Sunday, January 11, 2009

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

இந்தியாவில் பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை உயர்த்துவதற்காக நிறுவனங்களின் மதிப்பை உயர்த்தி, அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை "அமுக்கும்" செயல் ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஹர்ஷத் மேத்தாவின் ஊழல்களை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் சுசித்தா தலால் மற்றும் தேபசிஸ் பாசு எவ்வாறு பல நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் முதலீடுகளை சிதைக்கின்றன என்பது குறித்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் (Face Value - Creation and Destruction of Shareholder value in India). எனவே இந்தியாவில் இது போன்ற காரியங்கள் நடப்பது ஒன்றும் புதிது அல்ல.

ஆனால் சத்யம் என்ற மிகப் பெரிய நிறுவனம் இதில் ஈடுபட்டதும், பங்குச்சந்தை என்பது மட்டுமில்லாமல் தன்னுடைய நிறுவனத்தின் மதிப்பையே போலியாக கட்டமைத்து இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமாக தன் நிறுவனத்தை மாற்றிக் கொண்டதும் தான் சற்று வித்யாசமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஹர்ஷத் மேத்தா போன்றவர்களின் ஊழல்களை விட ராமலிங்க ராஜூவின் வில்லத்தனம் பிரமிக்க வைக்கிறது. இது குறித்து ஏற்கனவே பலர் எழுதி விட்டதால், அதனைச் சார்ந்த சில எண்ணங்களை மட்டுமே இங்கே முன்வைக்கிறேன்.

தனியார் நிறுவனங்கள் என்றில்லாமல் அரசாங்கமே சில நேரங்களில் பங்குச்சந்தையில் "செயற்கையான" சில மாற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தையில் பங்குகள் வேகமாக வீழ்ச்சி அடையும் பொழுது எல்.ஐ.சி நிறுவனம் மூலமாக அரசாங்கம் பங்குகளை வாங்கி பங்குச்சந்தை அதிகம் வீழ்ச்சி அடையாமல் காப்பாற்றும். எல்.ஐ.சி நிறுவனம் இவ்வாறு நாள்தோறும் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சில மாதங்களுக்கு முன்பு பங்குகளை வாங்கி பங்குச்சந்தை அதலபாதளத்திற்கு உடனடியாக போகாமல் காப்பற்றப்பட்டதை சுசிதா தலால் வெளிப்படுத்தியிருந்தார். பல ஆயிரம் சாமானிய மக்களின் காப்பீடு பணத்தை இந்திய அரசாங்கமே பங்குச்சந்தையில் சூதாட்டம் போல முதலீடு செய்து பங்குச்சந்தையை காப்பாற்றி கொண்டிருக்கிறது. காப்பீடுகளை நெறிப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் அமைப்புகள் இதனை கண்டுகொள்வதில்லை.

காப்பீடுகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது ஒரு சரியான விடயம் அல்ல. அமெரிக்காவில் AIG நிறுவனம் இவ்வாறு செய்து, திவாலாகி அரசாங்கத்தால் காப்பற்றப்பட்டது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடந்தேறியது. இந்தியாவில் காப்பீடு நிறுவனங்களும், பென்ஷன் நிறுவனங்களும் அதனுடைய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளில் தான் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க முதலாளித்துவத்தின் பாணியை இந்தியாவில் நுழைத்த அந்த வைபோகம் அமெரிக்காவில் AIG நிறுவனம் அடைந்த பெரும் சரிவிற்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பது தான் ஆபத்தானது. அரசாங்கமே தன்னுடைய நிறுவனம் மூலம் அதனை செய்து வரும் நிலையில், பிற தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பணம் எந்தளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எனக்குள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சத்யம் நிறுவனத்தின் தற்போதைய ஊழல் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தாலும், சத்யம் நிறுவனம் சர்ச்சையில் அடிபடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சத்யம் நிறுவனம் சிக்கி உள்ளது. 1999-2001ல் கேத்தன் பராக் ஊழலில் சத்யம் நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்த்தப்பட்டன. தேபசிஸ் பாசு அது குறித்து தன்னுடைய சமீபத்தைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

For those of us who have been tracking corporate behaviour for a long time, what Satyam did was only mildly shocking. Such anti-investor actions are not new to them, but investors’ memory, especially that of fund managers, is very short!

We all know that Satyam was one of K-10 companies - stocks of companies that Ketan Parekh was rigging in 1999-2001. That apart, in mid-2000 Satyam Computers merged Satyam Enterprise Solutions in a way that hugely benefited Srini Raju who was running SES.
The merger ratio, fixed by KPMG, was 1:1. Before the merger, Satyam Computers renounced 800,000 shares of SES in favour of Srini Raju at a price of Rs 10 when the shares were trading at Rs 1500 in the stock market. The 1:1 merger ensured that Srini Raju got 800,000 shares of Satyam Computers (paid for at Rs 10). When the information leaked out to investors, they were incensed. The stock collapsed. Among the big sellers were outraged foreign funds.

In August 2002 more governance issues came up. The Department of Company Affairs was asking questions about Satyam’s accounting methods but the company managed to suppress it.

What does this tell you? Well, simply that smart investors must not be taken in by the claims of institutional investors that they will shun the shares forever.

இவ்வாறு சத்யம் கடந்த காலங்களில் செய்த தகிடுதத்தங்களை மறைத்து சத்யம் உள்ளிட்ட பல முன்னனி ஐடி நிறுவனங்களுக்கு புனிதவட்டம் கட்டப்பட்டத்தில் இந்திய ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
ஊடகங்கள் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செய்திகளை வழங்குவது தான் ஊடகங்களுக்கு வெற்றியை கொடுக்கும். ரத்தன் டாட்டா, நாராயண மூர்த்தி, ராமலிங்க ராஜூ போன்றவர்களை புனித பிம்பங்களாக இதே ஊடகங்கள் வளர்த்து வந்தன. இவர்கள் "ஒளிரும் இந்தியாவை" பிரதிபலிப்பதாக இதே ஊடகங்கள் ஒளிவட்டம் கட்டி இருக்கின்றன. இன்று ராமலிங்க ராஜூவின் குட்டு மட்டும் வெளிப்படவில்லை. செய்திகளை விற்கும் இந்த ஊடகங்களின் செயல்பாடும் தான் வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் என்ன, ஊடகங்களுக்கு என்றுமே பிரச்சனையில்லை. செய்திகளை தேவைக்கு ஏற்றது போல அவர்களால் விற்று விட முடிகிறது.

ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இது போன்ற ஏதேனும் ஊழல் கதைகளோ, தில்லுமுல்லுகளோ வெளிப்படுவதும், அரசாங்கம் விசாரணைக் கமிஷன் வைப்பதும் பிறகு பிரச்சனையின் சூடு தணிந்தவுடன் அது மறந்து போவதும் தான் தொடர் கதையாக இருந்தது வருகிறது. 1990களில் ஹர்ஷத் மேத்தா தொடங்கி வைத்த இந்த தொடர் கதை கேத்தன் பராக், UTI என பல வழிகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் புனித பிம்பங்களில் ஒருவராக வடிமைக்கப்பட்ட ராமலிங்க ராஜூ இந்தப் பிரச்சனையில் சிக்கி இருப்பது தான் புதிய செய்தி. ராமலிங்க ராஜூவின் எளிமையை கடந்த காலங்களில் ஊடகங்கள் வியந்து போற்றிய செய்திகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. அதே வகையில் தான் நாராயணமூர்த்திகளும், ரத்தன் டாடாக்களும் வர்ணிக்கப்படுகின்றனர் என்பதை மக்கள் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும்.

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் இன்போசிஸ் இது போல எல்லாம் செய்யாது என ஒரு நண்பர் கூறினார். இன்போசிஸ் இது போன்று செய்யும் என நான் சொல்லவில்லை. ஆனால் இப்படியான போலியான நம்பிக்கைகளை தான் ஊடகங்கள் விதைக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். நாராயண மூர்த்தி, ரத்தன் டாட்டா எல்லோருமே பண முதலைகள். பண முதலைகளின் குறி பணம் தான் என்பதை நாம் மறந்து அவர்களை புனித பிம்பங்களாக தொழுவது தான் நகைச்சுவையாக உள்ளது. ஒவ்வொரு ஐடி நிறுவனமும் செயல்படும் விதங்களை ஆராய்ந்தால் பல நேர்மையற்ற வழிகளை அவை கையாளுகின்றன என்ற உண்மை தெரிய வரும். தங்கள் நிறுவனத்திற்கு ப்ராஜட்களை பிடிக்க இந் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் நேர்மையற்ற உத்திகளை பட்டியலிட்டால் இந்திய நிறுவனங்களிலேயே ஐடி துறை போன்று ஒரு நேர்மையற்ற துறை இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அது தான் "Corporate Governance" க்கு உதாரணம் என்பதாக புனித வட்டம் கட்டப்படுகிறது.

நாராயண மூர்த்திக்கும், தேவ கொளடாவுக்கும் நடந்த பிரச்சனையின் பொழுது இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு முகம் வெளிப்படவே செய்தது. ஆனால் ஊடகங்கள் உடனே நாராயண மூர்த்திக்கு வரிந்து கட்டி கொண்டு வக்காலத்து வாங்கின. இங்கே அரசியல்வாதிகள் மட்டும் தான் தில்லுமுல்லு செய்பவர்கள். கார்ப்பரேட் குப்பைகள், ஊடகங்கள், சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் புனித பிம்பங்கள்.

சத்யம் பிரச்சனை குறித்த ஒரு பத்திக்கையில் இவ்வாறு கேள்வி எழுப்பபடுகிறது

Has our corrupt political system badly influenced our corporate world too? If the company was doing wrong, then where were the regulatory authorities?

அதாவது நம்முடைய அரசியல் தான் "புனிதம்" மிக்க கார்ப்பரேட் உலகத்தை சீரழிக்கிறதாம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால் கார்ப்பரேட் உலகம் தான் அரசியலில் ஊழலை வளர்க்கிறது. இந்தியா தொடங்கி அமெரிக்கா வரை அரசியல்வாதிகளுக்கு தங்களுடைய காரியத்தை நடத்திக் கொள்ள பணம் கொடுப்பது கார்ப்பரேட் உலகம் தான் என்பது எல்லோரும் தெரியும் உண்மை. ஆனால் ஊடகங்கள் இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் அவர்களுக்கு புனித வட்டம் கட்டுகின்றன.
அமெரிக்க தேர்தலில் ஒபாமா பேனி மே, ப்ரடி மேக் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டினை மெக்கெயின் முன் வைத்தார். ஆனால் உண்மையை கொஞ்சம் ஆராய்ந்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இருவருக்குமே சரிசமமாக பணத்தை அள்ளி வழங்கியிருக்கின்றன. அமெரிக்காவில் இந்த விடயங்களில் இருக்கும் வெளிப்படையான தன்மை இந்தியாவில் இல்லை. அப்படி இருந்தால் எவ்வாறு பல நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை அள்ளி வீசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்கின்றன என்பது வெளிப்பட்டு விடும். இந் நிலையில் கார்ப்பரேட் உலகத்தை சுற்றி ஒளிவட்டம் கட்டப்படுவது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

சத்யம் நிறுவன பிரச்சனையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த கேள்விகளும் தற்பொழுது எழுந்து உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சட்டங்களை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எப்பொழுதுமே உண்டு. ஹர்ஷத் மேத்தாவின் ஊழலில் Standrard Charted போன்ற வெளிநாட்டு வங்கிகள் செய்த தில்லுமுல்லுகள் வெளிப்பட்டு இருக்கின்றன (இதுகுறித்து ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதை தொடரில் நான் எழுதி இருக்கிறேன். அதனை இங்கே படிக்கலாம் ). அது போலவே தற்பொழுது Pricewaters Coopers நிறுவனம் எந்தளவுக்கு இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதுமே தங்களுடைய இந்தியக் கிளைகள் மீது பழி போட்டு விட்டு தப்பித்து விடும். ஆனால் நடப்பது என்னவென்றால் ஒவ்வொரு நாட்டிலும் தங்களுடைய லாபத்தை பெருக்க அந் நாட்டு சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பது தான் இந் நிறுவனங்களின் செயல்பாடு. இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை நிலை நிறுத்த இந்திய சட்டங்களை வளைக்க வேண்டுமென்றால் அதனை செய்ய இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எப்பொழுதுமே தயங்காது. கூகுள் அமெரிக்காவில் பயனாளிகளின் அந்தரங்கங்களை வெளியிட போராடுவதாக படம் காட்டும். ஆனால் சீனாவிலும் இந்தியாவில் அனைத்து அந்தரங்கங்களையும் வெளியிடும். இது போன்று தான் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

சத்யம் நிறுவனத்திடம் பணமே இல்லை என்றும், தான் லாபத்தை உயர்த்தி மட்டுமே காண்பித்தேன், பணத்தை கையாடவில்லை என்றும் ராமலிங்க ராஜூ கூறியிருக்கிறார். இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. இது கிரிமினல் தனமானது. டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு இணையாக பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை தங்களின் க்ளையண்டாக சத்யம் நிறுவனம் பெற்றிருக்கிறது. சத்யம் நிறுவனத்தின் கணக்கை பார்த்தால் சத்யம் நிறுவனத்தின் Operating Margin 3% என்பதாக தற்பொழுது வருகிறது. இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் Operating Margin 20%. அப்படியெனில் உண்மையில் ராமலிங்க ராஜூ பணத்தை சுவாகா செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் தங்கள் கணக்கை மாற்றி எழுதியிருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பதை அடுத்து வரும் நாட்கள் தெளிவுபடுத்தும். என்னைப் பொறுத்தவரை நான் இந்த எந்த நிறுவனங்களையும் நம்ப தயாராக இல்லை.

***************

இந்தியாவில் ஐடி துறையின் பின்னடைவு குறித்து தற்பொழுது பலமாக விவாதிக்கப்படுகிறது. நானும் ஐடி துறையில் தான் வேலை பார்க்கிறேன். ஆனால் ஐடி துறையின் பின்னடைவு தற்போதைய இந்திய சூழலில் அவசியமானது என நினைக்கிறேன். நான் 2005ல் ஒரு முறை இவ்வாறு எழுதிஇருந்தேன்.

சென்னையிலும், பெங்ளூரிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பெருகி வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவை கொடுக்கும் ஊதியம் போன்றவை சில நேரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு சமன்பாடு இல்லாத நம் சமுதாயத்தில் இந்த நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துவதாகவே எனக்கு தோன்றும். அரசு நிறுவனங்களிலும், பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை விட பல மடங்கு அதிக சம்பளத்தை மென்பொருள் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 30வயதிற்கும் உட்பட்ட இளைஞர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களைச் சார்ந்த, இவர்களைக் குறிவைத்து இயங்கும் பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உதாரணமாக உல்லாச கேளிக்கை இடங்கள். நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து, பேஷன் ஷோ வரை எங்களைப் போன்றவர்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயங்கள் ஒரு பகுதி சமுதாயத்திற்கு அந்நியமாக தோன்றுகிறது. பொருளாதர ரீதியில் ஒரு வீட்டுக் கடன் பெறும் பொழுது கூட எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை, முக்கியத்துவம் பிறருக்கு கிடைப்பதில்லை. இதுவெல்லாம் ஏற்கனவே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது போல தான் தோன்றுகிறது.

இன்று ஏதோ ஒரு டிகிரியுடன் நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே ஒரு நல்ல வேலையில் நுழைந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையில் என்ன செய்கிறோம், ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கும். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவிற்கு வருகின்றன வேலைகளில் 50%-70% வேலைகள் Production Support /Maintenance வேலைகள் தான். சமீபத்தில் ABN AMRO நிறுவனம் இன்போசிஸ் மற்றும் TCS நிறுவனங்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வேலைகளை கொடுத்தது. இதில் பெரும்பாலான வேலைகள் Production Support /Maintenance தான். இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mechanical Engineer) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Copy-paste செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் உள்ள பிற துறைகளில் நல்ல சம்பளம் இல்லை. ஏனெனில் outsourcing இந்த துறைகளில் குறைவாகவே உள்ளது அல்லது கொஞ்சமும் இல்லை.

இந்த ஏற்றத்தாழ்வு கடந்த இரு வருடங்களில் பல மடங்கு உயர்ந்ததை கடந்த முறை இந்தியாவிற்கு சென்ற பொழுது உணர்ந்தேன். கடந்த மூன்று வருடங்களில் மிகவும் பலமான சமூக ஏற்றத்தாழ்வுகளை ஐடி துறை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது. ஐடி துறையில் பணியாற்றுபவர்களின் ஆடம்பரம் சமூக மட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஐடி துறையில் வேலைப்பார்ப்பவர்கள் தங்களை மிகப் பெரிய அறிவாளிகளாக சமூகத்தில் வெளிப்படுத்திக் கொள்வது அதை விட நகைச்சுவையானது. உண்மையில் ஐடி துறையில் இந்தியாவைப் பொறுத்தவரை 70% வேலைகள் Production Support, Maintenance போன்ற வேலைகள் தான். இதற்கு பெரிய அறிவுத்திறன் வேண்டும் என்று யாராவது சொன்னால் சரிக்கத் தான் முடியும். Development போன்ற வேலைகள் கூட பெரும்பாலும் அமெரிக்காவில் Design செய்யப்பட்டு வெறும் Specs தான் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வேலைகளை இந்தியாவில் செய்து வாங்குவதற்குள் பேசாமல் நாமே செய்து விடலாம் என இங்கிருப்பவர்களுக்கு தோன்றி விடும். இதில் Communication போன்ற பல பிரச்சனைகள் உள்ளன என்பதை நான் மறுக்க வில்லை.

