Wednesday, October 13, 2004

அறிக்கைகளும் முதலீடும்

இன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. TCS மற்றும் Hughes நிறுவனங்களில், TCS அறிக்கை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. அதனுடைய நிகர லாபம் 14.1% அதிகரித்து 576.40 கோடி லாபத்தை இந்த காலாண்டில் எட்டியுள்ளது. ஆனால் Hughes நிறுவனத்தின் லாபமோ 3.64% மட்டுமே அதிகரித்துள்ளது.

இன்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளைய வர்த்தகத்தில் TCSன் பங்குகள் உயரக் கூடும். Hughes பங்குகள் சரியக்கூடும்.

பத்ரி பின்னுட்டத்தில் தெரிவித்து இருந்தது போல அறிக்கைகளின் ஏற்றத்தாழ்வுகளால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை (பெரிய இழுப்புகளை சந்தித்து இருந்தாலொழிய). ஆனால் அந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படும். நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த அறிக்கைகள் சில செய்திகளை தெரிவிக்கும்.

இன்போசிஸ் பங்குகள் இப்பொழுது நல்ல லாபகரமான ஒரு முதலீடாக இருக்குமென பல பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு முதலீடாக இருக்கும். இதன் விலை 1800 - 1850க்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.
தற்பொழுது இதன் விலை - 1711. மூன்றாம் காலாண்டில் தன்னுடைய வருவாய் ரூ1,869 கோடி முதல் ரூ1,882 கோடி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் (இது கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் பொழுது 50% அதிகம்) அதன் பங்கு விலையில் ஏற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.

அதைப் போல TCS பங்குகளும் நல்ல லாபகரமான முதலீடாக இருக்கும்.

எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே offshoring மூலமாக நல்ல லாபம் அடைந்துள்ளனர். இவர்கள் பிற்காலத்தில் சந்திக்க கூடிய சவால் - சில பெரிய அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக தங்கள் கிளைகளை இங்கு துவக்க ஆரம்பித்துள்ளனர். Goldmansachs, Morgan Stanley போன்ற நிறுவனங்கள் இப்பொழுது தங்களுடைய மென்பொருள் நிறுவனங்களை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்கின்றனர். அது வெற்றியடையும் பட்சத்தில் பல நிறுவனங்களும் இதையே பின்பற்றக்கூடும். இது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும்.

இது உடனடியாக நடக்க கூடிய ஒன்றல்ல என்பது இந்த நிறுவனங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

1 மறுமொழிகள்:

அன்பு said...

அன்பு சசி,

அந்த BSE, Nikkei Index-naa என்ன? அந்த குறியீடு குறைவது/கூடுவது எப்படி கணிக்கப்படுகிறது?

10:57 AM, October 14, 2004