Wednesday, October 06, 2004

ஏற்றங்களும், இறக்கங்களும்

வலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும், இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி, துளசி, கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி. இத்தகைய வாழ்த்துக்கள் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறது.

சூப்பர் ஸ்டார் "அருணாச்சலம்" போன்றவர்களுக்குத் தான் பணத்தை செலவழிப்பது கஷ்டமான ஒன்று. ஆனால் நம்மைப் போன்ற அற்ப உயிர்களுக்கு அது மிக சுலபம். மாத சம்பளம் மாத நடுவிலேயே காணாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போடுவதும், திடீர் என வரும் செலவுகளால் மண்டையை உடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சம்பாதிப்பதை கட்டிக் காப்பது மிகவும் கடினம். அதனால் தான் நம்மவர்கள் வங்கிகளிலும், அரசாங்க சிறுசேமிப்புகளிலும் பாதுகாப்பாக பணத்தை சேர்த்து விடுகின்றனர். அல்லது அதிக "வட்டி" ஆசையில் நிதி நிறுவனங்களில் கொடுத்து பின்னர் பனகல் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

வங்கிகளை விட அதிக லாபம் தரக்கூடிய, அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு செயல் படுகிற பங்குச் சந்தையை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை ?

ஒரு சின்ன கணக்கு போடுவோம்

ரூ5000க்கு, வங்கிகளின் வைப்பு நிதியில், ஒரு மாத வட்டி முப்பது ரூபாய்க்கும் குறைவாகத் தான் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளை உதாரணமாக எடுத்து கொள்வோம்

கடந்த வாரம் இந்த பங்குகளின் விலை - ரூ580 என்ற அளவில் இருந்தது. இன்று அதன் விலை – 630 க்கு மேல்.

9 பங்குகளை கடந்த வாரம் வாங்கி இந்த வாரம் விற்றிருந்தால்
வாங்கும் விலை - 9x580 = 5220
விற்கும் விலை - 9x630 = 5670

பங்குத் தரகு, புதியதாக ஐயா சிதம்பரம் அவர்களின் புண்ணியத்தால் வந்துள்ள பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை கழித்து நிகர லாபமாக வரும் தொகை ரூ425க்கும் மேல்.

இது வங்கிகளின் வைப்பு நிதியைப் போல ஒரே நிலையாக இல்லாமல் ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும்
இருக்கும். ஆனால் வங்கிகளை விட அதிக அளவில் லாபம் தரும்.

பங்குச் சந்தையின் இந்த ஏற்ற இறக்கம் தான் பலரின் அச்சத்திற்கு காரணம். இது பங்குச் சந்தையின் இயல்பான தன்மை (Speculation). தக்காளி, வெங்காய விலைப் போலத் தான். ஆனால் நாம் தேர்வு செய்யும் பங்குகளைப் பொருத்து தான் நம்முடைய லாபம் அமையும். நல்ல நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிய வாய்ப்பு இல்லை. அதைப் போல குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீடு இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

சரி...இப்பொழுது பங்குச் சந்தை எப்படி உள்ளது ? இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது. பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்க தொடங்கியதில் பங்குகளின் விலையில் நேற்று சரிவு ஏற்ப்பட்டது. ரிலயன்ஸ், இன்போசிஸ், சத்யம் பங்குகள் சரிவடைந்தன. நேற்று வரை முன்னேறிக் கொண்டிருந்த விப்ரோ இன்று சற்று சரிந்துள்ளது

எங்கே கிளம்பிட்டீங்க பங்குகள் வாங்கவா ? கொஞ்சம் இருங்க...
பங்குச் சந்தையில் புதியதாக பங்குகளை வாங்க இது உகந்த நேரம் இல்லை. பங்குச் சந்தையை நம் கவனத்தில் இருந்து நகர்த்தாமல் காத்திருப்போம்.

10 மறுமொழிகள்:

Badri Seshadri said...

