காஷ்மீர் தீவிரவாதப் பிரச்சனையின் இன்னொரு சோகம் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள். ஏராளமான இராணுவத்தினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருக்கின்றனர். இது தவிர பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள், காவல்துறையினர் என கணக்கில் எடுத்தால் மக்கள் தொகைக்கு நிகரான அளவுக்கு இராணுவத்தினரும், காவல்துறையினரும் காஷ்மீரில் இருக்கின்றனர்.
பாக்கிஸ்தானின் ஆயுத உதவியுடன் தீவிரவாதிகளுக்கும் பஞ்சம் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் கிடைக்கவில்லையா ? ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை கூப்பிடு என்ற ரீதியில் தட்டுபாடு இல்லாமல் தீவிரவாதிகளும் காஷ்மீரில் ஆயுதங்களுடன் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தினசரி வாழ்க்கையில் துப்பாக்கிச் சத்தம், சந்தேக கண்ணோடு பார்க்கும் இராணுவத்தினர், வீதியில் நடமாடினலே சோதனைகள் என்று தினமும் மக்களுக்கு இன்னல்கள்.
கடந்த 16 ஆண்டுகளாக நடக்கும் தீவிரவாதத்திற்கு சுமார் 75,000 பேர் பலியாகியிருக்கிறார்கள். இராணுவத்தின் கணக்கு படி சுமார் 18,000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே அளவு இராணுவத்தினரும் பலியாகி இருக்கலாம். இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்டு இறந்து போன அப்பாவி மக்களின் உயிர்கள் எத்தனையோ ?
ஒரு காலத்தில் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீர் இன்று பிண பூமியாக மாறி விட்டது. அடக்குமுறைகள், இன்னல்கள் இவற்றுக்கிடையே வாழ வேண்டிய நிர்பந்தம் காஷ்மீர் மக்களுக்கு உள்ளது. நான் இங்கு காஷ்மீரிகள் என்று குறிப்பிடுவது முஸ்லீம்களை மட்டும் அல்ல, ஹிந்துக்களையும் தான்.
காஷ்மீரி ஹிந்துக்களான பண்டிட்கள் தீவிரவாத பிரச்சனை தொடங்கியதும் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்டனர். தீவிரவாதிகளின் முதல் இலக்கு இவர்கள் தான். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேண்டிய சோக நிலைக்கு பண்டிட்கள் தள்ளப்பட்டனர்.
தீவிரவாதிகள் ஹிந்துக்களை மட்டுமில்லாது தங்களுக்கு எதிர் கருத்துக்களையுடைய முஸ்லீம்களையும் கொன்று குவித்திருக்கின்றனர். தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவாளர்கள் தான் தீவிரவாதிகளின் முக்கிய இலக்கு. இது தவிர ஹுரியத் இயக்கத்தை சேர்ந்த சில மிதவாத தலைவர்களையும் (அப்துல் கானி லோன்) தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள் அதிகம். நமக்கு அமைச்சர்களின் மகள் கடத்தப்பட்டது தான் செய்தியாக தெரியும். அது தவிர ஏராளமானானோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். பாக்கிஸ்தானின் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் இஸ்லாம் சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ஈவுஇரக்கமின்றி பலியிடப்பட்டிருக்கிறார்கள்.
இங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் கடத்தப்பட்டதால் சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்து அதனை மட்டுமே நம்பி இருக்கும் பல பகுதிகளின் பொருளாதாரம் நசிந்து விட்டது.
இது தீவிரவாதிகளின் கோரமுகமென்றால் நம்முடைய இராணுவத்தினரும் இவர்களுக்கு சளைக்காமல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்,
காஷ்மீரில் சில இடங்களில் இரவு 10மணிக்கு மேல் விளக்கு ஏற்றப்படவே கூடாது என்ற இரணுவ சட்டம் இருக்கிறது. மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்களின் வீடுகளை எந்த நேரத்திலும் சோதனை செய்யும் அதிகாரம் இராணுவத்திற்கு உண்டு. சந்தேகத்தின் பெயரில் இராணுவத்தினர் இதனை செய்கின்றனர் என்றாலும் பல நேரங்களில் சோதனைக்குட்படுத்தப்படுபவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிறு சந்தேகம் அவர்கள் மேல் எழுந்தாலும் அவர்கள் நிலைமை பரிதாபம் தான்.
காஷ்மீரின் ஒவ்வொரு இளைஞனும் சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கப்படுகிறான். பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட பலரின் நிலை பற்றி எந்த தகவலும் இல்லை. சிலரின் சடலம் மட்டும் எங்காவது வீசி எறியப்பட்டிருக்கும். விசாரணைக்கு கொண்டு செல்லப்படும் பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பலர் இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு பலிகடா ஆகியிருக்கிறார்கள்
இந்திய சார்புடைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது மகள் மெகபூமா முப்தி கூட இராணுவத்தினர் ஒவ்வொரு காஷ்மீரி இளைஞரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது குறித்து தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.
இந்திய இராணுவத்தினர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும் இது குறித்து எந்த ஊடகங்களும் எழுதுவதில்லை. பல செய்திகள் மறைக்கப்படுகிறன.
காஷ்மீரில் Armed Forces (Special Powers) Act, 1958 என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது தடா சட்டம் போல எந்த வித விசாரணையும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும், எந்த இடத்தையும் சோதனை செய்யவும், இராணுவத்தின் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரி கூட துப்பாக்கி சூடு நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பல நேரங்களில் இராணுவத்தினர் முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றனர்.
இந்த சட்டம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தாலும் இதனை முழுமையாக விலக்க இயலவில்லை.
இராணுவத்தினருக்கு மனித உரிமை குறித்து உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. தவறு செய்யும் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தவறு செய்த இராணுவத்தினர் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இரணுவத்தினரின் பல செயல்கள் காஷ்மீர் மக்களை இந்தியாவிடம் இருந்து இன்னும் அதிக அளவு அந்நியப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை.
அம்னஸ்டி முதல் பல மனித உரிமை இயக்கங்கள் காஷ்மீரில் நடக்கும் நிலை குறித்து வெளிப்படையாக தங்கள் கவலையை தெரிவித்து இருக்கின்றன. ஆனால் இன்று வரை பெரிய முன்னேற்றம் இல்லை.
காஷ்மீரிகளின் துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
படங்கள் : FRIENDS OF KASHMIR
Sunday, August 07, 2005
காஷ்மீரின் விடுதலை - 4
By தமிழ் சசி | Tamil SASI | நேரம் 8/07/2005 09:27:00 PM
குறிச்சொற்கள் Kashmir, இந்திய அரசியல், காஷ்மீர்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment