வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். என்னுடைய டிவிட்டரில் கூட கடந்த வாரம் சில டிவிட்களில் இதனைச் சார்ந்து எழுதியிருக்கிறேன்.
ஈழம் தொடர்பாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாகவும் பலப் பதிவுகளை கடந்த சில வருடங்களாக எழுதி விட்டு, சில நிமிடங்களில் உணர்ச்சி வேகத்தில் ஈழப்போராட்டத்தினை சார்ந்து இத்தகைய ஒரு பதிவை எழுதி விட முடியாது. ஈழத்தில் பிறக்காமல் ஈழப் போராட்டத்தினை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். எனவே அந்த பதிவை நான் சுலபமாக எழுதி விடவில்லை. ஆனால் நான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது. பலர் அதனை உணராமல் மறுமொழியிட்டுள்ளது தான் வருத்தத்தை தருகிறது.

வன்னியிலும் ஈழத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் செய்திகளை அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு நான் எதன் பொருட்டு அவ்வாறு எழுதினேன் என்பதை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அவ்வாறு இல்லாதவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தான் நான் உணர்ச்சி மிகுதியில் எழுதியதாக தோன்றும். பல நாட்கள் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்ததை தான் அந்தக் கட்டுரையில் கொண்டு வந்திருந்தேன். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட பின்பும், நான் அதனை எழுதாமல் இருப்பது என்னுடைய எழுத்திற்கும், மனசாட்சிக்கும், நியாயமாக இருக்காது என்ற காரணத்திற்காக தான் எழுத வேண்டாம் என நினைத்து மனதில் புழுங்கிய ஒன்றினை எழுத்தில் கொண்டு வந்தேன்.

நீண்ட விளக்கங்களை அளிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. அதனால் மிக சுருக்கமாக என்னுடைய விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.

புலிகள் மீதான குற்றச்சாட்டு

1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு. புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன். என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.

அப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய புலிகள் இன்று மக்களை தங்களின் தற்காப்பிற்காக அடைத்து வைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஏதோ சிங்கள ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் தரும் செய்திகளை அப்படியே நம்பி எழுதுவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. என் பல கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத தகவல்களை கொண்டே இருந்திருக்கிறது. எனவே சிங்கள் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் கூறிய தகவல்களை நான் நம்பி எழுதியதாக சிலர் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லும் சூழல் தற்பொழுது இல்லை.


தமிழ் ஈழம்

ஈழப் போராட்டமே வேண்டாம், சரணடைந்து விடுவோம் என நான் சொல்லவில்லை. என் கட்டுரையில் கூட கீழ்க்கண்ட வரிகளில் என் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்


தமிழ் மக்கள் அமைதியாக வாழ, தங்களுக்கான உரிமைகளை இன்று பெறுவதற்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய தேவை உள்ளது

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது இயலாத ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?

சரணடைந்து விடுவதா என பலர் கேட்கிறார்கள். வசதியான, பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறு கேட்பது சுலபம். ஆனால் ஈழத்திலே போர் சூழ்நிலையில் இராணுவத்திடம் சிக்கி கொண்டு தினமும் செல், ஆர்ட்டிலரி தாக்குதல்கள் மத்தியில், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்துக் கொண்டும், பச்சிளம் குழந்தைகள் எல்லாம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்வியை கேட்போமா ? பிறக்கும் குழந்தைக்கு கூட செல்லடி தானே கிடைக்கிறது. வன்னியில் போர் சூழ்நிலையில் பசியும், பட்டினியுமாய், செல்லடி பட்டும் மனநிலை பிழன்ற சூழ்நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் கேளுங்கள் இந்தப் போரினைப் பற்றியும், சரணடையாலாம் என்பது குறித்தும். எந்த தாய் தன்னுடைய குழந்தை செத்தாலும் பரவாயில்லை, புலிகளோடு இருப்பேன் என நினைப்பாள் ? மக்கள் தாமாகவே அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும். அப்படி இல்லாவிட்டால் கிழக்கு மாகாணம் பிள்ளையானுக்கும், வடக்கு மாகாணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சென்று சேரும் அபாயத்தையே இன்றைக்கு நான் காண்கிறேன்.

நான் போராட்டம் தோற்கும் நிலையில் அதனை விட்டு வெளியேறுவதாக வானதி போன்றவர்கள் கூறியது வருத்தத்தை தருகிறது. சிறு வயதில் இருந்து ஈழப் போராட்டத்தினை கவனித்து வருகிறேன். அது என்னுடன் கலந்த ஒன்று. அதற்கு என்னுடைய வலைப்பதிவே ஒரு சாட்சியாக உள்ளது. தற்பொழுது நான் எதனை செய்து கொண்டிருக்கிறேனோ அதனை நிச்சயமாக செய்து கொண்டிருப்பேன். என்னுடைய எழுத்து எதையும் சாதித்து விடவில்லை. But, Something is better than Nothing. என்னுடைய பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் ஏற்கனவே கூறியிருந்தது போல ஈழப்பிரச்சனையை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களின் அவலங்கள், மனித உரிமைகளை சார்ந்ததாகவே அது இருக்கும்.

நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். மறுமொழிகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
மேலும் படிக்க...

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து கொத்தாக கொல்லப்படும் சக மனித உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இதிலே இந்தக் கொலைக்கார நாட்டிற்கு அகிம்சை நாடும் என்றும், காந்தி பிறந்த நாடும் என்றும் பெயர் வேறு. கம்யூனிச நாடு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சீனா இந்தப் போருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ரஷ்யா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் இந்த கொலைக்கார கூட்டணியில் அங்கம் வகித்து செயல்படுகின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மீது காறி துப்புகிறேன். அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.

கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களான அம் மக்களை இவ்வாறான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியதில் சிறீலங்கா, இந்தியா, சீனா மற்றும் பிற சர்வதேச சமூகம் ஒரு காரணம் என்றால், இந்த படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் இனி பகீரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் அந்த மக்களுக்கு நாம் நியாயம் செய்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளை நோக்கியும் நமது குற்றச்சாட்டு அமைந்தாக வேண்டும். இது வரையில் இந்த நெருக்கடியான தருணத்தில் புலிகளை விமர்சிக்க வேண்டாம் என பலர் அமைதியாக இருந்து விட்டோம். போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவது மட்டுமே நமது நோக்கமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான்.

இன்றைக்கு சீனா, இந்தியா, சிறீலங்கா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் புலிகளை எதிர்த்து நிற்கிறது. புலிகள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி விட்டார்கள். இந்த நாடுகளை எதிர்த்து இந்தளவுக்கு தாக்கு பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு புலிகளின் போர்த்திறன் தான் காரணம். ஈராக் குவைத் மீது போர் தொடுத்த பொழுது அதனை மீட்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஈராக் போன்ற பெரிய நாட்டின் படையிடம் சில நாட்களில் முடிந்து விட்டது. இத்தனைக்கும் ஈராக் அப்பொழுது மிகப் பெரிய இராணுவம் கொண்டிருந்தது. இராணுவ பலம் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் ஈராக்கும் ஒன்று. ஆனால் புலிகள் தங்களுடைய போரிடும் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தி இருந்தனர் என்பதற்கு இந்தப் போர் ஒரு உதாரணம். இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.

அதே நேரத்தில் என்னுடைய இந்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பொழுது புலிகள் வசம் 80% தமிழீழ நிலங்கள் இருந்தது. மொத்த இலங்கை நிலப்பரப்பில் 3ல் 1 பகுதி புலிகள் வசம் இருந்தது. மொத்த இலங்கையின் கடற்பரப்பில் 3ல் 2பகுதி புலிகள் வசம் இருந்தது. அதாவது இலங்கை அரசாங்கத்தைக் காட்டிலும் பெரும் கடற்பரப்பு புலிகள் வசமே இருந்தது. இலங்கை அரசாங்கமே புலிகளுக்கு சுங்க வரி செலுத்தும் அளவுக்கு புலிகளின் கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்களும் தேடுதல் வேட்டை, சோதனை போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது.

எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும். மாறாக புலிகளே இறுதிப் போர் என கூக்குரலிட தொடங்கினர். தங்களிடம் இருந்த 80% இடத்தை தக்கவைக்க முனையாமல், அதனையும், தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி இன்று அனைத்து இடங்களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களை நம்பி இருந்த மக்களை சிங்கள வல்லூறுக்களிடம் பலியாக்கி கொண்டு இருக்கின்றனர்.

போர் தொடங்கிய பொழுது புலிகள் ஒவ்வொரு இடமாக பின்வாங்கிய பொழுது இது புலிகளின் போர் தந்திரம் என பேசிக் கொண்டிருந்தோம். தந்திரோபாய பின்நகர்வு என்ற ஒற்றை இராணுவ பார்வையில் மட்டுமே இந்த பின்நகர்வு பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த தந்திரோபாய பின்நகர்வுக்கு பின்னே இருந்த மனித அவலங்களை பார்க்கவில்லை. புலிகள் பின்வாங்கும் பொழுதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து மக்களும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். கிழக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கி அகதியாகினர். மன்னரில் இருந்து ஒவ்வொரு இடமாக மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். அந்த அவலத்தை நாம் அப்பொழுது பேசவில்லை. தந்திரோபாயத்தை மட்டுமே பேசினோம். புலிகளின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாயம் என கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால் இன்று நகர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலையை அடைந்து விட்டோம்.

புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை.

தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம். போர் ஒரு சாமானியனுக்கு ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளை தற்பொழுது தான் முதன் முதலாக பார்க்கிறேன். ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. இந்தியாவில் இந்தளவுக்கு போர் குறித்த செய்திகளும் வந்ததில்லை. ஆனால் முதன் முறையாக போர் என்பது எவ்வளவு கொடுமையானது, எந்தளவுக்கு மக்களுக்கு போர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது இந்தப் போரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தப் போர் என்பது சாமானியனுக்கு தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் ஆடுகளை விட கேவலமாக கொல்லப்படுகின்றனர். கொல்லப்படும் மக்களை கொண்டு பரப்புரையும், எதிர் பரப்புரையும் செய்யப்படுவது அதனை விட கொடுமையானது.

அதிகாரங்களை எதிர்த்து பேசுவது, அதிகாரங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பதற்கு எல்லாம் இன்று எந்த அர்த்தமும் இல்லை. அடையாளப்பூர்வமாக அதிகாரத்தை எதிர்த்து எழுதலாம் - யாரும் படிக்க மாட்டார்கள். பேசலாம் - ஏதோ சிலர் கேட்டு விட்டு செல்வார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செய்வது போல ஆர்ப்பாட்டம் செய்யலாம் - இந்தியாவில் கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள். வெளிநாட்டில் அனுமதி பெற்று பிரச்சனை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யக்கூட மாட்டார்கள். ஆனால் அதிகாரங்களை எதிர்த்து களத்தில் இறங்கி போராடினால் அதிகாரம் நம்மை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாகத் தான் இன்றைய போர் உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். புலிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.

இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். மேலும் படிக்க...

திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.

இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம். 1992ல் இருந்த வைகோவுடன் கருணாநிதியை அப்பொழுது ஒப்பிடலாம். என்னுடைய சமகாலத்தில் வளர்ந்த வைகோவை என்னால் எப்பொழுதும் தமிழ் அரசியல் சார்ந்து விலக்க முடியவில்லை. வைகோ போன்றவர்கள் தலைவராக முடியவில்லையே என்ற வேதனை எனக்கு உண்டு. அதே போலத் தான் கருணாநிதி காலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் இன்றும் உள்ளனர். கருணாநிதி மீதான பற்றினை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் விட முடியவில்லை என்பதை பலருடன் விவாதிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன். வலைப்பதிவில் இருக்கும் எனக்கு முந்தைய தலைமுறை சார்ந்தவர்களின் உணர்வு இவ்வாறே உள்ளதை கவனித்து இருக்கிறேன். எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.

1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.

இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதி, 1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தன்னை தமிழ் சார்ந்த பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்திய தேசியத்திற்கு முன்பு மண்டியிட வேண்டிய அவலம் கருணாநிதிக்கு நேர்ந்தது. இவ்வாறன சூழ்நிலையில் அமைந்த காங்கிரஸ் கூட்டணியை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருணாநிதி பார்த்தது தான் தற்போதைய கருணாநிதியின் துரோக அரசியலுக்கு முக்கிய காரணம். கூடவே திமுகவுடன் கருணாநிதி குடும்ப அரசியலும் ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு அடிபணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.

திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. சாதிக் கட்சியாக தொடங்கினாலும் பாமக தமிழ் அரசியலை பின்பற்ற தொடங்கியது. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த இடைவெளியை தன் கையில் எடுத்துக் கொள்வதே பாமகவின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது. இதன் வெளிப்பாடு தான் மக்கள் தொலைக்காட்சி, பொங்குதமிழ் பண்ணிசை மன்றம் போன்றவை. இந்த காரணத்தினாலேயே கருணாநிதி கைவிட்ட ஈழ அரசியலையும் பாமக அதிகமாக முழங்கியது. கருணாநிதியே ராமதாஸ் தன் தமிழின அரசியலை கடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாமக பின் மைய அரசில் பங்கு கொண்ட சூழ்நிலையில் தன்னை காங்கிரசின் நண்பனாக காட்டிக் கொள்ள முனைந்தது. திமுக எப்படி தமிழின அரசியலில் இருந்து மாறியதோ அதே போன்று பாமகவும் மாறியது.

இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.

நிலை நிறுத்தப்பட்ட கட்சிகள் இவ்வாறு என்றால் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே சென்று ”இந்திய தேசியம்” என்பதை ஓங்கி ஒலிக்க தொடங்கினர். இவர்கள் இதனை செய்தது இவர்கள் இந்திய தேசியம் மேல் கொண்டிருக்கிற ஆழ்ந்த பற்றினால் அல்ல. தமிழக அரசியல் அந்த பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களும் அப்படி தான் நகரமுடியும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட அரசியலின் அடிப்படை அடித்தளத்தையே விஜயகாந்த் தகர்க்க பார்த்தார். எனவே தான் திராவிட அரசியலை விலக்க விஜயகாந்த்தை பார்ப்பன ஊடகங்கள் பரப்புரை செய்ய தொடங்கின.

இந்த ஆபத்தான பாதை திருமாவையும் விட்டு வைக்காது என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்த போக்கில் இருந்து ஓரளவுக்கு தன்னை விலக்கி கொண்டவர் வைகோ மட்டும் தான். அதனால் தான் வைகோ வளரவே இல்லை. வைகோவின் ஒரு முக்கியமான சக்தியாக வளராமல் போனதற்கு அவரது உணர்ச்சிவசப்படும் போக்கு மட்டும் காரணம் அல்ல. அவரைச் சார்ந்த தமிழ் பிம்பமும் முக்கிய காரணம். 1992ல் திமுக பிளவு பட்ட பொழுது அவரை ஊடகங்கள் ஆதரித்தே எழுதின. மதிமுக தொடங்கப்பட்ட காலங்களில் வைகோவிற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கிடைத்தது. அவர் விஜயகாந்த் போன்று ஒரு சோனகிரியாக இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்கும். வைகோ அப்படி பட்டவர் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஊடக விளம்பரமும் கிடைக்கவில்லை. பின்னர் மூப்பனார் ஊடகங்களை ஆக்கிரமித்தார்.

1991ல் தொடங்கிய இந்த போக்கு 2008ல் திசை மாற தொடங்கி 2009ல் முழுமையான மாற்றத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஈழப்பிரச்சனை.
எந்த அரசியலும் தெளிவாக அமைய ஒரு போராட்ட களம் தேவைப்படுகிறது. போராட்டம் தான் அரசியல் களத்தை தெளிவுபடுத்துகிறது. ஈழப் பிரச்சனை எப்பொழுதுமே தமிழக அரசியல் பாதையை மாற்றியிருக்கிறது. பெரியாரின் சுயமரியதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விட தமிழக அரசியலில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தியது ஈழப் போராட்டம் மட்டுமே. அதன் தாக்கம் தமிழின அரசியலுக்கு ஆதரவாகவும் அமைந்தது, எதிர்மறையாகவும் அமைந்தது. 1980களிலும், 1990களிலும் ஈழப்போராட்டத்தின் தாக்கமே தமிழக அரசியல் பாதையை மாற்றியது. தற்பொழுது 2008லும் அது தான் மாற்றப் போகிறது.

1967க்கு பிறகு எந்த பெரிய போராட்ட களமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக அரசியல் இந்திய தேசியம் நோக்கி நகர தொடங்கியது. திமுக உடைந்து அகில இந்திய அதிமுக தேசிய அடையாளத்துடன் உருவாகியது. இந்திய தேசியம் நோக்கி சென்ற தமிழக அரசியலை தடுத்து நிறுத்தியது 1980களில் வீசிய ஈழ ஆதரவு அலையே. ஆனால் அதே ஈழப் போராட்டம் 1991க்கு பிறகு தமிழகத்தை இந்திய தேசிய அரசியல் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது மறுபடியும் தமிழகத்தை ஈழப் போராட்டம் தமிழ் அரசியல் பாதைக்கும், இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலுக்கும் கொண்டு வந்திருக்கிறது. முன் எப்பொழுதையும் விட குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இன்றைக்கு நம் முன் இருப்பது ஒரே கேள்வி தான் ? இன்றைய சூழ்நிலையில் யாரை எதிர்க்க வேண்டும் ?

திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவது என்பதே சகிக்க முடியாத ஒன்று. அதனை எப்படி செய்வது ?

ரோசாவசந்த்தின் பதிவில் நான் எழுதியிருந்தது போல, இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தினை ஆரோக்கியமாக செயல்படுத்த தமிழர்களுக்கு தேர்தல் அரசியலில் எந்த வழியும் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் போன்று ஒரு குழப்பமான தேர்தலை தமிழ் உணர்வாளர்கள் முன் எப்பொழுதுமே எதிர்கொண்டதில்லை. ஒரு பக்கம் துரோகியாக மாறி விட்ட கருணாநிதி, மற்றொரு புறம் எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு விஜயகாந்த்தை ஆதரிக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருக்கிற அவரின் கபடநாடகம். தனித்து அணி அமைப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரின் சந்தர்ப்பவாதம்.

இத்தகைய சூழ்நிலையில் பேசாமல் தேர்தலை புறக்கணிக்கலாம், 49ஓ போடலாம் என பல்வேறு சிந்தனைகள் பலரின் மனதிலே ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக...இந்த தேர்தலில் நாம் யாரையும் ஆதரித்து வாக்களித்து விட முடியாது என்பது ஒரு முக்கிய நிலைப்பாடாக அனைவரது மனதிலும் உள்ளது.

இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.

இந்தியா போன்று ஆரோக்கியமற்ற ஜனநாயக சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கொண்டே எதையும் அணுக முடிகிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஒபாமாவின் கொள்கைகளையும், மெக்கெயின் கொள்கைகளையும் பார்த்து அணுகும் சூழ்நிலையில் இந்திய ஜனநாயகம் இன்றைக்கு இல்லை. தற்போதைய நடைமுறை அப்படியே தொடரத்தான் போகிறது. அதனால் எப்பொழுதும் இந்தியாவில் மாற்றம் வரும் வாய்ப்பும் இல்லை. அதே போல ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்ட மக்கள் புரட்சிகர தத்துவங்களை கைக்கொண்டு இடதுசாரி அமைப்புகளின் பக்கம் திரும்புவார்கள் என்பதும் ஒரு வறட்டு வேதாந்தமே. தேர்தல் என்பது மக்களுக்கு தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம். மக்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்து எப்பொழுதும் தங்களை விலக்கி கொள்ள மாட்டார்கள்.

ஈழத்தில் உள்ள மோசமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடும், தமிழினத்தின் துரோகியாக மாறிய கருணாநிதியின் அயோக்கியத்தனமும் இன்றைக்கு இருந்திருக்காவிட்டால், நாமும் வறட்டு வேதாந்தங்களை பேசிக் கொண்டு அமைதியாக தேர்தலை புறக்கணித்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலை அப்படியானது அல்ல. நாம் நம் எதிர்ப்பை ஏதோ ஒரு வழியில் காட்டியாக வேண்டிய தேவை உள்ளது. அந்த எதிர்ப்பை காட்ட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் மட்டுமே..

இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார். எதற்கெடுத்தாலும் தந்தி அனுப்புவதும், நாடகம் ஆடுவதும், தாயே மனது வையுங்கள் என்று சோனியாவிடம் கதறுவதும், என்னால் இவ்வளவு தான் முடியும் எல்லாவற்றையும் செய்து விட்டேன் என புலம்புவதும் என தன்னுடைய சுயமரியாதையை மட்டும் அல்ல தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்ட வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையையும் கருணாநிதி அவமதித்து விட்டார். தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தின் பொருட்டு ராஜபக்சேவின் குரலை ஒலித்து கொண்டிருக்கிற காங்கிரசுக்கு கருணாநிதி துணை போய் விட்டார்.

பிரபாகரன் எனது நண்பர் என முதல் நாள் சொல்வதும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பல்டி அடித்து பேசுவதும் என இவர் நடந்த விதம் தமிழினத்தலைவர் என்பது போல அல்ல. சோனியாவின் வேலைக்காரன் என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

இவ்வளவு நடந்த பிறகும் கருணாநிதியை திராவிடத்தின் தலைவர் என்று கூறுபவர்களை பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. இவர்கள் இன்னும் கடந்த கால கருணாநிதியையே பார்க்கிறார்கள். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க மறுக்கிறார்கள். திராவிடத்தின் தேவைக்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறுபவர்கள் கருணாநிதியின் கடந்த ஒரு வருட நாடகங்களை வாய்மூடி பார்த்து கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தற்பொழுது கருணாநிதி நடத்திக் கொண்டிருப்பது என்ன திராவிட அரசியலா ? அல்லது எதிர்காலத்தில் ஸ்டாலினும், அழகிரியும் நடத்தப்போவது தான் திராவிட அரசியலா ?

கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.

திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.

அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
மேலும் படிக்க...

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இனி ஆனையிறவு நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறும். பரந்தன், பூநகரி போன்ற இடங்களை புலிகள் இழந்துள்ள நிலையில் இனி ஆனையிறவை புலிகள் தக்கவைத்துக் கொள்வது கடினம்.

அடுத்து இராணுவம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவினை நோக்கி நகரக்கூடும். 1998ம் ஆண்டு போல மறுபடியும் சிறீலங்கா இராணுவத்தை முறியடித்து புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் 1998ம் ஆண்டு புலிகள் ஒரு நாட்டினை எதிர்த்து தான் போரிட்டார்கள். எனவே அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது. ஆனால் இம் முறை பல நாடுகளை எதிர்த்து போரிடுகிறார்கள். சிறீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஈரான் என அனைத்து நாடுகளையும் எதிர்த்து ஒரே நேரத்தில் போரிடுகிறார்கள். எனவே கிளிநொச்சி இழப்பு என்பது மறுபடியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே எனக்கு தோன்றுகிறது. இது சரியானது தானா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இந்தப் போர் குறித்து போரியல் நோக்கில் கட்டுரை எழுத தொடங்கினேன். இன்னும் போர் முடியவில்லை என எனக்கு தோன்றுகிறது. புலிகள் தங்களின் பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புலிகளின் பல அடுக்கு தற்காப்பு வளையத்தில் இரண்டு அடுக்குகளை தற்பொழுது இழந்துள்ளனர். முதல் அடுக்கு தங்களது எல்லைகளை பாதுகாப்பது என்பதாகவும், இரண்டாம் அடுக்கு முக்கிய நகரங்களைச் சுற்றியும், மூன்றாவது அடுக்கு இராணுவம் சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்கரைச்சார்ந்த முக்கிய நிலைகளை பாதுகாப்பது என்பதாகவும் அமைந்து இருந்தது. தற்பொழுது இரண்டு அடுக்குகளை சிறீலங்கா இராணுவம் உடைத்துள்ளது. இரண்டாம் அடுக்கு சார்ந்த சில முக்கிய நிலைகளை இனி புலிகள் தக்கவைப்பது கடினம். எனவே புலிகளின் மூன்றாவது தற்காப்பு வளையத்தை நோக்கி போர் நடைபெறக்கூடும். இது தான் இறுதிப் போர்.

எனவே போர் இன்னும் முடியவில்லை. என்றாலும் பல நாடுகளை ஒரே நேரத்தில் எதிர்த்து போரிடக்கூடிய பலம் புலிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளின் இழப்பு புலிகளின் ஈழப்போராட்டத்தின் முடிவின் துவக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கொழும்பு ஊடகங்கள் இதனை பிரபாகரனின் வாட்டர்லு என வர்ணிக்கின்றன. "புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது உண்மையாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் வியூகங்களை தொடர்ந்து இங்கு முன்வைக்கிறேன். ஏனெனில் போர் கிளிநொச்சியுடன் முடிந்து விடப்போவதில்லை.

*********************

1916ம் ஆண்டு முதல் உலகப் போர் நடைபெற்ற சூழலில் இருந்த ஒரு யுத்த வியூகத்தினை நாம் கவனிக்க வேண்டும். ஒரு புறம் ரஷ்யா மற்றொரு புறம் பிரஞ்ச், பிரிட்டன் என இரு புறமும் இருந்த எதிரிகளை சமாளிக்கவும், தொடர்ச்சியான அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளவும், அவர்களின் எதிர்தாக்குதல்களை முறியடித்து பிறகு தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ளவும் ஜெர்மனி ஒரு நீண்ட தற்காப்பு வளையத்தை அமைத்து இருந்தது. இந்த தற்காப்பு வளையத்தை Hindenburg Line என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு சாதகம் இல்லாத இடங்களை கைவிட்டு, சாதகமான இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொள்வது ஜெர்மனியின் வியூகமாக இருந்தது (If this meant the relinquishment of territory to achieve dominant and fortifiable terrain and features, so be it.). அது தவிர சில முக்கிய நோக்கங்களும் ஜெர்மனி படையணிக்கு இருந்தது. ரஷ்யாவில் பிரச்சனைகள் ஏற்படும், அது தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என ஜெர்மனி நினைத்தது. எனவே அது வரையிலான காலத்தை கடத்துவது ஜெர்மனியின் நோக்கம். எனவே தன்னுடைய வலுவான நிலைகளை உள்ளடக்கி ஒரு நீண்ட தற்காப்பு அரணை அமைத்துக் கொண்டது. இந்தப் பகுதியை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும், குறைவான படைகளே இதற்கு தேவைப்படுவார்கள் என்பதும் ஜெர்மனியின் வியூகம்.

ஜெர்மனியின் இந்த வியூகம் அதற்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ச்சியான பிரஞ்ச் படையினரின் தாக்குதல்களை தங்களுடைய தற்காப்பு வியூகங்களால் முறியடிக்க முடிந்தது. மொத்த பிரஞ்ச் படையையே இந்த தற்காப்பு வியூகம் மூலமாக ஜெர்மனி தோற்கடித்தது. முறியடிக்கவே முடியாத நிலையில் இருந்த Hindenburg Line என்ற தற்காப்பு வியூகத்தை நவம்பர் 20, 1917ல் பிரிட்டன் படைகள் முறியடித்தன. இந்த யுத்தத்தை Battle of Cambrai என கூறுவார்கள்.

பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு ஜெர்மனியின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்கினர். இதற்கு பிறகு ஒரு வலிந்த தாக்குதல்களை பிரிட்டன் எதிர்பாராத நேரத்தில் ஜெர்மனி தொடுத்தது. இதில் ஜெர்மனிக்கு கணிசமான வெற்றி கிடைதது.

இப்பொழுது ஈழத்திலே நடைபெற்று கொண்டிருக்கும் போரினை ஜெர்மனி-பிரிட்டன் யுத்தத்துடன் ஒப்பிட முடியும். புலிகளின் படைபலத்தை ஜெர்மனியுடன் ஒப்பிட முடியாது. என்றாலும் புலிகளின் வியூகம் ஜெர்மனி போலவே உள்ளதை கவனிக்க முடியும். தங்களுக்கு சாதகமான பகுதிகளைச் சார்ந்த தற்காப்பு அரணை புலிகள் அமைத்து உள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சார்ந்த தற்காப்பு அரண் இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் அவர்கள் வசம் எஞ்சி இருக்கிற பகுதிகளைச் சார்ந்து மற்றொரு தற்காப்பு அரணை அமைத்து உள்ளார்கள். இது தவிர கடல்சார்ந்த புலிகளின் பகுதிகளைச் சார்ந்தும் மற்றொரு தற்காப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் என்பது இந்த கடற்கரைச் சார்ந்த இறுதி தற்காப்பு அரணைச் சார்ந்தே அமையும் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு பிரிட்டன் படைகள் தங்களின் அசுர மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ஜெர்மனியின் வியூகத்தை உடைத்தார்களோ அதைப் போலவே சிறீலங்கா இராணுவம் தங்களது நவீன ஆயுத பலம் மூலம் புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து உள்ளனர்.

புலிகளின் தற்காப்பு அரண் தங்களின் படைகளை தற்காத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. அது தவிர தங்கள் பலத்தை ஒரே இடத்தில் குவிப்பதும் புலிகளின் நோக்கமாக உள்ளது (Concentration of forces). புலிகளிடம் இன்னமும் 25,000 படைப்பிரிவினர் உள்ளனர். இவர்களில் 10,000 பேர் நவீன பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போரில் இது வரை புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவை அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்தப் படையணிகள் எளிதில் குண்டு துளைக்காத உடைகவசம் அணிந்தும், தலையில் கவசம் அணிந்தும் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய முக்கிய படையணிகளை தற்காத்துக் கொள்ளும் புலிகளின் வியூகத்தையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த தற்காப்பு போரும், இறுதியில் வலிந்த தாக்குதல்களை நோக்கமாக கொண்டே அமைக்கப்படும். அந்த வகையில் ஜெர்மனி எவ்வாறு தங்களுடைய தற்காப்பு வியூகத்தை ரஷ்யாவில் இருந்த உள்நாட்டு குழப்பத்தை எதிர்பார்த்து அமைக்கப்படிருந்ததோ அது போல புலிகளும் தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை எதிர்பார்த்து தங்களது தற்காப்பு வியூகத்தை அமைத்து உள்ளனர்.

இது வியூகமாக இருந்தாலும், இந்த வியூகம் எந்தளவுக்கு புலிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வலிந்த தாக்குதல் வெற்றிகளை கொடுக்கும். அது போல சிறீலங்கா இராணுவம் எந்தளவுக்கு புலிகளின் பலத்தை குறைத்து உள்ளதோ அதனைச் சார்ந்த அதனுடைய தற்போதைய வெற்றி நிலைக்க முடியும்.

முதலில் சிறீலங்கா இராணுவத்தின் வெற்றி எப்படியானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிறீலங்கா இராணுவம் புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது அதன் முக்கிய வெற்றியாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வெற்றியை தக்கவைப்பதும் எதிர்காலத்தில் இராணுவத்திற்கு இருக்ககூடிய சவால் என்பதையும் நான் கவனிக்க வேண்டும். இப்பொழுது கைப்பற்றியுள்ள இடங்களை தக்கவைக்க வேண்டுமானால் புலிகளின் பலத்தை இராணுவம் அழிக்க வேண்டும். அவ்வாறு இது வரை செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் அப்படியான எந்த வெற்றியும் இராணுவத்திற்கு ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். இது வரை புலிகள் தரப்பில் சுமார் 10,000 பேரை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறி வருகிறது. ஆனால் புலிகள் ஆண்டுதோறும் வெளியிடும் மாவீரர்கள் பட்டியல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான நிலவரத்தை தரும். அவ்வாறு நோக்கம் பொழுது புலிகள் தரப்பில் பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்பதை கவனிக்க முடியும். இது தவிர புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழங்கல் பாதை (Supply Lines) இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதையும் சமீபத்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய வெற்றி என்பது உறுதியான வெற்றி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அது போல புலிகளின் தற்காப்பு வியூகங்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்று உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான போர் மூலமாக சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது போன்றவை புலிகளின் நோக்கமாக இருந்தது. புலிகளின் இந்த முயற்சிக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை நாம் போர் நிலவரங்கள் மூலம் கவனிக்க முடியும். சில குறிப்பிடத்தக்க இழப்புகளை இராணுவத்திற்கு புலிகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த இழப்புகள் இராணுவத்தை பொறுத்தைவரை மிகவும் குறைவே. அது தவிர கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதல் போன்றவை மூலம் சிறீலங்கா பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தங்களை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்பொழுது புலிகளால் அது போன்ற ஒரு பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் எந்த வெற்றியையும், யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்றாலும் இடங்களை கைப்பற்றியதன் மூலம் இராணுவம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை நான்காவது ஈழப் போரில் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

