Tuesday, April 04, 2006

என்னுடைய தேர்தல் கணிப்பு

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது. அது மட்டுமில்லாமல் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் 1லட்சத்திற்கு மேல் தான் இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்வளவு வாக்குகள் திமுக கூட்டணிக்கு இடமாறியதன் காரணமாக அதிமுக தமிழகமெங்கும் வெகுசில சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதற்கு திமுக கூட்டணி பலம் ஒரு காரணம் என்றால் தமிழக அரசுக்கு எதிராக இருந்த Anti incumbency factor ஒரு முக்கிய காரணம்.
ஆக, திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் 23% முதல் 24% இழக்க வேண்டும்.

இந்த Anti incumbency factor மொத்தமாக காணாமல் போய் விட்டது, ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் மக்களை அதிமுகவிற்கு சாதகமாக திருப்பி விட்டது போன்ற ஒரு பிம்பம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு ஆதரவாக சிறிது ஓட்டுக்கள் இடமாறலாம். ஆனால் திமுக -23% முதல் -24% ஓட்டுக்களை இழக்க எந்தவித காரணங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்களில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு மக்கள் மத்தியில் இயல்பாக ஆதரவு கூடியே இருந்து வந்திருக்கிறது. அரசின் மிதமிஞ்சிய செயல்பாடுகள் மட்டுமே மக்களை ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றும்.

ஆனால் ஜெயலலிதா சில சலுகைகளை பறித்து திரும்ப கொடுத்தார், சில சலுகைகள் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு ஆதரவான நிலை எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிறிதளவு ஓட்டுக்கள் இடமாறாலாம் என்ற கோணத்திலேயே நான் இதனைப் பார்க்கிறேன்.

ஜெயலலிதா எடுத்த பல நடவடிக்கைகள் பொருளாதார பார்வையில் பாரட்டப்பட வேண்டியவை என்ற எண்ணமுடையவன் நான். ஆனால் அது அவருக்கு அரசியலில் தோல்வியையே ஏற்படுத்தும். பொருளாதாரச் சீர்திருத்தம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் கைவைப்பதல்ல என்பது தான் இந்தியாவில் யதார்த்தமான அரசியல் நிலை. பாரதீய ஜனதா அரசு தோல்வியடைந்தது கூட இதனை உறுதிப்படுத்தியது. இதனைக் கடந்து ஒரு தனித்த பொருளாதார சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களுக்கு சலுகைகளையும் கொடுக்க வேண்டும் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் அரசு கொடுக்கும் சலுகைகள் பாதிக்காத வண்ணம் கொண்டுச் செல்ல வேண்டும். இது தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால்.

ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும். இது போலவே அவரின் பல நடவடிக்கைகளைப் பார்க்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் வேறுபாடு தெரிகிறது. ஜெயந்திரரை கைது செய்த பொழுது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரு விஷயம் மட்டும் இந்த வகையில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.

ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர் வழங்கிய கவர்ச்சிகரமான பல திட்டங்களுக்கு ஈடுகொடுக்க தமிழகத்தின் ஆதி கால பிரச்சனையான அரிசி 2ரூபாயில் இருந்து இன்றைய நவீன கவர்ச்சியான கலர் டீவி வரை கருணாநிதி அறிவித்து இருக்கிறார். கருணாநிதியின் இந்த திட்டங்கள் ஓட்டுக்களைப் பெற்று கொடுக்க முடியுமா என்பதும் ஜெயலலிதா வழங்கிய சலுகைகள் ஓட்டுக்களை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிகளே.

திமுகவின் கூட்டணி பலம், ஆளும்கட்சிக்கு எதிரான Anti incumbency factor, திமுகவிற்கு எதிராக பெருமளவில் இடம்மாற முடியாத அளவுக்கு (-23% முதல் -24%) இருக்க கூடிய கடந்த பாரளுமன்ற தேர்தல் vote swing, பல தொகுதிகளில் திமுக களமிறக்கி உள்ள வலுவான வேட்பாளர்கள் போன்றவை மூலம் இந்த தேர்தல் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே அமையும் என்று நான் நினைக்கிறேன்.

என்னுடைய கணிப்பு தவறாக கூட அமைந்து விடலாம். மக்களின் உணர்வுகளை கணிப்பது எளிதல்ல...

பங்குச்சந்தையை கணிப்பதை விட தேர்தலை கணிப்பது மிகக் கடினம் தான்...

9 மறுமொழிகள்:

பாலசந்தர் கணேசன். said...

சசி அவர்களே,

நீங்கள் சொல்லுகிற கூட்டணி கணக்கு ஒரு முறை தப்பாகி விட்டது. எம்.ஜி.ஆர் இரண்டு கம்யூனிஸ்ட்கள் கட்சிகளோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அவ்வாறு அந்த அளவு ஒட்டுக்கள் இடம் மாறுமா என்பது கணிக்க கடினமாக உள்ளது.

குமுதத்தின் கருத்து கணிப்புகள் அ.தி.மு.க விற்கு சாதகமாகவே உள்ளன. இன்னமும் சொல்லபோனால் இதுவரை வந்துள்ள மூன்று சுற்று கணிப்பினில் அ.தி.மு.க பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

நீங்கள் சொல்லியபடி அதிக அளவு ஒட்டு இடம் மாறாது என்பது தி.மு.க வின் நம்பிக்கை

8:16 PM, April 04, 2006
VSK said...

இது முழுக்க முழுக்க உங்கள் கற்பனைக் கருத்தே தவிர, உண்மை அல்ல!

ஜெயேந்திரர் கைது பற்றி மனம் புழுங்கிக் கொண்டிருப்பவர்களும், அவருக்கு இழைத்த அவமானங்களைக் கண்டு கொதித்துக்கொண்டிருப்பவர்களும் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள்.

எஸ்.வீ.சேகரை வைத்து தப்புக்கணக்கு போடாதீர்கள்!

இவர்கள் ஓட்டு முழுவதும், கேப்டனுக்கோ அல்லது பி.ஜே.பி.க்கோதான் விழும்!

அதனால் ஒரு பயனும் இல்லை என்ற் நிலை ஒருக்கால் வந்தாலும்!

அதுதான் இந்தத் தேர்தலில் நாம் காணப்போகும் ஓட்டு/மன மாற்றம்!

9:03 PM, April 04, 2006
தயா said...

உங்கள் கட்டுரையின் முதல் வரியிலேயே 22% ஓட்டுகள் இடம் மாறின என்று தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதிகரித்திருக்கிறது என்றல்ல!

அது திமுகவுக்கு ஆதரவான Swing vote என்றால் அதே போல 23% அதிமுகவுக்கு ஆதரவாக மாறாது என எப்படி கணிக்கிறீர்கள்?

ஜெயேந்திரர் கைதால் மணம் புண்பட்டிருப்பது அவரின் தீவர பக்தர்களே. அவர்களும் சொற்ப எண்ணிக்கையில் தான். பிராமணர்கள் எல்லோரும் அவரை ஆதரிப்பவர்கள் அல்ல.

இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுக்கு ஆதரவாக கருணாநிதியைவிட ஜெவை தான் ஏற்றுக்கொள்வார்கள். கடந்த ஆட்சியின் போதும் சரி, இந்த ஆட்சியின் போதும் கோயில்களில ஏராளமான மராமத்து பணிகளை அவர் தான் செய்திருக்கிறார். அவர் தனது சொந்த பரிகாரங்களுக்காக தான் இத்தனையும் செய்கிறார் என செய்திகள் சொன்னாலும் தமிழக கோயில்கள் பல ஜெவின் ஆட்சியில் தான் புனரமைப்பு பெற்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

11:07 PM, April 04, 2006
Anonymous said...

//ஜெயேந்திரர் கைது பற்றி மனம் புழுங்கிக் கொண்டிருப்பவர்களும், அவருக்கு இழைத்த அவமானங்களைக் கண்டு கொதித்துக்கொண்டிருப்பவர்களும் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள்//

he he he. This is the biggest joke of the year so far. Ayya, do you remember what happend during the kanchipuram election. The "MADA" people went around kanchi asking the people to vote for DMK. What was the result??

