Monday, March 21, 2005

மூலிகைக் குழந்தைகளும், கரைந்து போகும் லட்சங்களும்

இந்த வார ஆனந்தவிகடனில் மூலிகைக் குழந்தைகள் பற்றியும், சித்த மருத்துவர் டாக்டர் ஜமுனா பற்றியும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது

மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் குழந்தை பேறுக்காக கோயில் குளம், மருத்துவமனைகள் என அலைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று பல வருடங்கள் தவம் கிடக்கும் இவர்கள் பல இலட்சங்களை பல மருத்துவமனைகளிலும், கோயில் உண்டியலிலும் கொட்டியிருக்கிறார்கள். சிலர் குழந்தைகளை தத்து எடுத்தாலும் பலருக்கு அந்த மனம் வருவதில்லை. தன் ரத்தத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதில் எந்த தவறும் கிடையாது. தத்து எடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும். யதார்த்த வாழ்க்கையில் நிறைய பேருக்கு அந்த மனம் வருவதில்லை.

குழந்தை பிறக்காமைக்கு பெண்கள் தான் காரணம் என்று ஆண்கள் தப்பித்துக் கொண்டிருந்த காலம் மாறி இன்று குழந்தை பிறக்காத தம்பதியரில் பெரும்பாலும் ஆண்களுக்கு தான் பிரச்சனை இருக்கிறது. எல்லா மருத்துவர்களும் ஆண்களின் விந்தணு
சோதனையை தான் முதலில் வலியுறுத்துகிறார்கள்.



குழந்தை இல்லாத தம்பதியினர் மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. வீட்டில் இருப்பவர்கள் "எப்பொழுது எனக்கு ஒரு பேரனை பெற்றுக் கொடுக்க போகிறாய்" என்பதில் தொடங்கி சமூகத்தில் இருப்பவர்கள் "ஏதாவது விஷேசம் உண்டா" என்று கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இவர்கள் படும் சங்கடம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மனரீதியாகவும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பெண், மலடி என்ற பழிச் செல்லுடன் காலங்காலமாக பல அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். சொந்த வீட்டில் நடக்கும் விஷேசங்களில் கூட இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். காரணம் குழந்தை பேறு இல்லை என்ற குறை. ஆணின் குறை வேறு விதமாக கவனிக்கப்படுகிறது.

தன் கணவனுக்கு குறை இருந்தாலும் அதனை தனக்கு தான் குறையுள்ளது போல பல மனைவிகள் வெளியே காட்டிக் கொள்வார்கள். ஏனெனில் குறையுள்ள ஆணின் ஆண்மை இங்கு சந்தேகத்திற்குள்ளாகிறது. பல நேரங்களில் கேலிப் பொருளாகவும் பேசப்படுகிறான்
(ரஜினி நடித்து அபத்தமாக எடுக்கப்பட்ட எஜமான் படம் போல). குழந்தை இல்லாமையுடன் ஒரு பெண்ணுக்கு அவன் கொடுக்ககூடிய சுகமும் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மனரீதியாக இந்த பாதிப்புகளை ஆண் எதிர் கொள்ளும் பொழுது அவனால் இயல்பாக உடலுறவில் இயங்க முடியாமல் போகும் நிலையும் ஏற்பட்டு பல குடும்பங்களில் கணவன் மனைவி இடையே பிரச்சனை உண்டாகிறது.

ஆணா, பெண்ணோ யாருக்கு குறை இருந்தாலும் அதனை சரியாக புரிந்து கொண்டு பக்குவமாக அவர்களை கையாள தெரியும் அளவுக்கு வாழ்க்கை துணை அமைவது முக்கியமானது. வாழ்க்கை துணை இதனை சரியாகப் புரிந்து கொள்ளாத பட்சத்தில் குறையிருக்கும் ஆணா, பெண்ணோ பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பல திருமணங்கள் முறிந்துப் போய் இருக்கின்றன.



ஆணுக்கு உயிரணு எண்ணிக்கை குறைவாக இருத்தால், உயிரணு பூஜ்யமாக இருப்பது பெண்ணுக்கு கருக்குழாய் அடைப்பு, கரு முட்டை வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இதற்கென சரியான சிகிச்சை முறைகளே இல்லை என்று சொல்லலாம். அலோபதியில் இந்தக் குறைகளுக்கு ஒரே தீர்வு டெஸ்ட் டியூப் பேபி மட்டும் தான். இதற்காகும் செலவுகளும் மிக அதிகம். இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட எவ்வளவு பணம் கொட்டவும் இவர்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். நிலம், நகை, வீடு என அனைத்தையும் விற்று சிகிச்சைக்காக செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் 1.5 முதல் 2 லட்சம் வரை செலவாகிறது. வெற்றி வாய்ப்புகளும் குறைவு தான்.

இந்த நிலையில் தான் சித்த மருத்துவத்தை நிறைய தம்பதியினர் நாடுகிறார்கள். இப்பொழுது பல சித்த மருத்துவர்கள் மூலை முடுக்கெல்லாம் தோன்றியிருக்கிறார்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் கொடுக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் முறையான சித்த மருத்துவர்களும் இல்லை. என் நெருங்கிய உறவினர் ஒருவர். D.Pharm முடித்து விட்டு ஒரு மருந்தகத்தை நடத்திக் கொண்டிருந்தார். எப்படி சித்த மருத்துவர் ஆனார் என்றே எனக்கு இன்னமும் புரியவில்லை (இந்தப் பதிவையெல்லாம் படிக்க மாட்டார் என்று நம்பிக்கையில் தான் எழுதுகிறேன்). RIMP என்ற சான்றிதழையும் வாங்கியுள்ளதாக கூறினார். அது என்ன சான்றிதழ் என்று எனக்கு தெரியவில்லை. தான் இன்னும் சில வருடங்களில் ஜமுனா போல பெயர் வாங்கி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்படியே சில வருடங்கள் கழிந்து விட்டது. இவருக்கும் சில பேஷண்ட்ஸ் இருக்கிறார்கள். இவர் மூலம் சிகிச்சை பெற்று குழந்தை பேறு உண்டானவர்களும் இருக்கிறார்கள். சிலர் பல மருத்துவர்களிடம் சென்று அங்கெல்லாம் பலனில்லாமல் என் உறவினரிடம் வந்து குழந்தை பேறு உண்டானதாகவும் கூறினார்கள். ஆனால் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களை விட சிகிச்சை பலனளிக்காதவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

எந்த மருத்துவரின் வெற்றியையும் அவர் எவ்வளவு குழந்தைகளை பெற வைத்துள்ளார் என்ற எண்ணிக்கையை விட எவ்வளவு சதவீதம் பேஷண்ட்ஸ் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பதைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும். அப்படி கணக்கிட்டால் 10% கூட இருக்காது என்றே நான் நினைக்கிறேன். இந்த வகையில் தான் பல மூலிகைக் குழந்தைகளை பெற வைத்துள்ளேன் என்ற டாக்டர் ஜமுனாவின் வாதத்தை நான் சந்தேகிக்கிறேன். அவர் மருத்துவமனை அமைந்திருக்கும் தாம்பரத்தில் நான் வசிப்பதாலும், அவரிடன் சிகிச்சை பெற்றிருக்கும் சிலரை நான் அறிந்திருக்கிறேன் என்ற வகையிலும் எனது சந்தேகம் வலுவானது என்று நான் நம்புகிறேன்.

ஆணின் விந்தணு எண்ணிக்கை ஏறி இறங்கும் தன்மை கொண்டது. ஒரே சீராக இருக்காது. சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் குறையுள்ள ஆணின் விந்தணு ஒரு நார்மலான ஆணின் விந்தணு எண்ணிக்கையை அடையும் வாய்ப்பெல்லாம் கொஞ்சமும் கிடையாது. ஒரு நார்மல் ஆணுக்கு 25 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இவ்வளவு எண்ணிக்கையில் விந்தணு இருந்தால் தான் குழந்தை பிறக்க முடியும் என்ற வரையரையும் கிடையாது. விந்தணு குறைவதற்கு முக்கிய காரணமே இன்றைய வாழ்க்கை சூழல் தான். மிக அதிகமான Stress உள்ள வேலையில் இருப்பவர்களுக்கும், வெப்பமான சூழலில் வேலை பார்ப்பவர்களுக்கும் விந்தணு குறையும் வாய்ப்புகள் உண்டு



நல்ல சூழல், ஆரோக்கியமான உணவு, பிரச்சனையில்லாத வாழ்க்கை, இதனைக் காட்டிலும் நமக்கு குழந்தை பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பொழுது குறைவாக விந்தணு உள்ள ஆணுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் இந்த லக்கி பிரைஸ் சில நேரங்களில் சிலருக்கு அமைந்து விடுகிறது. After all பெண்ணின் கரு முட்டையுடன் இணைய மில்லியன் விந்தணுக்கள் தேவையில்லை. ஒரு விந்தணு தான் தேவை.

இப்பொழுது இருக்கும் பல டாக்டர்களின் சகிச்சை முறையை பார்க்கும் பொழுது எரிச்சலே ஏற்படும். சாதாரண டாக்டர்களை கூட இப்பொழுதெல்லாம் அப்பாயிண்மெண்ட் இல்லாமல் பார்க்க முடியாது. அவர்களுக்கு அவ்வளவு பேஷண்ட்ஸ் இருக்கிறார்களா என்றாலும் கிடையாது. அப்பாயிண்மெண்ட் போன்ற பந்தாக்கள் நிறைய உண்டு. அப்பொழுது தான் ஒரு பெரிய டாக்டர் என்ற எண்ணம் பேஷண்ட்சுக்கு ஏற்படும். சில டாக்டர்களுக்கு உண்மையிலேயே அப்பாயிண்மெண்ட் தேவைகள் இருக்கலாம். ஆனால் நிறையப் பேருக்கு அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.

டாக்டர் ஜமுனாவை பார்க்க அப்பாயிண்மெண்ட் வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு முன்பாக விண்ணபித்து காத்திருக்க வேண்டும். முதலில் அவர் தரும் அப்பாயிண்மெண்டில் சிகிச்சைக்காகும் செலவையும், சிகிச்சை முறைகளையும் மட்டும் தான் கூறுவார். அதன் பிறகு அந்த சிகிச்சை முறையை பற்றியும், செலவாகும் பணம் பற்றியும் இரண்டு பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பி வைக்க வேண்டும் ( நிறைய பேஷண்ட்சை எழுத்தாளராக்கும் நல்ல முயற்சி). அதனை பரிசீலனை செய்து மற்றொரு அப்பாயிண்மெண்ட் தருவார். அப்பொழுது தான் சிகிச்சை தரப்படும். பிறகு மருந்து வாங்குவதற்கு தனி அப்பாயிண்மெண்ட் என்று பல அப்பாயிண்மெண்ட்கள்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. பல இடங்களில் வைத்தியம் பார்த்தார். ஒன்றும் பலனில்லை. கோயில் குளம் என அவர் சுற்றாத இடமில்லை. டாக்டர் ஜமுனாவிடமும் சகிச்சை பெற்றார். டாக்டர் ஜமுனாவின் சிகிச்சை முறையே கொஞ்சம் வித்தியாசமானது தான். முழு பத்தியச் சாப்பாடு தான். அதுவும் சட்டியில் செய்து தான் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துவார். எவர்சில்வர் போன்ற பாத்திரங்களை எல்லாம் உபயோகப்படுத்தக் கூடாது. இக் கால வாழ்க்கை முறையில் இதனை பின்பற்றுவது மிகவும் கடினம். ஆனாலும் அதனை அப்படியே பின்பற்றினார். ஒரு வருட சிகிச்சைக்காகும் செலவு மட்டும் 1லட்சம் வரை இருக்கும். இரண்டு வருடங்கள் சிகிச்சை மேற்கொண்டார். அவர் இருப்பதோ நெய்வேலியில். சென்னைக்கும் நெய்வேலிக்கும் குழந்தை பேறுக்காக அலைந்தார். ஒரு பலனும் இல்லை. இது போல எனக்கு தெரிந்த சிலர் அலைந்த அலைச்சலை கண்கூடாக பார்த்திருக்கிறேன். வேதனையாக இருக்கும்.

இந்த சிகிச்சைகள் மூலம் சிலருக்கு குழந்தை பிறந்திருக்கலாம். பலருக்கு குழந்தை பிறப்பதில்லை. சிறிய வயதினருக்கும் இதே நிலை தான். சிலருக்கு பிறந்த குழந்தையைத் தான் தனது சாதனையாக பல மருத்துவர்கள் கூறிக்கொள்கின்றனர். அதற்கு அந்த மருத்துவமுறை தான் காரணமா என்பதே விவாதத்திற்குரியது.

ஆனந்தவிகடன் கட்டுரையில் வரும் மற்றொரு வாசகம்

//

மூலிகை மருத்துவம் மூலம் பிறக்கும் குழந்தைகள் அத்தனைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பெற்றோரை விட அதிகப்படி நிறம், துறுதுறுப்பு, சராசரியைவிட புத்திசாலித்தனம் ஆகியவை காணப்படுகின்றன

//

இன்று பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளின் பொதுவான குணம் நல்ல துறுதுறுப்பு, புத்திசாலித்தனம் போன்றவை தான். இதனை மூலிகைக் குழந்தைகளின் தனித்துவம் என்று ஆனந்தவிகடன் கூறுவது தான் ஆச்சரியம்.

எது எப்படியோ ஒரு சரியான சிகிச்சை முறை இல்லாத நிலையில் குழந்தை பேறுக்காக அலையும் பலர் தங்களின் சேமிப்புகளையும் இழந்து பல விதமான மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள் என்பதே உண்மை.




Cloning போன்ற அறிவியல் ரீதியான வளர்ச்சியிக்கிடையிலேயும் இன்றும் இயற்கையான பல விஷயங்களை மருத்துவத்தால் வெற்றிக் கொள்ள முடியவில்லை என்னும் பொழுது தங்களுக்கு குழந்தை வேண்டி கோயில், குளம் என்று மக்கள் சுற்றுவதிலும் ஆச்சரியம் இல்லை தான்.

(வலைப்பதிவு செய்யும் டாக்டர்கள், இது பற்றி அறிந்தவர்கள் இக் கட்டுரையில் தவறிருந்தால் சுட்டிக்காட்டலாம்)

6 மறுமொழிகள்:

rv said...

நனறாக எழுதியுள்ளீர்கள். மீடியாக்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் பணத்துக்காக சமூக அக்கறயையின்றி இப்படி நடந்து கொள்வது வருந்தத்தக்கது. இந்த விஷயத்தைப் பற்றி போனவருடமே நான் எழுதியது .

இங்கே

2:21 AM, March 21, 2005
Pavithra Srinivasan said...

Ah, excellent post. சதவிகிதக் கணக்கு பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிக மிக உண்மை. ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்துக்கொண்டு மொத்தமாக ஒரு முடிவுக்கு வருவதில் அர்த்தம் இல்லைதான். Ditto about the children being born with extra intelligence and good looks :-)

4:45 AM, March 21, 2005
சுந்தரவடிவேல் said...

விரிவாய் அலசியிருக்கிறீர்கள். எல்லா மூலிகை வைத்தியர்களும் வெத்து வேட்டுக்கள் என்பதான ஒரு மனநிலையைப் படிப்பவர்களுக்கு இது ஊட்டிவிடுமோ என்ற அச்சத்திலேயே இவ்விளக்கத்தை எழுதுகிறேன்.

