Wednesday, March 18, 2009

தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் திருவிழா காலம் இது. இந்த தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமும், வேலையும் அதிகமாக இருக்கும். மக்களும் யார் யாருடன் சேர்வார்கள் ? தங்களுடைய தொகுதியில் யார் வெல்வார்கள் போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆர்வத்தை காசுக்கும் காரியத்தை ஊடகங்கள் கச்சிதமாக செய்யும்.

தொலைக்காட்சி சானல்களின் பெருக்கத்திற்கு முன்பு இந்த தேர்தல் கால விற்பனையை மொத்த குத்தகை எடுத்திருந்தது அச்சு ஊடகங்கள் தான். அச்சு ஊடகங்கள் தங்கள் சந்தாவை அதிகளவில் பெருக்க இந்த தேர்தல் காலங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். அச்சு ஊடகங்களின் சர்குலேஷன் பிரதிநிதிகள் பத்திரிக்கை ஏஜெண்ட்களை தேடி ஊர் ஊராக அலைந்து தற்பொழுது இருக்கும் பிரதிகளை விட கூடுதல் பிரதிகளை விற்க விற்பனையாளர்களை நெருக்குவார்கள். அவ்வாறு விற்பனையை பெருக்காத ஏஜெண்ட்கள் எதிர்காலத்தில் மாற்றப்படுவீர்கள் என எச்சரிக்கவும் படுவார்கள். இதற்கு பயந்து தேவைக்கு அதிகமான கூடுதல் பிரதிகளை வாங்கியாக வேண்டிய சூழ்நிலையில் ஏஜெண்ட்கள் இருப்பார்கள். சில நேரங்களில் இவ்வாறு கூடுதலான பிரதிகளை பெற்று விற்க முடியாத பிரதிகளை திரும்ப எடுத்துக் கொள்ள கூட தினத்தந்தி போன்ற சில ஊடக நிறுவனங்கள் மறுத்து விடும். தினமலரின் வளர்ச்சிக்கு முன்பாக தினத்தந்தி நிர்வாகம் இந்த விடயங்களில் சற்று சர்வாதிகாரமாகவே நடந்து கொள்ளும். தினமலர் வளர தொடங்கிய பின்பு, தினத்தந்தியின் சந்தை சரிவுக்குள்ளானதை தொடர்ந்து தான் தினத்தந்தி நிர்வாகத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. தினத்தந்தி, தினமலர் நிர்வாகங்களை ஒப்பிடும் பொழுது மேலாண்மை ரீதியில் தினமலர் எத்தனையோ திறமை மிக்கது என கூற முடியும். தினத்தந்தியின் மேலாண்மை ஒரு மன்னார் அண்ட் கம்பெனியை விட மோசமானது. ஏஜெண்ட்களை மிரட்டும் தொனியை தினமலர் நிர்வாகத்தில் நான் பார்த்ததில்லை. தினமலரின் இத்தகைய அணுகுமுறை தான் தினமலரின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என கூற முடியும். இது ஒரு புறம் இருக்கட்டும்.

தேர்தல் நேரத்தில் விற்பனையை பெருக்க இப்படி கள அளவில் முயற்சியை மேற்கொள்ளும் ஊடகங்கள், செய்தி மட்டத்திலும் பரபரப்பினை சேர்ப்பார்கள். அப்படி சேர்த்தால் தான் பத்திக்கை அதிகமாக விற்கும். வழக்கமாக பத்திரிக்கைகள் பக்கமே திரும்பாத பலர் தேர்தல் காலங்களில் மட்டும் பத்திரிக்கைகள் வாங்குவது உண்டு. சராசரியாக சுமார் 10-20% அதிக விற்பனையை தேர்தல் காலங்களில் பார்க்க முடியும். சில இடங்களில் இது அதிகமாகவும் இருக்கலாம். தற்போதைய தொலைக்காட்சி காலங்களில் பத்திரிக்கைகளின் இந்த தேர்தல் கால வருவாயினை தொலைக்காட்சி ஊடகங்களும் விளம்பரங்கள் மூலமாக பங்கு போட்டு கொள்கிறார்கள்.

இப்படி தேர்தல் காலங்களில் தங்களின் வருவாய் அதிகரிப்பது தான் காரணமோ என்னவோ இந்த ஊடகங்களுக்கு ஜனநாயகத்தின் பெருமை தேர்தல் காலங்களில் தான் தெரியவரும். ஊடகங்கள் தேர்தல் காலங்களில் ஜனநாயகத்தை ஓங்கி ஒலிக்கும். இந்தியாவில் ஜனநாயகம் செழித்து ஓங்குவதாக நம்ப வைக்க முனைவார்கள். சீமானை கைது செய்ய முழுக்கமிட்ட தினமலர் தேர்தல் ஜனநாயகம் குறித்து புல்லரிக்க பேசும். ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் ஜனநாயகம் தான். வெறும் மேடைப் பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டம், பொடா சட்டம் போன்றவை மூலமாக பலர் சிறையில் தள்ளப்படும் இந் நாட்டினை, ஜனநாயக நாடு என்று கூறுவதே கேலிகூத்தானது. சீனா, சிறீலங்கா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஜனநாயகம் ஏதோ இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

தேர்தல் காலங்களில் தேர்தல் கணிப்புகளும், அலசல்களும் சுவாரசியம்மிக்கவை. இவர் வெற்றி பெறுவார் என காரணங்களை அடுக்குவதிலும், அவர் தோற்பார் என ஆருடம் கூறுவதும் போன்ற விவாதங்கள் ரொம்ப சாதரணமாக டீக்கடை, பேருந்து நிலையங்கள் எங்கள் அலுவலக கேபிடேரியா வரை நடைபெறுவது உண்டு. இப்படியான விவாதங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது தமிழ் வலைப்பதிவுகளிலும் அதிகளவில் இடம் பெற்றது. நண்பர்கள் இடையே விவாதித்ததை முதன் முறையாக எழுத்து வடிவம் கொடுத்து வலைப்பதிவில் எழுதியது எனக்கு ஒரு சகமான அனுபவம். அப்பொழுது வலைப்பதிவுகளில் இருந்த தமிழக தேர்தல் பரபரப்பு இப்பொழுது காணப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் தனிப்பட்ட அளவில் தற்போதைய ஈழப் பிரச்சனை சார்ந்த சூழ்நிலையும், அதனை புறக்கணிக்கும் தமிழக/இந்திய அரசியல்வாதிகளின் போக்கும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டினையும் குறைத்து இருக்கிறது. அரசியல்வாதிகளின் பின்னே இருந்து இந்த தேர்தலின் போக்கினை தீர்மானிக்கும் சக்திகளைப் பற்றிய புரிதல் முந்தைய காலங்களை விட தற்பொழுது அதிகம் உள்ளது. இதுவும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தை குறைத்திருக்கிறது.

அதே நேரத்திலே முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் இந்திய அரசியல் ஒரு குழம்பிய குட்டையாக காட்சி அளிப்பது ஒருவகையில் ஆறுதலையும் தருகிறது. பல தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவை ஹிந்தி, ஹிந்து மதம் சார்ந்த ஒரே தேசியமாக கட்டமைக்க இந்திய தேசிய சக்திகள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து முனைந்து வந்திருக்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை தன்மையுடன் கட்டி எழுப்ப முனைந்த அந்த பிம்பம் இன்றைக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் சரிவு மூலம் ஒரளவிற்கு உடைக்கப்பட்டிருக்கிறது. முன் எப்பொழுதையும் விட இந்த தேர்தலில் இந்த இரு கட்சிகளும் மிகவும் பலவீனமாக உள்ளன. மாநில கட்சிகள் தங்களின் செல்வாக்கினை தக்க வைக்க அதிகளவில் முனையும். குறைந்தபட்சம் இரண்டு/மூன்று பிரதமர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெறும் என்றளவில் இந்திய அரசியல் குழப்பமாக உள்ளது.

அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுப்பினால் - மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, மாயாவதி, தேவ கொளடா, சந்திரபாபு நாயுடு, முலயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதாவ், சரத் பவார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா என அடுக்கப்படும் பெயர்கள் தலைசுற்றலை ஏற்படுத்துகின்றன. இவர்களில் அதிகளவு வாய்ப்பு மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, மாயாவதி போன்றோருக்கு உள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என கூறி விட முடியாது.

சந்திரசேகர், தேவ கொளடா போன்றோர் எல்லாம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆட்சியில் அமர்ந்த நிகழ்வுகளை நிச்சயம் அடுத்த சில மாதங்களில் மறுபடியும் எதிர்பார்க்கலாம்.

முலயாம் சிங் யாதவ் உத்திரபிரதேசத்தில் அதிக இடங்களை பெற்றால் அவரும் நாற்காலியில் உட்கார முனைவார். காங்கிரஸ்-முலயாம் கூட்டணி உத்திரபிரதேசத்தில் ஏற்பட்டிருந்தால் முலயாம் அதிக இடங்களை பிடிக்க கூடும் என்ற காரணத்தால் தான் உ.பியில் தோற்றாலும் பரவாயில்லை கூட்டணி தேவையில்லை என காங்கிரஸ் முலயாமை விட்டு விட்டது. கர்நாடகத்தில் தேவ கொளடா அதிக இடங்களை பிடித்தால் மறுபடியும் பிரதமராகலாம். இதே போன்ற ஒரு தருணத்தில் தான் ஜனதா தள கட்சியில் இருந்து தேவ கொளடா யாருமே எதிர்பார்க்காமல் பிரதமரானார்.

இத்தகைய ஒரு தருணத்தில் தான் உலக வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஒரு ”தமிழன்” பிரதமராகும் ஒரு வரலாற்று நிகழ்வு வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரைக்கும் எனக்கு மகிழ்ச்சி தான். அந்த தானை தமிழன் ஜி.கே.மூப்பனாருக்கு பிறகு அந்த இடத்தை அடைய மற்றொருவர் முயற்சிக்கிறார். அதனை சுப்பிரமணியம் சாமி நிறைவேற்ற போகிறாராம். இரண்டாவது முறை நடக்காமல் போனது மூன்றாவது முறை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது தான் ஆபத்தானது. பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காமல், ஜெயலலிதா தமிழகத்தில் அதிக இடங்களை (30+) கைப்பற்றினால், ஜெயலலிதா தலைமை அமைச்சராகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 20, அதிமுக கூட்டணிக்கு 20 என தமிழக மக்கள் சமமாக படி அளந்து ஒரு மனுநீதிச்சோழனாக தீர்ப்பு அளித்தால் தமிழகம் தப்பிக்கும். இல்லாவிட்டால் உலக வரலாற்றில் முதன் முறையாக என்ற அவலங்கள் எல்லாம் நடந்தேறும்.

**********

கடந்த தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் மறுபடியும் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்று போனது. தற்போதைய தேர்தல் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆட்சியை பிடிக்க அற்புதமான வாய்ப்பு. காங்கிரஸ் கட்சி மீது இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 2004ல் இருந்ததை விட விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கை தரத்தை கடுமையாக பாதித்து உள்ளது.
விவசாயம், தொழில்துறை என அனைத்து மட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி உள்ளது.

பொதுவாக காங்கிரசை காட்டிலும் இந்தியாவின் நடுத்தரவர்க்க மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி மீது அபிமான உண்டு என்பதான ஒரு கருத்தாக்கத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இம் முறை நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா மிக எளிதாக வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் 2004ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை கூட இம் முறை பாரதீய ஜனதா கட்சியால் பெற முடியாது என்பதே தற்போதைய சூழ்நிலையாக உள்ளது. இதைக் கொண்டே ஊடகங்களின் நடுத்தரவர்க்க கருத்தாக்கம் எவ்வளவு புரட்டானது என்பதை நாம் புரி்ந்து கொள்ள முடியும்.

குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மட்டும் தான் பாஜக தற்பொழுது பலமாக உள்ளது. ஹிமாச்சல், சட்டிஸ்கர் போன்ற சிறிய மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலத்தில் கூட்டணி பலத்தாலும் பாஜக இடங்களை கைப்பற்ற கூடும். கடந்த தேர்தலில் ராஜஸ்தானில் தான் பாஜக அதிக இடங்களை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து உள்ளது. உத்திரபிரதேசம் பாஜகவிற்கு கடுமையான சரிவினை கொடுத்திருக்கிறது. மாயாவதி, முலயாம் சிங் யாதவ் போன்றோருக்கு பிறகு தான் மூன்றாவது இடத்தில் பாஜக உள்ளது. ஒரிசா போன்ற மாநிலங்களில் கூட்டணி பலத்தால் அதிக இங்களை பெற்ற பாஜக இம் முறை கூட்டணியில் ஏற்பட்ட பிளவால் சரிவினை எதிர்கொள்ளும் என தெரிகிறது.

1984ம் ஆண்டு தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக 1999ம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய 182 இடங்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சுமார் 270 பாரளுமன்ற உறுப்பினர்கள் மூலம் முதன் முறையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது. அவ்வாறு ஆட்சி செய்த பாஜக 2004ம் தேர்தலில் பெற்ற 138 தொகுதிகளை கூட இம் முறை பெற முடியாது என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் இந்த சரிவிற்கு காரணம் என்ன ?

பாஜக ஆட்சியை பிடித்ததற்கு முக்கிய காரணம் ராமர் கோயில் பிரச்சனை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான மதக்கலவரங்கள் போன்றவையே. மதரீதியிலான உணர்வுகளை தூண்டி விட்டே பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை பெருக்கியது. ஆனால் மக்களை கவரக்கூடிய ஒரு தலைவரை பாஜக உருவாக்கவில்லை. பாஜக ஒரு வலுவான தலைவரை எப்பொழுதுமே கொண்டிருக்கவில்லை. வாஜ்பாய் கூட ஒரு முகமூடி தான். அதனை அந்தக் கட்சியின் தலைவர்களே கூறி வந்தனர். பாஜகவின் இந்த நிலைக்கு காரணம், பாஜக சார்ந்து இருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்பரிவார் அமைப்புகள் தான். பாஜகவின் அடித்தளமே சங்பரிவார் அமைப்புகளால் தான் பிணைக்கப்பட்டிருந்தது. சங்பரிவாரின் மதரீதியிலான முன்னெடுப்புகளான ஹிந்தி - ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதத்தை முன்னெடுப்பதே பாஜகவின் நோக்கம். அதே நேரத்தில் அதனுடைய மத ரீதியிலான தீவிரவாதத்தை மறைத்து தேசிய மட்டத்தில் ஒரு மிதமான தலைவரை கொண்டு ”மறைமுகமாக” (Hidden Agenda) தன்னுடைய செயல் திட்டங்களை முன்னெடுப்பதே சங்பரிவாரின் திட்டம். அதற்கு பாஜகவிற்கு கிடைத்த முகமூடி தான் வாஜ்பாய். வாஜ்பாயால் அதனை வெற்றிகரமாக சாதிக்கவும் முடிந்தது. என்றாலும் வாஜ்பாயால் பாஜகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஒரு சில ஹிந்தி மாநிலங்களுக்கு வெளியே பாஜக தலைவர்களால் மக்களை கவர முடியவில்லை. கூட்டணிகளையும் பெற முடியவில்லை. பாஜகவின் வட இந்திய மேல்தட்டு முத்திரையை வாஜ்பாயால் விலக்க முடியவில்லை.