கிறிஸ்டோபர்: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேரடியாக - இணையம் மூலம் - வர்த்தகம் செய்ய நீங்கள் இந்தியாவில் அல்லது வளைகுடா நாடுகளில் (GCC - அமீரகம், சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார்) வசிக்க வேண்டும்.

தைவான், அமெரிக்கா, ஹாங் காங் - அல்லது வேறெந்த நாடாக இருந்தாலும் நேரடி வர்த்தகத்துக்கு அனுமதி கிடையாது. அதற்கு பார்டிசிபேட்டரி நோட்ஸ் (Participatory Notes - PN) என்று ஒரு வழியில், பதிவு பெற்ற foreign institutional investors வழியாக மட்டுமே இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும்.

இது அயல்நாடுகளில் வாழும் மத்தியதர இந்தியர்களுக்கு சற்றும் உபயோகமில்லாத ஒரு முடிவு. ஏகப்பட்ட துட்டு கையில் இருந்தால் PN வழியில் முதலீடு செய்யலாம். இல்லாவிட்டால் FIIக்கள் யாரும் உங்களைச் சீந்தக்கூட மாட்டார்கள்.

வரும் காலங்களின் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்.

10:59 AM, October 06, 2004
அன்பு said...

சசி/பத்ரி,

1) அப்போ dmate (அதுமாதிரி ஏதோ 1), ICICI Direct மூலம்லாம் நாங்க IPO வாங்க முடியாதா? நண்பர் ஒருவர் TCS IPO வாங்கினாரே (ஆனால், அப்போது அவங்க மனைவி ஊரிலிருந்தார்கள், அவர்கள் மூலம் கணக்கு ஆரம்பித்து வாங்கினார் என்று நினைக்கிறேன்.)

12:02 PM, October 06, 2004
Badri Seshadri said...

மிக நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் - அவருடன் சேர்ந்து டிமாட் (De-mat) கணக்கு தொடங்கலாம். (ஒரு வங்கிக் கணக்கும் கூட). அதன்பின் நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போதும் வங்கிக் கணக்கு வழியாக வேண்டிய பணத்தை (icicidirect, sharekhan, kotakstreet, 5paisa etc. etc.) இணையம் மூலம் பங்குகளில் போட்டு எடுக்கலாம்.

ஆனால் இந்தியாவில் வசிக்கும் உங்கள் உறவினர் (மனைவியோ, பெற்றோரோ, சகோதரர்களோ...) தான் முதன்மைக் கணக்கு வைத்துள்ளவராகக் கருதப்படுவார். அதனால் ஒன்றும் பிரச்னையில்லையென்றால்... அவர்களை நம்பமுடியும் என்றால்... அது ஒரு வழி. அதிலும் டிமேட் கணக்கில் இரண்டாவது ஆசாமி NRIஆக இருக்கலாமா என்பதைக் கேட்டுக் கொள்ளுதல் நல்லது.

மற்றொரு வழி: கணக்கெல்லாம் இந்தியாவில் வசிப்பவர் பெயரில். ஆன்லைன் ஷேர் டிரேடிங் கணக்கை இயக்கக் கூடிய கடவுச்சொல் உங்கள் கையில். மற்றொருவர் பெயரில் ஷேர் வியாபாரத்தில் ஈடுபடுவது நீங்கள். இதில் பல "பினாமி" தொல்லைகள் உண்டு. உங்கள் பணத்தை மற்றொருவருக்கு என்ன விதத்தில் மாற்றுகிறீர்கள்? தானமாகவா (gift?), கடனாகவா (loan?) இல்லை சம்பளமாகவா? சிலவற்றுக்கு வரி கிடையாது, மற்றதற்கு வரி உண்டு. கடனாகக் கொடுத்தால் மட்டும்தான் திரும்ப எடுத்துக் கொள்ள முடியும் (வட்டியுடன்)...

நடைமுறையில் இதெல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு பலர் நடந்து கொள்ளலாம். ஆனால் குழப்பங்கள் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

9:04 PM, October 06, 2004
அன்பு said...

மிக மிக நன்றி பத்ரி உங்கள் தகவலுக்கு. (மொத்தத்தில் அவ்வளவு ஈசியா பணத்தைப் பெருக்க, என்ன கூட்ட கூட முடியாது போலிருக்கு). இதுபோன்ற நிறைய சந்தேகம் இருக்குது. அதான் சசிய தொல்லை பண்றேன்.
பத்ரி இதுபோன்ற விபரங்கள் வெளிவர இருக்கும் நூலில் இருக்கிறதா? அதை எதிர்பார்த்திருக்கிறேன். அதுபோக மேலெழுந்தவாரியாக விஷயம் சொல்லாமல், அது எங்கு கிடைக்கும், எப்படி/யாரால் முடியும் போன்ற சட்டதிட்டங்கள் அல்லது குறைந்தபட்சம் மேல்விவரங்களுக்கு எங்கே குறிப்பாக ஆன்லைனில் அணுகலாம் - இப்படியெல்லாம் இருந்தால், அது வரப்பிரசாதம்.

என்னங்க சசி,
நீங்க NTPC வருது வாங்கிப்போடுங்கன்னு எனக்குமட்டும் சொன்னீங்களா இல்ல உலக்த்துக்காகவே... இப்படி பண்ணிட்டாங்களே... TCS IPO-வும் வாங்கமுடியாமப் போச்சு.

http://in.rediff.com/money/2004/oct/07ntpc1.htm

4:40 AM, October 07, 2004
தமிழ் சசி | Tamil SASI said...

அன்பு,

800 பங்குகளுக்கு விண்ணப்பித்தால் 200 கிடைக்குமாம் ? விண்ணப்பித்து தான் பாருங்களேன்

8:24 AM, October 07, 2004
தமிழ் சசி | Tamil SASI said...

வெளிநாட்டில் இருந்து கொண்டு முதலீடு செய்ய மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள்

http://indiabulls.com/new_layout/Invest_India_Home.htm

8:31 AM, October 07, 2004
அன்பு said...

சுட்டிக்கு நன்றி சசி. குறைந்தபட்சம் பங்குவாங்க வகைசெய்யும் ஏற்பாடாவது முதலில் செய்கிறேன். முடிந்தால் கண்டிப்பாக NTPC-யில் முதலீடு செய்கிறேன். 1995ல் நான் வாங்கிய பிர்லா அட்வாண்டேஜ் ஒப்பென் எண்டெட் 'பரஸ்பர நிதி' ஆரம்ப... 10ரூபாயில் 200 யூனிட் வாங்கியது அதையே மறந்திருக்கும்போது சிலமாதங்களுக்கு முன்தான் தெரியவந்தது - நான் டெல்லியிலிருந்த பழையவீட்டு விலாசத்துக்கு டிவிடெண்ட் காசோலை அனுப்பி நான்பெறவில்லை என்பது. இப்போது அதுதொடர்பாக அவர்களைத் தொடர்பு கொண்டு வருகிறேன். இப்பொது அதனுடைய மதிப்பு 46 ரூபாய். அது தினமும் ஏறுவது/இறங்குவதை வைத்து பங்குச் சந்தையின் நிலவரத்தை தீர்மானித்துக்கொள்கிறேன் - பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது.

11:38 AM, October 07, 2004
அன்பு said...

நீங்க குடுத்த http://indiabulls.com/new_layout/Invest_India_Home.htm
விலாசத்தில இருக்கிறதெல்லாம் சந்தோசமா படிச்சு, பாரமெல்லாம் இறக்கிட்டு கீழே பார்த்தா:

Note: This service is presently being offered to Non-Resident Indians (NRI) residing in Gulf Co-operation Council (GCC) include Arab Emirates, Saudi Arabia, Bahrain, Kuwait, Oman, Jordan, Iran, Iraq, Syria, Lebanon, Egypt, Sudan and Qatar. This service is not available to foreign residents including Non-Resident Indians ("NRI") in other jurisdictions.