RIMP என்பது Registered Indian Medical Practioner என்பதைக் குறிக்கும். இதற்குள் நிறைய குளறுபடிகள் நடக்கின்றனவென்றாலும் நாம் இங்கு சில விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் இந்த டாக்டர்கள்தான் தலைவலிக்கும் சுரத்துக்கும் அடிபட்டதற்குக் கட்டுக் கட்டவும், விஷம் குடித்தவர்க்கு வாந்தி எடுக்க வைத்துப் பக்கத்தூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்புவதும். எல்லா குக்கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்புலன்ஸ் அல்லது எல்லாக் குடிகளுக்கும் சாரிடான், மெட்டாசின் தெரியும் வரைக்கும் இந்த டாக்டர்கள்தான் இவர்களது குறுகிய கால வைத்தியர்கள். இவர்கள் வாங்கும் ஊதியம் 5 அல்லது 10 ரூபாய்கள், அல்லது அவர்களது உண்டியலில் ஒரு காணிக்கை. இவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதில்லை. இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது, ஊசி போடக் கூடாது. ஆனால் மக்களின் உடனடித் தேவைக்காக இவர்கள் இதைச் செய்யத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு நிறைய ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமலிருக்கலாம். ஆனால் இத்தகைய தவறுகள் "நவீன" மருத்துவர்களாலும் செய்யப் படுகின்றன. வயாக்ஸ் விசயத்தில் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்த ஆங்கில மருந்தும் பக்க விளைவுக்கு அப்பாற்பட்டதில்லை. எம்.டி அதைத் தெரிந்தோ (தெரியாமலோ) கொடுக்கிறார். ஆர்.ஐ.எம்.பி யும் அதைத் தெரிந்தோ தெரியாமலோ கொடுக்கிறார். அதற்காக அவர்கள் எல்லோரும் செய்வதை நான் நியாயப் படுத்துவதாக நினைக்க் வேண்டாம். பணத்துக்காக மக்களின் நலத்தோடு விளையாடுவதென்பது கோயில்களில் நடக்கும் கொள்ளையைப் போன்றதே.