வாஜ்பாய்க்கு பிற்கு அடுத்த பாஜக பிரதமராக அத்வானி இருப்பார் என நம்பப்பட்டது. வாஜ்பாயை விட அத்வானிக்கு கட்சியில் செல்வாக்கு அதிகம் என்ற பிம்பமும் அதற்கு காரணம். ஒரு காலத்தில் வாஜ்பாய் வெறும் "மாஸ்க்" தான், ஆட்சியின் ரிமோட் அத்வானி கையில் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்க, அத்வானியே நாக்பூரில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் வெறும் மொம்மை தான் என்று 2004ல் பாஜக ஆட்சியை இழந்த பிறகு நடந்த சில நிகழ்வுகள் நிருபித்தன. அது பாஜகவை மேலும் பலவீனப்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ் தலைமை தான் பாஜக என்ற கட்சியையே இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ் நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்களை தான் பாஜக செயல்படுத்த முடியும். அதனை வாஜ்பாய் ஆட்சியிலேயே கண்டுகூடாக பார்க்க முடிந்தது. 2004ல் பாஜக ஆட்சியை இழந்த பிறகு பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் ஹிந்து அடிப்படைவாத தேசியவாத கோஷத்தை கைவிட வேண்டும் என அத்வானி நினைத்தார். ஹிந்து அடிப்படைவாதம் என்பது கட்சிக்கு சில இடங்களை பெற்று தருமே தவிர அதுவே எப்பொழுதும் இந்தியாவெங்கும் வெற்றியை தந்து விடாது. ஹிந்து அடிப்படைவாத கோஷத்தால் மாநில கட்சிகளின் கூட்டணியும் கிடைக்காது. 2004 தேர்தலில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் கோஷத்தை தோற்கடித்தது. ஒரு சில மாநிலங்களை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவெங்கும் தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஹிந்தி - ஹிந்து என்ற அடையாளங்களை கலைய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இருந்தது. தவிரவும் அத்வானி ஒரு மத அடிப்படைவாதி, ரதயாத்திரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர் என்ற வகையில் தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பிரபலமானார். தன்னுடைய இந்த இமேஜ் கூட்டணி ஆட்சி சார்ந்த சூழ்நிலையில் தனக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி நினைத்தார். வாஜ்பாய் போன்று ஒரு மிதவாத பிம்பத்தை முன்னிறுத்த வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. இவை தவிர ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து கட்சியை விடுவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கடும் மத அடிப்படைவாதத்தில் இருந்து கட்சியை விலக்க வேண்டுமெனவும் நினைத்தார்.

அத்தகைய சூழலில் தான் 2006ல் பாக்கிஸ்தான் சென்ற அத்வானி ஜின்னா ஒரு Securalist என்று கூறினார். இந்த ஜின்னா அஸ்திரம் மூலம் வாஜ்பாய் போன்று தானும் ஒரு மிதவாதி என்று காட்டிக் கொள்வதும், தன்னுடைய அடிப்படைவாதி இமேஜை அகற்றிக் கொள்வதும், ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாஜகவை விலக்கிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் அத்வானிக்கு இது கட்சியில் பலத்த சரிவினையே ஏற்படுத்தியது.

பாஜகவின் மொத்த அமைப்பையுமே ஆர்.எஸ்.எஸ் தான் கட்டுப்படுத்துகிறது. காரணம் பாஜகவின் தலைவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்ல. பாஜக மீதான அபிமானம் என்பது மதரீதியிலானதே. தனிப்பட்ட தலைவர்களை சார்ந்தது அல்ல. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அடித்தளத்தில் இருந்து எழுந்தது தான் பாஜக. எனவே பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கட்டுப்பட்டே தீர வேண்டும். இந்த நிலையில் இருந்து விதிவிலக்கானவர் நரேந்திர மோடி மட்டுமே. மத ரீதியிலான தளத்தை பயன்படுத்தி் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டை கடந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரே பாஜக தலைவர் நரேந்திர மோடி தான் (ஹிட்லரை ஜெர்மனி மக்கள் கொண்டாடினர் என்பதை இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்).

அத்வானி ஜின்னாவை பாக்கிஸ்தானில் சென்று பாராட்டியது ஆர்.எஸ்.எஸ் க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் "பாக்கிஸ்தான்" என்ற தேசத்தையே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது பாக்கிஸ்தான் உருவாக காரணமாக இருந்த ஜின்னாவை அத்வானி புகழ்ந்துரைத்ததை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ? இத்தனைக்கும் வெளிப்படையாக அத்வானி ஜின்னா குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. ஜின்னாவின் ஒரு உரையை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் அதைக் கூட சங்பரிவார் அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.அத்வானி முதலில் தான் பெரிதாக வளர்த்த பாரதீய ஜனதா இயக்கம் தன்னை கைவிடாது என்று நினைத்தார். தன்னுடைய ராஜினாமா அறிவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனையை சரியாக்கி விடலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியை விடுவித்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் இதனை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு குறிவைத்த நிலையிலும், பாஜக எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூறியது தான் அவரது நிலையை மோசமாக்கி விட்டது. பாஜகவில் இருந்த அடுத்தக் கட்ட தலைவர்கள் அத்வானியை அகற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கட்டிக் காப்பதாக தங்களை முன்நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்வானி விலகும் சூழலும், அடுத்த தலைவராக ஆர்.எஸ்.எஸ் முடிவெடுப்பவரே தலைமையேற்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

