Thursday, March 02, 2006

தமிழகமும், தமிழ் ஈழமும்

தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவை நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி.


அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது.

ஆவணப்படுத்துதல் குறித்து நந்தன் எழுதியிருந்தார். புலிகள் தங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றனர். புலிகள் போல தங்கள் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்கங்கள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு போரினையும் பதிவு செய்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் போரினையும் பிற முக்கிய நிகழ்வையும் பதிவு செய்யும் ஒரு தனிப் பிரிவே உண்டு. புலிகள் தங்களுடைய போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே இதனை செய்திருக்கிறார்கள்.

தன்னுடைய Island of Blood புத்தகத்தில் அனிதா பிரதாப் இவ்வாறு தெரிவிக்கிறார்.

shortly after i was seated, taciturn Tiger guerrillas switched on a color television set ( a rare commodity in those days) and made me watch several video documentaries (even rarer commodities) on the LTTE and its leader. They were beautifully shot. The dance of sunlight and the angle of the camera made pirabhakaran seem larger than life. He looked strong, tough and brave. The film depicted LTTE as the disciplined national army of a proud nation - Tamil Eelam.

தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன். ஆனால் சிலப் படங்களை மட்டுமே காண முடிந்தது. நன்றாக எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகையப் படங்கள் ஐரோப்பாவில் திரையிடப்படுகின்றன என்று நான் படித்து இருக்கிறேன். இன்று ஈழத்து செய்திகளை தினமும் பார்க்க தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் உள்ளது. ஈழத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் பொழுதெல்லாம் நான் இந்த தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். பிரபாகரன் வன்னியில் ஆற்றும் உரை ஐரோப்பாவில் நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது எத்தனை "இந்திய" தமிழர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.


அதே நேரத்தில் இந்த குறும்படங்களும், செய்திகளும் தமிழார்வம் கொண்ட நண்பர்களுக்கு போய்ச் சேர்வது முக்கியமாகப் படுகிறது. குறும்படங்கள் குறித்து மேலும் விபரங்களை தமிழீழ நண்பர்கள் கொடுக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலன், உலகின் பலப் பகுதியில் இருக்கும் ஊடகங்கள் தமிழ் ஈழம் சென்றது தான். புலிகளின் தமிழீழ உள்கட்டமைப்பு பற்றி இந்தியாவின் பத்திரிக்கைகள் தொடங்கி, அமெரிக்காவின் டைம் போன்ற பத்திரிக்கைகள் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இது தவிர பல நாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு செல்லும் பொழுது தமிழ் ஈழத்திற்கும் சென்று தமிழ்ச்செல்வனை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். புலிகள் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அது போல அந்தப் பகுதிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

இன்னொரு விஷயத்தையும் தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கு வரி செலுத்துபவர்களில் இலங்கை அரசாங்கமும் அடங்கும் என்பதே அந்தச் செய்தி. கொழும்பு - யாழ்ப்பாணம், A9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கடந்தே செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் இராணுவத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், புலிகளுக்கு சுங்க வரி செலுத்துகிறது.

புலிகளின் இராணுவத் திறன் பற்றிச் சொல்ல வேண்டுமானால் யானையிறவு போரைப் பற்றிச் சொல்லலாம். யானையிறவு போர் பற்றி மட்டுமே ஒரு பெரிய பதிவு எழுதலாம்.

யானையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற நிலங்களுடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் தான். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை பெற்றனர்.

இந்த போர் தான் புலிகளுக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது. 10,000 பேர்களை கொண்ட புலிகள் முன்னேறி வருகிறார்கள். எங்களுடைய
50,000 வீரர்களை காப்பாற்றுங்கள் என உலகநாடுகளிடம் ஒரு நாட்டின் ஜனாதிபதி (சந்திரிகா) கதறும் அளவுக்குத் தான் சிங்கள இராணுவத்தின் motivation உள்ளது. புலிகளை போர் மூலம் வெல்ல முடியாது என்பதும், வேறு எந்த நாடும் இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்காது என்பதும் தெளிவான விஷயம். பிற நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவற்றில் இந்தியப் படைக்கு எதிராகவும் சரி, இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் சரி புலிகள் பலம் குறைந்தவர்கள் தான். புலிகளுடைய பலமே உயிரை துச்சமென மதித்து ஈழவிடுதலைக்காக போராடும் அவர்களின் மனதிடமும், விடுதலை வேட்கையும் தான். அதற்கு முன் எந்த பெரிய இராணுவமும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை யானையிறவு போர் நிருபிக்கவே செய்தது.

இந்தப் போரும், அதன் வெற்றியும் தான் தமிழர்களுக்கு ஒரு சரிசமமான இடத்தை கொடுத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. சிங்கள அரசு தமிழர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்க காரணமே இந்தப் போரின் வெற்றி தான்.

அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று. ஆனால் அகிம்சை வழியில் இந்தியா தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்த திலீபனின் உயிர் பற்றியோ அவரது அகிம்சை போராட்டம் பற்றியோ இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.

இன்று உலகில் அகிம்சை வழியில் போராடும் மற்றொரு நாடு திபெத். திபெத்திற்கு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. உலக நாடுகளின் பரிவு கிடைத்தது. திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது. அவ்வளவு தான். அவர்கள் போராட்டத்திற்கு இதைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை (திபெத் பற்றிய என்னுடைய பதிவு)

மாறாக இன்று உலகநாடுகள் கூட்டாச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கால வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் என்பது தெரியும். புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது. அகிம்சை போராட்டமாக இருந்திருந்தால் எப்பொழுதோ நசுக்கப்பட்டிருப்பார்கள். தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் இருப்பதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனை புலிகளின் எதிரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள் (என்னுடைய இந்தப் பதிவை பார்க்கலாம்)


புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டம் இல்லை, தீவிரவாதப் போராட்டம் என்று உலக அரங்கில் நிலைநிறுத்தியதில் சிங்கள அரசுக்கும், இந்தியச் "சார்பு" ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் உண்மை நிலை அது அல்ல. இதனை பல நடுநிலையாளர்களும், புலிகளின் எதிர்ப்பாளர்களும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெ.என். தீக்ஷ்த் இவ்வாறு கூறுகிறார்.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்காக கடத்தி சென்ற கதைகளை பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சுனாமி போன்ற சமயங்களிலும் சரி, சாதாரண சமயங்களிலும் சரி புலிகள் தான் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தேவைகளையும் வழங்கி இருக்கின்றனர். புலிகளின் பிரதேசங்கள் மீது பல காலமாக இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் இருந்தன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன. ரஞ்சன் விஜயரத்னே இலங்கையின் மிகக் கொடூரமான இனவெறிப் பிடித்த தலைவர்களில் ஒருவர். ஒரு முறை அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுக்கச் செல்லும் முன் விஜயரத்னேவை சந்தித்த பொழுது அவர் இப்படி கூறினாராம்.

When you meet Pirabhakaran, tell him it's the last time he will be seeing you. Before you get there next time, I will make sure he is a dead man

இத்தகைய இனவெறி, கொலை வெறிப் பிடித்த தலைவர்களிடம் விடுதலை கேட்டு அகிம்சை வழியிலா போராட முடியும் ?

எந்த அரசியல் படுகொலையும் கண்டனத்திற்குரியதே. அதனை நியாயப்படுத்த முடியாது. அதே இறுகிய கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்திருக்க முடியாது. இன்று தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் நிலையை ஏற்று இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான (சோனியா காந்தி) மைய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம். புலிகளின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே "இறந்த" காலத்தை தொடர்ந்து பேசி புலிகள் எதிர்ப்பை நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரை சற்றே விலகி இருக்கிறது. இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.

நான் இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது.

20 மறுமொழிகள்:

ஜோ/Joe said...

மிக்க நன்றி இந்த பதிவுக்கு!
//அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று.//
ஆம்.அகிம்சை வெல்லுமா என்பது எதிராளி அகிம்சையை எந்த அளவுக்கு மதிக்கிறான் என்பதை பொறுத்தது .வெள்ளைக்காரனுக்கு காந்தியின் அகிம்சை மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தது (நேதாஜியை விட காந்தி நமக்கு தோதானவர் என்பதும் காரணமாக இருக்கலாம்)..ஆனால் இலங்கை அதிகார வர்க்கம் எந்த அளவு அகிம்சையை மதிக்கிறது என்பது உலகறிந்த விஷயம் .

10:15 PM, March 02, 2006
SnackDragon said...

/ இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது./

மிகவும் சரியான வார்த்தை சசி,. 12 கடற்படையினர் இறந்ததற்கு கண் திறந்துள்ளார் ராஜபக்சே. கடந்த இரு மாதங்களில் மட்டும் நடந்த கொலைகைளைப் பற்றி தெரியும்தானே?
வெறும் முதற்கட்டமாகவே, போர் நிறுத்த வார்த்தைகளை கேட்டு ஜேவிபியினரது வலிப்பு வந்த நடத்தைகளை செய்தி.நெட் -இல் ஒரு செய்தியில் வாசித்தேன்.

10:20 PM, March 02, 2006
Anonymous said...

When an Indian Tamil write this type of article it will open the eyes of the fellow Indian Tamils.
We Eelam Tamils will be greatful to
you for writing the truth of events
that are happening in Tamil Eelam.
Your sujestions will be implemented
by the Eelam Tamils in due course.
Once again I thank you for your
article.May God bless you.

10:35 PM, March 02, 2006
நந்தன் | Nandhan said...

//தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் //
உண்மையான வார்த்தை. இதோ இணையம் மட்டும் இல்லையெனில் எனக்கு இன்னும் பல விஷயங்கள் தெரியாமல் போயிருக்கும்.
//அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது//
பெரும்பான்மை இளைஞர்கள் என்னைபோன்றே என நம்புகிறேன். நான் பழகியவர்களை கொண்டே இவ்வாறு நினைத்தேன். உண்மை நிலை வேறாயிருந்தால் மிகவும் சந்தேஷம்.
ஈழத்தவரின் வரலாறும், ஆவணங்களும் என்னைப்போன்ற சாதாரணவர்களை சென்று அடையவில்லை என்பதே என் ஆதங்கம். இங்கு நீங்கள் எழுதியிருக்கும் பல தகவல்கள் எனக்கு புதியவை, ஆச்சரியம் அளிப்பவை.
//இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.//
என என் கருத்தை ஆமோதித்தற்கு நன்றி. இனையத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவ நிறைய பேர் உள்ளோம்.
நாளை நல்லதாக இருக்கட்டும்.

10:44 PM, March 02, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி

/*
நேதாஜியை விட காந்தி நமக்கு தோதானவர் என்பதும் காரணமாக இருக்கலாம
*/

இந்திய விடுதலை, அகிம்சையின் காரணமாக மட்டுமே கிடைத்ததா என்பது விவாதத்திற்குரியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை விமர்சன நோக்கில் அணுகும் பொழுது பல முரண்படுகள் நமக்கு புரியும்.

11:05 PM, March 02, 2006
இளங்கோ-டிசே said...

சசி,நல்லதொரு பதிவு. நிரப்பத் தகவல்களை அறிந்துவைக்கின்றீர்கள் என்ற வியப்பு இன்னொருபுறம் இருக்கிறது :-).
....
நந்தனின் பதிவை வாசித்திருந்தேன். சிலரைப்போல முடிவுகளை ஏற்கனவே தீர்மானித்துக்கொண்டு கேள்விகள் கேட்காது அறிய வேண்டுமென்ற உண்மையான அக்கறையில் வெளிப்படையாகக் கேட்ட அவரது நேர்மை எனக்குப் பிடித்திருந்தது.
....
ஈழத்தில், புலத்தில் ஈழத்தமிழர் போராட்டங்கள் குறித்த ஆவணப்படுத்தல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாலும், எப்படி சந்தைப்படுத்தல் என்ற பிரச்சினைகள் பலருக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். இணையம் தகவற்படுத்துவதற்கான ஒரு சிறந்த வெளியைத் திறந்துவிட்டிருக்கின்றது. அதைப் பயன்படுத்த வேண்டிய தேவையும், புலம்பெயர் நாட்டு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு, டொச்) ஆவணப்படுத்தவேண்டிய அவசியத்தையும் ஈழத்தமிழர் மற்றும் அவர்களுடன் அக்கறையுடைய எவரும் கொள்ளுதல் சாலச் சிறந்ததாக இருக்கும்.
...
வன்னி போனற இடங்களிலிருந்து போர் குறித்த சிறந்த படைப்பிலக்கியங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை இன்னும் வெளிச்சத்தில் அதிகம் கொண்டுவரப்படாமையும், இந்திய/புலம்பெயர் வெகுசன ஊடகங்களும் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்கள் மட்டுமே ஈழ வரலாற்றை/அரசியலைப் பேசுகின்றனர் என்ற மாயையையும் உருவாகுவதும் இன்னொரு அவலம்.
.....
இணையம்,ஈழத்தமிழர் மீது உண்மையான அக்கறை உள்ள பல தமிழக நண்பர்களை அடையாளங்காட்டியது/காட்டுகின்றது. அந்தவளவில் அத்தகைய நண்பர்களுக்கு என்னைப்போன்றவர்களின் நன்றியும், நெகிழ்வும் உரித்தாகட்டும்.

11:18 PM, March 02, 2006
வன்னியன் said...

தேவையான பதிவு.

ஈழத்து அகிம்சையில் அன்னை பூபதியையும் சேர்த்திருக்கலாம். இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதமிருந்து செத்துப்போன பெண்மணி.

புலிகளின் ஆவணப்படுத்தல் பற்றிய உங்கள் குறிப்புக்கு நன்றி. சில நேரங்களில் அப்படி ஆவணப்படுத்த முற்பட்டதே அவர்களுக்கு ஆபத்தாயும் முடிந்துள்ளது. (முக்கிய அரசியற்கொலையொன்றில்)

புலிகளின் நிதர்சனம் ஊடகப் பிரிவு மாதாந்தம் (சில நேரங்களில் இரு மாதத்துக்கொரு தடவை) ஒளிவீச்சு எனும் ஒளிப்படச் சஞ்சிகையை வெளியிடுகிறார்கள். இப்போது அது 110 வரை வந்துவிட்டதென்று நினைக்கிறேன். அதில் சமகாலக் கண்ணோட்டம், அந்த மாதத்துத் தாக்குதற் சம்பவங்கள், அம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களினதும் விவரங்கள், பொருண்மியத் தகவல்கள் என்பனவுட்பட நிறைய விசயங்கள் இடம்பெறும்.

ஒவ்வொரு ஒளிச்சஞ்சிகையிலும் பெரும்பாலும் ஒரு குறும்படம் இடம்பெறும். என்பார்வையில் அவர்களின் முழுநீளப் படங்களைவிட குறும்படங்கள் காத்திரமானவை. யமுனா ராசேந்திரனும் இவைபற்றி எழுதியதாக நினைவு.
ஒளிவீச்சு பெரும்பாலும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் ஈழத்தமிழர்களிடம் கிடைக்கிறது.

அதைவிட இருபது வருடங்களாக அவர்கள் நடத்திவரும் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப்புலிகள் ஏடு' இணையத்திற் கிடைக்கிறது. அவர்களின் முதலாவது வெளியீட்டிலிருந்து சகல பதிப்புக்களும் உள்ளன. (ஆனால் வாசிக்க இலகுவான வடிவிலில்லையென்பது முதன்மைக்குறை)

அவற்றில் பழைய பல தாக்குதல் விவரணங்கள், வீரச்சாவடைந்த தளபதிகள் போராளிகள் பற்றிய குறிப்புக்கள் என்பன உள்ளன. அவற்றின் ஆசிரியத் தலையங்கம், கட்டுரைகளைப் படிப்பதூடாக இருபது வருடப் போராட்டப் போக்கின் ஒரு பரிமாணம் தெரிய வரும்.

11:30 PM, March 02, 2006
Thangamani said...

சசி:

நீண்ட கட்டுரை; ஆனால் அவசியமானது. நன்றி.

முழுபூசனியை சோற்றில் மறைப்பதை பார்த்துள்ளோம். பூசணி லாரியையே இந்திய ஊடகங்கள் மறைக்கக் கூடியவை என்பதை பலர் அறியட்டும்.

அப்துல் கலாம் இந்தியாவின் இராணுவ (அணு மற்றும் ஆயுத) ஆராய்ச்சிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் இராணுவ வலிமையே பாகிஸ்தானுடனான போரை நிறுத்த, கட்டுப்படுத்த வல்லது என்று கூறும் போது எளிதில் புரிந்துகொள்கிறவர்கள், ஈழப்போராட்டம் மட்டும் அகிம்சைபோராட்டமாக இருக்கவேண்டும் என்று சொல்லும் போது ஒன்று அவர்கள் ஈழத்தமிழர்கள் மேல் அளவு கடந்த அன்பு கொண்ட அறியாப்பிள்ளைகளாய் இருக்கவேண்டும்; அல்லது ஈழப்போராட்டத்தை எப்படி அழிக்கவேண்டும் என்ற அறிந்த துறைபோக்கியவர்களாக இருக்கவேண்டும் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட, உலக அங்கீகாரம் கொண்ட இந்தியா ஏன் அகிம்சையை பயின்று யுத்தங்களை எதிர்கொள்ளக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசுக்கு உலகெங்கிலும் இருந்து பாதுகாப்பும், இதயத்தில் இடமும் கிடைக்குமே. இதனால் ஒப்பீட்டளவில் இந்தியா அகிம்சைப்போரை கையாளுவது எளிதும் கூட.

