Tuesday, November 22, 2005

ஒரு தேசத்தின் சோகம்இந்தப் படத்தில் இருக்கும் குழந்தைக்கு ஒரு சோகமான சரித்திரம் உள்ளது. உலகிலேயே மிகச் சிறிய வயதில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட ஒரு மழலைக் கைதி இந்தக் குழந்தை தான். இன்று வரை இந்தக் குழந்தை (இன்றைக்கு இவர் இளைஞர்) வெளியுலகிற்கு காண்பிக்கப்படவில்லை. இதைச் செய்தது ஏதோ ஒரு சாதாரண நாடு அல்ல. மிகப் பெரிய வல்லரசு. அமெரிக்காவிற்கு சரிசமமாக போட்டியிடும் வல்லரசு.

அந்த சோக பூமியின் பெயர் திபெத். திபெத்தின் சுதந்திரம் பறி போக காரணமாக இருந்த வல்லரசு - சீனா

பல ஆயிரம் ஆண்டு கால பழமையான பாரம்பரிய வரலாறு உடைய சுதந்திர நாடான திபெத் 1950ம் ஆண்டு சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்ற திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமா தான் சீனாவின் முதல் எதிரி

திபெத்தை சீனா ஆக்கிரமித்தது முதல் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்கள், எண்ணற்ற அவலங்களை அரங்கேற்றியது. திபெத் மக்கள் அகதிகளாக இந்தியாவிடமும், பிற நாடுகளிடமும் தஞ்சம் புகுந்தனர். 1959ம் ஆண்டு தலாய்லாமா திபெத்தில் இருந்து தப்பித்து இந்தியாவிடம் தஞ்சம் அடைந்தார். இந்தியாவில் உள்ள தர்மசாலா என்ற நகரத்தில் திபெத்திய அரசாங்கத்தை தொடங்கினார். ஆம்.. திபெத்தின் அரசாங்கம் (Government in exile), இந்தியாவில் இருந்து தான் செயல்படுகிறது.

திபெத்தின் புத்த மத வழக்கம்படி தலாய்லாமா தான் மதகுரு மற்றும் திபெத்திய ஆட்சித்தலைவர். அவர் காலத்திற்கு பிறகு தலாய்லாமா தேர்ந்தெடுக்கும் ஒருவர் மற்றொரு தலாய்லாமா ஆவார். இதற்கு பஞ்சன்லாமா என்று பெயர். இது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கம். தற்போதைய தலாய்லாமா திபெத்தின் 14வது தலாய்லாமா ஆவார்.

10வது பஞ்சன்லாமா என்பவர் தற்போதைய தலாய்லாமாவிற்கு பிறகு 15வது தலாய்லாமாவாக பதவியேற்க வேண்டியவர். சீனாவால் கைது செய்யப்பட்ட இவர் சுமார் 8ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1989ம் ஆண்டு இவர் மறைந்தார்.

இதையடுத்து ஒரு புதிய பஞ்சன்லாமாவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் தலாய்லாமாவிற்கு ஏற்பட்டது. இவர் தேர்ந்தெடுத்த 6வயது குழந்தை தான் இந்தப் படத்தில் காணப்படும் 11வது பஞ்சன்லாமா எனப்படும் நய்மா (Gedhun Choekyi Nyima). தற்போதைய தலாய்லாமா இவரை தனக்கு அடுத்து 15வது தலாய்லாமாவாக பதவியேற்க கூடியவராக 1995ம் ஆண்டு மே 15ல் அறிவித்தார் . இது தான் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் சோகத்தை விளைவித்தது. இதற்கு அடுத்த இரு தினங்களில் மே 17ம் தேதி சீன அரசு இந்தக் குழந்தையை கைது செய்தது. 6வயதில் சிறையெடுக்கப்பட்ட மிக இளவயது அரசியல் கைதி இவர் தான்.

அதன் பிறகு இவர் வெளியுலகுக்கு கொண்டு வரப்படவேயில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இவர் எங்கிருக்கிறார், இவர் குடும்பம் எங்கிருக்கிறது போன்ற தகவல்களை சீனா வெளியிடவேயில்லை. கடந்த 2002ம் ஆண்டு இவர் நலமுடன் இருப்பதாக சீனா அறிவித்தது. ஆனால் மேல் விபரங்களை தெரிவிக்க வில்லை.

தலாய்லாமா அறிவித்த பஞ்சன்லாமாவிற்கு போட்டியாக சீனா மற்றொரு பஞ்சன்லாமாவை அறிவித்தது. ஆனால் இதனை திபெத் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.11வது பஞ்சன்லாமா கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டதால், 2005ம் ஆண்டை பஞ்சன்லாமாவை விடுவிக்கும் ஆண்டாக திபெத் மக்கள் அனுசரிக்கின்றனர். பல போரட்டங்களையும் நடத்துகின்றனர். ஆனால் 2005 முடிவடையும் தருவாயில் கூட இது பற்றி சீனா கண்டுகொள்ளவேயில்லை.திபெத்தின் விடுதலைக்கு ஆரம்பம் முதலே தனது முழு ஆதரவையும், திபெத் அரசாங்கம் இந்தியாவில் இருந்து செய்ல்படுவதற்கு அனுமதியும் அளித்த இந்தியா, தற்பொழுது சிறிது சிறிதாக சீனாவிடம் தன் நட்புறவை பேணும் பொருட்டு திபெத் விடுதலையையோ அல்லது சீனாவில் தீபெத்திற்கு சுயாட்சி வழங்குவது பற்றியோ அதிகம் பேசுவதில்லை.

இம் மாதம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் புஷ் பெயரளவுக்கு சில கருத்துகளை தெரிவித்து விட்டு நழுவி விட்டார். அவரது சீனப் பயணத்திற்கு முந்தைய வாரத்தில் தலாய்லாமா, புஷ்யை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். எங்கே இந்தச் சந்திப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சீனாவுடனான தன் உறவு பாதிக்கப்படுமோ என்று அஞ்சி அந்தச் சந்திப்பு பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகாமல் பார்த்து கொண்டார். சீனாவின் நாணயத்தில் மாற்றங்களை கொண்டு வர சீனாவிடம் கெஞ்சி விட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

கடந்த காலங்களில் திபெத்திய விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டிருந்த அமெரிக்கா, வளர்ந்து வரும் பொருளாதார உலகில் சீனாவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் இப்பொழுது மொளனம் சாதிக்க தொடங்கியிருக்கிறது.

உலகெங்கிலும் பல இடங்கில் நடந்து வரும் ஆக்கிமிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் பல நாடுகளின் அங்கீரம் பெற்றிருக்கும் திபெத்திற்கே அதன் எதிர்காலம் குறித்து ஒரு கேள்விக்குறியான நிலை தான் தற்பொழுது உள்ளது.

தற்போதைய தலாய்லாமா மரணமடையும் பட்சத்தில், பஞ்சன்லாமா பிரச்சனை பெரிய அளவில் மறுபடியும் விஸ்ரூபம் எடுக்கும்.

ஆனால் 6வயதில் கடத்தப்பட்டு இன்று வரை சீனாவின் பிடியில் இருக்கும் 11வது பஞ்சன்லாமா, திடீர் என்று வெளிவந்து திபெத் சீனாவிற்கு தான் சொந்தம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சீனாவின் பராமரிப்பில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வரும் அவர் மூளை சளவை செய்யப்பட்டிருக்கும் என்று தான் நான் நினைக்கிறேன்

4 மறுமொழிகள்:

Anonymous said...

http://www.tibet.com/Eco/introduction.html
http://www.flonnet.com/fl1718/index.htm

10:50 PM, November 22, 2005
அன்பு said...

தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி.

1:08 AM, November 23, 2005
Jayakumar said...

திபத் நமது தேசிய மனச்சாட்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.
ஆயுதம் ஏந்தி விடுதலை கேட்பவர்களை பயங்கரவாதிகள் என்கிறோம்.ஆனால் அகிம்சை முறையில் போராடுபவர்களை ஏறக்குறைய மறந்து விடுகிறோம்.

திபத் பற்றிய விழிப்புணர்வை மீட்க இது போன்ற பதிவுகள் உதவி செய்யும்.
நன்றி.

1:20 PM, November 27, 2005
Chandravathanaa said...

தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி

4:06 AM, November 28, 2005