நாக்பூர் தலைமையை தங்கள் பக்கம் ஈர்க்க பல தலைவர்கள் முயற்சி எடுக்க, ராஜ்நாத் சிங்கை பாரதீய ஜனதா கட்சி தலைவராக்கி, அத்வானியை வீட்டிற்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் எடுத்தது. அத்வானியின் நிலை கட்சியில் கேள்விக்குரியாக்கப்பட்டது. நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்ற வதந்திகள் உலாவின. அத்வானி தன்னுடைய செல்வாக்கினை மீட்க 1990ல் செய்தது போல மறுபடியும் 2006ல் ஒரு ரதயாத்திரை தொடங்கினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலில் ராஜ்நாத் சிங்கும் மற்றொரு புறத்தில் இருந்து ரதயாத்திரை தொடங்கினார். 1990ல் நடந்தது போன்று அத்வானிக்கு ரதயாத்திரை வெற்றியை கொடுக்க வில்லை. அவருக்கு ரதயாத்திரை தோல்வியையே கொடுத்தது.

இன்றைக்கு பாஜக பிளவுபட்ட கட்சியாக இலக்கில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. காரணம் தேசியவாதம் மக்களுக்கு தேவையில்லாதது. மக்களை நீண்ட நாட்களுக்கு தேசியவாதம் போன்ற பிம்பங்களில் அடைத்துவைக்க முடியாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை மறைத்து இந்தியாவை ஹிந்தி ஹிந்து மதம் சார்ந்த ஒற்றை தேசமாக கட்டமைக்க சங்பரிவார் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது இயல்பானது. அந்த இயல்பை மறைத்து பின்ன முனைந்த செயற்கையன ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதத்தை மக்களே உடைத்து இருக்கின்றனர். பாஜக அதிகம் வளர்ந்த உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலேயே அது தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது.

ஒரு மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் தலைவரான நரேந்திர மோடியை தேசிய தலைவராக மாற்றி விடலாம் என பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் செல்வாக்கு என்பது உள்ளூர் தலைவர்களாலேயே நிலை நிறுத்த முடியும் என்பது நரேந்திர மோடி மூலமும், கர்நாடகத்தில் பெற்ற வெற்றி மூலமும் நிருபிக்கப்பட்டிக்கிறது. அத்வானிக்கும், வாஜ்பாய்கும் குஜராத் வெற்றியிலோ, கர்நாடகா வெற்றியிலோ எந்த பங்கும் இல்லை. ஆனால் அதை மறந்து நரேந்திர மோடியை தேசிய தலைவராக்குவதன் மூலம் சரி செய்து விடலாம் என பாஜக நினைக்கிறது. அம்பானிகள் சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டால் நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தலைவராகி விட முடியாது. தமிழ்நாட்டு குப்புசாமிக்கும், ஆந்திரத்தின் ரொட்டிக்கும், கேரளாவின் நாயருக்கும் இன்னும் நரேந்திர மோடியின் புகைப்படம் கூட தெரிந்திருக்காது.

பாஜக தன்னுடைய வெற்றியை தக்கவைக்க எப்பொழுதுமே மத அடிப்படைவாதத்தை தூண்டும். எங்கெல்லாம் மதவாதம் தூண்டப்படுகிறதோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெறும். முஸ்லீம்களை வேட்டையாடி நரேந்திர மோடி வெற்றி பெற்றார். ராமர் சேனாக்களை வளர்த்து கர்நாடகத்தை தக்கவைக்க பாஜக முனைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தேசியவாதம் எடுபடாத மாநிலங்களில் பாஜக நுழையவே முடியாது. தமிழகத்திலும், கேரளாவிலும் அது தான் நிலை. ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதம் அலுத்து போய் விட்டாலும் பாஜக தோல்வி அடைந்து விடும். உத்திரபிரதேசத்தில் அது தான் தற்போதைய நிலை.


பாஜகவின் சரிவு அதைத் தான் இன்றைக்கு தெளிவுபடுத்தி கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் தொடங்கிய பாஜக சரிவு, இந்த தேர்தலிலும் நீடிக்கும். இனி பாஜக மெதுவாக அழிந்து போகும்.

27 மறுமொழிகள்:

Anonymous said...

இது டைரிதான்...

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...

12:29 AM, March 19, 2009
Anonymous said...

நல்ல அலசல். நன்றி

பாஜக அழியும் என்று சொல்கிறீர்கள். பாஜக தோல்வி அடைந்து இருக்கிறது. ஆனால் முழுவதுமாக தன் சொல்வாக்கினை இழக்கவில்லை. ராஜஸ்தானில் எதிர்கட்சி தான். துடைக்கப்பட்டு விடவில்லை. உத்திரபிரதேசத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அழிவும் சீக்கிரம் நடக்காது. மாற்று அரசியல் சக்தி வரவில்லை என்றால் அழிவு நடக்காது. மாற்று அரசியல் சக்தி வந்தால் அழிவு நடக்கும். பகுஜன் சமாஜ் கட்சி வளர்ந்தால் அழிவு நடக்கும்

- ரமணன்

1:27 AM, March 19, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

பகுஜன் சமாஜ் கட்சி வளர்ந்தால் அழிவு நடக்கும்

**********

இது சாத்தியமே. தில்லியில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பிறகு நடந்த தில்லி சட்டசபை தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என நம்பப்பட்டது. ஆனால் காங்கிரசுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஊடகங்கள் கூட ஷீலா தீட்சித்தின் தனிப்பட்ட செல்வாக்கினால் தான் இந்த வெற்றி கிடைத்ததாக கூறின. ஆனால் வாக்கு நிலவ்ரம் கொண்டு பார்த்தால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களை பகுஜன் சமாஜ் கட்சி எடுத்துக் கொண்டது. இதனால் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பிளவு பட்டு பாஜக தோல்வி அடைந்தது.

