வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, August 20, 2006

இலங்கை நிலவரம்

இலங்கையில் மீண்டும் போர் துவங்கி விட்டது. கிழக்கு பகுதியில் தொடங்கி பல முனைகளில் நடைபெற்ற போர் இப்பொழுது யாழ் நோக்கி திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் இலங்கையின் பிற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மிக மோசமான நிலைக்கு வெகு விரைவில் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலை ஏற்படுகிறது. இலங்கையில் இருந்து வரும் செய்திகளைக் கொண்டு பார்க்கும் பொழுது புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் யாழ்ப்பாண மக்கள் பகடை காய்களாக பயன்படுத்தப்படுகிறார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

புலிகள் யாழ்ப்பாணத்தை முற்றுகை இட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவிச பொருட்கள் செல்லக்கூடிய A9 புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி வழியாக செல்வதால் அந்தப் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. பலாலி விமாத்தளம் புலிகளின் ஆர்ட்டிலறி தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதால் விமானங்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கான கடல்வழியான போக்குவரத்தும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி வழியாகவோ அல்லது சர்வதேச கடல் வழியாகவோ தான் கொண்டு செல்ல முடியும். திரிகோணமலை துறைமுகமும் புலிகளின் ஆர்ட்டிலறி தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது. இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்குமான அத்தியாவிச பொருட்கள் கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை புலிகள் கைப்பற்றும் இந்த முயற்சியை கவனிக்கும் பொழுது அவர்கள் ஆனையிறவு முகாமை கைப்பற்ற மேற்க்கொண்ட முயற்சியைப் போலத் தான் உள்ளது. முதல் கட்டமாக இராணுவத்தினருக்கான அத்தியாவிச பொருட்களை தடை செய்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது, அவர்களின் மனவலிமை குலையும் நிலையில் அதிரடி தாக்குதலை நடத்துவது என்பது தான் புலிகளின் உத்தி. இந்த உத்தியினை சிறீலங்கா இராணுவம் சரியாக கணித்திருப்பதன் எதிர்நடவடிக்கை தான் யாழ்ப்பாணத்தை விட்டு பொதுமக்கள் வெளியேற அனுமதிக்காமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை. யாழ்ப்பாண மக்களையும் இந்தப் பிரச்சனைக்கு உள்ளாக்குவதன் மூலம் இதனை பொதுமக்களின் பிரச்சனையாக மாற்ற சிறீலங்கா இராணுவம் முயன்று கொண்டிருக்கிறது. நேற்று பி.பி.சி.தமிழோசைக்கு செவ்வி வழங்கிய ஒரு இராணுவ அதிகாரி, "புலிகள் எங்களை தாக்கும் பொழுது பொதுமக்களும் பாதிக்கப்படத் தான் செய்வார்கள்" என்று கூறினார். யாழ்ப்பாண மக்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு இந்த முற்றுகையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள சிறீலங்கா அரசு முனைந்து கொண்டிருக்கிறது. மக்களை யாழ்ப்பாணத்திலேயே வைத்திருப்பதன் மூலம் புலிகளின் பெரிய அளவிலான தாக்குதலை தடுத்திருக்கிறது. அது தவிர இந்த முற்றுகை தொடருமானால் புலிகளுக்கு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் தங்களுக்குச் சாதகமாக இருக்க கூடும் என்பது தான் சிறீலங்கா இராணுவத்தின் கணிப்பு. அது தவிர மக்கள் இச் சமயத்தில் வெளியேறும் பட்சத்தில் புலிகளின் ஆதரவு மக்கள் குழுக்கள் தங்கள் மீது கொரில்லா தாக்குதல் தொடுக்க கூடும் என்பதும் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

பொதுமக்களுக்கு பிரச்சனையில்லாத வகையில், மக்கள் போர்ப் பகுதியில் இருந்து வெளியேற வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் இலங்கையில் இப்பொழுது நடைபெற்று வரும் பிரச்சனையில் மக்கள் பகடைகாய்களாக பயன்படுத்தப்படுவது தான் நடந்து வருகிறது. மூதூரை புலிகள் தாக்கிய பொழுது மூதூர் முஸ்லீம் மக்களை புலிகள் தாக்கியதாக பிரச்சனை எழுந்தது. அதன் பிறகு மூதூரில் 15தமிழ் தன்னார்வ பணியாளர்கள் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக செஞ்சோலை அனாதை இல்லம் மீதான சிறீலங்கா விமானப்படையின் "பயங்கரவாத" தாக்குதல். இது ஒரு போர் முகாம் அல்ல என்று தெளிவாகியப் பிறகும், தொடர்ந்து இது புலிகளின் பயிற்சி முகாம் என்று சிறீலங்கா அரசு கூறிக் கொண்டுள்ளது

செஞ்சோலைக் குறித்த ஒரு குறும்படத்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு இணையத்தளத்தில் பார்த்திருக்கிறேன். அது அனாதைக் குழந்தைகளின் ஒரு காப்பகமாகத் தான் செய்லபட்டு வந்திருக்கிறது. புலிகளின் எதிர்ப்பாளராக அறியப்படும் D.B.S.ஜெயராஜ் கூட இது குறித்து மிக விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்

சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக ஹிந்து போன்ற ஊடகங்கள் செய்தி பரப்பும் நிலையில் இப்பிரச்சனையை தமிழக அரசியல் அமைப்புகள் கட்சி பேதமில்லாமல் கையாண்டுள்ளமை ஆறுதல் அளிக்கிறது.

அதே நேரத்தில் பள்ளி மாணவிகள் படுகொலைச் செய்யப்பட்ட நிலையிலும் அதனை அரசியலாக்கும் கருணா ஆதரவு குழுக்களின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. புலிகளின் "பாஸிசத்தை" எதிர்ப்பதை யாரும் குறைச்சொல்ல முடியாது. ஆனால் 61 பள்ளி மாணவிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை இந்தக் குழுக்களின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எதிர்கொண்ட விதம் அருவருக்கத்தக்க வகையிலே தான் இருந்தது. செஞ்சோலை புலிகளின் பயிற்சி முகாம் என்ற பொய்ச் செய்தியை "ஹிந்து" போன்ற "சிறீலங்கா ஆதரவு பத்திரிக்கைகளும்" அதிக முக்கியத்துவத்துடன் மனிதாபிமானம் இல்லாமல் வெளியிட்டு தங்களின் புலி எதிர்ப்பு "அரிப்பை" தீர்த்துக் கொண்டுள்ளன.

இந்தச் சண்டையை யார் முதலில் துவக்கியது என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. தண்ணீரை நிறுத்தியப் புலிகளா அல்லது முதல் இராணுவ தாக்குதலை தொடுத்த சிறீலங்கா இராணுவமா என்பது தான் கேள்வி. ஆனால் உண்மையில் இரு தரப்புமே போர் துவங்க ஒரு காரணத்தை தேடிக்கொண்டிருந்த நிலையில், அடுத்தவர் மீது பழி போட்டு விட்டு இந்தப் போரினை துவக்கி விட்டனர்.

மாவிலாறு பிரச்சனை நடந்த சமயத்தில் இடதுசாரி அமைப்புகளின் வேலைநிறுத்தம் தென்னிலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த்து கவனிக்கத்தக்கது. தென்னிலங்கை வேலை நிறுத்தம் ஒரு பக்கம், போர் துவங்க ஜேவிபியின் நிர்பந்தம் ஒரு பக்கம் என்ற நிலையில் ஜே.வி.பி.யின் நிர்பந்தம் காரணமாகவே இந்த போரினை மஹிந்த ராஜபக்ஷ தொடங்கினார். தென்னிலங்கையின் அரசியல் நிலையை சமாளிக்க, பகடை காய்களாக இம்முறையும் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை நிலை.

என்றாலும் ராஜபக்ஷவின் இந்த நடவடிக்கையை புலிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

விளைவு, நான்காம் ஈழப் போர் துவங்கி விட்டது

இந்தப் பிரச்சனைக்கு முந்தைய காலம் வரை இலங்கையில் போர் எப்பொழுது துவங்கும் என்ற நிச்சயமற்ற நிலை தான் நீடித்துக் கொண்டிருந்தது. யார் முதலில் போரினை துவக்குவார்கள் என்ற நிலைதான் இருந்ததே தவிர பேச்சுவார்த்தை, சமாதானம் என்பதெல்லாம் இருந்ததில்லை. என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" தொடரில் கூறியிருந்தது போல, எப்பொழுது வேண்டுமானாலும் போர் தொடங்கப்படலாம் என்ற நிலை தான் நீடித்துக் கொண்டிருந்தது. புலிகள் தண்ணீரை தடை செய்ததும், சிறீலங்கா அரசு போரினை துவக்கியதும் போர் துவங்க இரு தரப்பினருமே முன்னெடுத்த ஒரு நடவடிக்கை என்பதை மறுக்க முடியாது.

புலிகளின் பலவீனமான பகுதியாக கிழக்கு மாகாணங்கள் தான் கருதப்பட்டு வந்தன. கருணா குழுவை முன்நிறுத்தி சிறீலங்கா அரசின் உளவுப்படையும், Deep Peneteration unit எனப்படுகிற சிறீலங்கா அரசின் மற்றொரு படையும் இப் பகுதியில் தான் புலிகளுக்கு எதிரான "நிழல் யுத்தத்தை" நடத்தி வந்திருந்தன. இந் நிலையில் இப் பகுதியில் இருந்த மாவிலாறு யுத்தம் புலிகளுக்கு பெருத்த சவாலினை விடுத்தது. என்றாலும் இந்தப் போரினை தங்களின் பலத்தை பரிசோதித்துக் கொள்ளும் ஒரு இடமாக புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். அதன் விளைவு தான் மூதூர் மீதான தாக்குதல் என நான் நினைக்கிறேன்.

மூதூர் மீதான புலிகளின் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததாக சிறீலங்கா தரப்பும், புலிகள் எதிர்ப்பு அமைப்புகளும் கூறியிருந்தன. மூதூர் தாக்குதல் புலிகளுக்கு ஒரு பின்னடைவு தான். என்றாலும் புலிகளின் மூதூர் தாக்குதல் ஒரு சோதனை முயற்சி என்பதாகவே நான் நினைக்கிறேன்.

மூதூர் தாக்குதல் ஈழப் போரின் பல சிக்கல் நிறைந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்தன என்பது உண்மை.

முதல் உண்மை - புலிகளின் பலம் ஈழம் முழுதுமான தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தக் கூடிய நிலையில் இல்லை. மூதூரில் இது தெளிவாக வெளிப்பட்டது. மூதூர் நகரை புலிகள் கைப்பற்றும் நிலையை நோக்கிச் சென்றாலும், இராணுவத்தின் பெரிய அளவிலான பதில் தாக்குதலுக்கு புலிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. வன்னி உள்ளிட்டான தங்களது வலுவான நிலையில் இருந்து படையினை விடுவித்து கிழக்குப் பகுதிகளில் கொண்டு வரும் நிலையில் புலிகளின் படை எண்ணிக்கை இல்லை என்பது உண்மை.

மற்றொரு உண்மை - புலிகளின் தாக்குதலுக்கு முன்னால் சிறீலங்கா இராணுவத்தின் எந்த நிலையும் பாதுகாப்பான நிலை அல்ல என்பதை இந்த தாக்குதல் உறுதி செய்தது.

புலிகளின் முக்கிய இலக்காக திரிகோணமலை இருக்கலாம் என்ற எனது முந்தைய பதிவுகளின் வாதத்தை இந்த தாக்குதல் உறுதி செய்தது என்றாலும், அதில் ஏற்பட்ட பின்னடைவு புலிகளை யாழ்ப்பாணம் நோக்கி திருப்பி இருக்கிறது.