*************************

2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு தொடங்கி விட்டது. A32 சாலைக்காக நடந்த சண்டையில் இராணுவத்தின் Attrition warfare நோக்கம் தங்களுக்கு தெரிவதாகவும், அதற்கு ஏற்ப தங்களுடைய வியூகமும் அமையும் என புலிகள் அமைப்பின் ஒரு மூத்த தலைவர் தெரிவித்து இருந்தார். 2008ம் ஆண்டு போர் பற்றிய ஒரு தெளிவினை கொடுக்கும் என 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் கூறினார். 2008ம் ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு விடயம் தெளிவாகவே புரிகிறது..... அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

2008ம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு பல தோல்விகளை புலிகள் அடைந்து உள்ளனர். அடம்பன், பூநகரி தொடங்கி தற்பொழுது பரந்தன், கிளிநொச்சி என பல இராணுவ முக்கியத்துவம் பெற்ற இடங்களை புலிகள் இழந்து உள்ளனர். கிளிநொச்சி தவிர முல்லைத்தீவு பகுதியையும் புலிகள் இழக்ககூடும். கிளிநொச்சியை புலிகள் தற்காக்க தீவிர போர் புரிந்த சூழ்நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக சிறீலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. முல்லைத்தீவினை நோக்கி இராணுவம் நகர்ந்து வருகிறது. முல்லைத்தீவு நகரை அண்டிய முள்ளியவளை, தண்ணீரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியை தக்கவைக்க வேண்டுமானால் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை தான் புலிகளுக்கு இருந்தது. அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்திருக்கின்றனர்.

நான் கடந்த பகுதியில் கூறியிருந்தது போல புலிகள் போன்ற சிறிய இராணுவ அமைப்பிற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பெரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆட்பலமோ, ஆயுதபலமோ இல்லை. அதைத் தான் இந்த வார நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் முழுவதையும் பாதுகாப்பதற்கு போதிய போராளிகள் பலமோ, ஆயுத பலமோ புலிகளிடம் இல்லை. தற்காப்பு அரணை சார்ந்த பகுதிகளில் குறைந்த அளவிலான போராளிகளே இருப்பார்கள். இது இராணுவத்தின் ஆர்ட்லரி தாக்குதல்கள் போன்றவற்றை சமாளிப்பதற்கான ஒரு உத்தியும் கூட. இராணுவம் தாக்குதல் தொடுக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு, தாக்குதல்களின் பலத்தை பொறுத்து போராளிகளையும், ஆயுதங்களையும் அனுப்புவது புலிகளின் வழக்கம். இது புலிகள் என்றில்லாமல் எல்லா இராணுவ அமைப்புகளின் செயல்பாடும் இவ்வாறு தான் இருக்கும். பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இந்த வழங்கல் பாதையில் (Supply Lines) சுணக்கம் ஏற்படுகிறது. அது தவிர இராணுவத்தின் விமானத் தாக்குதல் இந்த வழங்கல் பாதையை குறிவைக்கிறது. இதன் காரணமாகவே புலிகளின் தற்காப்பு அரணை பல முனை, எதிர்பாராத தாக்குதல்களை மூலம் இராணுவம் முறியடிக்க முனைகிறது. அதற்கு வெற்றியும் கிடைத்து உள்ளது.

இதனை எதிர்கொள்ள தங்களால் பாதுகாக்க முடிந்த சிறிய பகுதிகளை மட்டும் பாதுகாத்து கொள்வதும், தங்களால் பாதுக்காக்க முடியாத முக்கிய நிலைகளை விட்டு பின்வாங்குவதும் புலிகளின் தற்போதைய வியூகமாக உள்ளது. தற்போதைய நிலையில் மூன்று புறமும் புலிகளை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. ஒரு புறம் கடல் வழியே வரும் ஆயுதங்களை இராணுவம் தடுக்க முனைந்து வருகிறது. இருந்தாலும் புலிகள் அவ்வப்பொழுது ஆயுதங்களை பெற்றே வந்திருக்கின்றனர் என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புலிகள் எந்தளவுக்கு ஆயுதங்களை கடல் வழியாக பெறுகின்றனர் என்பதை பொறுத்தே போரின் எதிர்கால போக்கு அமையும். இந்த கடல் வழிப் பாதையை எந்தளவுக்கு இராணுவம் தடுக்கிறதோ அந்தளவுக்கு அது இராணுவத்திற்கு வெற்றியையும் கொடுக்கும்.

*************************

இராணுவத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றிகளை தடுக்க புலிகள் வலிந்த தாக்குதல்களை தொடுக்க வேண்டும். புலிகள் ஏன் தங்களுடைய வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக பல ஊடகங்களில் எழுப்பபட்டு வருகிறது. புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. அது உண்மையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்

மேலும் படிக்க...

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


போர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற முடியும்.

தற்போதைய ஈழப் போரில் சிறீலங்கா இராணுவம் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றிருக்கிறது. புலிகள் கடுமையான தற்காப்பு போரினை செய்து வருகிறார்கள். புலிகளின் போர் தந்திரங்களை முறியடிக்கும் இராணுவத்தின் வியூகங்களும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தற்போதைய ஈழப் போரில் இராணுவத்தின் குறிப்பிடும்படியான வெற்றியாக மடு தேவாலயம் சார்ந்த பகுதிகளுக்கும், அடம்பன் நகருக்கும் நடந்த சண்டைகளை குறிப்பிட முடியும். பல மாதங்கள் இந்தச் சண்டை நீடித்தது.

இங்கு புலிகள் மிகவும் பலமான பாதுகாப்பு வளையங்களை அமைத்து இருந்தனர். கிட்டதட்ட முகமாலையில் இருந்தது போலவே இங்கு ஒரு வலுவான தற்காப்பு அரண் புலிகளால் செய்யப்பட்டிருந்தது. புலிகளின் தற்காப்பு அரண் பல அடுக்குகளை கொண்டது. நன்றாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் ஒரு அரண். அதற்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். கண்ணி வெடிகள் என்னும் பொழுது அது ஒரு பொதுப்படையான பெயர். ஆனால் அதிலே பல விதமான வகைகள் உள்ளன. Chain Mines எனப்படுவது ஒரு வகையான கண்ணி வெடி. இதில் ஒரு வெடி வெடிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக அதனுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் பல வெடிகள் வெடித்து மிகவும் பலமான சேதங்களை படைகளுக்கு ஏற்படுத்தும். இது தவிர Booby trap என்ப்படும் பொறிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த பொறிக்குள் சிக்கும் படைகள் கடுமையான பாதிப்புகளை அடைய நேரிடும்.

புலிகளின் பதுங்கு குழிகளை கைப்பற்ற வேண்டுமானால் இந்த வளையத்தைக் இராணுவம் கடந்து செல்ல வேண்டும். அடம்பன் பகுதியில் இந்த வளையத்தை கடந்து செல்லவே முடியாத சூழ்நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது. இந்த வளையத்தில் சிக்கி பல இராணுவத்தினர் தங்கள் கால்களை இழக்க நேரிட்டது. பலர் இறந்தனர். இது தவிர தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தை தாக்க புலிகள் ஸ்னைப்பர்களை (Sniper) பயன்படுத்தினர். தூரத்தில் இருக்கும் இலக்குகளை மிகவும் சரியாக குறி பார்த்து சுடுவதே ஸ்னைப்பர் தாக்குதல். எல்லா இராணுவத்திலும் ஒரு தனிப் பிரிவே இதற்கு உண்டு. புலிகள் அமைப்பிலும் உள்ளது. தங்கள் இலக்குகளை நோக்கி வரும் இராணுவத்தினரை சுடுவதற்கு இந்த ஸ்னைப்பர்களை புலிகள் பயன்படுத்தினர்.

