Monday, March 03, 2008

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?


அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது.

நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஒபாமா டெக்சாஸ், ஒகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றால், ஹில்லரி போட்டியில் இருந்த விலகக் கூடும். ஹில்லரி வெற்றி பெற்றாலோ, அல்லது இருவரும் சரிசமமான வெற்றியை பெற்றாலோ, இந்த போட்டி ஆகஸ்ட் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜனநாயக கட்சியில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்ற கேள்விக்கு மிகச் சூடான விவாதம் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களில் நடந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான ஹில்லரி, ஒபாமா ஆகிய இருவருமே மிகச் சிறந்த வேட்பாளர்கள். இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாகவே உள்ளது. இந்த இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி, எனக்கும் உண்டு. நான் அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை உள்ளவன் அல்ல. என்றாலும் உலகின் மிக முக்கியமான ஒரு நாட்டின் தேர்தல், பல நாடுகளின் மீது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு நாட்டின் தலைமை எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதிலே எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு பார்வையாளனாக நான் கவனித்தவற்றை பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்க அரசியல் குறித்த பெரிய அளவில் ஒன்றுமே தெரியாமல் இந்த தேர்தலை கவனிக்க தொடங்கிய பொழுது எனக்கு தெரிந்த பெயர் - ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸ் மட்டுமே. ஒபாமா குறித்து இங்குள்ள பத்திரிக்கைகள் எழுத தொடங்கிய பொழுது தான் எனக்கு தெரியும். நான் மட்டுமல்ல. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க பிரஜைகளுக்கு கூட 2004ம் ஆண்டு வரை ஒபாமா பற்றி அதிகளவில் தெரியாது. 2000ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க செனட் தேர்தலில் தான் அடைந்த "கடுமையான" தோல்வி, அடுத்த தேர்தலில் அதிக அளவில் அவர் மாநிலத்திலேயே பிரபலம் ஆகாமல் தேர்தலை எதிர்கொண்டது போன்றவற்றை ஒபாமா அவரது "The Audacity of Hope" என்ற புத்தகத்திலே பட்டியலிடுகிறார். ஆனால் 2008ல் அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்ட தேர்தலில் வலுவான வேட்பாளராக களத்தில் உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது். வெற்றியை நோக்கி அவர் நகர்ந்து வருவதாகவும் ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

ஒபாமாவை தேசிய அளவில் பிரபலமாக்கியதற்கு காரணம் அவரது பேச்சாற்றல் மட்டும் தான் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது மட்டுமல்ல. மக்களுக்கு தேவையானவற்றை ஒபாமா முன்வைக்கிறார். அவர் முன்வைப்பதை அவர் நிறைவேற்றுவாரா, அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. ஹில்லரியும், மெக்கெயினும் கூட அந்தக் கேள்வியை தான் முன்வைக்கிறார்கள். ஆனால் மக்களை கவரும் அவரது பேச்சுக்கு முன்னே ஹில்லரியின் இத்தகைய தந்திரங்கள் பலனற்று போகின்றன. மக்களைக் கவரக்கூடிய தலைவராக ஒபாமா உருவெடுத்துள்ளர்.

ஹில்லரி தனக்கு இருக்கும் அனுபவங்களை பட்டியலிடுகின்றார். தன்னுடைய பல வருட முன்னெடுப்புகளை முன்வைக்கிறார். அதனை அவர் பலமாக நினைத்தாலும், அதுவே அவரது பலவீனமாகவும் உள்ளது. மக்கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றம். ஒரே வகையான தலைவர்களையே பார்த்த அலுப்பு. இவற்றில் இருந்து தங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என நினைக்கும் மக்கள் ஒபாமாவை தேர்ந்தெடுக்கின்றனர். ஒபாமாவிற்கு எந்த track recordம் இல்லை. அது தான் அவரது பலமாகவும் உள்ளது. 2002ல் எங்கோ பேசிய ஒரு பேச்சில் ஈராக் போரை தான் எதிர்த்தாக கூறி அதையே தொடர்ந்து வலுவாக முன்னிறுத்தி மக்களை கவர்ந்து விட முடிகிறது. ஆனால் ஹில்லரியின் நிலை அது அல்ல. அவர் செனட் உறுப்பினர். போருக்கு செல்வதா, வேண்டாமா என்பதை வெறும் மேடையில் பேசி விட்டு ஹில்லரியால் நகர்ந்து விட முடியாத சூழல். அப்போதைய அமெரிக்க மக்களின் மனநிலைக்கு ஏற்ப அவர் வாக்களிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அதைத் தான் செய்தார். இன்று அந்தப் போர் அமெரிக்காவிற்கு பாதமாகி விட்ட சூழலில் ஹில்லரிக்கு அது பின்னடைவாகி விட்டது. ஒபாமா எதுவுமே செய்யாமல் ஹில்லரியின் பலவீனத்தை தனக்கு சாதகாக்கி கொள்கிறார்.

அது போல நாப்டா - North American Free Trade Agreement (NAFTA) உடன்படிக்கையை தான் எதிர்த்ததாக ஒபாமா கூறுகிறார். இதுவும் அவர் கடந்த காலங்களில் நிகழ்த்திய உரை மட்டுமே. அந்த உரை கூட தெளிவற்றைவையாகவே உள்ளது. ஆதரவு கொடுப்பது போன்ற தொனியில் தான் அந்த உரையின் சில வரிகளும் உள்ளன. ஆனாலும் தான் அதனை தொடர்ந்து எதிர்த்ததாகவும், அமெரிக்கர்களின் நலன்களுக்கு அது பாதகமாக உள்ளதாகவும் ஒபாமா கூறுகிறார். ஆனால் கடந்த காலங்களில் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்த ஹில்லரியால் அவ்வாறு கூற முடியாத ஒரு நிலை. (இன்று வெளியான மற்றொரு செய்தி ஒபாமாவின் NAFTA நிலைப்பாடுகள் குறித்த கேள்வியை இன்னும் வலுவாக்கியுள்ளது - http://www.cnn.com/2008/POLITICS/03/03/democrats.primaries/index.html)

ஹில்லரி ஊடகங்களால் கடந்த காலங்களில் கண்காணிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் அவரது ஒவ்வெரு பேச்சும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒபாமாவிற்கு அப்படியான ஒரு நிலை அல்ல. அவர் புதுமுகம். பல விடயங்களில் புதுமுகம் என்பதல் எளிதாக தப்பித்துக் கொள்கிறார். ஒபாமா உளறிய முக்கியமான விடயம் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன் என்பது. ஆனால் அது குறித்து கேள்வி எழுப்பினால் இப்பொழுது புஷ் பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி அல்கொய்தாவின் முக்கிய தலைவரை கொன்றிருக்கிறாரே, அப்படியானால் என் கருத்து சரியானது தானே என கூறுகிறார். ஹில்லரியாலும் சரி, மெக்கெயினாலும் சரி, இந்த வாதங்களுக்கு சரியான எதிர் வாதங்களை வைக்க முடிவதில்லை.

ஒபாமாவின் இந்த வாதங்கள், எதிர்வாதங்கள் அவரை வெற்றியை நோக்கி நகர்த்தினாலும், அவர் ஒரு சிறந்த தலைமையை கொடுக்க முடியுமா ? வெறும் வாதங்கள், மேடை பேச்சுக்கள் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்தி விடாது.

இன்றைய ஒரு சாதாரண அமெரிக்க குடிமகனின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது - அவர்களது வீடு. தங்களது வீட்டினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது தான் பலரின் கேள்வி. அமெரிக்கவின் பொருளாதாரம் மிக மோசமான ஒரு சூழ்நிலையில் உள்ளது. அமெரிக்கா தற்பொழுது பொருளாதார தேக்கத்தை (Recession) எதிர்கொண்டுள்ளது என சிலரும், தற்பொழுதே அந்த நிலை தான் உள்ளது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். அமெரிக்க பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்சனை அமெரிக்காவில் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு (Layoff) போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்தே உலகின் பல நாடுகள் உள்ளதால் இது பல நாடுகளின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழலில் "US President for Dummies" என்ற புத்தகத்தை படிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவது சரியானதா என்ற கேள்வி எனக்கு உள்ளது. நான் பார்த்த விவாதங்கள், ஒபாமாவின் மேடைப் பேச்சு போன்றவற்றில் ஒபாமா பொருளாதாரம் குறித்த பேச்சுக்கள் வெறும் பேச்சாக உள்ளதாகவே எனக்கு தெரிகிறது. மாறாக ஹில்லரியின் பேச்சில் அவர் முன்வைக்கும் திட்டங்கள், அவரது கடந்த கால செயல்பாடுகள் போன்றவை ஹில்லரியே அமெரிக்காவிற்கு தற்பொழுது தேவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

Health Care குறித்து ஹில்லரி, ஒபாமா இடையே பல சூடான விவாதங்கள் நடந்தன. இதுவும் அமெரிக்காவில் ஒரு முக்கியமான பிரச்சனை. பலருக்கு "மிக" முக்கியமான பிரச்சனையும் கூட. இதில் ஒபாமா, ஹில்லரியின் விவாதங்கள் இரண்டையும் கவனித்த வரையில், இது குறித்து வாசித்த வரை - எனக்கு இதில் பெரிய வேறுபாடு தெரியவில்லை. ஹில்லரி அனைவரும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறார். அவ்வாறு செய்யும் பொழுது மருத்துவ செலவு குறையும் என்கிறார். ஆனால் ஒபாமா எல்லோரும் எடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. குழந்தைகள் மட்டும் கட்டாயம் காப்பீடு எடுக்க வேண்டும் என்கிறார். அனைவரும் காப்பீடு எடுக்குமாறு காப்பீட்டுச் செலவை குறைக்கலாம் என்கிறார்.

எல்லோரும் காப்பீடு எடுக்க தேவையில்லை என்னும் பொழுது இளைஞர்கள் காப்பீடு எடுக்க மாட்டார்கள். இதனால் காப்பீடு எடுப்பவர்கள் எல்லோரும் மருத்தவ தேவை உள்ளவர்களாகவே இருப்பார்கள். எனவே மருத்துவ செலவு அதிகரிக்கும் என்கிறார் ஹில்லரி. இது சரியானதாகவே எனக்கு தோன்றுகிறது. பொதுவாக நான் உரையாடிய என் அலுவலக அமெரிக்க நண்பர்கள் ஹில்லரி இத் துறையில் மிக நீண்ட அனுபவம் உள்ளவர் என்றும், அவரது திட்டம் ஒபாமா திட்டத்தை விட சிறப்பாக உள்ளதாகவும் கூறிகிறார்கள். அமெரிக்காவில் நீண்ட வருடங்களாக இருந்து, இங்குள்ள Health Care முறை குறித்த நன்கு அறிந்திருக்க கூடிய செல்வராஜ், சுந்தரமூர்த்தி, பாஸ்டன் பாலா போன்றவர்கள் இது குறித்து எழுதினால் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

ஹில்லரியின் மிகப் பெரிய பலவீனமாக பலரும் பார்ப்பது அவர் ஆரம்பத்தில் ஈராக் போருக்கு அளித்த ஆதரவு வாக்கு தான். நியாயமாக பார்த்தால் ஒபாமா ஒன்றும் போருக்கு எதிரானவராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன் என்று கூறியவர் தான் ஒபாமா. இவ்வாறான நிலையில் எங்கோ போருக்கு எதிராக ஒபாமா உரையாற்றியதை மட்டுமே கொண்டு ஹில்லரியை நிராகரிப்பது சரியான காரணமாக எனக்கு தெரியவில்லை. ஈராக் போருக்குப் பிறகும் புஷ்ஷுக்கு ஆதரவாக ஒபாமா பேசியுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஹில்லரி, ஒபாமா இருவரும் எதிர்காலத்தில் அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து விலக்கி கொள்வோம் என்றே கூறுகின்றனர். ஈராக் போருக்கு அமெரிக்க மக்களிடம் பரவலாக எதிர்ப்பு உள்ள சூழலில், அமெரிக்க பொருளாதாரம் குறித்து ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பாதகமான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிற சூழலில் அடுத்து வரும் ஜனாதிபதி உள்நாட்டு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கும்.

ஒபாமாவிடம் எனக்கு கவர்ந்த விடயம், அமெரிக்காவின் "பெரியண்ணன் மனப்பான்மையை" கலைய வேண்டும் என்ற அவரது கருத்து. ஒபாமாவின் சில நிலைப்பாடுகள் அரசியல் காரணங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் அவர் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக க்யூபா குறித்த அவர் நிலைப்பாடுகள் "தேர்தல் வெற்றிக்காக" மாற்றம் அடைந்திருக்கின்றன. கடந்த காலங்களில் அமெரிக்காவின் க்யூபா நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் தான் ஒபாமா. ஆனால் தற்பொழுது பிடரல் காஸ்ட்ரோ குறித்து எந்த நல்ல வார்த்தையையும் சொல்லி விடாது கவனமாக உள்ளார். அவ்வாறு பேசினால் அது அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

டெக்சாஸ் விவாதத்தின் பொழுது கூட க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும்.

ஒபாமாவின் நடுப்பெயரான ஹூசேன் அதிகம் அடிபட தொடங்கி இருக்கிறது. குடியரசுக் கட்சியினர் இது குறித்து சர்ச்சைகளை எழுப்பினாலும், இன்று உலகில் காணப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதம் Vs அமெரிக்கா என்ற சூட்டை தணிக்க ஒபாமாவின் தலைமை உதவக்கூடும். அரேபிய அமெரிக்கர்களுக்கு ஆதரவாக அவர் 2004ல் பேசிய பேச்சு, ஆசிய நாடுகளில் அவர் வளர்ந்த சூழல் போன்றவை ஒபாமா குறித்த மாறுபட்ட எண்ணத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்தக் கூடும். அனைத்து நாடுகளையும், இனங்களையும் சமநிலையில் அணுகும் முறையை ஒபாமா வலியுறுத்தி இருக்கிறார். புஷ் அரசாங்கம் ஈராக், ஈரான் போன்ற நாடுகளிடம் கொண்ட அணுகுமுறை உலக அமைதிக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிற சூழலில் ஒபாமாவின் தலைமை அமெரிக்காவின் நிலைப்பாட்டினை மாற்றக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும் அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது.

அதே போல ஒபாமாவின் முரண்பாடுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேல் போன்ற நாட்டிற்கு தன்னுடைய ஆதரவை தொடர்ந்து எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒபாமா வலியுறுத்தி வருகிறார். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாத சூழலுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவும் முக்கிய காரணமாக உள்ள நிலையில் ஒபாமா இஸ்ரேலுக்கான தனது ஆதரவை எந்தக் கேள்வியும் இல்லாமல் முன்வைப்பது ஒபாமா மீதான நம்பிக்கைகளை சிதைக்கவும் செய்கிறது.

தவிரவும் ஒபாமா தன்னை பல விடயங்களில் முழுவதுமாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. தேர்தல் வெற்றிக்காக அடக்கி வாசிக்கிறார் என்பது புரிகிறது. ஒபாமாவின் மனைவி மிஷ்ஷேல் ஒபாமா அதிரடியாக முன்வைக்கும் சில கருத்துக்களை கூட ஒபாமா முன்வைப்பதில்லை. கறுப்பர்களுக்கு் இன ரீதியான பிரச்சனை இன்றும் அமெரிக்காவில் உள்ள சூழ்நிலையை மிஷ்ஷேல் சமீபத்தில் ஒரு பேட்டியில் (சி.என்.என்) சுட்டிக்காட்டினார். அது போல ஒரு அமெரிக்கராக தான் இப்பொழுது தான் பெருமைப்படுவதாகவும், இது வரையில் அவ்வாறு தான் கருதியதில்லை என்றும் சமீபத்தில் கூறினார். இது கடுமையான சர்ச்சையையும் ஏற்படுத்தியது. (இந்தப் பேச்சுக்களால் ஒபாமாவை விட மிஷ்ஷேல் ஒபாமா என்னைக் கவர்ந்தார். ஹில்லரி கிளிண்டன் போல எதிர்காலத்தில் மிஷ்ஷேல் ஒபாமா களத்தில் இறங்குவாரா ?)

ஒபாமா, ஹில்லரியின் பலம், பலவீனங்கள் ஒரு புறம் என்றால் பிரச்சாரம் நடந்த விதமும் ஒபாமாவின் வெற்றிக்கும், ஹில்லரியின் பின்னடைவுக்கும் காரணமாக இருந்தது. ஹில்லரி தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்து கொண்டு அதற்குள்ளேயே பிரச்சாரம் செய்தார். ஹில்லரியின் வெற்றி தவிர்க்க முடியாதது (Inevitable) என்பதாக கடந்த வருடம் முழுவதும் நிலவிய சூழலில் ஹில்லரியின் பிரச்சாரம் எந்த வித பெரிய திட்டமிடலும் இல்லாமல் ஒரே பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒபாமா தன்னுடைய எதிர் வேட்பாளர் குறித்து தெளிவான திட்டத்துடன் நகர்ந்தார். குறிப்பாக அயோவா (Iowa) மாநில தேர்தலில் ஒபாமா வெற்றி பாதை நோக்கி நகர்ந்த பொழுது ஹில்லரியின் பிரச்சாரம் தடுமாற தொடங்கியது. அதுவும் குறிப்பாக கறுப்பர்கள் ஒபாமாவை நோக்கி நகர தொடங்கிய சூழலில் தென் கரோலினா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா மீது மிக கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களை ஹில்லரி அணியினர் தொடுக்க தொடங்கினர். தென் கரோலினாவின் பாதி வாக்காளர்கள் கறுப்பர்கள். அங்கு பில் கிளிண்டன், பாப் ஜான்சன் போன்றோர் ஒபாமா மீது தொடுத்த தாக்குதல் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. தென் கரோலினா வெற்றி ஒபாமாவின் மீது பலமான கவனத்தை ஏற்படுத்தியது.

ஹில்லரி-ஒபாமா இடையே போட்டி கடுமையாக மாறிய சூழலில் ஹில்லரியின் பிரச்சாரம் அதற்கு ஈடுகொடுக்க தடுமாறியது. டெக்சாஸ், ஒகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியதும் ஹில்லரி ஒபாமா மீது தாக்குதல்களை குறைத்து விமர்சனங்களை முன்வைத்தார். இது சரியான அணுகுமுறையாக இருந்தது.

தற்பொழுது ஹில்லரி வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறுகின்றன. நாளை முடிவு தெரிந்து விடும். ஹில்லரி ஒகாயோ, டெக்சாஸ் என இரண்டு மாநிலங்களையும் இழந்தால் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் அதிகரிக்கும்.

கட்டுரையின் தலைப்புக்கு வருவோம்...ஹில்லரி, ஒபாமா - யார் சிறந்தவர் ? இருவர் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. இருவர் மீதும் எனக்கு பல விடயங்களில் உடன்பாடும் உண்டு. என்றாலும் மெக்கெயினை யார் தோற்கடிக்க கூடியவர் என்பதை கவனிக்கும் பொழுது ஒபாமாவிற்கே வாய்ப்பு உள்ளது போல தோன்றுகிறது. ஹில்லரி வெற்றி பெறும் பட்சத்தில், ஒபாமா துணை ஜனாதிபதியாக போட்டியிட்டால் மெக்கெயினை தோற்கடிக்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால் இவ்வளவு தீவிரமாக எதிர்பிரச்சாரம் செய்து விட்டு ஹில்லரியும், ஒபாமாவும் இணைவார்களா என்ற கேள்வியும் உள்ளது.

யார் சிறந்தவர் என்ற கேள்வியை பொருத்தவரை என்னிடம் இரு பதில்கள் உள்ளன.

- நான் அமெரிக்க குடிமகனாக இருந்தால் நிச்சயம் ஹில்லரியையே ஆதரிப்பேன்.
- அவ்வாறு இல்லாத நிலையில், அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள், உலக அமைதி போன்றவற்றை தற்போதைய சூழலில் நான் பெரிய விடயமாக கருதுவதால் ஒபாமாவை ஆதரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

******

பொதுவாக அமெரிக்க தேர்தல் சூழலில் ஒரு விடயத்தை இந்தியர்களிடம் கவனித்தேன். இந்தியாவில் வலது சாரிகளாக இந்தியாவின் இராணுவ வலிமையை முன்னிறுத்தும் பலர் அமெரிக்காவில் மட்டும் லிபரல்களாக மாறி ஒபாமாவையோ, ஹில்லரியையோ ஆதரிக்கின்றனர். இந்திய வலது சாரிகளுக்கு அமெரிக்க வலது சாரிகளை கண்டால் அச்சம் போலும் :)

தமிழ் அமெரிக்கர்கள் ஹில்லரியை ஆதரிக்கின்றனர். ஹில்லரி விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த கருத்து தமிழர்களை ஹில்லரி ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது. ஒபாமா பெரிய அளவில் இலங்கைப் பிரச்சனை குறித்து பேசவில்லை. என்றாலும் இலங்கைப் பிரச்சனையை பயங்கரவாதப் பிரச்சனையாக பார்க்காமல் இனப்பிரச்சனையாகவே கருதி சமீபத்தில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

13 மறுமொழிகள்:

மோகன் கந்தசாமி said...

///////இந்தியாவில் வலது சாரிகளாக இந்தியாவின் இராணுவ வலிமையை முன்னிறுத்தும் பலர் அமெரிக்காவில் மட்டும் லிபரல்களாக மாறி ஒபாமாவையோ, ஹில்லரியையோ ஆதரிக்கின்றனர். இந்திய வலது சாரிகளுக்கு அமெரிக்க வலது சாரிகளை கண்டால் அச்சம் போலும் ////////
இந்த கேள்வி எனக்கும் வெகுகாலமாக உள்ளது. ஒரு முறை சென்னை கவுன்சலேட்டில் நடந்த கிரீன் கார்டு ஹோல்டர்களுக்குக்கான (90% பிராமின்ஸ் மற்றும் கற்பனை தேசியவாதிகள் (என் கருத்து)) டம்மி தேர்தலில் கூட புஷ் தோற்றார். அமெரிக்காவில் அவர் வென்றார்.
மோகன் கந்தசாமி

11:27 PM, March 03, 2008
Unknown said...

//
தமிழ் அமெரிக்கர்கள் ஹில்லரியை ஆதரிக்கின்றனர். ஹில்லரி விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த கருத்து தமிழர்களை ஹில்லரி ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது. ஒபாமா பெரிய அளவில் இலங்கைப் பிரச்சனை குறித்து பேசவில்லை. என்றாலும் இலங்கைப் பிரச்சனையை பயங்கரவாதப் பிரச்சனையாக பார்க்காமல் இனப்பிரச்சனையாகவே கருதி சமீபத்தில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
//

Good change...

11:33 PM, March 03, 2008
Unknown said...

பகிர்வுக்கு நன்றி

மிக நீ நீண்ட பதிவு...

விரிவாக அலசிஉள்ளீர்கள்

அமெரிக்கராக இல்லாத நிலையில், அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள், உலக அமைதி போன்றவற்றை தற்போதைய சூழலில் நான் பெரிய விடயமாக கருதுவதால் ஒபாமாவை ஆதரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

என்னுடைய , மற்றும் பலரின் பொதுவான கருத்து இதுதான்...

ஒபாமா ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புவோம்...

12:03 PM, March 04, 2008
Boston Bala said...

அமெரிக்காவில் 'இடதுசாரிகள்' இருக்கிறார்களா என்ன?

1:34 PM, March 04, 2008
ILA (a) இளா said...

//வெறும் வாதங்கள், மேடை பேச்சுக்கள் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்தி விடாது.//
என் சக அலுவலக நண்பர்கள் கூறுவதும் அதிகம் பேசுகிறார் என்பதுதான். அதே சமயம் ஒன்றை கவனித்தேன், ஒரு பெண்ணையோ, ஒரு கறுப்பினத்தவரையோ இந்த மக்கள் ஏற்கத்தயாராக இல்லை(என் சுற்றத்தைப் பொறுத்த வரையில்). மெக்கெயினுக்கு போடியில்லை, ஹக்கபீ முன்னமே வந்திருந்தால் ஒரு போட்டி உருவாகி இருக்கும்..

3:06 PM, March 04, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அமெரிக்காவில் 'இடதுசாரிகள்' இருக்கிறார்களா என்ன?

****

நீங்கள் இடதுசாரிகள் என்றால் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் ? கம்யூனிசம் சார்ந்த ஒரு அமைப்பாகவா அல்லது கொள்கை ரீதியில் இடதுசாரிகளா ?

கொள்கை ரீதியான இடதுசாரிகள் என்றால் என்னுடன் பணியாற்றும் அமெரிக்க நண்பர்களில் இடதுசாரி சார்ந்த கொள்கைகளை முன்வைப்பவர்களும் உள்ளார்கள்.

டெக்சாஸ் பகுதியில் வர இருக்கும் NAFTA Superhighwayஐ எதிர்க்கும் பல அமைப்புகள் தங்களது நிலங்களை பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் வசதிக்காக சாலை அமைப்பதை எதிர்க்கிறார்கள். இந்த அமைப்புகள் முன்வைக்கும் கொள்கைகளை இடதுசாரிக் கொள்கைகளாக பார்க்க முடியும்.

அமெரிக்காவில் லேபர் டே (Labor Day) வரலாறு தெரியும் அல்லவா ?

***

கொள்கை ரீதியில் பார்த்தால் இந்தியாவின் நிறுவனப்படுத்தப்பட்ட கம்யூனிச கட்சிகள் என்ன இடதுசாரிகளா ? அவர்கள் உண்மையில் இடதுசாரிகள் என்றால் அவர்கள் ஆட்சியில் நந்திகிராம் சாத்தியம் அல்ல.

நான் கொள்கை ரீதியான சாய்வுகளையே குறிப்பிடுகிறேன்.

7:38 PM, March 04, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

மோகன், நெல்லை காந்த், பேரரசன், பாலா, இளா

உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

8:12 PM, March 04, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அதே சமயம் ஒன்றை கவனித்தேன், ஒரு பெண்ணையோ, ஒரு கறுப்பினத்தவரையோ இந்த மக்கள் ஏற்கத்தயாராக இல்லை(என் சுற்றத்தைப் பொறுத்த வரையில்). மெக்கெயினுக்கு போடியில்லை

****

நான் அப்படி நினைக்கவில்லை...

மெக்கெயினுக்கு ஈராக் ஒரு பலவீனமான விடயம். அது அவருடைய பலம் என்று பலர் கூறினாலும் 100 ஆண்டுகள் ஈராக்கில் அமெரிக்க படைகள் இருக்கலாம் என அவர் உளறி இருப்பதெல்லாம் அவருக்கு பாதகமான விடயமே. தவிரவும் தனக்கு பொருளாதாரம் தெரியாது என கூறியும் இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் பொருளாதாரம் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்றே தெரிகிறது. இது வரையில் சப்-பிரைம் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படாத Goldman Sachs போன்ற நிறுவனங்கள் கூட தற்பொழுது இழப்புகளை எதிர்கொள்ளலாம் என தெரிகிறது.

நவம்பரில் பொருளாதாரம் மிகப் பெரிய பிரச்சனையாகும் பொழுது மெக்கெயின் வெற்றி சுலபமாக இருக்காது.

8:23 PM, March 04, 2008
Boston Bala said...

---கம்யூனிசம் சார்ந்த ஒரு அமைப்பாகவா அல்லது கொள்கை ரீதியில் இடதுசாரிகளா ---

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடிகிறது. மாஸசூஸட்ஸ் கிளையில் ஆறு பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பசுமை கட்சி (Green Party) அபிமானிகளை கொள்கை ரீதியில் இடதுசாரிகளாகக் கருதலாம்? முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) அபிமானிகளும் 'இடதுசாரி' சித்தாந்த வட்டத்துக்குள் விழலாம்.

கேபிடலிசம், உழைக்கும் வர்க்கம் போன்றவற்றில் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு, கம்யூனிசத்துக்கு முரணானது.

கொள்கை ரீதியான இடதுசாரிகள் என்றால் என்ன என்பதில் எனக்கு தெளிவு இல்லை. சுருக்கமான கட்டுரையாக அல்லது சுட்டி் கொடுத்தால் தெரிந்து கொள்வேன்.

---அமெரிக்காவில் லேபர் டே (Labor Day) வரலாறு தெரியும் அல்லவா ?---

தெரியாது :(

3:43 PM, March 05, 2008
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சசி, நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கும் தரமான கட்டுரை. ஒபாமா, ஹில்லரி இருவருமே சிறந்தவர்கள் என்னும் கருத்தில் ஓரளவிற்கு உடன்பாடு உண்டு. ஆனால், இருவருமே தவறு செய்கிறார்கள் என்பதில் எனக்கு ஏமாற்றமும் உண்டு. நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று ஹில்லரி இன்னும் தொடர்ந்து வருவது என்னைப் பொருத்தவரை நல்ல விஷயமே. இருவருக்குள்ளும் எப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொருத்து வேண்டுமானால் அது மெக்கெயினுக்கு ஆதாயமாகப் போகலாம். அவ்வாறு இல்லாமல் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

மெக்கெயினுடன் போட்டி என்பதில் ஒபாமாவாக இருந்தால் வெல்லச் சாத்தியம் அதிகம் என்னும் உங்கள் கருத்தில் இருந்து மட்டும் மாறுபடுகிறேன். ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவருடைய அணுகுமுறை, திட்டங்களைப் பொருத்தும் அமையும் என்பது என் எண்ணம்.

9:41 PM, March 05, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

பாலா,

அமெரிக்காவில் இடதுசாரிகள் இருக்கிறார்களா என்ற உங்களின் மேலோட்டமான கேள்விக்கு தான் தனிப்பட்டவர்களும் இருக்கிறார்கள், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தங்களின் நிலத்தை கொடுப்பதை எதிர்க்கும் அமைப்புகள் போல இங்கேயும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். கம்யூனிச கொள்கைகளின் தாக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. அமெரிக்கா விதிவிலக்கல்ல. எட்டு மணி நேர வேலை என்ற நிலை ஏற்பட்டதெல்லாம் இடதுசாரி கொள்கைகளின்/இயக்கங்களின் தாக்கம் தானே ?

***

கொள்கை ரீதியான இடதுசாரிகள் என்றால் என்ன என்பதில் எனக்கு தெளிவு இல்லை. சுருக்கமான கட்டுரையாக அல்லது சுட்டி் கொடுத்தால் தெரிந்து கொள்வேன்.

***

இந்த குழப்பம் எல்லோருக்கும் உண்டு :)
மேற்குவங்க கம்யூனிச அரசு நந்திகிராம் கலவரத்தை உண்டாக்கியது போல, இலங்கையில் கம்யூனிச இயக்கமாக உருவாகிய ஜேவிபி சிங்கள தேசியவாத இயக்கமாக இருப்பது போல, கம்யூனிஸ்டாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஹிந்து ராம் விஜயேந்திர சரஸ்வதியை தூக்கிப் பிடித்து சங்கர மடத்தை கட்டிக்காக்க துடித்தது போல நிறைய குழப்பங்கள் உள்ளன.

நல்ல கட்டுரை கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன் :)

9:48 PM, March 05, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

மெக்கெயினுடன் போட்டி என்பதில் ஒபாமாவாக இருந்தால் வெல்லச் சாத்தியம் அதிகம் என்னும் உங்கள் கருத்தில் இருந்து மட்டும் மாறுபடுகிறேன். ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது

****

செல்வா, நன்றி...

டெக்சாஸ், ஒகாயோ முடிவுகளை பார்க்கும் பொழுது எனக்கும் உங்களைப் போல தான் தோன்றுகிறது. மெக்கெயின் தன்னுடைய போர் அனுபவத்தை பெரிய அளவில் முன்னிறுத்தும் பொழுது அதனை சமாளிக்க ஹில்லரி தன்னுடைய பொருளாதார அனுபவங்களை முன்னிறுத்துவார். அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போதைய நிலையில் இருந்து இன்னும் மோசமாகலாம் என்பதன் அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே தேர்தல் நேரத்தில் பொருளாதாரம் ஈராக் பிரச்சனையை விட முக்கிய பிரச்சனையாக இருக்கும். அந் நிலையில் மெக்கெயின் - ஹில்லரி இடையே போட்டி கடுமையாக இருக்கும்.

மாறாக ஒபாமாவின் பலம் என்பது அவரின் பேச்சு மற்றும் மக்களை வசீகரிக்கும் சக்தி மட்டுமே. பிரச்சனைகளை அவர் எப்படி அணுகுவார் என்பது தெரியவில்லை. அது போல கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள ஒபாமா "நன்றாகவே" தடுமாறுகிறார் என்பதை நாப்டா விவகாரத்தில் கவனிக்க முடிந்தது. எனக்கும் கூட மெக்கெயின் ஒபாமாவை எளிதாக வீழ்த்தி விடுவாரோ என்ற சந்தேகம் இப்பொழுது எழுகிறது.

மற்றொன்று இது வரையில் பெரும்பாலான ஊடகங்கள் ஒபாமாவை அதிகம் விமர்சிக்க வில்லை. ஒபாமாவிற்கு ஆதரவாகவே பெரும்பாலான ஊடகங்கள் இருந்தன. நாப்டா விவகாரத்திற்கு பிறகு ஒபாமாவின் நிலைப்பாடுகள் குறித்து அதிகளவில் கேள்விகளை ஊடகங்களில் காண முடிகிறது. டெக்சாஸ், ஒகாயோவிற்கு பிறகு ஒபாமாவால் குடியரசுக் கட்சியினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியுமா என்ற கேள்விகளை ஊடகங்கள் எழுப்புகின்றன.

இந்தக் கேள்விகளை ஹில்லரி தொடர்ந்து எழுப்பிய பொழுது ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை :) ஆனால் இப்பொழுது இந்தக் கேள்விகளை எழுப்புகின்றன.

10:14 PM, March 05, 2008
Unknown said...

சசி, என் கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் போலவே. ஹில்லரியின் தவறுகள், குறைகள் நன்றாகத் தெரியும் என்றாலும், ஒபாமா ‍ can he walk the walk?
அதேபோல், ஒபாமா வென்றால் நிறைய வித்தியாசத்தில் வெல்வாராயிருக்கும். அவர் "புதிய காற்றா"யிருக்கிறார் என்று பலர் கருதுகிறார்கள். எனக்கோ, தன் வெள்ளை பாரம்பரியத்தை"யும்" விற்றுக் கொண்டு தான் இந்த போட்டியில் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

மிட்‍வெஸ்ட் எனப்படும் உள்நாட்டில் பல நாள் இருந்தமையால், பெண்ணோ (ஹிலாரியை துணி துவைக்கச் சொல்லவில்லையா:( கறுப்பரோ வருவது மிகக் கடினம் என்றே தோன்றுகிறது. ஆனால், பொருளாதாரம் தான் டிக்கட்

//தேர்தல் நேரத்தில் பொருளாதாரம் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்றே தெரிகிறது. இது வரையில் சப்-பிரைம் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படாத Goldman Sachs போன்ற நிறுவனங்கள் கூட தற்பொழுது இழப்புகளை எதிர்கொள்ளலாம் என தெரிகிறது.// என் பயம் இது தான் (‍too much to lose:(
தேர்தல் நேரத்தில் தீவிரவாதத் தாக்குதல் (ஏன், அந்த பயம் கூட) இருந்தால், இந்த நாட்டின் தலைவிதி மொத்தமாக மாறிவிடும் யானை கையில்:‍(

நான் இன்னும் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் படிக்கவில்லை (அப்பா, பெரிய பதிவு/பின்.ஸ்)

10:56 PM, March 05, 2008