Wednesday, January 26, 2005

குடியரசு தினம் : காஷ்மீர் : அசாம்

இன்று குடியரசு தினம். இந்தியாவின் வல்லமையை வெளிக்காட்ட இராணுவ அணிவகுப்புஇது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தாலே காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் திகில் தான். இன்று கூட அசாமில் சில லேசான குண்டுவெடிப்புகள் இருந்தன.("லேசான" - குண்டுவெடிப்புகள் சர்வசாதாரணமாய் போய் விட்டப் பிறகு லேசான குண்டுவெடிப்பு என்றால் நிம்மதி ). மற்றொரு நிகழ்வாக அசாமில் இராணுவம் சுட்டு 8 பேர் இறந்து விட்டார்கள். இவர்கள் பொதுமக்கள் என்று ஒரு செய்தியும், தீவிரவாதிகள் என்று இராணுவத்தினரும் சொல்கின்றனர். இராணுவம் வடகிழக்கு மாநிலங்களில் பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்கிறது

காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சனைகளுக்கு என்ன தான் தீர்வு ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை.

காஷ்மீரில் உள்ளக் கட்டுப்பாட்டு கோட்டை சர்வதேச எல்லையாக மாற்றி விடலாம் என்ற ஒரே நிலைப்பாடு தான் இந்தியாவிற்கு. இதன் படி இந்தியாவில் உள்ள காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமாகி விடும். பாக்கிஸ்தானிடம் இருக்கும் மற்றொரு காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குச் சொந்தமாகி விடும். ஆனால் இந்திய தன்னிடம் இருக்கும் காஷ்மீரை சட்டப்பூர்வமாக்கவே இந்த திட்டத்தை முன்வைப்பதாக பாக்கிஸ்தான் நினைக்கிறது.

சமீபத்தில் பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை. மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக். பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது. இந்தியா இந்தத் திட்டத்தை பரிசீலனைக் கூட செய்யாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீர் பிரிவினரும், ஜிகாத் அமைப்புகளும் முஷ்ரப்பின் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.

காஷ்மீர் மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றிய ஒரு விவாதம் சமீபத்தில் NDTV தொலைக்காட்சியில் நடந்தது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது மகள் மெக்பூபா முப்தி,
சாஜித் அகமது லோன் (சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹுரியத் அமைப்பின் தலைவர் அப்துல் கானி லோனின் மகன் தான் சாஜித் அகமது லோன்) போன்றோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

அப்பதுல்லா, முப்தி முகமது போன்றவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் ஹுரியத் அமைப்பு தேர்தலில் போட்டியிடுவது இல்லை. அப்பதுல்லாவின் வாதம் தற்போதையச் சூழலில் ஏற்புடையதாக இல்லை. பிரிவினைவாதக் குழுக்களிடம் பேச்சு வார்த்தைக் கூடாது என்று சொல்கிறார். மெக்பூபா முப்தியின் வாதம், அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தனி நாடு ஏற்கமுடியாது ஆனால் சுயாட்சி வேண்டுமென்கிறார். அப்துல் கானி லேன் கொல்லப்பட்டப் பிறகு அவரது மகன் சாஜித் லோன் பாக்கிஸ்தான் எதிர்ப்பாளராக மாறி விட்டார். இவரும் வலியுறுத்துவது சுயாட்சி தான்.

மாநில சுயாட்சி என்பது நம் தமிழ்நாட்டு அரசியலில் ஆரம்பத்தில் இருந்த ஒரு முக்கியமான விஷயம். இப்பொழுதெல்லாம் தி.மு.க. மாநாடு நடத்தினால் அதில் ஒரு தீர்மானமாக இதுவும் இருக்கும். மாநில சுயாட்சி என்பது இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய் விட்டது.

காஷ்மீருக்கு சுயாட்சி அளிக்கலாம் என்ற கோரிக்கையும், கூடாது என்ற எதிர்ப்பும் பரவலாக இருந்து வருகிறது. காஷ்மீருக்கு கொடுத்தால் மற்ற மாநிலங்களான அசாம், சிக்கிம், பஞ்சாப் போன்றவையும் இந்தப் பிரச்சனையை எழுப்பக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் காஷ்மீரின் சுயாட்சிக்காக வாதிடுபவர்கள் சுட்டிக் காட்டுவது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370வது சட்டப்பிரிவை.

காஷ்மீருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. எனவே எங்களை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாதீர்கள் என்பது தான் இவர்கள் வாதம். ஆனால் சங்பரிவார் அமைப்புகள் இந்த 370வது பிரிவையே நீக்க வேண்டும் என்று சொல்கின்றன.

காஷ்மீருக்கு சுயாட்சி கேட்பவர்கள் எல்லாம் காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் ஹுரியத் அமைப்பு போன்ற குழுக்கள் கேட்பதெல்லாம் "சுதந்திரம்". தனி காஷ்மீர். இவர்கள் இந்தியாவில் சுயாட்சியுடன் இருக்கும் காஷ்மீரை ஏற்றுக் கொள்வதில்லை.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே இந்தியர்கள் பலரின் எண்ணம். காஷ்மீர் இந்தியாவில் இருந்துப் பிரிவது இந்தியாவில் பல குழப்பங்களை ஏற்படுத்தும் . இதோடு அசாம், நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் தீவிரவாதப் பிரச்சனைகள் எழ தொடங்கி விட்டன.

தீவிரவாதத்திற்கும், குண்டு வெடிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன தான் தீர்வு ?

1 மறுமொழிகள்:

Vijayakumar said...

கடைசி படம் மனதை நெகிழ வைத்தது.

10:04 AM, January 26, 2005