சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 7

திருகோணமலை துறைமுகம், அற்புதமான, மற்றும் பாதுகாப்பான இயற்கை துறைமுகம். இங்கு இரண்டு துறைமுகங்கள் உண்டு. உள் துறைமுகம் (Inner Harbour), வெளி துறைமுகம் - Outer Harbour என்று கூறுவார்கள். பாறைகளும், நிலங்களும் சூழ்ந்த துறைமுகம் தான் Inner Harbour எனப்படும் உள் துறைமுகம் (படத்தில் பார்க்கலாம்).இது நிலங்கள் சூழ அமைந்து இருப்பது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமான துறைமுகம். சுற்றிலும் நிலங்கள் இருப்பதாலும், ஆழம் அதிகம் இருப்பதாலும், நீர்முழ்கி கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கே பாதுகாப்பாக இருக்க முடியும். அது தவிர சுற்றிலும் நிலங்கள் சூழ, ஆழமும் அதிகமாக இருப்பதால் ரேடார் மற்றும் சோனார் (Sonar) மூலமான கண்காணிப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்.

இதனால் தான் பனிப்போர் காலத்தில் இந்த துறைமுகத்திற்காக அமெரிக்காவும், இந்தியாவும் கடுமையாக போட்டியிட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மிக முக்கியப் பலன், இந்த துறைமுகத்தையோ, இலங்கையின் வேறு எந்த துறைமுகத்தையோ, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையால் வேறு ஒரு நாட்டிற்கு கொடுக்க முடியாது என்பது தான். இதனால் அமெரிக்காவோ, சீனாவோ, பாக்கிஸ்தானோ திரிகோணமலை என்றில்லாமல் இலங்கையின் எந்த ஒரு துறைமுகத்திலும் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நுழைய முடியாது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரே பலன் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்பட்டது தான். ஒரு வகையில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே அது தான். தன்னுடைய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற காரணத்தால் தான், இந்தியா இலங்கைப் பிரச்சனையில் கடந்த 15ஆண்டுகளாக "நேரடியாக" எந்த தலையீட்டையும் செலுத்தவில்லை.
2000ம் ஆண்டு அக்டோபர் மாதம், திரிகோணமலை துறைமுகத்தின் மீது புலிகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். இந்த தாக்குதலை கவனிக்கும் பொழுது அவர்களின் எதிர்கால தாக்குதல் உத்திகள் நமக்கு தெரியக்கூடியதாக இருக்கிறது. கடற்ப்படையின் பலம் அவர்களிடம் இருக்கும் தளவாடங்கள் என்றால், புலிகளின் பலம் அவர்களிடம் இருக்கும் தற்கொலைப் படை என்று சொல்லப்படும் கரும்புலிகள் தான். கரும்புலிகள் படையை அரசியல் தலைவர்களின் மீதான தக்குதல்களுக்கு மட்டும் என்றே அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் சிறீலங்கா இராணுவம் என்றில்லாமல் வேறு எந்த நாடும் அஞ்சக்கூடிய படை இந்தக் கரும்புலிகள் தான். முக்கியமான பொருளாதார, இராணுவ இலக்கு தவிர போரின் பொழுதும் கரும்புலிகளின் தாக்குதல் உக்கிரமாகவே இருக்கும். யானையிறவு தாக்குதலில் கூட கரும்புலிகளின் தாக்குதல் தான் சிறீலங்கா இராணுவத்தை தோல்வியுறச் செய்தது.

