வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

தேர்தல் 2006 ஆச்சரியங்கள்

இந்த தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்கு அடுத்த படியாக அனைவரும் எதிர்பார்த்து இருந்தது விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா என்பது தான். தேர்தலின் போக்கு மாறிக்கொண்டிருந்த அதே சூழலில் அங்கு விஜயகாந்த் கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்று நான் கேள்விபட்டுக் கொண்டிருந்தேன். விஜயகாந்த், பாமக என யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற இறுதி கட்ட நிலவரம் இருந்த சூழலில் இறுதி முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் 14,000 வாக்கு வித்தியாசம் என்பது பாமகவிற்க்கு பெருத்த பின்னடைவு என்பதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை. விருத்தாசலம் முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த இடம் என்பதும் சினிமா கவர்ச்சி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதிலும் எந்த விதச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அது மட்டுமே விஜயகாந்த்திற்கு இந்த வெற்றியை கொடுத்து விட வில்லை. ஒரு மாற்று அரசியல் தலைவர் தேவை என்ற எண்ணம் தமிழகத்தில் எழுந்திருக்கிறது என்பது கருத்துக் கணிப்புகளில் பரவலாக முன்வைக்கப்பட்ட கருத்து. இதைத் தவிர வடமாவட்டங்களில் இருக்கும் ராமதாஸ்-பாமக எதிர்ப்புணர்வை மிகச் சரியாக விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவரது வெற்றிக்கு முக்கியமான காரணமாக நான் நினைக்கிறேன்.

விஜயகாந்த் இந்த தேர்தலில் தன்னுடைய துணிச்சலான முடிவு மூலம் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவரை நிச்சயமாக பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் அவர் தன்னுடைய இந்த வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள, தன்னுடைய தளத்தை இன்னும் விரிவாக்கிக் கொள்ள தற்போதைய அரசியல் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கழகங்களுக்கும் மாற்றாக ஒரு அரசியல் இயக்கம் வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்திருக்கிற இந்தச் சூழலில் அதே கழங்களின் அரசியல் பாணியை பின்பற்றுவது அவருக்கு பெரிய வளர்ச்சியை கொடுத்து விடாது. தற்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் கவனம் கூட முதல் முறை என்பதால் தான்.

எதிர்வரும் தேர்தலில் அவர் தனித்தோ அல்லது திமுக, அதிமுக அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பொழுதோ தான் அவரது வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். மாறாக ஏதோ ஒரு கூட்டணியில் ஒட்டிக் கொள்ள நினைத்தால் நிச்சயம் அவரது வளர்ச்சி தேக்கத்தை அடைந்து விடும். இவை தவிர அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் தன்னை ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாற்றிக் கொள்வது அவசியம். சட்டமன்றத்திலும் விருத்தாசலத்திலும் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவரது ஆதரவு பெருகும்.

இது வரை விஜயகாந்த்தை ஒரு மாற்று அரசியல் தலைவராக என்னால் நினைக்க முடிந்ததில்லை. தமிழகத்தில் தற்பொழுது இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகள் போலத் தான் இவரையும் பார்க்கிறேன். அதே அதிரடி, கவர்ச்சி அரசியல் தான். எதிர்காலத்திலும் அவர் ஒரு மாற்று அரசியல் தலைவராக தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

********

இந்த தேர்தலில் மற்றுமொரு ஆச்சரியம் - கருத்துக்கணிப்புகளின் வெற்றி (குமுதத்தைச் சொல்லவில்லை). குறிப்பாக CNN-IBN Exit Polls.
மிகத் துல்லியமாக முடிவினை இவர்கள் கணித்திருந்தார்கள். CNN-IBN முதல் கட்ட கருத்துக் கணிப்பு குறித்து என்னுடைய விமர்சனத்தை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பினை சாதி, மதம் என பல பிரிவுகளில் கணித்திருந்தார்கள். இந்த முடிவுகளின் படி மிகச் சரியாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன என்று சொல்லலாம்.

திமுக தன்னுடைய கோட்டையாக கருதிய வடமாவட்டங்கள் ஒரளவிற்குச் சரிந்துள்ளது. சென்னை திமுகவின் கோட்டையாக இருந்த நிலை மாறியிருக்கிறது. பாமக தன்னுடைய தளத்தை கணிசமாக இழந்திருக்கிறது. இவையெல்லாம் கருத்துக்கணிப்புகளில் சரியாக சொல்லப்பட்டது ஆச்சரியம் தான். அது போல தென்மாவட்டங்கள் அதிமுகவிற்கு சரிவினை ஏற்படுத்தி உள்ளது. அதனுடைய தேவர் வாக்கு வங்கி இம் முறை சரிந்திருக்கிறது. தென்மாவட்டங்களில் பலமான கட்சியாக கருதப்பட்ட மதிமுக சரிவை சந்தித்துள்ளது.

********

இம் முறை மக்களின் தீர்ப்பு ஒரு கலவையான சட்டசபையை அமைக்க உதவியிருக்கிறது. பாஜக தவிர போட்டியிட்ட அனைத்து பெரிய கட்சிகளும் சட்டசபையில் நுழைகின்றன. சட்டசபையில் இருந்து இனி யாரையும் தூக்கி எறிய முடியாது. அம்மா, அய்யா என இருவரும் எதிரும் புதிருமாக உட்காருவார்களா, அம்மா சட்டசபைக்கு வருவாரா, கேப்டன் சட்டசபையில் என்ன புள்ளி விபரங்கள் பேசுவார் என்பன போன்ற சுவாரசியமான கதைகளை நிறைய படிக்கலாம்.

முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையப்போகிறது. ஆனால் கூட்டணி கூத்துகள் நடக்க பெரிய வாய்ப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திமுகவிற்கு கணிசமான தொகுதிகள் கிடைத்திருப்பதால் ஏதோ ஒரு கட்சி (காங்கிரசோ, பாமகவோ) திமுகவை தொடர்ந்து ஆதரித்து கொண்டு தான் இருக்கும். மேலும் படிக்க...

ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்


82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஓட்டு போடும் வயதிருப்பதால் தேர்தலில் வெற்றி பெறும் எவரையும்ஹ் வாழ்த்துவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.

இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் நெய்வேலிக்கு செல்வதற்குள் ஏற்படும் பயண எரிச்சல் ஒரு புறம் என்றால் இந்த கோடை காலத்தில் பயணம் செய்வதே எரிச்சல் மிகு தருணம் தான். என்ன தான் ஏசி காரில் சென்றாலும் கூட கோடை காலங்களில் ஏசியை மீறிய எரிச்சல் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பு. ஆனால் 82 வயதிலும் கடும் கோடை வெப்பத்திற்கிடையே சில ஆயிரம் கீ.மீ பயணம், பிரச்சார கூட்டம், தொண்டர்களின் அலைமோதல் இவற்றிடையே அவரது பேச்சின் ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதே கரகரப்பான குரல். அதில் தெரியும் கம்பீரம் போன்றவை கலைஞருக்கே உரித்தான இயல்புகள்.

என்றாலும் அதை மீறி தள்ளாட்டத்துடன் நடக்கும் அவரது நடை, நிற்பதற்கு கூட தேவைப்படும் ஒரு உதவியாளர், நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே பேசும் அவரது முதிய நிலை போன்றவையெல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் இந்த அரசியல் சாக்கடையை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் 82வயதிலும், 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற கலைஞர் தான் தேவைப்படுகிறார் என்பதை கவனிக்கும் பொழுது திமுகவின் அடுத்த தலைமுறையினர் பற்றிய கேள்விக்குறியும் எழுகிறது. அடுத்த தேர்தலில் திமுகவிற்கு மக்களிடையே ஆதரவு திரட்ட கலைஞர் ஆரோக்கியமுடன் இருப்பார் என்ற எண்ணம் எழுந்தாலும் அடுத்த தலைமுறை திமுகவை கலைஞர் அவரது காலத்திலேயே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி என வயதான தலைமுறையினரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்ற அலுப்பும் ஏற்படுகிறது.

இன்று இந்தியாவின் இளையதலைமுறை பல நாடுகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் பல இளைய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு இயல்பாக இருக்கின்ற கல்வி வளம், உள்கட்டமைப்பு காரணமாக ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேருகின்றன. தமிழகம் ஆசியாவின் எதிர்கால முக்கிய பிராந்தியத்திற்கான விருதினைப் பெற்று இருக்கிறது (ASIAN REGION OF THE FUTURE). ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த விருதினைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகம் இந்த முதலீடுகளைப் பெற தகுந்த அளவிலான ஒரு அரசாங்கத்தை கடந்த 5ஆண்டுகளாகப் பெற்றிருந்தது.

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தது போல ஜெயலலிதாவின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார ரீதியில் தமிழகம் ஒரு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா போன்ற ஏழ்மை அதிகம் இருக்கும் நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக இருப்பதில்லை. பொருளாதாரமும் உயரவேண்டும், மக்களுக்குச் சலுகைகளும் வழங்க வேண்டும். இதனை சரியான முறையில் பேலன்ஸ் செய்வதில் தான் இந்தியாவில் அமையும் அரசாங்கங்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஜெயலலிதா மக்களுக்கு சலுகைகள் வழங்கும் விதத்தில் சரியாக செயல்படவில்லை. இதை தவிர ஜனநாயக முறையில் இந்தியா கடுமையான சட்டதிட்டங்களை வைத்திருக்காவிட்டால் ஜெயலலிதா ஒரு முழுமையான சர்வாதிகாரியாகவே மாறியிருப்பார். எனவே பொருளாதார செயல்பாட்டில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டிருந்தால் கூட பிற வகையில் அவரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. அதுவே அவர் 2004தேர்தலின் தோல்விக்கும், அதனை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டமை தான் 2006 தேர்தலில் மோசமான தோல்வியை தழுவாமைக்கும் முக்கிய காரணம்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் செயல்பாடு. அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் சலுகைகள், அடிப்படை வாழ்க்கை தேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாய் பெருக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் போட்டி இன்று அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி மேற்க்கொள்கின்றன. இந்த முதலீடுகளை பெருமளவில் கவர்ந்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டுமானால் தமிழகத்திற்கு கவர்ச்சியான முதல்வர் வேண்டும். இந் நிலையில் தமிழகத்திற்கு 82வயது கலைஞர் முதல்வராக இருப்பது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது.

கலைஞர் முதல்வராகும் பட்சத்தில் அவரது அரசாங்கம் ஒரு முதிய மந்திரி சபையாகத் தான் இருக்கும். அரசாங்கம் அரசியல்வாதிகளை விட அவர்கள் தங்களிடையே வைத்துக் கொள்ளும் அரசாங்க அதிகாரிகளால் தான் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த முதல்வர் தான் அரசாங்கத்தின் முகம். தன்னுடைய மொத்த அமைச்சர்களையும் டம்மியாக்கி ஜெயலலிதா தன்னை முதலீடுகளுக்குச் சாதகமான முதல்வராக வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் கலைஞரால் அது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இந்த காரணங்களால் தான் கலைஞர் முதல்வராவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன்.

கலைஞருக்கு இந்த வாய்ப்பு இல்லையெனில் வேறு யாருக்கு இருக்கிறது ? நிச்சயமாக திமுகவில் தொண்டர் பலம் கொண்ட ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கப்போவதில்லை. எனவே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு கலைஞர் விலக வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

ஸ்டாலினுக்கு அந்த தகுதி எந்தளவிற்கு இருக்கிறது ? ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையெனில் தயாநிதி மாறன் முதல்வராகலாமா ?

ஸ்டாலினின் வாய்ப்புகளும், தகுதிகளும் ஒரு புறம் இருக்க, ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.

அரசாங்கத்தை தவிர திமுகவின் எதிர்காலத்தை முன்னிட்டும் கலைஞர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

எனது வாதங்களை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன் மேலும் படிக்க...

தேர்தல், நிர்வாக சீர்திருத்தங்கள்

நம்முடைய தேர்தல் முறைகளிலும், நிர்வாக முறைகளிலும் நிறைய மாற்றங்கள் வேண்டுமென தேர்தல் நேரங்களில் கூக்குரல் எழுந்து கொண்டே இருக்கும். அரசாங்க அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் தான் ஜனநாயகத்தின் அதி முக்கியமான தூண்கள். இந்த தூண்கள் இந்தியாவில் எப்படி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன ? மாற்று வழிகள் என்ன ? தேர்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா, அது குறித்த எனது பார்வை

அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் பலச் சலுகைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்க ஊழியர்களிடமே உள்ளது. அரசியல்வாதிகள் 5வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசாங்க ஊழியர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யாத நிலையிலும் ஓய்வுக் காலம் வரை பணியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். பலவற்றில் காலதாமதம், ஊழல் போன்றவை மலிந்து போய் இருக்கின்றன. சாதாரண மக்களுக்கு காலதாமதப்படுத்தப்படும் நலதிட்டங்கள் முதல் பெரும் முதலீட்டிற்கு, வணிகத்திற்கு தேவைப்படும் லைசன்ஸ் வரை இந்தியாவில் ஒரு மோசமான inefficienecy அரசு அலுவலங்களில் பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில முன்னேற்றங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டு இருந்தாலும் இன்னமும் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கும் நிலை தான் ஏற்படுகிறது.

அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கு இடையே நிறைய வேறுபாட்டினை காண முடியும். அமெரிக்க நிர்வாக அமைப்பைக் குறித்து ஓரளவிற்கு கேள்விப்பட்டிருந்தாலும், அந்த நிர்வாக அமைப்புகளில் பங்காற்றும் பத்மா போன்றவர்களின் அனுபவங்களைக் கேட்கும் பொழுது ஆச்சரியாகவே இருக்கும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை, நீண்ட காலமாக ஜனநாயக முறைப்படி இருக்கு ஒரு அரசமைப்பை இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியான ஒப்பிடு அல்ல. என்றாலும் அமெரிக்கா போன்ற ஒரு முறையை நோக்கி நாம் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதன் காரணத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இங்கு அரசு அலுவலகங்கள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் பல விடயங்கள் குறித்த நேரத்தில் மிகச் சரியாக நடந்து விடுகிறது. உதாரணமாக குழந்தைப் பிறப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை வேறு ஒரு நகரத்தில் பிறந்தாலும் ஒருவர் வசிக்கும் நகரத்தில் இருக்கும் சுகாதார நிலையத்திற்கு அந்த தகவல் மருத்துவமனை மூலம் அனுப்பப்படுகிறது. அந்த நகரில் இருக்கும் சுகாதார மையம் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு அரசு சுகாதார நிலையங்கள் என்ன சலுகைகளை வழங்குகின்றன என்பன போன்ற விபரங்களை தெரியப்படுத்துகிறது. இதனால் அரசாங்கத்தின் சலுகைகள் குறித்த விபரங்கள் தெரியாதவருக்கும் அது குறித்து தெரியவருகிறது. அந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்வதிலும் எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை.

இங்கு அரசு தன்னுடைய நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுப்பதும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையால் சரியாக கண்காணிக்கப்படுவதும் தான் அரசின் இயக்கம் சரியாக நடைபெற முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஒரு விடயம் குறித்து என்ன நடக்க வேண்டும் என்பது முறையாக கணினி மூலம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் படி குழந்தைப் பிறப்பு போன்றவை நடந்தால், அரசின் பலப் பிரிவுகள் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விபரங்கள் முறையாக நடந்து விடுகின்றன. இணையத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று அவர்களுக்கு அனுப்பி விட்டால் சரியான நேரத்தில் பிறப்பு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு விடும். இடைப்பட்ட காலத்தில் என்ன நிலவரம் என்று கேட்க உட்கார்ந்த இடத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்தால் அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் பொறுப்புடன் பதிலளிப்பார்கள். அது போல வருமானம் குறைவாக உள்ள மக்களுக்கு Social Security மூலம் மருந்துகள் போன்றவை வழங்கும் முறை இருக்கிறது. ஒரு SSN அலுவலகத்தில் சென்று விண்ணபித்தால் அரசின் சலுகை நமக்கு வந்து சேர்ந்து விடும்.

