Saturday, October 09, 2004

பணப் பெருக்கம்

தீபாவளிக்கு ஒரு உடை வாங்க வேண்டும் என்றதும் எதையெல்லாம் யோசிப்போம்

எவ்வளவு விலை ?
துணி எப்படி உள்ளது ?
விலைக்கு ஏற்ற துணி தானா ?
துவைத்தால் சுருங்கிப் போகுமா ?
நிறம் மங்கிப் போகுமா ?
நம்முடைய நிறத்திற்கு ஏற்றதாக இருக்குமா ?

இன்னும் யோசித்து, கடையிலுள்ள உடைகளை அலசி ஆராய்ந்து, கடை சிப்பந்தியை கடுப்பேற்றி, எல்லா வகையிலும் ஏற்றதாக சில துணிகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு துணியை இறுதியில் தேர்ந்தெடுப்பதற்குள் தீபாவளி நெரிசலில் வேர்த்து விடுகிறது.

ஆனால் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கும் பொழுது இந்த அளவுக்கு நாம் யோசிப்பதே இல்லை. பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு விடுகிறோம். நாமாக யோசித்து வாங்கினாலும் விலைக் குறைந்த பங்குகளாக நிறைய வாங்கி அது விலை ஏறும் பொழுது நிறைய பணம் பார்க்கலாம் என்று பேராசைப் படுகிறோம்.

உண்மையில் நடப்பது என்ன ?

விலைக் குறைந்த பங்குகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது மிகச் சிறிய நிறுவனங்களாக இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறுவதற்கான சாத்தியக் குறுகள் இல்லை. பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலேயே இருக்கும். இல்லாவிட்டால் சரியும். இதனால் போட்ட முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பணம் காணாமல் கூட போகும்.

அதற்காக குறைந்த விலைப் பங்குகள் எல்லவற்றையும் விட்டு விலக வேண்டும் என்பது அர்த்தமாகாது. குறைந்த விலையோ அதிக விலையோ நல்ல நிறுவன பங்குகளாகத் தான் வாங்க வேண்டும்.

எப்படி அந்த நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு கொள்வது ?

ஒரு நிறுவன பங்குகள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
தற்பொழுது பங்குச் சந்தையின் நிலை என்ன ?
குறுகிய கால முதலீடா இல்லை நீண்ட நாள் முதலீடா ?
நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் காளைச் சந்தையில் எப்படி இருந்தது, கரடிச் சந்தையில் எவ்வளவு சரிந்தது.
அதனுடைய தற்பொழுதய விலை (Valuations) சரியான அளவில் உள்ளதா இல்லை அதிக விலையிலோ, குறைந்த விலையிலோ இருக்கிறதா ?
அந்த நிறுவனத்தின் எதிர்கால் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?

என்று மண்டையை உடைத்து ஆராய வேண்டும். செலவழிக்க கூடிய துணிகளுக்கே யோசிக்கும் பொழுது, முதலீடு செய்யும் பணத்திற்கு யோசிப்பதில் பாதகம் இல்லை.

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் நுழைவது மிகவும் அவசியம். பங்குச் சந்தை குறியீடு சரியும் பொழுது நாம் அஞ்சி ஓடி விடுகிறோம் ? விலை அதிகரிக்கும் பொழுது நுழைந்து அதிக விலையில் பங்குகளை வாங்கி நஷ்டப் படுகிறோம். மாறாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலை இருக்கும் பொழுது விற்க வேண்டும்.

சரி மறுபடியும் ஒரு சின்ன கணக்கு

இந்த முறை விலை குறைந்த ஒரு பங்கு பற்றியது

SAIL (Steel Authority of India) - சென்ற மாதம் இந்த நிறுவன பங்குகளின் விலை - ரூ39 என்ற அளவில் இருந்தது.

100 பங்குகளை சென்ற மாதம் வாங்கி இருந்தால்

100 x 39 - 3900

இன்று அதன் விலை - ரூ50

100 x 50 - 5000

இந்த லாபத்தை நாம் பெற்றிட என்ன செய்திருக்க வேண்டும் ?

தினசரிகளில் "Business" என்ற ஒரு பிரிவு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

0 மறுமொழிகள்: