Sunday, May 05, 2013

வடமாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து

கட்டப்பஞ்சாயத்து தமிழகத்தில் பெருகி வருவது ஒரு ஆபத்தான போக்கு ஆகும். ஒரு முறை அதன் காரணமாக நான் நேரடியாக பாதிப்பும் அடைந்து இருக்கிறேன். சென்னை தாம்பரத்தில் 2003ல் ஒரு இடம் ஒன்றினை வாங்கினேன். பத்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்து வாங்கினாலும் அந்தப் பகுதி ஒரு ரவுடிக் கும்பலின் பிடியில் இருந்தது அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது போல அல்லாமல் தாம்பரம் அப்பொழுது ஒரு புறநகருக்கே உரிய கிராமத்தனமாக தான் இருந்தது. நான் இடம் வாங்கி அங்கே வீடு கட்ட ஆரம்பித்த பொழுது பிரச்சனைகள் தொடங்கியது. திடீரென்று ஒரு நாள் என்னுடைய இடத்தில் திமுக, அதிமுக கொடிக்கம்பங்கள் முளைத்தன. அம்மா குடிநீர் பந்தல் என்ற ஒன்றை என்னுடைய இடத்தில் கொஞ்சம், ரோட்டில் கொஞ்சம் என்று சேர்த்து போட்டு விட்டார்கள். இடத்தை அளந்து போட்டிருந்த கற்களை பிடுங்கி எறிந்தார்கள். என்னிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய தொடங்கினார்கள். பேரம் பேசத் தொடங்கினார்கள். ஒரு தொகையை கொடுத்து பிரச்சனையை முடித்தோம். என்னுடைய தரப்பில் லோக்கல் அரசியலில் அனுபவம் உள்ள என்னுடைய மாமா இருந்ததால் பிரச்சனையை தீர்க்க முடிந்தது. அப்படி இல்லாதபட்சத்தில் சில லட்சங்களை பிடுங்கியிருப்பார்கள். போலீசிடம் போனால் பிரச்சனை அவ்வளவு சுலபத்தில் தீராது. போலீசுக்கு கொடுக்க வேண்டிய தொகை, கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு கொடுக்க வேண்டிய தொகை என இரட்டிப்பு தொகையை கொடுக்க வேண்டி இருக்கும்.

கட்டப்பஞ்சாயத்து என்பது ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்குடன் இருக்கும் ரவுடிக்கும்பல் செய்வது. திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் எல்லா கட்சிகளிலும் உள்ள ரவுடிக்கும்பல் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். என்னிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ரவுடிகள். இதில் எந்தக் கட்சி வேறுபாடும் இல்லை. பணம் தொடங்கி ரியல் எஸ்டேட், பங்காளித் தகராறு என பல்வேறு பிரச்சனைகளில் இந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் தங்கள் கைவரிசையை காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2005க்கு பிறகு ரியல் எஸ்டேட் வளர்ந்த பொழுது இவர்களது அட்டூழியம் மிக அதிகமாக இருந்தது. அரசியல்வாதிகள் இத்தகைய ரவுடிக்கும்பல்களை வளர்த்து விடுகிறார்கள். தாங்கள் அரசியல் செய்ய இத்தகைய ரவுடிக் கும்பல் தேவை என்பதாக அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். இதில் எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் கிடையாது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இந்தக் கட்டப்பஞ்சாயத்து கூட்டணிக்கு புதிய வரவு தேமுதிக.

இது போன்ற கட்டபஞ்சாயத்துக்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து தான் வருகிறது. ஒவ்வொரு கட்சி, சாதியின் லோக்கல் செல்வாக்கிற்கு ஏற்ப கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் சாதியும், கட்சியும் மாறுபடுகிறது. வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பாமக, திமுக போன்ற கட்சியைச் சார்ந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் இருக்கும். தலித்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். அதிமுக ஆளுங்கட்சி என்னும் பொழுது அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள்.

ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் திமுக, பாமக, அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்பவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாதி அடுக்கில் தங்களுக்கு கீழே இருக்கும் தலித்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதா என்ற சாதி வெறியே இதற்கு காரணம். இது பரவலாக இருந்த ஒரு சாதிவெறி எண்ணம். அதற்கு தற்பொழுது பாமக மேடையில் இடம் கொடுத்து இருக்கிறார் ராமதாஸ். ராமதாசே விடுதலைச் சிறுத்தைகளை கட்டப்பஞ்சாயத்து கும்பல் என வெளிப்படையாக பேசுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்றால் ராமதாசுக்கு அருகில் நிற்கும் காடுவெட்டி குரு யார் ? காடுவெட்டி குரு என்ன பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயின்று கட்சி நடத்துகிறவரா ? அல்லது அன்புமணி ராமதாஸ் போல ஏற்காடு கான்வென்ட்டில் படித்தவரா ? ஜெயங்கொண்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முன்னாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடி தானே இன்றைய வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ?

தருமபுரி நாயக்கன்கொட்டையில் நடந்த கலவரம் போல கடலூரிலோ, விழுப்புரத்திலோ இன்றைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதே என் நம்பிக்கை. காரணம் வடமாவட்டத்தில் ஒரு தலித் குடிசை எரிக்கப்பட்டால் பதிலுக்கு ஒரு வன்னியர் குடிசை எரியும் என்ற அச்சம் இருக்கிறது. திருப்பி அடிப்பார்கள் என்ற பயம் தான் கலவரங்களைக் குறைக்கும் என நான் நம்புகிறேன்.

***********

அரசியலில் ரவுடிகள் வந்ததால் விளைந்த மிகப் பெரிய அவலமே இந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல்களின் வளர்ச்சி. ஒரு வகையில் இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை வளர்த்து விட்டது திமுகவின் உள்ளூர் தலைவர்களே. உட்கட்சி தேர்தலில் தங்களை எதிர்த்து நிற்பவர்களை தோற்கடிக்க திமுக தலைவர்களே இந்தக் கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். திமுக, அதிமுக போன்ற நிலைநிறுத்தப்பட்ட அரசியல் கட்சிகளின் அடியாள் பலத்தை எதிர்கொள்ள தங்களுக்கும் ஆட்பலம் தேவை என அரசியல் கட்சி தலைவர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில் திமுக வளர்த்து விட்ட அரசியல் கலாச்சாரத்தை அதன் வழியில் புதியதாக அரசியல் தொடங்குபவர்களும் பின்பற்ற தொடங்கி விடுகிறார்கள். பாமக, தேமுக, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளுமே அதனைப் பின்பற்றுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு புதியதலைமுறை செய்திகளில் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் 40க்கும் மேற்பட்ட பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி செய்த பொழுது லாலு வளர்த்து விட்ட இத்தகைய கும்பல் தான் மொத்த ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்தது. தமிழகம் அந்த நிலை நோக்கி செல்லுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

கட்டப்பஞ்சாயத்து சட்டவிரோதமானது. அதனை ஒடுக்க முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆனால் எந்த அரசாங்கமும் அதனை செய்யாது. கட்டப்பஞ்சாயத்து மூலம் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளைச் சார்ந்த கட்டப்பஞ்சாயத்துக்களையும் ஒழிக்க வேண்டும். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தால் விடுதலைச் சிறுத்தைகளும் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போவதில்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சொல்வது சாதீயமே...

1 மறுமொழிகள்:

வலிப்போக்கன் said...

வீடுதலை சிறுத்தைகளின் ஏரிய.. தலைவருக்கும் எனக்கும் ஏற்பட்ட இடப் பிரச்சினையில் நான் விட்டுக்கொடுக்க மறுத்ததால் மாவட்ட செயலரே! போலீஸ் ஸ்டேஷன் வந்து என் மீது பொய்கேசு போடச் சொல்கிறார்.

11:05 AM, May 06, 2013