Sunday, September 25, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2

இந்திய ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் பற்றி நான் பெரிய அளவில் விளக்கம் தரத் தேவையில்லை. இந்தியப் பங்குச்சந்தை 16,000ஐ எட்டும் என்று செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை எந்தளவிற்கு விற்கும், அது போல பங்குச்சந்தையில் ஊழலா ? என்று கேள்விக்கணையுடன் செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை பரபரப்பாக விற்குமா என்று சிந்தனையில் தான் நிறைய செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியப் பங்குச்சந்தை இந்த ஆண்டு 8000ஐ எட்டும் என்று மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே நம்பப்பட்டது. நான் கூட இது குறித்து அப்பொழுது ஒரு கட்டுரை எழுதினேன்.

எனவே குறியீடு 8000ஐ எட்டியது ஆச்சரியத்தை கொடுக்க வில்லை. ஆனால் அது எட்டப்பட்ட விதம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நிய முதலீடு, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறன.

கடந்த மாதம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி The Economist ல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை கேலி செய்துள்ளது. இது மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் என்றாலும், இந்தக் கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் உள்கட்டமையப்பு குறித்து இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. பல வருடங்களாக பொருளாதாரச் சீர்திருத்தம் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறது. இது தவிர நிலக்கரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்திருப்பதாக The Economist தெரிவிக்கிறது.

இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு கொடுத்து வரும் நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்களை தனியமார் மயமாக்கத்திற்கு எழுந்துள்ள பிரச்சனைகள் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன. இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் இத்தகைய அரசியல் தடைக்கற்களும், மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

இத்தகைய சூழலில் பங்குச்சந்தை எந்தக் கவலையும் இல்லாமல் 8500 புள்ளிகளை எட்டுகிறது. இந்தியப் பங்குச்சந்தை குறியீடு உயர்வது இந்தியப் பொருளாதாரம் உயர்வதின் அறிகுறி என்ற வாதம் நிச்சயமாக சரியானது அல்ல. அது போல இந்தியா ஒளிர்கிறது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.

பின் எதனால் பங்குச்சந்தை உயர்கிறது ?

இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்ல, உலகின் பல பங்குச்சந்தைகளும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசியாவில் இந்தியாவை விட தாய்வான் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் குவிந்து கொண்டு இருக்கிறது.

ஏன் ? அது தான் Global liquidity

இப்பொழுது உலகில் நிலவும் பொருளாதார சூழல் தான் பல பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கியமான காரணம்

அமெரிக்காவின் கையிருப்பில் (Federal Reserve) இருக்கும் டாலர் மற்றும் உலகின் பல நாடுகளின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலவாணி, இவை தான்


Global liquidity எனப்படுகிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 20% அதிகரித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று liquidity இருந்ததில்லை என்று The Economist தெரிவிக்கிறது.

ஏன் இந்த நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது ?

அமெரிக்காவின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக (3.75%) இருக்கிறது. இந்த குறைவான வட்டி விகிதத்தை பயன்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் நிறுவனங்கள் பிற நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஆசியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் தங்கள் நாணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மிக அதிகமான அந்நியச் செலவாணி தேவை. எனவே அமெரிக்க டாலர் மற்றும் பாண்டுகளை (Bonds) அதிகளவில் வாங்கி தாங்கள் அந்நியச்செலவாணி கையிருப்பை அதிகப்படுத்துகின்றன (இது குறித்த எனது முந்தைய கட்டுரை - உலகின் பொது நாணயம்). அந்நியச் செலவாணி அதிகரிக்கும் பொழுது இந் நாடுகளின் கையிருப்பில் இருக்கும் உள்நாட்டுப் பணமும் அதிகரிக்கிறது. இது இந் நாடுகளில் உள்ள வங்கிகளின் பணக்கையிருப்பை அதிகரிக்கிறது.

வங்கிகள் இதனால் அதிக அளவில் கடன் கொடுக்க தயராக இருக்கிறன. வட்டியும் குறைகிறது. வட்டி குறைவதால் மக்கள் சேமிப்பை அதிகம் விரும்பவதில்லை. மாறாக வீடு மற்றும் பிற முதலீடுகளில் செலவழிக்கத் தொடங்குகின்றனர். மக்கள் செலவு செய்யும் பொழுது அது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

இது தான் இப்பொழுது பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இருக்கும் வட்டியால் பொதுமக்களும் அதிக அளவில் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு பணம் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தற்பொழுது வசந்த காலம் தான். மக்கள் இதில் செய்துவரும் பெரும் முதலீடுகளால் அமெரிக்க வங்களில் கையிருப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த அதிகப்படியான பணத்தை இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் பிற பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். எனெனில் இங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். இதனால் பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் ? இது தொடருமா ?

இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. எப்படி ?

கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக செலவழிக்க தொடங்கும் பொழுது பொருட்களுக்கு இருக்கும் அதிகமான தேவையால் (Demand)
பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது பணவீக்கமும் குறைவாகத் தான் இருக்கிறது. காரணம், அமெரிக்கச் சந்தையில் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பொருட்கள் மலிவான விலையில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு வித்தியாசமான பொருளாதார சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவி வருகிறது

சமீப காலாங்களில் அமெரிக்கவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார ஏற்றாதாழ்வுகளுக்கு உலகில் நிலவும் இந்த liquidity தான் காரணம் என்று சில பொருளாதார வல்லுனர்கள் நினைக்கின்றனர். இது ஆசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் டாலர் உலகின் பொது நாண்யமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் வெகுவிரைவில் சீன நாணயம், யூரோ நாணயம் போன்றவற்றால் பாதிப்படையும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர். அதனால் அமெரிக்க வட்டி வகிதத்தை உயர்த்தி பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சிலரின் கருத்து.

ஆனால் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும். அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே வட்டி விகிதங்களை அதிகப்படியாக உயர்த்தாமல் 0.25% என்ற விகிதத்தில் அமெரிக்கா குறைவாக படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

உலகின் நிலவும் இந்த பொருளாதாரச் சூழல்களே இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் ஏனைய பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கிய காரணம்.

அது சரி.. இந்தியப் பங்குச்சந்தையை ஏன் இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிவைத்து உயர்த்துகின்றன ? இந்தியப் பங்குச்சந்தையின் Valuation மிக அதிகமாக இருக்கிறது என்று செல்கிறார்களே அது உண்மை தானா ? Valuation அதிகமாக இருப்பதால் இந்தியப் பங்குகள் மேலும் உயரும் சாத்தியங்கள் இருக்கிறதா ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம்

1 மறுமொழிகள்:

அன்பு said...

சசி, மீண்டும் ஆரம்பிச்சிருக்கீங்க அல்லது அவ்வப்போது எப்போது எழுதவேண்டுமோ அப்போது எழுதுகின்றீர்கள் நன்றி. பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது என்று நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூணு மாதத்துக்கு முன் வாங்கிய Reliance Equity fund 10ரூபாயிலிருந்து 13க்கு எகிற, இன்னொன்றில் காலை நுழைக்க இருந்தேன்... அதற்குள் அது 12.44 ஆகவும், உங்களின் இந்தப்பதிவும் ஒரே நேரத்தில் வந்தது இனிமேல் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும்.

மீண்டும் சரியான நேரத்தில் வந்த உங்கள் பதிவுக்கு நன்றி.

10:50 PM, September 25, 2005