Only a section of brahmins respect & follow irulneeki subbu. I know some orthodox brahmins who hate him to the core. So dont generalize the incident.

11:33 PM, April 04, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

Anti incumbency factor மற்றும் கூட்டணி பலம். இவை தான் ஓட்டுக்கள் இடமாறக் காரணம் என்பதை பதிவில் கூறியிருக்கிறேன்.

அதிமுகவிற்கு ஆதரவாக இந்த வாக்குகள் ஏன் இடம் மாறாது என்பதையும் இவ்வாறு விளக்கி இருக்கிறேன்

//
திமுக -23% முதல் -24% ஓட்டுக்களை இழக்க எந்தவித காரணங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்களில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் ஒரு கட்சிக்கு மக்கள் மத்தியில் இயல்பாக ஆதரவு கூடியே இருந்து வந்திருக்கிறது. அரசின் மிதமிஞ்சிய செயல்பாடுகள் மட்டுமே மக்களை ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றும்.
//

ஜெயந்திரர் போன்ற விஷயங்கள் தமிழக தேர்தலில் ஒரு பொருட்டு அல்ல. ஒரு உதாரணமாகத் தான் அதைக் கூறினேன்

11:34 PM, April 04, 2006
மு.கார்த்திகேயன் said...

I agree with your comments Sasi.

Actually in 2001, Congress, Communist and PMK were with ADMK with made them to come power. But same alliances are in DMK.

Another thing, If Vijayakanth going to get 10% of Votes it may be 6% from DMK and 3% from ADMK and 1% from neutral. But on another side, BJP will get 2%, then it will be from ADMK bank only.
For Example, If we consider Mylapore, S Ve Shekar, he got that place with the faith of getting all brahmins vote. If BJP (Chandralekha from Subramaniya Swamy Party) also going to stand there, they may split the brahmins vote, which will make Napolean to win again.
In Southern districts, DMK dont have much vote bank when compared to ADMK+MDMK..but karthik factor, may pull some of the Mukkulaththor votes to his party, which will again make problem for ADMK...

And also, in 2001 assembly, MK Azhagiri made the DMK to defeat by his moves..For example, PTR Palanivel rajan loss bcos of that. Now that factor also not there..

And also, if DMK get 15% of that 22%, then no can stop them from getting major victory.

12:31 AM, April 05, 2006
தயா said...

உங்கள் கணிப்புப்படியே அவை இடம் மாறிய ஓட்டுக்கள் தான். அவை திமுக ஓட்டுக்கள அல்ல. அதாவது அதிமுக அணிக்கான ஓட்டுக்கள் இடம் மாறியிருக்கின்றன. அப்படி என்றால் அவற்றை ஏன் அதிமுக மீண்டும் பெறாது? அல்லது திமுக எப்படி தக்க வைத்துக் கொள்ளும்?

Anti cumbency factorஐ கிருஷ்ணாவும் சந்திரபாபு நாயுடுவும் தேர்தலுக்கு பிறகு தான் உணர முடிந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் ஜெவிற்கு அந்த பாடத்தை கற்றுக்கொடுத்து தவறுகளை திருத்தி கொள்ள அவகாசமும் அளித்தது. ஜெவும் புரிந்து கொண்டுவிட்டார். அதனால் ஏற்கனவே இடம்மாறிய அதிமுக அணிக்கான வாக்குகள் சதவிகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.

இழுபறி சட்டமன்றம் அமைய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

7:21 AM, April 05, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

தயா,

நான் ஏற்கனவே இதற்கு என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் பதிலளித்து விட்டேன். நீங்கள் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

திமுக ஓட்டுக்களை முழுவதும் இழக்காது என்று நான் சொல்ல வில்லை. 23% - 24% இழக்க முடியாது என்றும், ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி அவ்வளவு ஓட்டுக்களை இழக்க வாய்ப்பில்லை என்றே கூறினேன்.

