Wednesday, March 29, 2006

தமிழக கஜானாவிற்கு ஆபத்து

2ரூபாய்க்கு அரிசி, "பெண்களின் பொது அறிவை உயர்த்துவதற்காக" வீட்டிற்கு ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ஊதிய உயர்வு (இன்னும் இந்த பரிந்துரைகள் வெளியாக வில்லை என்று நினைக்கிறேன்) என கலைஞர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமாக வெளியிட்டு இருக்கிறார்.

எல்லாம் சரி, தமிழக அரசின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி யோசிக்க வேண்டாமா ?

கலைஞர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினம். சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) அரசியல் கட்சிகள் இவ்வாறு சகட்டுமேனிக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து மாநில அரசின் கஜானாவை காலி செய்வதால் சில நிதிக் கட்டுபாடுகளை விதித்திருக்கிறது.

ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி முடிகிற சமயத்தில் இவ்வாறு அறிவித்து விட்டு தப்பித்து விடலாம். ஆனால் புதியதாக அமையும் அரசு இவ்வாறு செய்வது மிகவும் கடினம். அதுவும் தவிர மாநிலத்தின் பொருளாதாரத்தை இது கடுமையாக பாதிக்கும். ஜெயலலிதா சரமாரியாக அறிவித்த அறிவிப்புகளுக்கு பதிலடி கொடுக்க கலைஞர் இவ்வாறு செய்திருக்கிறார்.

கலைஞரின் இந்த அறிவிப்புகள் குறித்து பிறகு எழுதுகிறேன்.

ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் குறித்து முன்பு நான் எழுதிய ஒரு பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.



இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல "Populist" நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் - Hindu, That's Tamil)

இந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான அலையோ, எதிர்ப்பு உணர்வோ இல்லை. ஆனாலும் ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் காலங்களில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை வழங்கியது, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஞ்சி மடத்தின் ஆலோசனையின் பேரில் கொண்ட வரப்பட்டதாக கூறப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கிராமக் கோயில்களில் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டுவரப்பட்ட தடைச்சட்டம் போன்றவையும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அதிமுக கடந்த பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. பாரளுமன்ற தேர்தல் தோல்விக்கு திமுகவின் மெகா கூட்டணி தான் முக்கிய காரணம். ஆனாலும் அதிமுக அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக தமிழகத்தின் நிதிநிலைமைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதனை ஒவ்வென்றாக விலக்கிக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிதி நிலைமையாவாது வெங்காயமாவது என்ற நிலைக்கு சென்று விட்டார் போல தெரிகிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.



ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

தமிழகம் ஒரு "fiscal bankruptcy''யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

திமுக அரசு எடுத்த பல "Populist" அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.

12 மறுமொழிகள்:

krishjapan said...

ஜெ திரும்பவும் வர்லாம்னு சொல்றவங்க எல்லாம், ஜெ நல்லா ஆட்சி பண்ணதால வர்லாம்னு சொல்றாங்களா என்ன? அவங்க பா.தேர்தல் தோல்விக்குப் பின்னால அறிவிச்ச சலுகைகள், சுனாமி, வெள்ள நிவரணத்த பணமா கொடுத்தது, சைக்கிள் கொடுத்தது.... இதுனால மக்கள் (வோட்டு போடற மக்கள சொல்றேங்க, படிச்ச, விவரமுள்ள, வோட்டு போடாதவங்கள இல்ல) சந்தோஷப்பட்டு, இலைக்கே போடுவாங்கன்னு சொல்றாங்க. அப்போ, அய்யாவும் அதைத்தான செய்ய நினைப்பாரு. நீ சைக்கிளா, நானு டிவி. என் பணமா என்ன. இதுக்கு முன்னாடி ஆந்திரா தேர்தல்ல, காங்கிரஸ் இலவச மின்சாரம் தருவோம்னு சொன்னப்ப, சந்திரபாபு நாயுடு, கொடுத்தா திவால் ஆயிடுவொம், அதனால கொடுக்க மாட்டேன்னு சொன்னார். அப்படியும் அவரு அப்ப ஜெயிச்சாரு. அப்படி நம்ம மக்களும், கவர்ச்சி திட்டங்கள ஒதுக்கினாலொழிய, இது இனிமே தொடரும். அது அம்மாவோ, அய்யாவோ.

11:33 PM, March 29, 2006
rajkumar said...

அன்று கருணாநிதி அரசு எவ்வாறு நிதிநிலைமையை சீர்குலைத்தது என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அதிமுக அரசு, இன்று சீர்செய்யப்பட்டுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் நிதிநிலைமையைப் பற்றி ஏன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடக்கூடாது?

ஓட்டுக்களை மட்டும் கணக்கில் வைத்து நிதி ஆதாரங்களை வீணடிக்கும் திட்டங்களை முன்வைப்பதில் இரு கட்சிகளும் முன்னிலை வகுக்கின்றன.

ஒரு அரசிடம் இருந்து எத்தகைய ஆளுமையை எதிர்பார்ப்பது என்ற தெளிவு மக்களிடம் இல்லாதவரை, இத்தகைய கூத்துக்களை கட்சிகள் தொடர்ந்து நடத்தும்.

12:04 AM, March 30, 2006
Gopalan Ramasubbu said...

Instead of giving free colour TV, he could have said, If my family(DMK) comes to power then my family(DMK) will give free cable connection to all people through Sumangali Cable Vision(SCV).Which is quite possible than the current promises.It'll work really well in this election considering our peoples love for TV serials.It'll give opportunity for him to counter attack Cable TV bill.additional ah if he promises to stop SUN news from tomorrow onwards then enoda Vote Kalaignar family ku thaan.;)

5:12 AM, March 30, 2006
தயா said...

அன்றைக்கு நடவடிக்கை எடுத்தபோது கண்டித்தவர்கள் கஜானா காலி என இன்றைக்கு கவலைப்படுகிறார்கள்.

அடுத்த வீடான ஆந்திராவில் சந்திரபாபுவும் கர்நாடகாவில் கிருஷ்னாவும் சீர்திருத்தங்களின் விளைவாக தோற்றபிறகும் அம்மா சும்மாயிருந்தால் நல்லாயிருக்குமா? அது தான் சலுகைகளை அள்ளிவிட்டபடி இருந்தார். டாஸ்மாக்கும் மணலும் கண்டிப்பாக கஜானாவின் இந்த சலுகை ஓட்டைகளை அடைக்க உதவியிருந்திருக்கும்.

அய்யா பார்த்தார். சைக்கிளாவது பராவாயில்லை. ஒரு உதவியாயிருந்தது. வண்ண டிவி எதற்கு?(பச்சைபுள்ள மாதிரி விவரம் புரியாம!)

இன்றைக்கு அதிமுக வந்துவிடும் என பயப்படுபவர்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். பின்னர் எப்படி சலுகை வாக்குறுதிகளை குடுக்கிறார்கள்? இவர்கள் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே!

இப்போதைக்கு இன்றைக்கு இது கிடைக்கு அது லாபம் என நினைத்து ஓட்டு போடுவதை நிறுத்தும் வரையில் இது மாறாது.

7:24 AM, March 30, 2006
Gopalan Ramasubbu said...

He has promised to give 1000*6 for pregnant woman.This is shocking coz each year TN population increases by 10 lakhs.So he has to allocate 6000000000 Rs/year just for pregnant woman.what to say?வயசு ஆக ஆக அறிவு மங்கும்னு சொல்வாங்க உன்மை தான் போல.

7:31 AM, March 30, 2006
Radha N said...

ஜெய் அரசு கட்டாயமாக நிதிநிலை (வெள்ளை) அறிக்கை சமர்ப்பித்தே ஆக வேண்டும்

7:36 AM, March 30, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

/*
வயசு ஆக ஆக அறிவு மங்கும்னு சொல்வாங்க உன்மை தான் போல
*/

இது கலைஞரின் அறிப்பாக மட்டுமே இருக்காது. திமுகவில் உள்ள பலரின் கூட்டுமுயற்சி தான்

இதில் பல அறிவிப்புகளை நிறைவேற்ற முடியாது. தமிழக நிதி நிலைமையை கண்காணிக்கும் முறை இப்பொழுது வலுப்பெற்று உள்ளது. மத்திய அரசின் சில குழுக்கள், உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் என பலவற்றை சார்ந்து தான் தமிழக நிதி நிலைமையை பராமரிக்க வேண்டும்

பல முறை ஆட்சியில் இருந்தவர்களுக்கு தமிழக நிதி நிலைமை இதற்கு இடமளிக்குமா என்பது குறித்து தெரியாமல் இருக்க முடியாது

இது மக்களை ஏமாற்றும் வேலை

8:17 AM, March 30, 2006
siva gnanamji(#18100882083107547329) said...

irresponsible manifesto
this does not reflect the credibility of responsible matured politician
liquor to father; meals to children--enough to catch votes--
the same strategy is continued

8:39 AM, March 30, 2006
Gopalan Ramasubbu said...

/*இது கலைஞரின் அறிப்பாக மட்டுமே இருக்காது. திமுகவில் உள்ள பலரின் கூட்டுமுயற்சி தான்/*

திமுக முதல் கட்ட தலைவர்கள் எல்லோரையும் முட்டாள்கள் என்று சொல்கிறீர்களே சசி?இது நியாயமா?;)) haha,just kidding.

8:00 PM, March 30, 2006
Anonymous said...

karunanithiyin arivippugal anaithum orey oru nokkathirku mattumthaan - eppadiyavathu thanathu thanayan Stalinai muthal amaicharaaga amarthividavendun.

5:49 AM, April 01, 2006