மாயாவதி பிரதமராகும் பட்சத்தில் அது பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கினை வளர்க்க உதவும் (இருக்கிற செல்வாக்கு சரியவும் வாய்ப்பு உள்ளது). அது பாஜகவிற்கு சரிவை கொடுக்கலாம்.

ஆனால் உ.பியில் மாயாவதி அமைத்த தேர்தல் கூட்டணி பிற மாநிலங்களில் சாத்தியமா என்பது கேள்விக்குறியே ?

மாயாவதியின் வெற்றிக்கு அவர் அமைத்த கூட்டணி என்பது தவிர முலயாம் சிங் எதிர்ப்பு வியூகமும் ஒரு காரணம் என்பதை கவனிக்க வேண்டும்

நன்றி...

1:44 AM, March 19, 2009
Anonymous said...

சசி இதிலே ஒரு செய்தியை நீங்கள் விவாதிக்காமல் விட்டு விட்டீர்கள் என்று தோன்றுகிறது. அது தமிழகத்தில் பசக எந்த நிலையில் இருக்கிறது என்று மிகவும் எளிமையாக இலகணேசனும் சரத்துகுமாரும் பேசிக்கொள்வது போல் விளக்கிவிட்டார்கள். இருப்பினும் ஒரு சிறுங்கூட்டம் என்னவோ மோடிதான் தங்களுக்கு முதல்வர் போலவும், இன்னமும் வாசிபேயிதான் தலைமை அமைச்சர் போலவும் பேசவும் எழுதவும் செய்வதை விட்டு விட்டீர்கள். அதுவும் தமிழில் இந்த கலாட்டா. அப்படி அவர்மீது அபரிவிதமான அனுதாபம் இருந்தால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே இவர்கள் எல்லாம் போகவேண்டியது தானே..........

அது மட்டும் அல்லாது, இந்த இயக்கத்தின் அனுதாபிகள் அனைவரும் ஒரு வெறிப்பிடித்தவர்கள் போல் பேசுவதையும் நம்மால் எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். நீங்கள் சொல்வது போல் இந்த இயக்கம் அழிவது தான் இந்தியாவிற்கு ஏன் உலகத்திற்கே நல்லது......

பனிமலர்.

1:49 AM, March 19, 2009
ராஜ நடராஜன் said...

ஆழ்ந்த பதிவு.தற்போதைய சூழலில் காங்கிரசுக்கு மாற்றாக பி.ஜே.பி இருப்பது நல்லதென்றே நினைக்கிறேன்.ஆனால் இந்த ராமன்சேனா,கோயிலக் கட்டுறேன்,ராமன் பாலம் எதிர்ப்பு,இப்ப வருணோட வாய் அழிச்சாட்டியங்கள் தாங்கல.

5:26 AM, March 19, 2009
பதி said...

சசி, உங்கள் ஆசை நிறைவேறட்டும் !!!!

பாஜகா, காங்கிரஸ் போன்ற தேசிய வியாதிகள் அழிவது நாட்டில் அதிகார பகிர்வை கொண்டுவரும் என எண்ணுகிறேன். அதேசமயம், போலித் தேசியவாதம், மதவாதம் பேசும் கட்சிகள் அழிவது நாட்டின் பன்முகத் தன்மை சிதையாமல் இருக்க ஒரு வழியில் உதவும்.


//அப்பொழுது வலைப்பதிவுகளில் இருந்த தமிழக தேர்தல் பரபரப்பு இப்பொழுது காணப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் தனிப்பட்ட அளவில் தற்போதைய ஈழப் பிரச்சனை சார்ந்த சூழ்நிலையும், அதனை புறக்கணிக்கும் தமிழக/இந்திய அரசியல்வாதிகளின் போக்கும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டினையும் குறைத்து இருக்கிறது.//

இது போன்ற காரணங்களினால், தமிழகம் தவிர்த்து, யார் யாருடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என தெரிந்து கொள்வதில் கூட ஆர்வமில்லாமல் போய்விட்டது....

9:10 AM, March 19, 2009
Anonymous said...

அருமையான பதிவு, மக்களே தேர்தலில் வாக்களிக்காமல் கூட போங்கள் ஆனால் இது போன்ற தரமான பதிவுக்கு வாக்களித்து மகுடத்தில் ஏற்றுங்கள்!

10:30 AM, March 19, 2009
Unknown said...

//திமுக கூட்டணிக்கு 20, அதிமுக கூட்டணிக்கு 20 என தமிழக மக்கள் சமமாக படி அளந்து ஒரு மனுநீதிச்சோழனாக தீர்ப்பு அளித்தால் தமிழகம் தப்பிக்கும். இல்லாவிட்டால் உலக வரலாற்றில் முதன் முறையாக என்ற அவலங்கள் எல்லாம் நடந்தேறும்///


You are able to digest Mayavathi and other sundries as prime minister but not a southern leader?

I am not supporting Jayalalitha for PM. Nobody can deny her atrocities and vote politics for minority appeasement.

But, the point is, when an illiterate like Mayavati is an acceptable option for PM, anybody can qualify for that. You need to listen to comments by Raghavan and Kambir on this one.

Also, what is the guarantee that a Kanimoli or Kayalvili will not be recommeded from Karunanidhi kudumbam DMK private ltd if they win in tamilnadu?

PARAMS

10:40 AM, March 19, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

கள்ள ஓட்டை குத்தி தமிழ்மணம் பரிந்துரையில் 0/34 என்ற அளவுக்கு கொண்டு வந்த நண்பரே, இப்போ சந்தோஷமா ?

இதுவெல்லாம் ஒரு பொழப்பு :)))

வாழ்த்துக்கள்

11:03 AM, March 19, 2009
Anonymous said...

கள்ள ஓட்டை குத்தி தமிழ்மணம் பரிந்துரையில் 0/34 என்ற அளவுக்கு கொண்டு வந்த நண்பரே, இப்போ சந்தோஷமா ? ///


kadamaiyai sey palanai ethirpaarathae.

11:19 AM, March 19, 2009
Anonymous said...

அடப்பாவிங்களா, கடைக்கு போகும்போது 16/16 திரும்பி வந்து பாத்தா 0. யாருய்யா அந்த பூஜ்யம்? வர வர தமிழ்மண மகுடம் திறந்தவெளி கழிப்பிடமா மாறிப்போச்சு.

//இதுவெல்லாம் ஒரு பொழப்பு :))) //

இது தான் பொழப்பே! இதுல பெருமை வேறு...

11:39 AM, March 19, 2009
Anonymous said...

அப்ப பூஜ்யத்த பூஜ்யமாக்கிட வேண்டியதுதான். கடமையை செய்வோம் பலன் வருமோ வராதோ. அடச்சே இது மாதிரியெல்லாம் பின்னூட்டம் போட வச்சுட்டாங்களே!

12:01 PM, March 19, 2009
Anonymous said...

சசி நீங்கள் சொல்வது போல பா.ஜ.க மெல்ல அழிந்து போக வேண்டியது அதன் விதி என்றாலும் அது அவ்வளவு எளிதில் நடக்காது. பாசிஸ்டுகளின் உக்கிரத்தை மக்கள் நேரடியாக உணராதவரை அவர்கள் மேல் உள்ள கவர்ச்சி போகாது. இன்று மாயாவதி போன்றவர்கள் எடுத்துள்ள ஆபத்தான நிலைப்பாடு (பார்ப்பன தலித் கூட்டனி)மற்ற மாநில கட்சிகளின் செயல்பாடுகள், போலி கம்யூனிஸ்டுகளின் கயமை இதெல்லாம் வலதுசாரிகளுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளியை வெகுவாக குறைக்கின்றது. அனேகமாக எதிர்காலத்தில் இது மீண்டும் அசுர பலத்துடன் பா.ஜ.கவை ஆட்சியில் ஏற்றும். அது இந்தியாவை மற்றொரு குஜராத்தாக மாற்றும்.

12:10 PM, March 19, 2009
Unknown said...

// அது இந்தியாவை மற்றொரு குஜராத்தாக மாற்றும்.
///

It should be a welcome change. Look at current Gujarat and the development it has made under the leadership of someone like Modi. The negative connotation media and right wings like you try to attach to Gujarat is bust.
If you know the support for driving India towards a Gujarat model for a well developed country is gaining popularity among indian youth. You will know that Modi is one of their favorite leaders if you talk to them.
Current vote bank politics played by all political parties including BJP is the reason for temperary decline. It will not last long as BJP is the only party with more educated and intelligent people

PARAMS

12:36 PM, March 19, 2009
Anonymous said...

அய்யா பரம்பிதா இங்கேயும் வந்து இந்துத்வா ஜல்லியா. கஷ்டகாலம். மகுடத்துல உக்காந்து கள்ள வோட்டு போடறான் பாரு அவன்தான் பீசேபீக்கு ஓட்டு போடுவான்.

2:10 PM, March 19, 2009
Anonymous said...

பா.ம.க. பொழைப்பை விடவா

9:28 PM, March 19, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

பின்னூட்டம் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

9:46 PM, March 19, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

PARAMS,

உங்க காமெடி தாங்க முடியலை :))

அது ஒரு புறம் இருக்கட்டும். மோடி இந்தியாவின் பிரதமராக தகுதி உள்ளவரா, இல்லையா என்ற விவாதத்தையே நான் முன்னெடுக்கவில்லையே ? அப்படி எங்கேயும் கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேனா ? நான் கூறியது எல்லாம் மோடியால் இந்தியா முழுமைக்குமான தலைவராக முடியாது என்பது தான். குஜராத்திற்கு வெளியே நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது என்று தான் கூறினேன்.

நரேந்திர மோடி ஒரு பாசிச பயங்கரவாதி. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மோடி பிரதமராவது பொருத்தமானது தான். எனவே மோடி இந்தியாவின் பிரதமராவதை நான் நிச்சயம் எதிர்க்க மாட்டேன்.