இப்படியான தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதிகளில் இராணுவத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இந்த சண்டை நடந்தது. புலிகளின் இந்த அரண்களை உடைத்து இராணுவம் முன்னேறும் பொழுது தங்கள் நிலைகளில் இருந்து புலிகள் பின்வாங்கி விடுவார்கள். ஆரம்பத்தில் இராணுவத்தின் நோக்கம் புலிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்றளவில் இருந்ததால், புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடும் உத்தியை கடைப்பிடித்தனர். புலிகள் இராணுவம் முன்னேறும் பொழுது பின்வாங்கி விடுவார்கள். பிறகு இராணுவத்தை நோக்கி கடுமையான ஆர்ட்டிலரி தாக்குதலை தொடுப்பார்கள். புலிகளின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். இப்படியான சூழலில் ஒரு இடத்தை இராணுவம் கைப்பற்றுவதும், பின் அதனை புலிகள் கைப்பற்றுவதும், பின் இராணுவம் கைப்பற்றுவதும் என மாறி மாறி சூழ்நிலை நிலவி வந்தது.

அப்போதைய செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். அடம்பன் நகரை பிடித்து விட்டோம் என இராணுவம் கூறும். பின் சிறிது காலம் கழித்து மறுபடியும் அடம்பன் நகரை பிடித்து விட்டோம் எனக்கூறுவார்கள். இடையிலே அவர்கள் புலிகளிடம் இழந்தது செய்தியாக வெளியாகாது. இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருந்த சூழ்நிலை ஒரு விதமான தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கள் தந்திரோபாயத்தை மாற்ற வேண்டிய தேவை சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டது.

புலிகளின் தற்காப்பு வியூகத்தை உடைக்க மூன்று திசைகளில் இருந்து அடம்பன் நகரை நோக்கி இராணுவம் படிப்படியாக நகர தொடங்கியது. சிறீலங்கா இராணுவத்தின் Flanking maneuver எனப்படும் சுற்றிவளைப்பு காரணமாக புலிகள் அடம்பன் நகரில் இருந்து பின்வாங்க நேரிட்டது. இங்கு இராணுவத்தை எதிர்த்து புலிகள் பதில் தாக்குதலை தொடுத்து இருக்கலாம். ஆனால் அது புலிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்தார்கள். அடம்பன் இராணுவம் வசம் வந்தது. அதற்கு பிறகு பல இடங்கள் மிக வேகமாக இராணுவம் வசம் வந்தடைந்தது.

**********

அடம்பன் நகர் சார்ந்த பகுதிகளிலும், முகமாலை பகுதிகளிலும் புலிகளின் தற்காப்பு வியூகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது. ஆனால் அடம்பனை கைப்பற்றிய சிறீலங்கா இராணுவத்தால் முகமாலையை ஏன் கைப்பற்ற முடியவில்லை ?

ஈழத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போருக்கும், கடந்த காலங்களில் ஈழத்திலும், பிற நாடுகளில் நடைபெற்ற போருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம். இதைத் தான் Flanking maneuver என்கிறார்கள். உதாரணமாக சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பொழுது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே அந்த மலைப்பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தாமல், அந்த மலைப்பகுதியை வேறு வகையில் சுற்றி வளைத்து அங்கு செல்லக்கூடிய வழிகளை அடைத்தார்கள். இதன் காரணமாக சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஈழப் போரில் கூட புலிகள் ஆனையிறவை "ஓயாத அலைகள் - 3" தாக்குதலில் இவ்வாறே வென்றார்கள். இரண்டாம் உலகப் போரில் நடந்த ஐ ஆலமெய்ன்(El Alamein) சண்டையும் அவ்வாறானதே.

தற்போதைய ஈழப் போர் வியூக அமைப்பும், ஐ ஆலமெய்ன் வியூக அமைப்பும் பெரும்பாலும் ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. ஐ ஆலெமெய்ன் போரில் ஜெர்மனி-இத்தாலி அச்சுப் படைகள் மிக நீண்ட ஒரு தற்காப்பு அரணை அமைத்து இருந்தார்கள். இந்த தற்காப்பு அரண் என்பது மிக நீண்ட பதுங்கு குழிகளை கொண்டதாக அமைந்து இருந்தது. சுமார் 40கி.மீ நீள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகளுக்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. பதுங்கு குழிகளுக்கு பின்புறமாக படைவீரர்களும், ஆர்ட்டலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைச் சார்ந்து நடந்த சண்டையில் அச்சுப்படைகளின் வியூகத்தை உடைத்து பிரிட்டன் - பிரான்சு உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து நேச நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின. எதிர்பாராத திசையில் இருந்து எதிர்பாராத தாக்குதல் என்பது தான் பல இராணுவ வெற்றிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடம்பனிலும் சிறீலங்கா இப்படியான ஒரு வெற்றியை தான் பெற்றது. புலிகள் எதிர்பாராத வகையில் மூன்று திசையில் இருந்து அடம்பனை சிறீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனால் முகமாலையில் சிறீலங்கா இராணுவத்தால் அதனை செய்ய முடியவில்லை. ஏனெனில் முகமலையில் Flanking Maneuverability க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முகமாலை வெறும் 7 கி.மீ அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதி. சுற்றிலும் கடலும், கடனீரேரிகளும் உள்ளன. சுற்றி வளைப்பதற்கான வாய்ப்பு இங்கே மிகவும் குறைவு. சுற்றி வளைக்க வேண்டுமானால் தென் பகுதியில் இருந்து நுழைந்து கிளிநொச்சி-பரந்தன் - பூநகரி போன்ற பகுதிகளை பிடிக்க வேண்டும். அதைத் தான் தற்பொழுது சிறீலங்கா இராணுவம் முனைந்து வருகிறது. கிளிநொச்சி-பரந்தன்-ஆனையிறவு வழியே செல்லும் A9 நெடுஞ்சாலை தான் தற்போதைய போரின் இலக்கு.

***************

புலிகள் தற்பொழுது பெரும்பாலும் தற்காப்பு தாக்குதல்களையே செய்து வருகிறார்கள். புலிகள் ஏன் தற்காப்பு தாக்குதல்களை நீண்ட காலமாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.



தற்காப்பு தாக்குதலுக்கும், வலிந்த தாக்குதலுக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு தாக்குதலுக்கு தேவைப்படும் ஆட்பலம். ஒரு மிக பலமான தற்காப்பு வியூகத்தை உடைக்க 5:1 என்ற விகிதத்தில் வலிந்த தாக்குதலுக்கு கூடுதல் படையினர் தேவைப்படுகின்றனர். அது போல தற்காப்பு வியூகத்திற்கு அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களை கூட "நல்ல பயிற்சியுடன்" தற்காப்பு போரில் களம் புகுத்த முடியும். ஆனால் வலிந்த தாக்குதலுக்கு மிகவும் கூடுதல் பலம் தேவைப்படுகிறது. போர் சார்ந்த மதி நுட்பமும், அனுபவமும் தேவைப்படுகிறது.

தற்பொழுது முகமாலை, கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு என பல முனைகளில் நடைபெறும் போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்தில் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், போர் நீண்ட காலம் நீடிக்கப்பட்டால் இராணுவம் தன்னுடைய முக்கிய படைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்ய நினைக்கின்றனர். இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.

இராணுவம் தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்களில் தங்களுடைய அனுபவம் மிக்க படையணிகளை இழக்கும் பொழுது எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள். தொடர்ச்சியான இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிப்பதும், அவ்வாறு முடியாத சூழ்நிலையில் பின்நகர்ந்து வேறு இடத்தில் புதிய தற்காப்பு அரண்களை அமைப்பதும் புலிகளின் தந்திரோபயமாக உள்ளது.