இங்குள்ள அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் Quality certification பெற்றுள்ளன. தனியார் நிறுவனங்களில் தங்கள் வாடிக்கையாளரை கவனிப்பது போன்று அரசின் சலுகைகளைப் பெறச் செல்பவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இங்கு பணியாற்றுபவர்கள் மிகவும் கண்ணியமாக, மரியாதையுடனே நமக்கான சலுகைகள் குறித்த விபரங்களை தெளிவாக கூறி, நாம் இந்தச் சலுகைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார்கள். இங்கும் பிரச்சனைகளும், காலதாமதமும் இருக்கவேச் செய்கின்றன. ஆனால் அவ்வாறு நடப்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் அரசு அலுவலகங்கள் இந்த முறையை நோக்கி கட்டாயம் செல்ல வேண்டும். இந்த முறை மூலம் ஒருவரின் விண்ணப்பம் அரசு அலுவலகர்களால் தேவையில்லாமல் தேக்கி வைக்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அது மேலதிகாரியின் கவனத்திற்கு செல்வது போன்ற முறை வரும் பொழுது விண்ணப்பங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில் SSN எண் நமக்கு தேவை என்று விண்ணப்பித்தால் அது இரண்டு வாரங்களில் வழக்கப்பட வேண்டும்.

அது போல அரசின் திட்டங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, அந்த திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளை எளிமையாக்குவது போன்றவை கணினி மயமாக்குவது மூலம் சாத்தியமாகும். இது அரசு ஊழியர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும் உதவும். தனியார் நிறுவனங்களில் Appraisal என்று ஒன்று உண்டு. கடந்த வருடத்தில் ஒருவரின் செயல்பாடு எப்படி இருந்தது என்று பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் தான் ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்கப்படும். ஆனால் இவ்வாறான முறை அரசு அலுவலகங்களில் சரியாக முறைப்படுத்தப்படுவதில்லை. இதனாலேயே அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் செல்லும் பொழுது ஒரு அலட்சிய போக்கு நிலவுகிறது. சில நேரங்களில் "எங்கு வேண்டுமானாலும் போய் முறையிட்டுக்கொள்" போன்ற முரட்டுத்தனமான பதில் வந்து சேரும். எங்கு சென்று இது குறித்து முறையிடுவது என்பதும் பொதுமக்களுக்கு தெரிவதில்லை என்பதால், சாதாரண மக்கள் தங்கள் காரியத்தைச் சாதித்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் போன்றவற்றை கொடுத்து விடுகிறார்கள். விண்ணப்பம், தகுதிச் சான்றிதழ் என எல்லாம் இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நிறைவேறும். விண்ணப்பங்கள் எப்பொழுது விண்ணப்பிக்கப்பட்டது, ஏன் காலதாமதம் ஆகிறது போன்றவை குறித்த எந்த விபரங்களும் சரியான முறையில் பாராமரிக்கப்படுவதில்லை என்பதால் மக்களின் பிரச்சனைகள் சரியாக கண்காணிக்கப்படுவதில்லை.

அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்படுவதும், மக்களின் விண்ணப்பங்கள் முறைகளை எளிமைப்படுத்துவதும் பலப் பிரச்சனைகளை ஓரளவு தீர்க்கும், அரசின் நலத்திட்டங்கள் எந்தளவுக்கு குறிப்பிட்ட பிரிவு மக்களை எட்டுகிறது போன்றவையும் கணினி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

அது போல அரசின் எந்தச் செயல்பாடும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அரசின் செயல்பாடு குறித்தோ, குறிப்பிட்ட திட்டங்களில் யார் யாருக்கு திட்டங்கள் ஒழுங்காக சென்று சேருகிறது என்பது குறித்தோ விபரங்கள் கேட்கும் பொழுது அதனை கொடுக்கும் வசதி கொண்டு வரப்பட வேண்டும். Right to get the information என்பது அமலாக்கப்படும் பொழுது அந்த திட்டங்களை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற அக்கறையும் அரசு அலுவலங்களுக்கு ஏற்படும் (இது குறித்தச் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது). ஒவ்வொரு அரசு அலுவலங்களும் Quality certification பெற வேண்டும்.

ஆனால் நாட்டில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றால் இதனை "மக்கள் பிரதிநிதிகள்" தான் செய்ய வேண்டும். நாட்டில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றால் ஜனநாயகத்தின் அதிமுக்கியமான தூண்களான மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பிரநிதிகளாக "சரியாக" செயலாற்ற வேண்டும். இந்தியாவில் மக்களின் பிரநிதிகள் சரியான முறையில் செயலாற்றுகிறார்களா என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அரசியல் முறை குறித்த விமர்சனங்களை கவனிக்க வேண்டும்.

இந்திய தேர்தல் முறைகளில் மாற்றம் தேவையா?

இந்தியா பெரும்பான்மையைச் சார்ந்த தேர்தல் முறையைக் கொண்டுள்ளது. இதனை First-Past-the-Post (FPTP) system என்று கூறுவார்கள். யார் அதிக ஓட்டுக்களைப் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். யார் அதிக தொகுதிகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கிறார்கள். இங்கு எண்ணிக்கை தான் முக்கியம். அந்த எண்ணிக்கையைப் பெற ஒவ்வொரு தொகுதியும் முக்கியம். இந்த தொகுதிகளை வெல்ல பணபலம் பொருந்திய, சாதியமைப்பைச் சார்ந்த வேட்பாளர்களையே அரசியல் தலைவர்கள் முன்நிறுத்துகிறார்கள். ஏனெனில் ஓட்டுக்களைப் பெற அது தான் முக்கியம் என்ற கருத்து இங்கு நிலை நிறுத்தப்பட்டு விட்டது. பணபலம், அந்த தொகுதியில் அதிகார பலம், சாதி பலம் இவற்றை உடையவர்கள் தான் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். தங்களுக்கு எண்ணிக்கை வேண்டும் என்பதற்காக எந்த வித நியாயங்களுக்கும் கட்டுப்படாமல் இவ்வாறான வேட்பாளர்களையே அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றன. இதனால் தகுதியற்ற நபர்களே மக்களின் பிரதிநிதிகளாக மாறி விடுகிறார்கள். தகுதியான படித்தவர்கள், அறிவுஜீவிகள், சிந்தனை வளம் உள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அரசியலில் தகுதியற்றவர்கள் அதிக அளவில் இருக்கும் பொழுது மக்களிடம் இருந்து இந்த அரசியல் முறை அந்நியப்பட்டு போய் விடுகிறது. ஆட்சியமைப்பு, மக்கள் நலம் போன்றவைக்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்து சாதி, பணபலம் இவை தான் முக்கியம் என்றாகி விடுகிறது. சாதி, மத உணர்வுகள் தலைதூக்குகின்றன. இந்த உணர்வுகளை தூண்டி விடும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றன. அதனால் தங்களுடைய சாதி, மத அபிமானம், அரசியல் கட்சி சார்ந்த அபிமானம் போன்றவற்றையே மக்கள் தேர்தல்களில் முன்நிறுத்துகின்றனர்.

மக்களை கவர்ந்து அதிக ஓட்டுக்களைப் பெறுவதற்காக எல்லாவித உத்திகளையும் இன்று அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி கொண்டிருக்கின்றனர். இந்த இலவசங்களை வழங்குவது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பினால் எங்கே தங்களுக்கு ஓட்டுக்கள் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் எல்லா கட்சிகளும் இதனை பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் முறை மீதான அவநம்பிக்கையால் கிட்டதட்ட 20% மக்கள் வாக்களிப்பதில்லை. இன்னும் குறிப்பிட்ட சதவீத மக்கள் இந்த தேர்தல் மேல் அக்கறை கொள்வதும் இல்லை என்ற மோசமான ஜனநாயக நிலை தான் இன்று இந்தியாவில் இருந்து வருகிறது.

இந் நிலையில் இந்த தேர்தல் முறையில் இருந்து மாற்றம் பெற்று பிரதிநிதித்துவ முறைகளை பின்பற்றலாம் என்ற ஒரு யோசனையை (Proportional Systems) சிலர் கூறி வருகிறார்கள். இந்த முறை சரியானது தானா, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதா என்பது ஒரு புறம் இருக்க, இந்த முறையை நிச்சயமாக இந்தியாவில் கொண்டு வரக்கூடிய சாத்தியங்கள் எதுவும் இல்லை என்று சொல்ல முடியும். ஒரு தேர்தல் முறையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அதனை வேறு ஒரு புதிய கட்டமைப்புக்குள் கொண்டு வருவது சாத்தியமானது அன்று. அதுவும் இந்தியா போன்று நிறுவனப்படுத்தப்பட்டு விட்ட நாடுகளில் இம்மாதிரியான மாற்று சிந்தனைகள் குறித்து விவாதிக்கலாமே தவிர அதனை நடைமுறையில் கொண்டு வருவதும், இப்பொழுது இருக்கும் முறையை முற்றிலும் மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது.

ஒரு சரியான தேர்தல் சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பொழுது, அனைத்து அரசியல் கட்சிகளும் அதனை எதிர்த்து ஒரு அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றியும் விட்டார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது எவ்வாறு ஒரு மாற்று தேர்தல் முறைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் ? அதுவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த முறை தான் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த சாதகமாகவும் உள்ளது. எனவே தேர்தல் முறைகளில் இந்தியாவில் மாற்றம் சாத்தியமற்றது.

அரசியல் முறை சீர்குலைந்து போனதற்கு முக்கிய காரணம், ஓட்டுக்களைப் பெறுவதற்காக அரசியல்கட்சிகள் பணபலத்தை பிரயோகிப்பது, சாதி மத உணர்வுகளை தூண்டுவது, தகுதியான நபர்களை புறக்கணித்து விட்டு பணபலம், சாதி பலம் இருக்கின்ற வேட்பாளர்களையே முன்நிறுத்துவது போன்றவை தான். இந்த முறைகளை ஒழிக்க சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு பணம் வழங்குவது போன்ற நடைமுறைகள் கடந்த காலங்களில் பரிசீலனையில் இருந்தன. இதனால் தேர்தல் முறையில் ஊழல் குறையும் என்று கூறப்பட்டது. அரசியலில் கிரிமினல்களின் தலையீடுகளைக் குறைக்க இருக்கும் சட்டங்களும் அவ்வளவு பலமாக இல்லை. இந்தச் சட்டங்களை கடுமையாக்க சுப்ரீம் கோர்ட் எடுத்த நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் தடுத்து விடுகின்றன.

இருக்கின்ற சட்டங்களும் தீர்வாக வில்லை, புதிய சட்டங்களையும் இயற்ற முடியாது, சட்டங்களை பலப்படுத்தவும் அரசியல் கட்சிகள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை, இருக்கின்ற தேர்தல் முறைகளையும் மாற்ற முடியாது, மாற்று சிந்தனைகளை நடைமுறை படுத்த முடியாது என பலச் சிக்கல்கள் இருக்கும் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு உள்ளது ?

இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் திருவிழாவாகவும், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஆட்சி அமைக்க ஒரு அரசு வேண்டும் என்பதை நோக்கியும் தான் இருந்து விடுமா ? இந்திய ஜனநாயகம் சரிந்து செல்லரித்து விடுமா ? இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்வதில் உண்மையான அர்த்தம் ஏதேனும் உள்ளதா ?

ஜனநாயகம் என்பதே மக்களுக்காகத் தான். ஜனநாயக முறைகளில் மாற்றம் கொண்டு வருவதும் சாமானிய மக்கள் கைகளில் தான் இருக்கிறது. இவ்வளவு அவநம்பிக்கை இந்திய ஜனநாயக முறைகளில் இருக்கும் பொழுதும் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற பணம், சாதி, மதம் போன்றவை போதும் என்ற நிலை மாறி, மக்களுக்காக செயலாற்றினால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இந்திய ஜனநாயகம் தானாகவே மாறியுள்ளதை கவனிக்க முடியும். தேர்தல் சமயங்களில் பல இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசினாலும் அரசின் செயல்பாட்டினைப் பொறுத்தே அரசியல் கட்சிகளை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர் என்பது தெரியவரும்.

அரிசி 1ரூ என்று ஆந்திராவில் ஓட்டுக் கேட்ட காங்கிரஸ், அதனை எதிர்த்து நான் அப்படி கேட்க மாட்டேன் என்று ஓட்டுக் கேட்ட சந்திரபாபு நாயுடு என்ற இருவரில் சந்திரபாபு நாயுடுவைத் தான் மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால் அதே சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு பின்பு அவரும் தூக்கியெறியப்பட்டது தனிக்கதை. என்றாலும் மக்களின் தீர்ப்பு இந்த இலவசங்களை பொறுத்து மட்டுமே இருப்பதில்லை. அரசின் செயல்பாடும் தேர்தலில் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருக்கிறது என்பதற்கு சிறு சான்று தான் இது. இந்திய ஜனநாயக முறையில் கடந்த 10ஆண்டுகளில் மக்கள் தங்களுடைய வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த பலமான மாற்றங்களால் அரசியல்வாதிகள் செயல்படும் போக்கு மாறியிருக்கிறது. தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மக்களை கவர வேண்டும் என்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டு விட்டது. இந்த நிலை இன்னும் பலமாகும் பொழுது ஆட்சிக்கு வந்தால் ஆட்டம் போட வேண்டும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு ஏற்படாது. இதே தேர்தல் முறையுடன் தங்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுதல் போன்ற முறை வந்தால், இந்தியாவில் இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அது போன்ற ஒரு முறையை கொண்டு வருவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.

இந்தியாவில் ஜனநாயகம் அமைக்கப்பெற்று 55ஆண்டுகளே ஆகின்றன. வளர்ந்த நாடுகளின் சில நூறு ஆண்டுகள் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதை சவால் நிறைந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்று சொல்லப்பட்ட வாதத்தை இந்தியா மறுத்துள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டமாக தொடங்கிய பல நாடுகளின் போராட்டங்கள் இறுதியில் சர்வாதிகாரமுறைக்கு தான் வழி அமைத்து இருக்கின்றன. பிரபலமான மக்கள் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறி இருக்கிறார்கள். ஆனால் இந்திய விடுதலைப் போராட்டம் ஜனநாயக வழிமுறைக்கு உத்திரவாதம் அளித்ததுடன் மட்டுமில்லாமல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முறையை காப்பாற்றியே வந்துள்ளது. பல சவால்களை கடந்து, இன்னும் பல சவால்களை எதிர்கொண்டுச் செல்லத் தான் போகிறது.

கடந்த காலங்களில் இருந்த கல்வியறிவின்மை, ஏழ்மை குறைந்து இன்று இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவாகும் நிலையில் இருக்கிறது. ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க, மாற்றம் பெற பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணியாகவே பல நாடுகளில் இருந்துள்ளது. இந்தியாவில் படித்தவர்களும் பெருகி, பொருளாதாரமும் பெருகும் பொழுது ஜனநாயக முறையில் பல மாற்றங்களும் ஏற்படவேச் செய்யும். அந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று திடமாக நம்புவர்களின் நானும் ஒருவன். மேலும் படிக்க...

ஜனநாயகத்தின் தூண்கள் :- நீதித்துறை

ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் நீதிமன்றங்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. இந்தியாவில் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு பரவலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. செல்வக்குள்ள பிரமுகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை சிறைக்கு அனுப்புவதால் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதே தவிர சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக சரியான வகையில் நியாயம் கிடைத்ததாக தெரியவில்லை. இன்று இந்தியாவில் சுமாராக 2 கோடி வழக்குகள் தேங்கிப் போய் இருக்கின்றன. தேங்கிப் போய் கிடக்கும் இந்த வழக்குகள் பெரும்பாலும் சாமானிய மக்களின் சிவில், கிரிமினல் வழக்குகள் தான். குற்றவாளிகள் இதனால் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகிறார்கள். அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். குற்றாச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவி மக்கள் அந்த வழக்கை நடத்த முடியாமல், ஜாமீன் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் அவலங்களும் நிறைய நடந்து கொண்டிருக்கிறன. அரசு இயந்திரங்களால் கைது செய்யப்படும் அப்பாவி மக்கள், அந்த வழக்குகளை நடத்த முடியாமல் போய் பல வருடங்கள் சிறையில் இருக்கும் நிலை இருந்து வருகிறது.

இவ்வாறு வழக்குகள் வருடக்கணக்கில் நடக்கும் பொழுது அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. மக்களுக்கு நியாயம் கிடைக்காத பொழுது ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லப்படும் அமைப்புகள் மீது வெகுஜன மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அரசியல்பிரமுகர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டுமே தீர்ப்பு சொல்லும் அமைப்பாக நீதிமன்றங்கள் மாறிவிடக்கூடாது.

சல்மான்கான் ஒரு தவறு செய்த பொழுது தாங்களாகவே முன்வந்து அவர் மீது வழக்கு தொடுத்த சில நீதிமன்றங்களின் செயலை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அது நீதிமன்றங்கள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் நாட்டின் பல மூலைகளில் பாதிக்கப்படும் பல மக்களின் பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காத பொழுது நீதிமன்றங்கள் முழுமையாக இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியாது.

வழக்குகளை விரைவாக்க மாற்று முயற்சிகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை என்பது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், நீதிமன்றங்களின் நேரங்கள் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதும், நீதிமன்றங்களின் விடுமுறை காலங்கள் போன்றவற்றிலும் சீர்திருத்தங்கள் நிச்சயம் தேவைப்படுகிறது. இன்று வழக்குகளை தாமதப்படுத்தும் முயற்சிகளில் பலரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். வாய்தா, தள்ளிவைப்பு, சாட்சியங்கள் விசாரணை போன்றவற்றில் நிறைய நேர விரயம் ஏற்படுகிறது. குற்றவாளிகள் வழக்குகளை தொடர்ந்து தள்ளிவைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தாமதத்தை கட்டுப்படுத்த நீதிமன்றங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சாட்சியங்கள் மீதான விசாரணையில் நவீன யுத்திகளை கைக்கொள்ளலாம். இது போன்றவையெல்லாம் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

அது போன்றே நீதிமன்றங்களில் ஊழல் என்பது ஜனநாயக முறைகளில் மக்களை நீதிமன்றங்களில் இருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. ஆனால் மேல்நீதிமன்றங்களில் இந்த அளவுக்கு ஊழல் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம்

முந்தையப் பதிவு

திசைகள் கட்டுரை மேலும் படிக்க...

ஜனநாயகத்தின் தூண்கள் :- ஊடகங்கள்

தேர்தல் வரும் பொழுதெல்லாம் நமக்கு இந்திய ஜனநாயகம் குறித்த விவாதங்களும், சந்தேகங்களும் வந்து விடும். தேர்தல் நேரம் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட்ட வேண்டிய ஜனநாயக மரபுகளுக்கு தேர்தல் காலங்களில் மட்டுமே விளம்பரம் கிடைக்கிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் ஒரு புறம் இருக்க, நம்முடைய ஜனநாயகம் சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கிறதா ? ஜனநாயகத்தின் நான்கு தூண்களான மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் போன்றவை சரியான வழியில் தான் இயங்கி கொண்டிருக்கிறதா ?

இது குறித்த அலசல் தான் இம் மாத
திசைகள் இதழின் சிறப்பு பகுதியில் அலசப்படுகிறது. அதில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரையை இங்கே நான்கு பதிவுகளாக பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

முதல் பகுதியில் ஊடகங்கள் குறித்தான எனது பார்வை

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிரபலமான ஒரு வணிக இதழில் இந்தியாவைக் குறித்த ஒரு கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. இன்று இந்தியா பொருளாதார ரீதியில் பலம் பெறுவதற்கு காரணம் இந்தியாவின் ஜனநாயகம், இந்தியாவில் இருக்கின்ற தனி மனித சுதந்திரம் என்று ஒருவர் வருணித்து இருந்தார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் என்றாலும் இந்தியா விடுதலைப் பெற்ற பொழுது இந்தியா குறித்து இருந்த பிம்பம் வேறு வகையைச் சார்ந்தது. இந்தியா போன்ற பிந்தங்கிய ஏழ்மை நாடுகளில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்று ஆங்கிலேயரும், மேற்கு உலகத்தினரும் நம்பினர். இந்த நம்பிக்கையை இந்தப் பிராந்தியத்தில் இருந்த பல நாடுகளும், காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளும் உறுதிப்படுத்தின. பல நாடுகள் சர்வாதிகாரிகளின் பிடியிலும் அரசியல் குழப்பத்திற்கும் உள்ளாகின. இந்தியாவிலும் இது போன்ற ஒரு நிலை இந்திரா காந்தியின் எமர்ஜன்சி காலங்களில் எழுந்தது. இந்தியாவின் ஜனநாயக முறைக்கு இந்திரா காந்தியும், அவரது மகன் சஞ்சய் காந்தியும் கடும் சவாலினை விடுத்தனர்.

"In the name of democracy" என்ற புத்தகத்தில் பிப்பன் சந்திரா இந்தியாவின் ஜனநாயக முறைக்கு சவால் விடுத்த எமர்ஜன்சி காலம் குறித்து எழுதும் பொழுது " Not all popular mass movements lead to or strengthen democracy. Regimes which claimed to be defending democracy have themselves ended up as dictatorships" என்று கூறுகிறார். 1974க்கும் 1977க்கும் இடைப்பட்ட இந்திரா காந்தியின் அதிரடி எமர்ஜன்சி காலங்கள் தவிர இந்தியாவில் ஜனநாயகமும் தனி மனித சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக பரவலான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. இந்தியாவின் ஜனநாயக முறை வளர்ச்சி அடைந்து வருவதற்கு இங்கு அமையும் அரசாங்கங்களும், தேர்தல் முறைகளும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் சாமானிய மக்களிடம் இது குறித்த அவநம்பிக்கை தான் அதிகமாக உள்ளது.

உலக நாடுகள் மத்தியில் இந்திய ஜனநாயகம் குறித்து இருக்கும் பரவலான நம்பிக்கை கூட இந்திய மக்களிடம் அதிகம் காணப்பட்டதில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்திய ஜனநாயகம், அரசியல்வாதிகள், ஊடகங்கள் குறித்து பரவலான அவநம்பிக்கை பலரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களுடன் சில நேரங்களில் நடக்கும் அமெரிக்கா குறித்தான ஒப்பீடுகளில் கூட இந்தியா விடுதலைப் பெற்று 59ஆண்டுகளே ஆகிறது என்பதையும், இந்த 59 ஆண்டுகளில் ஜனநாயகம் என்ற விதையை விதைத்து, தவறான பொருளாதார கொள்கைகள், மதக் கலவரங்கள், சாதிக் கலவரங்களுக்கிடையே இந்தியா தட்டு தடுமாறி சரியான வழியிலேயே நடந்து வந்திருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

ஆனாலும் இந்தியாவில் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்லப்படும் - அரசாங்க அதிகாரிகள், சட்டங்கள் இயற்றும் மக்கள் பிரதி நிதிகள், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறதா? அல்லது செல்லரித்துப் போய்க்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்வி பல நேரங்களில் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

ஊடகங்கள் குறித்து இந்தியா என்றில்லாமல் பல நாடுகளிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் ஊடகங்கள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை கவனிக்கும் முன்பு ஊடகங்களின் பணி என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வார்கள். ஜனநாயகம் என்பதே மக்களுக்கானது தான். ஜனநாயகத்தின் தூண்கள் மக்களுக்கான, மக்களின் உரிமைகளை காப்பாற்றும் தூண்களாக, மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தும் நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றாக கருதினர். ஜனநாயக முறையில் ஊடகங்களின் வீச்சு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடக்கும் விடயங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஊடகங்களால் முடியும். மக்களின் பிரச்சனைகளை பலர் அறியத் தர முடியும். மக்கள் பிரச்சனைகள் குறித்த தீர்வுகளை முன்வைக்க முடியும். மக்களிடைய பலப் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துக்களை எளிதாக பரப்ப முடியும். இதன் மூலம் மக்களின் அறிவையும், அவர்களின் மனித ஆற்றலையும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்த தூண்ட முடியும். மக்களின் பிரச்சனைகளை பரவலாக இருக்கும் செய்தியாளர்கள் மூலம் ஆட்சியாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். ஊடகங்களுக்கு இருக்கும் இத்தகைய பலத்தால் தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக கூறினர். ஜனநாயக நடைமுறையில் ஊடகங்களின் சுதந்திரத்திற்கு அதிக மதிப்பும் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இந்த நெறிமுறைப் படி தான் ஊடகங்கள் நடந்து கொள்கிறதா ?

இந்தியா போன்ற ஏழ்மை நிறைந்த நாடுகளில் ஊடகங்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் அமைப்புகளாக ஊடகங்கள் இருக்க வேண்டும். ஆனால் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என நிரம்பப் பெற்ற இந்தியாவில் ஊடகங்கள் சரியான வகையில் தங்கள் பங்களிப்பைச் செய்வதில்லை.

கடந்த வாரம் அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. அமெரிக்காவில் 911 என்ற காவல்துறையின் அவசரப் பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்தால் உடனே மருத்துவக் குழுவோ, காவல்துறையினரோ விரைந்து வந்து விடுவார்கள். பெரும்பாலான அவசர மருத்துவ உதவிக்கு 911ஐ தொடர்பு கொள்வது வாடிக்கையான நடைமுறை. ஆனால் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு 10வயது சிறுவன் தன் அம்மாவிற்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று கூறிய பொழுது சிறுவன் ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று 911ல் அலட்சியப்படுத்தி விட்டார்கள் (இவ்வாறு சிறுவர்கள் விளையாடுவதும் இங்கு நடப்பது உண்டு). அந்தச் சிறுவனின் தாய் இறந்து விட்டார். பெரும்பாலும் 911க்கு தொலைபேசியில் அழைத்தால் மிகவும் துரிதமாக வந்து விடுவார்கள். ஆனால் வெகுசில நேரங்களில் மட்டுமே இது போன்று நடந்து விடும். இது ஊடகங்களில் பெரிது படுத்தப்பட்டு அந்தச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதப்பட்டு 911ன் தவறு விமர்சிக்கப்பட்டது. இது போல நடந்தால் இங்கு ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதால் அரசாங்கமோ, அரசு அலுவலகங்களோ இது போன்ற விடயங்களில் தனி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. நம்மூர் அரசாங்க அலுவலகங்கள் போல இல்லாமல் இங்கு அரசாங்க அலுவலகங்களில் நான் கவனித்தவரையில் மிகுந்த பொறுப்புடனும், அக்கறையுடனும், "மரியாதையுடனும்" கவனிக்கிறார்கள். இதனுடைய பின்புலம் என்ன என்பது குறித்து கவனித்தால், இங்கு இந் நிலை ஏற்பட ஊடகங்களும் "ஒரு" காரணம் என்பதை மறுக்க முடியாது.

மக்களின் பிரச்சனைகளை ஊடகங்களில் ஒளிபரப்பும் பொழுது, அந்தப் பிரச்சனைகள் குறித்த விபரங்கள், தங்களுடைய உரிமைகள் போன்றவை குறித்த தகவல் மக்களிடம் பரப்பப்படுகிறது. அரசாங்கம் தங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை "demand" செய்து பெற்றே தீர வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் பொழுது இயல்பாக ஆட்சியாளர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வும், மக்கள் நலம் குறித்த அக்கறையும் ஏற்படுகிறது. ஆரம்ப காலங்களில் அமெரிக்காவில் ஊடகங்களின் வளர்ச்சி இதனை சரியாக செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் இந்தியாவில் இந் நிலை இன்னும் ஏற்படவில்லை. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கும் இந்தியாவில் திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சாதாரண மனிதனின் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. ஜெசிக்காலால் போன்ற கவர்ச்சிகரமான பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தலித்களின் பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. நம்முடைய சொந்த நாட்டில் நடக்கும் காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சனைகள் குறித்த உண்மை நிலைகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை. இங்கு பல ஊடகங்களுக்கும் ஒரு சார்பு நிலை இருக்கவேச் செய்கிறது. அந்த சார்பு நிலைகளைச் சார்ந்து தான் அந்த நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நடுநிலை பத்திரிக்கைகள் என்று வருணிக்கப்படும் சில ஆங்கிலப் பத்திரிக்கை தொடங்கி மஞ்சள் பத்திரிக்கை வரை சார்பு நிலை, வியபார நோக்கு தவிர வேறு எதையும் இந் நிறுவனங்கள் யோசிப்பதில்லை. இன்று இந்திய ஊடகங்கள் வியபார நோக்கு என்ற ஒரு நிலையில் தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லத்தக்க அளவிலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவில் மிகவும் குறைவே. தமிழகத்தில் இருக்கின்ற ஆங்கில, தமிழ் வெகுஜன ஊடகங்களை நோக்கும் பொழுது சார்பு நிலை இல்லாத ஒரு நிறுவனத்தையும் பார்க்க முடியவில்லை என்பதே நம்முடைய ஊடகங்கள் எந் நிலையில் தற்பொழுது இருக்கின்றன என்பதற்குச் சிறந்த சான்று.

இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில், அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில், அரசாங்க இயந்திரங்கள் சரியான வகையில் தங்கள் பணிகளை செய்யாத நிலையில் ஊடகங்களின் பங்களிப்பு மக்கள் பிரச்சனைகளில் அதிகமாக இருக்க வேண்டும். ஊடகங்களின் போக்கில் வணிகநோக்கு இருப்பதில் தவறில்லை. அது நியாயமானதும் கூட. பல நாடுகளிலும் ஊடகங்கள் வணிகநோக்கிலும், தங்களுக்கான சார்பு நிலைகளுடனும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. அமெரிக்காவில் ஊடகங்களின் சார்பு நிலைகள் இராக் போரின் பொழுதும், தேர்தல்களின் பொழுதும் வெளிப்பட்டு இருக்கிறன.

ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் பிரச்சனைகளில் ஊடகங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம் என நான் கருதுகிறேன். வணிகநோக்கு, சார்பு நிலைகள் போன்றவற்றை விலக்காமலேயே ஊடகங்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

இதனை சில ஊடகங்கள் செய்ய முயற்சி எடுத்தன. ஆனால் இந்த முயற்சிகள் அதிக விளம்பர நோக்குடன் அரசாங்க அதிகாரிகள் ஊழல் பெறுவது, அரசியல்வாதிகள் ஊழல் பெறுவது போன்றவை சார்ந்து தான் இருந்தனவே தவிர சாமானிய மக்களின் பிரச்சனைகளைச் சார்ந்து இருந்ததில்லை. இந்திய ஊடகங்களில் CNN-IBN, NDTV, Thelkha போன்றவை செய்த, தொடர்ந்து செய்து வரும் சில முயற்சிகள் ஊடகங்கள் பயணிக்க வேண்டிய திசையை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இது ஒரு சிறு தொடக்கம் மட்டுமே. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

இந்தியா போன்ற பல மொழிவாரி மாநிலங்கள் உடைய நாட்டில் பிராந்தியப் பிரச்சனைகளை அந்த மாநிலங்களில் இருக்கின்ற ஊடகங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந் நிலை பிராந்திய ஊடகங்களில் காணப்படவில்லை. பிராந்திய ஊடகங்கள் செய்திகள், பொழுதுபோக்கு, சினிமா, அரசியல் போன்றவற்றைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றன. இது அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களாலும் சரி, இந் நிலையில் இருந்து பெரிய மாறுதல் இல்லை.

ஆசியாவில் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஊடகங்களுக்கான சுதந்திரம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கிறது. ஆனால் அதனுடைய செயல்பாட்டில் ஆரோக்கியம் காணப்படுவதில்லை. இந் நிலையில் ஊடகங்கள் சரியான பாதையில், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எழவேச் செய்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது எனக்கு பல காலமாக அவநம்பிக்கையே இருந்து வந்துள்ளது. அது தொடர்ந்து வலுப்பெற்று கொண்டு இருக்கிறதே தவிர நம்பிக்கை பெரிய அளவில் ஏற்பட்டதேயில்லை.

ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டினை கொண்டு வருவது மூலம் இந்தியாவில் இருக்கின்ற தனிப்பட்ட குடும்ப ஊடகங்களின் ஆதிக்கத்தை மாற்ற முடியும். இதன் மூலம் ஊடகங்களின் தொழில்நுட்பம், செயல்பாடுகள் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடியும். கொடுக்கப்படும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இந்த ஊடகங்கள் இந்திய ஊடகங்கள் போல சார்பு இல்லாமல் செயல்படும் பொழுது நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் குறித்த வேறுபட்ட தன்மையினை பிரதிபலிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால் பிரச்சனைகள் குறித்த வேறுபட்ட கருத்துக்களை கூறுவதிலோ, நாட்டின் முக்கிய பிரச்சனைகளாக காஷ்மீர் போன்றவற்றில் இருக்கின்ற உண்மை நிலையை மக்களிடம் கொண்டு வருவதிலோ எந்த தவறும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் இந்த வெளிநாட்டு ஊடகங்கள் இந்திய மக்களின் பிரச்சனைகளை கொண்டு வரப்போவதில்லை.

இந்திய ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடாது. சில இடங்களில் இது கார்ப்ரேட் நிறுவனங்களாகவும், சில இடங்களில் அரசியல் கட்சிகளின் உபபிரிவுகளாகவுமே ஊடகங்கள் உள்ளன. மேலும் படிக்க...

தேர்தல் - சன் டிவி - தினகரன்

இன்று தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது என்றால், மற்றொரு புறம் சன் டிவி-தினகரன் குழுமத்திற்கு எதிராக தமிழகத்தின் மொத்த ஊடகங்களும் கூட்டணி அமைத்தோ அமைக்காமலோ அணி திரண்டிருக்கின்றன. திமுக இந்த தேர்தலில் தோற்பது தங்களின் எதிர்கால "பிசினஸ்" வாய்ப்புகளுக்கு அவசியமாக இந்த ஊடகங்களுக்கு தெரிவதால் திமுகவிற்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை மிக தீவிரமாக்கியிருக்கின்றன. கருத்துக் கணிப்புகள், திரிக்கப்பட்டச் செய்திகள் என இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிராக பலமான அஸ்திரங்கள் இந்த ஊடகங்களால் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஊடகங்களின் போக்கு "கன்றாவியாக" மாறியிருக்கிறது. இனி எந்த ஊடகங்களும் நாங்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்றோ, எங்களுக்கு தனிச் சலுகை வேண்டும் என்றோ கேட்க முடியாது. இந்த ஊடகங்களை அரசியல் கட்சிகளின் மற்றொரு பரிமாணமாகத் தான் நான் பார்க்கிறேன். அரசியல்வாதிகளை குறைச் சொல்லவோ, நக்கலடிக்கவோ இந்த ஊகங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

இன்று தமிழகத்தில் ஒரு பெரும் ஊடக சக்தியாக, தங்களுடைய சாதூரியத்தால் மாறன் அண்ட் கோ உருவாகி இருக்கின்றனர். தினமலர், தினத்தந்தி என பலப் பத்திரிக்கைகள் பல காலமாக முயன்று உருவாக்கி இருந்த வாசகர் எண்ணிக்கையை தங்களுடைய புரொபஷனல் பிசினஸ் உத்திகளால் சில மாதங்களிலேயே உருவாக்கி விட்டனர். இன்று தினகரன் 10லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக உருவாகி இருக்கிறது. குங்குமம் குறுகிய காலத்தில் குமுதம், விகடன் என பாரம்பரிய பத்திரிக்கைகளின் விற்பனையை கடந்து விட்டது. குங்குமம் கையாண்ட முறை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், தன்னுடைய பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற கலாநிதி மாறனின் வியபார நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அது ஒரு மகத்தான சாதனை என்றே நான் நினைக்கிறேன்.

நான் தினகரனை சிறிய வயதில் இருந்து பார்த்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா "தினகரன் - தினத்தந்தி - தினமணி" ஏஜெண்டாக இருந்தார். தினகரன் ஏஜென்சியை என்னுடைய பெயரில் தான் என்னுடைய அப்பா நடத்தி வந்தார். தினகரனை நடத்த நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். சுமாராக 25பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டதாக நினைக்கிறேன். தினத்தந்தி சில நூறு பிரதிகள் விற்கப்பட்டன. ராணி, ராணி முத்து போன்றவையும் அதிக அளவில் விற்கப்பட்டன. தினமணிக்கென்று ஒரு தனி வாசகர் வட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தினகரனை அதிகமாக விற்கச் சொல்லி அதிக Pressure கூட கொடுக்கப்பட்டது. ஆனால் வாங்குவதற்கு தான் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து இதனை வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் மிகத் தீவிரமான திமுக அனுதாபிகள் தான். அதுவும் சலூன் கடைகள், டீக் கடை, டைலர் கடைகள் போன்ற இடங்களில் தான் தினகரன் வாங்கப்பட்டது. அவர்கள் நிச்சயம் திமுக அனுதாபிகளாக இருப்பார்கள். வீடுகளில் தினகரன் அதிகம் வாங்கப்பட வில்லை. வைகோ சார்பாக தினகரன் மாறிய காலங்களில் (கே.பி.கந்தசாமி இருந்த பொழுது) பலர் பத்திரிக்கையை நிறுத்தி விட்டார்கள்.

இந்த நிலையில் தினமலர் மிக Aggressiveக தன்னுடைய மார்க்கெட்டிங்கை செய்தது. தினத்தந்தி குழுமத்தின் பத்திரிக்கைளை நடத்துபவர்கள் தினமலரை நடத்தக் கூடாது என்பது எழுத்தில் இல்லாத உத்தரவு. தினத்தந்தியை நடத்துபவர்கள் அத்தனை பேரும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே சாதி ரீதியாகவும் தினமலரை எதிரியாக பார்க்கும் நிலை தான் இருந்தது. ஆனால் தினமலர் எங்களை அணுகிய பொழுது நாங்கள் அதனை ஒப்புக் கொண்டோம். என்னுடைய அப்பா எதையும் பிசினஸ் நோக்குடன் அணுகும் குணம் உடையவர். மளிகைக் கடை நடத்துவதில் தொடங்கி நியுஸ் ஏஜென்சி வரை அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தினமலரை தினத்தந்திக்கு தெரியாமல் தான் நடந்த வேண்டும் என்னும் நிலை. நாங்கள் தினமலரை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தினகரனுக்கு தெரிந்த நேரத்தில், தினகரனின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்று கூறி எங்களிடம் இருந்து ஏஜென்சியை மாற்றி விட்டார்கள். மற்றொரு ஏஜென்சியிடம் மாறிய பொழுதும் தினகரன் பெரிதாக விற்க வில்லை. அந்தளவுக்கு தான் தினகரனின் தரம் இருந்தது. திமுக அனுதாபிகள் தவிர யாரும் அந்தப் பத்திரிக்கையை வாங்க மாட்டார்கள். பெண்கள் ராணி, ராணிமுத்து போன்றவற்றை அதிகம் வாங்குவார்கள்.

தினமலரை நாங்கள் ஒரு சிறிய பகுதியில் மட்டும் தான் நடத்தினோம். ஆனாலும் அந்தப் பத்திரிக்கையை மார்க்கெட்டிங் செய்வதில் தொடங்கி, ஏஜெண்டுகளுக்கு சலுகைகள், ஊக்குவிப்பு செய்வது வரை தினமலர் மிகவும் புரொபஷனலாக இதனை எதிர்கொண்டது. தினமலரின் விற்பனையை உயர்த்துவதற்காக தினமலர் விற்பனையாளர்கள் எங்களுடன் எங்கள் பகுதியில் சந்தா உயர்த்துவதற்கும் முயற்சிகள், ஆலோசனைகள் வழங்கினர்கள். இதனால் தினமலரை சிறிது சிறிதாக தினதந்திக்கு நிகராக எங்களால் விற்பனையில் உயர்த்த முடிந்தது.

தினமலர், தினத்தந்தி இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே நிறைய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியும். தினத்தந்தியின் அலுவலகத்தில் இருந்து சில நேரங்களில் வரும் உயர்மட்ட பிரதிநிதிகள் வியபாரத்தை வளர்க்கும் எந்த நோக்கமும் இல்லாமல் ஏதோ அரசு Inspection ஏஜெண்ட் போல நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு உணவு போன்றவையும் நாம் வழங்க வேண்டும் (லஞ்சம்... கூட உண்டு). சில பரபரப்பான சமயங்களில் எங்களைக் கேட்காமலேயே நிறைய பிரதிகளை எங்களுக்கு தள்ளி விட்டு விடுவார்கள். இதனை விற்றாக வேண்டும் என உத்தரவு கூட வரும். பல நேரங்களில் இவ்வளவு பிரதிகளை விற்க முடியாது. விற்காத பிரதிகளை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாம் வற்புறுத்தினால் நஷ்டத்தில் உங்களுக்கு கொஞ்சம், எங்களுக்கு கொஞ்சம் என்று கூறுவார்கள். கொஞ்சம் கூட Business ethics என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் தினமலரில் இவ்வாறு இருக்காது. அதனாலேயே தினமலர் ஏஜெண்ட்கள் மத்தியில் அபிமானம் பெற்றது. அதன் விற்பனையை உயர்த்துவதற்கும் முயற்சி எடுத்தனர். இதைத் தவிர தினமலர், உள்ளூர் செய்திகள், இலவச இணைப்புகள் போன்றவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த விற்பனையும் கணிசமாக உயர்ந்தது. தினத்தந்தி இதனை காப்பி அடித்ததே தவிர சுயமாக எதனையும் செய்ததில்லை. ஒரு நேரத்தில் சுமார் 500 பிரதிகளுக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ராணி வார இதழ் சுமார் 100பிரதிகளுக்கும் குறைவாக வந்து விட்டது. அதனை மாற்ற எந்த முயற்சியையும் தினத்தந்தி நிர்வாகிகள் எடுக்க வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் தினமலர் மிக வேகமாக தன்னுடைய விற்பனையை அதிகரித்து கொண்டிருந்தது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலரின் எண்ணிக்கை பிற நாட்களை விட அதிகமாக இருக்கும். அந் நாட்களில் வெளியாகும் இலவச இணைப்பான சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இதற்கு காரணம். தினத்தந்தியும் பிறகு இதனை பின்பற்ற தொடங்கியது.

சரியான மாற்று பத்திரிக்கைகள் இல்லாமையாலேயே தினத்தந்தி இன்னமும் தாக்கு பிடித்து கொண்டு இருந்தது என்று சொல்லலாம். அதுவும் தவிர தினமலர் தன்னுடைய செய்திகளில் சார்பு நிலையை அதிகம் பின்பற்றியதால் எல்லா வாசகர்களையும் அது சென்றடையவில்லை. தன்னுடைய சார்பு நிலைகளை ஒரம் கட்டி வைத்து விட்டு இதனை ஒரு இதழியலாக தினமலர் அணுகியிருந்தால் இன்னும் நிறைய வாசகர்களை சென்றடைந்திருக்க முடியும். தினத்தந்தியை விட விற்பனையை அதிகரித்திருக்க முடியும். அதுவும் தவிர ஆரம்ப காலங்களில் சந்தா பிடிப்பதில் ஏஜெண்களுடன் களத்தில் இறங்கி உத்துழைத்த தினமலர் பின் அதனையும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தினமலரின் உத்திகள் மாறாத வரை அதன் எண்ணிக்கை இதற்கு மேலும் உயரும் என்று நான் நினைக்கவில்லை.

தினத்தந்தி வளர்ச்சியை அதிகரிக்க தினத்தந்தி குழுமத்தினர் சரியான உத்திகளை கொண்டிருக்கவில்லை. பாரம்பரியமாக இருக்கும் பத்திரிக்கை என்பதாலும், தினமலரை வாங்கக் கூடாது என்று நினைப்பவர்களும் தான் தொடர்ந்து தினத்தந்தியை வாங்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கைகளை விட தன்னுடைய சமூகம், அரசியல் போன்றவற்றில் சிவந்தி ஆதித்தன் கவனம் செலுத்த தொடங்கினார். "சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்" என்ற பெயரில் நெல்லையில் சிவந்தி ஆதித்தன் ஒரு அமைப்பை தொடங்கினார். நல்ல கூட்டமும் அந்த தொடக்க விழாவிற்கு வந்திருந்தது. அவர் நாடார் சமூக இயக்கத்தை தொடங்க இருக்கிறார் என்று நான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அவர் அதனைச் செய்ய வில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு இருந்தது. அவர் நாடார் சமூகம் மத்தியில் மதிக்கப்படும் பிரமுகர். தன்னை அந்த அளவிலேயே நிறுத்திக் கொள்ள முனைந்தார் என நினைக்கிறேன். இப்பொழுது ஆதித்தனாரின் குடும்பத்தைச் சார்ந்த சரத்குமாரை திமுகவில் இருந்து பிரித்து இருப்பதும் சிவந்தி ஆதித்தன் தான் என்பது என் சந்தேகம். இதற்கு காரணம் தினகரனை மாறன் கைப்பற்றிய எரிச்சல் + தன்னுடைய தினத்தந்தி மார்க்கெட்டை தினகரன் கைப்பற்றும் என்ற அச்சம் + நாடார் சமூகம் சார்பில் தன் குடும்பத்தில் இருந்து ஒரு அரசியல் தலைவரை உருவாக்கும் அவரது எண்ணம். அதற்கு தன்னை விட சரத்குமார் சரியான நபர் என்று அவர் முடிவு செய்திருக்க கூடும். சரத்குமாரும் வழக்கம் போல "கலைஞர் குடும்பம்" மீது பழியைப் போட்டு திமுகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். வைகோ ஆரம்பித்து வைத்த குடும்பம் மீதான பழி போடும் பழக்கம் திமுகவில் இருந்து வெளியேற அனைவரும் பயன்படுத்தும் சாக்காக மாறியிருக்கிறது. கலைஞர் குடும்பத்தின் தயவால் தான் ராதிகா "ராடன்" என்ற நிறுவனத்தையே நடத்த முடிந்தது என்பது இவருக்கு மறந்து விட்டது போலும்

கே.பி.கந்தசாமிக்கு பிறகு தினகரனின் நிர்வாகம் அவரது மகன் குமரன் வசம் வந்தது. இவர் தினத்தந்தி குழுமத்தின் குடும்பத்தினர் தான். கே.பி.கந்தசாமி அதித்தனாரின் மருமகன். அடுத்த தலைமுறையில் கூட திருமணம் மூலம் இவர்களிடையே நெருங்கிய உறவு உள்ளது. இவர்கள் இந்தப் பத்திரிக்கையை நடத்த சரியான உத்தியை வகுக்காமல் மறுபடியும் ஒரு தவறைச் செய்தனர். வைகோ ஆதரவு நிலையில் இருந்து மறுபடியும் திமுக ஆதரவு நிலைக்கு பத்திரிக்கைச் சென்றது. இதனால் தங்களுடைய பழைய வாசகர் வட்டத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்தனர் என்பதை தவிர பெரிய நன்மை விளையவில்லை. கே.பி.கந்தசாமியின் மகன் குமரன் தினகரன் பத்திரிக்கையை மாற்றுவார் என்றே நான் நினைத்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியில் கலாநிதி மாறனிடம் தங்கள் பத்திரிக்கையை விற்று விட்டார்.

நிர்வாக அமைப்புடன், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தினசரியாக சுமார் 3லட்சம் பிரதிகளை விற்றுக் கொண்டிருந்த தினகரனை Acquisition மூலம் தனக்கு உரிமையாக்கிய கலாநிதி மாறன் தினகரனில் ஏற்படுத்திய மாற்றம் பிரமாண்டமானது. நான் இன்னும் இதன் அச்சுப் பிரதியை பார்க்க வில்லை. ஆனால் இதன் இ-பேப்பர் பார்க்கும் பொழுது தினகரனின் லேஅவுட் வேறு எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இல்லை என்று சொல்லலாம். இந்து வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆலோசகர்களை வரவழைத்து பத்திரிக்கையின் வடிவமைப்பை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க, "ஆதி காலத்தில்" நாம் எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் எந்த மாற்றமும் இல்லாமல் தமிழ்ப் பத்திரிக்கைகளை பார்த்து வந்திருக்கிறோம். பெரிய வடிவமைப்பு மாற்றங்களை இந்தப் பத்திரிக்கைகள் செய்ததே இல்லை. ஆனால் தினகரன் அதிலும் முயற்சி எடுத்திருக்கிறது. வண்ண மயமான வடிவமைப்பு, செய்திகள்-படங்கள் போன்றவற்றை தொகுத்திருக்கும் முறை போன்றவை வழக்கமான தமிழ் பத்திரிக்கைகளில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவமைப்புடன் இருக்கிறது.

பத்திரிக்கைகளின் விலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மாத சந்தா தொகை படிப்படியாக உயர்ந்து செல்ல, விற்பனை குறைந்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதனையெல்லாம் பத்திரிக்கைகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காகிதம் விலை அதிகமானால் பத்திரிக்கையின் விலை அதிகமாக்கப்பட வேண்டும் என்ற நியதியை எந்தப் பத்திரிக்கையும் மாற்றியதில்லை. ஆனால் தினகரனின் அதிரடி விலைக் குறைப்பு பலரை பத்திரிக்கை வாங்க தூண்டியிருக்கிறது என நான் அறிகிறேன். பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனாலும் "ஓசி" பத்திரிக்கை தான் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தினகரனின் விலை 1ரூபாய் என்பது பலரையும் தினகரன் வாங்க தூண்டியிருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட தினகரனின் விற்பனை பெருக முக்கிய காரணம் - சன் டிவி.

சன் டிவி என்ற பவர்புல் ஆயுதத்தை வைத்துக் கொண்டு கலாநிதி மாறனால் Consumer சார்ந்த எந்தத் துறையிலும் எளிதாக இறங்கி வெற்றி பெற முடியும் என்றே நான் நினைக்கிறேன். அதனுடைய வீச்சு அவ்வளவு பலமாக இருக்கிறது. பத்திரிக்கையின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எடுத்த Traditional வகையான முயற்சிகளை நோக்கும் பொழுது, தினகரனின் 10லட்சம் பிரதிகள் ஒரு இமாலய சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில மாதங்களில் சுமார் 7லட்சம் பிரதிகள் அதிகமாகி இருக்கிறது. இதற்கு சன் டிவி, கே டிவி மற்றும் சூரியன் எப்.எம். மூலம் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட விளம்பரமும் ஒரு காரணம. இந்த வசதி பிற தினசரிகளுக்கு இல்லை. சந்தா உயர்த்த வேண்டுமானால் ஏஜெண்ட்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் உத்தியாக பல காலமாக இருந்து வந்திருக்கிறது. அதனை தினகரன் மாற்றி எழுதியிருக்கிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளாமையும், தினகரன் அதனை மாற்றியதும் தான் தினகரனின் வெற்றிக்கும் பிற தினசரிகளின் தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.

தினகரன் புதிய வாசகர்களை கவர்ந்திருப்பது மட்டுமல்லாமல் பிற பத்திரிக்கைகளின் விற்பனையும் கண்டிப்பாக குறைத்திருக்கும். தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தங்கள் பத்திரிக்கையின் விலையை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய லாபம் குறையும் பொழுது, வியபாரத்தில் திடீர் சவால்கள் எழும் பொழுது அதற்கு காரணமானவர்களை நோக்கி கோபம் திரும்புவது இயற்கை தான்.

தன்னுடைய வழக்கமான திமுக எதிர்ப்பு நிலையுடன் இந்த புதிய எரிச்சலும் சேர்ந்து கொள்ள, இன்று தினமலர் மிக மோசமான ஊடக வன்முறையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக நாடார் சமூகத்தை திருப்பும் முயற்சியை சிவந்தி ஆதித்தன் மேற்கொண்டிருக்கிறார். சரத்குமாரை திமுகவில் இருந்து விலக்குவது அதன் முதல் கட்டம். இது நாடார் சமூக ஓட்டுக்களை அதிமுகவிற்கு ஆதரவாக கொண்டு வரும் என்பது அவரது கணக்கு. ஒரு காலத்தில் தினமலரை கண்டாலே எரிச்சல் அடையும் தினத்தந்தி குழுமம் கலாநிதி மாறனை எதிர்க்க கூட்டணி அமைக்காமலேயே தினமலருடன் சேர்ந்து கொண்டுள்ளது.

பத்திரிக்கையின் பிரதிகளை விற்க இதற்கு மேல் முடியாது என தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் முடிவு செய்திருந்தன. ஆனால் தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகளை சரியாக கண்டு கொண்ட கலாநிதி மாறனின் வியபார உத்திகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அது போலவே தான் குங்குமத்தின் வளர்ச்சியும். குமுதம், ஆனந்த விகடன் என தமிழகத்தின் பாரம்பரிய குடும்ப பத்திரிக்கைகளின் ஆதிக்கத்தை தன்னுடைய "புதுசு கண்ணா புதுசு" விளம்பரம் மூலமே கலாநிதி மாறன் மாற்றிக் காட்டினார். இன்று குங்குமம் தமிழகத்தில் சுமார் 55லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1, இந்தியாவிலேயே நம்பர் 2 என்பது குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனை.

இதற்கு காரணம் தினகரன், குங்குமம் போன்றவற்றின் தரம் என்பதை விட சன் டிவி விளம்பரங்கள் தான் என்பது மாறனுக்கு கடும் எதிர்ப்பை அவரின் போட்டி பத்திரிக்கை குழுமங்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு இப்பொழுது சன் டிவி மீதும், திமுக மீதும் திரும்பி இருக்கிறது. குடும்ப அரசியல் மறுபடியும் பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. ஊடக நியதிகளை எல்லாம் கடந்து திரிக்கப்பட்ட செய்திகள், கருத்துக் கணிப்புகள், பொது மக்களை குழப்புதல் போன்றவற்றை இந்தப் பத்திரிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றன. இது வரை திமுகவிற்கு பலமாக இருந்த சன் டிவி இப்பொழுது இந்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தொடுக்க நிறையவே சிரமப்படுகிறது.

சன் டிவியின் செய்திகள் திமுக சார்பாகத் தான் இருக்கும் என்பதால் சன் டிவி சொல்வதை நம்பப் போவதில்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிற ஊடகங்கள் எதிர்த்தாக்குதலை தொடுத்து இருக்கின்றன. செயற்கையாக அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் எழுப்பி கொண்டிருக்கின்றன. நான் அதிமுக தேர்தலில் தோற்று விடும் என்று சொல்லவில்லை. போட்டி கடுமையாகவே இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக கருத்துக் கணிப்பை அணுகிய IBN-HINDU கூட குழப்பத்துடன் தான் தங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த ஊடகங்கள் எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை எப்படி எழுப்புகின்றன ?

விஜயகாந்த்திற்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் ஆதரவையும் இங்கு கவனிக்க வேண்டும். தினமலர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அதில் ஒரு "லாஜிக்" இருக்கிறது. ரஜினிகாந்த் கடவுள் பக்தர். இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் "கொள்கைகளுக்கு" ஏற்ற வகையில் இருப்பவர் என்பதால் இவருக்கு கடந்த காலத்தில் தினமலர் கொடுத்த ஆதரவினை புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் விஜயகாந்த்தை இவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் ?

விஜயகாந்த் கொள்கைகளிலோ, பிற கட்சிகளைக் காட்டிலும் தன்னிடம் ஒரு தனித் தன்மை இருப்பதாகவோ இது வரையில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. பிற கட்சிகள் செய்யும் அனைத்து ஸ்டண்களையும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே செய்து இருக்கிறார். என்றாலும் "தமில்", "தமில்" என்று முழுங்குபவர். அரசியலில் அவர் நுழைவது என்ற முடிவினை எடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே "விடுதலைப் புலிகள்" மற்றும் தமிழீழத்தின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட பொழுதெல்லாம் நடிகர்களில் இவர் தான் நிதி வழங்குதல், நிதி திரட்டுதல் போன்றவற்றைச் செய்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இவர் கொண்ட அபிமானத்தால் தான் தன்னுடைய படத்திற்கு "கேப்டன் பிரபாகரன்" என்று பெயர் வைத்தார் என்றும் சொல்லப்பட்டதுண்டு. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகள் கடுமையாக தாக்கப்பட்டன. இவர் வீடு, கார், அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் போன்றவையெல்லாம் தாக்கப்பட்டன என அப்பொழுது கேள்விப் பட்டிருக்கின்றேன்.

அப்படி பட்டவர் மீது தினமலருக்கோ, "கேப்டன்" என்று இப்பொழுது புகழ்ந்து கொண்டிருக்கும் "சிலருக்கோ" எப்படி திடீர் அபிமானம் ஏற்பட்டது என்பது எனக்கு வியப்பாகத் தான் இருக்கிறது. விஜயகாந்த், திமுக-பாமக ஓட்டு வங்கிக்கு வேட்டு வைப்பார் என இவை நம்புகின்றன. அப்படி வேட்டு வைத்தால் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தினமலர், குமுதம் போன்ற ஊடகங்கள் விஜயகாந்த்தை தூக்கிப் பிடிக்கின்றன. வைகோ திமுகவை பிளவு படுத்திய காலங்களில் இவ்வாறு தான் தினமலர் வைகோவிற்கு நிறைய விளம்பரம் கொடுத்தது. அதன் பிறகு திமுக பிளவு பட்டப் பிறகு வைகோ தினமலரில் இருந்து காணாமல் போய் விட்டார். விஜயகாந்த்திற்கும் தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை தான் ஏற்படும் என நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் டாப் 10 வார இதழ்களில் குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் போன்றவை வந்து விடுகின்றன. ஆனால் எண்ணிக்கையில் தெரியும் ஆரோக்கியம், இந்தப் பத்திரிக்கைகள் கொடுக்கும் செய்திகளில் இல்லை. இன்று உண்மையான, நடுநிலையான செய்திகளுக்கு தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையும் இல்லை என்பது தான் உண்மையான நிலை. ஆனால் இந்தியாவின் ஊடக உத்திகளை தன்னுடைய விற்பனை உத்திகளால் சன் குழுமம் மாற்றி எழுதி இருக்கிறது. சன் டிவி மீதான பொறாமையும் அதிகரித்து இருக்கிறது.

அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல. சன் டிவி தொடங்கப்பட்ட பொழுது அரசியல் செல்வாக்கு காரணமாக "ஜெஜெ டிவி" என்று ஒன்று தொடங்கப்பட்டதே ஞாபகமிருக்கிறதா ? அரசியல் செல்வாக்கு சரிந்தவுடன் அந்த தொலைக்காட்சியும் காணாமல் போய் பின் தவறுகளை திருத்திக் கொண்டு "ஜெயா டிவியாக" வந்தது. ஆனால் அது போன்ற எதுவும் சன் டிவிக்கு ஏற்பட்டதில்லை. சன் டிவி செய்யும் அனைத்தனையும் யாரும் சரி என்று சொல்ல முடியாது. சன் டிவி குறித்து என்னுடைய பலப் பதிவுகளில் நான் விமர்சித்து இருக்கிறேன். அதே நேரத்தில் சன் டிவி எழுப்பிய இருக்கிற ஊடக சாம்ராஜ்யத்தை பொறாமை மூலமும், திமுகவை இந்த தேர்தலில் தோற்க்கடிப்பதன் மூலமும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று நினைத்து அதற்காக பொய்யான ஒரு தோற்றத்தை பிற ஊடகங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஊடகங்கள் "கன்றாவியாக" மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன். மேலும் படிக்க...

கருத்துக் கணிப்புகள்

தமிழகத்தில் ஊடகங்கள் பல கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க ஓரளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பான CNN-IBN-HINDU கருத்துக் கணிப்பு, இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிற கருத்துக் கணிப்புகளில் குறிப்பாக குமுதத்தில் ஏதோ போனால் போகட்டும் என்று மாவட்டத்திற்கு சில தொகுதிகள் மட்டும் திமுகவிற்கு பெரிய மனதுடன் வழங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு குமுதம் வாரி வழங்கியுள்ளது, அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த்திற்கு 10%-20% வாக்குகள் என ஓரே ஆச்சரியம் தான்

இந்தக் கணிப்புகள் யாருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலானோர் இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என்றாலும் கொஞ்சம் குழம்பித் தான் போயினர். அத்தகைய குழப்பத்தை விளைவிக்கத் தான் இந்த கருத்துக்கணிப்புகள் திணிக்கப்படுகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது.

CNN-IBN மிகுந்த உஷாருடன் தன்னுடைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளின் தோல்விகளால் எவ்வளவு தொகுதிகளை யார் பிடிப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக 46% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும், திமுக 44% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும் தெரிவிக்கிறது. ஆனாலும் இது சரியான கணிப்பாக இருக்காது எனவும் அதிமுகவின் 2%கூடுதல் வாக்குகள் என்பது கருத்துக்கணிப்புகளில் இருக்கும் standard errorல் கழிந்து போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியிருக்கிறது.

பெரும்பாலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கருத்துக்கணிப்புகளை விஞ்ஞானப் பூர்வமாக அணுகுவதாக கூறப்படும் முறைகளில் பெரிய நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதில்லை. கடந்த காலங்களில் இவை சரியாக முடிவுகளை கணிக்க முடியவில்லை என்பது தவிர, தங்கள் தவறுகளை அடுத்து வரும் கருத்துக் கணிப்புகளில் திருத்திக் கொண்டதாகவும் தெரியவில்லை. தங்களுடைய கருத்துக் கணிப்புகள் எந்த வகையில் தோல்வி அடைந்தன என்பதையும் இவர்கள் வெளியிட்டதில்லை. தமிழகத்தில் இவர்களுடைய கருத்துக் கணிப்புகள் எப்பொழுதுமே சரியாக இருந்ததில்லை.

இந்தியா மற்றும் தமிழகத்தில் பல பிரிவு மக்கள், பல வித கட்சிகள், சாதியைச் சார்ந்த பல விதமான ஓட்டுப் பிளவுகள் இருக்கும் சூழலில் இந்தக் கருத்துக்கணிப்புகளை சரியாக அணுகும் முறை இன்னும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். IBN-HINDU கருத்து கணிப்பில் கூட Random Sampling முறையில் 4,781 பேரிடம் 232 இடங்களில் இருந்து 58 தொகுதிகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்த வகையில் இந்த சாம்ப்பிள் கொண்டு வரப்பட்டது என்பதை பொறுத்தே இதன் சரியான கணிப்பு இருக்க முடியும்.

பொதுவாக செய்யப்படும் நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என்பதைக் கடந்து எந்தச் சாதி, எந்தக் கட்சியை சார்ந்தவர், எந்த ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர், இவை எதனையும் சாராத பொதுவான வாக்காளரா, கட்சியை சாராதவராக இருந்தாலும் இந்தக் கட்சிகளின் மேல் அபிமானம் உள்ளவரா என்பன போன்றவையெல்லாம் கருத்துக் கணிப்பிற்கு முக்கியம் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை எல்லாம் கொண்டு செய்வது அவ்வளவு எளிதல்ல. கருத்துக் கணிப்பில் அவர்கள் உண்மையை கூறுகிறார்களா என்பதும் கணிக்க முடியாதவை. அந்த வகையில் பார்க்கும் பொழுதும கருத்துக் கணிப்பின் Error 1% இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் அதிகமாகவே இருக்கும்.


அது போல Random Samplingக்கிறகு கொண்டு வரப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. எனவே இந்தக் கருத்து கணிப்பு முறை உண்மையான நிலையை பிரதிபலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்றாலும் பிற கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் இந்தக் கருத்து கணிப்பு பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞான முறைப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் நினைத்தது போலவே கடும்போட்டி இருப்பதாகவே கருத்துக் கணிப்பு பிரதிபலித்து இருக்கிறது.

ஆனால் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்களே தேர்தலின் வெற்றி தோல்விகளில் முக்கிய காரணிகளாக இருக்கப் போகிறது. உதாரணமாக தேர்தலின் வெற்றி தோல்வி பெரும்பாலும் கடைசி சில 5 தினங்களில் ஏற்படுவதாகத் தான் நான் நினைக்கிறேன். தலைவர்களின் பிரச்சாரம் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவையெல்லாம் தணிந்து ஒரு முடிவை நோக்கி மக்கள் செல்வது இந்த தினங்களில் தான். அது போல தேர்தல் இறுதி நேரத்தில் பல தொகுதிகளில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் மாறி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முடிவெடுக்காத வாக்காளர்கள் 30% அளவிற்கு இருக்கின்றனர் என கருத்துக் கணிப்பு கூறுகிறது. வாக்காளர்களின் மனநிலையும் தேர்தலின் இறுதி நேரத்தில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.

