Friday, December 10, 2004

ஆந்திரா திருமணங்களும், வரதட்சணையும்

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வரதட்சணை மட்டும் சுமார் 50 இலட்சம் கிடைத்திருக்கிறதாம். ஆந்திரா திருமணங்களில் வரதட்சணை படுத்தும் பாடு, படு மோசம். அந்திராவில் பெண் பெற்றவர்கள் பாடு படு திண்டாட்டம் தான் போலும். என்னுடைய பல ஆந்திரா நண்பர்கள் வரதட்சணை என்று பல லகரங்களைப் பெற்ற கதை எனக்குத் தெரியும். இதில் வினோதம் என்னவென்றால், எனக்கு வரதட்சணை அதிகமாக வேண்டும், அதனால் தான் இந்த மென்பொருள் துறைக்கே வந்துள்ளேன் என பலர் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஓவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றாற்ப் போல வரதட்சணை மாறுபடும். அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றால் தனி ரேட், இந்தியாவில் பெரிய கம்பெனியில் இருந்தால் தனி ரேட், சின்ன கம்பெனிக்கு ஒரு ரேட் என்று விலைப் போய் கொண்டிருக்கிறார்கள்.

வரதட்சணை என்றாலே என்னுடைய நிறுவனத்தில் வேலைச் செய்யும் அந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் ஞாபகம் கட்டாயம் வந்துப் போகும். நண்பருக்கு திருமணம் நிச்சயம் ஆகும் சூழ்நிலை. பெண் பார்த்து எல்லாம் பேசி முடிவாகி விட்டது. 20 இலட்சம் வரதட்சணை என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவருக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்கா சென்றால் நிறைய வரதட்சணை கிடைக்கும் என்ற ஆசையில் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் நேரம் அவருடைய ப்ராஜக்ட் சொதப்பலாகி அமெரிக்கா வாய்ப்பு பறிபோய் விட்டது. இன்னமும் சென்னையில் தான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். கல்யாணமும் ஆன பாடில்லை. வயதும் 30ஐ தாண்டி கடந்து கொண்டே இருக்கிறது. தனது அந்தஸ்துக்கு ஏற்ற வரதட்சணையை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அவர் பெரும் சம்பளத்திற்கு இந்த அலைச்சல் தேவை இல்லை தான். ஆனால் குறைவாக வரதட்சணை பெற்றால் தன் உறவினர்கள் மத்தியில் தன் அந்தஸ்து குறைந்து விடும் என்று அஞ்சுகிறார். கீழ்மட்டத்தில் வரதட்சணை எந்தளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் என் அலுவலகத்தைப் பொறுத்தமட்டில் மேல் சாதியினராக கருதப்படும் ரெட்டி போன்ற சாதிகளில் வரதட்சணை பல இலகரங்கள் தான்.

படித்த நல்ல வேளையில் இருக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களுக்கும் அந்திரா இளைஞர்களுக்கும் இந்த விஷயத்தில் நிறைய வேறுபாடு உள்ளது. எல்லா இடத்திலும் சிலர் வரதட்சணைப் பெற்று கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் பெருவாரியான படித்த இளைஞர்கள் இவ்வாறு இல்லை என்றே நான் கருதுகிறேன். அப்படியே வாங்கினாலும் அதை பெருமைக்குரிய செயலாக நினைக்காமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன், தான் வரதட்சணை வாங்கியதை வெளியே சொல்லாமல் அமுக்கி விடுவார்கள். வரதட்சணை வாங்குவது நம்முடைய தமிழ் சமுதாயத்தில் அவ்வளவு கேவலமான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் ஆந்திராவிலோ எவ்வளவு வரதட்சணை பெறுகிறோமோ அந்தளவுக்கு தம்முடைய அந்தஸ்து உயருவதாகவே கருதுகின்றனர். வெளிப்படையாக தனக்கு இவ்வளவு வரதட்சணை கிடைக்கிறது, வரதட்சணை அதிகமாக பெறுவதற்குத் தான் அமெரிக்கா செல்ல நினைக்கிறேன் என்று தப்பட்டம் அடிக்கின்றனர்.

அந்திரா உணவு போல திருமணமும் காரமான விஷயம் தான். ஆனால் அது பெண் வீட்டாருக்கு மட்டும் தான் காரமாக தெரிகிறது.

3 மறுமொழிகள்:

kirukan said...

இது முற்றிலும் உண்மை. இங்கே (ஜெர்மனி) கூட படித்துக்கொண்டு இருக்கும் ஆந்திர நண்பன் சில நாள்களாகவே தாம் துரம் என்று செலவுசெய்து கொண்டிருந்தான். காரணம் என்னவென்றால் கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். வரதட்சணை பல லட்சங்களாம். என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையை.

9:44 AM, December 10, 2004
Anonymous said...

கல்யாணச் சந்தைகளில் மாப்பிள்ளைகளின் விலை ஏறியது கண்டு இளங்காலையாக விலைபோகக் காத்திருந்தும் என்னால் கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை!

By: மூர்த்தி

7:47 PM, December 10, 2004
இராதாகிருஷ்ணன் said...

அவர்களைப் படித்த முட்டாள்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

2:14 PM, December 11, 2004