Sunday, December 26, 2004

மீட்பு நடவடிக்கை

நில நடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னை மட்டுமில்லாமல், கடலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்தும் பாதிப்புள்ளாகியிருக்கிறது. சென்னையில் 100, கடலூரில் 100 என்று சாவு எண்ணிக்கை அதிகம் உயரும் போல தெரிகிறது. கடலூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்து உயிர்ச் சேதம் விளைவித்துள்ளது.

ஆனால் இது வரை அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. போலீஸ், மீட்புக் குழு என்று எவரும் அதிக எண்ணிக்கையில் காணப்படவில்லை. மக்கள் தங்களுக்குள்ளாகவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பார்வையிட ஆளுங்கட்சி குழு, எதிர்க்கட்சி குழு என்று மீடியா முன்பு காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து தயாநிதி மாறன் வருகிறாராம். வந்து என்ன கிழிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

தற்பொழுது தேவைப்படுவது இந்த பார்வையிடல்கள் அல்ல. Crisis Management என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?

தமிழக கடலோர பகுதி நெடுகிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக இராணுவமும், கடற்படையும் ஈடுபடுத்தி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இன்னமும் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தான் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இனி மேலும் எதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதியில் மருத்துவ வசதிகளும் இல்லை. போலீஸ் எண்ணிக்கையும், மாநில அரசின் குழுவும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் போதாது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மிக அதிகமாக இருப்பதால் மிக துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், ஓரிசா என்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் மற்றும் இலங்கைத் தீவிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விவரம் தெரிய பல நாட்கள் ஆகலாம்.

1 மறுமொழிகள்:

ROSAVASANTH said...

இந்தியாவிற்கு போன் செய்து கேட்டேன் -என் மனைவி, பெற்றோர் எல்லோருமே ஆபத்து தீண்டமுடியாத இடத்தில் இருந்தாலும். கேள்விப்பட்டவரை இந்த மீட்பு பணியில் சுணக்கம், மெத்தனம்தான் மிகவும் எரிச்சலை தருகிறது. எந்தவித தயார் நிலையிலும் இருக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் செய்தி அறிந்தபின் துரிதமாய் செயல்படவேண்ட்டாமா? இயற்க்கையாய் ஏற்படும் அழிவை விட அரசு போன்றவற்றின் மெத்தனத்தால் நிகழ்வதே பல மடங்கு இருக்கிறது. குஜராத்தில் அதுதான் நிகழ்ந்தது. இங்கே ஜப்பானில் குஜாராத் அளவு சக்தி வாய்ந்த பூகம்பம் நிகழ்ந்து வெறும் 25 பேர் சாவு, மிக குறைந்த பட்ச மக்கள் பாதிப்பு. முன்னேறிய நாடு என்ற ஒரே விஷயம் மட்டும்தான் இதற்கு காரணமா, தெரியவில்லை.

3:39 AM, December 26, 2004