வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, February 18, 2018

செந்தில்-ராசலட்சுமியின் நாட்டுப்புறப்பாடல்கள்…

பல பாடகர்களை அறிமுகப்படுத்திய விசய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இன்று இரு நாட்டுப்புறப்பாடகர்களை நம்பி சூழன்று கொண்டிருக்கிறது. எத்தனையோ இசையமைப்பாளர்களை, பாடகர்களை, நடிகர்களைத் தங்கள் மேடைக்கு அழைந்து வந்துள்ள விசய் தொலைக்காட்சி இது வரைக்கும் நாட்டுப்புறப்பாடல்களை வெகுசன மக்களிடம் அதன் இயல்புகளுடன் கொண்டு சென்ற விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளை அழைக்கவே இல்லை என்பது ஆச்சரியம் இல்லை. அதன் செட்டப்பே அப்படித் தான். கர்நாடக சங்கீதம் இல்லையென்றால் சினிமாப் பாட்டு என்பது அங்குள்ள யதார்த்தம். இன்றைக்கு விசய் தொலைக்காட்சி நாட்டுப்புறப் பாடல்களை உச்ச்சிமோர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் இந்த இரு தம்பதிகள் - செந்தில் -ராசலட்சுமி. 



விசய் தொலைக்காட்சி என்றில்லை. அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கூடக் கர்நாடக இசைக் கச்சேரி நடக்கும். இல்லையென்றால் சினிமா மெல்லிசைக் கச்சேரி நடக்கும். இது தான் இங்குள்ள செட்டப். தமிழர்களின் ரசனை இவை மட்டும் தான் எனத் திரும்பத் திரும்ப ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இன்றைக்கு நான் பார்த்த செந்தில் பாடிய கருப்பசாமி பாடல் அதிரடியில் ஆடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கிராமியப் பாடலை ஆவேசுத்துடன், அதன் இயல்பு குறையாமல் தொலைக்காட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார் செந்தில். பிரமிப்புடன் இந்தக் கலைஞனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்குச் சற்றும் சளைக்காமல் கிராமிய அழகியலை அற்புதமாகக் தன் பாடலிலும், இயல்புகளிலும் கொண்டு வந்து பாடிக்கொண்டிருக்கிறார் அவரது மனைவி ராசலட்சுமி. இவர்கள் இருவரின் கண்களிலும், பாடல்களிலும் தெரியும் காதல் ஒரு தனி ரசனைக்குரியது. இந்த இருவரின் பாடல்களில் தமிழ் நாட்டுப்புறப் பாடல் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதன் அறிகுறிகள் தென்படுகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களும், நட்டுப்புறக்கலைகளும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் பள்ளிக் காலங்களில் விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளின் பாடல்களின் ரசிகன். நெய்வேலியில் ஒரு முறை அவர்களது நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அவர்களின் பாடல்களில் இருந்த கிராமத்து மணம் வேறு பலரின் பாடல்களில் இருந்ததில்லை. அதற்குப் பிறகு புசுபவனம் குப்புசாமி உள்ளிட்ட எத்தனையோ கலைஞர்கள் வந்தாலும், விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளின் இடத்தை யாருமே நிரப்பவில்லை. புசுபவனம் குப்புசாமி வந்த வேகத்திலேயே அதன் சுவடு தெரியாமால் மங்கி விட்டார் என்பது தான் அவரைப் பற்றிய என்னுடய கருத்து.

அதனால் தான் இன்றைக்கும் அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த சினிமா கலக்காத தமிழ் நாட்டுப்புறப்பாடல்களைத் தேடினால் மிகக் குறைவாகவே நாட்டுப்புறப் பாடல்கள் கிடைக்கும். இன்றைக்கும் விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் பாடலைகளைக் தவிர அதிக அளவில் பிரபலமான பாடல்கள் அமையவில்லை என்பது ஏமாற்றமே. இதற்குக் காரணம் கிராமிய இசைக் கலைஞர்களின் பற்றாக்குறை அல்ல. பெரும்பாலான கிராமிய இசைக் கலைஞர்களால் கிராமிய சூழலை விட்டு வெளியே வர முடியாத பொருளாதார, ஊடக சூழ்நிலைகளும் ஒரு காரணம். பெரும்பாலும் சில சிடிக்களை வெளியிட்டு அது பெரும் பொருளாதாரப் பயன் தராத சூழலில் அந்தப் பாடகர்கள் அப்படியே காணாமல் போய் விடுகிறார்கள். தமிழ்நாட்டில் பயணம் செய்யும் பொழுது சில நேரங்களில் பயண வழி உணவகங்களில் கேட்கு சில பாடல்களின் சிடிக்களை வாங்கியிருக்கிறேன். அந்தச் சிடிக்களோடு அவர்களின் பயணமும் முடிந்து விடுவது தான் பிரச்சனையாக உள்ளது.

செந்தில் - ராசலட்சுமி தம்பதிகள் கூட விசய் தொலைக்காட்சிக்கு வந்திருக்காவிட்டால் நாம் அவர்களைக் கண்டுகொள்ள வாய்ப்பு இருந்திருக்காது. அந்த வகையில் விசய் தொலைக்காட்சிக்கு நன்றி…

விசயலட்சுமி நவநீதகிருட்டிணன் தம்பதிகளுக்குப் பிறகு தமிழக நாட்டுப்புற இசைக்குக் கிடைத்த மிக முக்கியமான பாடகர்கள் செந்தில் - ராசலட்சுமி தம்பதிகள். இளம் வயதில் இந்தப் புகழை அடைந்திருக்கிற அவர்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இந்தக் கலைஞர்களை அழைத்துத் தமிழ் நாட்டுப்புறப்பாடலை உலகெங்கும் ஒலிக்கச் செய்வார்கள். அவர்களும் புதிய பாடல்களை நிறையக் கொண்டு வர வேண்டும்…


Leia Mais…