Monday, March 23, 2009

பேப்பர் வாங்கலையோ பேப்பர்

இன்று ஊடகங்கள் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உலகத்தின் எந்த இடத்தில் ஒரு சின்ன நிகழ்வு நடந்தால் கூட அது பலரையும் சென்றடையும் வழிகளை இன்று ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. விஜய் கத்திய காட்டு கத்தல் அமெரிக்கா வரை யூடிப் மூலமாக எதிரொலிக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களின் வருகைக்கு பிறகு ஊடகங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஆனால் 1990களுக்கு முன்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாமல் வெறும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவை மூலம் தான் செய்திகள் மக்களைச் சென்றடையும். நாளிதழ்களில் ஆரம்பகாலங்களில் தினத்தந்தியின் இடம் கிராமப்புறங்களிலும் பெருவாரியான இடங்களிலும் அசைக்க முடியாமல் இருந்தது. தினமணியின் சந்தா கூட தினமலருக்கு ஆரம்பத்தில் இருந்ததில்லை. ஆனால் தினமலர் தன்னுடைய திறமையான மேலாண்மையால் படிப்படியாக கிராமங்களில் நுழைந்து தினத்தந்தியின் இடத்தை பிடிக்க தொடங்கியது. தினமலர், தினத்தந்தி, தினகரன், ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பின் எத்தனையோ தனி நபர்களின் உழைப்பு இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சாமானிய தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றைக்கு இந்த ஊடகங்களை வளர்த்து இருக்கிறது.

எழுத்து ஆர்வம் என்பது ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளரும் சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. வலைப்பதிவுகளில் இன்றைக்கு எழுதி கொண்டிருக்கும் பலருக்கும் பல்வேறு வழிகளில் எழுத்து ஆர்வம் ஏற்பட்டிருக்கும். எனக்கு பத்திரிக்கை விற்பனை அடிப்படையில் தான் எழுத்து ஆர்வம் ஏற்பட்டது. சிறிய வயதில்
இருந்தே பத்திரிக்கைகளின் வாசனையிலேயே வளர்ந்தேன் என சொல்ல முடியும். அதற்கு காரணம் என்னுடைய அப்பா ஒரு பத்திரிக்கை ஏஜெண்ட். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்தப் பணியின் சிரமம் காரணமாக அதனை நிறுத்தினார்.

இன்றைக்கு எப்படியோ தெரியாது. ஆனால் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரதியையும் மிகவும் கடினப்பட்டே விற்க வேண்டியிருக்கும். சந்தா அவ்வளவு எளிதில் கிடைத்து விடும். டீக்கடை, சலூன் போன்ற பல இடங்களில் ஓசிப் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டு கிராமப்புற பகுதிகளில் பத்திரிக்கைகளை விற்பது அவ்வளவு எளிது அல்ல. சிறு, பெரு நகரங்களில் பத்திரிக்கைகள் விற்பது கிராமப்புறங்களுடன் ஒப்பிடும் பொழுது கொஞ்சம் சுலபம். எங்களைப் போன்ற நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத இரண்டாங்கெட்டான் இடம் என்றால் சிக்கல் தான். நெய்வேலியின் புறநகர்ப்பகுதியான மந்தாரக்குப்பம், தாண்டவன் குப்பம் போன்றவை தான் எங்கள் ஏரியா. இது நகரமும் இல்லை. கிராமமும் இல்லை என்ற சிக்கலான பகுதிகள். நெய்வேலி டவுன்ஷிப் என்று சொல்லப்படுகிற நெய்வேலி நகரத்தில் பத்திரிக்கைகள் விற்பது கொஞ்சம் சுலபம். அங்கும் சிக்கலகள் இருக்கவே செய்கின்றன.

பத்திரிக்கை விற்பனை என்பது கடினமான பணி. அதிகாலையிலேயே எழுந்து பத்திரிக்கை வேன்களில் இருந்து வந்திருக்கும் பத்திரிக்கை கட்டுகளை பிரிக்க வேண்டும். அனைத்து பத்திரிக்கைகளும் ஒரே நேரத்தில் வந்து விடாது. சில பத்திரிக்கைகள் 4 மணிக்கே வரும். சில பத்திரிக்கைகள் வருவதற்கு 5 மணி ஆகலாம். ஹிந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை சென்னையில் இருந்து வரும். தினத்தந்தி கடலூரில் இருந்தும் தினமலர் புதுவையில் இருந்தும் வரும். இப்படி அனைத்து பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தவுடன் அதனை பகுதி வரியாக சந்தாக்களின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் பேப்பர் போடுவதற்கு என்று ஒருவர் இருப்பார். பேப்பர் போடுவது பெரும்பாலும் ஒரு பகுதி நேர வேலை தான். பேப்பர் போட்டு முடித்தவுடன் அவர்களின் முழு நேர வேலைக்கு செல்ல வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட இந்த வேலையை செய்வார்கள். இந்த பத்திரிக்கை விநியோகத்தின் முக்கிய குறிக்கோள் அதிகாலையில் சீக்கிரமே பத்திரிக்கைகளை விநியோகித்து விட வேண்டும். அப்பொழுது தான் அது விற்பனையை அதிகரிக்கும். பத்திரிக்கை விநியோகம் தாமதமானால் பத்திரிக்கை சந்தாக்களை இழக்க நேரிடலாம்.

