Wednesday, May 12, 2010

ப‌ரிட்டோ, டேக்கோ, ஹாட் ச‌ல்சா, ரேசிச‌ம் (Racism)

உல‌கின் ப‌ல‌ வ‌கையான‌ உண‌வு வ‌கைக‌ளில் மெக்சிக்கன் உண‌விற்கு த‌னி இட‌ம் உண்டு. அதன் சுவையே தனியானது. என‌க்கு மிக‌வும் பிடித்த‌ உண‌வு மெக்சிக்கன் உண‌வு வ‌கைக‌ள் தான். பரிட்டோ, கேஸிடியா, டேக்கோ என அனைத்துமே மிகவும் சுவையான உணவு வகைகள். மெக்சிக்கன் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது பரிட்டோ. நம்மூர் சப்பாத்தி போல இருக்கும் டொர்ட்டியாவினுள் (Tortilla) பீன்ஸ், மெக்சிக்கோ அரிசி(சாதம்), தக்காளி, சல்சா, வறுத்த சிக்கன் துண்டுகள், சீஸ் எல்லாம் போட்டு வேகவைத்து பிறகு அதன் மேல் கொஞ்சாம் சாஸ் ஊற்றி, தொட்டுக் கொள்ள கிரிமுடன் (Sour Cream) தருவார்கள். பரிட்டோவை கொஞ்சம் வெட்டி அதனை கிரிமுடன் கொஞ்சம் தொட்டு... சாப்பிட்டால்... ம்ம்ம்...நவரசம். மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்க‌ளில் சல்சாவுடன் சிப்ஸ் கொடுப்பார்கள், அதனுடன் கொஞ்சம் மெக்சிக்கன் டக்கீலாவையும் சேர்த்துக் கொண்டால்... எங்கோ பறப்பது போல இருக்கும்.

நான் டெக்சாசில் சில மாதங்கள் இருந்த பொழுது அங்கிருந்த பல மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட்டு இருக்கிறேன். டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளின் சுவையே தனியானது. அதைப் போன்ற சுவை நியூஜெர்சி போன்ற இடங்களில் கிடைக்காது. டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளை டெக்‍-மெக்(Tex-Mex) என‌ அழைப்பார்க‌ள். அதாவ‌து டெக்சஸ் உண‌வு முறையும், மெக்சிக்கோ உண‌வு முறையும் கொண்ட‌ க‌ல‌வையான‌ உண‌வு முறை தான் டெக்-மெக் உண‌வு வ‌கைக‌ள்.

டெக்சாசும், மெக்சிக்கோவும் இணைந்து இருப்ப‌து உண‌வு முறையால் ம‌ட்டும் அல்ல‌. க‌லாச்சார‌த்தாலும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் மிக‌ நெருக்க‌மான‌ பிணைப்பு உண்டு. கார‌ண‌ம் டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌வே 1880க‌ளில் இருந்த‌து. டெக்சாஸ் மட்டும் அல்ல. அரிசோனா, கலிபோர்னியா, நெவேடா, நியூமெக்சிக்கோ என பல மாநிலங்கள் மெக்சிக்கோவில் தான் இருந்தன. மெக்சிக்கோவுட‌ன் இருந்த‌ இந்த‌ப் ப‌குதிக‌ளை அமெரிக்கா ஒரு ஒப்ப‌ந்த‌ம் மூல‌ம் கைப்பற்றிக் கொண்ட‌து.

1821ல் மெக்சிக்கோ ஸ்பெயினின் கால‌னி ஆதிக்க‌த்தில் இருந்து விடுத‌லை பெற்ற‌ பொழுது டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு அங்க‌மாக‌வே இருந்த‌து. இத‌னை மெக்சிக்க‌ன் டெக்ச‌ஸ் என்று கூறுவார்க‌ள். 1821 முத‌ல் 1836வ‌ரை டெக்ச‌ஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌து. டெக்ச‌ஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌ பொழுது அமெரிக்காவின் பிற ப‌குதிக‌ளில் இருந்து குடியேறுவ‌து அனும‌திக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ வெள்ளையின மக்கள் டெக்ச‌ஸ் ப‌குதியில் குடியேறின‌ர். இத‌னால் டெக்ச‌ஸில் மெக்சிக்க‌ர்க‌ளை விட‌ வெள்ளைய‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌து. இத்தகைய குடியேற்றத்தை த‌டுக்க‌ அப்பொழுது மெக்சிக்கோவின் அதிப‌ராக‌ இருந்த‌ அனாஸ்டாசியோ புஸ்டாமாண்டே புதிய‌ க‌ட்டுப்பாடுக‌ளையும், வ‌ரி விதிப்புக‌ளையும் கொண்டு வ‌ந்தார். உணவுப் பொருள் உற்பத்தியிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் டெக்சாசில் இருந்த‌ வெள்ளைய‌ர்க‌ளுக்கும், மெக்சிக்கோவுக்கும் இடையே பிர‌ச்ச‌னை மூண்ட‌து. இது போராக‌ உருவெடுத்த‌து. இந்த‌ப் போரில் வெற்றி பெற்ற‌ டெக்சாஸ் ஒரு த‌னி நாடாக‌ 1836ல் தன்னை அறிவித்துக் கொண்டது.

இத‌ன் பிற‌கும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் இடையே போர் ந‌ட‌ந்த‌து. இத‌ன் தொட‌ர்ச்சியாக 1846ல் இருந்து 1848வரை அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான மெக்சிக்கன்‍ - அமெரிக்கன் போர் நடந்தது. இதன் காரணமாக 1845ல் டெக்சாஸ் அமெரிக்காவுட‌ன் இணைந்த‌து.

அமெரிக்காவின் ம‌ற்றொரு மாநில‌ம் அரிசோனா. மெக்சிக்கோ ஸ்பெயினின் கால‌னிய‌ ஆதிக்க‌த்தில் இருந்து விடுத‌லை பெற்ற‌ பொழுது அரிசோனா மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ 1821ல் இருந்த‌து. 1846ல் ந‌ட‌ந்த‌ மெக்சிக்கன்- அமெரிக்க‌ன் போர் கார‌ண‌மாக‌ டெக்ச‌ஸ் விடுத‌லைப் பெற்ற‌ பொழுது அரிசோனாவின் சில‌ ப‌குதிக‌ளும் அமெரிக்காவின் வ‌ச‌ம் வ‌ந்த‌து.

இதையெடுத்து ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு க‌லிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிக்கோ, நெவேடா போன்ற மாநிலங்கள் உள்ளிட்ட மிகப் பெரும் ப‌குதிக‌ளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்க‌ மெக்சிக்கோ ஒப்புக் கொண்ட‌து. அரிசோனாவும் அமெரிக்கா வசம் வந்தது. ஆனால் 1912ல் தான் அரிசோனா அமெரிக்காவின் 48வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது. இது சுருக்கமான வ‌ர‌லாறு.

இன்றைய சூழ்நிலைக்கு வருவோம். இன்றைக்கு அமெரிக்காவின் ஒரு மாநிலமாக உள்ள அரிசோனா, ஒரு ச‌ட்ட‌ம் இய‌ற்றி இருக்கிறது. ‍‍‍அரிசோனாவின் குடியேற்ற‌ச் ச‌ட்ட‌ம். இந்தச் சட்டம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளவர்களை தடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாக அரிசோனாவின் ஆளும் குடியரசுக் கட்சி கூறுகிறது. இந்தச் சட்டத்தின் படி போலீசார் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் என ”சந்தேகிக்கும்” நபர்களை சோதனை செய்யலாம். சோதனை செய்பவர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருக்கிறோம் என்பதை நிருபிக்க தங்களுடைய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள், க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள், முறைப்படி அமெரிக்காவில் விசா பெற்று உள்ளே வந்தவர்கள் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமையோ, விசா போன்றவையோ இருக்கும். போலீசார் சந்தேகிக்கும் நபர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாகவே இருக்கிறோம் என்பதை நிருபிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் இது வரையில் அப்படியான சூழ்நிலை இல்லை.

தனி மனித உரிமைகள் ”அதிகம்” மதிக்கப்படும் அமெரிக்காவில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாள அட்டை கேட்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் பிரச்சனையாகவுமே பார்க்கப்படுகிறது. அது தவிர சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அடையாள அட்டை கேட்கலாம் என்பதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. போலீசார் யாரைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள் ? அமெரிக்காவில் அதிகமாக சட்டவிரோதமாக இருப்பது லாட்டினோ க்கள் தான் . அதே நேரத்தில் அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்ற லாட்டினோக்களும் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் சிறுபான்மையினராக அமெரிக்காவில் உள்ளனர்.மெக்சிக்கோ, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் லாட்டினோ அல்லது ஹிஸ்பேனிக்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களே அதிகமாக சட்டவிரோதமாக இருப்பதால் போலீசார் தங்களையே சந்தேகிப்பர் என லாட்டினோக்கள் கூறுகிறார்கள். இந்தச் சட்டம் இனரீதியான பிரச்சனையையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது - Racial Profiling.


ஒபாமா அரிசோனா மாநிலத்தின் இந்தச் சட்டத்தைக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தச் சட்டத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். வ‌ல‌துசாரிக‌ளும், இட‌துசாரிக‌ளும் முட்டிக் கொள்ளும் ம‌ற்றொரு பிர‌ச்ச‌னையாக‌ இது உருவெடுத்து உள்ள‌து. ஒபாமா வெற்றி பெற்ற‌தில் இருந்தே எதிர்க்க‌ட்சியான‌ குடிய‌ர‌சுக் க‌ட்சி தீவிர‌மான‌ வ‌ல‌துசாரி நிலைப்பாட்டினை எடுக்க‌த் தொட‌ங்கியுள்ள‌தாக‌ ஒரு ப‌ர‌வ‌லான‌ குற்ற‌ச்சாட்டு உண்டு. இத்த‌கைய‌ வ‌ல‌துசாரி போக்கினையே இந்த‌ச் ச‌ட்ட‌ம் வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ இட‌துசாரிக‌ள் குற்ற‌ம்சாட்டுகின்ற‌ன‌ர். அதுவும் அரிசோனா மாநிலம் வ‌ல‌துசாரி போக்கினை மிக‌வும் தீவிர‌மாக‌ பின்ப‌ற்றும் ஒரு மாநிலம் ஆகும். ரெட் ஸ்டேட் (Red State) என்று சொல்லப்படும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலம். டெக்சஸ், அரிசோனா போன்றவை குடியரசுக் கட்சியினரின் கோட்டை. கன்சர்வேட்டிவ்கள் வலுவாக உள்ள மாநிலம்.

அரிசோனாவின் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 1990களில் க‌றுப்ப‌ர்க‌ளின் உரிமைக்காக‌ போராடிய‌ மார்ட்டின் லூத‌ர் கிங் நினைவாக‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ தின‌ம் அர‌சு விடுமுறையாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌தை ஏற்றுக் கொள்ள‌ அரிசோனா ம‌றுத்த‌து. இதையெடுத்து அரிசோனா மாநில‌த்தை புறக்க‌ணிக்கும் அழைப்புக‌ள் விடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அரிசோனாவை புறக்கணிக்கும் அடையாளமாக சூப்ப‌ர் ப‌வுல் என‌ப்ப‌டும் அமெரிக்க‌ன் புட்பால் (கால்பந்து அல்ல) போட்டிக‌ள் அரிசோனாவில் இருந்து மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகே அரிசோனா பணிந்தது. த‌ற்பொழுதும் புறக்கணிக்கும் அழைப்புக‌ள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. மெக்சிக்கோ த‌ன்னுடைய‌ குடிம‌க்க‌ளை அரிசோனா செல்ல‌ வேண்டாம் என‌ எச்ச‌ரித்து உள்ள‌து. இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஃபாக்ஸ் தொலைக்க‌ட்சி இந்த‌ச் ச‌ட்ட‌ம் அமெரிக்காவிற்கு ந‌ன்மைக‌ளை கொடுக்கிற‌து, போதைப் பொருள்க‌ளை த‌டுக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது போன்ற வாத‌ங்களை முன்வைக்கிறது‌. MSNBC தொலைக்காட்சியைப் பார்த்தால் இந்தச்‌ ச‌ட்ட‌ம் அமெரிக்காவை நாசி ஜெர்மனியின் கால‌த்திற்க்கு கொண்டு செல்வதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை இந்தச் சட்டம் பறிப்பதாகவும், லாட்டினோக்களை குறிவைக்கும் Racial Profilingஐ இந்தச் சட்டம் கொண்டு வரும் எனவும் கூறுகிறது. மெசிக்கோ மக்கள் அமெரிக்காவிற்கு தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக, அதாவது 1880களில் இருந்து வேலை தேடி வந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தாங்கள் ஏன் குறிவைக்கப்படுகிறோம் என கேள்வி எழுப்புகிறார்கள். விவாதம் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

************************

மெக்சிக்கோ-அமெரிக்கா இடையேயான வரலாற்றினை நாம் கூர்ந்து கவனித்தால் இந்தப் பகுதிகளுக்குள் வெள்ளையர்களின் குடியேற்றமும், லாட்டினோக்களின் குடியேற்றமும் தொடர்ச்சியாக இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. மெக்சிக்கோ, டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா, அமெரிக்கா இடையேயான எல்லைகள் பல்வேறு காலக்கட்டங்களில் மாறியிருக்கின்றன. அவ்வாறு எல்லைகள் மாறினாலும் குடியேற்றங்கள் எப்பொழுதுமே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எல்லைகள் என்பன நாட்டின் அளுமை சார்ந்த ஒரு விடயமாக இருந்துள்ளதே தவிர அது ம‌க்க‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தை எப்பொழுதும் க‌ட்டுப்ப‌டுத்திய‌தில்லை. வெள்ளைய‌ர்க‌ள் வ‌ட‌க்கில் இருந்து தெற்கு நோக்கி ந‌க‌ர்ந்த‌து போல‌, லாட்டினோக்க‌ள் தெற்கில் இருந்து வ‌ட‌க்கு நோக்கி ந‌க‌ர்ந்துள்ளார்க‌ள். இன்றைக்கும் ந‌க‌ர்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். அதுவும் அமெரிக்காவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சியும், மெக்சிக்கோவின் வ‌றுமையும் லாட்டினோக்க‌ளை மிக‌ அதிக‌மாக‌ அமெரிக்கா நோக்கி ந‌க‌ர‌ வைத்துள்ள‌து. அமெரிக்காவும் லாட்டினோக்களை தன்னுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொண்டது. தனக்கு தேவைப்படும் நேரத்தில் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை அமெரிக்க மைய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கண்டுகொள்ளாது. ஆனால் தனக்கு தேவையில்லாத பொழுது மெக்சிக்கோவில் இருந்து வரும் குடியேற்றங்களை தடுக்கச் சட்டங்களை கொண்டு வரும்.

*****************************

சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சனை அமெரிக்காவில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அமெரிக்காவில் சுமார் 12 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பான்மையானானோர், அதாவது 57% மெக்சிக்கோவில் இருந்து குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளே ஆவார்க‌ள். பிற‌ லத்தீன் அமெரிக்கா நாடுக‌ளில் இருந்து குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ இருக்கின்ற‌ன‌ர். இவ‌ர்கள் அனைவ‌ருமே லாட்டினோக்க‌ள் அல்ல‌து ஹிஸ்பேனிக்ஸ் என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை த‌விர‌ ஆசிய‌ நாடுக‌ளில் இருந்து ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் இந்தியா, சீனா பிலிப்பைன்ஸ் போன்ற‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். லாட்டினோக்க‌ளில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறுப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் அமெரிக்கா‍- மெக்சிக்கோ எல்லை வ‌ழியாக‌வே அமெரிக்காவில் நுழைகின்ற‌ன‌ர். இந்தியா உள்ளிட்ட‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் முத‌லில் ச‌ட்ட‌ரீதியாக‌ அமெரிக்காவில் நுழைந்து பிற‌கு த‌ங்க‌ளின் ப‌ய‌ண‌ கால‌க்க‌ட்ட‌ம் முடிந்த‌ பிற‌கும் அமெரிக்காவில் தொட‌ர்ந்து இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள ப‌ல‌ குஜ‌ராத்தி விய‌பார‌ மைய‌ங்க‌ளில் ப‌ணிப‌ரியும் தொழிலாள‌ர்க‌ள் இவ்வாறு ச‌ட்ட‌விரோத‌மாகவே‌ குஜராத்தி வியபாரிகளால் கொண்டு வரப்படுகிறார்கள்.

மெக்சிக்கோவில் இருந்து வரும் பெரும்பாலான மக்கள் எல்லையோர மாநிலங்களான‌ டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் தான் உள்ளனர். இப்படிச் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த சம்பளத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக இருப்பதை பலரும் பயன்படுத்திச் சுரண்டுகின்றனர். நம்மூரில் சுரண்டப்படும் கூலித் தொழிலாளிகளின் நிலையும் இவர்களின் நிலையும் ஒன்று தான். அமெரிக்காவில் கழிப்பறையை சுத்தும் செய்யும் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் மெக்சிக்கன்ஸ் தான். கட்டடத் தொழில் தொடங்கி வீட்டு வேலை, வீட்டின் முன் இருக்கும் புற்களை வெட்டுவது வரை இதில் பணிபுரியும் எல்லோரும் மெக்சிக்ன்ஸ் தான். வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா மெக்சிக்கன்ஸ் தான். வீட்டை மாற்ற வேண்டுமா, ஒரு மணி நேரத்திற்கு 8டாலர் கொடுத்தாலே போதும், ஆள் கிடைப்பார்கள். நான் அமெரிக்காவில் ஐந்து வருடங்களாக இருக்கிறேன். இத்தனை வருடங்களில் மெக்சிக்கன்ஸ் அல்லாத எவரும் கழிப்பறையை சுத்தம் செய்து நான் பார்த்ததில்லை. ஹீஸ்டனில் ஒரு இடம் உள்ளது. பெயர் மறந்து விட்டது. நமக்கு எந்த வேலை தேவைப்பட்டாலும் அந்த இடத்திற்கு செல்லலாம். காரை விட்டு இறங்கினால் ஏராளமான மெக்சிக்கன்ஸ் கிடைப்பார்கள். சகாய விலைக்கு வீட்டிற்கு அழைத்து வரலாம். வீட்டை சுத்தம் செய்வது, வேறு வீட்டிற்கு மாற்றுவது போன்ற வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கொடுத்த காசை விட அதிகமாக அதற்காக வேலை செய்வார்கள். இவ்வாறு அடி மட்டத்தில் மிகவும் சுரண்டப்படும் தொழிலாளிகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். மெக்சிக்கன்ஸ் இல்லாவிட்டால் அமெரிக்காவில் இதனை செய்ய வேறு யாரும் ஆள் இல்லை என்று கூட ஒரு வாதம் உண்டு.

இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் வளருகிறார்கள் என இந்திய ஊடகங்கள் மார்தட்டிக் கொள்ளும், ஆனால் இந்த தொழில் அதிபர்கள் சுரண்டிக் கொழிப்பது மெக்சிக்கன்சை தான். பட்டேல் கடைகளில் சரக்கு எடுப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யும் தொழிலாளர்களில் கொஞ்சம் குஜாராத்தில் இருந்து முதலாளிகள் இறக்குமதி செய்த இந்தியத் தொழிலாளர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். இந்திய ரெஸ்டாரண்ட்களில் தந்தூரி சிக்கன் செய்து கொண்டிப்பதில் இருந்து மேசை துடைப்பது வரை மெக்சிக்கன்ஸ் தான். அவ்வளவு ஏன், நியூஜெர்சியில் திருப்பதியின் கிளையாக உள்ள பிரிட்ஜ்வாட்டர் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஏழுமலையான் கோயில் கேண்டினில் தோசை சுட்டுக் கொண்டிருப்பதும் ஒரு மெக்சிக்கன் தொழிலாளி தான். கோயிலை சுத்தம் செய்வதும் மெக்சிக்கன்ஸ் தான். ஏழுமலையானும் தொழிலாளர்களை சுரண்டியே பிரிட்ஜ்வாட்டரில் வாழுகிறார்.

இப்படி எல்லா தொழில் நிறுவனங்களிலும் அடிமட்டத் தொழிலாளியாக இருப்பது மெக்சிக்கன்ஸ் தான். காரணம் குறைந்த சம்பளம், நிறைய லாபம். சட்டவிரோதமாக இந்தத் தொழிலாளிகள் அமெரிக்காவில் இருப்பதால் முதலாளிகள் நிர்ணயம் செய்யும் சம்பளத்தை இவர்கள் வாங்கிக் கொள்வார்கள். கேள்வி கேட்பதில்லை. இவர்களை undocumented workers என அழைப்பார்கள். இந்த வழக்கம் (சுரண்டல்) தொன்று தொட்டு அமெரிக்காவில் இருந்து வருகிறது. இன்று சட்டவிரோத குடியேற்றம் என அலறும் அமெரிக்க வலதுசாரிகளும், ஊடகங்களும் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை என்றைக்கோ தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் எப்பொழுதுமே அமெரிக்க அரசாங்கமோ, இன்று சட்டத்தை இயற்றும் அரிசோனாவோ செய்ததில்லை. காரணம் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தால் தங்களுக்கு பெரும் நன்மை இருந்ததாக அமெரிக்க நிறுவனங்களும், பொதுமக்களும், அமெரிக்க அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கருதின. எனவே இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை அதிகம் கண்டுகொண்டதில்லை. மறைமுகமாக ஊக்குவித்தன.

அமெரிக்காவுக்கு மெக்சிக்கோவில் இருந்து வேலை செய்ய தொழிலாளர்களை கொண்டு வரும் வழக்கம் 1880களில் இருந்து வழக்கில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள விவசாய பண்ணைகளில் வேலை செய்யவே மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் முதலில் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு அமெரிக்காவில் கட்டப்பட்ட ரயில் பாதைகளுக்காக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மெக்சிக்கோவில் இருந்து கொண்டு வரப்பட்டனர். மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே மிகவும் குறைவான கூலியே. 1880களில் சுமார் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு கொண்டு வரப்பட்டனர். விவசாய நிலங்கள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள் அமைப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த‌க் கால‌க்க‌ட்ட‌ங்க‌ளில் ர‌யில்வே ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ளில் 60%க்கும் மேற்ப்ப‌ட்டோர் மெக்சிக்கோவில் இருந்தே கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இதைத் தொடர்ந்து முதலாம் உலகப் போரின் பொழுதும் பெருமளவில் தொழிலாளர்கள் மெக்சிக்கோவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். போர் சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு பெருமளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்ட பொழுது மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இதனை அப்போதைய அரசாங்கமும் கண்டு கொள்ள வில்லை. போர் முடிந்த பிறகு எழுந்த மிகப் பெரிய பொருளாதார தேக்கத்தின் பொழுது (The Great Depression of the 1930s)மெக்சிக்கோ தொழிலாளர்களாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக 1929ல் 1 மில்லியனுக்கும் அதிகமான‌ மெக்சிக்கோ தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை Mexican Repatriation என அழைப்பார்கள்.

1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்த பொழுது போர் காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டது. 1929-1930ல் பெருமளவில் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களை வெளியேற்றிய அமெரிக்கா, இப்பொழுது மறுபடியும் மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத்தொடங்கியது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பெரும் சுரண்டலுக்கே உள்ளானர்கள். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மெக்சிக்கோ அரசாங்கம் மெக்சிக்கோ தொழிலாளர்களின் உரிமைகளை காக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய செல்லும் மெக்சிக்கோ தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களை அழைத்துச் செல்ல வகை செய்தல், மெக்சிக்கோ அரசாங்கம் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் கூலியை நிர்ணயம் செய்தல், பணி நேரம், பணி இடம் போன்றவற்றை மெக்சிக்கோவிலேயே நிர்ணயம் செய்தப் பிறகே அமெரிக்கா செல்லுதல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதாவது சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுத்து சட்டரீதியிலாக தொழிலாளர்களை அனுப்புவதாக இது அமைந்தது. இதனை பிராசிரோ திட்டம் (Bracero Program) என அழைப்பார்கள். பிராசிரோ திட்ட‌ம் 1942 முத‌ல் 1960கள் வ‌ரை அம‌லில் இருந்த‌து. ஆனால் இந்த‌ திட்ட‌ம் குறைந்த‌ப‌ட்ச‌ ஊதிய‌ம், ப‌ணி நேர‌ம், ப‌ணி இட‌ம், த‌ங்கும் இட‌ம் போன்ற‌வ‌ற்றை நிர்ண‌ய‌ம் செய்ததால் அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்கும், நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், ப‌ண்ணைக‌ளுக்கும் அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே அவர்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க, செலவைக் குறைக்க மறுபடியும் சட்டவிரோதமாக மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத் தொடங்கினர். இதன் காரணமாக சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்தது. இந்த திட்டமும் முடிவுக்கு வந்தது.

*************************

இவ்வாறு சட்டவிரோத குடியேற்றத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வந்ததை பார்க்க முடிகிறது. அவ்வாறு இருந்த அமெரிக்காவின் ஒரு மாநிலம், இன்றைக்கு ஏன் இத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது ?

இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு, பொருளாதார தேக்கம் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதால் போதைப் பொருளை தடுத்து விட முடியாது. அதற்கு வேறு விதமான நடவடிக்கையே தேவைப்படுகிறது. எல்லா தொழிலாளிகளையும் குறிவைக்கும் இந்தச் சட்டம் எதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தப் பலத் தகவல்களை ரேச்சல் மேடோ தன்னுடைய MSNBC தொலைக் காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி இருந்தார். லாட்டினோக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் அவர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களே. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொருவரும் அமெரிக்க குடிமக்களே. அதன் காரணமாக அமெரிக்காவில் லாட்டினோக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அமெரிக்காவில் எதிர்காலத்தில் வெள்ளையர்களின் அதிக்கம், அதாவது ஐரோப்பிய வெள்ளை அமெரிக்கர்களின் ஆதிக்கம் குறையும் என வலதுசாரிகள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை வலதுசாரி மாநிலமான அரிசோனா கொண்டு வந்துள்ளதாக ரேச்சல் மேடோ குற்றம்சாட்டினார். இருக்கலாம். இந்தக் காரணமும் இருக்கலாம். அல்லது ஒபாமாவை எதிர்க்கும் ஒரு வகை உத்தியாகவும் இருக்கலாம்.

தற்போதைய எதிர்பார்ப்பு இந்தச் சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா என்பதே. மக்களின் அடிப்படை உரிமை மீறும் சட்டமாக இருப்பதால் நிச்சயம் இந்தச் சட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு எதிர்பார்ப்பு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டரீதியாக்க ஓபாமா முன்வைத்த குடியேற்ற சீர்திருத்த மசோதா. இது சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை தடுக்கும். தன்னுடைய இந்தப் பதவிக்காலத்திலேயே இதனை கொண்டு வரப்போவதாக ஒபாமா கூறியிருந்தார். அரிசோனாவின் இந்த குடியேற்றச் சட்டம் அதனை துரிதமாக்கும் என்பதே பலரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.


12 மறுமொழிகள்:

இராம.கி said...

பரிட்டோ நல்ல சுவையான சாப்பாடு. நாலைந்து முறை கலிபோர்னியோவில் சாப்பிட்டுச் சுவைத்திருக்கிறேன். தென்னிந்தியர்களுக்கு மெக்சிகன் சாப்பாடு மிகவும் ஒத்துப் போகும். நல்ல காரம்.

லாட்டினோக்கள் பற்றிய இந்த விவரங்களை முன்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் இது பற்றிப் பெரிதும் எழுதியதாகத் தெரியவில்லை. நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அது பாராட்டப் படவேண்டிய விதயம்.

தாங்கள் வாழும் நாட்டில் அடிமட்டத்து மக்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள், என்ன போராட்டங்கள் நடக்கின்றன என்று தமிழர் எழுதி நான் பார்த்தது மிகக் குறைவு.

இங்கிருந்து சப்பான் போவார்கள், அங்கிருக்கும் சாதிக்கொடுமை (இருக்கிறது தெரியுமா?),கொரியர்களை இழிவு படுத்துதல் பற்றி எழுத மாட்டார்கள்.

ஆத்திரேலியா போவார்கள், அங்கு இருக்கும் பழங்குடியினர் (இத்தனைக்கும் அவர்கள் தமிழரோடு ஈனியல் (genetics) முறையில் தொடர்புற்றவர்கள் என்று முகன (modern) அறிவியல் சொல்லுகிறது, ஆனால் நம்மவர் எழுத மாட்டார்கள்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் போவார்கள் நம்முடைய பழம் உறவுகளைப் பற்றி எழுதமாட்டார்கள்.

அதே போல், பிஜி, மொரிசியசு, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஒன்றும் செய்தி வராது.

வெளிநாடுகளில் இருந்தும், அங்குள்ள செய்திகளை எழுதாது, வலையில் தேடிப்பிடித்து வெள்ளைக்காரரைப் பற்றியும், நம்மூர் கருணாநிதி - செயலலிதா, தி.மு.க, அ.தி.மு.க சண்டை, நம்மூர் அரசியல், மதம், சாதி, கடைந்தெடுத்த திரைப்படம் - என இத்தகைய குப்பைகளைப் பற்றி எழுதியே ஓரிரு மாமாங்கங்கள் ஓய்ந்து விட்டன.

அதே பாதையில் நடவாமல் வேறு புதுச்செய்தியை எழுதுகிறீர்களே, அதற்காகவே என் வரவேற்புக்கள்.

புதிய செய்திகளை ஒருவாரம் சொல்லுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

2:32 AM, May 12, 2010
மயிலாடுதுறை சிவா said...

சசி

இன்றைய புதிய பதிவில், மெக்சிகன் உணவு வகைகளை ஆரம்பித்து, நிறைய எழுத போகீறீர்கள் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் பொழுது, உங்களுக்கு மிகப் பிடித்த வரலாற்றை எழுதியுள்ளீர்கள். நல்ல பார்வை நல்ல பதிவு!

நமது தமிழ்நாட்டு அரசியலை "டச்" பண்ணாமல், வேறு எது எழுதினாலும் ஓகேதான்!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

10:55 AM, May 12, 2010
அ.முத்து பிரகாஷ் said...

அன்பு சசி!

அமெரிக்க அரசியல் சூழல் தெரியாத எனக்கு தங்களின் பதிவு மிகவும் பிடித்திருந்தது ...

இரு சந்தேகங்கள் தோழரே ...

//**அரிசோனாவை புறக்கணிக்கும் அடையாளமாக சூப்ப‌ர் ப‌வுல் என‌ப்ப‌டும் அமெரிக்க‌ன் புட்பால் (கால்பந்து அல்ல) போட்டிக‌ள் அரிசோனாவில் இருந்து மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌**//
அமெரிக்க‌ன் புட்பால் குறித்து சில வரிகள் பகிருங்களேன் ...