2000ம் ஆண்டு புலிகள் இந்த Stealth Boatsஐ பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தியது இராணுவத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இராணுவத்தினர் ஆயுதங்களை பெறும் பொழுதெல்லாம், அந்த ஆயுதப் பலத்தினை அழிக்க கூடிய வல்லமையை புலிகள் பெற்று விடுகின்றனர். இப்பொழுது கூட புலிகளிடம் சில சிறிய வகை நீர்முழ்கிக் கப்பல்கள் இருக்க கூடும் என்றும், இவை தற்கொலைப் படையினருக்கு பயன்படக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. இவை தவிர கடலுக்குள் முழ்கிச் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய சிலப் படைப்பிரிவிரை புலிகள் வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது. இத்தகையப் படையுடன் உயிரைச் துச்சமென மதிக்கும் படையினரும் சேர்ந்து கொள்ள, புலிகளுக்கு சிறீலங்கா இராணுவத்தைக் காட்டிலும் ஒரு Advantage அமைந்து விடுகிறது.
இது ஒரு புறம் இருக்க, புலிகள் இந்த துறைமுகத்தை கைப்பற்றுவது அத்தனை எளிதல்ல. சிறீலங்கா கடற்ப்படை மிகவும் பலமாக இங்கு நிறுவப்பட்டிருக்கிறது என்பது மட்டுமில்லாமல், தன்னுடைய பலத்தை சிறீலங்கா கடற்ப்படை அதிகரித்துள்ளது.
ஆனாலும் சிறீலங்கா இராணுவத்தை தோற்கடிக்க கூடிய சில வழிகளைப் புலிகள் கடந்த ஆறு மாதங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள். கடற்ப்படை வீரர்களின் தன்னம்பிக்கையை குலைப்பது, சிறீலங்கா இராணுவத்தின் ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகளை அழிப்பது, சிறீலங்கா இராணுவத்தினுள் ஊடுறுவது போன்றவையே அந்த நடவடிக்கைகள். இதைத் தான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புலிகள் செய்து வருகிறார்கள். இராணுவமும் இதே வகையில் தங்கள் Deep Penetration Unit மற்றும் கருணா குழு மூலமாக எதிர்த்தாக்குதலை தொடுத்து வருகிறது. இவை இரண்டுமே மறைமுகமாக நடந்து வரும் போர் தான் என்றாலும் எதிர்கால போருக்கான ஆயத்தங்களாகவே இருக்கிறது.
புலிகளுக்கும், சிறீலங்கா இராணுவத்திற்கும் இடையே நடக்கும் இந்த மறைமுக தாக்குதல் நேரடி தாக்குதலை விட மிக மோசமாக இருப்பதன் வெளிப்பாடு தான் கடந்த ஆறு மாதங்களாக வடகிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் கொலை வெறி தாக்குதல்கள். இந்த தாக்குதலை தொடுப்பது சிறீலங்காவின் இராணுவ மற்றும் துணை ஆயுதக் குழுக்கள். இது போலவே கொழும்புவில் நடக்கும் தாக்குதலை நடத்துவது புலிகளின் உளவுப் பிரிவு.
அடுத்து நடக்க இருக்கும் போர், இறுதிப் போராக இருக்கும் என புலிகள் கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த இறுதிப் போரில் முக்கியமான படையாக இருக்கப் போகும் மற்றொரு பிரிவு புலிகளின் உளவுப்படை. புலிகளின் இந்த உளவுப்படை சிறீலங்கா அரசின் பொருளாதார, இராணுவ மையங்கள் என்றில்லாமல் கொழும்பு எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. சிறீலங்கா அரசு முன் இப்பொழுது இருக்கும் மிகப் பெரிய சவால் இந்த உளவுப்பிரிவினரிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதே. ஏனெனில் வடகிழக்கு மாகாணங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைத் தொடர்புகளையும், இராணுவத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை துண்டிக்கவும் புலிகளின் உளவுப்படை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
புலிகளின் உளவுப்படையை எதிர்கொள்வது, சிறீலங்கா அரசுக்கு அத்தனை எளிதாக இருக்காது
ஏனெனில் புலிகளின் உளவுப்பிரிவில் இருப்பவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் அதிக அளவில் புலிகளின் உளவுப்படையில் இருப்பதே சிறீலங்கா அரசிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது
( அடுத்தப் பதிவுடன் இந்த தொடர் நிறைவு பெறும் )
Tags
Strategic Analysis
தமிழ்ப்பதிவுகள்
ஈழம்