Sunday, May 16, 2010

சசிகுமார் என்கிற நான்...

நான் சசிகுமார். வலைப்பதிவில் தமிழ் சசி/Tamil SASI. நெய்வேலியில் பிறந்து, வளர்ந்து இன்று நியூஜெர்சியில் இருக்கிறேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் எழுதுகிறேன். என்னைப் பாதித்த விடயங்களை எழுதுகிறேன். நான் எண்ணுவதை எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கும். ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளுதல் எளிதானது அல்ல. என்னுடைய உலகத்தில் நிகழும் நிகழ்வுகளை எழுதுகிறேன்.அந்த உலகத்தில் உள்ள ரத்தமும் சதையுமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் மனிதர்கள் வாழும் இடங்களில் நான் தற்பொழுது வாழ‌வில்லை. நான் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் இருப்பதால் அவ்வாறு எழுதக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறேன். "என் உலகத்தில்" நிகழும் நிகழ்வுகளை எழுத வேண்டும் என்றால் என்னுடைய "தற்போதைய" இருப்பிடத்தை விட்டு வெளியேறியே எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறேன்.

வாழ்க்கை நெடியது. பல ஆண்டுகள் கொண்ட இந்த வாழ்க்கையில் நாம் எதையும் திட்டமிட்டு அணுகுவது இல்லை. நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்றுகிறார்கள். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகவில்லை. எதிர்பாராத பல விடயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. என் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களைக் கொண்டே என் வாழ்க்கையை என் அனுபவங்களால் நான் அமைத்துக் கொள்கிறேன். என் அனுபவங்களே என் வாழ்க்கையை வழி நடத்துகின்றன. அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், என் அரசியல் கருத்துக்கள் என்றாலும், அதனை என் வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்தே நான் பெறுகிறேன்.

நெய்வேலியின் புறநகர்ப் பகுதியான தாண்டவன்குப்பம் என்ற குடிசைப் பகுதியை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலியில் உள்ளவர்களுக்குத் தெரியும். நான் அங்கே தான் பிறந்தேன். தாண்டவன் குப்பத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களே. நெய்வேலி டவுன்ஷிப்பில் (Township) வீடு கிடைக்காதவர்களும் இங்கே இருப்பார்கள். மொத்தத்தில் இங்கிந்தவர்கள் அடிமட்டத்தில் இருந்தவர்கள். அந்தக் காரணத்தால் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இடம் இழந்தப் பலரும் நெய்வேலியைச் சுற்றிய இத்தகையப் பல குடிசைப் பகுதிகளிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர்.


நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் வரை என்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை. நெய்வேலி இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் ஒரு நகரம். ஆனால் நெய்வேலியில் இருக்கும் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையே இருந்தது 1980கள் வரை இருந்தது. கார‌ண‌ம் இந்த‌ப் ப‌குதியில் இருந்த‌ ப‌ல‌ருக்கும் பெரிய‌ வ‌ச‌தி இல்லை. ப‌ல‌ரும் சாமானிய‌ ம‌க்க‌ள். சாமானிய‌ ம‌க்க‌ளைப் ப‌ற்றி அர‌சாங்க‌ங்க‌ளுக்கோ, அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கோ, எங்கள் நிலத்தைப் பிடுங்கிய நிறுவ‌ன‌ங்க‌ளுக்கோ எந்தக் க‌வலையும் இல்லை. நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட என் அப்பாவுக்கும், பாட்டிக்கும் நெய்வேலியில் வீடு இருந்தது. அன்றைக்கு அவர்கள் இருந்த கிராமத்தின் பெயர் இளவரசன்பட்டு. இன்றைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கமாகவும், அனல்மின் நிலையமாகவும், நெய்வேலி ட‌வுன்ஷிப்பாகவும் இருக்கும் பல கிராமங்களில் இளவரசன்பட்டு கிராமமும் ஒன்று. பலக் கிராமங்களை அழித்து அதில் எழுந்து நிற்கும் நிறுவனம் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். என் பாட்டி இருந்த‌ வீடு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காகப் பறிக்கப்பட்டப் பிறகு அவர்கள் ஆதண்டார்கொல்லை என்ற குடிசைப் பகுதியிலேயே குடி அமர்த்தப்பட்டனர். பிற‌கு தாண்ட‌வ‌ன் குப்ப‌ம் என்ற‌ ம‌ற்றொரு குடிசைப் ப‌குதிக்கு மாறின‌ர். ஆதாண்டார்கொல்லை ப‌குதியை பேச்சுத் தமிழில் ஆண்டாக்கொல்லை என‌ அழைப்பார்க‌ள்.

என் பாட்டி மிகச் சிறிய வயதிலேயே விதவையானவர். நெய்வேலிக்காக நிலத்தை இழந்த என் பாட்டி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் கட்டப்பட்ட ஆரம்பகாலங்களில் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாகவே பணிபுரிந்தார். என் அப்பா ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க வில்லை. வாழ்க்கைத் தேவைக்காக வியபாரத்தை என் அப்பா சிறிய வயதிலேயே தொடங்கினார். முதலில் பெட்டிக் கடை, பிறகு சைக்கிள் கடை, டீக்கடை, மளிகைக் கடை எனப் படிப்படியாக உயர்ந்தார். அதனால் நான் பிறந்த பொழுது ஏழ்மையில் பிறக்க வில்லை. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஒரு குடும்பத்திலேயே நான் பிறந்தேன். என் அப்பாவிற்கு ப‌டிப்பில் நிறைய‌ ஆர்வ‌ம் இருந்தும் ஏழ்மையின் கார‌ண‌மாக‌ப் ப‌டிக்க‌வில்லை. அத‌னால் த‌ன் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்தார். அத‌ற்காக‌ எந்த‌ச் செல‌வும் செய்ய‌ சித்த‌மாக‌ இருந்தார்.

படிப்பு தவிர வேறு எதிலும் கவனம் இருக்கக் கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பல தமிழகப் பிள்ளைகளில் நானும் ஒருவன். ஆங்கில வழிப் படிப்பே சிறந்தப் படிப்பு என்ற தமிழக மக்களின் பொதுவான மனப்பாங்கிற்கு என் அப்பாவும் விதிவிலக்கல்ல. ஆங்கில வழிப் பள்ளியிலேயே என் அப்பா என்னைப் படிக்க வைத்தார். எல்.கே.ஜி முதல் பொறியியல் வரை அவ்வாறே படித்தேன். தாண்டவன் குப்பம் பகுதியில் இருந்த அரவிந்தோ வித்யாலயா தான் நான் படிப்பைத் தொடங்கிய இடம். அக் காலத்தில் இது குடிசைப் பள்ளியாகவே இருந்தது. ஆரம்பக் கல்விக்குப் பிறகு நெய்வேலி டவுன்ஷிப் பள்ளிக்கு மாறினேன். நெய்வேலி வட்டம் 4ல் இருக்கும் செயிண்ட் பால் பள்ளியில் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் பொறியியல் படித்தேன்.

இயந்திரவியல்(மெக்கானிக்) பொறியியல் படித்தவுடன் எனக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. கல்லூரிப் படிப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாதாரண மதிப்பெண்களையே பெற்றேன். பலப் போராட்டங்களுக்குப் பிறகே வேலைக் கிடைத்தது. வேலையிலும் படிப்படியாக நகர்ந்து இன்று அமெரிக்காவில் ஒரு முண்ணனி வங்கியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொறுப்பில்‌ இருக்கிறேன். இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன். நெய்வேலி தாண்டவன் குப்பத்தில் இருந்து யாரும் எளிதாக இதில் வந்து விட முடியாது. வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒவ்வொரு முடிவையும் சுயமாக எடுத்து, அதனால் அடிபட்டு பாடம் கற்றுக் கொண்டு அடுத்த அடியை வைத்து நகர்ந்து இருக்கிறேன்.

இன்று அமெரிக்காவில் நான் சொகுசாக இருக்கிறேன் என்பதை நான் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் வீட்டில் லேடஸ்ட் தொலைக்காட்சி உள்ளது. இன்னும் சில லேடஸ்ட் அயிடங்கள் உள்ளன‌. ஓரளவுக்கு நல்ல கார் இருக்கிறது. வாடகை வீடு தான் என்றாலும் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக இருக்கிறேன் என்பதை மறைக்க நான் விரும்பவில்லை. ஆனால் சிறு வயதில் கோடைக் காலத்தில் மிகவும் புழுக்கமான அறையில் மின்சாரம் கூட இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே காற்றோட்டமாகப் படுத்தால் தான் ஓரளவிற்கு நிம்மதியாக தூங்க முடியும் என்ற சூழலில் கட்டாந்தரையில் படுத்து, அதில் கிடைக்கும் காற்றிலும் தூங்கியிருக்கிறேன். அவ்வாறு தூங்கியிருப்பதால் இன்னமும் அதைப் போன்ற மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

மின்சாரம் கூட இல்லாமல் லாந்தர் வெளிச்சத்தில் படித்தக் காலமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நம்முடைய நிலத்தின் மீது கட்டப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறவே நாம் போராடி இருக்கிறோமே என்ற ஞாபகம் என் நெஞ்சில் இருந்து அகல வில்லை. அத்தகைய அநீதி தானே சட்டிஸ்கரில், ஜார்க்கண்ட்டிலும், ஓரிசாவிலும் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படுகிறது என்பதை எண்ணும் பொழுது அம் மக்களுடனும் அவர்கள் நிலத்தை பறிக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் நான் அமெரிக்காவில் சொகுசாக‌ இருக்கும் சூழ்நிலையிலும் எழுதத் தோன்றுகிறது.

ஈழப் போராட்டத்தைக் குறித்து நான் நிறைய எழுதி இருக்கிறேன். அவ்வாறு எழுதுவதால் எனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போகிறார்கள் ? குறைந்தபட்சம் எந்த வெகுஜன இதழாவது என் கட்டுரைகளை தான் வெளியிடுமா ? இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும், கருணாநிக்கும் ஜல்ரா அடித்தால் குறைந்தபட்சம் வெற்றிப் பெற்ற ஒரு அணிக்காக வக்காலத்து வாங்கினோம் என்ற திருப்தியையாவது அடைய முடியும். ஆனால் இன்று பின்னடைவு நேரிட்ட‌ ஒரு போராட்டத்திற்காகப் பல மணி நேரம் செலவு செய்து எழுதியிருக்கிறேன். இன்றும் எழுதி வருகிறேன். எதிர்காலத்திலும் எழுதுவேன். காரணம் அந்தப் போராட்டம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகள் சிறிய வயதில் இருந்து என்னுள் இருந்து வந்திருக்கிறது. 10 வயதில், எங்கள் ஊரில் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவிகள் தெருத்தருவாக இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அக் காலத்தில் எதிரொலித்த‌ குரலாக இதனைப் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என்னை இந்தப் போராட்டம் நோக்கி ஈர்த்தது.

விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் என்னுடைய சிறிய வயது ஹீரோக்கள். இதைத் தவிர நெய்வேலிக்கு பக்கத்தில் இருந்த முந்திரிக் காடுகள் தமிழ்தேசியம் பேசியக் காலம் அது. இதுவும் என்னை பாதித்தது. என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். பிரபாகரனை எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு ஹீரோவாக மட்டுமில்லாமல் கடவுளாகவும் பார்த்த எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன். ஒரு சராசரி தமிழக ஈழ ஆதரவாளன் அவ்வாறே இருக்க முடியும். அது தான் பிரபாகரன் என்ற மனிதன் எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடையாளம். நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கும் பொழுது ஈழத்தின் நினைவுகளை எழுதாமல் என்னால் இருக்க முடியாது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அதனை எழுதாமல் என்னால் இருக்க முடியாது.

தற்கால வாழ்க்கை சொகுசாக இருக்கலாம். தற்போதைய செகுசான வாழ்க்கைக்கு ஏற்ப நம் கருத்துக்களை அமைத்துக் கொள்ளலாம். பலர் அமைத்தும் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய கடந்தக் காலத்தின் நினைவுகள், தாக்கங்கள், நாம் பார்த்த ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் போன்றவற்றை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட்டு சென்று விட முடியாது. அந்த நினைவுகளே என்னை போராட்டத்தைக் குறித்து எழுத வைக்கின்றன. அத்தகைய மனிதர்களைப் போன்ற வேறு மனிதர்களைப் பார்க்கும் பொழுது அவர்களையும் பற்றியும் எழுத வைக்கிறது. ஈழத்தின் போராட்டத்தை பார்த்து விட்டு காஷ்மீரின் போராட்டத்தையோ, நாகா மக்களின் பிரச்சனைகளையோ புறந்ததள்ளி விட முடியாது. நெய்வேலியில் நிலம் பறிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து விட்டு சட்டிஸ்கரில் நடக்கும் பிரச்சனைகளை புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு எழுதுவதால் சொல்லப்படும் வாதம், நீ ஈழத்திற்கு போ, சட்ஸ்கருக்கோ போ என்பது. இந்த நுண்ணிய அரசியலை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும், நான் கடந்து வந்த கடந்தக் காலம் என்னைக் கடந்து விடவில்லை. அது என்னுடன் ஒட்டியே வருகிறது. நினைவுகளாக ஒட்டி வருகிறது. என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் நினைவுகளே என்னுடைய கருத்தாக்கங்களை வழி நடத்துகிறது. அந்த எண்ணங்களையே நான் எழுத முடியும்.

வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும்.

முதலில் நாம் எல்லாம் சாமானியத் தனி மனிதர்கள். நம்மைச் சுற்றி நமது குடும்பமும், நம்மை நம்பி இருப்போரும் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை என்பது நமக்கு மட்டும் என்பது அல்லாமல் அவர்களுக்குமானது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வகையில் குடும்பமே முதன்மையானதாகிறது. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்பவுமே வாழ்க்கை அமைகிறது. இந்த வாழ்க்கையை விடுத்து வெளியே சென்று புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது 33வயதில் எளிதானது அல்ல. இது ஒரு வகையில் இயலாமை கலந்து சுயநலம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவம் அவ்வாறு தான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனவே இருக்கின்ற சூழலுக்கு ஏற்ற பணியையே நான் செய்ய விரும்புகிறேன்.

என்னுடைய எண்ணங்களை எழுதுவதோடு மட்டுமில்லாமல் என்னால் முடிந்த‌தை செய்ய முயன்று கொண்டு தான் இருக்கிறேன். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன‌ போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பின்பற்றவே விரும்புகிறேன். அப்படி நான் பின்பற்ற விரும்புகிறவர்களில் முக்கியமானவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். அவரைப் பற்றி எழுதுவதை அவர் விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர். இதற்காக அவர் செலவிடும் நேரம் அதிகம்.

அமெரிக்காவில் இன்னும் எத்தனையோப் பேர் இது போன்று தங்களால் முடிந்த பல விடயங்களைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழுவது ஒரு வகையில் பலமானதே என்பதைக் கடந்த காலங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஈழத்தமிழர்கள் அதனை வெளிப்படுத்தியிருந்தனர். நானும் என்னால் முடிந்த சிலவற்றையேனும் கடந்த சில ஆண்டுகளில் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது. தமிழ்ச் சார்ந்த விடயங்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

**************

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். முழு நேரப் பணி, குடும்பம் இவற்றுக்குப் பிறகு தான் எழுத்து என்று இருக்கிற யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் எழுத நினைத்தவற்றை முழுமையாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியதில் எனக்கு ஒரளவிற்கு திருப்தியும் இருக்கிறது. இனி தொடர்ந்து எழுத முடியும் என நம்புகிறேன்.

வாய்ப்பளித்த தமிழ்மணம் நண்பர்களுக்கும், வாசித்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தை ஈழப் போரில் ஆர்ட்டலரிகளுக்கும், செல்லடிகளுக்கும் பலியான மக்களுக்கும், போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஈழப் போராட்டம் சார்ந்த நினைவுகளை அடுத்த வாரமும் தொடர இருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்...

36 மறுமொழிகள்:

Anonymous said...

continue thalai va.......

thootruvaar thootrattum pottrvaar potrattum.......

All the best...

2:55 AM, May 16, 2010
ரவி said...

நான் திடீர் குப்பம்...

3:02 AM, May 16, 2010
அன்பரசு said...

சசி உங்கள் கருத்துக்கள் நியாயமானவை. ஈழத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அங்கே செல்ல வேண்டும் என்பது அபத்தமானது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவது எழுத்தாளருடைய புரிதலையும், அதைப்பற்றி அவருடைய கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கே! அதே நேரத்தில் சென்சிட்டிவான பிரச்சனைகளைப் பற்றி எழுதும்போது, நீங்கள் பிரச்சனை நடக்கும் இடத்தில வசிப்பவராக இருந்தால் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உங்களை மிரட்டவோ தாக்கவோ கூடும். அந்த வகையில் வெளியில் இருந்து எழுதுவது ஒரு பாதுகாப்புதான். ஈழப்பிரச்சனையில் நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு கருத்துத் தெரிவித்தால் கைதாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே வெளியில் இருந்து கொண்டு சென்சிடிவான பிரச்சனைகளைப் பற்றி எழுதுவது என்பது ஒருவகை கோழைத்தனம் என்று கருத வாய்ப்புண்டு. இதுதான் மற்றவர்கள் உங்களை பற்றி வைக்கும் விமர்சனத்திற்குக் காரணமாக இருக்கலாம். அதை, இந்தியாவில் இருந்து கொண்டு துணிச்சலாகக் கருத்து சொல்லிப் பிரச்சனையைச் சந்திக்க பயந்துகொண்டு இருப்பவர்களின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் கருத்தாகவும் கொள்ளலாம். அதே நேரத்தில் விஷமத்தனம் செய்பவர்களைப் பற்றி நாம்தான் புரிந்துகொள்ளவேன்டும். அவர்கள் வா இங்கே வந்து எழுத்திப்பார் என்று எச்சரிக்கிறார்கள். அதை நீங்கள் கொஞ்சம் கூட சட்டை செய்ய வேண்டியதில்லை. சாதாரண பின்னணியில் இருந்து உயர்ந்திருக்கும் உங்கள் உழைப்புக்கு ஆயிரம் சல்யூட்கள்!

3:22 AM, May 16, 2010
அன்பரசு said...

ஈழத்தைப் பொறுத்தவரை தற்போது மிகக் குழப்படியான சூழல் நிலவிவருகிறது. நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு ஈழத்தமிழர்களுக்கும் இல்லை, இங்கே உள்ளவர்களுக்கும் இல்லை. இது குறித்து நீங்கள் எழுதுங்களேன்!

3:25 AM, May 16, 2010
அ.முத்து பிரகாஷ் said...

அன்பு சசி

நட்சத்திர வாரத்தின் ஐந்து கட்டுரைகளும் தன்னளவில் நேர்மையுடனும் இதய சுத்தியுடனும் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி சமநிலையில் எழுதப்பட்டிருப்பதாக அந்தரங்கமாக உணர்கிறேன் ... எந்தவொரு வார்த்தைகளுடனும் என்னால் முரண்படமுடியவில்லை ; அவை அவற்றிற்குரிய மறைமுக வேலைத்திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை ...

செம்மொழி மாநாடு குறித்த கட்டுரை ஒருவரிடமாவது மனமாற்றத்தை ஏற்படுத்தாமலா போயிருக்கும் ?

முழு நேரப் பணி, குடும்பம் இவற்றுக்குப் பிறகு தான் எழுத்து என்று இருக்கிற யதார்த்தமான வாழ்க்கைச் சூழலிருந்து சற்று விலகி கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு எனக்கோ யாருக்குமோ ஏன் உங்களுக்கு கூட உரிமையில்லை தான் ...

தொடர்ந்து சந்திக்க ஆர்வமுடன் இருக்கிறோம் ...

நன்றி தோழரே!

4:49 AM, May 16, 2010
-/பெயரிலி. said...

சசி
வலைப்பதிவிலே கருத்தினைச் சொல்லும் எல்லோருடைய கருத்துக்காகவும் பதிலைச் சொல்லப்போனால், நீங்கள் விரும்புவதைச் செய்ய நேரம் கிடைக்கப்போவதில்லை. ஈழத்துக்குப் போய்க் கருத்தைச் சொல் என்கிற பலர் உங்களைச் சுற்றி நியூ ஜேர்ஸியிலேயே குந்திக்கொண்டிருக்கலாம். இதையெல்லாம் கண்டு கொண்டு விளக்கம் சொல்லக்கூடாது ;-)

5:09 AM, May 16, 2010
Unknown said...

உங்கள் பதிவில் இருக்கும் உண்மைகளை என்னால் உணர முடிகிறது நண்பரே! உங்களுக்கு என் நன்றி!

5:32 AM, May 16, 2010
Anonymous said...

ஜெயவர்த்தனேவின் கொடும்பாவிகள் தெருத்தருவாக இழுத்துச் செல்லப்பட்டு @@@@
சசி, இந்நிகழ்வால் நீங்கள் பாதிக்கக் பட்டிருக்கலாம். இன்னொரு பக்கம் அதே நேரத்தில் 5 காசு முறுக்கு இலங்கையை நொறுக்கு என்று ஆர்பரித்து மக்களுக்கு போராடுவதாக திரிந்த கூட்டங்களையும் கவனித்து இருக்கிறேன். ஆனால் கோசம் போடும் யாருமே அவர்களின் சாதாரண கடமையை செய்யாமல் (10th fail, குடிச்சுட்டு வீட்டை கொளுத்துவது, குழாய் தண்ணிக்கு அரிவாள் வெட்டு) இருந்துகொண்டு திடீரென ஏதோவொன்றுக்கு கோசம் போடுவதும், அக்கொள்கையும் மட்டும் எப்படி சரியானதாக இருக்கமுடியும் என்று 10 வயதில் யோசிக்க வைத்தது எதுவென்று இன்னும் யோசித்துகொண்டேயிருக்கிறேன்.
மற்றபடி உங்களின் பின்புலம் பற்றி கொஞ்சம் அனுமானித்துதான் எழுதியிருந்தேன், அங்கே காயங்குப்பம் என்றால் இங்கே ஒரு பட்டி. நிகழ்வுகள் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுதான்.

இனியெல்லாம் வாதத்திற்காகத்தான்.
நெய்வேலி போ என்றால், வேறு பிரச்சனையினை பற்றி எழுதாதே என்பதல்ல, preference குப்பத்துக்கும் சிக்குன்குனியாவிற்கு போகட்டும், முதலில் நம்மை செம்மைபடுத்துவோம். சுயதன்னிறைவான சமூகம் மட்டுமே பிறபிரச்சனைகளுக்கான ஆக்கங்களில் தலையிடுவதற்கு தகுதியானது Eg. Norway சுயதன்னிறைவு வருவதற்குள் நாமெல்லாம் செத்துவிடுவோமே என்பீர்களேயானால் அதுதான் நிதர்சனம்.

பொதுல இத்த எழுதாதேன்னு கூவுறதுகூட என்னோட உரிமை, நீங்கள் எழுதுவதும் என்னோட சமூகத்தினை பற்றியென்பதால் - என்று மாறி மாறி கூவிகொண்டே இருக்கலாம், பலன் ?

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அக் காலத்தில் எதிரொலித்த‌ குரலாக இதனைப் பார்க்க முடியும்@@@@@@@
இதனையும் நான் கடுமையாக வன்மையாக கொடுமையாக கண்டிக்கும் அதே வேளையில், நான் மறுக்கும் அதே வேளையில் என் மறுப்பை மறுக்கும் உரிமையினை தாங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
80 ல் வேலையில்லாத வெட்டி இளைஞர்கள் கொதித்தெழுந்ததாக கட்டமைக்கப்பட்டது. அப்படியே கொதித்தெழுந்திருந்தாலும் அது மறுப்பதிற்கில்லை, அதுதான் தழிழர்கள். 10 பேர் & ஒரு மீடியா சேர்ந்து இவன் நல்லவண்டா என்றால் - அவனே நல்லவன். 11 பேர் 2 media இணைந்து இவன் நல்லவன் என்றால் தமிழனுக்கு இவனே நல்லவன். இதில் 80 இளைஞர்கள் கொதித்தெழுந்ததை நீங்கள் நம்பினால் தாண்டவன்குப்பத்தில் இருக்கிற மாதிரியே அப்பாவி இரூக்கீ, குழந்தே மனசு உங்களுக்கு.
நன்றி.
முகமூடி பேரவை
அய்யங்கோவில்பட்டி

6:03 AM, May 16, 2010
Anonymous said...

இங்கு ஒரு சமூகம் பிச்சையெடுக்குமாம், அங்கு போய் புரட்சிக்கு வா புண்ணாக்கு வா - என்று ஒரு கும்பல் கூவுமாம். அந்நேரத்தில் அப்படி பொரட்சிக்கு வார எல்லாறையும் கூட்டிக்கு போய் சமாதி கட்டினால்தான் அச்சமூகம் அதனோட சரியான பாதைக்கு ஒரு படி எடுத்து வைப்பதாக அர்த்தம். பெரட்சியேலாம் கூடாது நாமேலே பிச்சையெடுக்கிறோம் 30 வருசமா பிரியலனா என்ன பண்ணுறது

6:11 AM, May 16, 2010
Anonymous said...

பொறந்தடனே பக்கத்து பெட் பாப்பா அழுதுச்சா, அப்போ நானும் அழுகிறேன் - நாந்தான் தமிழன்
இதுக்கு தனியாவெல்லாம் நன்று கார்டு போடமுடியாது

முகமூடி பேரவை

6:16 AM, May 16, 2010
பா.ராஜாராம் said...

கடந்த வாரம் முழுக்க உங்களின் இடுகைகள் அனைத்தையும் வாசித்தேன்.

மிகுந்த திருப்தி அளித்த நட்சத்திரம். வாரம்.

மிக்க நன்றிங்க!

6:27 AM, May 16, 2010
ஜோதிஜி said...

புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன‌ போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முற்றிலும் உண்மை. அடிப்படைத் தேவைகள் இருந்து கொண்டு மேன்மேலும் அதன் பின்னால் ஓடிக்கொண்டுருக்கும் அநேக வெளிநாட்டு நண்பர்களை அறிந்தவன் என்ற முறையில் நான் பார்த்தவரையிலும், வலை உலக வாசிப்பின் பாதித்த வரையிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்பே அதிகம்.

ஏற்கனவே உங்கள் நண்பர்கள் கூறியபடி இன்னமும் வலை என்பதை திரை என்பதாக கருதிக்கொண்டுருப்பவர்கள் அதிகமானோர் இருப்பதால் திகட்டும் அளவிற்கு வந்துகொண்டுருக்கும் பங்களிப்பு ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையுண்டு.

நெய்வேலியுடன் அதிகம் "சம்மந்தம்" உண்டு என்பதால் உங்கள் ஆதாரம் தெளிவாக புரிகிறது. இந்த சமயத்தில் இது போன்ற உங்கள் எழுத்து அதிக மனநிறைவை தருகிறது.

கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் கண் முன்னால் நடந்து கொண்டேயிருந்தாலும் நமக்கென்ன? என்ற இந்த ஒற்றைச் சொல்ல பலருக்கு திடீர் ராஜவாழ்க்கையையும், ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகப் பெரிய வீழ்ச்சியையும் தருகிறது.

இப்போது கனடா நீதிபதி சொன்ன வாசகம் நிதி வசூல் செய்த நபருக்கு ஆறு மாத தண்டனை கொடுத்துவிட்டு
" இன்னமும் விடுதலைப்புலிகள் என்பவர்கள் ஆபத்தானவர்கள்"

இந்த வாசக உட்பொருள் தான் சர்வதேச அரசியலின் ஆதார நாதம்.
புரியவைக்க முடியாத இனம் மொத்த தமிழினமே?

குற்றச்சாட்டுக்கும், விமர்சனத்திற்கும் பஞ்சமில்லாமல் கடந்து கொண்டே போய்க்கொண்டுருக்கும் ஈழம் குறித்து நான் புத்தகம் மூலம் கற்றுணர்ந்த விடயங்கள் அத்தனையும் பிறழாமல் உங்கள் எழுத்தில் படித்த திருப்தி உண்டு.

உணர்ந்தவர்கள், உள்வாங்கியவர்கள், எந்தவித சாயமும் பூசிக்கொள்ளாதவர்கள் எழுதும் போது எந்த அக்கறையும் தவறானது அல்ல.

நல்ல பங்களிப்பு. உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் வாழ்த்துகள்.

6:54 AM, May 16, 2010
Manikandan Neelan said...

Hi Sasi,

Wish you all the best for your writings. After i start to read your article i got many unknown things in my life. Its opened another kind of window in my life. Please write more and more, sure one day it will reach at least 1000 people.

7:19 AM, May 16, 2010
- யெஸ்.பாலபாரதி said...

//வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும். //

100% சரி..!

10:27 AM, May 16, 2010
தமிழ்நதி said...

சசி,

மற்றவர்களின் பேச்சுக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்தால் சோர்ந்துபோய் விடுவோம். எனக்கும் சிலசமயங்களில் அது நிகழ்வதுண்டு. எனது தோழிகளில் ஒருவர் அடிக்கடி சொல்வார் 'தொடர்ந்து இயங்குவதன் வழியாக அவர்களைத் தோற்கடியுங்கள்'என்று.

நட்சத்திர வாரத்தில் அவசியமானதை எழுதி, திருப்தியாக நிறைவுசெய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

11:25 AM, May 16, 2010
Anonymous said...

//ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்.//

I felt the same many a times..

--karthikramas

12:19 PM, May 16, 2010
Unknown said...

அன்பான சசி,

தெளிவு தரும் சரியான பதிவு. பாராட்டுகிறேன்.
தமிழ் மக்கள், நிலம், மொழி மூன்றையும் அழித்து ஒழிக்காமல், எதிர்கால மக்களுக்கு காப்பாற்றி, தொடர்பை நிலை நிறுத்துவது மிகப் பெரிய கடமை. அதை ஆற்றல் பெற்றோர் எல்லோரும் செய்யவேண்டும். கெடுதி புரிபவர்களுக்கு துணைசெய்யாமல் இருப்பதே மற்றவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரும் தொண்டு. உணரும் தமிழர் உறுதி கொள்ளட்டும். வாழ்க வளமுடன் நலமுடன்.
அன்புடன் இராதாகிருஷ்னன் இகூசுடன் மே 16, 2010

12:46 PM, May 16, 2010
தருமி said...

//சாதாரண பின்னணியில் இருந்து உயர்ந்திருக்கும் உங்கள் உழைப்புக்கு ஆயிரம் சல்யூட்கள்!//


ரிப்பீட்டே .....

1:14 PM, May 16, 2010
கிரி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சசி! நீங்கள் கூறியுள்ள பல விஷயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

9:02 PM, May 16, 2010
vinthaimanithan said...

மிக அருமையான பதிவு.. நெஞ்சம் கனக்கிறது

9:50 PM, May 16, 2010
கோவி.கண்ணன் said...

பாலா திரைப் படங்கள் போல எப்போவாவது வந்தாலும் தரமாக இருந்தது.

பாராட்டுகள் சசி.

9:52 PM, May 16, 2010
Anonymous said...

உங்களைப் பல காலமாகத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். நெஞ்சத்துணிபும் நேர்மைத்திறனும் உங்கள் எழுத்தில் இருக்கின்றது.. காஷ்மீரப்பிரச்சினை பற்றி எழுதப்போக உங்களுடன் உராய்ந்து கொண்டவர்கள் பலர்...

"இந்தியா" என்ற புழுதிக்கூட்டத்தில் புதந்து போனவர்களுக்குப் புழுத்து நெளியும் "மனிதப்" பிரச்சினைகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை.

புழுதிக்கூட்ட மயக்கம் நீங்குகையில் உனகளுடன் கைகோர்த்து வரப் பலர் போட்டி போடுவார்கள்... நீங்கள் செல்லும் பாதை சரியானது என்பதற்கு அதுவே சாட்சியம் ஆகவே தொடர்ந்து செல்லுங்கள்...

-இட்டாலிவடை

10:36 PM, May 16, 2010
Indian said...

மன நிறைவு தந்த நட்சத்திர வாரம்.

10:40 PM, May 16, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

இது தன்னிலை விளக்கம் என்பது அல்ல. போராட்டதைப் பற்றி எழுதும் எவருக்கும் போராட்டம் குறித்த ஏதோ ஒரு கடந்தக் காலம் இருக்கவே செய்கிறது. அதுவே அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு வழியில் முன்னெடுக்கக் காரணம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை நோக்கி முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கான எனது பார்வையிலான பதிலே இந்தப் பதிவு.

************

வலைப்பதிவுகளின் மூலம் நான் பெற்றது அதிக நண்பர்களே. இந்த இடுகைக்கும், மற்ற இடுகைக்கும் வந்த மறுமொழிகளும் அதனையே எனக்கு உணர்த்துகிறது. மறுமொழியிட்ட ஒவ்வொரு நண்பருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றி...

11:04 PM, May 16, 2010
Jerry Eshananda said...

நல்லதொரு நண்பனை கண்டுகொண்டேன்,"தோள் கொடுக்கிறேன் தோழா."

11:30 PM, May 16, 2010
குடுகுடுப்பை said...

சசி உங்கள் இடுகைகளுக்கு நான் மறுமொழி இடுவதில்லை, ஆனால் விரும்பிப்படிக்கிறேன், நீங்கள் ஹீஸ்டனோ , டாலஸ் பக்கமோ மீண்டும் வரும்போது தெரியப்படுத்துங்கள், டெக்ஸ்மெக்ஸோடு சந்திப்போம்.

12:05 AM, May 17, 2010
-/சுடலை மாடன்/- said...

சனி-ஞாயிறு வெளி வேலைகள் முடிந்து வீட்டுள் ஒதுங்கியபின் அடுத்த நட்சத்திரத்துக்குத் தேவையானதைச் செய்ய முனைந்தபோது உங்களது இவ்விடுகையைப் படித்தேன்.

உங்கள் மனதில் பட்டதை எழுதியிருக்கிறீர்கள், அதனால் உங்கள் மனதில் உண்மையாக என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக வீண் சலசலப்புகளை நிராகரித்துச் செல்லும் நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு எழுதினீர்களோ என்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நீங்கள் எழுதியவை என் தகுதிக்கு கொஞ்சம் அதிகப் படியான பாராட்டு. ஆனால் என்னை முன்மாதிரிகளாக இருந்து இயக்குபவர்கள் உங்களைப் போன்ற எத்தனையோ பேர் . அமெரிக்காவில் சில தமிழ்த் தொண்டர்கள் தாம் சந்தித்துள்ள பல்வித கொடிய இன்னல்களுக்கு இடையேயும் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரலாற்றுக் காலந்தொட்டு தமிழரின் அரசியல் சூழலில் சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைதான் என்றாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், ஏமாற்றமடையாமல் எத்தனையோ பேர் தன்னலமில்லாமல் தொடர்ந்து சாண்களையே ஏறி கொண்டிருப்பதுதான் தமிழர்தம் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முழம் இறங்குவதற்கு என்ன காரணம் என்பதை இன்னும் அறியாமலே இருப்பது உழைப்பு விரயமாகக் காரணமாக இருக்கிறது என்றாலுங்கூட.

இந்தியாவிலிருந்த வரை *வினவு* போன்ற தோழர்களின் தன்னலமில்லாத செயல்பாடுகள் என்னை மிக அதிகம் ஈர்த்தவை. அவர்களைப் போன்றவர்கள் நம்மிடம் "அமெரிக்காவிலிருக்கும் உனக்கு எம் மக்களைப் பற்றிப் பேச அருகதியில்லை, நீ இந்தியா திரும்பி வந்து பேசு" என்று சொன்னால் அதற்கு நியாயமிருப்பதாகக் கருதுவேன். மற்றபடி முகம் காட்ட விரும்பாத சில்லறைகளின் சத்தங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். நான் இடையில் இந்தியா திரும்பி சென்று ஒன்றரை ஆண்டு பணியாற்றிய பொழுது கற்றுக் கொண்ட பாடம் இது.

அதற்காக வினவு சொல்லும் எல்லாவற்றிற்கும் நடப்பியல் அடிப்படையில் என்னால் உடன்பட முடியாது. நான் இதைச் சொல்லும் பொழுது கூட இலட்சியவாத அடிப்படையில் என்னைக் குறைகூற அவர்களுக்குத் தகுதியுண்டு. நான் முழுமையாக எழுத நினைக்கும் ஒரு காலத்தில் இதைப் பற்றி விரிவாகப் பேசுவேன்.

அமெரிக்க மண்ணிலும் கூட முதலாளித்துவ சமுதாயத்திற்குள்ளேயே எத்தனை அமெரிக்கத் தன்னார்வலர்கள் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் உழைப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அவர்களது அரசியல் அறிவில் நமக்குக் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட நோக்கத்துக்கு முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அர்ப்பணிப்பு கற்றுக் கொள்ளப் படவேண்டியது.

