Thursday, November 30, 2006

மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை.

ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் நோக்கி புலிகள் நகருவது போர் சூழ்நிலையை உருவாக்கும் என்ற நிலையில் தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. போர் நோக்கி புலிகள் நகருவதை தடுக்க வேண்டுமெனில் உலக நாடுகள் சிறீலங்கா அரசிடம் அதிகாரப் பகிர்வு குறித்து நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே A9 நெடுஞ்சாலையை திறக்க சிறீலங்கா அரசை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிர்பந்தம் செய்து வருகின்றன. இந் நிலையில் மற்றொரு போர் ஏற்படுவது வடக்கு கிழக்கு இலங்கையில் மனித அவலத்தை ஏற்படுத்தும். இதனை தடுக்க இது வரையில் எந்த பெரிய நிர்பந்தங்களையும் உலக நாடுகள் ஏற்படுத்தாத நிலையில் பிரபாகரனின் அறிவிப்பு இந் நாடுகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது

இன்று இலங்கையில் நடக்கும் ராஜதந்திர சதுரங்க ஆட்டம் கூட விடுதலைப் புலிகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையேயான ஆட்டம் தானே தவிர, சிறீலங்கா அரசு இந்த இரண்டு தரப்பின் ஆட்டங்களையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டின் பொழுது சிறீலங்கா அரசுக்கு எதிராக நிர்பந்தம் ஏற்படுத்தப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறீலங்கா அரசு கருணாவின் குழுவிற்கு சிறுவர்களை சேர்ப்பது குறித்து இணைத்தலைமை நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது. சிறீலங்கா அரசு கூட A9 நெடுஞ்சாலையை தற்காலிகமாக திறக்கப் போவதாக பூச்சாண்டி காட்டியது. ஆனால் எதிர்பார்க்கபட்ட அளவுக்கு கண்டனத்தை இணைத்தலைமை நாடுகள் வெளிப்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா அரசை கண்டிக்கவே செய்தன. இன்றைய நிலையில் சிறீலங்கா அரசை கடுமையாக கண்டிப்பது புலிகளை வலுப்படுத்தும் என்பதாக அமெரிக்கா நினைக்கிறது. ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நார்வே போன்ற நாடுகளின் நிலை அவ்வாறு இல்லை. என்றாலும் அமெரிக்காவின் நிலையை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அமெரிக்காவின் நிலை இந்தியாவின் நிலையாகவும் இருக்க கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

புலிகளின் நிலை சிறீலங்கா அரசின் சிங்கள இனவாதத்தை வெளிப்படுத்தி, தங்களின் தமிழீழ கோரிக்கைக்கு அங்கீகாரம் தேட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது உலகநாடுகளின் நிலை அவ்வாறான தனி நாட்டிற்கு அங்கீகாரம் வழங்காமல் சிறீலங்கா அரசை சார்ந்து தமிழர்களுக்கு அதிகராப்பகிர்வு வழங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இவ்வாறான நிலையில் புலிகள் தங்கள் கோரிக்கைகாக போர் நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு மீதான உலகநாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும். உலகநாடுகளின் கோரிக்கைக்கு சிறீலங்கா மறுக்கும் பட்சத்தில் சிறீலங்கா அரசிற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலகநாடுகள் தள்ளப்படும். அதைத் தான் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக உதவியதன் மூலம் புலிகள் செய்தனர். இன்று சிறீலங்கா அரசு செய்து வரும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாடுகளுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான நிலையில் பிரபாகரனின் உரை அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது.