Secondly, the survey revealed that about 30 per cent of the respondents were either unwilling to disclose their voting preferences or were unsure who they would eventually vote for. About 13 per cent did not reveal a preference; six per cent gave a preference but were unsure whether it would remain the same until election day; and another 11 per cent were more or less sure but not absolutely confident of the way they were going to vote a month from the

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் "இந்து" தெரிவித்துள்ளது

Thirdly, the advantage of two percentage points for the AIADMK alliance may not result in an advantage in terms of seats. The votes of the DMK and the PMK are concentrated in areas of strength and, as a result, the seat yield from these areas of strength could compensate for a modest disadvantage in terms of share of-the-overall-vote disadvantage. So, despite a difference in vote share, it could be a virtual tie in terms of seats.

பாமகவின் concentrated ஓட்டுவங்கி குறித்து என்னுடைய பதிவில் ஒரு முறை விவாதம் நடந்தது. என்னுடைய வாதத்தை இந்த கருத்துக் கணிப்பு உறுதி செய்வது போல உள்ளது. இந்த தேர்தலில் வடமாவட்டம் திமுக கூட்டணி கைகளுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு "Advantage" நிச்சயம் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை IBN-HINDU மிகுந்த எச்சரிக்கையுடனே வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று கூறி எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய Credibility பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளது. கடந்த கால கருத்துக்கணிப்பு தோல்விகள் அவர்களை இந்த முடிவினை எடுக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலின் பொழுது ராஜ்தீப் NDTVயில் வெளிப்படையாகவே இதனை கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழ்நாடு எங்கள் கருத்துக்கணிப்பிற்கு மாறாக வாக்களித்தால் அந்தப் பக்கம் போகவே போவதில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

போட்டி மிகக் கடுமையாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்தக் கருத்து கணிப்பில், தொங்கு சட்டசபை அமையாது என்றும் கூறுகிறார்கள். மிகுந்த குழப்பத்துடனே கருத்துக் கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்

தமிழக மக்கள் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்களா என்ன ? மேலும் படிக்க...

தொகுதி அலசல் : பண்ருட்டி

வடமாவட்டங்களில் பாமகவின் பலத்தை சரியாக கணிக்க முடியாத தொகுதிகளில் பண்ருட்டி முக்கியமான தொகுதி. இந்த தொகுதி கிராமங்கள் (பண்ருட்டி நகரத்தை தவிர்த்து) மட்டுமே கொண்ட தொகுதி என்பதால் இங்கு சாதி வாரியாக பார்த்தால் வன்னியர்களே அதிகம். அடுத்த நிலையில் இருப்பவர்கள் தலித் மக்கள். 1991, 2001 தேர்தல்களில் பாமக வென்றிருக்கிறது. 1996 தேர்தலில் திமுக வென்றது. 1991 தேர்தலில் பாமகவை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி பண்ருட்டி தான் என்றவகையில் பாமகவிற்கு இந்த தொகுதி மேல் தனி கவர்ச்சி உண்டு. ஆனால் அதே அளவுக்கு பாமகவிற்கு பலம் உள்ளதா என்பது கேள்விக்குறி தான்.

1991 தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் 39,911 ஓட்டுக்கள் பெற்று, 1,122 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கு போராடி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கடுமையான ராஜீவ் அனுதாப அலை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பண்ருட்டியாரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்று அப்பொழுது கூறப்பட்டது. இதற்கு பிறகு பண்ருட்டியார் பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். தனிக்கட்சி தொடங்கினார்.

1996 தேர்தலில் இங்கு திமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக 68,021 ஓட்டுக்களைப் பெற்றது. அதிமுக 28,891 ஓட்டுக்களைப் பெற்றது. பாமக 9,988 ஓட்டுக்களை மட்டுமே பெற்றது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த தேர்தலில் ஜெ எதிர்ப்பு அலை இருந்தது.

1996 தேர்தலில் இங்கு பண்ருட்டியார் போட்டியிடவில்லை. பண்ருட்டியார் தனக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று நிச்சயமாக தெரிந்தால் மட்டுமே போட்டியிடுவார் என்ற கருத்து இங்கு பரவலாக உண்டு. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கும் பொழுது மட்டுமே அவர் இங்கு போட்டியிடுவார். 1996 தேர்தலில் பண்ருட்டியார் இங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவரான நந்தகோபால் கிருஷ்ணன் நிற்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து போட்டியிடாமல் தான் வெற்றி பெற முடியாது என்று பண்ருட்டியார் முடிவு செய்திருக்க கூடும்.

ஆனால் 2001 தேர்தலில் பண்ருட்டியார் திடீரென்று சுயேட்சையாக கடைசி நேரத்தில் களமிறங்கினார். இதற்கு காரணம் இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்கிய பாமக-அதிமுக கூட்டணி வேட்பாளாரான பாமகவின் தி.வேல்முருகன், இந்த தொகுதியில் அதிகம் அறிமுகமில்லாதவர். புதியவர். இளைஞர். எனவே தான் இங்கு வெற்றி பெற்று விடலாம் என்று பண்ருட்டியார் எண்ணினார். வேல்முருகன் பண்ருட்டியரின் சொந்த ஊரைச் சேர்ந்தவர். பண்ருட்டியாரின் உறவினரும் கூட. இவர் பாமகவில் நிற்பது அறிவிக்கப்பட்டவுடன் முதலில் பண்ருட்டியாரை தான் சந்தித்து "ஆசி" பெற்றார் என்று அப்பொழுது இங்கு கூறப்பட்டது. அந்த சமயத்தில் இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாம் வேல்முருகனுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் மூந்தைய தலைமுறையினர் பண்ருட்டியாருக்கும் வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் இங்கு பரவலாக இருந்தது. அதன் படியே தான் நடந்தது என்றும் சொல்லலாம். பண்ருட்டியார் 30,459 ஓட்டுக்களை தனியாக இருந்து பெற்றார். ஆனால் மூன்றாம் இடத்தையே பிடித்தார். வேல்முருகன் 45,963 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 40,915 ஓட்டுக்களைப் பெற்றது.

கடந்த கால வாக்கு நிலவரத்தை கொண்டு பார்த்தால் இங்கு பலமாக இருக்கும் கட்சிகளில் முதலிடம் திமுகவிற்கு தான். அடுத்த இடம் அதிமுகவிற்கு. மூன்றாம் இடத்தில் தான் பாமக வருகிறது. ஆனால் பாமகவிற்கு இங்கு அதிகம் செல்வாக்கு இருப்பது போல தெரிவதற்கு காரணம், இங்கு முழுக்க முழுக்க இருக்கும் வன்னியர்களின் வாக்குகள் தான். திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளிலும் தான் வன்னியர்கள் அதிகம் இருப்பார்கள். அதனாலேயே திமுக-பாமக கூட்டணி அமைக்கும் பொழுது இங்கு இந்தக் கூட்டணிக்கு பலம் அதிகம் இருக்கும்.

கடந்த பாரளுமன்ற தேர்தலில் கூட இந்த தொகுதியில் திமுக பண்ருட்டியில் சுமார் 72,580 வாக்குகளைப் பெற்றது. அதிமுக 46,420 வாக்குகளும், விடுதலைச் சிறுத்தைகள் 9,730 வாக்குகளையும் பெற்று இருக்கின்றனர். அதிமுக-விடுதலைச் சிறுத்தைகளின் மொத்த வாக்குகள் 56,150 வாக்குகள். மதிமுகவிற்கு சுமாராக 3,000 வாக்குகள் இங்கு இருக்கலாம்.

ஆக, 2004 பாரளுமன்ற தேர்தல் நிலவரம் படி சுமார் 13,000 வக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி இங்கு முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் விஜயகாந்த் கட்சியின் மூலம் இங்கு பண்ருட்டியார் மறுபடியும் களமிறங்குகிறார். மும்முனை போட்டி இருக்கும் வடமாவட்டத்தின் வெகுசில தொகுதிகளில் இதுவும் ஒன்று. அதுவும் வி.ஐ.பி. தொகுதி. பாமகவிற்கு முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டியாரை அனுப்பி வைத்த பண்ருட்டி, விஜயகாந்திற்கு இங்கிருந்து முதல் உறுப்பினரை அனுப்பி வைக்குமா ?

அனுப்பாது என்பது தான் என்னுடைய கருத்து.

காரணம்

  • பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் + திமுக கூட்டணி
  • அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் + அதிமுக கூட்டணி
  • சரிந்து போய் விட்ட பண்ருட்டியாரின் செல்வாக்கு

பல தொகுதிகள் போல இல்லாமல், இந்த தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சியின் வேட்பாளர்களுமே தொகுதியில் பிரபலமான பெரும் புள்ளிகள்.

2001 தேர்தலில் வேல்முருகன் களமிறங்கிய பொழுது அவர் தொகுதிக்கு புதிய முகம். அப்பொழுது இவருக்கு சுமார் 27வயது என்று நினைக்கிறேன். இவர் சரியான கத்துக்குட்டி என்று எண்ணி தான் பண்ருட்டியார் களமிறங்கினார். ஆனால் அதே வேல்முருகன் இன்று தொகுதியில் மிக பிரபலம். தன்னுடைய அதிரடி அரசியல் மூலம் இந்தப் பகுதியின் பிரபலமான பிரமுகர் ஆகியிருக்கிறார். தொகுதியில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கினை கணிசமாக வளர்த்து இருக்கிறார். இந்தப் பகுதியில் நடக்கும் பல திருமண விழாக்களில் இவரை பார்க்க முடியும். பண்ருட்டியார் போல சென்னையில் இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதி பக்கம் வருபவர் என்ற இமேஜ் இவருக்கு இல்லை. தொகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர். அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனின் "பழைய ரொளடி" போன்ற எந்த தவறான இமேஜும் இவருக்கு இல்லை. கட்சிகளைக் கடந்த செல்வாக்கினை வேல்முருகன் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

இவருடைய பலவீனம், இவருடைய அதிரடி அரசியல் தான். இந்தப் பகுதியில் இருக்க கூடிய பல சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. குறிப்பாக ரஜினி மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. பாபா படம் திரையிடப்பட்ட பொழுது பண்ருட்டியில் தான் முதன் முதலில் தியேட்டர் திரை கிழிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அது இவருடைய மேற்பார்வையில் தான் நடந்தது. அது போல பல ரசிகர் மன்றங்களையும் இவர் கலைக்க வைத்தார். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். இவருடைய வயது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதிமுகவின் சொரத்தூர் ராஜேந்திரன் இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். முதலில் தாதா என்ற வகையில் அறிமுகமானவர். ஆரம்பம் முதலே ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்து வருகிறார். நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி, பண்ருட்டி தொகுதி, கடலூர் பாரளுமன்ற தொகுதி என பல தொகுதிகளில் இவர் போட்டியிட்டு இருந்தாலும் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் பலமான வேட்பாளர் தான் என்றாலும் இவருடைய கடந்த காலம் பலருக்கும் ஞாபகமிருக்கிறது. பணபலம், தொகுதியில் இருக்கும் அறிமுகம், அதிமுக பலம் போன்றவை மூலம் இம்முறை எப்படியாவது மும்முனை போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

பண்ருட்டியார் - இந்தப் பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. 1977, 1980, 1984, 1991 என நான்கு முறை இந்த தொகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றிருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல பண்ருட்டியில் பேருந்துகளை பல ஊர்களுக்கு இயக்கியே பிரபலம் ஆனவர். ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே தொகுதிக்கு வருவது இவருடைய பலவீனம். இவர் மேல் அபிமானம் கொண்ட பழைய வாக்காளர்கள் தான் இவருடைய செல்வாக்கிற்கு முக்கிய காரணம். இப்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. அந்த பழைய வாக்காளர்களும் இம் முறை இவருக்கு இம்முறை வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. பண்ருட்டியாரின் செல்வாக்கு சரிந்து கொண்டே தான் வந்துள்ளது. விஜயகாந்த் மூலமாக இளைஞர்கள் செல்வாக்கு கிடைக்கும். ஆனால் வேல்முருகனின் செல்வாக்கிற்கு முன்பாக ஈடுகொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

இனி எனது கணிப்பு...

மூன்று பிரபலமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தொகுதியில் கடுமையான போட்டியிருக்கிறது.

2004 பாரளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளை பண்ருட்டியார் பிரிப்பார். பண்ருட்டியார் இரு வேட்பாளர்களிடம் இருந்துமே வாக்குகளைப் பிரிப்பார். இவருடைய அனுதாபிகள் அதிமுகவில் அதிகளவில் உள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இங்கு திமுக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து வந்துள்ளது. திமுகவில் இருக்கும் ஓட்டுக்கள் பெரும்பாலும் இந்தப் பகுதியில் "பண்ருட்டியார் எதிர்ப்பு வாக்குகள்" தான். பல காலமாக தொடர்ந்து திமுகவிற்கு விழுந்து கொண்டிருக்கும் வாக்குகள். திமுக இங்கு தன்னுடைய வாக்குகளாக சுமார் 40,000 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பாமக இம்முறை திமுக கூட்டணியில் இருப்பதால் இது பாமகவிற்கு சாதகமாக உள்ளது.

விஜயகாந்த் மூலம் திமுக-பாமக ஓட்டுகள் பண்ருட்டியாருக்கு வந்து சேரும் என்று கணித்தாலும், அதிமுகவில் இருந்து தான் அதிகளவில் இவருக்கு வாக்குகள் வந்து சேரும். ஏனெனில் இங்கு அதிமுக வளர பண்ருட்டியார் முக்கிய காரணம்.

திமுக, அதிமுக என இரு கட்சிகளிடம் இருந்துமே பண்ருட்டியார் ஓட்டுக்களைப் பிரிப்பதால், மும்முனை போட்டியில் திமுக கூட்டணிக்கே சாதகம் அதிகம்.

கடந்த தேர்தலில் பெற்ற 30,000 வாக்குகளை விட இம்முறை குறைவாகவே பண்ருட்டியார் பெறக்கூடும் என்பது எனது கணிப்பு.

பாமகவிற்கு இங்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகளவில் இல்லை. என்றாலும் திமுகவுடனான கூட்டணி பலம், வேல்முருகனின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக பண்ருட்டியில் பலாப்பழ, முந்திரி சீசனில், வழக்கமான பலாப் பழ வாசனையுடன் மாம்பழ வாசனையும் வீசிக் கொண்டிருக்கிறது.

பண்ருட்டி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு

குழலியின் பண்ருட்டி தொகுதி அலசல்

மேலும் படிக்க...

என்னுடைய தேர்தல் கணிப்பு

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது. அது மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் 1லட்சத்திற்கு மேல் தான் இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்வளவு வாக்குகள் திமுக கூட்டணிக்கு இடமாறியதன் காரணமாக அதிமுக தமிழகமெங்கும் வெகுசில சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதற்கு திமுக கூட்டணி பலம் ஒரு காரணம் என்றால் தமிழக அரசுக்கு எதிராக இருந்த Anti incumbency factor ஒரு முக்கிய காரணம்.
ஆக, திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் 23% முதல் 24% இழக்க வேண்டும்.

இந்த Anti incumbency factor மொத்தமாக காணாமல் போய் விட்டது, ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் மக்களை அதிமுகவிற்கு சாதகமாக திருப்பி விட்டது போன்ற ஒரு பிம்பம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு ஆதரவாக சிறிது ஓட்டுக்கள் இடமாறலாம். ஆனால் திமுக -23% முதல் -24% ஓட்டுக்களை இழக்க எந்தவித காரணங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்களில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு மக்கள் மத்தியில் இயல்பாக ஆதரவு கூடியே இருந்து வந்திருக்கிறது. அரசின் மிதமிஞ்சிய செயல்பாடுகள் மட்டுமே மக்களை ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றும்.

ஆனால் ஜெயலலிதா சில சலுகைகளை பறித்து திரும்ப கொடுத்தார், சில சலுகைகள் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு ஆதரவான நிலை எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிறிதளவு ஓட்டுக்கள் இடமாறாலாம் என்ற கோணத்திலேயே நான் இதனைப் பார்க்கிறேன்.

ஜெயலலிதா எடுத்த பல நடவடிக்கைகள் பொருளாதார பார்வையில் பாரட்டப்பட வேண்டியவை என்ற எண்ணமுடையவன் நான். ஆனால் அது அவருக்கு அரசியலில் தோல்வியையே ஏற்படுத்தும். பொருளாதாரச் சீர்திருத்தம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் கைவைப்பதல்ல என்பது தான் இந்தியாவில் யதார்த்தமான அரசியல் நிலை. பாரதீய ஜனதா அரசு தோல்வியடைந்தது கூட இதனை உறுதிப்படுத்தியது. இதனைக் கடந்து ஒரு தனித்த பொருளாதார சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களுக்கு சலுகைகளையும் கொடுக்க வேண்டும் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் அரசு கொடுக்கும் சலுகைகள் பாதிக்காத வண்ணம் கொண்டுச் செல்ல வேண்டும். இது தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால்.

ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும். இது போலவே அவரின் பல நடவடிக்கைகளைப் பார்க்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் வேறுபாடு தெரிகிறது. ஜெயந்திரரை கைது செய்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரு விஷயம் மட்டும் இந்த வகையில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.

ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர் வழங்கிய கவர்ச்சிகரமான பல திட்டங்களுக்கு ஈடுகொடுக்க தமிழகத்தின் ஆதி கால பிரச்சனையான அரிசி 2ரூபாயில் இருந்து இன்றைய நவீன கவர்ச்சியான கலர் டீவி வரை கருணாநிதி அறிவித்து இருக்கிறார். கருணாநிதியின் இந்த திட்டங்கள் ஓட்டுக்களைப் பெற்று கொடுக்க முடியுமா என்பதும் ஜெயலலிதா வழங்கிய சலுகைகள் ஓட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிகளே.

திமுகவின் கூட்டணி பலம், ஆளும்கட்சிக்கு எதிரான Anti incumbency factor, திமுகவிற்கு எதிராக பெருமளவில் இடம்மாற முடியாத அளவுக்கு (-23% முதல் -24%) இருக்க கூடிய கடந்த பாரளுமன்ற தேர்தல் vote swing, பல தொகுதிகளில் திமுக களமிறக்கி உள்ள வலுவான வேட்பாளர்கள் போன்றவை மூலம் இந்த தேர்தல் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே அமையும் என்று நான் நினைக்கிறேன்.

என்னுடைய கணிப்பு தவறாக கூட அமைந்து விடலாம். மக்களின் உணர்வுகளை கணிப்பது எளிதல்ல...

பங்குச்சந்தையை கணிப்பதை விட தேர்தலை கணிப்பது மிகக் கடினம் தான்... மேலும் படிக்க...

கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படுவதன் அவசியம் குறித்தும், அதனை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும் இம் மாத "திசைகள்" இதழில் திரு.மாலன் எழுதியிருக்கிறார் (கட்டுரைக்கான சுட்டிகள் - 1,2). அவர் கூறுவது போல கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லாதது என்பது எனது கருத்து. இது ஒரு Theoretical approach தான் என்றாலும் மக்களின் வாக்களிப்பு முறையில் இயல்பாக வரும் மாற்றங்கள் மூலம் தான் கூட்டணி ஆட்சி சாத்தியமாகும்.

அவ்வாறான கூட்டணி ஆட்சி முறை தமிழகத்தில் சாத்தியமாகுமா ? இந்த தேர்தல் என்றில்லாமல் எதிர்காலத்திலாவது இந்த வாய்ப்பு ஏற்படுமா ?

எந்த தியரிப்படியும் மக்கள் வாக்களிப்பதில்லை. மக்கள் ஒரே கட்சிக்கு தான் பரவலாக வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்ற கருத்து கூட இது வரையில் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதுவே தொடர்ந்து கொண்டும் இருக்காது. மாற்றங்கள் ஏற்படவே செய்யும்.

மக்களின் வாக்களிக்கும் முறையில் இயல்பாகவே மாற்றங்கள் வரமுடியும். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்த முறையை நோக்கும் பொழுது, தமிழகமும் அம் மாதிரியான ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நமக்கு தெரியவரும்.

இந்தியாவில் ஒரே கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்கள் இன்று மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்கள். இதனை NDTVயின் பிரணாய் ராய் இந்திய ஜனநாயகம் Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறது என்று வர்ணித்திருப்பார். கடந்த காலங்களில் தலைவர்களின் செல்வாக்கு, கட்சிகள் மீதான அபிமானம் போன்ற ஒரே பாணியில் வாக்களித்து கொண்டிருந்த மக்கள் (Static Pattern) சமீபகாலங்களில் கட்சிகளின் செயல்பாடுகளைக் கொண்டே வாக்களிக்கிறார்கள் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன், இந்திய பொருளாதார வளர்ச்சி, குறியீடுகளின் உயர்வு போன்றவற்றுடன் ஊடகங்களின் புகழ்ச்சியுடன் கடந்த தேர்தலை சந்தித்த பாஜக தோல்வியடைந்தது கூட இந்திய வாக்காளர்கள் "மிகவும்" Dynamicஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தும். தங்களுடைய அடிப்படை வாழ்க்கை தேவைகளைக் கொண்டே அவர்களின் வாக்களிக்கும் முறை இருந்து வந்திருக்கிறது.

தமிழகத்திலும் இது நடந்து இருக்கிறது. 1996, 2001 ஆகிய தேர்தல்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும், 2004 பாராளுமன்ற தேர்தலின் முடிவும் சமீபகால உதாரணங்கள். ஜெயலலிதா தன்னுடைய சொந்த தொகுதியில் கூட தோல்வியடைந்தார் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மக்கள் அரசாங்கங்களின் செயல்பாடுகளை மட்டுமே கொண்டு வாக்களிக்கிறார்கள். இந்த வாக்குகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. எந்தக் கட்சி எவ்வளவு வாக்கு வங்கி வைத்திருந்தாலும் அது ஒரு Static நிலை தான். அது மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது இல்லை.

தமிழகத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல கருத்துக்களை பல காலமாக கூறி வந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் பாரளுமன்ற தேர்தலுக்கு ஒரு பாணியிலும், சட்டமன்ற தேர்தல்களில் ஒரு பாணியிலும் வாக்களிப்பார்கள் என்பதாக இரு கருத்து இருக்கிறது. சாதாரண கிராமத்து வாக்காளன், நான் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ நான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகிறேன் அதனால் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்றோ தீர்மானிப்பதில்லை. படித்தவர்கள் வேண்டுமானால் இவ்வாறு வாக்களித்து கொண்டு இருக்கலாம். மக்கள் அந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் கோபம் அல்லது ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் அபிமானம் இவற்றைச் சார்ந்தே வாக்களிக்கிறார்கள். அதனால் தான் 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்தது.

இன்று இந்தியாவின் மைய அரசாங்கத்தை நிர்வாகிக்கும் ஆளும் கட்சியின் எதிர்காலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கொண்டே உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மாநிலத்திற்கு மாநிலம் இயல்பாக மாறும் வாக்களிக்கும் முறையே இந்தியாவில் கூட்டணி ஆட்சியை தோற்றுவித்து இருக்கிறது.

இதைத் தவிர மற்றொரு முக்கியமான காரணம் - பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி.

இந்தியாவின் தேசிய கட்சிகள் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இந்தக் காரணமே பல பிராந்தியங்களில் பிராந்திய உணர்வு தலைத்தூக்க முக்கிய காரணம். குறிப்பாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பல மாநிலங்களில் அந்த மாநிலத்தின் உரிமை கேட்டு பிராந்திய உணர்வு தலைதூக்க தொடங்கியது. தமிழகத்தில் மொழியைச் சார்ந்து இந்த இயக்கம் இருந்தது என்றால் அசாம் போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் தங்கள் மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரவில்லை என்பதாகவும், ஆந்திராவில் ஆந்திராவின் சுயமரியாதை போன்ற கோஷங்கள் மூலமாகவும் பிராந்திய கட்சிகள் உருவாகின. பல மாநிலங்களில் வலுவாக இருந்த பிராந்திய தலைவர்கள் தாங்கள் சார்ந்து இருந்த கட்சியையோ, காங்கிரசுக்கு மாற்றாக இருந்த கட்சியையோ பலமாக வளர்த்துக் கொள்ள முடிந்தது. இவ்வாறு தான் பல தலைவர்கள் உருவாகினர். கர்நாடகாவில் தேவகவுடா, ராமகிருஷண் ஹெக்டே, ஒரிசாவில் பிஜு பட்நாயக் பிறகு அவரது மகன், முலயாம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பிரணாண்டஸ், பால்தாக்ரோ போன்றோர் தங்களுடைய மாநிலத்தில் கணிசமான ஆதரவை பெற்றிருந்தனர். இதற்கு காரணம் மைய அரசால் பல மாநிலங்களின் தேவையை தீர்க்க முடியவில்லை. பொருளாதார பிரச்சனைகள் காங்கிரசை வலு இழக்க செய்தது. இது பிராந்திய கட்சிகளையும், தலைவர்களையும் வலு இழக்க செய்தது.

இதை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் இயக்கம் நேருவுக்குப் பிறகு தன்னுடைய தாக்கத்தை இழக்க தொடங்கியது. இது இந்திரா காந்தி காலத்தில் வளர்ந்து ராஜீவ் காலத்தில் பிரதிபலிக்க தொடங்கியது. இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்தில் அதுவும் பல வேறுபாடுகளைக் கொண்ட தேசத்தில் ஒரே கட்சி தன்னுடைய தாக்கத்தை தொடருவது சாத்தியமில்லாதது. நேரு என்ற கவர்ச்சியான பிம்பம், சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்சி என்பதை கடந்து அதுவும் ஒரு சராசரி அரசியல் கட்சி என்றான பொழுது அதிலிருந்து பல கிளைக் கட்சிகள் தோன்ற தொடங்கின. மாற்று எண்ணங்களும் வலுப்பெற தொடங்கின. அந்த மாற்று எண்ணங்களின் ஒரு அங்கமாகத் தான் பாரதீய ஜனதா கட்சி தோன்றியது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி, பிற பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி போன்றவை காங்கிரசின் ஓட்டுவங்கியை கரைக்க தொடங்கின.

இவ்வாறான பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி தேவ கவுடா பிரதமராகியப் பிறகு வலுப்பெற தொடங்கியது. மாநிலம் மாநில கட்சிகளுக்கு, மைய அரசு தேசிய கட்சிகளுக்கு என்ற ரீதியில் கூட்டணி அமைத்து கொண்டிருந்த மாநில கட்சிகள் மைய அரசில் பங்கேற்பும் வாய்ப்பை பெற்றவுடன் மைய அரசில் பங்கு கொள்வதிலும், மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இருக்கும் வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தன.இது தேசிய கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தின.

ஒரு கட்சி ஆட்சி முறை களையப்பட்டு பல கட்சி கூட்டணி முறைக்கு இந்தியா இவ்வாறு தான் வந்து சேர்ந்தது. இன்று இந்த நிலையில் இருந்து இந்தியாவால் விலக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதே மாதிரியான போக்கு தற்பொழுது தமிழக அரசியலில் காணப்படுகிறது. காங்கிரசின் ஓட்டு வங்கியை 1967க்குப் பிறகு கைப்பற்றிய திமுக, பின் தன்னுடைய வாக்கு வங்கியை அதிமுகவிடம் இழந்தது. வடமாவட்டங்களில் திமுகவின் பலமான வன்னியர் வாக்கு வங்கியை பாட்டாளி மக்கள் கட்சி பகிர்ந்து கொண்டது. தலித் மக்களை கொண்ட காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் கைப்பற்றியது. இது போல மதிமுகவிடம் தன்னுடைய தென் மாவட்ட வாக்கு வங்கியில் கணிசமான பங்கினை திமுக இழந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அதிமுகவின் பலமான தேவர் வாக்கு வங்கி சரியலாம்.

இதற்கும் பொருளாதார காரணங்களை தான் கூற வேண்டும். உதாரணமாக பாமக எப்படி தோன்றியது என்பதை பார்க்கு பொழுது இது நமக்கு தெரியவரும். வடமாவட்ட பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்கள் ஏழ்மையில் இருந்த நிலையில் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீடு போராட்டமாக தொடங்கி பின் பொருளாதார ரீதியில் ஒரளவிற்கு முன்னேறிய நிலையில் அரசியல் அதிகாரங்களை பிடிக்க பாமக உருவாகியது. வன்னிய மக்களின் போராட்டம் நடைபெறும் வரை திராவிட கட்சிகள் இந்த மக்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அந்த நிலையை தனக்கு சாதகமாக வன்னியர் சங்கம் மற்றும் பாமக பாமக பயன்படுத்திக் கொண்டது.

அது போல தலித் மக்களை இரு கட்சிகளும் உதாசினப்படுத்திய நிலையில் அவர்களுக்கான இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் உருவாகியது. தலித் மக்களுக்ம் இந்த இயக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வைச் சார்ந்து இந்த இயக்கங்கள் வளர்ந்தனவோ அது போல தமிழகத்தில் சாதியை அடிப்படையாக கொண்டு இந்த இயக்கங்கள் வளர்கின்றன. இந்தியாவில் எப்படி பிராந்திய உணர்வுகள் இயல்பாக இருக்கின்றனவோ அது போல தமிழகத்தில் சாதீய உணர்வு இயல்பாக இருப்பதால் அதனைச் சார்ந்து தான் இயக்கங்கள் வளர முடியும். தமிழகம் போன்று இருக்கும் மற்றொரு மாநிலம் உத்திரபிரதேசம். அங்கு இன்று கூட்டணி ஆட்சியைத் தான் அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்,

வடமாவட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் தென்மாவட்டங்களில் ஏற்படவில்லை என்றாலும் அதிமுகவைச் சார்ந்து இருக்கின்ற தேவர் வாக்குகள் எதிர்காலத்தில் சரியலாம். அப்பொழுது தென்மாவட்டங்களில் பலமாக தெரியும் அதிமுக தன்னுடைய பலத்தை இழக்கும். ஏற்கனவே வடமாவட்டங்களில் அதிமுகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. இந்த நிலையில் தென்மாவட்ட வாக்கு வங்கி சிதறும் பொழுது கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உறுதியாகும் (இது என்னுடைய கருத்து தான். நடக்காமலும் போகலாம்). ஆனால் தற்போதைய சூழலில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் குறைவு தான்.

இன்று தமிழக அரசியலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை எந்தக் கட்சியும் தனித்து போட்டியிடும் நிலையில் இல்லை. இது பெரிய கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாமக 30இடங்களை திமுக கூட்டணியிலோ அதிமுக கூட்டணியிலோ பெற்றுக் கொண்டு அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்ந்த முன்வந்து விடுகிறது. தனித்து போட்டியிட்டு ஒரு இடம் கூட கிடைக்காமல் இன்று மதிமுகவும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதற்கு காரணம் சிறுகட்சிகள் தங்களை ஒரு அணியாக அமைத்துக் கொள்வதில் இருக்க கூடிய சிக்கல்கள். அதனால் பெரிய கட்சிகள் இவ்வளவு தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என்று சொல்லும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் சிறு கட்சிகளுக்கு ஏற்படுகிறது.

ஆனால் இந்த நிலையில் கூட எதிர்காலத்தில் மாற்றம் வரலாம். அது சிறிய கட்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. சமீபத்தில் கூட பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இவ்வாறு இணைய தொடங்கியதையும், இவ்வாறு இணைபவர்களுக்கு நிறைய இடங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக திமுக அதனை நிராகரித்ததையும் நாம் கவனிக்க வேண்டும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறும் பட்சத்தில் இது எதிர்வரும் தேர்தல்களில் சாத்தியமாகலாம். அப்பொழுது பெரிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் எழலாம்.