ஈழத்தைப் பொறுத்தவரையிலும் கூட பிரபாகரனின் சர்வதேச் அரசியல் அறியாமையின் மேலும், சர்வாதிகாரக் குணத்தின் மேலும் கோபமும், ஏமாற்றமும் வருகிறதுண்டு. ஆனால் பிரபாகரனின் நேர்மைக்கும், தன்னலமின்மைக்கும், அர்ப்பணிப்பிற்கும் முன்பு சோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்ற அறிவுஜீவிப் போலித்தனங்கள் தூசுக்குச் சமானம். லீனா மணிமேகலை விசயத்தில் இவர்களது படங்காட்டல் ஒரு எடுத்துக்காட்டு.

நிறைய எழுத ஆசை, நேரமில்லை.

நன்றி - சொ.சங்கரபாண்டி

12:11 AM, May 17, 2010
Sanjai Gandhi said...

நட்சத்திர வாழ்த்துகள் சசி..

//வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும். //

ஆமோதிக்கிறேன்.. குறிப்பாக , கடைசி வாக்கியத்தை...

3:12 AM, May 17, 2010
ஜோதிஜி said...

ஈழத்தைப் பொறுத்தவரையிலும் கூட பிரபாகரனின் சர்வதேச் அரசியல் அறியாமையின் மேலும், சர்வாதிகாரக் குணத்தின் மேலும் கோபமும், ஏமாற்றமும் வருகிறதுண்டு. ஆனால் பிரபாகரனின் நேர்மைக்கும், தன்னலமின்மைக்கும், அர்ப்பணிப்பிற்கும் சமகாலத்தில் உள்ள அறிவுஜீவிகள் அவர்களின் வார்த்தைகள் மற்றும் போலித்தனங்கள் கால் தூசுக்குச் சமானம்.

சங்கரபாண்டி உங்கள் நட்சத்திர வாரத்தை எதிர்பார்த்து..........

11:54 AM, May 17, 2010
ILA (a) இளா said...

//இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன்//
ஒத்த வார்த்தையில முடிச்சிட்டீங்க. ஆனா இது பெரிய விசயமில்லீங்களா?

1:28 PM, May 17, 2010
பொற்கோ said...

தங்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள பல செய்திகள் குறிப்பாக நெய்வேலி டவுன்சிப் மற்றும் ஈழம் தொடர்பான செய்திகள் அனைத்திலும் நானும் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி!

12:20 PM, May 18, 2010
மலைநாடான் said...

சசி!
நிறைவான சிந்தனை, நெகிழ்வான எழுத்துக்கள்.
நன்றி

12:15 PM, May 19, 2010
RK said...

சசி,

சமீபத்தில் படித்தவைகளில் ஆகச் சிறந்த கட்டுரை இது..நிதானமாக எழுதி இருக்கிறீர்கள்..அனைத்தும் உடன்பாடானவை..அவ்வபோது எழுதவும்

2:56 AM, May 22, 2010
தயாளன் said...

நிறைவான பதிவு.

உங்கள் உண்மை உள்ளத்திற்கு பாராட்டுக்கள்

4:32 AM, May 25, 2010
Unknown said...

சிறு வயது பாதிப்புகள் யாருக்கும் மனதை விட்டு நீங்காது!. தனி மனித சுகந்திரத்தில் யாராலும் குறிக்கிடவும் முடியாது. உங்கள் வாழ்கையில் நீங்கள் இப்படி இருகிறீர்கள் என்றல் உங்கள் முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் காரணம். நீங்கள் தொடருங்கள்...

7:04 AM, June 13, 2010
வவ்வால் said...

சசி,

இப்போ தான் பழையப்பதிவுகளை எல்லாம் ரேண்டமாக படித்துக்கொண்டிருக்கேன். நீங்கள் தாண்டவன் குப்பத்தில் இருந்து வந்த மாணிக்கமாக தெரிகிறீர்கள், ஆட்டோ கேட் எதிரில் இருப்பது தானே தாண்டவன் குப்பம்(அல்லது ஜிஎச் பக்கம் இருப்பதா). ரவி திடீர் குப்பம் என்கிறார், செவ்வாய் சந்தைப்பக்கம். அங்கே எல்லாம் நம்ம உறவினர்கள் இருக்காங்க, சின்ன வயதில் இருந்தே வருவதுண்டு.நமக்கும் அந்த பக்கம் தான்.

நிலம் கொடுத்தது , கடின வாழ்க்கை என நெகிழ்வாக சொல்லி இருக்கிங்க. எங்க சின்ன தாத்தா நிலம் எல்லாம் சுரங்கத்துள்ள தான் இருக்கு! இப்போ அந்தப்பக்கம் சமீபத்தில போனிங்களா? நிலம்கொடுத்தவங்களுக்கு இந்திரா நகர் ஆர்ச் அருகில் இரண்டு மாற்று குடியிருப்பு கொடுத்து இருக்காங்க. ஓரளவு நல்லா இருக்கு.

ஓவ்வொருவருக்கும் எழுத உரிமை உள்ளது அதை யாரும் கொடுக்க தேவை இல்லை, எனவே எழுதுங்கள், அவங்க கருத்த அவங்க எழுதுறாங்க. எல்லாம் ஒரு ஸ்பெக்ட்ரம் தானே, ஒரே நிறம் இருந்தா சலிச்சுடாதா?

10:59 AM, October 30, 2011