//**சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டரீதியாக்க ஓபாமா முன்வைத்த குடியேற்ற சீர்திருத்த மசோதா. இது சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை தடுக்கும்**//
ஒபாமா சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதரவா? அவர்களை வெளியேற்றப் போவதில்லையா? பெருந்தொகையினரான அம்மக்களின் வாக்குகளை கைப்பெற்றும் உத்தியா அல்லது பிற ஏதாவதா...

நன்றி!

12:07 PM, May 12, 2010
ஜோதிஜி said...

வெளிநாடுகளில் இருந்தும், அங்குள்ள செய்திகளை எழுதாது, வலையில் தேடிப்பிடித்து வெள்ளைக்காரரைப் பற்றியும், நம்மூர் கருணாநிதி - செயலலிதா, தி.மு.க, அ.தி.மு.க சண்டை, நம்மூர் அரசியல், மதம், சாதி, கடைந்தெடுத்த திரைப்படம் - என இத்தகைய குப்பைகளைப் பற்றி எழுதியே ஓரிரு மாமாங்கங்கள் ஓய்ந்து விட்டன.

சசி உங்கள் இடுகை வாயிலாக இராமகியை பேச வைத்தமைக்கு நன்றி.

12:19 PM, May 12, 2010
வினவு said...

அகதிகள் குடியேறுவதை மறைமுகமாக ஊக்குவிப்பது, இன்னொரு புறம் பொருளாதார நெருக்கடிகள் வரும்போது இனவெறியை ஸ்பான்சர் செய்வது என்ற இரட்டைவேடத்தை மறுக்க முடியாத தரவுகள், நோக்குடன் கட்டுரை செய்திருக்கிறது. நன்றி.

12:55 PM, May 12, 2010
Anonymous said...

//……இந்திய தொழில் அதிபர்கள் …. பட்டேல் கடைகளில் சரக்கு எடுப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யும் தொழிலாளர்களில் கொஞ்சம் குஜாராத்தில் இருந்து முதலாளிகள் இறக்குமதி செய்த இந்தியத் தொழிலாளர்கள் …////
இந்த ‘இந்தியத் தொழிலாளர்கள்’ இந்திய முதலாளிகளின் முன்னர் காட்டும் பவ்வியம் இருக்கிறதே, எரிச்சலாக வரும். ஏந்தான் இப்படி அடிமை போல நடக்க வேண்டும்? முக்கியமாக வயது முதிர்ந்த பஞ்சாபியர்கள் பார்க்கிங் லொட்டில் துண்டுப்பிரசுரம் வழங்குதல், தள்ளிவண்டிகளை சேகரித்து ஒழுங்கு செய்தல் போன்ற வெலைகளைச் செய்வதைப்பார்த்தால் கவலையாக இருக்கும். எனது நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு சமையல்கார்ர்கள் என்னைக்கண்டாலே எழுந்து நின்று சல்யூட்/வணக்கம்/பவ்வியம்/மரியாதை எல்லாம் கலந்த ஒரு ’மரியாதை’ செய்வார்கள் பார்க்க எரிச்சல் வரும். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் முடியாமல் யாழ்ப்பாண கெட்டவார்த்தையில் தொடர்ச்சியாக ஆறு மாதம் திட்டியதன் பின்னர்தான் கைவிட்டார்கள் அந்த அனியாயத்தை.
முன்னர் என்னையே ‘சார்’ என்பார்கள் திட்டலின் பின்னர் ‘அண்ணன்’ இல் வந்து நிற்கிறது.

//….. அவ்வளவு ஏன், நியூஜெர்சியில் திருப்பதியின் கிளையாக உள்ள பிரிட்ஜ்வாட்டர் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஏழுமலையான் கோயில் கேண்டினில் தோசை சுட்டுக் கொண்டிருப்பதும் ஒரு மெக்சிக்கன் தொழிலாளி தான். கோயிலை சுத்தம் செய்வதும் மெக்சிக்கன்ஸ் தான். ஏழுமலையானும் தொழிலாளர்களை சுரண்டியே பிரிட்ஜ்வாட்டரில் வாழுகிறார்.//…
இதற்கி அத்திவாரம் போட்ட்து குயீன்ஸ் இல இருக்கும் வினாயகர் கோவில் என நினைக்கிறேன். அக்கோவிலில் பிரிட்ஜ்வோட்டர் கோவில் கட்ட முன்னரே மெக்சிக்கன் தொழிலாளிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது அனேகமாக எல்லா சுத்திகரிப்பு வேலைகளிலும் அவர்களே. அக்கோவில் நிர்வாக்க்குழுத் தேர்தலின் போது, தேர்தல் விதிகளில் உள்ள சில ‘ஓட்டைகளை’ பயன்படுத்தி இந்த வேலையாட்களை வாக்களிக்கச் செய்து தொடர்ந்தும் பதவியில் இருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு. இந்த தேர்தல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.



