Sunday, December 26, 2004

அஞ்சலி

கடந்த காலங்களில் நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தில் நடக்காது என்ற கருத்து ஆய்வாலர்களால் வலுவாகச் சொல்லப்பட்டது. நில நடுக்கமே வராது என்ற நிலையிருக்கும் பொழுது சுனாமிகளை யார் கவனிக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும், தமிழகத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட பொழுதே மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதில் எந்த சேதமும் இல்லாததால் யாரும் அதைப் பற்றி யாரும் அக்கறை காட்ட வில்லை.

இந்தியாவில் ISRO சார்பாக 6 செயற்கோள்கள் இருக்கின்றன. அந்தச் செய்ற்கைக்கோள்களால் ஏன் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை முன் கூட்டியே அறிய முடியவில்லை ? கடலாய்வு குறித்த செயற்கைக்கேள்களும்
இருக்கின்றனவே அவை ஏன் இந்தக் கடல் தொந்தளிப்பை முன் கூட்டிய அறிய முடியவில்லை ? இந்தக் கேள்வி ISRO உயரதிகரியிடம் முன்வைக்கப்பட்டதற்கு அவர் அளித்த விளக்கம் "கடலலைகள் குறித்து ஆராயக் கூடிய எந்த செயற்கைக்கோள்ளையும் நாம் வைத்திருக்கவில்லை. அது போல செயற்கைகோள்கள் பூமியை சில நேரங்களில் தான் ஸ்கேன் செய்யும். அப்படி ஸ்கேன் செய்யும் பொழுது இத்தகைய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை" என்றார்.

இத்தகைய சுனாமிகளை கண்டறியும் திறன் பசிபிக் நாடுகளில் உள்ளது. ஆனால் ஆசியாவில் இல்லை. இருந்திருந்தால் உயிர்ச்சேதங்களை தடுத்திருக்கலாம் என்று BBC தொலைக்காட்சி தெரிவித்தது.

நடந்து போனவைகளைப் பற்றிக் குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. இனி என்ன செய்வது என்று தான் யோசிக்க வேண்டும்.

பல செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கும் நாம் இயற்கையின் பல்வேறு சீற்றங்களையும் கண்டறிய தொழில்நுடபங்களை உருவாக்க வேண்டும். பிற நாடுகளிடம் அத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்தால் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நில நடுக்கம் போன்ற சீற்றங்களை முன் கூட்டியே கண்டறிய முனைய வேண்டும்.

மகாராஜ்டிரா, குஜராத் என்று நிகழ்ந்த கோரங்களுக்கு அடுத்து தமிழகம். இனிமேலும் இத்தகைய கோரங்கள் நிகழக்கூடாது. இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படக் கூடிய சேதங்களை சரியான தற்காப்பு நடவடிக்கை, திட்டமிடுதல் மூலம் குறைக்க முடியும்.

நிருபர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நிலநடுக்கம் பற்றிய அறிவு தமிழக அரசுக்கு தேவைப்படுவதாகவும், பிரதமரிடம் அது குறித்த தகவல்கள் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதிலிருந்தே
இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு எந்தளவுக்கு இது குறித்த அறிவும், இத்தகைய நிலையில் செயலாற்றும்
திறனும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது களையப்பட வேண்டும்.

மாநில அரசும், மய்ய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மய்ய அரசில் உள்ளது போல மாநில அரசிலும் Crisis Management குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலகமும், காவல்துறை தலைவர் அலுவலகமும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் சாலையில் அசம்பாவிதம் நடந்து, பல மணி நேரங்களுக்குப் பிறகு தான் நிவாரணப் பணிகளே முடுக்கி விடப்பட்டுள்ள பொழுது எங்கோ இருக்கும் நாகப்பட்டினத்தின் குக்கிராமங்களில் எப்பொழுது நிவாரணம் முழுஅளவில் போய்ச் சேரும் என்று தெரியவில்லை. மய்ய அரசின் அவசர காலக் குழு இராணுவம், கடற்படை, விமானப்படைகளை முடுக்கி விட்டுள்ளது. நிவாரணங்கள் துரிதமாக நடப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகைய பெரிய சீற்றங்களில் மாநில அரசுகளுக்கு இருக்கும் வசதிகளும், இயந்திரங்களும் மிகக் குறைவு.

மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை. சென்னையில் அப்பலோ போன்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவையைச் செய்ய தொடங்கியிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது.

0 மறுமொழிகள்: