Thursday, October 28, 2004

சென்னையில் ஒரு மழைக் காலம்

மேட்ராசுல மழை வந்தாலே பேஜார் தான். அது இல்லாங்காட்டியும் மேட்ரோ லாரிக்கு காவ காத்து, அதுவும் வராம, மினரல் வாட்டர் வாங்கி கஜானா காலியாகிடும். இது எப்பவும் உள்ள மேட்டரு தான். அத்த உடுங்க.
நாம சொல்ல வர்ற மேட்டர். மய (மழை) பெய்ஞ்சா ரோட்டுல நடக்கறத பத்தி தான்.

அப்படித் தான் ஒரு நாளு, ஆபிசுல மீட்டிங்னு ஒரு வெள்ள கலர் சட்டையை உஜாலா போட்டு வெளுத்து போட்டுக்கிட்டு ஆபிசுக்கு கிளம்பறேன். நான் கிளம்பற வரைக்கும் சுள்ளுன்னு அடிச்சுக்கிட்டு இருந்த சூரியன், நான் வெளிய வந்த உடனே எஸ்கேப் ஆயிட்டான். மய கொட்ட ஆரம்பிச்சுடுச்சி. சரி ஆனது ஆவட்டும்னு ஒரு குடையை பிடிச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டேன். ஆபிசு மீட்டிங் வேற மனசுல கபடி ஆட ஆரம்பிச்சுட்டுது. நல்ல மலை (மழை). நம்ம ஊருலத் தான் மய பெய்ஞ்சா காவேரி ஆறு ஓடுமே. அப்படி ஒரு ஆறு நான் போற வழியில ஓட ஆரம்பிச்சிட்டுது. கறுப்பு காவேரி. சென்னை ஸ்பேஷல் காவேரி.

என்னாடா இது வெள்ளை சட்டை வேற தெரியாத்தனமா போட்டுக்கிட்டோம். எவனாவது அர்ச்சனை பண்ணிட போறானேன்னு நினைச்சுண்டே இருக்கேன், ஒரு ஆட்டோக்காரன் சள்ளுன்னு தண்ணிய பீச்சு அடிக்கறான். இது மெயின் ரோடு கூட இல்ல. எதிர்தாப்ல ஆள் வர்றாங்கன்னு தெரிஞ்சே பண்றாங்கன்னு எனக்கு தோணிச்சு. உஜாலாவுல மாஞ்சி மாஞ்சி தோவிச்ச சட்டை இப்ப நெய்வேலி நிலக்கரி கலர்ல மாறினா கடுப்பு வருமா வராதா. நானும் கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.

"புறம்போக்கு பாத்து போடா" அப்படின்னு.

வேகமா போன ஆட்டோ சல்லுன்னு திரும்பி வந்துடுச்சி.

"இன்னா சொன்ன" அப்படின்னு கேட்டான்.

ஏதோ வேகமா போறவன் அப்படியே புடுவான்னு நினைச்சி கத்தினா, இவன் நிறுத்திபுட்டு வரானே. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ. நம்ம தெம்புக்கு இதெல்லாம் தேவையா. பெரிய ஆளுங்க வீட்டுக்கே வரிசையா ஆட்டோ விடுவாங்க. நமக்கு இவன் ஒருத்தன் போதுமே. ஆளு நல்லா நம்ம பொன்னம்பலம் மாதிரி இருந்தான். சரி..நம்ம உடம்புக்கு இதெல்லாம் ஜாஸ்தின்னு முடிவு பண்ணி வடிவேலு கணக்கா பம்மி "ஒண்ணும்மில்லண்ணா..வெள்ளை சட்டை இப்படி ஆச்சேன்னு உணர்ச்சி வசப்பட்டு கத்திபுட்டேன்" அப்படின்னு அவனுக்கு ஒரு கும்புடு போட்டேன். அவனும் கையை சொடுக்கி நம்ம தலீவர் ஸ்டைல்ல ஏதோ சொல்லிட்டு போனான். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போயிடுச்சின்னு சந்தோசத்துல ஆபிசுக்கு போகாம லீவு போட்டுட்டு, மறுநாள் மேனேஜர் சிடுமூஞ்சிக்கிட்ட திட்டு வாங்கனப்ப இந்த மழை மேல பயங்கர வெறுப்பா போயிடுச்சு.