////….. தாங்கள் வாழும் நாட்டில் அடிமட்டத்து மக்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள், என்ன போராட்டங்கள் நடக்கின்றன என்று தமிழர் எழுதி நான் பார்த்தது மிகக் குறைவு….//
மிகவும் சரியானது! நானும் அவதானித்திருக்கிறேன். எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும் இன்னும் கிரிக்கட் போட்டியிலும் சாக்கடைச் சினிமாவிலும் ’ஊறி’ இருப்பதையே ‘பெருமை’ என நினைக்கிறார்கள். இதில் ‘இந்திய தேச பக்தி’ வேறு!
எல்லோரும் தி.மு.க ‘பாசறையில்’ வளர்ந்தவர்கள் என்பது இன்னொரு உண்மை.( ‘சார் எங்க தலைவரு ஈழத்தமிழருக்கு இப்படி அனியாயம் பண்ணுவார் என நான் கனவுல கூட நினக்கலை சார்’ )

//….இங்கிருந்து சப்பான் போவார்கள், அங்கிருக்கும் சாதிக்கொடுமை (இருக்கிறது தெரியுமா?),கொரியர்களை இழிவு படுத்துதல் பற்றி எழுத மாட்டார்கள்…..//
சிலர் அவ்வாறான சாதிக்கொடுமைகளை தேடி அலைவார்கள். காரணம் மனிதாபிமானம் அல்ல மாறாக தமது கொடுமைகளை நியாயப்படுத்த!

1:19 PM, May 12, 2010
-/பெயரிலி. said...

அன்பின் இராமகி,
/நம்மூர் கருணாநிதி - செயலலிதா, தி.மு.க, அ.தி.மு.க சண்டை, நம்மூர் அரசியல், மதம், சாதி, கடைந்தெடுத்த திரைப்படம் - என இத்தகைய குப்பைகளைப் பற்றி எழுதியே ஓரிரு மாமாங்கங்கள் ஓய்ந்து விட்டன./

செம்மொழிமகாநாட்டிலே கலந்துகொள்வது சரியா தவறா என்று அமெரிக்காவிலேயிருந்து தமிழக அரசினையும் அதனைச் சார்ந்தவர்களையும் அதன் பின்னான அரசியலையும் பேசுதல் இதற்குள் அடங்காதென்று கொள்வீர்களென நம்புகிறேன்.

1:47 PM, May 12, 2010
Chellamuthu Kuppusamy said...

Dear Sasi, Sorry for not being able to type in Tamil. Star week - good going!

2:12 PM, May 12, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

நியோ,

உங்கள் கேள்விக்கு நட்சத்திர வாரத்தின் இறுதியில் பதிலளிக்கிறேன்.

நன்றி...

9:05 PM, May 13, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

நியோ,

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை சட்டபூர்வமாக்குவது என்பது அவர்களுக்கு ஏதேனும் ஒரு விசா வழங்குவது என்பதாகவே உள்ளது. அமெரிக்க குடிமக்களுக்கு மட்டும் தான் ஓட்டுரிமை என்பதால் சட்டபூர்வமாக்குவது ஓட்டுரிமையை அளித்து விடாது. ஒருவர் அமெரிக்காவிற்கு வந்து அமெரிக்க குடியுரிமைப் பெற பலப் படிகளைத் தாண்ட வேண்டும். எனவே இது ஓட்டுரிமைச் சார்ந்து அல்ல.

அமெரிக்காவில் குடியுரிமைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள் பெருமளவில் இடதுசாரிகளாகவும்,ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஒபாமா ஜனநாயகக் கட்சி. தற்பொழுது ஜனாதிபதியாக கொஞ்சம் நடுநிலையாக நடக்க முனைந்தாலும் ஒபாமாவும் ஒரு இடதுசாரியே. அது ஒரு காரணம்.

தவிரவும் பெரும்பான்மையான கறுப்பர்கள், லாட்டினோக்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவ‌ர்கள். ஒபாமா வெற்றி பெற பெரியக் காரணம் கறுப்பர்களும், லாட்டினோக்களும், பெண்களும், இளைஞர்களும் தான். ஒபாமாவை எதிர்ப்பவர்களில் முக்கியமானவர்கள் 35வயதிற்கு மேற்பட்ட வெள்ளை ஆண்கள்.

லாட்டினோக்கள் தான் பெரும்பாலும் இத்தகையச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பதால் குடியுரிமைச் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பது "குடியுரிமைப் பெற்ற" லாட்டினோக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. எனவே ஒபாமா இவர்களின் ஆதரவை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள குடியுரிமைச் சீர்திருத்தத்தை கொண்டு வருவதை தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக அளித்து இருக்கிறார். அதனையே நிறைவேற்ற முயலுகிறார். ஆனால் இந்தக் குடியேற்றச் சட்டம் நிறைவேறுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக தற்பொழுது உள்ளது.


************

அமெரிக்கன் புட்பால் என்பது கால்பந்து, ரக்பி போன்றவற்றை கலந்த ஒரு ஆட்டம். அவ்வப்பொழுது பார்த்திருந்தாலும் அதிக அளவில் பார்த்ததில்லை. பார்த்த அளவில் இன்னும் ஆட்டம் முழுமையாக எனக்கு புரிந்ததில்லை :))

கிரிக்கெட் போல அல்லாமல் மிகவும் சுவாரசியமான விளையாட்டு. மேலதிக விபரங்களுக்கு ‍

http://en.wikipedia.org/wiki/American_football

11:10 PM, May 19, 2010
அ.முத்து பிரகாஷ் said...

அன்பு சசி ...
சில நாட்கள் பதிவிற்கு வந்து பார்த்து விட்டு மறந்து விட்டீர்களோ என நினைத்து சென்று விட்டேன் ... நன்றி பல கூறுகிறேன் தோழரே , தங்களின் விரிவான விளக்கத்திற்கு , வருகிறேன் தோழர்...
அன்புடன்
நியோ

10:32 AM, May 25, 2010