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும், புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடவில்லை என்பதை, இந்திய போதை மருந்து தடுப்புப்பிரிவே சமீபத்தில் அறிவித்தது; சில நாட்களுக்கு முன் இந்திய மாவோ ஆயுதக்குழுக்களுக்கு புலிகள் பயிற்சி எதையும் அளிக்கவில்லை என்பதையும் அறிவித்தது. ஆனாலும் புலிகள் இத்தகைய குற்றங்களை செய்வதாகவும், இந்தியபாதுகாப்புக்கு ஊறு செய்வதாகவும் ஊடகங்களில் எழுதுகிறவர்கள் இவைகளை கண்டுகொள்ளவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.

11:34 PM, March 02, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

நன்றி DJ

ஆவணப்படுத்தியதை சந்தைப் படுத்துவதும், பலரை சென்றடைவதும் முக்கியம். இது இணையம் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

/*
ஈழத்தமிழர் மற்றும் அவர்களுடன் அக்கறையுடைய எவரும் கொள்ளுதல் சாலச் சிறந்ததாக இருக்கும்.
*/

இந்த ஆவணங்களை சந்தைப் படுத்துவதை ஒரு கூட்டுமுயற்சியாக செய்ய வேண்டும். அப்பொழுது தான் தங்கமணி கூறுவது போல (பூசணி லாரியையே இந்திய ஊடகங்கள் மறைக்கக் கூடியவை)ஊடகங்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியும்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

12:05 AM, March 03, 2006
Amar said...

சசி அவர்களின் பதிவில் எப்போதும் புலிகளுக்கு அதரவான ஒரு positive bias இருக்கும். :-)

குற்றம் சொல்லவில்லை, அந்த bias எந்த உன்மையினால் வந்தது என்றதை எடுத்து கூறிவிடுவதால் நன்றாக இருக்கிறது.

புலிகளின் அரசியல் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்களின் ruthlessness and committment இந்தியர்களுக்கு ஒரு பாடம்.

12:47 AM, March 03, 2006
ஈழபாரதி said...

நன்றி சசி நல்லதொரு பதிப்பு, உண்மைதான் நந்தன் கூறியதுபோல் ராஜீவ்காந்தி இறந்ததில் இருந்துதான் இலங்கை பிரச்சினை தமிழக இளைஞர்களுக்கு தெரியும் என்பதில்லை, ஆனால் அப்பிடியானவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான், ஏனெனில் அதன் பின்னர்தான் இந்திய ஊடகங்களில் ஈழம்பற்றிய உண்மை செய்திகள் இருட்டடிபு செய்யப்பட்டது, அதற்கு முன்னர் இந்திய ஊடகங்கள் சுதந்திரமாகத்தான் இயங்கின, 54, 72 இனக்கலவரங்களை அறிய முடியாவிட்டாலும் 1983ல் நடந்த இனக்கலவரம் உலகறிந்தது, கொழும்பே பற்றி எரிந்தது, தமிழர்க்கு நடந்த உச்சக்கட்ட இன ஒழிப்பு நடந்து எஞ்சியவர்கள் கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
அப்போதுதான் எமக்கு புரிந்தது சிங்கள் நாடு, எமது நாடு அல்ல எமக்கென்று ஒரு நாடு இருக்கிறது என்று, அதன்பின்னர்தான் ஏற்பட்டது லிபரேசன் ஒப்பிரேஷன் இராணுவ நடவடிக்கையும் இந்திய ராணுவ வருகையும், போரும். பிரபாகரன் இறந்து விட்டது என்று றோ தீவிர பொய்பிரச்சாரம் செய்தது, இது எந்தளவுக்கு வலுவாக நடை பெற்றது என்றால் அவர்பிறந்த ஊர்மக்களே அவரைகாட்டினால்தான் நம்புவோம் என்று போராடி, பிரபாகரன் வல்வெட்டிதுறை மக்கள் முன்னர் தோண்றவேண்டிய தேவை ஏற்பட்டது, அந்தநேரத்தில் பிரபாகரனை எங்கே என்று கேட்டு மவுன்றோடில் கல்லூரி மாணவர்களால் பெரிய ஊர்வலமே நடந்தது. இதில் கலந்து கொண்ட நண்பர் நேரடியாக எனக்கு சொன்னபோது எனக்கு உள்ளம் சிலிர்த்துவிட்டது, எமக்கு ஒன்று என்றால் கேட்க எமது உறவுகள் இருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். நந்தன் போன்ற நண்பர்களும் இருக்கிறார்கள் என்றபோதுதான் ஆச்சரியமாக இருந்தது. அதன்முன்னர் நடந்தவிடயம் ஒன்றுகூடதெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று. எது எப்படி இருப்பினும் நாம் சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது, உங்கள் நீண்ட பதிப்புக்கு நன்றிகள்.

