வரலாறு

வரலாறுக்கென்று ஒரு தனி இணையத் தளம் சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் உள்ள பல சிறப்பான இணையத் தளங்களின் பட்டியலில் இந்த இணையத் தளமும் சேருவதற்கான அறிகுறி தெரிகிறது.

கமலக்கண்ணன் எழுதும் கட்டடக்கலை ஆய்வு, இலாவண்யாவின் கல்வெட்டாய்வு பற்றிய தொடர்கள் இது வரை எந்த ஊடகங்களிலும் காணப்படாத புது முயற்சி. கட்டடக்கலைப் பற்றிய விளக்கங்கள், படங்களுடன் அளிக்கப்படும் தகவல்கள் மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால்
கட்டடக்கலைக்கே உரித்தான பல வார்த்தைகளுடன் கட்டுரை அமைந்திருப்பதால் சில இடங்களில் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது. கட்டடக்கலைப் பற்றி அதிகம் அறியாத வாசகர்கள் (என்னைப் போல) வாசிப்பதற்கு ஏற்றவாறு நடையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். அது போலவே கலைக்கோவன் எழுதும் கட்டுரைகள் சிறப்பாக உள்ளது. பல தகவல்களை தெரிந்து
கொள்ள முடிகிறது.

கதைநேரத்தில் கோகுல் எழுதும் இராஜகேசரி வரலாற்றுத் தொடர் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. நடையில் வேகமும், துள்ளலும் இயல்பாக இருக்கிறது. கதாசிரியரின் வர்ணனை திறனுக்கும், சிறப்பான நடைக்கும் எடுத்துக்காட்டாக கதையைப் படிக்கும் பொழுது அக்கால தஞ்சாவூர் கண்களில் விரிவதை செல்லலாம்.

கதையின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரையில் அக் கால மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கப் போவதாக சொல்லப்பட்டாலும், கதையின் போக்கில் அப்படித் தெரியவில்லை. ஒரு சதி அதைச் சுற்றி பின்னப்படும் கதை என்று வழக்கம் போல ஒரு "மசாலா" வரலாற்றுக் கதையாகவே கதையின் போக்கு "இது வரை" தென்படுகிறது.


தற்கால நிகழ்வுகள் கதைக்குள் புகுத்தப்பட்டது போல சில இடங்களில் தெரிகிறது. குறிப்பாக ராஜராஜரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரை காண வருபவர்களை குறிப்பெடுத்துக் கொள்ளுதல் போன்றவை கதை நிகழும் காலத்தின் இருந்திருக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஆனாலும் அந்தக்
கற்பனை சிறப்பாகவே உள்ளது.

கல்கியின் பாதிப்பு கோகுலிடம் தேவைக்கு அதிகமாகவே தென்படுவதை தவிர்த்திருக்கலாம். கல்கியின் பாணியில் எழுதுவதற்கு கூட ஆழ்ந்த புலமை தேவை. என்றாலும், தன்னுடைய தனித்தன்மையை கதையில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் சில குறைகள் தென்பட்டாலும், மிக சிறப்பான ஒரு வரலாற்று கதையாக இது வெளிவரும் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் மிக வலுவாகவே உள்ளது.

கட்டடக்கலை மற்றும் அதைச் சார்ந்த இணையத் தளமாக மட்டுமில்லாமல் வரலாற்றின் பிற நிகழ்வுகளான அக் கால மாபெரும் மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழிசை, அக் கால மக்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும். இத்தகைய தகவல்கள் புத்தகமாக கிடைக்கும் என்றாலும், ஒரு தொடராக வெளிவரும் பொழுது படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

சிறப்பாக எழுதி வரும் வரலாறு இணையத் தள குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்