நரேந்திர மோடி : இந்தியாவிற்கு அவமானமா ?


நரேந்திர மோடிக்கு diplomatic விசா மறுக்கப்பட்டதும் tourist மற்றும் business விசா ரத்து செய்யப்பட்டதும் இந்தியாவிற்கே அவமானம் என்று பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அனுதாபிகள் கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சருக்கு மறுக்கப்பட்ட விசா இந்திய அரசியல்சாசனத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் குஜராத்தி மக்களின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பு என்றும் மோடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் மைய அரசு தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

மோடியின் அமெரிக்க பயணம் அங்கிருக்கும் பல குஜராத்தி இந்துக்களால் அவரின் முஸ்லீம் குரோதத்திற்கு எடுக்கப்படும் பாராட்டு விழா. மோடி தொடர்ந்து தனது முஸ்லீம் விரோத நடவடிக்கையை தொடருவதற்கான ஆதரவு விழாவே தவிர ஒரு மாநில முதல்வரின் அரசு சார்ந்த பயணம் அல்ல. அங்குள்ள குஜராத்தி மக்களிடம் முதலீடு குறித்து பேச இருக்கிறார் என்ற வாதமும் கண்துடைப்பு தான்.



அமெரிக்காவில் இருக்கும் பல குஜராத்திகள் மோடியை குஜராத்தி மற்றும் இந்துக்களின் பாதுகாவலராகவே கருதுகின்றனர். இங்கிருக்கும் சங்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் குஜராத்திகள் மூலமாக அதிகளவில் பணம் கிடைக்கிறது. அமெரிக்கா, UK போன்ற நாடுகளில் உள்ள சங்பரிவார் அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், HSS போன்ற பினாமி இயக்கங்கள் மூலமாக திரட்டப்படும் பணம் குஜராத் உட்பட நாட்டின் பல இடங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் வெறியாட்டத்திற்கு உதவி புரிவதாகவே இருக்கிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் சங்பரிவார் அமைப்புகள் தங்களை கலாச்சார இயக்கமாக, NGO'க்காளாக பதிவு செய்துள்ளன. இந்த அமைப்புகள் மூலமாக பணம் திரட்டப்படுகிறது. இது குஜராத் கலவரத்திற்கு பின்பு பலரால் கவனிக்கப்பட்டது. அதன் எதிரொலியாகத் தான் இப்பொழுது நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

தன் நாட்டிற்கு யார் வர வேண்டும் என்று முடிவு செய்ய அமெரிக்காவிற்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டதிலும் சரியான காரணங்கள் இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பொழுது அரசு இயந்திரங்களைக் கொண்டே முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத உணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தி முதல் அவமானத்தைக் கொடுத்த மோடி தற்பொழுது அந்த செயலால் மற்றொரு புது அவமானத்தை தேடிக் கொடுத்துள்ளார்.

மோடி இந்தியாவின் ஒரு மாநில முதலைமைச்சர் என்ற வகையில் இது இந்தியாவின் கவுரவத்திற்கு ஏற்பட்ட அவமானம் தான் என்றாலும் இது மோடி இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்த அவமானம். இதற்கு மோடி தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருக்கும் ஒரே காரணத்திற்காகவே இது நாட்டிற்கு அவமானமாக தெரிந்தாலும், நரேந்திர மோடியே நம் நாட்டின் அவமானச் சின்னம் தான்.

இந்த விசா மறுப்பால் புதிய அவமானம் நமக்கு வந்து சேர்ந்து விடாது.