத சமூகங்களின் சமூக விடுதலையையே நீதிக்கட்சி முன்னிறுத்தியது. இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீதிக்கட்சி சமூக விடுதலையை முன்னெடுக்கையில் சமூக விடுதலையை அடைந்த பிராமணர் சமூகம் காங்கிரஸ் மூலமாக தேசிய விடுதலையை முன்வைக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சில மேட்டுக்குடி சமூகங்கள் சமுக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடைந்த பின்பு திராவிட தேசம், தமிழ் தேசம் போன்றவற்றை முன்வைக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக, ஆட்சியை பிடித்த பின்பு இந்திய தேசியத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் இடையே ஒரு சரிசமமான சமூக பொருளாதார சூழல் இல்லாத நிலையில், தமிழன் என்பதால் தமிழகத்தில் தமிழ் இனம் எந்த ஒரு இன அழிப்பிற்கு உள்ளாகாத நிலையில் தமிழ் தேசியத்தை சார்ந்த ஒரு விவாதக்களம் எழுவது இயல்பானது.

தமிழ் இனத்தில் இருக்கின்ற பல்வேறு சமூக பிளவுகளை நீக்காத வரையில் தமிழ் தேசியம் என்ற ஒன்றை அடைய முடியாது என்றே நான் நம்புகிறேன். அது மட்டுமில்லாமல் சமூக ரீதியிலான ஒடுக்குமுறை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக ஆட்சிக் காலத்திலும், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளிடையேயும் கடந்த காலங்களில் இருந்தததை கவனிக்கும் பொழுது தமிழ் தேசியம் செல்ல வேண்டிய தூரத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் திமுக சமூக விடுதலையை முன்னெடுத்தாலும் அந்தச் சமூக விடுதலையின் பலனைப் பெற்றவர்கள் தமிழகத்தைச் சார்ந்த மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரே. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சமூக, பொருளாதார விடுதலையை பெற முடியாத சூழலே நிலவி வந்தது. தமிழக சமூக நிலையில் இருக்கும் சாதிப் பிளவுகளும் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான சாதி இந்துக்களின் சாதி வெறித்தனமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது கூட சமூக நீதி முன்னெடுக்கப்பட்டு ஓரளவிற்கு வளர்ந்த காலக்கட்டத்தில் தான் என்பதும் திமுக அப்பொழுது ஆட்சியில் இருந்தது என்பதும் பிற்படுத்தப்பட்ட மேட்டுகுடியினர் எவ்வாறு தலித் மக்களை ஒடுக்கினர் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (இது குறித்த விரிவான பதிவு).

கீழ்வெண்மணி சம்பவத்தினை பார்ப்பன அறிவுஜீவிகள் வர்க்க போராட்டமாக முன்னெடுக்கின்றனர். சில அறிவுஜீவிகள் அதனை பிற்படுத்தப்பட்ட மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்றாலும் கீழ்வெண்மணி உள்ளிட்ட சம்பவங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை ஒரே அணியில் திரட்டுவதற்கும், இவர்கள் அனைவரையும் தமிழ் தேசியம் என்னும் வடிவத்தில் அடக்க முனைவதற்கும் எதிராகவே உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் கூட தெளிவற்றவையாகவே உள்ளன.
கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கை.

ரோசாவசந்த்தின் கருத்து - http://rozavasanth.blogspot.com/2006/12/blog-post.html

கீழ்வெண்மணி மட்டுமில்லாமல் அதற்கு பிறகு கூட மேலவளவு, கொடியங்குளம், மாஞ்சோலை என தமிழகத்தில் சாதி இந்துக்களின் தாக்குதல் தலித் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. இதனை முதலாளி, தொழிலாளி என்பதாக பார்த்தாலும் கூட பாதிக்கப்பட்ட அனைவருமே தலித் சமூகத்தினர் என்பதையும், தாக்குதல் தொடுத்தவர்கள் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதையும் கவனிக்கும் பொழுது தமிழகம் எந்தளவுக்கு சாதி ரீதியில் பிளவு பட்டு நிற்கிறது என்பது தெளிவாகிறது.

 (தமிழகத்தில் தலித்துகளின் நிலை என்ற பிபிசியின் பெட்டக தொடர் - http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml)

வடமாவட்டங்களில் இன்றளவும் இரட்டை டம்பளர் முறை இருப்பதை பிபிசி தொடர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் திருமாவும், ராமதாசும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்திலும் இன்னமும் சாதி ரீதியிலான அடக்குமுறைகள் தொடருகின்றன என்கிற கூற்றும் மேலே உள்ள பெட்டகத்தொடரில் எதிரொலிக்கிறது.

இவ்வாறு தலித் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய தேவையை முன்வைக்கின்றனரோ, அது போலவே தலித் மக்கள் பிற சாதி இந்துக்களான ரெட்டியார், முதலியார், வன்னியர், தேவர் போன்றோரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் பார்ப்பனத்தலைமை என்பது 200% நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து தலித் மக்களின் பார்வையில் பெரும் முரண்பாடாகிறது. உண்மையில் சாதி இந்துக்களின் தலைமை 200% தலித்களைச் சார்ந்து இருந்தால் கூட அதனை நம்பமுடியாத நிலையில் தான் தலித் மக்கள் உள்ளனர். அந்தளவுக்கு தலித் சமூகத்திற்கும் பிற இடைத்தட்டு மற்றும் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடையேயான இடைவெளி உள்ளது. அரசியல் காரணங்களுக்காக தலித் மக்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே சுயநலக்காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட கூட்டணி எவ்வாறு தோல்வி அடைந்தது என்பதை தமிழகத்திலும் பார்க்க முடியும், பிற மாநிலங்களிலும் பார்க்க முடியும்.

தமிழகத்தில் தலித் மக்களிடையேயான கூட்டணியை முன்வைத்த டாக்டர் ராமதாஸ் தோல்வி கண்டார். அவரிடம் கூட்டணி வைப்பதை தலித் மக்கள் விரும்பவில்லை. இதைப் போலவே உத்திரபிரதேசத்திலும் மாயாவதி - முலயாம் சிங் யாதவ் இடையேயான கூட்டணி முறிந்து போயிற்று. தலித் மக்கள் நேரடியாக தங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஒரு சமூகத்தினை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயத்தில் தலித் மக்களை "நேரடியாக" ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத பார்ப்பனர்களை ஏற்க தலைப்படுகின்றனர். தலித் விடுதலையை முன்னெடுக்கும் பார்ப்பன அறிவுஞீவிகளை தலித் மக்கள் ஏற்றுக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. உத்திரபிரதேசத்தில் மாயாவதி பார்ப்பனர்களுக்கிடையேயான கூட்டணி மூலமும் காண முடிகிறது.(இது குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உள்ளது. அது மற்றொரு தருணத்தில்...)

தலித்களுக்கும் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையேயான பிரச்சனை இவ்வாறு உள்ளது என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த சமூக நீதியால் அதிகம் பலன் பெற்றவர்கள் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரே. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளாதார ரீதியிலான விடுதலையை பெற முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக பல சமுதாயங்கள் முன் வைத்த போராட்டங்களால் 1989ல் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20% இடஒதுக்கீட்டினை அப்போதைய திமுக அரசாங்கம் கொண்டு வந்தது. இது பாமக தொடங்கிய காலக்கட்டத்தில் சில அரசியல் காரணங்களுக்காக, தன்னுடைய ஓட்டு வங்கியை தக்கவைக்க வேண்டும் என திமுக கொண்டு வந்தது.

1989க்குப் பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவுக்கு பொருளாதார விடுதலையை பெற தொடங்கியுள்ளனர். தலித் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவருமே தங்களுக்கான முழுமையான பொருளாதார விடுதலையை பெறாத வரையில் தமிழ் தேசியம் என்பதை அடையமுடியாது என்றே நம்புகிறேன்

****************

என்னுடைய கடந்த சில பதிவுகளில் நான் "தமிழ் தேசிய இனம்" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறேன். தமிழன் என்னும் தேசிய இனத்தின் தனித்தன்மையை சிதைக்க முனைவதை நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் இருக்கும் பல தேசிய இனங்களின் பன்முகத்தன்மை பராமரிக்கப்பட வேண்டிய அவசியமும், தேவையும் உள்ளது. தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை தட்டையாக இந்தியன் என்ற வடிவத்தில் அடக்க முனைவது எதிர்க்கப்பட வேண்டியது.

அதே நேரத்தில் அந்த தேசிய இனங்களைச் சார்ந்த "பிரிவினையை" இன ரீதியாக அடக்குமுறை இல்லாத இந்தியச் சூழலில் முன்னிறுத்தப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதில் சில விதிவிலக்குகளை காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் வழங்க முடியும். காரணம் காஷ்மீர் என்னும் தேசிய இனம் இந்தியா, பாக்கிஸ்தான் என இரு வேறு நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தேசிய இனத்தை இணைக்க காஷ்மீரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டிய தேவை எழுகிறது.

ஆனால் தனித்தமிழ்நாடு என்பதோ, தமிழ் தேசியம் மூலம் வைக்கப்படும் பிரிவினைவாதமோ ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் இன்று பார்ப்பனியத்தை சார்ந்து முன்வைக்கப்படுகிற வாதங்கள் நாளை தமிழ் தேசியத்தை சார்ந்த மேட்டுக்குடியினரிடமும் முன்வைக்க முடியும். தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.

எந்த தேசியத்தை விடவும் மக்கள் முக்கியமானவர்கள்....


மேலும் படிக்க...