பத்திரிக்கை வாங்குபவர்களுக்கு அதிகாலையிலேயே பத்திரிக்கை வேண்டும். காலையில் எழுந்து காப்பியுடன் பத்திரிக்கை வாசித்தால் தான் பலருக்கு காலைப் பொழுது உகந்ததாக இருக்கும். எனவே காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் பத்திரிக்கை இல்லாவிட்டால் எங்கள் கடைக்கு வந்து கத்தி விட்டு செல்லும் பலரை பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் தாமதம் தவிர்க்க முடியாதது. பத்திரிக்கை அலுவலகங்களில் இருந்து வரும் பத்திரிக்கை வேன் தாமதமானால் பத்திரிக்கைகளை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும். மழைக்காலங்களில் வேகமாக பத்திரிக்கைகளை விநியோகம் செய்ய முடியாது. இதனாலும் விநியோகம் தாமதமாகும்.

அது போல பத்திரிக்கை விநியோகம் செய்வதற்கும் அவ்வளவு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். விநியோகிக்கும் நபரை பொறுத்தே பத்திரிக்கை விற்பது அதிகரிப்பதும், குறைவதும் நடக்கும். விநியோகிப்பவர் ஒவ்வொரு நாளும் விநியோகிப்பதை தாமதப்படுத்தினால், காலையில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பத்திரிக்கைகளை நிறுத்தி விடுவார்கள். சரியான நேரத்தில் பத்திரிக்கை விநியோகம் செய்யப்பட்டால் வியபாரம் தொடர்ச்சியாக இருக்கும். பத்திரிக்கை விநியோகிப்பவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்து விடுவார்கள். அப்படியான சூழ்நிலையில் அனைத்துமே தாமதமாகும்.

நகர்ப்புறங்களில் ஒரு பத்திரிக்கையை நாம் வாங்க வேண்டும் என்றால் டெபாசிட் தொகை கொடுக்க வேண்டும். ஏஜெண்டும் பத்திரிக்கை அலுவலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால் தான் பத்திரிக்கை அனுப்புவார்கள். ஆனால் எங்களைப் போன்ற ஏஜெண்ட்களுக்கு அந்த வசதி எல்லாம் கிடையாது. டெபாசிட் செய்தால் தான் பத்திரிக்கை என்பது சமீபகாலங்களில் ஏற்பட்ட மனநிலை தான். ஆரம்பகாலங்களில் அதனை கட்டாயமாக்க முடியாது. சிலர் கொடுப்பார்கள். பலர் கொடுக்க மாட்டார்கள். எனவே பத்தி்ரிக்கையை போட்டு விட்டு தான் பணம் வாங்க வேண்டும். சில நேரங்களில் அது வருவதற்கும் தாமதம் ஆகும். தாமதமாகிறது என பத்திரிக்கையை நிறுத்தி விட முடியாது. அப்படியே விட்டு விடுவார்கள். பத்திரிக்கை போட்டு கொண்டே அவர்களிடம் பழைய பாக்கியையும் நெருக்கி பெற வேண்டும். அதனால் பத்திரிக்கை அலுவலகத்திற்கு பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை நேரும் பொழுது நம் கை காசோ, கடனோ வாங்கி கட்ட வேண்டும். பிறகு முழுமையாக வசூலானால் திருப்பி செலுத்த வேண்டும். சில நேரங்களில் 15ம் தேதி வரை கூட போட்ட பத்திரிக்கைகளுக்கு காசு முழுமையாக கிடைக்காது. பத்திரிக்கைகளை மாதம் முழுக்க வாங்கி விட்டு வீட்டை காலி செய்து விட்டு போனவர்களும் உண்டு. அந்த நஷ்டத்தையெல்லாம் ஏஜெண்ட் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் பரபரப்பான செய்திகள் ஏதேனும் இருந்தால் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கேட்காமலேயே கூடுதல் பிரதிகள் அனுப்பி விடுவார்கள். அதையெல்லாம் விற்க வேண்டும். பெரும்பாலும் கடைகளில் கூடுதல் பிரதிகள் போட்டு விற்க முயற்சிப்போம். செய்திகளின் பரபரப்பினை பொறுத்து அனைத்து பிரதிகளும் விற்று, இன்னும் பல பிரதிகள் கூட தேவைப்படும். சில நேரங்களில் கூடுதல் பிரதிகள் விற்காது. இதனை திருப்பி அனுப்ப வேண்டும். விற்காத பிரநிதிகளுக்கு ஏஜெண்ட்களும் கொஞ்சம் பொறுப்பேற்க வேண்டும். எனவே எப்படியாயினும் விற்காவிட்டால் கொஞ்சம் நஷ்டம் தான்.