கடந்த காலங்களில் கூட யாழ்ப்பாணத்தை நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பொழுது புலிகள் இவ்வாறே பின்வாங்கினர். ஆனால் பின்வாங்குதல் என்பது இரணுவம் நுழைய ஆரம்பித்தவுடன் உடனே பின்வாங்கி விடுவதல்ல. புலிகள் எப்பொழுதுமே முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்த்து தற்காப்பு தாக்குதல் தொடுத்து பின்வாங்கி விடுவார்கள். அவ்வாறு தற்காப்பு தொடுக்கும் பொழுது இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், தங்களுடைய படையணியை தற்காத்துக் கொண்டும் பின்வாங்குவது புலிகளின் வியூகம். இந்தப் போரில் கூட அவர்களின் நோக்கம் அது தான். யாழ்ப்பாணம் கடனீரேரி தொடக்கம், இரணைமேடு வரை ஒரு நீண்ட பாதுகாப்பு அரணை கிளிநொச்சி-பரந்தனை பாதுகாக்க புலிகள் அமைத்துள்ளனர். இந்த பாதுகாப்பு அரணை உடைக்கவே தற்பொழுது பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கம். இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட பலத்த சேதங்களைப் பெற்ற பிறகே கைப்பற்றக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.

புலிகளின் இந்த வியூகத்தை சிறீலங்கா இராணுவம் உணர்ந்தே உள்ளது. கடந்த வாரம் நடந்த போரில் அதிகம் பயிற்சி பெறாத பல இராணுவத்தினர் புகுத்தப்பட்டுள்ளனர். அது போல புலிகளின் தற்காப்பு அரணை உடைக்க ஒரே நேரத்தில் மிகவும் அசுர பலத்தை பல முனைகளில் பிரயோகிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் கடந்த வாரம் நடைபெற்றது.

பல முனைகளில் அதிகளவில் இராணுவத்தினர் ஒரே நேரத்தில் புலிகளை தாக்கும் பொழுது புலிகளிடம் பல முனை தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க ஆயுத பலம், ஆர்ட்டிலரி பலம் போன்றவை இல்லை என்பது இராணுவத்தின் கணக்கு. கடந்த வாரம் சுமார் 7000 இராணுவத்தினர் பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்யும் பொழுது புலிகளை ஒரே நேரத்தில் நிலைகுலைய செய்ய முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். இதில் இராணுவத்திற்கு சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.

இராணுவத்தின் இத்தகைய வியூகம் புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய தற்காப்பு தாக்குதலை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாத நிலை புலிகளுக்கு ஏற்படும். அப்படியான சூழ்நிலையில் புலிகள் தங்கள் பதில் தாக்குதலை தொடுக்க வேண்டும். புலிகள் தற்பொழுது அதைத் தான் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

இதில் வெற்றி தோல்விகள் பல விடயங்களைப் பெறுத்து உள்ளது. அந்த விடயங்களை அடுத்து வரும் பகுதிகளில் எழுத உள்ளேன்.

படங்கள் : dailymirror.lk
References : sundaytimes.lk, thesundayleader.lk, transcurrents.காம் மேலும் படிக்க...

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.

புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் . பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.

The Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நடந்த சண்டை. சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா ? தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.

நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.

*********

கிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.

Attrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.

புலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.

அடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.

இதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.

இதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.

பொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.

*********

புலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் "பலமான"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.

ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.

ஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)



முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.
சிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.

ஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும். ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.

இது தான் இராணுவத்தின் நோக்கம்.

ஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.

புலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை ? முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

புலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்கள் . ஐ ஆலமெய்ன் எகிப்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இந்தப் பகுதியில் நடந்த போர் இரண்டாம் உலகப்போர் அதிகம் பேசப்பட்டது. அச்சு அணி நாடுகளான ஜெர்மனி-இத்தாலி படைகளுக்கும், நேசநாடுகளாக இங்கிலாந்து, பிரான்சு போன்ற படைகளுக்கும் இடையே நடைபெற்றஇந்தப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. "Before Alamin we had no victory and after it we had no defeats" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

முகமாலையில் அத்தகைய ஒரு தற்காப்பு அமைப்பினை புலிகள் அமைத்துள்ளதால் தான் மிகக் குறுகிய அந்த நிலப்பகுதியை பல முறை முனைந்தும் இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து புலிகளின் அந்த வியூக அமைப்பை உடைக்க இராணுவம் முயன்று வருகிறது.

இரண்டாம் பகுதி


****************

போர் மிகவும் கொடுமையானது என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நான்காவது ஈழப் போர் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்தப் போரில் யாருக்கும் உறுதியான வெற்றி கிடைக்கப்போவதில்லை என்றே போர் வியூகங்கள் கூறுகின்றன. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் கூட போர் முடியப்போவதில்லை. புலிகள் வசம் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அவ்வாறான சூழலில் இத்தனை உயிர்கள் ஏன் பலியாக வேண்டும் ? அதற்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய சூழலில் எந்த அர்த்தமும் இல்லை. இருந்தாலும் போர் ஏற்படுத்தும் பாதகங்களை எழுப்பி போரின் கொடுமைகளை பேசியாக வேண்டும். மேலும் படிக்க...

இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல்

சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான சோழ சரித்திரமாக நினைத்துக் கொண்ட பலரை நான் அறிவேன்.

வரலாற்று நாவல்களை முழுமையான கற்பனையாக மட்டும் இல்லாமல் வரலாற்றை சரியாக பொருத்தி எழுதிய நாவல்களாக நான் வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் போன்ற நாவல்களை குறிப்பிட முடியும். புதுவையில் இருந்த பிரஞ்ச் ஆட்சி குறித்து ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சன் எழுதிய நாவல் வரலாற்றை தன் எழுத்து சுவராசியத்திற்காக வளைத்து விடவில்லை. இந்த தொடர்கள் தினமணிக்கதிரில் வெளிவந்தது என்பதை குறிப்பிட வேண்டும். வெகுஜன ஊடகத்தில் எழுதினாலும் பிரபஞ்சன் வரலாற்றை சிதைத்து விடவில்லை.

வரலாற்று நாவல்களே இவ்வாறு என்றால், முழுமையான வரலாற்று தொடர் எப்படி இருக்க வேண்டும் ?

வரலாறு குறித்து எழுதுவது சவால் நிறைந்தது. அதீத பொறுப்புணர்வு இத்தகைய பணிகளுக்கு தேவைப்படுகிறது. சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதற்காக வரலாற்றை சிதைத்து விடக்கூடாது. அதுவும் வெகுஜன ஊடகங்களில் சரித்திரத்தை முன்வைக்கும் பொழுது வாசகனை படிக்க வைக்க அதனை சுவாரசியமாக எழுத வேண்டியது தான். அதற்காக சரித்திரத்தை ஒரு க்ரைம் நாவல் போன்று எழுத வேண்டுமா ? சரித்திரத்தை மிகவும் சுவாரசியமாக எழுத முனையும் பொழுது அங்கு சுவாரசியத்திற்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. வாசகனை கட்டிப்போட வேண்டும் என்ற எண்ணம் சரித்திரத்தை சிதைத்து விடுகிறது.

பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியிருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் அந்த வகையில் பெருத்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளது.

இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்த தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக்குழுக்களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலையீடு போன்றவை குறித்து எழுதும் பொழுது இன்னும் எத்தனை குழப்பங்களை முன்வைக்கப் போகிறதோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தான் தற்பொழுது நடைபெறும் போருக்கான முக்கிய காரணம் என்பதான கருத்தாக்கத்தை இந்த தொடரின் முதல் பாகம் வாசகர் மனதில் விதைக்கிறது. இலங்கைப் பிரச்சனை குறித்து பெரிய புரிதல் இல்லாத சாமானிய வாசகர்கள் இதனை மனதில் கொண்டே அடுத்து வருகின்ற பாகங்களை வாசிக்கப்போகிறார்கள். பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தானா இந்தப் போருக்கான முக்கிய காரணம் ? போருக்கான சூழல் ஏற்பட்ட பிறகு, இனி நிச்சயமாக போர் தான் என்ற நிலை ஏற்பட்ட பிறகே பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே உண்மையான நிலை.

இது குறித்த நண்பர் திருவின் பதிவு - ‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!