அடுத்ததாக மூலிகைகளைப் பற்றிக் கொஞ்சம். நமது தமிழ் மூலிகை மருத்துவம் எவ்வளவு செறிவானது என்பதை நாம் படிக்க வில்லையென்றாலும் கேள்வியாவது பட்டிருப்போம். அகத்தியரில் தொடங்கி 18 சித்தர்கள் வளர்த்தெடுத்த மருத்துவ முறைகள். கண் நோய் 96 என்று அவர்களுக்குத் தெரியும். சிறுநீரின் நிறம், மணம், குணம் கொண்டு இந்தாளுக்கு இன்னதென்று கணிக்கத் தெரியும். வாத, பித்த, கப நாடிகளின் பிறழ்வாலேயே (முக்குண தோசம்) பிணிகள் வருகின்றனவென்பதும், எந்தெந்த மூலிகைக்கு வாத/பித்த/கப குணம் என்றும் எதனை எப்படிக் கையாள்வதென்றும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். இயற்கையாய்க் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு அவர்கள் மருத்துவம் செய்தார்கள். அது பலனளிக்காத போது உப்புக்களைப் பயன்படுத்தினார்கள். அதுவும் வேலை செய்யவில்லையென்றால் மட்டுமே கனிமங்களைச் சுத்திகரித்துப் பயன்படுத்தினார்கள். கனிமங்கள் அவர்களது கடைசி ஆயுதம். அவற்றின் பக்க விளைவுகளையும், மாற்றுக்களையும் தெளிவாகவே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வாளால் அறுத்துச் சுடுதலும் தெரியும். நம் தவறு என்னவென்றால் இவ்வறிவைப் பேணாமல் மேற்கத்திய மருந்துகளுக்கும், அறிவியல் முறைகளுக்கும் கேள்வியின்றி நம்மைப் பலியாக்கிக் கொண்டு விட்டோம். அமெரிக்காவில் இயற்கை மருத்துவம் இப்போது பிரபலமடைந்து வருகிறது. இதைப் பணக்காரர்கள்தான் செய்து கொள்ள முடியும். நாலு வல்லாரை மாத்திரைகளைப் போட்ட குப்பியை 20 டாலருக்கு அவர்கள்தான் வாங்கிக் கொண்டு போகிறார்கள். நம்மிடம் அது இருந்தும் அதை வளர்த்தெடுக்காமல் இருக்கிறோம். இன்றும் புற்று நோய் தொடக்கம் கல்லீரல் நோய் என்று பல வகையான நோய்களுக்கும் மருந்துகளைத் தாவரங்களிலிருந்தே பிரித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மருந்துத் தாவரங்களை எப்படி வளர்ப்பது, பாகங்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு எப்படி அனுப்புவது என்பதற்கு நம்மூரில் வகுப்பு நடத்துகிறார்கள். கத்தாழையும், அமுக்குராவும் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. நாம் இவர்களது ஸ்டீராய்டுகளை அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். BSMS என்றொரு சித்த மருத்துவப் பட்டம் உண்டு. ஏதோ ஒன்றிரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும். பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளில் இவர்களில் ஒருத்தர் உட்கார்ந்து மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். இம்ப்காப்ஸ் (Indian Medical Practioners Cooperative Pharmacy and Stores) என்றொரு நிறுவனம் இம்மருந்துகளைத் தயாரித்து விற்கிறது. மத்திய அரசு பேருக்கு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை வைத்திருக்கிறது. இம்மருத்துவமும் ஒரு வரலாறு, அறிவியல், சமூகவியல். தமிழரின் சொத்து. இதைப் பேணுதலும் போற்றுதலும் நம் கடமையே.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது அதிலிருக்கும் குறைகளைக் களைவதும், இன்னும் நமக்குத் தெரியாதவற்றை அறிவதுமே. அல்லது நாட்டு வைத்தியர்களெல்லாம் மட்டம், அவர்களிடம் மருந்து சாப்பிடாதீர்கள், மூலிகைகளெல்லாம் சும்மா என்று "அறிவுறுத்தாமலிருத்தல்" கூடப் பயன் தருவதே! இது ஒரு விரிவான அலசுதலுக்கான விசயம். சித்த வைத்தியம் vs "modern"வைத்தியம் என்று இன்னும் எழுத நிறைய இருக்கிறது, நம்மில் பலருக்கும்!

6:57 AM, March 21, 2005
சுந்தரவடிவேல் said...

சசி, மேற்கண்ட மறுமொழியை இங்கும் பதிந்துள்ளேன்.
http://sundaravadivel.blogspot.com/2005/03/blog-post_21.html

7:43 AM, March 21, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

என் கட்டுரை நான் எழுத நினைத்த போக்கில் இருந்து மாறி விட்டதோ என்று எண்ணும் படியாக இருக்கிறது உங்களின் பின்னூட்டம்.

நான் தமிழ் மருத்துவத்தைப் பற்றியோ, மூலிகை மருத்துவத்தை பற்றியோ இங்கு அலச முயலவில்லை. அது போல அலோபதியை விட மூலிகை மருத்துவம் தாழ்வானது என்றும் விளக்கவில்லை.

அலோபதி மருத்துவத்தில் டெஸ்ட் டியூப் பேபியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நான் என் கட்டுரையில் எழுதியுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கு அலோபதி, சித்தா என எந்த மருத்துவத்திலும் மருந்தில்லாத நிலையையுமே சுட்டிக் காட்ட
முயன்றுள்ளேன்.

இது தவிர மருத்துவர்கள் எந்த வகையில் தங்கள் வெற்றியை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறேன்.