*******

நரேந்திர மோடியின் குஜராத்தை விட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னனியில் இருக்கிறது. இது குறித்து முன்பே ஜோ ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த சுட்டி இங்கே தருகிறேன். படியுங்கள்

http://cdjm.blogspot.com/2008/09/blog-post.html

பொதுவாக அன்னிய முதலீடு குஜராத்திற்கு அதிகம் வருகிறது என்பது தவிர மற்ற எந்த விதத்திலும் தமிழகத்தை விட குஜராத் முன்னனியில் இல்லை. அதுவும் கூட தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை.

குஜராத்திகள் வணிகத்துறையில் அதிகம் இருப்பதே குஜராத் தொழில் துறையில் முன்னேற காரணம். இதற்கு நீங்கள் நரேந்திர மோடியை காரணம் காட்டினால் சரிப்பு தான் வரும். நரேந்திர மோடி அல்ல வேறு எந்த மோடி, பட்டேல் இருந்தாலும் அப்படி தான் இருக்கும்.

விட்டால் அமெரிக்காவில் பட்டேல் பிரதர்ஸ் எல்லா ஊர்களிலும் இருக்க காரணமே மோடி என்று சொல்வீர்கள் போலிருக்கு :))

9:54 PM, March 19, 2009
Anonymous said...

சசி இவிங்க எல்லாம் நிறம்ப நல்லவங்க போலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானுங்க. இதே பிழைப்பு இவிங்களுக்கு. அந்த பாசிச கட்சி தான் கட்சி, அந்த பாசிச ஆட்சி தான் ஆட்சி. அந்த பாசிச கொள்கைகள் தான் கொள்கைகள். அதை தான் படிச்சவனுக விரும்புகிறார்கள். அதுக்கும் மேல ஒரு படி போய், அறிவுள்ளவங்க கண்ணுக்குத்தான் இந்த கடவுள் தெரிவார்ன்னு சொல்லுவாங்கலே அது போல அந்த கட்சியில இருப்பவர்கள் தான் புத்திசாலிகள் என்றும் இவிங்க அடிக்கிற சல்லிக்கு அளவே இல்லைங்க போங்க. அடேய் நல்லவர்களா கொஞ்சமேனும் திருந்துங்கப்பா.......

பனிமலர்.

11:09 PM, March 19, 2009
Anonymous said...

நல்ல பதிவு!

நீங்கள் கூறுவது போல் பாசக வரும் காலங்களில் தேயலாமே தவிர மேலும் வளர்வதற்கான சாத்தியங்கள் இல்லை. அவர்களின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் எளிதில் மத உணர்வுக்கு ஆட்படும் மக்களை தங்கள் வசப்படுத்தியதுதான். அந்த மக்களின் உச்ச அளவே எண்ணிக்கை அவ்வளவுதான் என்று போன தேர்தலிலேயே தெளிவாகிவிட்டது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த மதவெறியை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே மன ஆறுதல்.

11:15 PM, March 19, 2009
முருகன் ஜெயராமன் said...

அது அவ்வளவு சுலபம் அல்ல,bjpஇன் வெற்றியை யாரும் தடுக்கமுடியாது.

2:51 AM, March 21, 2009
Anonymous said...

மக்கள் மதவெறியை புறிந்து கொண்டுள்ளனரா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். சரியான விதத்தில் மக்கள் மதவெறியை இன்னும் புறிந்து கொள்ளவில்லை. தேசிய கட்சிகளின் வீழ்ச்சி என்பது மாநில கட்சிகளின் வளர்ச்சியோடி தொடர்புடையது, ஆனால் மாநில கட்சிகள் வளர்கின்றனவா? புதுப்புது கட்சிகள் தோன்றி அதை இட்டு நிர‌ப்புகின்றன அவ்வளவு தான். மக்கள் வாழ்வு என்பது ஓட்டுக்கட்சி அரசியல் கூத்தாடிகளின் நிரலின்படி இல்லை என்பதை மக்கள் உணர்வது தான் சரியான திசைவழியாக இருக்கும். காங்கிரஸ் சரிந்து பாஜக வந்தாலும், பாஜக சரிந்து பகுஜன் வந்தாலும், பகுஜன் சரிந்து வேறு ஒன்று வந்தாலும் அது மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது காரணம் முகமூடியை மாற்றுவதால் முதலாளியத்தின் கோரம் மறைந்துவிடுவதில்லை.

தோழமையுடன்
செங்கொடி

3:39 AM, March 22, 2009
Anonymous said...

i want to ensure the 1st comment.

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...

2:30 PM, May 12, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

இது டைரிதான்...

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...

*********

i want to ensure the 1st comment.

எழுதியிருப்பவை எல்லாம் உள்மன ஆசைகள்..தேர்தலுக்குப் பின் இதை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்...

*********

அருமை அனானிகளே,

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. நாட்டிலே இருக்கிறீர்களா ? :))))

1:20 AM, May 20, 2009
sports4ever said...

பாஜக -வுக்கு அழிவா......!!! ஹ...நல்ல காமெடி போங்க....உலக கொலைகார கட்சியான (சீக்கிய கலவரம்,ஈழ படுகொலை)காங்கிரசை இன்னும் கொஞ்ச நாளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை கொண்டுதான் தேட வேண்டும்...

4:27 PM, April 16, 2011