இப்படி எல்லாம் கடினப்பட்டு செய்யும் பத்திரிக்கை தொழிலால் பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்காது. நகர்ப்புற நியூஸ் ஏஜண்ட்கள் வேண்டுமானால் பெரிய அளவில் லாபம் பார்க்கலாம். ஆனால் கிராமப்புறங்களில், எங்களைப் போன்ற புறநகர்ப்பகுதிகளில் உழைத்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியமாக கூட பத்திரிக்கை வருமானத்தை கருத முடியாது என்பது தான் உண்மையான நிலை.

இவ்வளவு கடினப்படும் சூழ்நிலையிலும் அந்த விற்பனைக்கு போட்டி உண்டு என்பதும், தொடர்ச்சியாக நமது விற்பனையை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால் ஏஜென்சி பறிபோய் விடும் என்பதும் அடுத்த பிரச்சனை. சர்குலேஜன் உயர்த்த திட்டங்களை வகுக்க பத்திரிக்கை அலுவலத்தில் இருந்து நேரடியாக பிரதிநிகள் வருவார்கள். மறைமுகமாக நமக்கு தெரியாமல் ஆய்வு செய்து, இந்த வாய்ப்புகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை ? பத்திரிக்கை விநியோகம் ஏன் தாமதம் ஆகிறது என்று நெருக்குதல் தருவார்கள். குறிப்பாக தினத்தந்தி போன்ற நிர்வாகங்கள் ஏஜெண்ட்களை நெருக்குதல், ஏஜென்சியை எடுத்து விடுவேன் போன்ற மிரட்டல்கள் மூலமே பத்திரிக்கை விற்பனை அதிகரிக்க முடி்யும் என்ற மேலாண்மை தத்துவம் உடையவர்கள். மாறாக தினமலர், ஏஜெண்ட்களை அரவணைத்து சென்று விற்பனையை அதிகரிக்கும் மேலாண்மையை கொண்டவர்கள். அதனால் தான் தினமலர் தினத்தந்தியின் இடத்தை வேகமாக பிடித்தது. தினத்தந்தி வைத்திருப்பவர்கள் தினமலர் ஏஜென்சியை எடுக்க கூடாது. ஆனால் ஹிந்து போன்ற போட்டியில்லாத பத்திரிக்கைகளை நடத்தலாம். தினமலரில் அப்படி எதுவும் விதி ஆரம்பகாலங்களில் இருந்ததில்லை. இப்பொழுது கொண்டு வந்திருக்க வாய்ப்பு உள்ளது.

நான் நேரடியாக பத்திரிக்கை விநியோகம் போன்றவற்றை செய்ததில்லை. என் வீட்டில் நடக்கும் விடயங்களை சிறு வயதில் இருந்து தொடர்ந்து கவனித்து வந்ததில் பெற்ற அனுபவத்தை தான் மேலே கூறியிருக்கிறேன். ஆனால் பத்திரிக்கை விற்பனைக்கு சந்தா பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். வலைப்பதிவில் எந்த பத்திரிக்கைக்கு எதிராக பல கட்டுரைகள் எழுதினேனோ, அதே பத்திரிக்கையை தான் முதன் முதலாக எங்கள் பகுதியில் விற்க முனைந்தேன். ஆம், ஹிந்து பத்திரிக்கைக்கு ஒரு காலத்தில் களத்தில் இறங்கி சந்தா சேர்த்திருக்கிறேன்.

ஹிந்து அப்பொழுது முக்கியமான நகர்ப்புற பகுதிகளில் மட்டும் தான் இருந்தது. கிராமங்களிலோ, எங்களைப் போன்ற புறநகர்ப்பகுதிகளிலோ இருந்ததில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் இருந்தது. ஹிந்து தனது சந்தாவை விரிவாக்கும் பொருட்டு நகரங்களுக்கு வெளியே இருக்கும் பகுதிகளையும் குறிவைக்க தொடங்கியது. எனவே நெய்வேலி நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளில் சந்தா பிடிக்க எங்களை அணுகியது. ஆனால் எங்கள் பகுதியில் எல்லாம் அதிகம் ஹிந்து படிக்க மாட்டார்கள். தவிரவும் ஏற்கனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்கிக் கொண்டிருப்பவர்களை அணுகவும் முடியாது என்பது என் அப்பாவின் நிலை. ஆனால் முயற்சித்து பாருங்கள். ஆரம்பத்தில் சில பிரதிகளை இலவசமாக அனுப்பி வைக்கிறோம். விற்பனையாகாவிட்டால் திரும்ப பெற்று கொள்கிறோம் என்றார்கள். நான் ஆங்கில வழிப் பள்ளியில் படித்து கொண்டிருந்தால் பத்திரிக்கையை விநியோகம் செய்யும் பழனி என்பவருடன் என் அப்பா என்னையும் அனுப்பினார். ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பவர்களை பார்த்து சந்தா படிப்பது தான் எங்கள் இலக்கு. ஹிந்துவில் வெளிவரும் பல்வேறு பகுதிகளை விளக்கி சந்தா பிடிக்க வேண்டும். ஹிந்துவை படித்தால் ஆங்கிலம் வளரும் என்பது எங்களுடைய வழக்கமான தூண்டில். தினமும் வாங்கா விட்டால் ஞாயிற்று கிழமை மட்டும் வாங்கிப் பாருங்கள் என்பது அடுத்த இலக்கு. நான் அப்பொழுது ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தாக ஞாபகம். அது ஒரு வித்யமான தனி அனுபவமாக இருந்தது. ஆங்கிலம் படிக்க கூடியவர்களை குறிவைத்து பேசி எங்களாலும் சந்தா பிடிக்க முடிந்தது.

இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...

(தொடரும்)

பி.கு. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலானது. ஒவ்வொருவரின் அனுபவங்களுக்கு ஏற்ப அவர்களது கருத்துக்கள் மாறலாம். இது பத்திரிக்கை விற்பனை குறித்த என் பார்வை மட்டுமே.

9 மறுமொழிகள்:

Bruno said...

// இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன... //

:( காலத்தின் கோலம்

10:57 PM, March 23, 2009
மதிபாலா said...

இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...//

பச்சைக்குழந்தையின்னு பாலூத்தி வளர்த்தேன். பாலைக் குடிச்சிபுட்டு பாம்பாகக் கொத்துதடி கண்மணி என்ற படிக்காதவன் பாடல் தான் உடனடியாக நினைவிற்கு வந்தது உங்களது இந்த வரிகளைப் படித்தபோது.!

12:08 AM, March 24, 2009
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//ஹிந்துவை படித்தால் ஆங்கிலம் வளரும் என்பது எங்களுடைய வழக்கமான தூண்டில். தினமும் வாங்கா விட்டால் ஞாயிற்று கிழமை மட்டும் வாங்கிப் பாருங்கள் என்பது அடுத்த இலக்கு//

எல்லா குளத்திலும் இதே தூண்டில் தான். பள்ளிகளில் young world வரும் நாட்களில் இலவச வினியோகமும் செய்வார்கள்.

1:21 AM, March 24, 2009
பதி said...

//வெளியே அதிகம் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சாமானிய தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றைக்கு இந்த ஊடகங்களை வளர்த்து இருக்கிறது. //

மறுக்கவியலாத உண்மை..

//இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...//

இதைத் தான் காலத்தின் கோலம் என்பது !!!!

11:15 AM, March 24, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

புருனோ, மதிபாலா, ரவிசங்கர், பதி,

நன்றி...

3:12 PM, March 24, 2009
Anonymous said...

Did you do the work for free?

10:26 AM, March 25, 2009
ரவி said...

நாங்க 'திடீர் குப்பம்.'. செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வாரதுண்டா ? 25 ஆம் ப்ளாக்ல படிச்சேன்.

5:01 PM, March 25, 2009
ரவி said...

வாஜ்பாய் பிரதமரா இருக்கும்போது தினமலர் எப்படி தேசியத்தை (பாஜவை) வளர்த்தது ? வாஜ்பாய் தும்மினால் கூட முதல் பக்க தலைப்புச்செய்தியாகும் அது.

5:02 PM, March 25, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

நாங்க 'திடீர் குப்பம்.'. செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வாரதுண்டா ? 25 ஆம் ப்ளாக்ல படிச்சேன்.

**********
செந்தழல்,

செவ்வாய்க்கிழமை, வியாக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற சந்தைகளுக்கு சென்றிருக்கிறேன். எங்களுக்கு சொந்தமாக மளிகை கடை இருந்ததால் சந்தைக்கு சென்று பொருள் வாங்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை.

நான் படித்தெல்லாம் 4 வது வட்டத்தில் (4 Block)

உங்களுடைய மந்தாரக்குப்பம் பதிவை படித்த ஞாபகம் உள்ளது

நன்றி...

8:23 PM, March 25, 2009