இந்தியாவெங்கும் நடக்கும் வாக்களிக்கும் முறைகளை கவனிக்கும் பொழுது மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை சார்ந்தே மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். இயல்பாகவே மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகளுக்கு Advantage இருக்கும். அந்த Advantage திமுகவிற்கு இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

அதிமுகவிற்கு இவ்வளவு ஓட்டுக்கள் இடம் மாற என்ன காரணம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சிறந்த செயல்பாடா, ஆட்சியின் இறுதிக் காலத்தில் வழங்கிய சலுகைகளா ?

ஆட்சிக் காலத்தின் இறுதியில் வழங்கிய சலுகைகள் அவருக்கு Advantage என்றால் சென்னை தவிர பிற இடங்களில் வெள்ள நிவாரணம் போதிய அளவில் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா ?

மதிமுகவின் ஓட்டுக்கள் + அதிமுகவிற்கு இடம்மாறக் கூடிய ஓட்டுக்கள் போன்றவற்றுக்கும் பிறகு கூட திமுகவிற்கு Advantage இருக்கிறது.

நான் என் பதிவில் கூறியுள்ளது போல இது என்னுடைய கணிப்பு தான். மக்களின் எண்ணங்களை கணிப்பது கடினம் தான். சாதாரண மக்களில் ஒருவனாக இயல்பான நிலையில் இதனை அணுகும் பொழுது எனக்கு இது தான் தெரிகிறது.

7:27 PM, April 05, 2006
தயா said...

உங்கள் பதில் எனக்கு புரிந்தது. அதனால் தான் மீண்டும் கேட்டேன்.

அதிமுக Anti cumbency factorஐ சரி செய்ய ஆரம்பித்தது கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதுவும் உடனடியாக.

சீர்திருத்தவாதிகள் ஒத்துக்கொண்ட கொள்ளக்கூடிய நடவடிக்கைளின் கடுமையை ஜெ குறைத்துவிட்டார். தேவையில்லாத சட்டங்களை வாபஸ் பெற்றுவிட்டார். சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுத்தார். சுனாமி, வெள்ள நிவாரணப் பணிகளின் போது அரசியல் குறுக்கீடு இல்லாமல் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட வைத்து ஒத்துழைப்பும் கொடுத்ததனாலேயே அவை பேசப்படுகிறது. சன் செய்திகள் மட்டுமே பார்ப்பவர்களுக்கு இது விளங்க வாய்ப்பில்லை. (ஜெயா பாருங்கள் என்று சொல்லவில்லை)

வெள்ள நிவராணம் வெள்ள வந்த ஊருக்கு தான் கொடுக்க முடியும். திருச்சியில் சிதம்பரத்தில் என நான் கண்கூடாக பார்த்த வரையில் வெள்ள நிவாரண பணிகள் ஓழுங்காகவும் விரைவாகவும் தான் நடந்தது.

இதுவரையில் ஆதரிக்காத பத்திரிக்கைகளும் இன்று ஜெவை ஆதரிக்கின்றன. (அவர்களுக்கு இருக்கும் கட்டாயங்கள் வேறு). 1996 தேர்தலில் மீடியாவின் பங்கு பெரிது.
அந்த Advantage இருக்கத்தான் செய்யும்.

அதிமுக அணிக்கான வாக்குகள் இடம் மாற (23% அளவில்) வாய்ப்புகள் குறைவு. நீங்கள் அதை திமுகவின் வாக்குகளாக கணக்கெடுப்பதால் தான் திமுக அவற்றை இழக்கும் வாய்ப்புகள் குறைவு என்கிறீர்கள்.

மற்ற மாநில தேர்தல்களில் இந்த அரசு எதிர்ப்பு நிலையை உணரவோ சமாளிக்கவோ அவகாசம் இல்லை. ஜெக்கு அது கிடைத்தது. அதை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார்.

நீங்கள் சொல்வது போல திமுகவிற்கான advantage-ம் இருக்கும்

அதனால் தான் எனக்கு இழுபறி சட்டமன்ற வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.

11:22 PM, April 05, 2006