Wednesday, July 27, 2005

இந்தியா-பாக்கிஸ்தான் பொருளாதார உறவு

பத்ரியின் பதிவுக்கு பதிலளிக்க தொடங்கி, பதில் பெரிதாகி விட்டதால் தனிப் பதிவாக பதிவு செய்கிறேன்.

இந்தியா, பாக்கிஸ்தான் இடையிலேயான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட பிறகு தான் பொருளாதார ரீதியான உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டுமென்றால் அது இந்த நூற்றாண்டில் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

மாறாக அண்டை நாடுகளுக்கு இடையிலேயான பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் எல்லைப் பிரச்சனைகள் முதற்கொண்டு பிற பிரச்சனைகளை முழுவதுமாக தீர்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவுக்கு சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்தியா பாக்கிஸ்தான் இரான் இடையிலேயான பைப்லைன் திட்டம் முதல் பல்வேறு பொருளாதார உறவுகளை பாக்கிஸ்தானுடன் வளர்த்துக் கொள்வது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

இந்தியா சீனா இடையிலேயான உறவில் ஏற்பட்ட மாற்றமும், அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவில் ஏற்பட்ட மாற்றமும் பொருளாதார காரணங்களால் தான் ஏற்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவுடன் சிக்கிம் இணைந்ததை அங்கீகரிக்க மறுத்துக் கொண்டிருந்த சீனா கடந்த ஆண்டு திடீரென்று தன் முடிவினை மாற்றிக் கொண்டதையும், இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த சீனா திடீரென்று அதனை ஆதரிக்க தொடங்கியதையும் பார்க்கும் பொழுது இன்று உலகம் ஒரு இணக்கமான பொருளாதார சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த பைப்லைன் திட்டம் பாக்கிஸ்தான் வழியாக வருவதால் இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியா பாக்கிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும். தனக்கு ஒரு செலவும் இல்லாமல் வரும் பல மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தான் இழக்க விரும்பாது. எனவே பைப்லைனுக்கு பாதகம் வரும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது போல இந்த பைப்லைன் ஆப்கானிஸ்தான் வழியாக வருவதாக எனக்கு தெரியவில்லை. இரானில் இருந்து பாக்கிஸ்தான் வழியாகத் தான் இந்தியாவிற்கு வருகிறது.

தீவிரவாதிகளால் இந்த திட்டத்திற்கு ஆபத்து வரும் என்றால் அது எந்த நிலையில் இருந்தாலும் வரும். கடல் மூலம் பைப்லைன் கொண்டு வந்தாலும் வரும், மலையைக் குடைந்து கொண்டு வந்தாலும் வரும். அவ்வாறு இருக்கையில் பாக்கிஸ்தான் மூலம் வருவதால் மட்டுமே ஆபத்து இருக்கிறது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தீவிரவாதிகளால் ஆபத்து வரும் என்று அஞ்சினால் ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வர முடியாது

கடந்த மார்ச் மாதம் காண்டலிசா ரைஸ் இந்தியாவிற்கு வந்த பொழுது இந்தியாவின் மாற்று எரிவாயு தேவைகளை கவனிப்பதாகவும் அமெரிக்கா அதற்கு உதவும் என்றும் தெரிவித்திருந்தார். அது பற்றி அப்பொழுது நான் எழுதிய பதிவு.

http://thamizhsasi.blogspot.com/2005/03/blog-post.html

அமெரிக்காவின் உதவிக்கு விலையாக அவர் கேட்டது இரான் - பாக்கிஸ்தான் - இந்தியா இடையிலேயான பைப்லைன் திட்டத்தை கைவிடுவது.


இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டு வரும் சூழ்நிலையில் நமது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளும் பெருகி கொண்டு வருகிறது. தற்பொழுது கச்சா எண்ணெய் நிலையான விலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது இந்திய பொருளாதார வளர்ச்சியை குறைக்கும். இதற்கான தீர்வு, நமது தேவைக்கான எண்ணெய்யை விலை குறைவாக இருக்கும் காலத்தில் சேகரித்துக் கொள்வது - Inventory, மாற்று எரிசக்திகளை வளர்த்துக் கொள்வது போன்றவை. இந்தியா ஒரு தொலைநோக்குடன் இந்த திட்டத்தை அணுக வேண்டும்.

இரான் - பாக்கிஸ்தான் இடையிலேயான பைப்லைன் திட்டமானாலும் சரி அல்லது அமெரிக்காவுடனான அணுசக்தி திட்டமானலும் சரி நம்முடைய தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்யும் திட்டத்தில் நாம் நம்மை இணைத்துக் கொள்வது முக்கியமானது.

பாக்கிஸ்தான் ஒரு Rogue State என்ற மனப்பான்மையை நாம் மாற்றிக் கொள்வதும் முக்கியம். தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது மிக முக்கியமானது. பாக்கிஸ்தான் தனது பொருளாதாரத்தை தற்பொழுது தாராளமயமாக்கி இருக்கிறது. ஆனால் இந்திய நிறுவனங்கள் பாக்கிஸ்தானில் செயலாற்றுவதற்கு இன்னமும் தடை இருக்கிறது. பாக்கிஸ்தானுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் இந்திய நிறுவனங்கள் பாக்கிஸ்தானில் முதலீடு செய்வதும், இந்திய பொருட்களை பாக்கிஸ்தான் சந்தையில் விற்பதும் அதிகரிக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்காற்றும்.

பொருளாதார ரீதியாக Mutual Interdependece அதிகரிக்கும் பொழுது பிற பிரச்சனைகள் தீர்க்கப்படவும், சமாதானம் பெருகவும் சாத்தியக் கூறுகள் நிறைய உண்டு.

3 மறுமொழிகள்:

Badri Seshadri said...

சசி: பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை அதிகரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடுகளை அதிகரிப்பதற்கும் .... பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய் அமைப்பதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

பாகிஸ்தானுடனான பிரச்னை முடியும் வரையில் அந்த நாட்டுடன் எந்த உறவும் வைத்திருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை.

ஆனால் எரிவாயுக் குழாய் போன்ற திட்டங்கள் தீவிரவாதத் தாக்குதலுக்கு வசமான இலக்கு. அதுதான் முட்டாள்தனமான திட்டம் என்கிறேன்.

வி.எஸ்.என்.எல் முதல் பல இந்திய நிறுவனங்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்ய விரும்புகின்றன. அதெல்லாம் வரவேற்கப்படவேண்டியவையே.

3:39 AM, July 27, 2005
தருமி said...

'volatile' என்ற சொல்தான் நினைவுக்கு வருகிறது, சசி.
சுற்றியுள்ள நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள், முஸ்லீம் நாடுகளில் அடிக்கடி எ(கொ)டுக்கப்படும் 'ஃபத்வாக்கள், அதிரடி நடவடிக்கைகள் எல்லாமே 'volatile'தான்; அதோடு குழாய் மூலம் எடுத்துவரப்படப் போகும் பொருளும் volatile என்பதால் நிறைய நிதானம் தேவை.

6:56 AM, July 27, 2005
Anonymous said...

Sasi,

Have you heard about the philosophy of Pak's terror charter?

It is "death by thousand cuts". Sure, you cannot kill through 1000 cuts. But you can keep the person perrenially ill.

It is true that the offshore pipeline has equal risk compared to the over-the-land pipeline?

What is the guarantee that the annual royalty money wouldn't be used for funding terrorism against our country?

Only when Sind and Baluchistan getting autonomy, the over-land pipeline might be safe. And they have enough reasons for that - Punjabi aggression...

- S.A observer

1:28 AM, July 28, 2005