இன்றைய உலககோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சிறீலங்கா அணியை எதிர்கொள்கிறது. சிறிலங்காவில் போர்ச் சூழலும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம் பெற்று வரும் சூழ்நிலையில் அனைத்து மக்களும் அமைதியாக வாழும் நிலையை ஏற்படுத்துவது தான் முக்கியம். கிரிக்கெட் அல்ல என மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இந்த உலககோப்பை சமயத்தில் "Sri Lanka: Play by the Rules!" என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது (இது குறித்த எனது பதிவு)
சிறிலங்கா உலககோப்பையின் இறுதி ஆட்டம் வரை சென்றதை முன்னிட்டு சிறிலங்கா அணி அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிப்பதாக ஒரு போலியான பிம்பத்தை சிறிலங்கா ஊடகங்களும், சிறிலங்கா சார்பு இந்திய ஊடகங்களான ஹிந்து போன்றவையும் தொடர்ந்து நிலைநிறுத்த முனைந்து வருகின்றன.
இந் நிலையில் புதினம் தளம் "சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?" என்ற கட்டுரை வெளியிட்டு உள்ளது. அது உங்களின் கவனத்திற்கு...
சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு.
அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.
ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.
இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.
விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும், அது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கிறது என்பதனையும் எவரும் மறுப்பதற்கில்லை.
உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.
தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.
அதுவும் முக்கியமாக மேல்நாடுகளில் இந்த புறக்கணிப்பு பரவலாக விவாதிக்கப்பட்ட விடயம். இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.
அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.
உதாரணமாக 1980 ஆம் ஆண்டில் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணிப்புச் செய்தது. மொஸ்கோ ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பாகவே இதனை அமெரிக்கா செய்தது.
ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,
"விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமா இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்".
தென்னாப்பிரிக்க விளையாட்டுப் புறக்கணிப்புப் பற்றி இன்று பல புத்தகங்கள் வெளிவந்திருப்பதும் இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
ஒரு நாட்டின் விளையாட்டு அந்நாட்டின் அரசியலோடு எப்படி சார்ந்திருக்கிறது என்பதனை பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.
ஒரு நாட்டின் தேசியம் எப்படி விளையாட்டின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பது அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பை சுட்டிக்காட்டும் ஒரு விடயம். இன்னும் ஆழமாக பார்க்கப் போனால், அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பு பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானிகள் ஆராயும் விடயமாக மாறி வருவதனை அவதானிக்கலாம்.
இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது.
"போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் வினோகர் பின்வருமாறு கூறுகிறார்,
"நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".
மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.
இலங்கைத்தீவில் துடுப்பாட்ட விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் அண்மைய வெற்றிகளை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் தமிழ்த் தேசியத்தை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
பிரபல எழுத்தாளரான மாமனிதர் சிவராம்; (தராக்கி) ஒரு கட்டுரையில் சிறிலங்கா துடுப்பாட்டம் தமிழ்த் தேசியத்திற்கு எப்படி ஆபத்தானதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அண்மையில் பல அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அணியின் வெற்றிகளையும், சில தமிழர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவையும் மிகைப்படுத்தி இது தமிழ்-சிங்கள ஒற்றுமைக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.
இதன் மூலம் மேல் நாட்டவர், தமிழர் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் தமிழ் தேசியத்தை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னரும் தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.
அரசியலும் விளையாட்டும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.
இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.
தொடர்புபட்ட செய்தி: தென்னாப்பிரிக்காவைப் போல் சிறிலங்காவுக்கும் துடுப்பாட்டத் தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிரம்
Saturday, April 28, 2007
சிறிலங்கா கிரிக்கெட் அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 4/28/2007 10:34:00 AM
குறிச்சொற்கள் Sri Lanka: Play by the Rules, Tamil Eelam, இலங்கை, ஈழம், உலககோப்பை, கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
7 மறுமொழிகள்:
Its a Good Call Mr.Sasi
12:15 PM, April 28, 2007உங்கள் எழுத்துக்களைத் தவறாது வாசிப்பவன். மிக அருமையான கட்டுரை.