ஆனால் அமெரிக்காவின் இயங்குதலே இந்தியாவின் அறிவுமிக்க மூளைகளால் தான் உள்ளது என்பது போன்ற தோற்றம் தான் நகைச்சுவையானது. இந்த பிம்பம் விதைக்கப்பட்டு இந்தியாவில் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் ஆடிய ஆட்டம் மிக அதிகம். ஐடி துறையில் இருந்தவர்கள் எல்லாம் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது பூமியை எட்டி பார்த்து இருக்கிறார்கள். அந்த வகையில் நானும் ஐடி துறையில் இருந்தாலும், ஐடி துறையின் பின்னடைவு எனக்கு சமூக மட்டத்தில் ஒரு திருப்தியையே கொடுக்கிறது.

19 மறுமொழிகள்:

பாண்டித்துரை said...

////அந்த வகையில் நானும் ஐடி துறையில் இருந்தாலும், ஐடி துறையின் பின்னடைவு எனக்கு சமூக மட்டத்தில் ஒரு திருப்தியையே கொடுக்கிறது.
///

10:41 PM, January 11, 2009
SP.VR. SUBBIAH said...

//////அமெரிக்காவின் இயங்குதலே இந்தியாவின் அறிவுமிக்க மூளைகளால் தான் உள்ளது என்பது போன்ற தோற்றம் தான் நகைச்சுவையானது. இந்த பிம்பம் விதைக்கப்பட்டு இந்தியாவில் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் ஆடிய ஆட்டம் மிக அதிகம். ஐடி துறையில் இருந்தவர்கள் எல்லாம் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது பூமியை எட்டி பார்த்து இருக்கிறார்கள்./////

இந்த உண்மையை அந்தத்துறையில் உள்ள அனைவரும் உணரவேண்டும்!

11:14 PM, January 11, 2009
மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

இப்ப ஒரு ஆள புடிச்சிருக்காய்ங்க
மயில்சாமி அண்ணாதுரைன்னு.

உயிர பணயம் வச்சு பீயள்ளுறவன்.
மீன் பிடிக்க போறவன எல்லாம் இந்த சமுதாயமும், ஊடகங்களும் என்னைக்காவது கவனிச்சிருக்குமா?
கேட்டா அது அவனோட கடமை, தொழில்ன்னு சொல்லுவாய்ங்க.

கலாம், அண்ணாச்சாமின்னு இந்த மீடியாக்காரங்ய்க பண்ற அலப்பற தாங்க முடியல.

"சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் புனித பிம்பங்கள்."

போற போக்குல சொல்லின்செல்வர், மொழிப்போர் தியாகி மேல சாணியடிப்பது கிஞ்சித்தும் எதிபாராதது.

வன்மையான கண்டணத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

11:32 PM, January 11, 2009
சதுக்க பூதம் said...

நல்ல அலசல்.
//ரத்தன் டாட்டா, நாராயண மூர்த்தி, ராமலிங்க ராஜூ போன்றவர்களை புனித பிம்பங்களாக இதே ஊடகங்கள் வளர்த்து வந்தன//

சமீபத்தில் நானோ பிராஜெக்ட் குஜராத் சென்ற போது 220பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய அரசு 300 பில்லியன் மதிப்பிலான சலுகையை டாடா நிறுவனத்துக்கு அளித்துள்ளது.“This means that there is a debt of Rs.60,000 on the people for every Rs.100,000 Nano car produced,” Patel said.

தகவலுக்கு இங்கு பார்க்கவும்
http://www.thaindian.com/newsportal/politics/congress-cries-foul-over-modis-incentives-for-nano_100117858.html

நிச்சயம் ஊழல் இன்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை.
தகவல் தொழில் நுட்ப நிறுவனக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து மாநிலங்களும் நிலங்களை அள்ளி கொடுக்கின்றனர். இதனால் இந்நிறுவனக்கள், தங்கள் தேவைக்கு மேல் முதலீடாக பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை அரசிடம் மிக குறைந்த விலையில் வாங்கி வைத்துள்ளனர். ஆனால் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குபவர்களுக்கு இது போன்ற சலுகைகள் குறைவக்கவே உள்ளது.சமீபத்திய real estate boom ஆல் புதிதாக சிறு தொழில் தொடுங்குவோர் தங்களுடைய முதலீடின் பெரும் பகுதியை நிலத்தை வாங்கவே செலவிட்டு, தொழில் வளர்ச்சிக்கு அதிகம் செலவிட முடியாமல் திணறுகின்றனர்.இது போன்ற நிறுவனக்களுக்கு லாப சதிவீதமும் குறைவு .இவர்கள் பல்லாயிர கணக்கான semiskilled மற்றும் unskilled தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர்.

11:52 PM, January 11, 2009
Unknown said...

மிகவும் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

முக்காலமும் உணர்ந்த முனிவன்

12:22 AM, January 12, 2009
Unknown said...

// ஐடி துறையின் பின்னடைவு எனக்கு சமூக மட்டத்தில் ஒரு திருப்தியையே கொடுக்கிறது.//

இது உண்மை... எனக்கும் கூட.... ஏன் அப்படி?

12:26 AM, January 12, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி...

1:29 AM, January 12, 2009
முபாரக் said...

//அதாவது நம்முடைய அரசியல் தான் "புனிதம்" மிக்க கார்ப்பரேட் உலகத்தை சீரழிக்கிறதாம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால் கார்ப்பரேட் உலகம் தான் அரசியலில் ஊழலை வளர்க்கிறது. இந்தியா தொடங்கி அமெரிக்கா வரை அரசியல்வாதிகளுக்கு தங்களுடைய காரியத்தை நடத்திக் கொள்ள பணம் கொடுப்பது கார்ப்பரேட் உலகம் தான் என்பது எல்லோரும் தெரியும் உண்மை//

சத்திய வார்த்தை. ஆ..ஊன்னா எல்லாம் அரசியலாலதான் வந்தது என்று கூவும் விஜயகாந்த் சினிமா மனோபாவம் எப்போது மாறும்???

இனிவரும் காலங்களில் ராமலிங்க ராஜு இந்தியாவின் நிதியமைச்சராகக்கூட ஆகலாம் யார் கண்டார்? :-)

3:11 AM, January 12, 2009
Anonymous said...

உங்க பதிவுக்கு நன்றிகள். இதுல நீங்க சொன்னது போல அடுத்த புனித பிம்பங்களின் லிஸ்ட் வரப்போகுதா?
இதோ அடுத்தடுத்த நிகழ்வுகள்..

http://thatstamil.oneindia.in/news/2003/08/14/vinitha.html

9:21 AM, January 12, 2009
மயிலாடுதுறை சிவா said...

வழக்கம்ப் போல் மற்றோரு சூப்பர் பதிவு!

இதனால சென்னையில் வீடுகளின் விலை குறைந்தால் மகிழ்ச்சியாய் இருக்கும்!

நாராயண மூர்த்தி ஒரு பேட்டியில் "அழுக்கு கறை படிந்த சத்யத்தை" நான் வாங்கே மாட்டேன் என்று எங்கேய்யோ படித்ததாக ஞாபகம்!!!

நல்ல அருமையான அலசல், தெளிவான விளக்கங்கள்...

மயிலாடுதுறை சிவா...

9:29 AM, January 12, 2009
Anonymous said...

மும்பையில் நடந்த்து ஒரு பயங்கரவாதமென்றால் சத்யதம் செய்திருப்பது முதலாளித்துவ பயங்கரவாதம்.இதை அதற்குரிய மொழியில் விளக்கியிருப்பது மகிழ்ச்சி.

நட்புடன்
வினவு

10:27 AM, January 12, 2009
உண்மைத்தமிழன் said...

சசி..

எனக்கென்னவோ நீங்கள் சொல்லியிருப்பதுபோல் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்துவிட்டுத்தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

படித்தவன் பாழும் செய்தால் பாழாய்ப் போவான் என்பதற்கு இன்னொரு உதாரணம் ராமலிங்கராஜு..

பல புதிய விஷயங்களை(ஹர்ஷத் மேத்தா பற்றி விவகாரம்) இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி..

12:53 PM, January 12, 2009
குடுகுடுப்பை said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சசி..

எனக்கென்னவோ நீங்கள் சொல்லியிருப்பதுபோல் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்துவிட்டுத்தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.

படித்தவன் பாழும் செய்தால் பாழாய்ப் போவான் என்பதற்கு இன்னொரு உதாரணம் ராமலிங்கராஜு..

பல புதிய விஷயங்களை(ஹர்ஷத் மேத்தா பற்றி விவகாரம்) இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி..
//
இதேதான் என் கருத்தும்.

2:23 PM, January 12, 2009
Bruno_புருனோ said...

சசி

ஒரே கட்டுரையில் அனைத்து முக்கியமான விஷயங்களையும் தொட்டுள்ளீர்கள்

//தங்கள் நிறுவனத்திற்கு ப்ராஜட்களை பிடிக்க இந் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் நேர்மையற்ற உத்திகளை பட்டியலிட்டால் இந்திய நிறுவனங்களிலேயே ஐடி துறை போன்று ஒரு நேர்மையற்ற துறை இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.//

//ஆனால் ஊடகங்கள் உடனே நாராயண மூர்த்திக்கு வரிந்து கட்டி கொண்டு வக்காலத்து வாங்கின. இங்கே அரசியல்வாதிகள் மட்டும் தான் தில்லுமுல்லு செய்பவர்கள். கார்ப்பரேட் குப்பைகள், ஊடகங்கள், சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் புனித பிம்பங்கள்.//

இது தான் பிரச்சனையே !!!

//ஆனால் அமெரிக்காவின் இயங்குதலே இந்தியாவின் அறிவுமிக்க மூளைகளால் தான் உள்ளது என்பது போன்ற தோற்றம் தான் நகைச்சுவையானது. இந்த பிம்பம் விதைக்கப்பட்டு இந்தியாவில் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் ஆடிய ஆட்டம் மிக அதிகம். ஐடி துறையில் இருந்தவர்கள் எல்லாம் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள்.//

நீங்கள் கூறியது போல் இதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள் தான்

2:50 PM, January 12, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி...

12:26 AM, January 13, 2009
ரவி said...

//அந்த வகையில் நானும் ஐடி துறையில் இருந்தாலும், ஐடி துறையின் பின்னடைவு எனக்கு சமூக மட்டத்தில் ஒரு திருப்தியையே கொடுக்கிறது.//

just think that your brother or sister or someone hailed from a poor backround just joined in that company with lots of hopes in life..

is that a fun staying below a hanging knife ?

what the heck is your "சமூக மட்டத்தில்"

others risk in life become a topic for your so called idiotic samooga unarcchi ???

shame on u

1:57 PM, January 13, 2009
Anonymous said...

நாராயண மூர்த்தி நடத்தை கெட்டவரா?!!!

சத்யம் நிறுவனம் பிரச்சினையில் சிக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. இந்திய அளவில் புகழ் பெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி, இதை பற்றி கருத்து தெரிவிக்கையில் "சத்யம் ஒரு கறை படிந்த நிறுவனம்" என்று மேம்போக்காக குற்றம் சாட்டினார். இதை அடுத்து பொது மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

௧. இந்திய குடியரசு தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்ட ஒருவர், போட்டி நிறுவனம் என்பதற்காக, பொது புத்தியில் குற்றம் சாட்டுவது சரியா?

௨. ராஜு செய்த தவறுக்காக மொத்த சத்யம் நிறுவனமும் கறை படிந்ததாக கருதினால், பணீஷ் மூர்த்தி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் மூன்று மில்லியன் கொடுத்த நாராயண மூர்த்தி, ஒரு நடத்தை கெட்டவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

4:02 PM, January 13, 2009
புருனோ Bruno said...

//௨. ராஜு செய்த தவறுக்காக மொத்த சத்யம் நிறுவனமும் கறை படிந்ததாக கருதினால், பணீஷ் மூர்த்தி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் மூன்று மில்லியன் கொடுத்த நாராயண மூர்த்தி, ஒரு நடத்தை கெட்டவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
//

அது சரி

அந்த மூனு கோடி நிறுவன பணமா (அதாவது பங்குதாரர்களின் பணமா) அல்லது அவரது சொந்த பணமா என்று யாராவது கூறமுடியுமா

3:28 AM, January 14, 2009