இன்று திமுக கூட்டணி போட்டியிடும் இடங்களைப் பார்க்கும் பொழுது கூட்டணி ஆட்சியை நோக்கி நாம் நகர்ந்து செல்வது தெரியவரும். திமுக 130 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில் சுமார் 80% தொகுதிகளில் வெற்றி பெற்றே தீரவேண்டும். பெரிய அலை இல்லாமல் கடுமையாக போட்டியிருக்கும் இந்த தேர்தலில் இது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அதுவும் தவிர தென்மாவட்டங்களில் பலவீனமாக இருக்கும் திமுக தென்மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற முடியுமா என்பதை பொறுத்தே திமுக தனித்து ஆட்சி அமைப்பதோ, கூட்டணி ஆட்சி அமைப்பதோ இருக்கிறது. திமுகவின் வெற்றியே தென்மாவட்டங்களில் அந்தக் கட்சி பெறும் வெற்றியை கொண்டே இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அது போல அதிமுக வடமாவட்டங்களில் பலவீனமான கட்சி. விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக தவிர இந்தக் கூட்டணிக்கு வடமாவட்டங்களில் திமுக-பாமக கூட்டணியுடன் ஓப்பிடத்தகுந்த அளவில் செல்வாக்கு இல்லை. எனவே வடமாவட்டங்கள் தான் அதிமுகவின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகின்றன.

வடமாவட்டமும், தென்மாவட்டமும் இரு கூட்டணி இடையே பிரிந்து போனால் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உருவாகும். அப்படி இல்லாவிட்டால் ஒரு கட்சி ஆட்சி தான் ஏற்படும்.

தமிழக மக்கள் எப்பொழுதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் தேர்தலில் இந்தியாவெங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பெருவாரியாக வெற்றி பெற்று கொண்டிருக்க, சென்னை மாகாணத்தில் (தமிழகம், ஆந்திராவின் சிலப் பகுதிகளை உள்ளடக்கிய மாகாணம்) காங்கிரஸ் குறைவான இடங்களையே வெல்ல முடிந்தது.

அன்றைக்கு தொடங்கி பல தேர்தல்களில் பொதுவாக ஊடகங்கள் முன்வைத்த வாதங்களை தமிழக மக்கள் மறுத்தே வந்திருக்கிறார்கள். அது வெற்றி பெறும் கட்சிகள் குறித்து கணிப்புகளாக இருந்தாலும் சரி, சினிமா நடிகர்களை முன்வைக்கும் ஊடகங்களின் பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் மக்கள் பொருட்படுத்துவதில்லை. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக பிரதிபலித்ததும் இல்லை.

இந்த தேர்தலிலும் ஆச்சரியங்கள் இருக்கலாம். மேலும் படிக்க...

விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா ?

2006 தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதியாக விருத்தாசலம் மாறியிருக்கிறது. விஜயகாந்த் இந்த தேர்தலில் இங்கு களமிறங்குகிறார். விருத்தாசலத்தில் விஜயகாந்த் களமிறங்குவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு குறிப்பிடத்தகுந்த "செல்வாக்கு" இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருவது அவரை இங்கு நிற்க தூண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.


ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் பாமகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாமக வலுவாக இருக்கும் இடங்களில் தங்களை தேவையில்லாமல் நுழைத்து கொள்கிறார்கள் என்று தோன்றினாலும் ரஜினிகாந்த்துடன் விஜயகாந்த்தை என்னால் ஒப்பிட முடியவில்லை. ரஜினிகாந்த் தோல்வி அடைந்து விட்டதால் விஜயகாந்த்தும் தோற்று விடுவார் என்றும் நாம் முடிவு செய்து விட கூடாது. ரஜினிகாந்த்தை விட விஜயகாந்த் கொஞ்சம் "புத்திசாலி" என்பது என் எண்ணம். எனவே அவரது இந்த முடிவின் பின் இருக்கும் சில காரணங்களை நாம் ஒதுக்கி விட முடியாது.

விஜயகாந்த் தன்னை ஒரு சக்தியாக இந்த தேர்தலில் நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறார். அது தேர்தலில் வெற்றி என்பதை விட கணிசமாக வாக்குகளை பெறுவது அவரது குறிக்கோளாக இருக்கிறது. இந்த கணிசமான வாக்குகளை வடமாவட்டங்களில் பெற்று விட முடியும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இதற்கு குமுதம், தினமலர் போன்ற பத்திரிக்கைகளும் தூபம் போட்டுள்ளன. குமுதம் தன்னுடைய கருத்து கணிப்பில் வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு பல தொகுதிகளில் 10-15% வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

விஜயகாந்த்திற்கு வடமாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ரஜினியை விட ஆதரவு அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நெய்வேலியை ஒட்டிய ஊர் விருத்தாசலம் என்பதால் இங்கிருக்கும் சில கிராமங்களின் அறிமுகம் எனக்கு உண்டு. இங்கிருக்கும் பல இளைஞர்கள் விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதாவது 30வயதிற்குட்பட்ட பலர் விஜயகாந்தின் ரசிகர்கள். இதற்கு அடுத்த நிலையில் தான் ரஜினி, சரத்குமார் போன்றோர் உள்ளனர். இங்கு பலருக்கும் ரசிகர்கள் உண்டு. எந்த நடிகர்களுக்கும் ரசிகர்கள் பஞ்சம் ஏற்படுவதில்லை. விஜய், அஜித், விக்ரம் தொடங்கி சிலம்பரசன், தனுஷ் வரை அனைவருக்கும் ரசிகர்கள் உண்டு. இவர்களிடையே விஜயகாந்த்தின் ரசிகர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.

விஜயகாந்த் ரசிகர்களில் அதிகளவில் வன்னியர்கள் குறிப்பாக பாமகவினர் இருப்பதாக பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. இருக்கலாம். பிற கட்சியினரும் இருக்கலாம். குறிப்பாக திமுகவினர் இருக்கலாம். இவர்களில் பலர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்திருக்கலாம். சிலர் தங்களுடைய சாதி மற்றும் கட்சி அபிமானத்தால் பாமக, திமுக ஆகிய கட்சிகளில் தொடர்ந்து கொண்டும் இருக்கலாம். 90% விஜயகாந்த் ரசிகர்கள் விஜயகாந்த் கட்சியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மொத்தமாக விருத்தாசலத்தில் 5000பேர் இருக்கலாம்.

இதை மட்டுமே கொண்டு விஜயகாந்த் களத்தில் இறங்குவாரா ? அதுவும் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் இங்கு தன்னுடைய பலத்தை நிருபித்து இருக்கும் பாமகவை எதிர்த்து எந்த தைரியத்தில் விஜயகாந்த் களத்தில் இறங்குகிறார் ?

பாட்டாளி மக்கள் கட்சி வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் தொகுதிகளில் விருத்தாசலம் முக்கியமான தொகுதி. இங்கிருக்கும் பல கிராமங்கள் முழுக்க முழுக்க வன்னிய இன மக்கள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் ஆகும். பல கிராமங்களில் பிற கட்சியினரை வாக்கு சேகரிக்க கூட விடுவதில்லை. அப்படியான ஒரு கிராமம் தான் ஆதாண்டர்கொல்லை என்னும் கிராமம். இது எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். இங்கு ஒரு சில ஓட்டுகளை தவிர மொத்த ஓட்டுகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் விழும். இங்கு பிற கட்சியினர் எவரும் வாக்கு சேகரிக்க கூட செல்வதில்லை. இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவருமே தீவிர பாமக தொண்டர்கள். இவ்வாறான பல கிராமங்களை உள்ளடக்கியது தான் விருத்தாசலம் தொகுதி. இந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமத்து வாக்குகள் தான்.

1991ல் தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தனித்து போட்டியிட்டு இங்கு சுமார் 37,634 ஓட்டுகளை பெற்று இரண்டாமிடம் பெற்றது. அந்தக் கட்சியின் அப்போதைய தலைவரும் பின்பு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவருமான தீரன் இங்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜீவ் காந்தி அனுதாப அலையில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுகவிற்கு மூன்றாமிடம் கிடைத்தது.

1996 தேர்தலில் கடுமையான ஜெ எதிர்ப்பு அலையில் பாமகவின் வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி சுமார் 42,218 ஓட்டுகளைப் பெற்றார். இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு இரண்டாமிடத்தை பெற்றது. தமிழகமெங்கும் மிக எளிதாக வெற்றி பெற்ற திமுக இங்கு போராடி 6885 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு பாமகவின் செல்வாக்கு தவிர டாக்டர் கோவிந்தசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய காரணம். டாக்டர் கோவிந்தசாமி இங்கு மிகவும் பிரபலமான டாக்டர். குறிப்பாக கிரமத்து மக்களிடையே குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு மிக்கவர். இங்கு டாக்டர் கோவிந்தசாமி தான் வெற்றி பெறுவார் என்று அந்த தேர்தலில் கருதப்பட்டது. பல பத்திரிக்கைகளும் அப்படி தான் எழுதிக் கொண்டிருந்தன. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடந்த 2001 தேர்தலில் பாமக-அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி சுமார் 68,905 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சுமார் 61,777 ஓட்டுகளைப் பெற்றது.

இங்கு பலமான கட்சிகள் என்று பார்த்தால் முதல் இடம் பாமகவிற்கு தான். அடுத்த நிலையில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளன. இதற்கு அடுத்த நிலையில் இருப்பவை அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள். காங்கிரசுக்கு இங்கு ஒரளவிற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

முதன் முறையாக திமுக-பாமக இணைந்து இந்த தொகுதியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. பாமகவின் வாக்கு வங்கியாக இங்கு சுமார் 37,000 முதல் 40,000 ஓட்டுகள் உள்ளன. திமுகவிற்கு சுமாராக 30,000 முதல் 40,000 வாக்குகள் உள்ளன. இங்கு காங்கிரசுக்கும் கணிசமான ஆதரவு இருக்கிறது. இதன் படி பார்த்தால் இங்கு பாமக மிக எளிதாக வெற்றி பெற வேண்டும். 2004 பாரளுமன்ற தேர்தலில் கூட இங்கு
திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

ஆனால் பாமகவின் வெற்றிக்கு முக்கியச் சவாலாக இருக்கப் போவது இரண்டு காரணங்கள்

  • பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி
  • விஜயகாந்த் factor (அப்படி ஒன்று இருந்தால்)

பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி எந்தளவுக்கு தொகுதியில் பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருக்கு தொகுதியில் தற்பொழுது கெட்டப் பெயர். தன்னுடைய டாக்டர் தொழிலை மட்டும் பார்க்கிறார். கிராமங்கள் பக்கம் வரவேயில்லை. கிராம மக்களிடம் சரியாக பேசுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மணிமுத்தாறு பாலம் உடைப்பட்டது மிக முக்கிய தேர்தல் பிரச்சனையாக உள்ளது. டாக்டர் ராமதாசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் மட்டுமே டாக்டர் கோவிந்தசாமிக்கு தேர்தலில் சீட் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்தால் அதற்கு முக்கிய காரணகர்த்தா டாக்டர் கோவிந்தசாமி தான்.

அடுத்ததாக சொல்லப்படுவது விஜயகாந்த factor. அவரின் ரசிகர் மன்றத்தினர், சினிமா கவர்ச்சி தவிர கிராமத்து மக்கள் டாக்டர் கோவிந்தசாமி மேல் உள்ள அதிருப்தியை விஜயகாந்த்திற்கு சாதகமாக மாற்றக் கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த்தை அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டியார் இங்கு போட்டியிட வைத்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓரளவிற்கு கணிசமான வாக்குகளை விஜயகாந்த் பெறக்கூடும் என்று பண்ருட்டியார் நினைத்திருக்க கூடும்.

அதே சமயத்தில் இங்கு முக்கிய போட்டி பாமகவிற்கும் அதிமுகவிற்கும் தான். ஆனால் அதிமுகவில் அதிகம் அறிமுகமில்லாத வேட்பாளர் களமிறங்கி இருப்பது பாமகவிற்கு சாதகமான அம்சம். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் என்று இங்கு அழைக்கப்படும் ஆர்.டி.ரங்கநாதன் களமிறங்கி இருந்தால் அதிமுகவிற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும்.

மொத்தத்தில் வி.ஐ.பி தொகுதியாக மாறியிருக்கும் விருத்தாசலத்தில், பாமக தேர்தல் முன்பு வரை தன்னுடைய தோழனாக இருந்த திருமாவளவனின் இழப்பை முக்கியமாக உணரும். பாமக தன்னுடைய தனிப்பட்ட பலத்தை ஓரளவிற்கு இழந்தாலும் திமுக, காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணி பலத்துடன் இருப்பதால் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.

விடுதலைச் சிறுத்தைகள் இங்கு பாமகவிற்கு உதவுக்கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.விஜயகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதால் இது நாள் வரை ரசிகர் மன்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் பாமகவிற்கு Cross-voting செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

"கேப்டன்" தன்னுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்புகிறேன். இரண்டாமிடம் எதிர்பார்க்க முடியாது.

இரண்டாமிடம் அதிமுகவிற்கோ, பாமகவிற்கோ தான்.

(ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய அப்பாவின் கணிப்பு சரியாக அமைந்திருப்பதை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஒரு வியபாரியாக இருப்பதால் பலதரப்பு மக்களிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் நிற்கிறார் என்றதும் ஒரு ஆர்வத்தில் உடனே என்னுடைய அப்பாவையும், விருத்தாசலத்தில் இருக்கும் சில நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். அவர்கள் கொடுத்த தகவல்களை என்னுடய கணிப்புகளுடன் கலந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்)

மேலும் படிக்க...

தமிழக கஜானாவிற்கு ஆபத்து

2ரூபாய்க்கு அரிசி, "பெண்களின் பொது அறிவை உயர்த்துவதற்காக" வீட்டிற்கு ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ஊதிய உயர்வு (இன்னும் இந்த பரிந்துரைகள் வெளியாக வில்லை என்று நினைக்கிறேன்) என கலைஞர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமாக வெளியிட்டு இருக்கிறார்.

எல்லாம் சரி, தமிழக அரசின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி யோசிக்க வேண்டாமா ?

கலைஞர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினம். சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) அரசியல் கட்சிகள் இவ்வாறு சகட்டுமேனிக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து மாநில அரசின் கஜானாவை காலி செய்வதால் சில நிதிக் கட்டுபாடுகளை விதித்திருக்கிறது.

ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி முடிகிற சமயத்தில் இவ்வாறு அறிவித்து விட்டு தப்பித்து விடலாம். ஆனால் புதியதாக அமையும் அரசு இவ்வாறு செய்வது மிகவும் கடினம். அதுவும் தவிர மாநிலத்தின் பொருளாதாரத்தை இது கடுமையாக பாதிக்கும். ஜெயலலிதா சரமாரியாக அறிவித்த அறிவிப்புகளுக்கு பதிலடி கொடுக்க கலைஞர் இவ்வாறு செய்திருக்கிறார்.

கலைஞரின் இந்த அறிவிப்புகள் குறித்து பிறகு எழுதுகிறேன்.

ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் குறித்து முன்பு நான் எழுதிய ஒரு பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.



இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல "Populist" நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் - Hindu, That's Tamil)

இந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான அலையோ, எதிர்ப்பு உணர்வோ இல்லை. ஆனாலும் ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் காலங்களில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை வழங்கியது, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஞ்சி மடத்தின் ஆலோசனையின் பேரில் கொண்ட வரப்பட்டதாக கூறப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கிராமக் கோயில்களில் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டுவரப்பட்ட தடைச்சட்டம் போன்றவையும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அதிமுக கடந்த பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. பாரளுமன்ற தேர்தல் தோல்விக்கு திமுகவின் மெகா கூட்டணி தான் முக்கிய காரணம். ஆனாலும் அதிமுக அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக தமிழகத்தின் நிதிநிலைமைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதனை ஒவ்வென்றாக விலக்கிக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிதி நிலைமையாவாது வெங்காயமாவது என்ற நிலைக்கு சென்று விட்டார் போல தெரிகிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.



ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

தமிழகம் ஒரு "fiscal bankruptcy''யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

திமுக அரசு எடுத்த பல "Populist" அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை. மேலும் படிக்க...