Tuesday, July 04, 2006

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 6


கடந்தப் பதிவில் கூறியிருந்தது போல புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் "அவசர" தடை சிலக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. இது முழுக்க முழுக்க ஐரோப்பிய யூனியனின் ஒப்புதலுடன் செய்யப்பட்டது என்றும் கூற முடியாது. புலிகள் மீது ஒரு "நிர்பந்தத்தை" விதிக்க அமெரிக்காவின் "வற்புறுத்தல்" காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டது என்பது பொதுவாக அனைவரும் கூறும் வாதம். இது சரியானதே. ஆனாலும் அமெரிக்காவின் வற்புறுத்தல் தவிர திடீர் என்று விதிக்கப்பட்ட இந்த தடைக்கு சில பிண்ணனிக் காரணங்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

மே மாதம் 11ம் தேதி நடந்த நிகழ்வுகள் தான் புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். அன்று Pearl Cruise என்ற சிறீலங்கா கடற்ப்படையின் கப்பல், சுமார் 700 கடற்ப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு திரிகோணமலையில் இருந்து காங்கேசன்துறை செல்லத் தொடங்கியது. அந்தக் கப்பலில் இரண்டு SLMM (Srilanka Monitoring Mission) பிரதிநிதிகளும் பயணம் செய்து கொண்டிருந்தனர். கடந்த ஆறு மாத காலங்களில் தொடர்ந்து நடந்து வந்த கடற்ச்சமரின் உச்சகட்டம் அன்று நடந்தது. திரிகோணமலையில் இருந்து காங்கேசன்துறைச் செல்ல புலிகளின் பகுதிகளை ஒட்டிய கடல் வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்தக் கடற்ப்பரப்பு தங்களுக்குச் சொந்தமானது என்பதை முன்நிறுத்துவதில் புலிகளுக்கு ஆர்வம் அதிகம்.

இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக சிறீலங்கா கடற்ப்படையின் பிற கப்பல்களும் சென்று கொண்டிருந்தன. இதனை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய கடற்ப்பரப்பில் புலிகள் தாக்கினர். மிகக் கடுமையான சண்டை நடந்தது. புலிகளின் தற்கொலைப் படையினரும் இந்த தாக்குதலில் பங்கேற்று இருந்தனர். அவர்களால் 700கடற்ப்படை வீரர்களை கொண்ட கப்பலை எளிதில் முழ்கடித்து இருக்க முடியும். ஆனால் அதனைச் செய்ய வில்லை. மாறாக தங்களின் கடற்ப்பரப்பு மீது இருக்கும் ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் அந்தக் கப்பலை சர்வதேச கடல்பரப்பிற்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். சிறீலங்கா இராணுவத்தின் அந்தக் கப்பலும் சர்வதேச கடற்ப்பரப்பிற்க்குச் சென்று பிறகு காங்கேசன் துறைமுகத்தைச் சென்றடைந்தது (அது குறித்தச் செய்தி)

இதன் மூலம் அவர்கள் விடுக்கும் செய்தி தெளிவானது. சிறீலங்கா கடற்ப்படைக்கு முல்லைத்தீவினை ஒட்டிய கடற்ப்பரப்பு மீது எந்த அதிகாரமும் இல்லை. அதாவது இந்த கடற்ப்பரப்பு தங்களுக்குச் சொந்தமானது என்பதாகவும் இந்துமகா சமுத்திரத்தின் கடற்பரப்பில் தாங்களும் ஒரு கடற்ப்படை என்பதை அறிவிக்கும் ஒரு செயலாகவும் இதனை முன்நிறுத்தியிருந்தனர்.

இதற்குப் பிறகு நடந்த SLMM - புலிகள் மோதல் முக்கியமானது. இந்தப் பிரச்சனைக்குப் பிறகு "இலங்கையை சுற்றிலும் இருக்கும் அனைத்து கடற்பரப்பும் அரசாங்கத்திற்கு "மட்டுமே" சொந்தமானது என்றும், புலிகளுக்கு இந்த கடற்ப்பரப்பு மீதோ, இலங்கையின் வான்வெளி மீதோ எந்த அதிகாரமும் இல்லை" என்றும் SLMM கூறியது.

Sea surrounding Sri Lanka is a Government Controlled area. Non-state actors cannot rule open sea waters or airspace. The LTTE has therefore no rights at sea

இது புலிகளுக்கும், SLMMக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியது. கடற்ப்புலிகளின் தலைவர் சூசை, அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர், புலிகளின் பகுதிகளைச் சார்ந்த கடல், வான்வெளி மீது தங்களுக்கு முழு உரிமையும் இருப்பதாக தெரிவித்தனர். ஒரு வகையில் இவ்வாறு தங்களின் ஆதிக்கத்தை கடல் மீது நிலை நிறுத்துவது தான் இந்தப் பிரச்சனையின் முக்கிய நோக்கமாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக புலிகளின் கடற்ப்படைக்கும், சிறீலங்கா இராணுவ கடற்ப்படைக்கும் இடையே நடந்த மோதலின் முக்கிய நோக்கமே இதனை நிலை நிறுத்துவதாகத் தான் இருந்து வருகிறது.

சூசை, மற்றும் தமிழ்ச்செல்வனின் அறிக்கையை படிக்கும் பொழுது இதனை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. தமிழ்நெட் இணையத்தளம் இவ்வாறு தெரிவிக்கிறது

Soosai reiterates sovereign right to seas bordering Tamil Homeland என்று தொடங்கும் அந்தச் செய்தி இவ்வாறு தெரிவிக்கிறது.

"We have openly established our control, and have unequivocally asserted our rights to maritime waters adjoining our homeland, in the same way we recovered and control large areas of northeast. We are not prepared to relinquish sovereign rights to the seas which we have won with the sacrifice of our people," said Col.Soosai

SLMM has no mandate to rule on Tamils sovereign rights - Thamilchelvan என்று தொடங்கும் மற்றொரு செய்தி இவ்வாறு தெரிவிக்கிறது

"We entered the peace process based on a status-quo achieved in the battlefield in our territory. Nobody has the right to pass judgement on the sovereign rights of our access to the adjacent sea and airspace of our homeland," told LTTE's Political Head S.P.Thamilchelvan

SLMM-புலிகளின் இந்த கருத்து மோதல் நடந்தது மே 12ம் தேதி.

புலிகள் தங்களை ஒரு கடற்ப்படையாக நிலை நிறுத்திக் கொள்ள முனைவதை மிகத் தெளிவாக இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. இந் நிலையில் தான் அமெரிக்கா தனது கடந்த கால நிர்பந்தங்களை மீண்டும் வலியுறுத்தியது. அதன் விளைவு மிகச் சில தினங்களில் வெளிப்பட்டது. அதாவது மே 17ம் தேதி ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விரைவில் தடை விதிக்கும் என்ற செய்தி வெளியாகிறது. விரைவில் என்றால் அடுத்த இரு தினங்களில் இந்த தடை வரும் என்று அறிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் தடை விதிப்பது உறுதி என்ற வகையில் மே20ம் தேதி செய்திகள் வெளியாகின.

புலிகள் மீது தடை விதிப்பதை நார்வே மற்றும் பிற நார்டிக் நாடுகள் விரும்பவில்லை (Scandinavian countries). இது சமாதான முயற்சிகளுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். இது தவிர இந் நாடுகளுக்கு உலகின் பலப் பிரச்சனைகளில் சமாதான அணுசரணையாளராக ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் இருப்பதால், இது ஒரு நல்ல உத்தியாக இருக்காது என்பதும் அவர்களது எண்ணம் (என்னுடைய முந்தைப் பதிவைப் பார்க்கலாம்). இது தொடர்பாகவும் சில செய்திகள் அப்பொழுது வந்து கொண்டிருந்தன. என்றாலும் இதனை ஒப்புக்கொள்ளும்படி நார்வே மற்றும் இந் நாடுகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கடும் நிர்பந்தம் கொடுத்தன. இறுதியாக மே29ம் தேதி ஐரோப்பிய யூனியன் தடைவிதித்தது.

இதற்குப் பிறகு ஓஸ்லோவில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை அதிக கவனத்தை ஈர்த்து இருந்தது. புலிகள் மீதான தடைக்குப் பிறகு உலக நாடுகளின் நிர்பந்தத்தை புலிகளிடம் மீண்டும் வலியுறுத்த இந்த பேச்சுவார்த்தை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த கவன ஈர்ப்பை தங்கள் நிலையை வெளிப்படுத்த புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

முதலில் சிறீலங்கா அரசு பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததன் மூலம் தங்கள் மீது கவனத்தை ஈர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் SLMM குழுவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று புலிகள் கோரிக்கை விடுத்தனர். புலிகளின் இந்த எதிர்வினை உலகநாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புலிகள் மீது நிர்பந்தத்தை விதிக்க மேற்க்கொண்ட இந்த நடவடிக்கை எதிர்வினையாக தங்கள் மீது பாய்ந்ததை உலக நாடுகள் மற்றும் அணுசரணையாளரான நார்வே எதிர்பார்க்க வில்லை.