12:25 PM, April 28, 2007ஒரு சில ஈழத்தமிழர்கள் இலங்கையை ஆதரிப்பதை அறியும் போது மிகவும் வேதனைதான். அறியாமைதான் காரணம். இலங்கையில் சிங்களவர்களை மட்டும் அடையாளப்படுத்தும் "சிங்கம்" பொறிக்கப்பட்ட அடையாளத்தை
துடுப்பெடுத்தாட்டத்திற்கு (கிரிக்கெட்)பயன்படுத்துகின்றார்கள்.
முன்ணாள் கப்டன் ரணதுங்கா தான் தேர்தல் நேரத்தில் இனவாதத்தைக் கக்கினான் என்பதையும் இந்த ஜென்மங்கள் மறந்துவிட்டார்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகளை நினைத்துக்கொள்வேன்.
சசி,
12:35 PM, April 28, 2007வழமை போல் நல்ல கட்டுரை.
தற்போது இலங்கையில் புத்த பிக்குகளும் இராணுவத் தளபதிகளும் இந்த துடுப்பாட்ட விளையாட்டுக்கள் பற்றியும் இலங்கை அணி பற்றியும் கூறி வரும் கருத்துக்களைப் பார்த்தாலே, அவர்கள் இந்த விளையாட்டையும் சிங்கள தேசியவாதத்தையும் எப்படி இணைத்துப் பார்க்கிறார்கள் என்பது புரியும்.
ஆனால் அதேநேரம் சில சிங்கள அரசியல்வாதிகள், "பாருங்கள் எங்கள் அணியை, முத்தையா முரளிதரன் போன்ற தமிழர்களும் எமது அணியில் இருக்கிறார்கள். தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அங்கே நடப்பது ஒரு பயங்கரவாதப் பிரச்சனையே" என்று சில ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தனர்.
நீங்கள் சொல்வது போல் தமிழர்களின் போராட்ட நியாயங்களை மறைப்பதற்கும் அங்கு நடக்கும் உண்மைகளை மறைப்பதற்கும் இந்த விளையாட்டைச் சிங்கள தேசியவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது.
நன்றி நண்பர்களே
12:41 PM, April 28, 2007இது என்னுடைய கட்டுரை அல்ல.
புதினத்தில் வெளியாகிய கட்டுரையை என்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டு உள்ளேன்
சசி!
2:24 PM, April 28, 2007படிப்பதிவாக இருப்பினும், தமிழ்மணத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.
இதெல்லாம் சில ஜென்மக்களுக்குப் புரியவேயில்லையே. அந்தளவுக்கு அடிமைச்சுகம் ஆட்கொண்டுவிட்டது.
எட்டு விளையாட்டு தெரியும்ல? வாங்க வந்து எட்டுபோடுங்க... லைசென்ஸ் கிடைக்குதா பாப்போம்...
1:39 AM, June 23, 2007http://maayanpaarvai.blogspot.com/
நாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல பாகங்களில் பிரிந்து இருந்தாலும், இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கிறிக்கெட் விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, சிறந்த கிறிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, நாடுகடந்த தமிழீழ அரசின் கிறிக்கெட் விளையாட்டு குழு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும். அக்குழு அனைத்துலக கிறிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியைப் பெற்று, ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்துடன் போட்டிகளில் பங்குக்கொள்ளும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.
1:49 AM, August 18, 2010இவ்வாறான செயல்பாடுகளும் உலகின் தமிழரின் ஒருங்கிணைந்த விடுதலையுணர்வையும், தமிழீழ மீட்பையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் செயல்பாடுகளாக அமையும்; அன்னிய நாடுகளின் தமிழீழ ஆதரவைப் பெறவும் வழி வகுக்கலாம்.
அதற்கான ஆதரவுகளை அனைத்து உலகத் தமிழினம் வழங்க வேண்டும்.
நன்றி!
அன்புடன்
உங்களில் ஒருவன்
Post a Comment