கங்குலி ???

திருவாளர் கிரிக்கெட் ரசிகர் ஒரு அரசு அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு லஞ்சம் கேட்கிறார்கள். கொடுக்கிறார். வெளியே வருகிறார் டிராபிக் போலீஸ் ஓரம் கட்டுகிறார். இவரும் மால் வெட்டுகிறார். ஓட்டு போட்ட அரசியல்வாதி காணாமல் போய் விடுகிறார். சகஜம் தானே. கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார். கிரிக்கெட் பார்க்கிறார். கங்குலி அவுட் ஆகிறார். வருகிறதே கோபம். முதலில் இவனை தூக்க வேண்டும் என்று கர்ஜிக்கிறார். தன் கடமையில் இருந்து தவறிய கங்குலியை நீக்க வேண்டாமா ?

ஊரெல்லாம் இது தான் பேச்சு.

இமெயிலை திறந்தால் கங்குலியை பற்றிய ஜோக்ஸ் தான் இப்பொழுது பிரபலம். சர்தார் ஜோக்கையெல்லாம் நம் ஆட்கள் மறந்து போய் விட்டார்கள். இன்று அப்படி தான் இந்த ஜோக்கை பார்த்தேன்.

இந்திய ரயில்வே துறையினர் கங்குலியிடம் வருகிறார்கள். எங்கள் ரயில்வேயில் எந்த ரயிலும் குறித்த நேரத்தில் போய் விட்டு வருவதில்லை. நீங்கள் மட்டும் போன வேகத்திலேயே சீக்கிரமாக வந்து விடுகிறீர்களே, அந்த ரகசியத்தை சொல்லுங்களேன் என்று கேட்கிறார்களாம்.

வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தன் ரன் அப்பை பாதியாக குறைப்பது என்று முடிவு செய்து விட்டாராம்.
ஏன் ?
அக்தர் ஓடி வருவதற்குள் கங்குலி பெவிலியனுக்கு சென்று விடுகிறாராம்.

அனைத்து பத்திரிக்கைகளிலும் கங்குலியின் சோகமான படங்கள். ஒரு பத்திரிக்கையில் கங்குலி எங்கேயோ வானத்தை வெறிக்க பார்த்து கொண்டிருக்கிறார். மற்றொன்றிலோ தரையை பார்த்து கொண்டிருக்கிறார். பல பத்திரிக்கைகளில் கிண்டலான கார்டூன்கள்.

இந்திய கிரிக்கெட்டில் கங்குலியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா ? இந்தியாவின் Most Successful and admired captain அவ்வளவு தானா ?

சூம்பிக் கிடந்த இந்திய அணியை உலக கோப்பை வெல்லும் நிலைக்கு கொண்டு சென்ற கங்குலி இனி மேல் அணியில் கூட இருக்க மாட்டாரா ?

இந்திய அணி தேர்வில் இருந்த பிராந்திய உணர்வுகளை கலைந்து திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திறமையுள்ளவர்களை அணிக்குள் கொண்டு வந்து இந்திய அணியை ஒரு வலுவான அணியாக உருமாற்றிய கங்குலி இனி என்ன செய்யப் போகிறார்.

2003ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம். இந்திய அணி எத்தனை போட்டியில் தோற்கும். நான்கு டெஸ்டிலும் தோற்குமா ? இல்லை ஒன்றையாவது டிரா செய்யுமா என்று பத்திரிக்கைகள் கேள்வி எழுப்ப கொல்கத்தா இளவரசன் அதிரடியாக முதல் டெஸ்டில் அடித்த சதம் தான் எத்தனை அற்புதமானது. சுற்றுபயணத்தின் போக்கையே மாற்றிய சதம் அல்லவா அது ?

பாக்கிஸ்தானுக்கு எதிராக சகாரா கோப்பையில் மட்டையையும் சுழற்றி, பந்தையும் சுழற்றி பெற்று கொடுத்த வெற்றிகளை மறந்து விட முடியுமா ? இல்லை லண்டன் மைதானத்தில் தன் சட்டையை சூழற்றிய அந்த ஆவேசத்தை தான் மறக்க முடியுமா ?

வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கூட தோல்வியடைந்து கொண்டிருந்த இந்திய அணியை, தோல்வியின் விளிம்புக்கு சென்ற போட்டிகளில் கூட வெற்றி வாகை சூட வைத்த அணித்தலைவரை இனி நாம் காணமுடியாதா ?

எந்த சகாப்தமும் முடிவுக்கு வரத் தான் வேண்டும். ஆனால் இது கங்குலியின் சகாப்தம் முடிவுக்கு வரும் தருணம் அல்ல.

இன்று கங்குலி மற்றொரு சாதனையின் விளிம்பில் இருக்கிறார். 10,000 ரன்களை எட்டிப் பிடிக்க போகிறார். பிடித்து விடுவாரா ?

பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறேன்