Friday, November 02, 2007

தமிழ்ச்செல்வனின் மறைவு

புலிகளின் அரசியல் பிரிவு தலைவரும், சமாதான பேச்சு வார்த்தைகளில் புலிகளின் சார்பான குழுவின் தலைவராக பணியாற்றியவருமாகிய சுப.தமிழ்ச்செல்வன் இன்று சிறீலங்கா விமானப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அரசியல் துறையில் கடந்த ஒரு ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய இழப்பு இது. ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து, தற்பொழுது தமிழ்ச்செல்வனின் மறைவு புலிகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும்.

இன்று காலை எழுந்தவுடன் நண்பர்கள் அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பொழுது ஒரு நிமிடம் இது உண்மை தானா என்று எண்ணத் தோன்றியது. உடனே நண்பர் அனுப்பி இருந்த தமிழ்நெட் இணையத்தளம் சுட்டியை பார்த்து இந்த தகவலை உறுதி செய்து கொண்ட பொழுது எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகள் இல்லை.

தமிழ்ச்செல்வனின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல. தமிழனாய் தங்களை நினைக்கும் அனைவருக்குமே இது பேரிழப்பு தான். ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவிற்கு பிறகு அந்த பொறுப்பினை யார் வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு வெற்றிடத்தை உணர்ந்தது இல்லை. தமிழ்ச்செல்வன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாவிட்டாலும் கூட சமாதானப்பேச்சுவார்த்தை, வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திப்பது போன்ற விடயங்களில் பாலசிங்கத்தை விட அதிகளவில் சமீபகாலங்களில் பணியாற்றியவர். எனவே அரசியல் வெளியில் ஒரு வெற்றிடத்தை உணர்ந்ததே இல்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதை தொடர்ந்து சிறீலங்கா இராணுவம் வெளியிட்ட தகவல்களை நோக்கும் பொழுது இது தமிழ்ச்செல்வனை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. சிறீலங்கா இராணுவம் அமெரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் இருந்து அதிநவீன கருவிகளை பெற தொடங்கியிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மை தான் என இந்த தாக்குதல் உறுதிப்படுத்துகிறது. இந்த தாக்குதல் ஒரு அரசியல் தலைவரின் மீது இரசாயண ஆயுதங்கள் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் அரசியல் துறை பொறுப்பாளராக, பல நாட்டு பிரதிநிதிகளை புலிகள் சார்பாக சந்தித்து வந்த தமிழ்ச்செல்வனின் படுகொலையை இது வரையில் கண்டிக்காத உலகநாடுகளின் இரட்டை வேடத்தையும் இது வெளிப்படுத்துகிறது. உலக நாடுகள் புலிகள் சிங்கள அரசியல் தலைவர்கள் மீது நடத்தும் தாக்குதலை பயங்கரவாதமாக பார்ப்பதும், சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதலை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தமிழர்களுக்கு ஆதரவு தமிழர்கள் மட்டுமே என்பதை மறுபடியும் நிருபிக்கிறது.

தமிழ்ச்செல்வனின் மரணம் சாமாதனப் பேச்சுவார்த்தைகளுக்கு இனி வாய்ப்பே இல்லை என்பதை தான் வெளிப்படுத்துகிறது. எந்த தரப்பும் வெற்றி பெற முடியாத இந்தப் போரில் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படுகிறது.

சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.


1 மறுமொழிகள்:

இராம.கி said...

தமிழ்ச்செல்வனின் இறப்பு ஒரு பேரிழப்பே. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

கடந்த சில ஆண்டுகளாய், உட்பகையை உருவாக்கிப் போராளிகளை இரண்டு படுத்தி, உலக நாடுகளைத் தன்வயப் படுத்தி, சிங்கள அரசு தன் தடந்தகையில் (strategy) வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. போராளிகள் களத்தில் மேற்கொள்ளும் நடத்தங்களில் (tactics) மட்டுமே பெரிதும் வெற்றி கொள்ளுகிறார்கள். அண்டன் பாலசிங்கமும், சுப. தமிழ்ச்செல்வனும் இல்லாத நிலையில் தடந்தகை உருவாக்கத்தில் உள்ள வெற்றிடம் கூடியவிரைவில் சரி செய்யப் படவேண்டும். இந்த நேரத்தில் தமிழர் ஒன்றுபடுவது மிகவும் வேண்டியதொன்று.

அன்புடன்,
இராம.கி.

5:47 PM, November 02, 2007