Tuesday, August 09, 2005

காஷ்மீரின் விடுதலை - 5

காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?


காஷ்மீருக்கு விடுதலை கொடுத்து விடலாமா ? என்னுடைய கையில் அதிகாரம் இருந்தால், காஷ்மீர் மக்களின் விருப்பமும் அதுவாக இருந்தால் நான் அதைத் தான் செய்வேன்.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை.

இன்று காஷ்மீர் பிரச்சனை தேசத்தின் கொளரவ பிரச்சனை. காஷ்மீரை இழக்க இந்தியாவில் யாருமே விரும்பவில்லை. கூகிள் எர்த்தில் காஷ்மீர் இந்தியாவின் பெயரில் இல்லாமல் போனதற்கே உணர்ச்சிவசப்படுபவர்கள் நாம். தென் தமிழகத்திலேயே இந்த உணர்வு என்றால் குஜராத்திலோ, மும்பையிலோ, லக்னோவிலோ, ஜெய்பூரிலோ எழக்கூடிய பிரச்சனைகள், சங்பரிவார் கும்பலின் எதிர்ப்பு போன்றவற்றால் நாட்டில் ஒரு பிரளயமே ஏழக் கூடும்.

அது போல காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கும் கொளரவப் பிரச்சனை. அவர்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் பிரச்சனை நம்வூர் இராமர் கோயில் பிரச்சனையை விட ஒரு படி அதிகமானது. மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அந்த உணர்வுகளை ஓட்டுக்களாக மாற்றுவதற்கு காஷ்மீர் பிரச்சனை அவர்களுக்கு உதவுகிறது, அங்குள்ள பல தீவிரவாத இயக்கங்களுக்கு ஜிகாத் வளர்ப்பதற்கும் இந்த பிரச்சனை அவசியம். காஷ்மீர் நிரந்தரமாக இந்தியாவுடன் இருக்க அவர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். PAKISTAN என்ற எழுத்தில் உள்ள "K" தங்களுக்கு முழுமையாக சொந்தமாகும் வரை அவர்கள் மாறப் போவதில்லை.

பின் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?

இந்தியாவும், பாக்கிஸ்தானும் காஷ்மீரில் பல வருடங்களாக கடைபிடித்து வந்த கொள்கையில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணத்திற்கு தற்பொழுது வந்திருக்கின்றனர். பல வருடங்களாக சண்டையிட்டு கொண்டே இருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற எண்ணத்திற்கு இரு நாடுகளுமே வந்துள்ளது ஆரோக்கியமானச் சூழல் தான்.

காஷ்மீரிகளும் 16 ஆண்டு கால நிம்மதியற்ற வாழ்க்கைக்கு பிறகு நிம்மதியுடனும் துப்பாக்கிச் சத்தம் இல்லாமலும் வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்திருக்கின்றனர். காஷ்மீர் பிரிவினைவாதிகளும் ஒரு தீர்வை கூடிய விரைவில் எட்ட வேண்டும் என்று எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். முழுமையான சுதந்திர காஷ்மீர் என்பது இன்றைய யதார்த்த சூழலில் வெறும் கனவாகத் தான் இருக்க முடியும்.

ஆனால் அனைத்து தரப்பிற்கும் திருப்தி தரக்கூடிய வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா ? மிகவும் சிக்கலான காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியுமா ?

கடந்த ஆண்டு பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் ஒரு திட்டத்தை அறிவித்தார்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக முஷ்ரப் பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை - கில்கிட், முஷ்பராபாத். மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக், பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது.

ஆனால் இதனை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. காரணம் முஷ்ரப்பின் திட்டம் காஷ்மீரை மத ரீதியாக பிளவு படுத்தும் ஒரு முயற்சி என்று இந்தியா நினைத்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் என மூன்று கூறுகளாகத் தான் அம் மாநிலத்தை இந்தியா கருதுகிறது. பூன்ச், கார்கில் போன்றவற்றை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை சார்ந்தது என்பதே இந்தியாவின் எண்ணம்.

ஆனால் முஸ்லீம்கள் பெருவாரியாக இருக்கும் இப் பகுதிகளை தனிப் பகுதியாக முஷ்ரப் பிரித்தார். பாக்கிஸ்தான் அருகில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள முஷ்ரப் நினைப்பதாக இந்தியா சந்தேகித்தது.

முஷ்ரப் திட்டத்தை நிராகரித்த இந்தியா தன் பங்குக்கு ஒரு திட்டத்தை முன்வைத்தது. கடந்த ஆண்டு மன்மோகன் சிங் இதனை வெளியிட்டார். இதன்படி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியா சுயாட்சி வழங்கும். வெளியுறவு, பாதுகாப்பு, தேர்தல், நாணயம், நீதிமன்றம் போன்ற துறைகள் மைய அரசிடம் இருக்கும். பிற அனைத்து துறைகளும் காஷ்மீர் மாநிலத்தின் அதிகாரத்தின் கீழ் இருக்கும். இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் இருந்தாலும், பிற இந்திய மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீர் சுயாட்சியுடன் இருக்கும். அது போலவே பாக்கிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரிலும் பாக்கிஸ்தான் இது போன்ற ஏற்பட்டை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் தங்களுடைய பிடிவாதமான போக்கை ஒரளவுக்கு தளர்த்தி உள்ளது நல்ல அறிகுறி. அதே நேரத்தில் இறுதி தீர்வை உடனடியாக எட்டி விட முடியாது. இடைக்கால தீர்வாக சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

முதல் நடவடிக்கை பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இணைய வேண்டும்.பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்தது போல இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீரும், பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் இணைக்கப்படவேண்டும்.