************

இரண்டாம் பாகத்தில் வரும் சில வரிகள்...

ஐரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன.

இந்த வரிகளைப் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளை விலக புலிகள் கேட்டு கொண்டார்களா ? பா.ராகவன் எங்கே இருக்கிறீர்கள் ? புலிகள் என்ன கேட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நார்வே ஐரோப்பிய யூனியனில் இல்லை என்பது கூடவா உங்களுக்கு தெரியாது ? ஐரோப்பியாவில் இருக்கின்ற அனைத்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இல்லை.

என்ன நடந்தது என்பதை நான் ஏற்கனவே என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்ற தொடரில் எழுதியுள்ளேன். மறுபடியும் இங்கே குறிப்பிடுவதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. பா.ராகவன் குறிப்பிடுவது போல ஸ்வீடன், டென்மார்க் போன்றவை அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல. அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் என பொதுவாக எதனை குறிப்பிடுகிறார் என்றும் தெரியவில்லை. Co-chairs என்று சொல்லப்படும் கூட்டுத்தலைமையை குறிப்பிடுகிறாரா என தெரியவில்லை. அதில் நார்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை உள்ளன. ஸ்வீடன், டென்மார்க் போன்றவை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் - SLMM (Srilanka Monitoring Mission). ஐரோப்பிய யூனியன் தடைக்கு பிறகு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருக்க கூடாது என்று தான் புலிகள் கூறினார்கள். ஐரோப்பிய யூனியனை விட்டே விலக வேண்டும் என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டால் பலர் சிரிப்பார்கள்.

இது மட்டுமா இன்னும் பிழைகள் உள்ளன...

மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?

அடுத்து சில வரிகள் யாழ்ப்பாணம் குறித்த குழப்பத்தை இன்னும் அதிகரிக்கிறது.

பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.

யாழ்ப்பாணம் புலிகள் கைகளில் உள்ளதா ? இராணுவத்தின் கைகளில் உள்ளதா ? யாழ்ப்பாணம் புலிகள் வசம் இல்லை என்ற உண்மையை தெரியாமல் பா.ராகவன் இருக்க முடியாது என நம்புகிறேன். ஆனால் இலங்கை குறித்து அதிகம் தெரியாத சாமானிய வாசகர்கள் இந்த வரிகள் குறித்து படித்தால் என்ன நினைப்பார்கள் ?

இங்கு மற்றொரு தகவல் பிழை உள்ளது. பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நிலம் வழியான பாதை இல்லை. படகுகள் மூலமாகவே செல்ல முடியும். சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் ஆனையிறவு தான் வழி. A9 நெடுஞ்சாலை ஆனையிறவு வழியாகவே யாழ்ப்பாணத்தை வன்னியுடன் இணைக்கிறது. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல் என்பது மட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தை ஏன் சிறீலங்கா இராணுவம் பிடிக்க வேண்டும் ? அது தான் அவர்கள் வசம் ஏற்கனவே உள்ளதே :)

அடுத்து...

தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.

ISGA (Interim Self Governing Authority) என்ற ஒன்றை புலிகள் சமர்ப்பித்தார்களே ? அது என்ன ? அது எதற்காக ? அதை வைத்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா ? ஏன் நடக்கவில்லை ? யார் காரணம் ?

************

இந்த தொடரில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையில் சரியானது தானா என்ற கேள்வி எனக்கு உள்ளது. சிறீலங்கா குறித்து உண்மையில் அறிந்தவர்கள் இது சரியா அல்லது தவறா என்பதை கூறட்டும்.

தொடரில் இப்படியான ஒரு வரி வருகிறது.

அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.

இது எந்தளவுக்கு உண்மையானது ? எனக்கு தெரிந்த வரையில் ஜனாதிபதி ராஜபஷேவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் இருந்தவர்கள். அவர்கள் ஒன்றாக இராணுவத்தில் இருந்த காரணத்தால் நெருங்கிய நண்பர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் (Assumption, not fact), இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததால் பொன்சேகவும், அதிபர் ராஜபக்சேவும் நண்பர்களா ? அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்" ?

இது உண்மையா என்பதை சிறீலங்கா குறித்து தெரிந்தவர்கள் கூறட்டும். எனக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளது.

ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் படி...

ராஜபக்க்ஷ, பொன்சேகா இருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தவிர எதுவுமே பொதுவில்லை. ஒருவர் படித்தது, ஆனந்தா கல்லூரி; மற்றையவர் நாளந்தா கல்லூரி. இரண்டுமே கொழும்புவட்டாரத்திலே ஆளுக்காள் எதிரும் புதிருமான சிங்களப்போட்டிக்கல்லூரிகள்.

வரலாற்றை சுவரசியமாக, க்ரைம் நாவல் போன்று எழுத முனைந்தால் இப்படியான விபரீதங்கள் தான் விளையும். இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ ?

************

இந்த தொடர் ஒரு வியபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர். அதனை சுவரசியமாக க்ரைம் நாவல் போன்று எழுதி, பரபரப்பாக வாசகர்களிடம் கொண்டு சென்று பணம் சேர்க்க நடக்கும் இந்த வியபாரம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. மேலும் படிக்க...

ஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது

ஹிந்து ராம் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஹிந்து நாளிதழ் மூலம் செய்து வரும் சேவையை பாராட்டி மற்றொரு விருதினை சிறீலங்கா அரசு சார்ந்த NGO நிறுவனம் அளித்து இருக்கிறது. Sri Lanka Mass Media Society (a government-supported NGO to promote excellence in the media world) என்ற நிறுவனம்இதனை வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஊடகங்களை பாராட்டி விருது வழங்குகிறதாம். புல்லரிக்கிறது. ஏன் புல்லரிக்கிறது என்றால் - Sri Lanka has been ranked as the third most dangerous place for the media in the world என்பது தான்...

சமீபத்தில் வெளியான பி.பி.சி செய்தி
'Drop' in S Lanka press freedom
International media watchdog groups say there has been a marked deterioration in press freedom in Sri Lanka.




பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து ஊடக அமைப்புகள் Stop the War on Journalists in Sri Lanka என்று போராட்டத்தையும் நடத்தினர்.


TV journalist killed in Sri Lanka




இந்தளவுக்கு ஊடகங்கள் மீது கரிசனமாக இருக்கும் சிறீலங்கா அரசாங்கம், அதனுடைய ஒரு அமைப்பு மூலமாக ஆசியாவின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதினை ராமுக்கு அளிக்கிறதாம். புல்லரிக்காதா பின்னே ?

அந்த விருதினை வாங்கிக் கொண்டு ஆற்றோ, ஆற்றோன்னு ஒரு உரையாற்றி இருக்கிறார் பாருங்கோ, அதனை நினைச்சா இன்னும் புல்லரிக்கிறது.

“Time has come for the media in South Asia to seriously introspect on its role on how it could improve its performance in betterment of the welfare of the people and the peace processes in the society,” N. Ram, Editor-in-chief of The Hindu, said here on Tuesday.

அவருடைய ஹிந்து நாளிதழை அவர் முதலில் introspect செய்தால் பரவாயில்லை.

****

ஹிந்து நாளிதழை தொடர்ச்சியாக நான் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் என்னுடைய கடந்த பதிவை சார்ந்து முன்வைக்கப்பட்டது. ஹிந்து நாளிதழ் ஆசிரியர் குறித்து முன்பு எழுதிய ஒரு பதிவை அவர்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...

இந்திய அதிகார மையத்திற்கு, ஈழம் சார்ந்து தாங்கள் முன்வைக்க விரும்புகிற விடயங்களை நேரிடையாக மக்கள் மத்தியில் வைக்க முடியாத சூழல் உள்ளது. அதனால் எப்பொழுதுமே ஹிந்து அதனை முன்வைத்து வந்திருக்கிறது. 1980களில் இருந்து 2000ம் வரை இதே நிலை தான். அதனால் தான் ஹிந்துவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. ஹிந்து நாளிதழை எதிர்ப்பது இந்திய அதிகாரமையத்தை எதிர்க்கும் ஒரு செயல் என நான் நம்புகிறேன். மேலும் படிக்க...