இவை தவிர பொதுவாக இத்தகைய சமாதான முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை ஒரு முக்கியமான வெளியுறவுக் கொள்கையாக கடைப்பிடித்து வரும் நார்ட்டிக் நாடுகளுக்கு, புலிகள் தங்களை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற நிர்பந்தித்தது அவர்களின் வெளியூறவுக் கொள்கைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன் மூலம், எந்த நாட்டாலும் தங்களை நிர்பந்திக்க முடியாது என்பது மட்டுமில்லாமல், அந்த நாடுகளின், அமைப்பின் நடுநிலைமையை கேள்விக்குரியாக்குவது, அதன் மூலம் தங்களின் நிலையை வெளிப்படுத்துவது, தங்களுடைய முயற்சி "தமிழ் ஈழத்தை" நோக்கியதாக மட்டுமே இருக்கும் என்பதை அறிவிப்பது என்பன தான் புலிகளின் நோக்கங்களாக இருந்தது. ஐரோப்பிய யூனியனின் தடை மிகத் தவறான ஒன்று என நார்வே மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த Scandinavian நாடுகளான ஸ்வீடன், டென்மார்க் போன்றவையும் பின்னர் தெரிவிக்க தொடங்கியதை கவனிக்க வேண்டும்.

முன் எப்பொழுதையும் விட ஐரோப்பிய யூனியன் தடைக்குப் பிந்தைய நாட்களில் தங்களுடைய நோக்கம் தமிழீழம் என்பதை மிகத் தெளிவாகவே உலக நாடுகளுக்கு புலிகள் உணர்த்தியுள்ளனர். ஓஸ்லோவில் வெளியிட்ட அறிக்கை அதனையே வெளிப்படுத்தியது

The de facto State of Tamil Eelam exercising jurisdiction over 70 percent of the Tamil Homeland, with control over the seas appurtenant there, with its own laws, independent judiciary, police force and full administrative apparatus

என்று தொடங்கும் அந்த அறிக்கை,

Reaffirms its policy of finding a solution to the Tamil national question based on the realisation of its right to self-determination.

என்று முடிந்துள்ளது.

தமிழர்களின் "சுயநிர்ணய உரிமை" என்பதை நோக்கி தான் தீர்வு இருக்க வேண்டும் என்பது தான் அந்த அறிக்கை மூலம் புலிகள் தெரிவித்த செய்தி. அது தமிழீழம் என்பது தான் தீர்வாக இருக்க முடியும் என்ற புலிகளின் ஒரே அஜண்டாவை தான் வெளிப்படுத்துகிறது. இந்தியாவை நோக்கிய புலிகளின் அணுகுமுறை கூட இதனை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

புலிகளின் இந்த நிலைப்பாடு தான் இந்தப் பிரச்சனையின் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரித்து இருக்கிறது. சிறீலங்கா அரசாங்கம், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் அணுசரனையாளரான நார்வே என அனைத்து தரப்பிற்கும் இந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவது என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இப் பிரச்சனையில் எந்தக் குழப்பமும் இல்லாமல் ஒரே இலக்கை நோக்கி, சமயத்திற்கேற்ப தனது சாதூரியங்களை மாற்றி அமைத்துக் கொண்டு, தெளிவாக இருக்கும் ஒரே தரப்பு புலிகள் தான்.

புலிகளுக்கு தமிழ் ஈழம், சிறீலங்கா அரசுக்கு ஒரே நாடு, சர்வதேச சமூகத்திற்கு கூட்டாட்சி என மூன்று பக்கமாக இழுக்கப்படும் இந்தப் பிரச்சனையில், சமாதானம் என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது என்பதும் போர் என்பது தவிர்க்க முடியாதது என்பதும் தான் தற்போதைய சூழ்நிலை.

(தொடரும்)

Tags



4 மறுமொழிகள்:

வன்னியன் said...