அம்னஸ்டி அறிக்கையின்படி தற்போதையச் சண்டையினால் சுமார் 1,60,000 மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மூதூரில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் வெளியேறி இருக்கின்றனர்.

இவ்வாறு பிரச்சனை தீவிரமாக இருந்த நிலையில் தான், முதன்முறையாக பாக்கிஸ்தான் தூதுவர் புலிகளால் தாக்கப்பட்டார். இது ஈழப் போரட்டத்தில் இது வரை காணாத ஒரு செயல். என்றாலும் புலிகளின் நோக்கத்தை தெளிவாக்கியது.

சிறீலங்கா அரசுக்கு பாக்கிஸ்தான் செய்யும் உதவிகளை வெளிப்படுத்துவது மட்டும் இதன் நோக்கம் அல்ல. இந்தியாவை நோக்கி புலிகள் விடுக்கும் மற்றொரு அழைப்பாகவும் இது எனக்கு தோன்றியது. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பும், இந்தியாவின் ரா அமைப்பும் எதிர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் "இயற்கையான" நியதி. ஆனால் இவர்கள் இருவரும் இலங்கையில் ஒரே அணியில் இருப்பதை மாற்றுவது புலிகளின் நோக்கமாக இருக்கலாம்.

ஆனால் இந்த நோக்கம் நிறைவேறுமா ?

(அடுத்தப் பதிவில்)

Leia Mais…
Saturday, August 05, 2006

அமெரிக்க ஊடகங்களின் இஸ்ரேல் அபிமானம்

இஸ்ரேல், லெபனானில் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்க ஊடகங்களில், ப்ரைம் டைம் செய்தி அலசல்களாக இந்தச் செய்தி தான் இடம் பிடித்து இருக்கிறது. பாக்ஸ், சி.என்.என் என பெரும்பாலான ஊடகங்களில் இஸ்ரேலின் சார்பு செய்திகள் தான் வாசிக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துவது தான் இந்த ஊடகங்களின் முக்கிய வேலையாக இருந்து வருகின்றது.

அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு நிலையை அமெரிக்க மக்களிடம் ஏற்படுத்த பல காலமாக தொடர்ந்து முனைந்து வருகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றது என்பன போன்ற ஒரு பிம்பம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்கள் மேல் தொடுத்த பயங்கரவாதத்தின் எதிர்வினை தான் இஸ்ரேல் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பதை இந்த ஊடகங்கள் சரியாக வெளிக்கொணர்ந்ததில்லை.

அது குறித்த ஒரு விரிவான குறும்படத்தை - Peace, Propaganda & the Promised Land, சமீபத்தில் பார்த்தேன். ஒரு மணி நேரம் செல்லக்கூடிய அந்தக் குறும்படம் அமெரிக்க ஊடகங்களின் இஸ்ரேல் சார்புகளை வெளிப்படுத்துகிறது

Peace, Propaganda & the Promised Land provides a striking comparison of U.S. and international media coverage of the crisis in the Middle East, zeroing in on how structural distortions in U.S. coverage have reinforced false perceptions of the Israeli-Palestinian conflict. This pivotal documentary exposes how the foreign policy interests of American political elites--oil, and a need to have a secure military base in the region, among others--work in combination with Israeli public relations strategies to exercise a powerful influence over how news from the region is reported.
Through the voices of scholars, media critics, peace activists, religious figures, and Middle East experts, Peace, Propaganda & the Promised Land carefully analyzes and explains how--through the use of language, framing and context--the Israeli occupation of the West Bank and Gaza remains hidden in the news media, and Israeli colonization of the occupied terrorities appears to be a defensive move rather than an offensive one. The documentary also explores the ways that U.S. journalists, for reasons ranging from intimidation to a lack of thorough investigation, have become complicit in carrying out Israel's PR campaign. At its core, the documentary raises questions about the ethics and role of journalism, and the relationship between media and politics.

Leia Mais…