குழந்தைக்காக ஏங்கும் தம்பதியரை சித்தா/அலோபதி மருத்துவர்கள் Exploit செய்வதாகவே நான் நினைக்கிறேன். நான் பார்த்தவரையில் அலோபதி மருத்துவத்தை நாடுவதை விட சித்தா மருத்துவத்தை நாடும் போக்கு தான் நிறைய பேரிடன்
காணப்படுகிறது. காரணம் அலோபதியில் ஒட்டு மொத்தமாக கேட்கப்படும் நிறையத்
தொகைக்கு பயந்து போய் சித்தா மருத்துவரிடன் சிறுக சிறுக பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் இரு முறை டெஸ்ட் டியூப் பேபிக்கு முயன்று முதல் முறை தோல்வியடைந்து இரண்டாம் முறை பெற்றுள்ளார். இதற்கு செலவிடப்பட்ட தொகை மட்டும் சுமார் 4 லட்சங்கள். ஒரு நடுத்தர வர்க்க இந்தியனுக்கு இது பெரும் தொகை.

இது போல ஆண்டுக்கணக்கில் சித்தா முறையில் முயற்சி செய்து ஒரு பலனும் இல்லாதவர்களே அதிகம். அதற்கும் சில லட்சங்கள் செலவாகிறது.

நீங்கள் கூறுவது போல மூலிகை மருத்துவம் நம் பாரம்பரிய வழியில் வந்த சிறந்த மருத்துவம் என்றாலும் குழந்தைப் பேறு போன்ற பிரச்சனைகளுக்கு இதில் சரியான
நிவாரணம் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே சித்த மருத்துவத்தில் நிவாரணம்
இருந்தாலும் அதற்கு சரியான மருத்துவர்கள் ஒருவர் கூட, I Repeat ஒருவர் கூட
தற்பொழுது இல்லை என்பது தான் உண்மை.

அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்படி யாருக்கும் என்னால் அறிவுரை கூற முடியாது.

உங்கள் கருத்து நம் பராம்பரிய மருத்துவ முறை என்ற உணர்ச்சி பெருக்கில் இருந்தாலும் யதார்த்த நிலையைச் சார்ந்து இல்லை

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

8:55 AM, March 21, 2005
Thangamani said...

சசி, இது சுந்தரின் பதிவில் நான் பின்னூட்டமிட்டது. அதை இங்கும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன் நன்றி!

_____

நல்ல பதிவு. இது வெங்கட்டின் பதிவில் இட்ட பின்னூட்டத்தின் பகுதி.

//நமது கல்வியமைப்பு முறை தன்னை, தன்னை மட்டுமே எதையும் பயன்படுத்தி ஒருவனை முன்னேற தூண்டுவதாக இருக்கிறது. இது ஒரு நாட்டின் மக்கள், அவர்கள் பேசும் மொழி, அவர்களது மருத்துவ முறை, விவசாயமுறை, வளங்கள், பாரம்பரிய செல்வங்கள் இவை பற்றிய எந்த அறிவையும் அந்நாட்டில் பயிலும் மாணவன் ஒருவனுக்கு வழங்காததைப்போலவே அந்நாட்டின் இருண்டகாலங்கள், அதன் சமூக வாழ்வில் இருந்த, இருக்கிற கொடுங்கோண்மைகள், அநீதிகள், அது மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும் இழைத்திருக்கிற அநீதிகள் பற்றிய அறிவையும், புரிதல் எதையும் வழங்கவில்லை.//


நாட்டுவைத்தியம் (சித்த வைத்தியம்) நமது வளமிக்க பகுதிகளில் ஒன்று. அது மிக அழகாக அறிவியற்பூர்வமாக ஆரோக்கியத்தை அணுகுகிறது. ஆரோக்கியமாக இருப்பதை அணுகுவதும், நோயை முன்வைத்து ஆரோக்கியத்தை அணுகுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. முன்னது உடலுக்குள் இருக்கும் சமநிலை, மற்றும் உடலுக்கும் இயற்கைச்சுழலுக்கும் இடையே சமநிலை இவற்றை பேணுவதால் உடலை உறுதியோடு, தொற்றை எதிர்ப்பதற்கு வலிவுள்ளதாக ஆக்குவதும், அப்படி சமநிலை பேண மூலிகைகளை உபயோகிப்பதும் வழக்கமாகக் கொண்டது. அதையும் தாண்டி நோயுறும்போதே அது நவபாஷாணங்கள், உலோகங்கள் இவற்றை மருந்தாக பயன்படுத்துகிறது. இதிலும் சமீப காலத்தில் இப்படி உலோகங்களைக் கொண்ட மருந்தினால் உடல் (சிறுநீரகம்) பாதிக்கப்படுகிறதாய் ஒரு குற்றச்சாட்டு ஆங்கில மருத்துவர்களால் வைக்கப்பட்டது; அதுகூட எம்ஜியாரின் நலக்குறைவின் பின்னேயே பிரபல்யமடைந்தது. இதற்கு முறையான ஆய்வு ஆதாரங்கள் உண்டா எனத் தெரியவில்லை.
தங்க, வெள்ளி, தாமிர, நாக பஸ்பங்களும், பாதரசத்தைக் கட்டி செய்யப்படும் சில மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உண்டு. இவைகள் செய்யப்படுவதற்கு மிகத்தெளிவான முறைகள் உண்டு. இவைகள் குணப்படுத்தும் நோய்கள், மருந்தளிக்கும் விதம் இவை மிகத்தெளிவாக இவைகளை ஒழுக்குகான தரக்கட்டுப்பாட்டு முறையில் தயாரிப்பதும் அவற்றின் தரத்தை உறுதி செய்வதும் மட்டுமே அரசு செய்யவேண்டியது.

மேலை நாட்டு மருந்து கம்பெனிகள் இப்படி மருத்துவத்தை தங்கள் வயப்படுத்தி வருகையிலும், மேலும் மூலிகை மருந்துகளை பழங்குடியினர், நாட்டு வைத்தியர்கள் மூலம் அறிந்து அதை தங்கள் பரிசோதனை சாலையில் செய்து உறுதி செய்தபின் அதை காப்புறுதி செய்துவிடுகின்றனர். பின் அதை நாம் வாங்க வேண்டியுள்ளது.

மாறாக நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை நாம் வளர்த்தெடுத்தால் அது இந்தியாவின் மிகப்பெரிய வருவாய் வழியாக இருக்கும்.

போன நூற்றாண்டு வரை மேற்குலகம் பால்வினை நோய்களைக் கண்டு அஞ்சி நடுஙிக்கொண்டிருந்தபோது நமது சித்தவைத்திய முறைகளில் அந்த நோய்களைத் தீர்க்கும் வழியிருப்பதும், அதைத் தீர்த்துவந்ததும், இந்த பாதரசம் கொண்ட மருந்துக்களால்தான்.

தேன் துளி (http://padmaarvind.blogspot.com/2005/03/blog-post_17.html) ஆங்கில மருந்துகம்பெனிகள் தங்களது ஆய்வுக்காக இந்திய மக்களை அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்து பயன்படுத்துவதைப்பற்றி எழுதியிருந்தார். எததனை ஆங்கில மருத்துவர்களுக்கு இது போன்ற ஆங்கில மருத்துவங்களின் தீமைகள், அதற்கு நாமளிக்கும் விலை பற்றி தெரியும். சித்த வைத்திய முறைகளைப் பற்றி குறைபேச மட்டுமே தெரிந்த ஆங்கில மருந்துக்கம்பெனிகளின் ஏஜெண்டுகளாய்த் தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.

இந்தியாவுக்கு நமது மருத்துவமுறை ஒரு பெருஞ்செல்வம் தரும் கற்பகமரம். அதை பயன்படுத்துவதும், மாற்றனிடம் தாரை வார்த்துவிட்டு, பின் அவனை கெஞ்சிக்கொண்டிருப்பதும் நமது அணுகுமுறையில்தான் இருக்கிறது.

3:00 AM, March 22, 2005