Saturday, April 09, 2005

எப்படியிருந்த நாம். . . ?

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி கங்கபாடியும்
வேங்கை நாடும் குடமலை நாடும் கொல்லமும்
கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு
பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்ட தன் எழில் வளரூழியுள் எல்லா யாண்டும்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள்
கோராஜ கேஸரி பன்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்

இது தான் இராஜராஜசோழனின் மெய்கீர்த்தி



இராஜராஜன் நாடுகளை வென்று வாகை சூடிய மாமன்னன் மட்டுமல்ல. அவனது காலத்தில் தான் தமிழர்களின் சிற்பக்கலையும், நாட்டியக் கலையும், கட்டடக் கலையும் உச்சத்தில் இருந்தது. தன்னுடைய மாபெரும் சாம்ராஜ்யத்தை தஞ்சையில் இருந்து ஆள்வது பெரிய பாரமாக இருக்கும் என்று கருதி கிராமங்கள் தோறும் குழுக்களை உருவாக்கி நிர்வாகத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான். அந்த நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பணியை மட்டும் தஞ்சையில் இருந்து நடத்தினான். இந்த நிர்வாக குழுவினர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பரந்து விரிந்திருந்த சோழ நாட்டை ஆள்வதற்கு கல்வி அறிவு அவசியம் என்றுணர்ந்து கல்விச் சாலைகளை கோயில்களுடன் பின்னிப்பிணைந்தான். அக் காலத்தில் சோழநாட்டில் தான் மனிதவள மேம்பாடு அதிகமாக இருந்தது. இத்தகைய மாண்புகளால் தான் ராஜராஜனின் மெய்கீர்த்தியை இன்றளவில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அத்தகைய மாமன்னனின் மாஸ்டர் பீஸான தஞ்சை பெரியக் கோயிலின் கட்டுமானத்தையும், பல உன்னதங்களையும் சமீபத்தில் தஞ்சைக்கு செல்லும் பொழுது கண்டு மெய்சிலிர்த்தேன். அதைப் பற்றிய அனுபவங்களை இம் மாத திசைகள் பயணச் சிறப்பிதழில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரார் கோயிலை மத்திய தொல்பொருள் துறை தன் வசம் கொண்டு வர முனைந்த பொழுது கலைஞர் கருணாநிதி இம் முயற்சியை கடுமையாகச் சாடி மைய அரசின் தொல்பொருள் துறையால் மட்டுமே புராதன சின்னங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் தவறானது. மாநில அரசாலும் புராதனச் சின்னங்களை பாதுகாக்க முடியும் என்றார். ஆனால் உண்மை நிலவரம் மாநில அரசுக்கு கொஞ்சமும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, பலச் சின்னங்கள் சீரழிந்து போவதற்கு காரணமே தமிழக அரசின் திறமையின்மை தான்.

அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி திருவண்ணாமலை கோயிலை தொல்பொருள் துறை வசம் செல்லாமல் தடுத்து விட்டன. இது அங்கிருக்கும் மக்களின், வணிகர்களின் ஒட்டுகளுக்காக மட்டுமே தானே தவிர கோயிலை காக்கும் அக்கறையினால் அல்ல.

மத்திய தொல்பொருள் துறைக்கு மட்டுமே புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் திறமை இருக்கிறது என்பது தான் உண்மை. அவர்களின் வசம் இருப்பதேலேயே பலச் சின்னங்கள் இன்னமும் நின்று கொண்டிருக்கின்றன. வவ்வால்களின் இருப்பிடமாக இருந்த தஞ்சை பெரிய கோயிலை தங்கள் வசம் கொண்டு வந்து அதனை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். தமிழக வராலாற்று ஆர்வாளர்களும், தமிழர்களும் தொல்பொருள் துறையினருக்கு நன்றி கடன் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தேவைப்படும் நிதியை மைய அரசில் இருக்கும் தமிழக கரை வேட்டிகள் பெற்று தரும் பட்சத்தில் அவர்களால் இன்னும் சிறப்பாக இத்தகைய வராலாற்றுச் சின்னங்களை பாதுக்காக்க முடியும்.

தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய இராஜராஜனுக்கு ஒரு சிலையைக் கூட தங்களால் எழுப்ப முடியவில்லை என்று கலைஞர் வருத்தப்பட்டுக் கொண்டார். இராஜராஜனுக்கு சிலை எழுப்பி காக்கைகள் அதில்
எச்சமிட்டு ஆண்டுக்கு ஒரு முறை அதற்கு மாலையிட்டு தங்கள் கடமையை நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் கலாச்சாரத்தை விட இராஜராஜனின் பள்ளிப்படை இருந்த இடத்தில் அவனின் நினைவாக ஒரு ஸ்தூபியோ, ஒரு மண்டபமோ எழுப்பலாம். அதை விட அழிவின் விளிம்பில் இருக்கும் புராதனச் சின்னங்களை பாதுகாக்கலாம். அது தான் அந்த மாமன்னனுக்கு தரும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

உலகின் மிக உன்னதமான அதிசயத்தக்க கட்டிடகலைகளில் முக்கிய இடம் வகிக்க கூடிய தஞ்சை பெரிய கோயிலுக்கு நம் அரசியல் தலைவர்கள் தரும் முக்கியத்துவம் என்ன ?

இது ராசி இல்லாத கோயிலாம். இங்கு வந்தால் அவர்களின் பதவி பறிபோய் விடுமாம். இது தான் தந்தை பெரியாரின் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் இன்றைய உண்மையான பகுத்தறிவு.

இதனால் எந்த வித நஷ்டமும் இல்லை. இராஜராஜன் எழுப்பித்த மகத்தான இந்தச் சின்னம் தனித்து விடப்படுவதால் எந்தச் சேதமும் இல்லாமல் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவன் புகழ் பேசிக் கொண்டு நிற்கும்.



இன்னமும் சில காலத்தில் அழிந்து விடக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு வரலாற்றுச் சின்னத்தையும், பெரிய கோயிலின் உன்னதங்களையும் திசைகள் இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரையில் ( எப்படியிருந்த நாம். . . ?) பகிர்ந்து கொண்டுள்ளேன்.

4 மறுமொழிகள்:

jeevagv said...

நல்ல பதிவு. நறுக்குத்தெரித்தாற்போல இருக்கிறது.

1:48 PM, April 09, 2005
Amar said...

ராஜ ராஜ சோழனின் பள்ளி படை என்று இதுவரை எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை.

10:50 AM, August 10, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

ராஜராஜனின் பள்ளிப்படை எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இனி மேலும் கண்டுபிடிக்கப்படக்கூடிய சாதியக் கூறுகள் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்

6:25 PM, August 15, 2005
Anonymous said...

Ungal padaipugalai malum eathi parkindran.

11:29 PM, August 29, 2005