மரண தண்டனை

இந்தியாவில் மரணதண்டனை குறித்த பெரிய அளவிலான விவாதம் நடப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை இராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற கூடாது, தூக்கு தண்டனை மனித நாகரிகத்திற்கு எதிரானது என்பதான கூக்குரல் தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகளால் எழுப்பபட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக அப்சலுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்பதாக எழுந்திருக்கிறது. இதற்கிடையில் கொல்கத்தாவைச் சார்ந்த தன்னஞாய் சேட்டர்ஜிக்கு கற்பழிப்பு வழக்கில் 2004ல் நிறைவேற்றப்பட்ட தூக்குதண்டனையை ஒரு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்த்தன என்பது தவிர, வேறு எந்த எதிர்ப்பும் பெரிய அளவில் எழவே இல்லை.
தூக்கு தண்டனைக்கான பெருவாரியான ஆதரவும், எதிர்ப்பும் அது எந்தளவுக்கு பிரபலமான குற்றத்தைச் சார்ந்து இருக்கிறதோ, அதையொட்டியே எழுகிறது. இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வாதிட்ட ஹிந்து, இப்பொழுது அப்சலுக்கு தூக்கு தண்டனை வழங்க கூடாது என்று வாதிடுகிறது (கடந்த 10 பத்து வருடங்களாக தங்களுடைய நிலைப்பாடு இதுவே என்று தலையங்கம் கூறுகிறது. நளினிக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடந்த பொழுது மரண தண்டனைக்கு ஆதரவாக ஹிந்துவில் பல கட்டுரைகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது)
ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுவை ஏற்க கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ், தற்பொழுது இந்தப் பிரச்சனையில் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டிருக்கிறது. அதன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆஸாத் தூக்கு தண்டனை கூடாது என்கிறார். காஷ்மீரில் எழுந்திருக்கிற உணர்வும், ஆட்சி குறித்த பயமும், அப்சால் தூக்கிலிடப்படும் சமயம் ரமலான் காலம் என்பதால் அவருடைய அரசியல் அச்சம் அவரை ஆட்கொள்கிறது.
ராஜீவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சமயத்தில் அது குறித்து பெரிய அளவில் எந்தப் பிரச்சனையையும் எழுப்பாத பாஜக இன்று தன்னுடைய அரசியல் தேவையை முன்னிட்டு இந்தப் பிரச்சனைக்கு அதிக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை தீயிட்டு கொளுத்திய தாரா சிங்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் இன்று தூக்கு தண்டனை வேண்டும் என்று கூறும் தீவிர இந்துத்துவ, சங்பரிவார் பாணி தேசபக்தர்கள் எல்லாம் "மனிதத் தன்மையற்ற மரண தண்டனையை" அகற்ற வேண்டும் என போராடுவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையை பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர். இது வரை வலைப்பதிவில் விவாதிக்கப்பட்டதில் அப்சல் சார்ந்த, எதிரான வாதங்கள் தான் முன்நிறுத்தப்பட்டதே தவிர நான் படித்த வரையில் அப்சலை தவிர்த்து மரண தண்டனையை யாரும் அணுகியதாக தெரியவில்லை.
அப்சல் குறித்த எண்ணங்களை விலக்கி வைத்து விட்டு, மரணதண்டனை பிரச்சனையை அணுக முயற்சித்துள்ளேன்
இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனையை Rarest of the rare casesல் தான் வழங்குவதாக பத்திரிக்கைகளில் வாசித்தேன். இந்த Rarest of the rare caseஐ தீர்மானிப்பது யார் ? ஏதேனும் சட்டங்கள் இதனை வரையறை செய்கிறதா ? அல்லது நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கு ஏற்ப இது நிர்ணயம் செய்யப்படுகிறதா ? நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் ராஜீவ் கொலையில் 26பேருக்கு மரண தண்டனை வழங்கியது போலவோ, ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் தீயிட்டு கொளுத்தப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஓரிசா உயர்நிதீமன்றம் கீழ்கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியது போலவோத் தான் முடிவடையும். இந்த Rarest of the rare case எது என்பது சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என அம்னஸ்டி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.
சட்டம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்றால் முதலில் எல்லா வழக்குகளும் ஒரே அளவில் தான் நடத்தப்பட வேண்டும். இந்த Rarest of the rare case என்பதே எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை என்பதாகவும் சில ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையுமே வெளிப்படுத்துகிறது. தீவிரவாதியாக இருந்து "குண்டு வைப்பது" ஒரு வகை என்பதாகவும், தாதாவாக இருந்து கொண்டு "போட்டுத் தள்ளுவது" வேறு வகை என்பதாகவும் மாறி விடக்கூடாது. மரண தண்டனை இந்திய சட்டத்தில் "தொடர்ந்தால்" அது "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கில் பேதமில்லாமல் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்படி இதனை "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கிலும் கூட சரிசமமாக பிரயோகிக்கப்படுத்த முடியாது என்றால் இதனை முழுமையாக விலக்கியே தீர வேண்டும்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றங்கள் தடுக்கப்படும் என்ற வாதம் மரண தண்டனை ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் மரண தண்டனை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இருந்து நடைமுறையில் இருந்து தான் வருகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது தொடங்கி இன்று வரை நடந்து வரும் குற்றங்கள் மரணதண்டனை பெறுவோம் என்பது "தெரிந்தும்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. குற்றங்கள் என்றுமே இல்லாத அளவுக்கு வளர்ந்தும் இருக்கிறது. ஆட்டோ சங்கர் போன்ற தாதாக்கள் தூக்கிலிடப்பட்டும், வீரமணி போன்ற தாதாக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுதும் தாதாக்களுக்கு பஞ்சமில்லை. தாதாக்களே இவ்வாறு என்றால் தீவிரவாதிகள் எந்த மனநிலையில் இருக்கின்றனர் என்று நாம் சொல்லத்தேவையில்லை. தீவிரவாதிகளுக்கு உயிர் மீது எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறான நிலையில் தூக்கு தண்டனை, குற்றங்களை தடுத்து நிறுத்தும் என்பதோ, குற்றம் செய்ய நினைப்பவர்களை தடுக்கும் என்பதோ நகைப்பிற்குரிய வாதமாகத் தான் எனக்கு தெரிகிறது. இது பழிக்குப் பழி வாங்கும் மனோபாவம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதே சமயத்தில் தூக்கு தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் ஐரோப்பாவை மனிதகுல நாகரிகத்திற்கு உதாரணமாக எப்படி மேற்க்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. அமெரிக்கா சதாம் உசேனுக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி இராக்கில் அப்பாவி மக்கள் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? அமெரிக்காவின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகள் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. எண்ணெய் வளத்திற்க்கு நடக்கும் இந்தச் சண்டையில் மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.
மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் அரசாங்க இயந்திரங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ? அரசாங்கத்தின் சட்டங்களே சில இடங்களில் அமுக்கப்பட்டு இராணுவத்திற்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சட்ட வரையறைகள் மட்டுமே நம்மை எந்தவகையிலும் நாகரீகமான சமூகமாக மாற்றாது.
"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. மரணதண்டனையும் ஒருவன் மீதோ அல்லது ஒரு சமூகம் மீதோ பிரயோகிக்கப்படுவது வன்முறைக்கு ஒப்பானது தான்.
சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் தண்டனைகள் குற்றங்களை தடுப்பதாகவும், குற்றவாளிகளை திருத்துவதாகவும் இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளின் உயிர்களை பறிப்பதாக இருக்க கூடாது. இவ்வாறு கூறுவதன் மூலம் தீவிவாதிகளை எப்படி திருத்த முடியும் என்ற கேள்வி எழும்.
தீவிரவாதத்தை சட்டங்கள் மூலம் தடுத்து விடமுடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை. தீவிரவாதம் தோன்றுவதன் அடிப்படை சமூக அவலங்களை நீக்கினால் தான் தீவிரவாதம் தடுக்கப்படும்.
இந்தியாவில் மரணதண்டனை, தீவிரவாதம் போன்ற குற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என செய்திகளில் பார்த்தேன். தீவிரவாதத்தை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என்னும் பொழுது இந்த சட்டத்தின் நோக்கத்தில் எவ்வித அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தீவிரவாதத்தை சமூக மாற்றத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
அமெரிக்காவை Free Democratic country என்று சொல்வார்கள். ஆனால் இங்கு தான் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனால் இங்கிருக்கும் பல சட்டங்கள் ஒரு சமூகத்தை சரியான கோணத்தில் செலுத்தக்கூடியவை. செலுத்திக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு ஓட்டுனர் உரிமம் பெற இங்கிருக்கும் சட்டங்களும், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும், தண்டனையாக மட்டும் இருப்பதில்லை. அது தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. சாலை விதிகளை மீறுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறது
நம்மூரிலும் இத்தகைய சட்டங்கள் இல்லையா ? இருக்கின்றன. பல சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான வேறுபாடு அதனை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது. எவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லையெனில் அந்த சட்டங்கள் இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்தியாவில் சட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசு இயந்திரங்களான காவல்துறையும், அதிகார அமைப்பும் சட்டங்களை
எந்தளவுக்கு மதித்து செயல்படுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்களை நடைமுறையில் சரியாக பின்பற்றக்கூடிய நிர்வாக முறை உள்ளது.
குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி, அதனை சரியாக நிர்வகிக்க வேண்டுமே தவிர, மரண தண்டனையோ, வேறு எந்த தண்டனையோ குற்றங்களை தடுத்து நிறுத்தி விடாது.
மரண தண்டனை பழிவாங்கும் குரூரமான வெறித்தனம் தானே தவிர குற்றங்களை தடுத்து விடாது.
(
மரண தண்டனைக்கு மாற்று தான் என்ன ? இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஆயுள் தண்டனையின் காலம் 14வருடங்கள். இதனை இரட்டை ஆயுள் தண்டனையாக மாற்றலாம், 35வருடங்கள் சிறைவாசம், தனிமை சிறைவாசம் போன்றவற்றை பலர் முன்வைத்துள்ளனர். தற்பொழுது இருக்கும் சிறை என்பது பலருக்கு "உல்லாசமாக" இருப்பதான ஒரு கருத்து நிலவுகிறது. பலருக்கு அது சிறைவாசமாக இல்லாமல் மற்றொரு விடுதி அனுபவமாக மாறிவிடுகிறது. இந் நிலையில் சிறைவாசத்தை இன்னும் கடுமையாக மாற்றுவதும், தனிமை சிறைவாசத்தை புகுத்துவதும், கடுமையான வேலைகளை கைதிகளுக்கு கொடுப்பதும் குற்றங்களை குறைக்கும் என சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இவையெல்லாம் பரிசீலிக்கப்படவேண்டியவை
)