Thursday, March 17, 2005

காண்டலீசா ரைஸின் இந்தியப் பயணம்

அமெரிக்கா மறுபடியும் தன் பெரியண்ணன் வேலையை துவங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு வந்திருந்த காண்டலீசா ரைஸ் இந்தியா- பாக்கிஸ்தான் - ஈரான் இடையிலேயான 1700 மைல் கேஸ் பைப்லைன் திட்டத்தை கைவிடுமாறு இந்திய தலைவர்களிடம் வற்புறுத்தியுள்ளார்.



ஈராக்கையடுத்து வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளை தன் Rouge states பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளதால் இந்தியா ஈரான் இடையேயான வர்த்தக உறவை அமெரிக்கா விரும்பவில்லை. இது நம் நாட்டின் வெளியுறவு சுதந்திரத்திலும் வர்த்தக சுதந்திரத்திலும் அமெரிக்கா மூக்கை நுழைக்கும் செயல்



வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கும், தன்னுடைய சந்தையை தற்பொழுது வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்திருக்கும் பாக்கிஸ்தானுக்கும் இந்த கேஸ் பைப்லைன் முக்கியமானது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டம் மூலமாக பெருகிவரும் இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திட்டம் சமீபத்தில் இந்தியா - பாக்கிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படத் தொடங்கியப் பிறகு தான் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் பற்றி தன் கவலையை தெரிவிக்கும் அமெரிக்கா அதற்கு மாற்றாக அமெரிக்கா மூலமாக சில திட்டங்களை பரிசீலிக்கலாம் என்று கூறுவதும் ஏற்புடையதாக இல்லை. அமெரிக்காவே பிற நாடுகளிடம் இருந்து தன் தேவைகளை இறக்குமதி செய்யும் பொழுது இந்தியாவிற்கு எப்படி உதவ முடியும் ? ஈரான் Natural Gas உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் இருப்பததல் அந் நாடே நமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஈரான், இந்தியா, பாக்கிஸ்தான் கூட்டாக மேற்கொள்ளும் இந்த திட்டம் எதிர்காலத்தில் ஈரானுக்கு இந்த பிராந்தியத்தில் முக்கியத்துவத்தைக் கொடுக்கும் என்று அமெரிக்கா நினைக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த பைப்லைன் திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பிற தெற்காசிய நாடுகளுக்கும், சீனா போன்ற நாடுகளுக்கு விரிவடையும் வாய்ப்புகளும் இருக்கிறது. இது ஈரானுக்கு நிரந்தர முக்கியத்துவம் ஏற்படும் வாய்ப்பாக அமைந்து விடும்.

இது தவிர பாக்கிஸ்தான் வழியாக இந்த பைப்லைன் வருவதால் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தியா பாக்கிஸ்தானுக்கு செலுத்த வேண்டும். இந்த பைப்லைனை பாதுகாக்கும் பொறுப்பும் பாக்கிஸ்தானுக்கு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு மேம்படும். பதற்றம் குறையும். நல்லுறவு ஏற்படும் ஒரு வழியாகவும் இந்த திட்டம் கருதப்பட்டது. இப்பொழுது அமெரிக்கா இந்த திட்டத்தை எதிர்ப்பதால் இது குறித்து ஒரு நிலையற்ற தன்மை எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து இந்தியா உறுதியாக இருந்தாலும் பாக்கிஸ்தான் நிலை மாறக் கூடும். பாக்கிஸ்தானிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை கொண்டு இந்த திட்டத்தை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியும்.அதைத் தான் அமெரிக்கா செய்யப் போகிறது.

தனக்கு பிடித்தாவாறே அனைத்து நாடுகளும் நடக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மனோபாவம் மாற வேண்டுமானால் அதற்கு மாற்றாக ஒரு பிராந்தியக் கூட்டமைப்பு தேவைப்படுகிறது. தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மற்றும் சீனா இடையே இது போன்ற ஒரு பிராந்தியக் கூட்டமைப்பு அமைவது சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் தவிர இராணுவம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற துறைகளிலும் அமெரிக்காவுக்கு சமமாக இந்த பிராந்தியக் கூட்டமைப்பு அமையும். ஆனால் இது வெறும் கனவாக மட்டுமே இருக்கக் கூடும். இந்தியா ஆசியாவில் ஒரு சக்தியாக உருவாகுவதையே சீனா விரும்பவில்லை.



இந் நிலையில் தான் கடந்த ஆண்டு வாஜ்பாய் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தெற்காசிய நாடுகளான சார்க் நாடுகள் ஒரு பிராந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். யூரோ போலவே தனி நாணயம், பொருளாதார கூட்டமைப்பு போன்ற அமைப்பை சார்க் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் பொழுது இங்கு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் நாடுகளிடையே நல்லுறவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு மாற்றாகவோ, சீனா-இந்தியா கூட்டமைப்பு போலவோ இருக்காது என்றாலும் இந்த பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவக் கூடியது. தற்பொழுது அமெரிக்கா போட நினைக்கும் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளின் பொருளாதார எழுச்சி நூற்றாண்டாக மாறும் என்ற கருத்து முன்வைக்கப்படும் பொழுது, அமெரிக்கா போன்ற ஒரு வலுவான மாற்று பிராந்தியக் கூட்டமைப்பு ஆசியாவில் அமைவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

10 மறுமொழிகள்:

Anonymous said...

//இது தவிர பாக்கிஸ்தான் வழியாக இந்த பைப்லைன் வருவதால் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தியா பாக்கிஸ்தானுக்கு செலுத்த வேண்டும். இந்த பைப்லைனை பாதுகாக்கும் பொறுப்பும் பாக்கிஸ்தானுக்கு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு மேம்படும். பதற்றம் குறையும். நல்லுறவு ஏற்படும் ஒரு வழியாகவும் இந்த திட்டம் கருதப்பட்டது. //

இதுதான் முக முக்கிய காரண்மம். நல்ல பதிவு!

1:37 PM, March 17, 2005
Anonymous said...

//இது தவிர பாக்கிஸ்தான் வழியாக இந்த பைப்லைன் வருவதால் சுமார் 600 மில்லியன் டாலர்களை இந்தியா பாக்கிஸ்தானுக்கு செலுத்த வேண்டும். இந்த பைப்லைனை பாதுகாக்கும் பொறுப்பும் பாக்கிஸ்தானுக்கு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு மேம்படும். பதற்றம் குறையும். நல்லுறவு ஏற்படும் ஒரு வழியாகவும் இந்த திட்டம் கருதப்பட்டது. //

இதுதான் முக முக்கிய காரண்மம். நல்ல பதிவு!

-Thangamani

1:38 PM, March 17, 2005
Anonymous said...

இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவைப் பேண வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பாகிஸ்தானுக்கு 500 ராணுவ விமானம், இந்தியாவுக்கு 200 ராணுவ விமானம் விற்கும் வியாபார யுத்தி யாரால் முடியும்? தொட்டியையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளும் அந்த திறமை அமெரிக்கா ஒன்றால் மட்டுமே முடியும்!

By: மூர்த்தி

By: மூர்த்தி

9:30 PM, March 17, 2005
Anonymous said...

இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவைப் பேண வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பாகிஸ்தானுக்கு 500 ராணுவ விமானம், இந்தியாவுக்கு 200 ராணுவ விமானம் விற்கும் வியாபார யுத்தி யாரால் முடியும்? தொட்டியையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளும் அந்த திறமை அமெரிக்கா ஒன்றால் மட்டுமே முடியும்!

By: மூர்த்தி

9:31 PM, March 17, 2005
Anonymous said...

//கடந்த ஆண்டு வாஜ்பாய் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தெற்காசிய நாடுகளான சார்க் நாடுகள் ஒரு பிராந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். யூரோ போலவே தனி நாணயம், பொருளாதார கூட்டமைப்பு போன்ற அமைப்பை சார்க் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் பொழுது இங்கு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் நாடுகளிடையே நல்லுறவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.//

100-ல ஒரு வார்த்தை

//இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளின் பொருளாதார எழுச்சி நூற்றாண்டாக மாறும் என்ற கருத்து முன்வைக்கப்படும் பொழுது, அமெரிக்கா போன்ற ஒரு வலுவான மாற்று பிராந்தியக் கூட்டமைப்பு ஆசியாவில் அமைவதும் முக்கியத்துவம் பெறுகிறது. //

நல்ல ஒரு பதிவு.

10:34 PM, March 17, 2005
Vijayakumar said...