சரி நடந்தா தானே இந்த பிரச்சனை. டு வீலர்ல போயிடலாம்னு முடிவு பண்ணி ஒரு நாள் டு வீலர்ல கிளம்பறேன். லேசா தூறிக் கிட்டு இருந்துச்சு. சரி சீக்கரமா போயிடலாம்னு நினைச்சு கிளம்பிட்டேன். அப்புறம் தான் இந்த பிரச்சனை புரிஞ்சுது. நம்ம ரோட்டுல போற எந்த வண்டிக்கும் mud guard இருக்காதுன்னு எனக்கு தெரியாம போயிடுச்சி. நானும் என் முன்னாடி போற வண்டியை பாலோ பண்ணிக்கிட்டே போறேன். அந்த வண்டியோட பில்லியன்ல மழையில தொப்பலா நனைஞ்சிக்கிட்டே சிக்குன்னு ஒரு பிகர் லேசான காட்டன் சட்டையில, ஜின்ஸ் போட்டுக்கிட்டு இருந்தா, நீங்க பாலோ பண்ணுவிங்களா மாட்டிங்களா. நானும் அத்த தான் செஞ்சேன். அத்தோட ரிசல்ட்டு ஆபிசு போனதுக்கு அப்புறமா தான் தெரிஞ்சது. சட்டையெல்லாம் ஒரு புது டிசைன் போட்டிருக்கு. பிகரப் பாத்து ஜொல்லு விட்டதால அன்னைக்கும் சம்பளம் கட்டு.

நடந்தாலும் பிரச்சனை, டு வீலர்ல போனாலும் டாவு கிழியுது. எதுக்கு வம்பு. கார்ல சொகுசா போயிடலாம்னு முடிவு பண்ணி ஒரு நாள் கார்ல கிளம்பறேன். இந்த கார்ல போறப்ப என்னா பிரச்சனைன்னா. டு வீலர்ல போற பொடிப் பசங்க நேரா நம்ம கார் எதிர்த்தாப்புல வந்து கட் அடிப்பாங்க. அப்புறம் இந்த பாழாப்போன டிராப்பிக்ல ஊர்ந்துக்கிட்டே போறத்துக்குள்ள மண்டை கிழிஞ்சிடும். ஒரே ஆறுதல் என்னான்னா நம்ம "சுச்சியோட" ரொம்ப ஹாட்டான வாய்ஸ்ச கேட்டுக்கிட்டே போவலாம். அப்படி போய்க்கிட்டே இருக்கறப்ப ஒரு தபா என்னா பண்ணிட்டேன், யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்னு சல்லுன்னு ஒரு ரோட்டு ஓடையில வண்டிய உட்டு எடுத்தேன். சல்லுன்னு டு வீலர்ல போன ஒருத்தர் மேல அபிசேகம். ரியர் மிரர்ல பாத்து சந்தோசப் பட்டுக்கிட்டு சுச்சியின் ஹட் வாய்ச கேட்டுக்கிட்டு இருக்கேன், சட்ன்னு ரோட்ட மறிச்சுக்கிட்டு ஒரு பொன்னம்பலம் நிக்கறான். யோசிச்சு பாத்தா நம்ம ரியர் மிரர் அபிசேக பார்ட்டி.

கீழே இறங்குடாங்குறான்.

"என்னா கார்ல வந்தா நீ பெரிய ..." என பேச, நாம மறுபடியும் வடிவேலு கணக்குல பம்ம கடைசில ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சி, மூட் அவுட்டாகி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டேன்.

இப்பல்லாம் மழை பெய்ஞ்சா ஒரு பாட்டிலோட வீட்டுல செட்டில் ஆயிடுறேன். வேற வழி...

மழைக் காலத்துல நீங்க என்னா பண்றீங்க...

2 மறுமொழிகள்:

அன்பு said...

இதென்ன... சசியின் மறுபக்கமா!? சிரிப்பா இருந்துச்சு. விவேக் ஒரு படத்துல வருவாரே - தண்ணில கண்டம்னு அதேதான், சூப்பர்...

2:35 AM, October 29, 2004
Raja said...

உங்களுக்கு மட்டும் இப்படி நடக்குல தலைவா. நிறைய பேருக்கு இப்படி சென்னையில தண்ணில கண்டம் தான்.
பஸ்ஸையும் இந்த லிஸ்ட்ல் சேத்துக்கங ராசா.நான் ப்ஸ்ஸுல போகும்போது பிகர பாத்துக்கிட்டே நின்னுக்கிட்டு இருந்தேன்.இறங்கும் போது பார்த்தா பேண்ட் பூரா சேறு. எப்படினு பார்த்தா பஸ்ஸு ஓட்டை வழியா சேறு பேண்ட்ட நினைச்சிருக்கு.

8:10 AM, October 29, 2004