பத்ரி சொன்ன கதையை எழுதியிருக்கிறாங்க.

பத்ரி சார்,
அதென்ன GCC - நாடுகளுக்கு மட்டும் சிறப்பு, அங்கிருந்து யாரும் முதலீடு பண்ணமாட்டங்கன்ன முடிவு பண்ணிட்டாங்களா...

12:24 PM, October 07, 2004
Badri Seshadri said...

அன்பு: என்.ஆர்.ஐக்கள் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எளிதான விஷயமல்ல. பங்குகள் வாங்கும்போது, அதை விற்றுக் கிடைக்கும் முதல் பெருக்கத்தை (Capital Gains) வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வீர்களா, இல்லை இந்தியாவிலேயே விட்டுவைப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும். NRE, NRO எனப்படும் வங்கிக் கணக்குகள் தேவை... இதைப் பற்றி விரிவாக, பின்னர், எழுதுகிறேன். ரிசர்வ் வங்கி இந்தக் குழப்பங்களையெல்லாம் எளிதாகக் களையலாம். இன்றைய தேதியில் இந்தியாவின் கையில் அன்னியச் செலாவணை எக்கச்சக்கமாக உள்ளது. இன்னமும் பழையபடி இந்தியர்களோ, என்.ஆர்.ஐயோ ரூபாயை டாலராக மாற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவானோ என்று ரிசர்வ் வங்கி பயப்பட வேண்டியதில்லை.

அடுத்ததாக, ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை சதவிகிதம் பங்குகள் அன்னியர், என்.ஆர்.ஐக்கள் ஆகியோர் கையில் இருக்கலாம் என்பதற்கு ஒரு மேல்மட்டம் உள்ளது. இது நிறுவனத்துக்கு நிறுவனம், செக்டாருக்கு செக்டார் மாறுபடும். எந்தெந்த நிறுவனத்தில் எத்தனை சதவிகிதம் வரை வெளிநாட்டவர் (என்.ஆர்.ஐயும் சேர்த்து) முதலீடு செய்யலாம், அதில் எத்தனை சதவிகிதம் இதுவரை போணியாகியுள்ளது என்பதை ரிசர்வ் வங்கி தன் இணையத்தளத்தில் வாராவாரம் வெளியிடும்.

இதனால் என்.ஆர்.ஐ அல்லது வெளிநாட்டவரின் புரோக்கர்கள் ஜாக்க்கிரதையாகவே பங்கு முதலீட்டில் ஈடுபட வேண்டியிருக்கும். தவறாக வாங்கப்போக ரிசர்வ் வங்கி அந்த டிரான்சாக்ஷனைத் தடை செய்ய நேரிடலாம். பங்குகள் உங்கள் பேரில் பதிவாகாது.


அது போகட்டும். GCC ஆள்களை மட்டும் எப்படி இந்தியப் பங்குச்சந்தையில் சுலபமாக முதலீடு செய்ய விடுகிறார்கள் என்பதுதானே இரண்டாவது கேள்வி? அட, பாவம், போனால் போகட்டுமே?

ஜிசிசி நாடுகளில் உள்ள மக்கள் பணத்தை வெளியே தள்ளிக்கொண்டு போவதில்லை. மேலும் அந்த நாடுகளில் இவர்களுக்கு வீடு வாங்கவோ, சொத்துக்களைச் சேர்க்கவோ உரிமையில்லை. அங்கு நிரந்தரக் குடியுரிமையும் கிடைத்து விடப் போவதில்லை. அதனால் ஜிசிசியில் இருந்தாலும் அவர்கள் இந்தியா வாழ் மக்களைப் போலத்தானே?

6:53 AM, October 08, 2004
அன்பு said...

மிகவும் நன்றி பத்ரி, தொடர்ந்து விளக்கமாக எழுதுங்கள். நிறைய தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது.

3:56 AM, October 09, 2004