சசி,
நல்ல கட்டுரை,
இதற்கு முன்பிருந்த கண்காணிப்புக்குழுத் தலைவர் (பின் ஓய்வு பெற்றார், அண்மையில் காலமாகிவிட்டார்) கடலில் புலிகளின் உரிமைகளை அங்கீகரித்து புலிகளுக்குச் சாதகமான கூற்றைத் தெரிவித்தமையையும், அக்கூற்றை வைத்தே புலிகள் புதிய கண்காணிப்புக் குழுத்தலைவரை எதிர்கொண்டனர் என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம்.

சிங்களப்படையின் போக்குவரத்தை முடக்குவதென்பது வேறொரு வகையில் முக்கியத்துவமானது. வழமையாக சிங்களப்படை செய்யும் கீழ்த்தரமான வேலை, மக்கள் போக்குவரத்தை முடக்கிவிட்டு புலிகளோடு பேரம் பேசுவது. இப்போதும் அடிக்கடி கண்டிவீதியை மூடிவைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்கள்.

"இந்நிலையில் சிங்கள இராணுவத்தின் கேவலமான இன்னொரு பேரம் பேசல் ஞாபகம் வருகிறது.
1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம். ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையை திடீரென மூடிவைத்தார் அப்போதைய இராணுவத்தளபதி லயனல் பலகல்ல. மூடிவைத்துவிட்டு அவர் பகிரங்கமாகப் பேரம் பேசினார். என்ன பேசினார் தெரியுமா?
"புலிகள் அப்போதைய தங்கள் நிலையிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்."
அடப்பாவி!
ஜெயசிக்குறு என்று பெயரிட்டு யாழ்ப்பாணம் வரையான பகுதியைப் பிடிப்பதுதானே உங்கள் இலக்கு?"
இப்படியான சிங்களப்படைக்கு அவர்கள் வழியிலேயே (கவனிக்க மக்கள் போக்குவரத்தை முடக்குவதன்று) செல்லவேண்டும்.

இதுபற்றி நான் விரிவாக எழுதிய பதிவு இது.
எங்கள் கடல் எங்களுக்கானது.

______________________
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வெளியேற்றியே தீருவதென்பதில் புலிகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கிறார்கள். அதற்கான காலக்கெடுவாக செப்ரெம்பர் முதலாம் திகதியை நிர்ணயித்துவிட்டு அடிக்கடி அதை நினைவூட்டி வருகிறார்கள். உங்கள் முடிவைப் பரிசீலிக்க முடியுமா என்று புலிகளைக் கேட்டதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை மாற்றினால் நாங்களும் பரிசீலிக்கத்தயார் என்றுதான் பதில் கொடுத்துள்ளனர்.

10:48 PM, July 04, 2006
thamillvaanan said...

வணக்கம் சசி,
உங்கள் ஆழமான அலசலுக்கு நன்றி.

ஐரோப்பியதடை ஏற்படுத்துவதற்கு முன்னே அவ்வாறு தடை ஏற்படுத்தப்பட்டால் கண்காணிப்பாளர்கள் செயற்படமுடியாத நிலை உருவாகும் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஐரோப்பியதடையானது சில நியாயமான காரணிகளை கொண்டிருந்தாலும், அதே தடையை சிறிலங்கா அரசு மீதும் ஏற்படுத்தியிடுருந்தால் அது நிச்சயமாக ஐரோப்பியயூனியனின் நடுநிலைப்போக்கை எடுத்துக்காட்டியிருக்கும்.

வெறுமே அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக மேற்படி தடையை ஏற்படுத்திவிட்டு விடுதலைப்புலிகள் மீது செல்வாக்கு செலுத்தகூடிய இயல்நிலையை அது இழந்துநிற்கிறது. தற்போது விடுதலைப்புலிகளை பொறுத்தவரை பல்வேறு வெளிநாடுகளின் கெடுபிடிகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட மாதிரியான நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

தொடரும் சதுரங்க ஆட்டத்தினை பற்றிய பதிவுகளை தொடர்ந்தும் எழுதுங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்.

3:25 AM, July 05, 2006
Anonymous said...

Dear Sasi,
Once again you have given your analytical analysis of Eelam problem.
Tigers are very clear in their approch and conviction.
IC,USA,EU,India,Norway & Srilanka do not have clear understanding of the ground realities.I am waiting for your next article in this series.

10:36 AM, July 05, 2006
CAPitalZ said...

The one and only goal is nothing but "தனித் தமிழீழம்"

______
CAPital
http://1paarvai.wordpress.com/

11:44 AM, July 05, 2006