இது சாத்தியமா ?

நேற்று வரை திருச்சியும், மதுரையும் ஒரே நாடாக இருக்க, திடீரென்று இவை இரண்டும் இரு வேறு துண்டுகளாகி, மதுரையில் இருப்பவர்கள் திருச்சிக்கும், திருச்சியில் இருப்பவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் ?

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கும் மனித உறவுகள் துண்டிக்கப்படும். மகள் மதுரையில் இருக்கலாம். அப்பா திருச்சியில் இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் சந்திக்க கடவுச்சீட்டு பெற்று, விசா கிடைத்து விமானம் ஏறி பல மைல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ? எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பத்திற்கு விமானம் ஏறக் கூடிய வசதி இருக்குமா ?

அது தான் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.



காஷ்மீர் இரு துண்டுகளாகி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இவர்கள் வேண்டுவது எல்லாம், உறவுகளை சுலபமாக பார்க்க ஒரு இணைப்பு பாலம்.

அதன் முதல் படி தான் ஸ்ரீநகர்-முஷ்பராபாத் இடையிலேயான பேருந்து வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏதோ தில்லி-லாகூர் இடையே விடப்பட்ட பேருந்து பயணம் போல அரசியல் லாபத்திற்காக விடப்பட்ட போக்குவரத்து அல்ல.

இந்தியாவின் ஆளுமையில் இருக்கும் காஷ்மீருக்கும், பாக்கிஸ்தான் ஆளுமையில் இருக்கும் காஷ்மீருக்கும் இடையிலேயான பேருந்து போக்குவரத்து. காஷ்மீரிகள் சுலபமாக தங்கள் சொந்தங்களை பார்த்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம். இது தான் காஷ்மீர் பிரச்சனையின் தீர்வு நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் நடவடிக்கை.


இதில் வெற்றி கிட்டுமா ?

இந்த பேருந்தின் முதல் பயணமே தீவிரவாதிகள் இதற்கு எதிராக நடத்திய குண்டுவெடிப்புடன், பலத்த பாதுகாப்புடன் தான் தொடங்கியது

காஷ்மீரிகளின் ஒட்டுமொத்த ஆதரவு பெற்ற இந்த பேருந்து பயணத்தை தீவிரவாதிகள் ஏன் எதிர்க்கிறார்கள் ? எதிர்ப்பவர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளா அல்லது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதிகளா ?

அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்

2 மறுமொழிகள்:

மு. மயூரன் said...

சுயநிர்ணய உரிமை பற்றிய அன்றாட பேச்சுக்களோடும், தேடல்களோடும் போராடிக்கொண்டிருக்கும் தேசத்தை சேர்ந்தவனாய் உங்கள் இந்த பதிவுகளை வரவேற்காமலிருக்க முடியவில்லை.

இந்திய தேசியம் என்ற பெரும் போதைப்பிடிக்குள் நின்றுகொண்டு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை, இந்திய தமிழர்களெல்லாம் மறுத்து நிற்கையில், காச்ஹ்மீரின் சுயநிர்ணயம் பற்றி நீங்கள் பேச முயல்வது மிக மிக முற்போக்கானது.

உங்கள் பதிவுகளை, பல நண்பர்க்ளுக்கும் அறிமுகப்படுத்தியவண்ணமுள்ளேன்.

இதேவாறான, இதிலும் முற்போக்கான பார்வையை நீங்கள் நேபாள மக்கள் புரட்சியின் மேலும் கொண்டிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்

11:20 PM, August 09, 2005
Amar said...

இந்திய தேசத்தின் 'ரா' உதவிய பொது அதன் 'போதை' தெரியவில்லை போலும்.

அது சரி , பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு மாபெரும் பகுதிஐ தன்னோடு இனைத்து கொன்டது.அதன் பெயர் நார்தன் எரியாஸ். Northern Areas - an integral part of Pakistan.

மிச்சம் ஒன்றும் இல்லை , ஒரு சிறு பகுதிதான் சுதந்திர காஷ்மீர் என்று அழைக்கபடுகிறது.

இந்த முஷரப் ஒன்றும் செய்ய முடியாது.எதாவது தீர்வு கன்டால் உடனே அந்த நாட்டில் புரட்சி நடக்கும் , வேறு ஒருவர் ஜனாதிபதி அவார்.

இந்த பேச்சுவார்த்தை எல்லாம் சும்மா உலக நாடுகளை எமாத்த !

5:14 AM, August 10, 2005