அதே நேரத்தில் சிறீலங்கா அரசுக்கு உலகநாடுகளின் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்காமல் தன் வழியில் செல்வதற்கும் சில பலமான காரணங்கள் உள்ளன. போர் சூழலிலும் ஆண்டிற்கு சுமார் 8% வளர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இன்றைய உலகமயமான பொருளாதாரச் சூழலில் அலட்சியப்படுத்த முடியாத ஒன்று. இலங்கை மீதான நிர்பந்தம் பொருளாதார தடையாக மாறுவதற்கான சூழ்நிலை நிச்சயமாக உலகநாடுகளின் உச்சகட்ட நடவடிக்கையாகவே இருக்கும். ஆனால் இந்த உச்சகட்ட நடவடிக்கையை உலகநாடுகள் அவ்வளவு விரைவில் எடுக்க முடியாது என்பது மட்டுமில்லாமல் உலகநாடுகளிடம் இருந்து அந்நியப்பட்டு போவதற்கான வாய்ப்புகள் சிறீலங்கா அரசுக்கு குறைவாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் நிர்பந்தங்களுக்கு முழுமையாக அடிபணியாமல் ஒரு பொம்மையான கூட்டாட்சியை நிறுவ சிறீலங்கா அரசு முனையக்கூடும். அதனால் தான் சமீபகாலங்களில் மகிந்த ராஜபக்ஷ புலிகள் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறி வருகிறார். மாற்று தமிழர் குழுக்களை வளர்க்கவும் தலைப்படுகிறார். ஆனால் மகிந்தவின் இந்த உத்தி பல சிங்கள தலைவர்கள் கடைப்பிடித்த உளுத்துப்போன உத்தி தானே தவிர அது சர்வதேச நாடுகளிடம் எடுபடப்போவதில்லை. அதுவும் தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 70% இடத்தை தங்கள் வசம் வைத்துள்ள புலிகளை அவ்வளவு சீக்கிரம் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று விலக்கி விட முடியாது. இது சிறீலங்கா அரசுக்கு தெரிந்தே இருந்தாலும், இந்த உத்தி மூலம் அதிகாரப் பகிர்வினை பலருக்கும் பிரித்து அளித்து விட, புலிகள் எதிர்ப்பு குழுக்களை ஒன்று சேர்த்து விட முனைந்து கொண்டிருக்கிறது.

புலிகள் மற்றும் சிறீலங்கா அரசின் உத்திகளைக் கொண்டு சில விடயங்களை கணிக்க முடியும். அதாவது புலிகளின் தலைவர் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று நினைத்தாலும் அதனை உடனடியாக அடைந்து விட முடியும் என்று நினைக்கவில்லை. புலிகள் எப்பொழுதுமே இடைக்கால தீர்வு என்ற ஒன்றை தொடர்ந்து வலியுறுத்தி வருவதை கவனிக்க வேண்டும். ஒரு இடைக்கால தீர்வினை எட்டியப் பிறகு தான் தமிழீழம் நோக்கி நகர முடியும்.

அதே சமயத்தில் சிறீலங்கா அரசு தொடர்ந்து ஒரு முழுமையான தீர்வினை வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும். புலிகள் தமிழீழம் குறித்த தங்கள் போக்கில் தீவிரத்தை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களின் தற்காலிக இலக்கான இடைக்கால தீர்வு என்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். ஏனெனில் புலிகள் போரினை தீவிரப்படுத்தும் பொழுது சர்வதேச நாடுகளிடம் இருந்து எழும் நிர்பந்தம் புலிகளின் இடைக்கால தீர்வு குறித்த வாய்ப்பினை அதிகரிக்கும். சிறீலங்கா அரசு இடைக்கால தீர்வினை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதிகப்பட்ச அதிகாரங்களுடன் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரப்பரவல் தான் இடைக்கால தீர்வு ஆகும். இதனை புலிகள் முன்னிறுத்துவதற்கான காரணங்கள் என நான் சிலவற்றை கருதுகிறேன். முதலில் தமிழீழத்திற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் இராணுவ நிலையில் இருந்தோ, தமிழர் பகுதிகள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றுவதாலோ நிகழ்ந்து விடாது. இன்றைய உலகம் வணிகமயமான பொருளாதார உலகம் ஆகும். இந் நிலையில் உலகநாடுகளின் அங்கீகாரம் கூட பொருளாதார காரணங்களால் தான் நிகழ முடியுமே தவிர இராணுவக் காரணங்களால் நிகழ முடியாது. ஒரே இலங்கையின் கீழ் அதிகப்பட்ச அதிகாரங்களுடன் கூட்டாட்சி அமையும் பட்சத்தில் இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார உலகில் பிற நாடுகளுடனான உறவுகளை புலிகளால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அந்த பொருளாதார உறவுகள் மூலம் தான் அடுத்தக் கட்டமான சுதந்திர தமிழீழம் நோக்கி புலிகள் நகர முடியும் என நான் நம்புகிறேன். புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அமைப்பான - Interim Self Governing Authority (ISGA) கூட இத்தகைய அதிகப்பட்ச அதிகாரங்களைக் கொண்டதாக புலிகள் அமைத்து இருப்பதையும், பிற நாடுகளிடம் இருந்து பொருளாதார உதவிகளை பெற்றுக் கொள்வதாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

சிறீலங்கா அரசு கூட இதனை சரியாக அவதானித்து தான் இந்த இடைக்கால அதிகார அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், புலிகளை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக ஏற்காமல், புலிகளின் எதிர்ப்பு தமிழர் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் கவனிக்க வேண்டும். இது ஒரு புறம் என்றால் தமிழர்களுக்கு இந்தியாவின் கிராம பஞ்சாயத்து அமைப்புகளைச் சார்ந்த அதிகாரங்களை வழங்க பரிசீலித்து வருவதாகவும், இந்திய மாநிலங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரங்கள் கொண்ட தமிழர் மாநிலங்களை ஏற்படுத்த போவதாகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருப்பது கூட்டாட்சி அல்ல என்பது கூட தெரியாமலா தமிழர்கள் இருக்கிறார்கள் ?

புலிகளின் கோரிக்கை மிக அதிகப்பட்ச அதிகாரப்பரவல் நோக்கி உள்ளது. தனி இராணுவம், பொருளாதார உதவிகளை தனித்து பெற்றுக் கொள்வது போன்றவை கூட்டாட்சியில் மிக அதிகப்பட்சமான அதிகாரங்கள் ஆகும். ஆனால் சிறீலங்கா அரசு வழங்க நினைப்பது எந்த வகையிலும் கூட்டாட்சி சார்ந்து இல்லை. மிகக் குறைந்தபட்ச அதிகார அமைப்பைச் சார்ந்ததாகத் தான் சிறீலங்கா அரசின் நிலை உள்ளது.

இதில் இருவரும் சில சமரசங்களை செய்து கொள்ளக்கூடும். ஆனால் எந்த வகையிலும் புலிகள் தங்களின் தற்போதைய இராணுவ பலத்தை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

இவ்வாறான நிலையில் புலிகள் தமிழீழம் நோக்கி தங்கள் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொழுது உலகநாடுகள் சிறீலங்கா அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். அதைத் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன் இந்த உரை மூலமும், அடுத்த வரும் மாதங்களிலும் செய்ய நினைக்கிறார். புலிகள் போர் நோக்கி செல்வதை தடுக்க தமிழர்களுக்கான அத்தியாவிச பொருட்களை கூட தடை செய்து ஒரு மனித அவலத்தை ஏற்படுத்த சிறீலங்கா அரசு முனைந்து கொண்டிருக்கிறது. "வெளிநாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்கள் போரினை விரும்பக்கூடும். ஆனால் ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் அதனை விரும்ப மாட்டார்கள்" என்கிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ். அவர் கூறுவது உண்மையும் கூட. அதனால் தான் புலிகள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளைக் கூட தாமதமம் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதைத் தான் பிரபாகரனின் உரை தெளிவுபடுத்துகிறது. சிறீலங்கா அரசின் பிடியை விடுவிக்க புலிகள் முனையக்கூடும்.

அடுத்த வரும் நாட்களில் ஈழப் போர் தீவிரம் அடையக்கூடும். இன்று ஈழத்தில் தலைவிரித்தாடும் வறுமை ஒரு மனித அவலத்தை ஏற்படுத்தும் நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. போர் ஏற்படும் பட்சத்தில் இது மிகவும் தீவிரமாகக்கூடும் என்பது தான் வருத்தமான உண்மை


தொடர்புடைய சில சுட்டிகள் :

பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் வீடியோ
Sri Lanka ignoring India’s advice

6 மறுமொழிகள்:

வெற்றி said...