//கடந்த ஆண்டு வாஜ்பாய் வெளியிட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. தெற்காசிய நாடுகளான சார்க் நாடுகள் ஒரு பிராந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். யூரோ போலவே தனி நாணயம், பொருளாதார கூட்டமைப்பு போன்ற அமைப்பை சார்க் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் பொழுது இங்கு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் நாடுகளிடையே நல்லுறவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.//

100-ல ஒரு வார்த்தை

//இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளின் பொருளாதார எழுச்சி நூற்றாண்டாக மாறும் என்ற கருத்து முன்வைக்கப்படும் பொழுது, அமெரிக்கா போன்ற ஒரு வலுவான மாற்று பிராந்தியக் கூட்டமைப்பு ஆசியாவில் அமைவதும் முக்கியத்துவம் பெறுகிறது. //

நல்ல ஒரு பதிவு.

9:04 AM

10:35 PM, March 17, 2005
Anonymous said...

அந்தம்மா வந்துட்டுப் போனதுல இவ்ளோ விடயம் இருக்கா... அருமையான கட்டுரைக்கு நன்றி.


By: அன்பு

11:10 PM, March 17, 2005
Anonymous said...

அந்தம்மா வந்துட்டுப் போனதுல இவ்ளோ விடயம் இருக்கா... அருமையான கட்டுரைக்கு நன்றி.


By: அன்பு

11:15 PM, March 17, 2005
Anonymous said...

சசி,

இன்று காலையில், உங்கள் பின்னூட்டத்துக்கு பதிலாக (எனது பதிவில்) நான் சொன்னதை இங்கே மறுபடியும் நிருபித்துள்ளீர்கள். 'விரிவாகவும் விவரமாகவும் உங்கள் பதிவுகள் இருக்கின்றன' என்று சொன்னதைத்தான் நினைவுபடுத்துகிறேன். அடுத்து, எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம் இதுதான். பாகிஸ்தானில் அரசு நிர்வாகிகள் பைப்லைன் எடுத்துச் சொல்ல ஒப்புக் கொண்டாலும், அந்நாட்டின் மற்றொரு தலைவலியான இனக்கலவரர்கள், மற்றும் இந்திய எதிர்ப்பாளர்களால் அந்த பைப் லைனுக்கு ஆபத்துக்கள் வராதா? பைப் லைன் எவ்வளவு ஆழத்தில் இருக்கும் போன்ற விவரங்கள் தெரிந்தால் இது குறித்து புரிந்து கொள்ள இயலும். அவர்களது நாட்டில், பைப்லைனில் சில்மிஷம் செய்தால் அவர்களுக்குமே கணிசமான பாதிப்புக்கு வாய்ப்பிருக்கும் என்பதால் அப்படி நடக்காமல் ஒருவேளை அரசு இயந்திரம் பாதுகாக்கலாம். எனினும் அது போன்ற தகவல் எதாவது அறிய வந்தால் சொல்லுங்கள்.

மற்றபடி தெற்காசிய நாடுகளுக்கு பொது நாணயம் என்றது பற்றி படித்தபோது, 'ஆசிய நாடுகளுக்கு பொதுவான நாணயம் கொண்டு வரலாம் - ''ஏசியோ'' என்ற பெயரில்' என்று, ஒரு கட்டுரையை நண்பர் அண்ணாகண்ணன் அம்பலம் வலைதளம் தொடங்கிய ஆரம்பத்தில் (1999ன் பிற்பகுதியில்) பிரசுரத்துக்கு கொடுத்தார். ஆனால் அதை எங்களால் பிரசுரிக்க இயலவில்லை. அது பற்றி பின்னர் சாவகாசமாக பதிவு ஒன்றை எழுதலாம் என நினைக்கிறேன். எனினும் இந்த நேரத்தில் அது ஞாபகம் வந்தது. அடுத்து, வாஜ்பாய் குறிப்பிட்டது போல பொது நாணயமுறை வந்தால் நல்லது என்றாலும், அதற்கு தயார் செய்துகொள்ள கருத்தொற்றுமை உருவாகவே, இங்கே வாய்ப்புகள் இன்றைக்கு குறைவாக உள்ளதாக நினைக்கிறேன். பார்ப்போம்!

- சந்திரன்

7:44 AM, March 18, 2005
Anonymous said...

//
அவர்களது நாட்டில், பைப்லைனில் சில்மிஷம் செய்தால் அவர்களுக்குமே கணிசமான பாதிப்புக்கு வாய்ப்பிருக்கும் என்பதால் அப்படி நடக்காமல் ஒருவேளை அரசு இயந்திரம் பாதுகாக்கலாம்

//
இதனால் தான் இந்த திட்டம் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா - பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையே ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

இது குறித்து மேலும் தகவல்கள் கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

அனைவரின் கருத்துகளுக்கும் எனது நன்றி

சசி

8:47 AM, March 18, 2005