Friday, December 24, 2004

நரசிம்மராவும் பொருளாதாரமும்

இன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலைகளையும், 1991ல் இருந்த சூழ்நிலைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது நரசிம்மராவ் என்ற கிழவரின் சாதனைகள் புரிபடும். அவரது ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்டவை தான் இன்று வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நரசிம்மராவ், பொருளாதாரத்தில் பெரிய மேதை இல்லை என்பது தான் அச்சரியமான ஒன்று. பொருளாதாரத்தில் பெரும் புலமை இல்லாத அவர் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தும் செயல்களை செய்தது நிச்சயம் சாதாரணமானது அன்று.

ராஜிவ் காந்தி போலவோ, வாஜ்பாய் போலவோ கவர்ச்சிகரமான, மக்களை வசிகரிக்கக்கூடிய சக்தி இல்லாத பிரதமர், நமக்கு 1991ல் கிடைத்தது தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். நாட்டின் பொருளாதார தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து, அதனால் கிடைக்கும் புகழை பிறருக்கு தாரைவார்க்கும் மனம் நிச்சயமாக ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்கு இருந்திருக்காது. ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்து அவரே பிரதமராக 1991ல் பதவியேற்றிருந்தாலும், இந்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்க கூடும்.
ஆனால் அவர் தன்னை முன்னிறுத்தி, நிதித் துறையில் உள்ள பல அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரத்தை நாலாபக்கங்களிலும் இருந்து பலரும் ஆட்டிப்படைக்க மந்தகதியில் பொருளாதாரம் சென்றிருக்கும்.

இமேஜ் இல்லாத பிரதமராக நரசிம்மராவ் கிடைத்ததால் தான் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, சுதந்திரம் அளித்து, பொருளாதார சீர்திருத்த புகழை எல்லாம் அவருக்கு தாரைவார்த்து, முடிக்கிடந்த நாட்டின் பொருளாதார கதவுகளை அகல திறக்க முடிந்தது.

அது போலவே அரசியல் சக்திகளிடமிருந்து மன்மோகன் சிங்கை காப்பாற்றி எந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார் என்பது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் நடந்த நிகழ்வுகளை நோக்கும் பொழுது புரிபடும். நிதி அமைச்சர், தனியார் மயமாக்க ஒரு அமைச்சர், அவர்களுக்கு உத்தரவு கொடுக்க சுதேசி கோஷத்துடன் சங்பரிவார் என எல்லாவற்றையும் சமாளித்து வாஜ்பாயால் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில் தான் "இந்தியா ஒளிர்கிறது" என்று கோஷமிடமுடிந்தது.

ஆனால் இமேஜ் இல்லாமல், மக்கள் சக்தியும் இல்லாமல் அரசியல் எதிர்ப்புகளை சமாளித்து அவரது ஆட்சிக்காலத்திலேயே பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்தது அசாத்தியமானது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது, தொழில் தொடங்க இருந்த பல பிரச்சனைகளை களைந்தது என்று அவரின் பொருளாதார சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சொற்ப அந்நிய செலவாணியுடன் இருந்த இந்தியா இன்று 130 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியுடன் சொகுசாக இருக்கிறது. பங்குச் சந்தை 6000ஐ கடந்து 7000ஐ நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவிப்பதாலேயே இது சாத்தியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது நரசிம்மராவின் ஆட்சியில் தான்.

உலகத்தரத்துடன் மிக நவீனமயமாக்கப்பட்ட, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட, நாடெங்கிலும் பல்வேறு மையங்களிலும் எளிதில் பங்கு வர்த்தகம் செய்யக் கூடிய தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்டதும் நரசிம்மராவின் ஆட்சியில் தான்.

நரசிம்மராவ் - பங்குச் சந்தை என்றவுடன் ஹர்ஷத் மேத்தா வின் ஊழல் நினைவுக்கு வரும். சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் போவது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடும். ஏதாவது பிரச்சனை வந்தால் தான் அந்த ஓட்டைகள் வெளிவரும். பின் ஓட்டைகள் அடைக்கப்படும். ஹர்ஷத் மேத்தா ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட புத்திசாலி. அவ்வளவு தான். அப்பொழுது நடக்காமல் போய் இருந்தால் பின் எப்பொழுதாவது நடந்திருக்கும். அந்த ஊழல் மூலம் ஓட்டைகள் அடைக்கப்பட்டு சரியான அளவிலான கண்காணிப்புடன் இன்று பங்குச் சந்தை செயல்படுகிறது.

மற்ற எந்த பிரதமர்களைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மேன்மைக்காக வித்திட்ட பிரதமர் நரசிம்மராவ் தான். இன்னும் 50 வருடத்திற்க்குப் பிறகு இந்தியா பொருளாதார வல்லரசாகும் பொழுது அதற்கு விதை விதைத்தவர் ஒரு எழுபது வயது கிழவர் என்பதை அனைவரும் மறக்காமல் இருந்தால், அவரது அத்மா அமைதி அடையும்.

பத்ரியின் இரங்கல் : பிரகாஷின் Obituary


0 மறுமொழிகள்: