இன்றைய சூடான பங்கு

இன்று NTPC (National Thermal Power Corporation) நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது (Initial Public Offer - இதன் சரியான தமிழாக்கம் தெரியவில்லை. ஆனால் "ஆரம்ப பொது விலைக்குறிப்பீடு" அந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும். பங்குச் சந்தையின் பல சொற்களை தமிழ்ப் படுத்தலாமா என்று ஒரு யோசனை. ஏற்கனவே அத்தகைய சொற்கள் இருந்தால் சொல்லுங்களேன். பத்ரி கூறிய "பரஸ்பர நிதி" போல).

அது என்ன IPO ?. ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகள் வெளியிடும் பொழுது ஒரு விலை நிர்ணயித்து, தனது பங்குகளை பொது விற்பனைக்கு வழங்கும். இது முதன்மைச் சந்தை எனப்படுகிறது. இதில் விற்ற பின் தான் இரண்டாம் சந்தையான பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் (Listing).

சரி...விஷயத்திற்கு வருவோம். NTPC நிறுவன பங்குகள் இன்று முதல் பொது விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்கலாமா வேண்டாமா?

இதைப் பற்றிய ஒரு சின்ன ஆய்வு

மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான NTPC நாட்டின் மின் உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளது. அது மட்டுமின்றி தற்பொழுது நீர்மின் நிலையங்களை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது. இது இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தினால் இந்த நிறுவனத்தின் வருவாய் தேய்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இவர்களின் இலவச மின்சார அறிவிப்புகள் இந்த நிறுவனத்தின் லாபத்தை கடுமையாக பாதிக்கும். அதைப் போல இந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநில மின்வாரியங்கள் அதற்கான பணத்தை செலுத்த மறந்து விடுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனை இப்பொழுது ஒரளவிற்கு தீர்க்கப்பட்டு விட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான பாக்கி பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 85கோடி பங்குகள் 52 முதல் 62 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பங்குகள் கிடைக்க கூடிய சாத்தியக் குறுகள் குறைவு என்பதால் மும்மை கள்ளச் சந்தையில் 12 ரூபாய் அதிகம் வைத்து விற்கபடுகிறதாம். பங்கு விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனைக்கு உள்ள பங்குகளை விட இரண்டு மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாம்.

சரி போகட்டும்... நாம் உரியமுறையில் விண்ணப்பிப்போம். கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் குடி முழ்க போவதில்லை.

இன்று பங்குச் சந்தையின் நிலை என்ன ?. B.S.E குறியீடு 70 புள்ளிகள் முன்னேறி 5784 க்கும், N.S.E. 20 புள்ளிகள் உயர்ந்து 1815 க்கும் வந்துள்ளது. இந்த அளவில் இருந்து 6000 நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகிறது. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குங்கள். சற்று கவனமாக தெரிவு செய்யுங்கள்.