5:24 AM, March 03, 2006
Kannan said...

சசி,

நிரம்பத் தகவல்கள், மேற்கோள்களுடன் factual ஆனதொரு பதிவு தந்ததற்கு நன்றி.

6:14 AM, March 03, 2006
குழலி / Kuzhali said...

//தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன்
//
குட்டி மணி, ஜெகன் ஆகியோர் கண்கள் தோண்டி கொல்லப்பட்ட வெலிங்டன் சிறை அழிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து உருவான சிங்கள பேரினவாதத்தின் உச்சகட்ட வன்முறையையும் புலிகள் ஆயுதம் தூக்கியதையும் வடலூர் வள்ளலார் தைப்பூசத் திருவிழாவில் புலிகள் கண்காட்சி அமைத்தது தான் எனக்கு தெரிந்து புலிகள் பற்றியும் சிங்கள பேரினவாதத்தை பற்றியும் அறிந்து கொண்ட தகவல்.

//அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று.
//
ம்... வேதனையான உண்மை

//திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.
//

//புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது
//
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்

//உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன
//
அட்டூழியம் செய்யும் தலைவர்களின் மீது இவர்கள் எடுக்கும் இராணுவ நடவடிக்கை இது தானோ?!

8:20 AM, March 03, 2006
Gopalan Ramasubbu said...

Two years back I was talking to a srilankan Tamil lady while travelling on train here in Melbourne,we talked about Tamil,Srilankan issues and finally when i enquired about her family she smiled at me and said they were all killed by IPKF.

one Srilankan Tamil guy came to my house to repair my refrigerator,he had lotsa wounds in his hand and neck.He said it's the effect of shelling by IPKF and said they used chemical weapons.Chemical used was white pasporous. any one aware of that?

I can't find any words to describe my feeling as a Indian citizen when i see such things.I feel really ashamed of what India did to our brothers and sisters in Srilanka.

According to me most of the younger generation in Tamilnadu supports LTTE ,they are well aware of the issues.They even understand Mount Road Srilankan embassy(THE HINDU) biased stand.

8:18 PM, March 03, 2006
Gopalan Ramasubbu said...

I forgot to mention this in my previous comment.This is what George fernandes had to say when Indian army soldiers were sent to Israel for guerilla training,

"Why are we sending them all the way to Israel, when we have better trainers in the forest of Vanni"

8:40 PM, March 03, 2006
இளந்திரையன் said...

தமிழீழ மக்கள் மீது தமிழக மக்களுக்கு தொடர்ந்தும் போராடும் சகோதரர்கள் என்ற ஒரு அனுதாபமும் கரிசனையும் இருக்க வேண்டும். போராட்டத்திற்கு உதவுவதற்காக அல்லாவிடினும் நடுவண் அரசால் எடுக்கப் படக்கூடிய தமிழ் ஈழத்தின் இறைமைக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவாவது இது உதவும்.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற மனநிலையில் இருக்கும் வரை தமிழீழத்தின் அமைவிற்கு எதிராகவே செயற்படும். வேறு விதமாகச் செயற்பட முடியாது. இதனை தமிழீழ மக்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.

இதுதான் யதார்த்தம். இந்திய நடுவண் அரசின் ஆசையும் நிலைப்பாடும் இதுதான். தமிழ் ஈழ மக்களும் தலைமையும் இன்னும் பலம் பெறும் போதே இந்தியா தமிழீழம் அமைவதை தவிர்க்க இயலாமல் சமரசம் செய்து கொள்ளும்.

விருப்பமில்லாமலேயே பாகிஸ்தான் பங்களாதேசம் காஸ்மீர் போன்றவற்றை சகித்துக் கொள்வதைப்போல.

தமிழ் ஈழமக்களும் தலைமையும் பலத்தை இழந்தால் அனைத்துச் சக்க்திகளும் எம்மை துவைத்துப் போட்டுவிடும் என்பதை ஈழத்தமிழர் அனைவரும் தலைமையும் உணர்ந்தே இருக்கின்றார்கள். ஒரு வியற்நாமோ இல்லை கியூபாவோ இலவசமாகக் கிடைக்கவில்லை என்பது எமக்குக் கிடைத்த வரலாறு.

உங்கள் ஈழத்தமிழ் மக்கள் பற்றிய தெளிபுக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள்.

- அன்புடன் இளந்திரையன்

9:16 AM, March 06, 2006
Anonymous said...

Sasi,

My appreciation and salutations to you on all your postings on Tamil Eelam issue. It is funny and at the same time painful to see that many tamils have a greatly fractured view about the eelam issue - a pointer to the success of the media role in manufacturing public opinion.

Equally pathetic is the fact that we have a political leadership that does not have the courage to speak up for a liberation movement that has reached an important phase in eelam.

A recent example of their hypocracy is the recent demonstartion by the DMK MP's in Delhi coinciding Bush's visit to India. Reason, according to MK, is USA's military action in Iraq. What a pity ? Where did these MP's go when Rajapakshe visited India ? "Thamizhan Naathiyatravana ?"

Continue your good work.

11:10 PM, March 06, 2006
தருமி said...

ஈழம் பற்றி எனக்குச் சில கேள்விகள் உண்டு; உங்களிடம் பதில் கிடைக்குமென்று எண்ணுகிறேன்.
அடிப்படையில் நான் ஒரு புலி-அனுதாபி.ஆயினும் ராஜீவ் காந்தியின் கொலை அதில் ஒரு பள்ளம் ஏற்படுத்தியது உண்மை.
இதில் புரியாத விஷயம்: புலிகள் ஏன் இதைச் செய்திருக்க வேண்டும். அண்டை நாட்டின் அரசியல் தலைமையைக் கொல்வதால் என்ன அரசியல் லாபம்? நட்டம் இருக்க வாய்ப்புண்டு. பின் ஏன் இந்த கொலை?
தங்களுக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரமாவது இல்லாமல் இந்திய அரசு இருக்கும்படி பார்த்துக்கொள்ளாமல் இந்தச் செயலைச் செய்ததின் உள்ளர்த்தம், குறிக்கோள் என்னவாயிருக்கும்?

ஒரு உப கேள்வி: தங்கள் 'வேலை' முடிந்ததும் சிவதாசனும், மற்றவர்களும் நிச்சயமாகத் தப்பியிருக்க முடியுமென்றே நம்புகிறேன். தமிழ்நாட்டுக் கடற்கரையோரம் தப்பியிருக்க வழியிருந்திருக்கும். இருப்பினும் கர்நாடகத்தில் 'மாட்டிக்கொண்டது' ஏன்?

12:04 AM, March 07, 2006
Anonymous said...

யோவ் தருமி,
அப்போ புலிகள் அதைச் செய்யவில்லை, வேறு யாரோதான் செய்திருப்பார்கள் என்று புலிகளுக்குச் சந்தேகத்தின் பலனை அளிக்க முயல்கிறீரா?
முழுப்பூசணி.....

7:56 AM, March 07, 2006
Anonymous said...

தருமி அவர்களே உங்களது இரண்டாவது கேள்வி எனக்கும் அடிக்கடி எழுவதுண்டு, ரஜீவ் கொலைக்குப்பின்னர் தமிழக கடற்கரைகள் இறுகி இருக்கலாம், அதன் முன்னர் சுதந்திரமாகத்தான் இருந்தது, இவர்கல் ஏன் கர்நாடகம் போய் மாட்டுப்பட்டார்கள்?

11:54 AM, March 09, 2006