சசி,
உங்களின் பதிவை எதிர்பார்த்திருந்தேன். நல்ல அலசல். தங்கள் பதிவு பற்றிய என்னுடைய கருத்துக்களை பின்னர் தெரிவிக்கிறேன். ஈழத்தில் 42 நாட்கள் தங்கிவிட்டு சில தினங்களுக்கு முன்னர் தான் திரும்பினேன். கிளிநொச்சியில் தங்கியிருந்த காலத்தில் புலிகளுடன் கருத்துப்பரிமாறிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் அடிப்படையில் நீங்கள் சொல்லியுள்ள,

"இன்று இலங்கையில் நடக்கும் ராஜதந்திர சதுரங்க ஆட்டம் கூட விடுதலைப் புலிகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையேயான ஆட்டம் தானே தவிர" எனும் கருத்து முற்றிலும் உண்மை. இன்று தமிழ்த் தலைமைக்கு முன்னால் உள்ள பாரிய சவால் இதுதான். ஏன் ரணிலைத் தோற்கடித்து ராஐபக்சாவைப் புலிகள் வெல்ல வைத்தனர் என்பதை அரசியல் தந்திரோபாயங்கள் தெரிந்தவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்வார்கள். பின்னர் விபரமாக எழுதுகிறேன்.
நன்றி.

2:08 PM, November 30, 2006
Leenaroy said...

மிக விளக்கமாக ஆராய்ந்த்து இருக்கிறீர்கள் சசி.
இன்றய போர்ச் சூழலில் புலிகளால் பின்னப்பட்ட ராஜதந்திர வலையில் மகிந்த்த மாட்டியுள்ளார் என்றே தெரிகிறது.
சர்வதேச அழுத்தம் என்னும் அம்பை தங்கள் பக்கமிருந்த்து இலங்கையரசின் பக்கமாக புலிகள் திருப்பி விட்டதைச் சொல்லலாம்.

என்னைப் பொறுத்தவரை இந்த்தப் போராட்டம் பல பார்வைக் கோணங்களையுடையது.
1. புலிகளின் பார்வை
2. இலங்கை அரசின் பார்வை
3. ஈழம் வாழ் தமிழரின் பார்வை
4. புலம்பெயர் வாழ் தமிழரின் பார்வை
5. சர்வதேசங்களின் பார்வை
6. இந்த்தியாவின் பார்வை

இவையனைத்துக்கும் ஈடு கொடுத்து புலிகள் ராஜதந்திர முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளார்கள்

4:38 PM, November 30, 2006
மலைநாடான் said...

நல்லதோர் பார்வை நண்பரே!
நன்றி!

5:02 PM, November 30, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

வெற்றி, Leenaroy, மலைநாடான்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

5:08 PM, November 30, 2006
Machi said...

நல்ல அலசல்.
இலங்கையின் தற்போதய 8% வளர்ச்சி பாராட்டுக்குறியது. ஆனால் புலிகளுடன் போர்நிறுத்தம் என்பது இல்லாவிட்டால் இது சாத்தியமா? தற்போது இப்போர்நிறுத்தம் பெயரளவிலிருந்தாலும் இதனால் அல்லவா கொழும்பில் பாதுகாப்பு நிலவுகிறது, பொருளாதாரம் செழிக்க இதுவல்லவா மிக முக்கிய காரணம்.

போர் மூண்டால் இலங்கையின் பொருளாதாரம் கீழே செல்லும். புலிகள் , இலங்கை & சர்வதேசம் இதை உணராமலா இருக்கும்?

சர்வதேசம் புலிகளை பெரும்நெருக்கடிக்கு தள்ளினால் போர் என்பதை புலிகளால் தவிர்க்க முடியாது. நீங்கள் சொல்வது போல் புலிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் இடையே தான் ஆட்டம் நடக்கிறது.

11:23 PM, November 30, 2006
பெத்தராயுடு said...

நல்ல ஆழமான அலசல்.
கட்டுரைக்கு நன்றி.

10:58 AM, December 01, 2006